Saturday, July 2, 2011

நான்.. இனி செல்லாக் காசு!

சிறு பிள்ளைகளின் உள்ளங்கையில் கூட, அடம்பிடிக்காமல் உட்கார்ந்து கொள்ளும் தன்னடக்கம் மிக்கவன் நான். கீழே விழுந்தால் கூட ஓங்கி ஒலிக்காமல், மெல்ல சிணுங்குவேன். அன்று...ஆடவரின் சட்டைப் பைக்குள் நான் இருந்தால், அவர்கள் மகாராஜா. குட்டி குட்டி வட்டமாய், சுற்றி சுற்றி வந்த என்னை பெருமைமிக்க இந்திய அரசு இன்று, செல்லாக் காசாக்கி விட்டது.


ஆம்...நான் தான் 25 காசு பேசுகிறேன்... இன்னமும் உங்கள் வீட்டில் நான் இருக்கிறேன். உங்களிடமிருந்து விடைபெறும் முன், என்னைப் பற்றி, நான் வாழ்ந்த காலத்தைப் பற்றி கூறுகிறேன்...படிக்கிறீங்களா?பிரிட்டீஷார் என் மதிப்பறிந்து, ஏக மரியாதை செய்தனர். அது ஒரு கனாக்காலம். ஒரு நாள் முழுக்க வயலில் வேலை செய்தால், என்னையே கூலியாக தந்தனர். அந்தக் கூலியில் ஒருவாரத்திற்கு தேவையான காய்கறி, அரிசி, பலசரக்கு பொருட்களை வாங்க உதவினேன். மற்றவர்களைப் போல வெறும் இரும்பல்ல, நான். நிக்கலும், வெள்ளியும் கலந்த கலவை. விலைமதிப்புள்ளவன். கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக என்னை உண்டியலில் இடும் போதெல்லாம் நான் சந்தோஷப்பட்டேன். இறைவனுக்காக என்னை அர்ப்பணிக்கின்றனரே என்று. வெள்ளியால் ஆன என்னை மட்டும் தனியாக பிரித்து, பொருட்கள் செய்ய பயன்படுத்திக் கொண்டனர். அந்தளவிற்கு பெருமையானவாக இருந்தேனே...


வியாபாரிகளிடம் அதிகளவில் சேரும் என் இனத்தவரை, வங்கியில் மூட்டையாக கொண்டு போய் தான் சேர்த்தனர். வங்கியாளர்களும் முகம் சுளிக்காமல், எங்களை எண்ணி மதிப்பிட்டனர். அப்போதெல்லாம் வெற்று காகிதத்திற்கு (ரூபாய்) அதிகம் பெருமையில்லை. 1956 ல் ஒரு பவுன் தங்கத்தின் விலையே 63 ரூபாய் தான். என்னை விலையாக கொடுத்து, தியேட்டரில் சொகுசான "பாக்ஸ்' இருக்கையில் அமர்ந்து சினிமாவை ரசித்தனர். டவுன் பஸ்சில் "25 காசு டிக்கெட்'...உங்களுக்கு ஞாபகமில்லையா? என்னை தந்தால், ஒரு "சென்ட்' பாட்டில், சீருடை தைக்க பயன்படும் ஒரு கஜம் காடாத்துணி, 60 பக்க நோட்டு வாங்கலாம்.
எந்த ஒரு நல்ல காரியம் என்றாலும், ஒரு ரூபாயுடன் என்னையும் சேர்த்து, "ஒன்ணேகால் ரூபாயை குலதெய்வத்திற்கு முடிஞ்சு போடுங்க' என்றுக்கூறி, எனக்கு பெருமை சேர்த்தனர். முன்பெல்லாம், இறந்தவர்களின் நெற்றியில் என்னை வைத்த காலமும் உண்டு. அது போய் பல வருஷம் ஆச்சு..எனக்கு மதிப்பு குறைய ஆரம்பிச்ச பிறகு நெற்றியில என் இடத்த அண்ணன் ஒரு ரூவா பிடிச்சிடுச்சு. அந்த காலத்தில் என்னை வெள்ளி காசாக உருவாக்கி, மதிப்பு கொடுத்தனர்.


1931க்கு பின், பித்தளை, இரும்பு, குரோமியம் கலந்த காசாக மாற்றி, எனது மதிப்பை குறைத்தனர். அப்போது எனக்கு "நாலணா' என்று பெயர். அரைபடி பொறிக்கடலை, அச்சுவெல்லம் வாங்கும் அளவிற்கு எனக்கு மதிப்பு இருந்தது. அப்போது எல்லாம் என்னை ஓட்டலில் தந்தால் திருப்தியாக வயிராற சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டவர்கள்... இவ்வுலகைவிட்டு விடைபெற்றுவிட, நான் மட்டும் விதிவிலக்கா என்ன?எல்லோரும் ஏற்றி விட்ட விலைவாசியால்... இங்கு இனி என்னை தந்தால் என்ன கிடைக்கும்? எனவே நான் நிரந்தரமாக முடக்கப்பட்டு விட்டேன். இனி, எங்கோ ஓர் மூலையில் அருங்காட்சியகத்தில் மட்டுமே என்னை காணமுடியும். இனி உங்களை பொறுத்தவரை, நான் ஒரு செல்லாக் காசு.