Monday, July 4, 2011

ஃபேஸ்புக்கா? நோட்புக்கா? தடுமாறும் குழந்தைகள்!

ஃபேஸ்புக்கில் என்ன பிரச்சனை?

ஃபேஸ்புக்கில் ஒரு பிரச்சனையும் இல்லை. இதை பயன்படுத்துபவர்களால் தான் பிரச்சனை. இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், திருடர்கள், கொள்ளையர்கள், சைக்கோக்கள், சைபர் கிரிமினல்கள் உட்பட. எனவே புதிதாக ஒருவர் அறிமுகமானால் அவர் யார் என்று தெரிந்து கொள்வதிலும், அவருடன் பழகுவதிலும் சிக்கல் ஆரம்பிக்கிறது. நமக்கே இப்படி என்றால், குழந்தைகள் விஷயத்தில் நாம் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமல்லவா?

கடந்த மாதம் என்னுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஒரு பெண்ணை சந்தித்தேன். அவருடன் +2 படிக்கும் அவருடைய மகன். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின், உன்னுடன் என் மகனைப் பற்றி பேச வேண்டியதிருக்கிறது என்றார். அந்த உரையாடலை படியுங்கள்


அவர் -
நீ சொல்வதைக் கேட்டால் எனக்கு பதட்டம்தான் அதிகமாகிறது. என் குழந்தைகளை எப்படி கண்காணிக்கிறது?

"வேணும்னா என் பாஸ்வேர்டை தர்றேன். நீயே அப்பப்போ செக் பண்ணிக்கோ", தடதடவென வந்து சொல்லி விட்டு கடகடவென மறைந்தான் அவருடைய மகன். நாங்கள் பேசிக்கொண்டிருப்பதை கவனித்துக் கொண்டிருந்தான் போலிருக்கிறது.

நான் -
ரொம்ப சிம்பிள். முதலில் நீங்கள் இது பற்றிய பதட்டத்தை தவிர்க்க வேண்டும். இப்போது இதில் உள்ள பாஸிடிவ் மற்றும் நெகடிவ் அம்சங்கள் இரண்டையுமே சுருக்கமாக உங்களுக்கு சொல்லிவிட்டேன். இதை மனதில் வைத்துக் கொண்டு ரிலாக்ஸ்டாக உங்கள் குழந்தைகளை அணுகுங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம், கவனமாக இருக்கச் சொல்லி அறிவுறுத்துங்கள்.

அவர் -
அதைத்தான் தினமும் சொல்லிக்கிடடிருக்கேனே.. கவனமா இரு, கவனமா இருன்னு சொன்னா, என்னை மதிக்கறதே இல்லை, டிஸ்டர்ப் பண்ணாத, எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று சண்டை போடறாங்களே..

நான் -
ஹா..ஹா..ஹா.. இதில் ஆச்சரியம் என்ன இருக்கு? அவர்கள் அப்படித்தான் உங்களிடம் சண்டை போடுவார்கள். ஏனென்றால், உங்களுக்கு முழுவதுமாக ஃபேஸ்புக் பற்றி தெரியவில்லை. "இதெல்லாம் யாருக்கு தெரியும்" என்று அடிக்கடி உங்கள் அறியாமையை அவர்களுக்கு சொல்கிறீர்கள் என்பதால், ஒன்றும் தெரியாமலேயே நீங்கள் கட்டுப்படுத்துவதாக உங்கள் குழந்தைகள் நினைக்கிறாரகள். இது எதிர்பார்த்ததுதான்.

அவர் -
அவங்க என் கூட சண்டை போடறத எப்படி குறைக்கிறது?

நீங்களும் ஃபேஸ்புக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். விருப்பம் இல்லை என்றால், உங்கள் மகனே முன்வந்து சொன்னது போல, அவனுடைய பாஸ்வேர்டை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவன் தரமாட்டேன் என்றால், தாராளமாக திட்டி, இந்த விஷயத்தில் இரகசியம் கூடாது என்பதை கடுமையாகச் சொல்லி பாஸ்வேர்டை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவன் பள்ளிக்குச் சென்றபின் அவனுடைய ஃபேஸ்புக்கை திறந்து அவன் Friend ஆகியுள்ள நபர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை கவனியுங்கள். சந்தேகத்து இடமானவர்களை, உங்கள் மகனிடம் எடுத்துச் சொல்லி, அவனை விட்டே நீக்கச் சொல்லுங்கள்.

அவர் -
இது நல்ல ஐடியாவா இருக்கே.. ஆனா இது மட்டுமே போதுமா? ஃபேஸ்புக்ல அவங்க பத்ரமா இருப்பாங்களா?

நான் -
நிச்சயமாக இது மட்டும் போதாது. அவர்களுக்கு Profile Page என ஒன்று இருக்கும். அதாவது தங்களைப் பற்றிய சுய விபரங்கள் என்ன எழுதியிருக்காங்க அப்படின்னு பாருங்க. அதுல ஃபோன் நம்பர், இமெயில் ஐடி, வீட்டு விலாசம், குடும்பத்தினர் பற்றிய விளக்கம் இதெல்லாம் இருந்தா, திரும்பவும் உங்க மகனையே கூப்பிட்டு நீக்குங்க. நம்மைப் பற்றிய உண்மையான சுய விபரங்கள், நம்மைப் போன்ற பெரியவர்களே அதில் விட்டு வைத்தல் தவறு. இன்டர்நெட் கிரிமினல்கள் இவர்களைத்தான் எளிதாக இரையாக்குகிறார்கள். முடிந்தால் உங்கள் மகன் அல்லது மகளை புனைப் பெயரில் இயங்கச் சொல்லுங்கள். அது மிகவும் நல்லது.

அவர் -
என்னுடைய சின்னப் பையன் புனைப் பெயர்தான் வைத்திருக்கிறான். அவனுடைய நண்பர்களில் சிலரும் இஷ்டத்துக்கு புனைப் பெயர்தான் வைத்திருக்கிறாரகள். அது நல்லது என்பது இப்போது புரிகிறது. ஆனால் அவர்களின் Friend list பெரிதாகிக் கொண்டே போகிறது. நல்ல நண்பர்களை எப்படி தேர்ந்தெடுக்க வைப்பது?

"என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் நல்லவங்கதான். நீங்கதான் உங்க ஃபிரண்டு கூட அடிக்கடி மொபைல் போன்ல அடிக்கடி சண்டை போடுவீங்க. நாங்க அப்படியெல்லாம் கிடையாது", மின்னல் போல அவருடைய மகன் மீண்டும் வந்து சொல்லிவிட்டு மறைந்தான்.

நான் -
ஹா..ஹா..ஹா... பார்த்தீங்களா? பசங்க முன்னாடி நாம எப்படி நடந்துக்க கூடாதுன்னு உங்க பையனே சொல்லிட்டு போறான். அவங்க முன்னாடி நாம் சண்டை போடக் கூடாது. அது அவர்களை பாதிக்கும். அந்தக் குணம் அவர்களையும் தொற்றும். அதே போல உங்கள் மகன் எல்லோரும் நல்லவர்கள் என்று சொன்னதையும் கவனிங்க. அவனுடைய மனது நல்ல மனது என்றாலும், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கில் இது போன்ற நல்ல மனதுக்காரர்களைதான் குற்றவாளிகள் குறி வைக்கிறார்கள். மும்பையிலிருக்கும் என் நண்பரின் மகள், இப்படித்தான் கேரளாவிலிருக்கும் எவனோ ஒரு ஃபேஸ்புக் நண்பனை நம்பி, கல்யாணம் செய்து வை என்று அடம்பிடித்து ஒரே இரகளை ஆகிவிட்டது. கடைசியில் போலீஸ் துணையுடன் விசாரித்ததில், அவன் ஏற்கனவே திருமணமானவன் என்பது தெரியவந்து அப் பெண் மணம் மாறினாள். எனவே நமது குழந்தைகளுக்கு ஃபேஸ்புக் Friend மற்றும் நிஜ வாழ்க்கை Friend ஆகிய இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவாக, ஆணித்தரமாக அவ்வப்போது ஒரு நண்பனைப் போல அமர்ந்து சொல்லித் தரவேண்டும்.