Friday, July 1, 2011

நால்வரையும் மனதில் இருத்தி நிம்மதியாக வாழ்

கெட்டவர் நால்வர்

ஒரு குருகுலத்தில் கற்றுத்தேர்ந்த இளைஞன் அவரிடம் விடைபெற்று திரும்பும் போது, குருவே! இத்தனை நாள் எனக்கு பல வித்தைகளையும், கல்வி கேள்விகளில் பயிற்சியும், தகுந்த புத்திமதிகளும் சொல்லி என்னை மனிதனாக்கினீர்கள். இவ் வுலகில் முழு மனிதனாக நான் வாழ என் மனதில் பதியுமாறு தகுந்த அறிவுரையை தயை கூர்ந்து சொல்லுங்கள், என வணங்கி கேட்டான். இளைஞனே! நீ விட்டுக்கெட்டவனையும், விடாது கெட்டவனையும், தொட்டு கெட்டவனையும், தொடாது கெட்டவனையும் மறக்காமல் நடந்துகொள். நீ நல்லவனாக வாழ்வாய் என்றார் குரு. குருகுலத்தில் இதுவரை சொல்லித்தராத புது விடுகதையை தனது குரு சொன்னதைக் கேட்டு இளைஞன் சற்று தடுமாறினான். குருவே! இதுபற்றி தாங்கள் என்னிடம் ஏதும் இதுவரை கூறியதில்லை. சற்று விளக்கமாக சொல்லுங்கள். அதன்படி நடந்து கொள்கிறேன் என்றான்.

மாணவனே! சொல்கிறேன் கேள். திருமால் வாமன வடிவெடுத்து மூன்றடி நிலம் கேட்டபோது எதை வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறி, இறைவனின் ஒரு அடிக்கு இந்த பூமியையும், இன்னொரு அடிக்கு மண்ணுலகத்தையும், கடைசியாக மூன்றாவது அடிக்கு தன்னையே கொடுத்து கெட்டுப்போனவன்தான் விட்டுக்கெட்டவனான மகாபலி. அவனை ஒரு விஷயத்தில் நீ மறக்கக்கூடாது. வாக்கு கொடுக்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். பிறர் என்ன கேட்பார்கள் என்பதை அறியாமலேயே வாக்கு கொடுப்பது தவறு. எனவே ஆராய்ந்து அறிந்து யாருக்கும் வாக்கு கொடு. அடுத்து விடாது கெட்டவனைப்பற்றி சொல்கிறேன். பாண்டவர்களின் தூதுவனாக கண்ணன் துரியோதனனிடம் சென்றான். ஐந்து காணி நிலமாவது தா என கேட்டான். துரியோதனனோ ஒரு அடி மண் கூட தரமாட்டேன் என சொல்லிவிட்டான். தனது சகோதரர்களுக்கு ஒரு சிறு இடத்தை விட்டுத்தராமல் போனதால் துரியோதனனும் அவனது சுற்றத்தாரும் மாண்டனர். எனவே இந்த மண்ணில் வாழ்பவர்களுடன் விட்டுக்கொடுத்து அனுசரித்து நடந்துகொள். அது உன் வாழ்க்கையை வளமாக்கும். தொட்டுக்கெட்டவன் யார் தெரியுமா? பத்மாசுரன் என்ற அரக்கன்தான்.

இவன் ஈஸ்வரனை நோக்கி கடும் தவம் செய்து தன் கை யார் தலைமீது படுகிறதோ அவர்கள் உடனே பஸ்மமாகிவிட வேண்டும் என்ற வரத்தை பெற்றான். இதை வைத்துக் கொண்டு இஷ்டப்பட்டவர்களை எல்லாம் கொன்றான். ஒருமுறை ஈஸ்வரனின் தலையிலேயே கை வைக்க அவன் முயன்றான். ஈஸ்வரன் தப்பி ஓடுவதுபோல நடித்தார். எல்லா ஆயுதங்களையும் இழந்து விட்டவர்போல பாவனை காட்டினார். அவனது அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்தார். விஷ்ணுவும் அவரும் இணைந்து ஒரு தந்திரம் செய்தனர். விஷ்ணு அழகிய மோகினி ரூபம் எடுத்து பத்மாசுரன் முன் நின்றார். அவளது அழகில் மயங்கிய அசுரனிடம், நீ என்னைப்போலவே நடனமாட வேண்டும். அவ்வாறு செய்தால் உன்னை மணந்துகொள்கிறேன் என்றார். பத்மாசுரனும் மோகினியைப் போலவே நடனமாடினான். ஒரு கட்டத்தில் மோகினி தன் தலைமீது கை வைக்கவே பத்மாசுரனும் அவ்வாறே செய்தான். அந்த இடத்திலேயே பஸ்மமானான். இதுபோல பெண்களின் மீது மோகம்கொண்டு உன் தலையில் நீயே மண்ணை போட்டு கெட்டு போகாதே. தொடாமல் கெட்டவன் பற்றி கேள். சீதையின் மீது ஆசை கொண்டு அவளை சிறை எடுத்துச்சென்றான் ராவணன். பிற பெண்களை அவர்களது அனுமதியின்றி தொட்டால் ராவணனுக்கு அழிவு ஏற்பட்டுவிடும். இதன் காரணமாக அவள்மீது தன் கைவிரல் நகம்கூட படாமல் தொடாமலேயே அவளை தன் இச்சைக்கு வற்புறுத்தினான். அந்த இலங்கேஸ்வரன் ராமனின் பாணத்திற்கு பலியானான். இவனை போல பிறன்மனை நோக்காமல் உன் மனைவியுடன் ஒருத்திக்கு ஒருவனாக வாழ்ந்திரு, என்றார்.

மாணவனின் மனம் அமைதி பெற்றது. குரு சொன்னபடியே இந்த நால்வரையும் மனதில் இருத்தி நிம்மதியாக வாழ்க்கை நடத்தினான்.