Saturday, July 9, 2011

மனிதனுடைய மனம் யானையைப் போன்றது

ஒரு நாட்டை மன்னர் ஒருவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அப்போதுள்ள நடைமுறைப்படி அரசனுக்குப் பின் அவனது வாரிசுக்குதான் அரசுரிமை கிட்டும். ஒருவேளை மன்னனுக்கு வாரிசு இல்லாவிட்டால் அவனது உறவினருக்கு அந்தப் பதவி கிட்டும். அப்படியும் யாரும் இல்லையயென்றால், பட்டத்து யானையிடம் ஒரு மாலையைக் கொடுத்து வீதியில் ஊர்வலம் வரச் செய்வார்கள். அப்போது யானை அந்த மாலையை யாருடைய கழுத்திலாவது போடும். அதனை தெய்வீக அடையாளமாகக் கருதி அவரையே மன்னராக ஏற்பார்கள். அப்படி ஒரு நிலைமை அங்கு ஏற்பட்டது. அந்த நாட்டு அரசர் வாரிசு யாரும் இன்றி இறந்துபோனார். நடைமுறை சட்டத்தின்படி பட்டத்து யானையை அனுப்ப முடிவு செய்தார்கள். இப்படி ஒரு நிலைமை வரும் என்பதை முன் கூட்டியே உணர்ந்திருந்தான் யானைப் பாகன். அதனால் அவன் ஒரு சூழ்ச்சி செய்திருந்தான். அரசர் நோய்வாய்ப்பட்ட நாள் முதலே அவன் யானைக்குப் பயிற்சி அளிக்க ஆரம்பித்திருந்தான்.

குறிப்பிட்ட நாளில் யானையை அனுப்புவார்கள் அல்லவா? அப்போது யானை, அவனது மருமகனுக்கு மாலை இடவேண்டும் என்பதற்காக தந்திரமாக அந்தப் பயிற்சியைக் கொடுத்தான். அதனால் தினமும் தன் மருமகனை யானை முன் நிற்க வைத்து அவனுக்கு மாலை இடும்படி கட்டளையிட்டான். யானையும் தவறாமல் மாலையை அவன் கழுத்திலேயே போட்டது. பயிற்சியும் தொடர்ந்தது. ஒருநாள், அவன் வழக்கம் போல் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது, இளைஞன் ஒருவன் அந்தப் பக்கமாக வந்தான். அவன் சிறந்த கல்விமான், பண்பானவன் என்பதெல்லாம் அவனைப் பார்த்ததுமே புரிந்தது. அரசரைப் பார்த்து வேலை ஏதாவது கேட்க வந்திருந்தான் அவன். ஆனால் அவனால் தன் ரகசியத் திட்டம் அம்பலமாகிவிடுமோ என நினைத்தான் யானை பாகன். அதனால் இந்தப் பக்கமாக வராதே போ...! என்பதுபோல் அவனை நோக்கி சைகை காட்டினான். இளைஞன், யானைதான் கோபமாக இருக்கிறதுபோலும் என் நினைத்து ஒதுங்கிப் போனான்.

குறிப்பிட்ட நாளில் பட்டத்து யானை நகர வீதிகளில் கையில் மாலையுடன் சுற்றிவர ஆரம்பித்தது. யானைபாகன் தன் ஆவலை மறைத்துக் கொண்டு அதன் பின்னாலேயே நடந்தான். இன்னும் கொஞ்சம் நேரம்தான் அவன் யானைபாகன். அவனது திட்டப்படி யானை அவன் மருமகன் கழுத்தில் மாலையைப் போட்ட விநாடி முதல் அவன் அரசனின் மாமனார் ஆகிவிடுவான். சந்தோஷக் கனவு அவன் மனதில் ஓட ஆரம்பித்திருந்தது. ஆடி அசைந்து வலம் வந்த யானை மெதுவாக ஓரிடத்தில் நின்றது. மெல்ல துதிக்கையை உயர்த்தி பிறகு தாழ்த்தி மாலையை அந்தப் படித்த இளைஞனின் கழுத்தில் போட்டது. மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள் மக்கள். யானை பாகனோ திகைத்து நின்றான். எப்படி நடந்தது இது என்று புரியாமல் குழம்பினான். ஒரு முறை பயிற்சி நடந்த இடத்தின் பக்கமாக அந்த இளைஞன் வந்தபோது யானைபாகன் ஏதோ சைகை செய்தான் அல்லவா? அதை யானையும் பார்த்தது. மாலையை அந்த இளைஞனுக்குப் போடுவதற்காகத்தான் பயிற்சி அளிக்கப்படுவதாக அதன் மனதில் பதிந்தது. அதனால் மாலையை இளைஞனின் கழுத்தில் அணிவித்தது. மனிதனுடைய மனமும் யானையைப் போன்றது. அதனை சரியாகப் பழக்கினால்தான் அது பலமாக இருக்கும். தவறினால், அதுவே பலவீனம் ஆகிவிடும். எனவே சிறுவயது முதலே குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைக் கூறி அவர்களது மனதைப் பழக்குங்கள். அப்பொழுது தான் அவர்களது மனம் பலவீனம் ஆகிவிடாமல் பலமாக இருக்கும்.