Friday, July 8, 2011

தாம்பத்தியம் - 6

தாம்பத்தியம் - 6


குறைகள் அல்ல சில பிழைகள்


பல நிறைகளை கொண்ட ஆண்களிடம் கட்டாயம் இந்த குறைகளும் இருந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  குறைகளையும் தெரிந்துகொண்டால் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள எதுவாக இருக்கும் என்பதாலேயே இந்த குறைகளை விளக்க வேண்டியது அவசியமாகிறது .

மனைவி அமைவது எல்லாம்..

எல்லோருக்குமே ஒரே புரிதலுடன் கூடிய மனைவி அமைவது இல்லை. ஆனால் அமைந்த மனைவியை தனக்கு ஏற்றாற்போல், தன் பக்கம் கொண்டு வந்து சரி செய்ய அந்த கணவனால் மட்டும் தான் முடியும்.  அதற்கு தன்னிடம் உள்ள சிலபல குறைகள் என்னவென்று முதலில் உணர்ந்து சரி செய்ய முயல வேண்டும்.  நம்மிடம் என்ன குறை இருக்கிறது ? நல்ல ஆள் என்றுதானே எல்லோரும் சொல்கிறார்கள் என்று எண்ணுவது தவறு (உங்கள் மனைவி சொல்கிறாளா...?) மற்றவர்களைவிட உங்களிடம் நெருங்கி உறவாட கூடியவள் மனைவிதான்.  நீங்கள் நிறை என்று நினைப்பது அவளுக்கு குறையாக தெரியலாம்.

உதாரணமாக, கணவன் அமைதியான, அதிர்ந்துகூட பேசாத, மென்மையான நடவடிக்கை கொண்டவனாக நல்லவிதமாக இருக்கலாம் .  உண்மையில் இந்த குணம் கொண்ட ஆண்களை பல பெண்களுக்கு பிடிப்பது இல்லை என்பது ஆச்சரியம்தான்!!ஆண் என்றால் கலகலப்பான, பேச்சிலும் சிரிப்பாலும் கலவரபடுத்துகூடிய கம்பீரம் கொண்ட ஆண் மகனாக தன் கணவன் இருக்கவேண்டும் என்பது பல இளம் பெண்களின் எதிர்பார்ப்பு.ஆனால் இதற்காக மென்மையான குணம் கொண்டவர்கள் மனைவிக்காக தங்களது சுயத்தை இழக்க முடியாது, இழக்கவும் கூடாதுதான்....!!

பிறவி குணத்தை மாற்ற  இயலாது அதைவிட இந்த குணம்தான் சிறந்தது என்பதை மனைவிக்கு புரிய வைக்க வேண்டும்!!

புரிந்து கொள்ளும் தன்மை குறைவு
 
பெண்கள் ஒரு ஆணிடம் அரைமணி நேரம் பேசினால் போதும், அந்த ஆணை பற்றி சுலபமாக எடை போட்டு விடுவார்கள்.  ஆனால் இந்த ஆண்கள் அப்படி இல்லை, 40 ௦வருடம் ஒன்றாகவே வாழ்ந்திருந்தாலும் மனைவியை முழுதாக புரியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

ஒரு மனைவியால் தன் கணவனின் விருப்பங்கள் என்ன என்று தெரிந்து வைத்து அதன்படி நடக்கும் போது கணவனால் மட்டும் ஏன் அவ்வாறு இருக்க முடியவில்லை.  மனைவியை புரிந்து கொள்ள நேரம் ஒதுக்காத வரை கணவனால் தாம்பத்திய வாழ்வில் வெற்றி பெறவே முடியாது!       

மரியாதை கொடுக்காத தன்மை

அவளும் எல்லா உணர்வுகளும் உள்ள சக மனுசிதான் என்று பலருக்கும் தெரிவது இல்லை.  அவள் படிக்காதவளாக இருந்தாலுமே அவளுக்கும் சுய மரியாதை, சுய கௌரவம்  எல்லாம் இருக்கிறது ஆங்கிலத்தில் சொல்வது போல் சம அந்தஸ்துள்ள பார்ட்னர், இதில் சில ஆண்கள் தான் என்னவோ ஒரு முதலாளியை போலவும் மனைவியை அடிமை போலவும் நடத்தும் நிலை இன்றும் இருக்கத்தான் செய்கிறது.  

செவி கொடுக்காத தன்மை

மனைவி பேசும் எதையும் காது கொடுத்து கேட்காத நிலைமைதான் பல வீடுகளில்...!  வீட்டில்  அடைந்து கிடக்கும் அவளுக்கு என்ன தெரியும்? என்ற மட்டமான ஒரு  எண்ணம் பல கணவர்களுக்கும் இருக்கிறது. ஒரு பிரச்னைக்கு ஆண்களால் ஒரு தீர்வைதான் யோசிக்கமுடியும், அதே நேரம் இந்த மனைவி பலவற்றை  அலசி ஆராய்ந்து பல தீர்வுகளை கண்டு பிடித்து வைத்திருப்பாள்.....! 

ஆண்களின் பார்வை குதிரையின் பார்வையை போன்றது, ஆனால் பெண்களின் பார்வை கழுகின் பார்வையை போன்று கூர்மையானது!! பெண்கள்  பிறப்பிலேயே எதையும் பகுத்து அறியும் அறிவையும், எதையும் சந்தேக கண்கொண்டு நோக்கும் இயல்பையும் பெற்றவர்கள்....! அதனால் எந்த பிரச்சனையையும் சுலபமாக எடுத்துகொள்வார்கள். மனைவி ஒரு மந்திரிதான் அவளை புரிந்து கொண்ட கணவனுக்கு!! 

possessiveness  இந்த குணம் ஆண், பெண் இருவருக்குமே இன்றைய காலகட்டத்தில் மிக அதிகமாக இருக்கிறது. அதிலும் கல்யாணம் ஆன புதிதில் கணவனின் இந்த குணத்தை பெண்கள் விரும்பவே செய்வார்கள், நம் மேல்தான் கணவனுக்கு எவ்வளவு அன்பு என்று பெருமைகூட பட்டு கொள்வார்கள், ஆனால் வருடங்கள் போக போக கணவனிடம் இந்த குணம் அதிகமாக வெளிப்படும் போது மனைவிக்கு அது, 'நம் மேல் கணவனுக்கு சந்தேகம் வந்து விட்டதா' என்பதில் போய் முடிந்து விடுகிறது. பிறகு என்ன ? அவர் ஒன்று நினைத்து சொல்ல மனைவி வேறு ஒன்றை நினைத்து கோபபட இனி இங்கு தாம்பத்யம் தகராறுதான்....!!

சந்தேகம்

சில கணவர்கள் உண்மையிலேயே தங்கள் மனைவி மேல் கொள்ளும் சந்தேகம், அந்த மனைவியை சிறுக சிறுக கொன்று குடிப்பதை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.  கணவன் மனைவிக்கு இடையில் பரஸ்பர நம்பிக்கையும் , அன்பும் இல்லாவிட்டால் சந்தேகம் விஸ்பரூபம் எடுக்கத்தான் செய்யும்.இருவருக்கும் இடையில் எந்த ஒளி மறைவும் இல்லாமல் வெளிப்படையாக இருக்கும் போது சந்தேகம் என்ற பிசாசு தான் வேலையை காட்டாது.  


இந்த சந்தேக புத்தியால் மனைவிக்கு 65 வயது ஆனபின்னரும் சந்தேகம் கொண்டு குறை சொல்லும் ஆண்கள் இன்றும் இருக்கிறார்கள்.     

     
அதிகமாக உணர்ச்சி வசபடுவது

முன்பு எல்லாம் பெண்கள்தான் எடுத்ததுக்கு எல்லாம் உணர்ச்சி வச படுவார்கள்.  ஆனால் பெண்கள் இப்போது கொஞ்சம் தெளிந்து விட்டார்கள் ?  தேவை இல்லாமல் உணர்ச்சி வசப்பட்டு கோபபடுவதோ, கண்ணீர் விடுவதோ இல்லை.  அதனால் மனைவியின் முன் அதிக கோபமோ , ஆவேசமோ படுவது பிரச்னைக்கு வடிகால் இல்லை.  அப்படியே நீங்கள் நடந்து கொண்டாலுமே அதை மனைவியர் பெரிது படுத்தவே மாட்டார்கள். 

இதில் சிலர் எப்படி என்றால் மனைவி ஏதாவது ஒரு பிரச்சனை பற்றி பேச தொடங்கி விட்டாலே போதும், 'ஆரம்பிச்சிடியா ? மனுஷன் வந்ததும் உயிரை எடுப்பீயே ? ச்சே' ,என்று ரொம்ப கோபமா பேசிட்டு வீராப்பாக வெளியில் சென்று விடுவது. இந்த நடவடிக்கையா அந்த பிரச்னைக்கு தீர்வு ? கணவனிடம் சொல்லாமல் வேறு யாரிடம் போய் சொல்வாள் ? யோசிக்கிறதே இல்லை...! 


அதே நேரத்தில் இந்த நிலைமையை வேறு மாதிரி, ' சரிமா நான் இப்பதானே வந்திருக்கேன், நான் என்னை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேன் அப்புறம் விரிவா பேசுவோம் ' ,என்று சொன்னால் எப்படி இருக்கும்...?! சம்பந்தபட்ட  பிரச்சனை ஒருவேளை உங்களை பற்றியதாக இருந்துவிட்டால்,  உங்களின் இந்த பதிலிலேயே பாதி மேட்டர் சரியாகி விடும் !! 


தேக்கி வைக்கபட்டு இருக்கும் அழகிய, அமைதியான  நீரில் எறியும் ஒரு சிறு கல்தான், சலனத்தை ஏற்படுத்துகிறது...!! கல்யாணம் ஆன அனைவருக்கும் இந்த வரியில் உள்ள அர்த்தம் புரியும் என்று நினைக்கிறேன்....!!!