Saturday, July 2, 2011

மனைவிக்கு மதிப்பளியுங்கள்..

மனைவிக்கு மதிப்பளியுங்கள்..

கட்டிய மனைவியை மதிக்காதவன் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை.மகாபாரதத்தில் தர்மராஜருக்கு ஈடான பாத்திரம் இல்லை. அவர் மிகவும் பொறுமையானவர் தான்.பரமாத்மா கிருஷ்ணனுக்கே அவர் மைத்துனர். தர்மம் தவறி காரியம் செய்யாத மாமன்னர். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை தர்மம் செய்வதற்கென்றே ஒதுக்கியவர். அப்படிப்பட்ட மகானுபாவன், ஒரு இக்கட்டான நிலையில், அரச தர்மத்திற்கு உட்பட்ட சூதில் இறங்கினார். அது அவரது உரிமை. ஆனால், சில எல்லைகளை மீறி தன் மனைவியை வைத்து சூதாடி விட்டார். விளைவு திரவுபதி பலரது முன்னிலையில் துகிலுறியப்பட்டு அவமானப்படுத்தப்பட்டாள். விளைவு அவர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. கட்டிய மனைவியை சூதாட்டத்தில் பந்தயப் பொருளாக வைத்தது பெரும்பாவம். அந்த பாவத்தின் பலனை அவர் அனுபவித்தார். அது மட்டுமா? தாய்க்கு சமமாக மதிக்க வேண்டிய சொந்த அண்ணியை துகிலுறிந்த மைத்துனர்களும் அழிந்தார்கள். ஒரு பெண் அவமானப்படுத்தப்படும் நாடு வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை. ராமாயணத்தில், ராமச்சந்திர பிரபு ஏகபத்தினி விரதனாக, சீதாவே கதியென இருந்தார். அதனால் தான் இன்றும் அனைவர் வாயிலும் ஸ்ரீராமஜெயம் மந்திரம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அத்திரி மகரிஷியும் இப்படிப்பட்டவர் தான். இவர் பிரம்மாவின் மனதில் இருந்து தோன்றியவர். தனக்கு இப்படி சில புத்திரர்கள் இருந்தால் எப்படி இருக்கும் என பிரம்மா கற்பனை செய்தாராம். அவ்வாறு மனதில் தோன்றிய கற்பனைகளை குழந்தைகளாக வடித்தார். அந்த குழந்தைகளே மரீசி, ஆங்கிரஸர், அத்திரி, புலஸ்தியர், புலஹர், கிரது ஆகியோர். இவர்களில் அத்திரி மகரிஷியின் மனைவி அனுசூயா.இவளை அனஸூயா என்று சொல்வதே பொருத்தமானது. அனஸூயா என்ற சொல்லுக்கு கோபப்படாதவள் எனப் பொருள். இவள் நல்ல குணமுள்ளவர்களை மட்டுமின்றி, மோசமான குணமுள்ளவர்களையும் கூட புகழ்ந்து பேசுவாள். அவர்களைக் குறை சொல்ல மாட்டாள். யாரேனும் ஏதாவது குற்றம் குறை செய்து விட்டாலும், அதை பிறரிடம் சொல்லிக்காட்ட மாட்டாள். அதாவது, இந்த காலத்து பெண்களில் 99 சதவீதம் பேரிடம் இல்லாத குணம் இது. இப்போதெல்லாம் தன் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை விட, பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிவது தான் ஆண், பெண் இருபாலரின் வேலையாகவும் இருக்கிறது. இந்த துர்க்குணங்கள் எல்லாம் இல்லாமல் நல்ல பெயர் எடுத்திருந்தாள் அனுசூயா. கணவரின் பாத தீர்த்தத்தை தெளித்து, திருமால், பிரம்மா, சிவன் ஆகிய மூவரையும் குழந்தைகளாக மாற்றிய பெருமை மிக்கவள் இவள். இதன் பொருள் என்ன தெரியுமா? நல்ல குணமுள்ளவர்களிடம், அவர்களது கள்ளமற்ற உள்ளத்தை பாராட்டி, களங்கமில்லாத குழந்தை உருவில் இறைவன் வந்து விடுகிறான் என்பதே. ராமனும் சீதாவும் கானகம் வந்ததும் அத்திரியை சந்திக்கின்றனர். அவர்களை ஆசிர்வதிக்கும் அத்திரி, சீதாராமரிடம் தனது மனைவியின் புகழ் பாடுகிறார்.

ராமா! என்னை வணங்கி என்னப்பா பலன்? ஆஸ்ரமத்திற்குள் என் மனைவி அனுசூயா இருக்கிறாள். அவளைப் போய் ஸேவி. அவள் செய்த தவத்தை விட சிறந்த தவத்தை இதுவரை எந்த மகாமுனிவனும் செய்யவில்லை. மழையே வருக என அவள் சொன்னால் போதும். அவள் மீண்டும் சொல்லும் வரை வருணபகவான் அவள் சொன்ன இடத்தை விட்டு அசையமாட்டான். அப்பேர்ப்பட்ட சக்தி மிக்கவள். ஒருமுறை எங்கள் பகுதியில் பத்து ஆண்டுகளாக மழை இல்லை. பஞ்சம், பசியால் மக்களும், மாக்களும் இறந்தனர். அந்த நேரத்தில் கங்கை நதியை இங்கே கொண்டு வந்தாள் அனுசூயா. இவள் செய்த புண்ணியத்தை கங்காதேவிக்கு தாரை வார்த்து, மற்றவர் வாழ வகை செய்தாள். இதிலிருந்து அவள் எப்பேர்ப்பட்ட மகா புண்ணியவதி என்பதை இதிலிருந்து தெரிந்து கொள். அவளது தோழிகள் ஏதாவது காரணத்தால் அவளைப் பார்க்க வந்து கொண்டே இருப்பார்கள். இவளிடம் யோசனை கேட்டு பலன் அடைவார்கள். ஏனெனில், இவள் நல்லதை மட்டுமே செய்வாள்; நல்லதையே பேசுவாள். ஒருமுறை ஒரு முனிவர் அவளது தோழியை சபித்து விட்டார். ஏ பெண்ணே! உன் கணவன் நாளை பொழுது விடிவதற்குள் சாவான், என்பதே அந்த சாபம். அந்தப் பெண் அனுசூயாவிடம் கதறினாள். நாளை காலை நான் வெண்புடவை அணிந்து விடுவேனடி, என் தலையிலுள்ள மலர்கள் பறிக்கப்படுமடி, என் வளையல்கள் உடைக்கப்படுமடி, பொட்டு வைக்கக்கூட இயலாத பாவியாவேனடி, என் குழந்தைகள் அப்பா, அப்பா என அலறுமேடி, என் உயிர்த்தோழியே! இந்த சிரமத்திலிருந்து எப்படியடி நான் தப்பிக்கப்போகிறேன் என அழுது துடித்தாள்.

என் அனுசூயா என்ன செய்தாள் தெரியுமா ராமா! ரிஷி சொன்னதை பொய்யாக்கி விட்டாள். தோழி! கவலை கொள்ளாதே. விடிந்தால் தானே உன் கணவன் இறப்பான். அந்த ரிஷி இந்த சாபத்தை விலக்கிக் கொள்ளும் வரை இனி உலகத்தில் உதிக்கவே கூடாது என சூரியனுக்கு உத்தரவு போட்டு விடுகிறேன். சூரியன் என்னை மீற மாட்டான். அந்த ரிஷியின் சாபம் என்ன செய்து விடுகிறதென பார்ப்போம் என்றாள். அதுபோலவே சூரியன் பத்து நாட்களாக உதிக்கவில்லை. ஊரெங்கும் நோய் நொடி பரவியது. இருள் சூழ்ந்தது. தேவர்கள் கலங்கினர். அவர்கள் சாபம் கொடுத்த முனிவரிடம் ஓடினர். உலக இயக்கமே நின்று போவதற்கு காரணமாக அவரது சாபம் அமைந்து விட்டதை சுட்டிக்காட்டினர். அனுசூயாவின் பெருமையை உணர்ந்த முனிவர், சாபத்தை விலக்கிக் கொண்டார். விதியையே தன் மதியால் வென்றவள் என் மனைவி. அவளிடம் ஆசி பெற்றால், சமயோசித புத்தியுடன் நடந்து கொள்ளலாம். உனக்கு வெற்றி மேல் வெற்றி கிட்டும், என்றார். அத்திரியும், அனுசூயாவும் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவர்கள். அவர்களைப் பின்பற்றி வாழுங்கள். மனைவியைப் பற்றி பிறரிடம் குறை சொல்லாதீர்கள். குணத்தில் குறையுள்ளவளாக இருந்தாலும் கூட, நாலு பேரிடம் அதை வெளிச்சம் போட்டுக் காட்டாமல், உங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். அவளுக்கு மதிப்பளியுங்கள். அத்திரி மகரிஷி தன் பத்தினியைப் பற்றி ராமனிடம் பெருமையாகச் சொன்னது போல, அவளது சமையலைப் பற்றியோ, பணித்திறன் பற்றியோ, அவளுக்கு தெரிந்த கலைகள் பற்றியோ பிறரிடம் சொல்லுங்கள். அவள் மகிழ்வாள். மனைவி மகிழ்ச்சியாக இருக்கும் வீட்டில் நல்லதே நடக்கும்.