Friday, July 8, 2011

தாம்பத்தியம் - 12

தாம்பத்தியம் - 12

நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று பார்த்தால் முக்கியமானதும் கொடூரமானதும் ஒன்று உண்டென்றால் அது பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைகள்தான்.  மூன்று வயது தொடங்கி நடக்கும் இந்த கொடூரம் அந்த குழந்தையை சுற்றி இருக்கும் நபர்களாலேயே பெரும்பாலும் நடைபெறும்.  ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் இன்றும் நம்நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  ஆன்மிகத்தில், தெய்வ நம்பிக்கை மற்றும் பண்பாடு, கலாசாரத்தில் சிறந்து விளங்குகிறது என்று நாம் பெருமை பட்டு கொண்டு இருக்கிற இதே நாட்டில்தான் இந்த அருவருப்பான ஒழுங்கீனங்களும் நடைபெற்று கொண்டு இருக்கின்றன.

பெண்களில் பெரும்பாலானவர்கள் சிறு வயதில் ஏதாவது ஒரு சூழ்நிலையிலாவது கட்டாயம் சிறு அளவிலாவது சுற்றி இருக்கும் ஆண்களால் தவறான தொடுதலுக்கு உட்பட்டு இருப்பார்கள். அந்த நேரத்தில்  அவர்களுக்கு அது தவறு என்று உணரமுடியாத பட்சத்தில் தெரியாமல் போய் இருக்கலாம், அல்லது இப்போது மறந்து இருக்கலாம்.  ஆனால் ஆண்களின் அந்த தொடுதல் தவறானது என்பதை புரியக்கூடிய வயது இல்லை என்பதுதான் ஒரே காரணம். 

பெண் குழந்தைகளுக்கு மட்டும்தான் இந்த கொடுமை என்று இல்லை,  சிறு ஆண் குழந்தைகளும்  இக்கொடுமைக்கு ஆளாகிறார்கள். ஜீரணிக்க முடியாத விஷயம்தான் என்றாலும் இந்த கொடுமைகள் தாமதமாகவே வெளி உலகிற்கு தெரிய வருகின்றன, பல வராமலும் போய் விடுகின்றன. 10, 12  வயது நிரம்பிய சிறுவர்கள் ஆண்களால் மட்டும் அல்ல சில பெண்களாலுமே  பாதிக்க படுகிறார்கள். இதனை பற்றி இன்னும் விரிவாக சொல்வது அவ்வளவு சரியாக இருக்காது என்று எண்ணுகிறேன்.  (ஆனால் கற்பனை இல்லை , நான் கேள்விபட்ட அருவருப்பான நிஜம் ) 

சில பெண்கள் திருமணம், கணவனின் முதல் தொடுதல் என்று வரும் போது அருவருப்புடன்  பயந்து விலகுவது, ஆண்களால் சிறு வயதில் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்ட பாதிப்புதான் காரணமாக இருக்கும்.  பல திருமணங்கள் தொடங்கிய கொஞ்ச நாளில் முறிந்து போவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இதை யாரும் துணிந்து வெளியே சொல்வதும்  இல்லை. அந்த பெண்ணின் பாதிக்கபட்ட மனநிலையை  சரி படுத்தவும், சம்பந்த பட்டவர்கள் முயலுவதும்  இல்லை.


சிறு குழந்தைகள் பாலியல் கொடுமை 


பால் மனம் மாறாத சிறு குழந்தைகளை சிதைத்து சின்னாபின்னப்படுத்த கூடிய அளவிற்கு மனிதம் மிருகமாகி விட்டது நிதர்சனம். சிதைந்து போனபின் அந்த குழந்தையின் உடலில் உயிர் இருக்கும் என்பதற்கு நிச்சயம் இல்லை.  அந்த குழந்தையை பெற்றவளின் இதயம் நொறுங்கி போகாதா ?  அந்த மிருகத்தை பெற்றவளின் நிலை இதை விட கொடுமைதான்.  ஏன் ஏன் இந்த கொடூரம்.....?

இந்த ஈன புத்தி மனித மனதில் எத்தகைய நேரத்தில் நுழைகிறது ?

மனிதனின் உணர்வை மீறிய செயலா ?
இந்த செயல் ஒருவேளை மனசிதைவால் நடக்கிறதா ?
அந்த மனசிதைவு ஏன் ஏற்படுகிறது ?

இப்படி கேள்விகளை அடுக்கிகொண்டே போகலாம்.  ஆனால் பதில்...?! அப்படியே பதில் கிடைத்தாலும் அதனால் அடையபோவது என்ன? ஒன்றும் இல்லை. இழந்தது இழந்தது தான். இறந்தகாலத்தை மறுபடி நிகழ்காலமாக மாற்றும் விந்தை நடந்தால்  மட்டுமே இந்த பதில்களால் ஆதாயம் .


நடந்த எதையும் மாற்ற முடியாது ஆனால் முடிந்தவரை இனி நடக்காமல் பார்த்து கொள்ளலாம் அல்லவா ?  ஆண், பெண் குழந்தை எந்த பாலினமாக இருந்தாலும் சிறு வயதிலேயே சில விசயங்களில்  பெற்றோர்கள் கவனமாக இருந்தாலே போதும்.  நான்  மறுபடி சொல்லபோவது வேறு ஒன்றும் இல்லை,  திருமணம் பொம்மை விளையாட்டும் இல்லை, குழந்தை பேறு தற்செயல் சமாச்சாரமும் இல்லை.  குழந்தை பெறும்வரை கணவன், மனைவி இருவரின்  கருத்து வேறுபாடுகள் பெரிதாக யாரையும் பாதிக்க போவது இல்லை, ஆனால் குழந்தை பிறந்தபின் உங்களது இருவரின் கவனமும், அக்கறையும் அந்த குழந்தையின் மேல் அதிகம் இருப்பது காலத்தின் கட்டாயம்.


பணம் பொருள் சம்பாதிப்பது மட்டுமே உங்கள் குறிக்கோள் என்று இருந்தால் தயவு செய்து குழந்தை பெற்று (கொல்லாதீர்கள்) கொள்ளாதீர்கள். உங்கள்  பணத்தேவை முடிந்ததும் (முடியுமா ?) பெற்று கொள்ளுங்கள்.தவறான தொடுதல்கள்


சிறுமிகள், சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகாமல் பார்த்து கொள்வது பெற்றவர்களின் தலையான கடமைதான்.  சூழ்நிலையின் மேல் குறை சொல்லி தப்பித்து கொள்வதை போல் பாவம் வேறு இல்லை.  மூணு வயதில் இருந்தே குழந்தைகளிடம் , (ஆண், பெண் ) பிறரிடம் பழகும் விதங்களை சொல்லி கொடுக்க வேண்டும். மற்றவர்கள் , அவர்கள் நெருங்கிய உறவினர்களாக  இருந்தாலுமே BAD TOUCH, GOOD TOUCH  பற்றி விளக்கமாக சொல்ல வேண்டும்.  (சில பெற்றோர்களுக்கே இதன் அர்த்தம் புரிவது இல்லை)  எங்கு தொடுவது சரி என்றும் , தவறான மறைவான இடங்கள் எவை என்றும் சொல்லி வைக்க வேண்டும். அப்படி அந்த இடங்களில் யாராவது தொட்டால் உடனே எங்களிடம் சொல்ல வேண்டும் என்பதை அன்பாக அறிவுறுத்துங்கள்.

குழந்தைகளை  பள்ளிக்கூடம் அழைத்து செல்லுகின்ற வாகனஓட்டிகளை பற்றி குழந்தைகளிடம் அடிக்கடி விசாரித்து வையுங்கள்.    நேரம் கிடைக்கும் போது அவர்களிடம் நீங்களும் பேசி நட்பை வளர்த்து கொள்ளுங்கள்.  ஆசிரியர்கள் உங்கள் குழந்தையிடம் எப்படி நடந்து கொள்வார் என்பதையும் அடிக்கடி கேட்டு தெளிவாகி கொள்ளுங்கள் (எந்த புற்றில் எந்த பாம்போ ? )


இந்த கேள்விகள் உங்கள் குழந்தைகள் பதினாறு வயதை தாண்டும் வரை கூட கேட்கலாம்  தப்பில்லை. ( அவர்கள் வளர்ந்தாலும் குழந்தைகள் தான் ) உங்கள் கவனம் இந்தப்படியே இருந்தால் பல சிறுமியரின் பால்யம் இன்பமாகவே இருக்கும். அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனபின் எதிர்வரும் திருமணத்தையும் விரும்பி எதிர்பார்பார்கள்.


அப்படி இல்லாமல் சிறுவயதில் தவறான தொடுதலால் அவர்கள் மனதளவில் பாதிக்க பட்டு இருந்தாலும் கண்டிப்பாக அவர்களின் திருமண வாழ்க்கை சோபிக்காது, விளைவு அவர்களின் தாம்பத்தியம் மனநல மருத்துவ வாசலிலும் , அல்லது  கோர்ட் வாசலிலும் தான்  போய் நிற்கும், தவிர்க்க முடியாது...?!!


அக்கறை உள்ள  பெற்றோர்களின் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்,  ஆனால் பெற்றோர்களின் கருத்து வேறுபாடால் தனித்து விட படுகின்ற குழந்தைகளின் நிலை....?!!