Tuesday, July 31, 2012

குழந்தைக்குக் கற்கை குறைபாடு


ற்றுக்கொள்வதில் எல்லாக் குழந்தைகளுமே ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது. தங்கள் வயதை உடைய பிற குழந்தைகள் சர்வசாதாரணமாகப் புரிந்துகொண்டு திருப்பிச் சொல்வதை அதே வயதுடைய சில குழந்தைகளால் சொல்ல முடியாது. சிலர் ஓவியம் வரைவதில் கை தேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களின் கையெழுத்து மோசமாக இருக்கும். 'தாரே ஜமீன் பர்' என்ற இந்திப் படத்தில் இஷான் என்ற சிறுவனுக்கு இந்தப் பிரச்னை இருப்பதாகச் சித்தரித்திருப்பார்கள். இப்படிப்பட்ட கற்கை குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர் மனச் சோர்வு அடையத் தேவையே இல்லை. ஏனெனில், இவர்கள் எப்போதும் இப்படியே இருந்துவிடப் போவதில்லை. உலகின் ஆகச் சிறந்த படைப்புக்களைத் தந்த பலர் இந்தக் கற்கை குறைபாட்டை இளமையிலேயே பெற்று இருந்தவர்கள்தான். 

தலைசிறந்த திகில் நாவல் ஆசிரியை அகதா கிறிஸ்டி, விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல், தாமஸ் ஆல்வா எடிசன், பன்திறன் ஆளுமைகள் கொண்ட லியர்னாடோ டாவின்ஸி, வால்ட் டிஸ்னி போன்ற பெரும் புள்ளிகள் பலரும் கற்கை குறைபாடு கொண்டவர்களே. ஆனாலும், சாதாரண மனிதர்களைவிடப் பன்மடங்கு படைப்பாற்றலை அவர்களால் வெளிப்படுத்த முடிந்தது. இதனால்தான் 'கற்கை குறைபாடு உடைய குழந்தைகளின் பெற்றோர் கவலைப்படத் தேவை இல்லை' என்கிறார்கள் குழந்தை மனநல மருத்துவர்கள்.

சரி. ஒரு குழந்தைக்குக் கற்கை குறைபாடு இருக்கிறது என்பதை எப்படி அடையாளம் காண்பது? குறைபாட்டின் வகைகள் ஏதாவது உண்டா? என்ன சிகிச்சை? அது எப்படி அளிக்கப்படுகிறது?' இந்தக் கேள்விகளுடன் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் மன நல மருத்துவர் பி.பி.கண்ணனிடம் பேசினோம்.

'ஆஸ்வால்ட் பெர்ஹான் என்பவரால் 1881-ம் ஆண்டு கற்கை குறைபாடு தொடர்பான ஆராய்ச்சி தொடங்கியது. இது நோய் அல்ல; ஒரு குறைபாடுதான். நரம்புகள் சம்பந்தப்பட்ட குறைபாடு.  குழந்தைகளின் மூளையில் காட்சிகளையும் ஒலிகளையும் புரிந்துகொள்ளும் வடிவில் பதியவைப்பதில் ஏற்படும் சிக்கல் என்று சொல்லலாம். கற்கை குறைபாட்டை மூளை வளர்ச்சிக் குறைபாட்டுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது.

பேசுவதற்குக் கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளுதல், வலதுபுறமிருந்து இடது பக்கமாக எழுதுதல், எளிதில் பிற ஒலிகளால் கவனச் சிதறலுக்கு ஆளாகுதல், வார்த்தைகளை உச்சரிப்பதிலும்  அவற்றுக்கான எழுத்துகளை நினைவில் வைத்திருப்பதிலும் சிரமம், எழுதும்போது வார்த்தைகளில் எழுத்துகளை விட்டுவிடுவது அல்லது சேர்த்து எழுதுவது போன்றவை இருந்தால் அந்தக் குழந்தைக்குக் கற்கை குறைபாடு இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். படிக்கும்போது நடுநடுவே சில வார்த்தைகளையோ, வரிகளையோ விட்டுவிட்டுப் படிப்பார்கள். பென்சிலை எழுத்தாணி பிடிப்பதுபோல் பிடிப்பார்கள். கையெழுத்து மிக மோசமாக இருக்கும்.

இந்தக் குறைபாட்டில் பல பிரிவுகள் உள்ளன.

வாசிப்பதில் குறைபாடு (Reading Disorder) :

நாம் ஒரு கேள்வி கேட்டால் பதில் சொல்வார்கள்; ஆனால், அதை எழுதிப் படிக்கச் சொன்னால் திணறுவார்கள். வார்த்தைகளை உச்சரிப்பதிலும் எழுத்துகளை நினைவில் வைத்துக்கொள்வதிலும் சிரமப்படுவார்கள். படிக்கும்போது இடையில் சில வார்த்தைகளையோ வரிகளையோ விட்டு விட்டுப் படிப்பார்கள்.

எழுத்து வடிவத்தை வெளிப்படுத்துவதில் குறைபாடு (Disorder of Written Expression):

பென்சிலை எழுத்தாணி பிடிப்பதுபோல் பிடிப்பார்கள். கையெழுத்து மிக மோசமாக இருக்கும். டாப் (TOP)என்று எழுதுவதற்குப் பதிலாக பாட் (POT)  என்று எழுதுவார்கள். 10 என்பதை 01 என்பதுடன் குழப்பிக்கொள்வார்கள். மார்ஜினுக்கு உள்ளே எழுதாமல் வெளியில் இருந்தே எழுதுவார்கள்.

கணக்குகளைப் புரிந்துகொள்வதில் குறைபாடு (Mathemetical Disorder):

இந்தக் குறைபாடு உள்ளவர்கள் கணக்கு போடுவதில், குறிப்பாக அல்ஜீப்ரா சமன்பாடுகளைத் தீர்ப்பதில் மிகவும் சிரமப்படுவார்கள். '325' என்று எழுதச் சொன்னால் 30025 என்று எழுதுவார்கள்; கடிகாரத்தில் பெரிய முள் 4-ல் இருந்தால் 20-நிமிடம் என்று சொல்லத் திணறுவார்கள்.

நுணுக்க வேலை கற்கை குறைபாடு(Disorder of Motor Function):

விரல் நுனியில் இருக்கும் நரம்புகள் தூண்டப்படுவது மாதிரி உள்ள வேலைகள் செய்வதில் இவர்களுக்கு பிரச்னை இருக்கும். டைப் ரைட்டிங், ஸ்கிப்பிங் விளையாடுதல், பந்து  விளையாட்டு, கூடை பின்னுதல், பாசி கோத்தல் மாதிரியான செயல்களில் ஏற்படும் பிரச்னை இது.  

இது தவிர காதால் கேட்டதைக் கவனித்து மனதில் இருத்துவதிலும் கையும் கண்ணும் ஒருங்கிணைந்து செயல்படுவதிலும் குறைபாடு இருக்கும். உதாரணமாக ஷூ லேஸைக் கட்டுவதற்குக்கூட மிகவும் சிரமப்படுவார்கள்.

இப்படிப்பட்ட குழந்தைகளை மந்த புத்தி உடையவர்கள் என்றும் சுறுசுறுப்பு இல்லாதவர்கள் என்றும் ஆரம்பத்தில் ஆசிரியர்களும் பெற்றோரும் தவறாக நினைத்துவிடுவார்கள். ஆனால், இந்தக் கற்கை குறைபாடு உள்ள பலர் அதிகமான ஐ.க்யூ ((I.Q.) உள்ளவர்கள்'' என்றவர், இதற்கான சிகிச்சைபற்றிச் சொல்லும்போது, ''இந்தக் குழந்தைகளுக்கு தகுந்த பயிற்சிகளின் உதவியோடு,  மாற்றுவழிக் கல்வி மூலம் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட கருவிகள் மற்றும் பயிற்சி முறைகளைப் பின்பற்றி பயிற்சி கொடுக்க வேண்டும். மன இறுக்கத்தைக் குறைத்துக் கற்றலை எளிதாக்கும் பல உத்திகளைக் கையாள வேண்டும்' என்றார்.

கற்கை குறைபாட்டினைக் களையக் குறைதீர்க் கல்வி (Remedial Education) முறையைப் பயன்படுத்தும் சிறப்புக் குழந்தைகளுக்கான கல்வியாளர் வனிதா ஆனந்த் மற்றும் லட்சுமி விஜயகுமாரிடம் பேசினோம். ''ஒரு வார்த்தையைச் சொல்வதில், எழுதுவதில் பிரச்னை இருப்பதால் இரண்டாம் வகுப்புக்கு மேல்தான் இந்தக் குறைபாட்டினை உறுதியாகக் கண்டறிய முடியும். இதைக் குறைதீர்க் கல்வி மூலமாக கண்டிப்பாக நிவர்த்தி செய்ய முடியும் என்பதால், பெற்றோர்கள் குழந்தைகளை நினைத்து வருத்தப்பட வேண்டிய தேவை இல்லை. அடுத்த குழந்தைகளை உதாரணம்காட்டி தங்களது குழந்தைகளைக் கண்டிக்க வேண்டாம். இந்தப் பிரச்னையைப் பொருத்தவரை தனியாக இல்லாமல் ஒரு குழுவே செயல்பட வேண்டும். குழந்தைகள் நல மருத்துவரும் மன நல மருத்துவரும் ஆக்குப்பேஷனல் தெரப்பி அளிப்பவரும் பேச்சுப் பயிற்சியாளரும் சிறப்புக் குழந்தைகளுக்கான கல்வியாளரும் இந்த குழுவில் இருப்பார்கள். கூடவே பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் தேவை என்பதால் அவர்களும் இந்த குழுவில் இடம் பெறுவார்கள். கண்ணால் பார்த்துப் புரிந்துகொள்ளுதல், ஒரு படத்தைத் துண்டு துண்டாக்கி அதைச் சரியாகச் சேர்க்கச் சொல்லுதல் போன்ற  நுணுக்கமான முறைகளிலும் சிகிச்சை அளிக்கப்படும். இதனால் மூளையில் கற்றல் தொடர்பான பகுதிகளுக்கு அதிக இடம் ஒதுக்கப்பட்டு இந்தப் பிரச்னை சரி செய்யப்படும்'' என்கிறார் நம்பிக்கையாக!

மறதியை மறக்க 7 வழிகள்

ரு பாடலின் சரணம் நன்றாக நினைவில் இருக்கும். ஆனால், பாடலின் பல்லவி மட்டும் நினைவுக்கு வராது. படத்தின் பெயர், பாடலைப் பாடியவர், இசை அமைத்தவர் என பாடல்குறித்த அனைத்துத் தகவல்களும் நினைவில் இருக்கும்; பாடலின் முதல் வரியைத் தவிர. 

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், பாடலின் முதல் வரி நமக்குத் தெரியும்; ஆனாலும் நமக்குத் தேவைப்படும்போது வெளிப்படுவது இல்லை. நாம் எல்லோருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதுபோன்று அனுபவப்பட்டிருப்போம். நினைவாற்றல் என்றால் என்ன, அது எப்படி வருகிறது? அதை அதிகரிப்பதற்கான வழிகள் என்ன என்பதுபற்றி மனநல மருத்துவர் செந்தில்வேலனிடம் கேட்டோம்.

நினைவாற்றல்   என்றால் என்ன?

நம்முடைய மூளையைக் கணினியுடன் ஒப்பிடலாம். கணினியில் தகவலைப் பதிவுசெய்கிறோம். அதேபோல், மூளைக்குத் தகவலைக் கொண்டுசெல்கிறோம். இதை 'என்கோடிங்' என்போம். பின்னர் தகவலானது மூளையில் பதிவுசெய்யப்படுகிறது. இதை 'ஸ்டோரேஜ்' என்போம். தேவையானபோது கணினியில் உள்ள தகவலை எடுக்கிறோம். அதேபோல், மூளையும் தேவைப்படும்போது சேமித்த தகவலை எடுக்கிறது. இதை 'ரெட்ரிவல்' என்போம். தகவலைக் கொண்டுசேர்ப்பது, சேமிப்பது, தேவைப்படும்போது எடுப்பது ஆகிய மூன்றும் சேர்ந்ததுதான் நினைவாற்றல். இந்த மூன்றில் ஏதாவது ஒன்று சரியாகச் செய்யப்படவில்லை என்றாலும் நினைவாற்றல் பாதிக்கப்படும்.

 

எப்படி வேலை செய்கிறது?

என்கோட்: காட்சி, சமிக்ஞை, மொழி எனப் பல வழிகளில் தகவல் மூளைக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும்போது அனைத்தும் மூளைக்குக் கொண்டுசெல்லப்படும்.  

ஸ்டோரேஜ்: மூளைக்குக் கொண்டுசெல்லப்பட்ட தகவல் குறுகிய நினைவாற்றல், மிகக் குறுகிய நினைவாற்றல், நீண்ட கால நினைவாற்றல் என்று மூன்று விதங்களில் சேமிக்கப்படுகிறது. குறுகிய நினைவாற்றல் என்பது உடனுக்குடன் மறந்துவிடுவது. சாலையில் விளம்பரங்களைப் படித்துக்கொண்டே செல்கிறோம். அடுத்த சில நிமிடங்களில், என்ன படித்தோம் என்பதை மறந்துவிடுவோம். இது மிகக் குறுகிய நினைவாற்றல். ஒரு சில விளம்பரங்கள் மட்டும் நம்மைக் கவரும். அதைப் பற்றி சிந்தித்துக்கொண்டே செல்வோம். அந்த விளம்பரம் சில மணித் துளிகள் முதல் சில நாட்கள் வரை நம் நினைவில் இருக்கும். இதைக் குறுகிய நினைவாற்றல் என்கிறோம். நம்முடைய பெயர், அப்பா பெயர், வீட்டு முகவரி, செல்போன் எண் போன்றவற்றைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துகிறோம். அதனால் அது பல காலத்துக்கு நினைவில் இருக்கும். இது நீண்ட கால நினைவாற்றல்.

ரெட்ரிவல்: நம்முடைய பெயர் போன்ற விஷயங்கள் உடனடியாக நினைவுக்கு வந்துவிடும். ஆனால், நீங்கள் இரண்டாம் வகுப்பு படித்தபோது உங்கள் ஆசிரியர் யார் என்று கேட்டால் கொஞ்சம் யோசிப்போம். அது நம் மூளையின் உள்ளே இருக்கிறது. கூகுள் சர்ச் இன்ஜின் தேடுவதுபோல் கொஞ்சம் தேட வேண்டும். படித்த பள்ளிக்கூடம், நண்பன், முக்கியச் சம்பவம் என எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து கடைசியில் ஆசிரியர் பற்றிய நினைவு வரும். நினைவாற்றல் பெருகக் கவனம் செலுத்துதல் முக்கியம். கவனச் சிதறல் உருவாக்கும் விஷயங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். மூளையில் பதிந்ததை திரும்பத் திரும்ப ரிகர்சல் செய்ய வேண்டும்'' என்று அழுத்தம் கொடுத்த டாக்டர் செந்தில்வேலன் நினைவாற்றலைப் பெருக்குவதற்கான விஷயங்களையும் பட்டியலிட்டார்.

 மறதி நல்லது!

 மனித மூளைக்குத் தினமும் லட்சக்கணக்கான தகவல்கள் சென்றுகொண்டே இருக்கின்றன. இதில் தேவையானதை நினைவில் வைத்துக்கொண்டு, தேவையற்றதை மறந்துவிடுகிறது மூளை. அப்படி மறக்கவில்லை என்றால் மனிதனுக்கு மனநலம் பாதித்துவிடும். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான தகவல்கள் நினைவுக்கு வரவில்லை என்றால்தான் பிரச்னை. அப்போதுதான் அது மறதிநோய் (டிமென்ஷியா) ஆகிறது. இந்த நோயில், தகவலானது உள்ளே போகிறது. ஆனால், அந்தத் தகவலை சேமித்துத் திரும்ப எடுப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. சரியாகச் சேமிக்கப்படவில்லை என்பதால் திரும்ப நினைவுகூர முடிவது இல்லை. மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு, ரத்தத்தில் இருந்து நீர் பிரிந்து மூளையில் கோத்துக்கொள்வது, தலையில் அடிபடுவது, வயது அதிகரிப்பு, அல்சைமர்ஸ் எனப்படும் மூளை தேய்மானம் போன்ற பல்வேறு காரணங்களாலும் நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படுகிறது. இதுதவிர மூளை வளர்ச்சி குறைந்தவர்களுக்கு நினைவாற்றல் இருக்காது. மன அழுத்தம், மனப் பதற்றம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்குத் தகவல் மூளைக்குள்ளேயே செல்லாது. இதனால் இவர்களுக்கும் நினைவாற்றல் குறைவாகவே இருக்கும்.(Courtesy: Doctor Vikatan)

குழந்தை வளர்ப்பும் சில நம்பிக்கைகளும்...

'ங்கா'

 - பூமிப் பந்தில் காலடி எடுத்துவைக்கும் பிஞ்சு மழலையின் முதல் மொழி - உலகம் முழுமைக்குமான ஒரே மொழி!

அழுகை, சிரிப்பு, கோபம், வலி, வேதனை எனச் சூழ்நிலைக்கு ஏற்ப குழந்தையின் ஒவ்வோர் உணர்வுகளையும் அர்த்தப்படுத்துகிற வார்த்தை இது!

''குழந்தையின் சின்னஞ்சிறு அசைவுகளிலேயே அதன் தேவையை உணர்ந்து பூர்த்திசெய்யும் திறன் படைத்தவள் தாய். ஆனாலும், 'என் அம்மா நான்கு குழந்தைகள் பெற்றவள், பாட்டி 13 குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்த்தவள்... அவர்களுக்குத் தெரியாதா குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று' எனச் சொல்லிச் சொல்லியே குழந்தையின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், தவறான விஷயங்களைச் செய்கிறார்கள் சில பெற்றோர்கள்'' என்கிற அதிர்ச்சித் தகவலோடு பேச ஆரம்பிக்கிறார் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் வேல்முருகன்.

பழக்கவழக்கம் என்ற பெயரில், குழந்தையின் நலனுக்கு எதிராக செய்துவரும் செயல்கள்குறித்து ஆதங்கப்பட்டவர், அதற்கானத் தீர்வுகள்குறித்தும் அக்கறையோடு பேச ஆரம்பிக்கிறார்.

தாய்ப்பால் சில சந்தேகங்கள்...

பிறந்த குழந்தைக்கு முதன்முதலில் சீம்பால் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த தாய்ப்பாலைத்தான் புகட்ட வேண்டும். ஆனால், 'சீம்பால் கெட்டுப்போன பால்; குழந்தைக்கு நல்லது அல்ல' என்ற நம்பிக்கையின் பெயரில் சிலர் அதனைப் பீய்ச்சி வீணடித்துவிடுகிறார்கள். கிராமப்புறங்களிலோ, பிறந்த குழந்தைக்குச் சிலர் கழுதைப்பாலைப் புகட்டுகிறார்கள். இவை இரண்டுமே தவறு. இதனால், குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படுவதோடு, பாலில் கலந்திருக்கும் கிருமிகளால் குழந்தையின் உடல் நலனும் பாதிக்கப்படும்.

வேலைக்குச் செல்லும் சில தாய்மார்கள், சாயங்காலம்கூட குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது இல்லை. காலையில், வேலைக்குச் செல்லும்போது சுரந்த தாய்ப்பால் கெட்டுப்போயிருக்கும் என்ற நம்பிக்கையில் அதனைப் பீய்ச்சி எடுத்துவிடுகிறார்கள். இதுவும் தவறான நம்பிக்கையே. கடைகளில் விற்கப்படும் பாக்கெட் பால்போல தாய்ப்பால் ஒரு நாளும் கெட்டுப்போகாது. விரைந்து ஓடினால், உடல் எங்கும் சுரக்கும் வியர்வைபோல், குழந்தை குடிக்கக் குடிக்கத்தான் தாய்ப்பாலும் சுரக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

பிறந்தது முதல் 6 மாதங்கள் வரையிலும் கட்டாயம் குழந்தைக்குத் தாய்ப்பால்தான் கொடுக்க வேண்டும். 6 மாதங்களுக்குப் பிறகும் சிலர், திட உணவு கொடுக்காமல் வெறும் தாய்ப்பால் மட்டுமே கொடுத்துவருவதும் தவறானதே. இரண்டரை வயது வரையிலும் தாய்ப்பாலோடு அரிசி சாதம், வேகவைத்த பருப்பு - முட்டையின் மஞ்சள் கரு எனத் திட உணவு வகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்துப் பழக்க வேண்டும்.

நோய்வாய்ப்பட்டு மருந்துகள் எடுத்துக்கொள்ளும் தாய்மார்களும் மார்பகத்தில் புண் உள்ளவர்களும் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்ட முடியாத நிலையில் இருப்பார்கள். இவர்கள் பாலாடையைக் குழந்தைக்கு உண்ணக் கொடுக்கலாம்  அல்லது பசும்பாலை ஸ்பூன் மூலமாக குழந்தைக்குப் புகட்டலாம். பால் புட்டியில் பயன்படுத்தப்படும் பாட்டில் ரப்பர்களை சுடுதண்ணீரில் கழுவினாலும்கூட கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, கூடுமானவரை அதைத் தவிர்த்துவிடுங்கள்.

எப்படிக் குளிப்பாட்ட வேண்டும்?

குளிப்பாட்டும்போது குழந்தையின் மூக்கு, வாய் வழியாகத் தண்ணீர் சென்றுவிடாமல் கவனமாகக் குளிப்பாட்ட வேண்டும். ஆனால், சிலர் குழந்தையின் தலை, உடம்பு முழுக்க எண்ணெய் தடவி குளிப்பாட்டுவார்கள். குழந்தையின் மூக்கு, வாய் வழியாக உடலுக்குள் எண்ணெய் செல்லும்போது மூச்சுத் திணறல் ஏற்படுவதோடு, நெஞ்சில் சளிக்கட்டுதல் போன்ற தொந்தரவுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தையைக் குளிப்பாட்டும்போது தலை, மூக்குப் பகுதிகளை நன்றாக அழுத்திப் பிடித்துவிட்டால்தான் குழந்தைக்கு நல்ல முக அமைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பலருக்கு இருக்கிறது. பெற்றோர்களின் மரபு வழியைப் பொருத்தே குழந்தையின் உடல் அமைப்பு இருக்கும். இதனை நாமாகப் பயிற்சிகள் செய்து மாற்ற முடியும் என்று நம்புவது ஆதாரமற்றது.

இன்னும் சிலர், குழந்தையின் நலனில் அதிகக் கவனம் செலுத்துகிறோம் என்ற பெயரில், பச்சிளம்குழந்தைகளைக் குளிப்பாட்ட பிரத்யேகமாக ஆட்களை நியமித்திருப்பார்கள். அவர்களோ, 'குழந்தைக்குச் சளி எடுக்கிறேன்' எனச் சொல்லி பச்சிளம் குழந்தையின் வாயினுள் பலமாக ஊதுவார்கள். அப்போது குழந்தையின் மூக்கில் இருந்து சிறிது சளியும் வெளிப்படும். இது மிகவும் ஆபத்தான செயல்முறை. எல்லாக் குழந்தைகளுக்கும் இயல்பாகவே சிறிதளவு இருமல், தும்மல், மூக்குச் சளி இருக்கத்தான் செய்யும்; இதனால் குழந்தையின் உடலுக்கு எந்தவிதக் கேடும் இல்லை. ஆனால், இப்படி வலுக்கட்டாயமாகச் சளியை வெளியேத் தள்ளுவது தவறு. மேலும், பெரியவர்களது வாயினுள் இருக்கும் லட்சக்கணக்கான கிருமிகளும் நேரடியாக குழந்தையின் உடலுக்குள் செல்லும் அபாயமும்  இருக்கிறது. சாதாரண 'பாத் டப்'களில் குழந்தையை அமரவைத்துக் குளிப்பாட்டுவதே பாதுகாப்பான முறைதான்.

கொழு கொழு குழந்தை....

குழந்தைகள் நன்றாகக் கொழு கொழுவென்று புஷ்டியோடு இருப்பது பார்ப்பதற்கு அழகுதான். ஆனால், ஆரோக்கியத்துக்கு அழகா? இது பெற்றோர்கள் கட்டாயம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. குழந்தையின் சதை வளர்ச்சியைத் தூண்டும் சில ஸ்டீராய்டு கொழுப்பு வகை மருந்துகளை மருத்துவரது ஆலோசனை இன்றி சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு கொடுத்துவருகிறார்கள். இது ஆபத்தானது. இயல்பான உடல் வளர்ச்சியோடு சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகளே ஆரோக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

தாய்ப்பால் தவிர்க்காதீர்!


'ம்ம்மா...' எந்தக் குழந்தையும் இயல்பாகவே பேசும் வார்த்தை இது. ஒரு குழந்தைக்குத் தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் தாய்ப்பால். அதனால்தான், கரு உண்டான நான்காவது மாதத்தில் இருந்தே தாயின் மார்பகத்தில் கொழுப்பு சேர்ந்து குழந்தைக்குத் தேவையான உணவு தயாராக ஆரம்பிக்கிறது. ''தாய்ப்பால் ஓர் தாயிடம் உள்ள அரிய செல்வம்'' என்கிறார்கள் மகப்பேறு மருத்துவரான மோகனாம்பாள் மற்றும் தாய்ப்பால் ஆலோசகரான ஜெயஸ்ரீ. தொடர்ந்து தாய்ப்பாலின் மகத்துவங்களையும் பட்டியல் இடுகிறார்கள் இங்கே... 

என்னவெல்லாம் இருக்கின்றன தாய்ப்பாலில்?

அம்மாவின் மார்பகத்தில் குழந்தை வாய் வைக்கும்போது, தாயின் மூளையில் உள்ள ப்ரோலேக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் தூண்டப்பட்டு, ரத்தம் பாலாக மாற உதவி செய்கிறது. ஆக்சிடோசின் (Oxytocin) என்கிற மற்றொரு ஹார்மோன் சுரந்து மார்பகத்தில் உள்ள குழாய்கள் (Lactiferous ducts) வழியாக தாய்ப்பால் வெளிவருகிறது. பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முழுமையாக வேலை செய்யத் தொடங்காது. இந்த நேரத்தில் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி வேண்டும். எப்படி அதை ஏற்படுத்துவது? தாய்ப்பாலில் 'இம்யூனோக்ளோபின் ஏ' என்கிற பொருள் இந்த நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கச் செய்கிறது. தாய்ப்பாலில், புரதம், கார்போஹைட்ரேட், அத்யாவசியக் கொழுப்பு அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் இ, கே ஆகிய வைட்டமின்களும் நிறைந்து உள்ளன. மேலும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான டி.எச்.ஏ. (Docosahexaenoic acid) மற்றும் ஏ.ஆர்.ஏ. (Arachidonic Acid) ஆகியவையும் தாய்ப்பாலில் நிறைந்து உள்ளன. எனவே, தாய்ப்பாலுக்கு இணையான உணவு குழந்தைக்கு வேறு எதுவும் கிடையாது.

தாய்(ப்)பால் புகட்டும் முறை:

குழந்தை வாய் திறக்கும்வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். குழந்தையின் வாயைத் தாயின் மார்பகத்தில் வைத்து அழுத்தக் கூடாது. குழந்தையின் வாய் திறந்த நிலையில் இருக்க வேண்டும். மார்பகக் காம்பில் மட்டுமே வாய் வைக்காமல், காம்புப் பகுதியைச் சுற்றி உள்ள கறுப்புப் பகுதி முழுவதும் (Aerola) குழந்தையின் வாய்க்குள் இருக்க வேண்டும். குழந்தையின் கீழ் உதடு வெளிப்புறமாகத் திறந்திருக்க வேண்டும். குழந்தையின் கீழ்த்தாடை மார்பகத்தின் கீழ்ப் பகுதியைத் தொட்ட நிலையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தை பால் கேட்கும் நேரங்களில் எல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவும் குழந்தைக்குத் தேவை இல்லை. குழந்தைக்குத் தேவையான தண்ணீரும்கூட தாய்ப்பாலிலேயே இருக்கிறது. குழந்தை பிறந்த முதல் ஒரு மாதத்தில் ஒரு நாளைக்குக் குறைந்தது ஆறு முறை சிறுநீர் கழித்தால், தாய்ப்பாலை நன்றாக உறிஞ்சிக் குடித்திருக்கிறது என்று அர்த்தம். சிறுநீர் மஞ்சளாகவோ அல்லது நாற்றம் எடுத்தாலோ குழந்தை தனக்குத் தேவையான அளவு தாய்ப்பாலைக் குடிக்கவில்லை என்பதை அம்மா புரிந்துகொள்ள வேண்டும். குழந்தை பிறந்த முதல் 10 நாட்களுக்குள் ஆறு முதல் ஏழு சதவிகிதம் எடை குறையும். 10 முதல் 15 நாட்களுக்குள் பிறந்தபோது இருந்த எடை மீண்டும் வந்துவிடும். மாறாக மெலிந்தே காணப்பட்டால் தாய்ப்பாலைச் சரிவரக் குடிக்காமல் இருக்கிறது என்று அர்த்தம்.

தாய்ப்பாலையும் புட்டிப்பாலையும் மாற்றி மாற்றிக் கொடுப்பது தவறு. இதனால் குழந்தையின் செரிமான மண்டலம் பாதிக்கப்படும். ஒவ்வாமை, ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் வரலாம். மேலும், புட்டிப்பாலை ஒரே மூச்சில் குழந்தை குடித்துவிடுவதால் சுவாசப் பிரச்னைகளும் உருவாகும். தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் மார்பக அளவுக்கும் தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தம் இல்லை. மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கை, அவை தூண்டப்படும் விதத்தைப் பொருத்தே தாய்ப்பால் சுரக்கும் அளவு அமைகிறது. குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம்கூட ஒரு தாயின் தாய்ப்பால் சுரப்புத் திசுக்களைத் தூண்டும்.

குழந்தை புத்திசாலி ஆக வேண்டுமா?

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவுத்திறன் மற்றும் புத்திக்கூர்மை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். தாய்ப்பால் புகட்டும்போது, குழந்தையின் மூளை செல்கள் அதிக வேகமாக வளர்ச்சி அடைகின்றன என்று யுனிசெஃப் ஆராய்ச்சி கூறுகிறது. தாய்ப்பால் முற்றிலும் தூய்மையானது - பாதுகாப்பானது; கால, காலத்துக்கும் குழந்தைகளுக்கு நோய், நொடி இல்லாத வாழ்க்கையைக் கொடுக்க வல்லது; அதனால்தான் இதனை 'நீர்மத்தங்கம்' என்கிறார்கள்.

அம்மா அழகாயிடுவாங்க:

குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் அழகு கெட்டுவிடும் என்று பெண்கள் மத்தியில் தவறான கருத்து உள்ளது. குழந்தைப் பேறுக்குப் பின்பு சரியான வழிமுறைகளைப் பின்பற்றினால் உடல் கட்டமைப்பைச் சீராகப் பராமரிக்க முடியும். குழந்தைப் பேறுக்குப் பின் பெண்கள் குண்டாவது உண்டு. தாய்ப்பால் கொடுக்கும்போது, உடல் பருமனானது படிப்படியாகக் குறைந்து பழைய நிலைமைக்கு வரும். தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்கும்போது ஆக்சிடோசின் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். இதனால் கருப்பை சுருங்கி, பிரசவத்துக்கு முன்பு உள்ள நிலையை அடையும். கருப்பைப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும்.

தாய்ப்பால் கொடுத்துவரும் தாய்மார்களுக்குக் குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் வரை மாதவிடாய் தள்ளிப்போகும். இது அடுத்த குழந்தைக்கான வாய்ப்பைத் தள்ளிப்போடவும் உதவுகிறது. ஆனால், இதற்கு மாறாக சிலருக்கு மாதவிடாய்ச் சுழற்சி ஏற்படவும் செய்யலாம். அது அவர்களது உடல் அமைப்பு, ஹார்மோன் மாற்றத்தைப் பொருத்தது. பிரசவக் காலத்தில், ஜெஸ்டேஸ்னல் டயபட்டிஸ் (Gestational Diabetes) பாதிப்பு இருந்தால் தாய்க்கு டைப்-2 சர்க்கரை வியாதி வரும். ஆனால், தாய்ப்பால் கொடுத்து வந்தால் இந்தச் சர்க்கரைப் பாதிப்பும் வருவதில்லை. மேலும், தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாயின் மன அழுத்தம் குறைந்து ஒருவிதமான திருப்தியை உணர முடியும்.

பிரசவம் முடிந்த 3 முதல் 10 மாதங்களுக்குள் உடலும் மார்பகங்களும் 60 சதவிகிதம் தன் நிலைக்கு வந்துவிடும். தாய்ப்பால் கொடுப்பது முழுமையாக நிறுத்தப்பட்டதும் மார்பகங்கள் முழுமையான தன்னிலைக்கு வந்துவிடும். இதற்கு கர்ப்ப காலத்தில் இருந்தே சரியான அளவில் பிரேஸியர் அணிவது உதவும். பிரேசியர் அணிவதால் சரியான அளவில் பால் சுரக்காது அல்லது பால் கட்டும் என்கிற மூட நம்பிக்கையும் பலரிடம் இருக்கிறது. இதில் உண்மை கிடையாது. பிரசவம் முடிந்ததும் தவறாமல் பிரேஸியர் அணிய வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பதில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள்:

சிலர், ''குழந்தை பிறந்த சமயத்துல எனக்குப் பால் நிறைய சுரந்துச்சு. ஆனா இப்போ பால் சுரக்கவே மாட்டேங்குது'' என்று சொல்வார்கள். குழந்தை பிறந்த முதல் ஐந்து நாட்கள் அனைத்துத் தாய்மார்களுக்கும் தாய்ப்பால் அதிகம் சுரப்பது இயல்புதான். அதன் பிறகு பால் ஊட்டும் முறையைப் பொருத்துதான் தாய்ப்பால் சுரப்பும் அமையும்.

மார்பகக் காம்பில் வலி, வெடிப்பு, ரத்தம் வருதல் மற்றும் காம்பு வெளிறிப்போய் காணப்படுவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். குழந்தை மார்பகத்தில் வாய் வைக்கும் முறை தவறாக இருந்தால் ஏற்படக்கூடிய பிரச்னைகள்தான் இது. இதற்கு தாய்ப்பாலை எடுத்து பாதிப்பு உள்ள இடத்தில் தடவினாலே போதுமானது. குழந்தை மார்பகக் காம்பில் மட்டுமே வாய்வைத்துப் பால் குடித்தால், மார்பகத்தில் உள்ள குழாயில் ஏதாவது ஒன்று அடைத்துக்கொள்ளும். இப்படிக் குழாய் அடைத்துக்கொண்டால் அந்தக் காம்புப் பகுதியில் ஒரு புள்ளி தோன்றும். கூடவே வலியும் இருக்கும். தாய்ப்பாலும் சரியாக வெளிவராது. இதைத் தவிர்க்க வெதுவெதுப்பான தண்ணீரைக் கொண்டு அந்த இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு, மார்பகத்தை மசாஜ் செய்துவிட்டாலே போதும். அதேபோல், தாய்ப்பால் கொடுத்த உடன் மார்பகத்தைச் சுத்தமான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

தாய்ப்பால் என்பது குழந்தைக்கான வெறும் உணவு மட்டும் அல்ல... தாய்க்கும் சேய்க்கும் இடையே நெருக்கமான பிணைப்பையும் ஏற்படுத்தக் கூடிய உணர்வும்கூட!(Courtesy: Doctor Vikatan)

கட்டாயம் தேவை... கல்யாண கவுன்சிலிங் !

வாழ்க்கையின் மிக ஆனந்தமயமான தருணங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் முக்கியமானது... நிச்சய தார்த்தத்துக்கும் திருமணத்துக்கும் இடைப்பட்ட காலம் மற்றும் திருமணமான முதல் ஆறேழு மாத காலங்கள்! பூரிப்பு, உற்சாகம், மயக்கம், கவர்ச்சி என இனம்புரியாத கிறக்கங்களுடன் அத்தனை மிருதுவாக வாழ்க்கை மாறி நிற்கும் பருவமிது.

'திருமண பந்தத்தினுள் நுழையும் ஆணும் பெண்ணும் இந்த காலகட்டத்தில்தான் பரஸ்பரம் மிக பக்குவமாகவும், மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டும்' என்கிறது மருத்துவ உலகம். ஆனால், நண்பர்களின் வாழ்த்தொலிகள், மேளதாள சப்தங்களுக்கு இடையில் மருத்துவர்களின் இந்த எச்சரிக்கை மணி அமிழ்ந்து போவதுதான் வருத்தமே!

'இரவினில் திருமணம், விடிந்தால் விவாகரத்து' என்று போய்க் கொண்டிருக்கும் மேற்கத்திய நாடுகளில்கூட 'ப்ரீ மெரைட்டல் கவுன்சலிங்' என்றொரு கான்செப்ட் இருக்கிறது, ஸ்பெஷலிஸ்ட்டு களும் இருக்கிறார்கள். அதாவது, திருமணம் செய்து கொள்ளப் போகும் தம்பதி, திருமணத்துக்கு முன் இந்த ஆலோசகர்களை சந்தித்து, 'நாங்கள் பொருத்தமான ஜோடிதானா... தங்களிரு வருக்குள் மனரீதியாக மறைந்திருக்கும் பிரச்னைகள் என்னென்ன... அவற்றை தீர்ப்பது எப்படி?' என்று தெரிந்துகொண்டு, அவற்றை மாற்றவும், சந்தோஷமாக வாழவும் முயற்சிக்கிறார்கள். ஆனால், வாழ்க்கையின் 60% நாட்களை துணையுடன் கழிப்பதற்காக தாரைவார்க்கப்பட்ட இந்திய கலாசாரத்தில், அதிலும் திருமணம் போற்றும் தமிழுலகில் இந்த ஆலோசனை விஷயங்களெல்லாம் அறியப்படாமல் இருப்பது பெரிய அறியாமையே.

கோயம்புத்தூரைச் சேர்ந்த மனநல ஆலோசகர் லட்சுமணனை சந்தித்தபோது, இந்த கவுன்சலிங்கின் அவசியத்தை ஆழமாக விளக்கினார்... இப்படி -

''அம்மி மிதிச்சு அருந்ததி பார்க்கறதுக்கு முன்ன, எங்களை மாதிரி ஆலோசகர்களைப் பார்க்கறது நூற்றியோரு சதவிகிதம் அவசியம். பல திருமண வாழ்க்கை, தளிர் நிலையிலேயே கருகிப் போறதுக்கு காரணமே பரஸ்பரம் புரிதல் இல்லாமைதான். அதனால தான் அழுத்தி சொல்றேன், காதல் திருமணமோ... பெரியோர்கள் நிச்சயித்த திருமணமோ... எதுவானாலும் கவுன்சலிங் அவசியம். திருமணத்துக்கு முந்தைய ஆலோசனைகள் (ப்ரீ மெரைட்டல் கவுன்சலிங்), திருமணத்துக்கு பிந்தைய ஆலோசனைகள் (போஸ்ட் மெரைட்டல் கவுன்சலிங்) இரண்டையும் தயங்காமல், தவறாமல் பெற வேண்டியது அவசியம்!'' என்று ஆரம்பித்த லட்சுமணன், அதற்கான அவசியத்தைப் பேசினார்...  

''திருமணமாகி ஒரு மாதத்திலிருந்து ஒரு வருஷத்துக்குள்ளே வரக்கூடிய பல தம்பதிகள் பரஸ்பரம் சொல்லக்கூடிய குற்றச்சாட்டு, 'என்கேஜ்மென்ட் டுக்கும் மேரேஜுக்கும் இடை யில இருந்த ஆளா இப்போ இல்லை. கல்யாணத்துக்கு அப் புறம் அடியோட மாறிட்டாங்க' அப்படிங்கிறதுதான். நிச்சய தார்த்தத்துக்கும் திருமணத்துக் கும் இடைப்பட்ட காலத்துல பெண்ணும், பையனும் பேசி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக் கிறது ஆரோக்கியமான விஷ யம்தான். ஆனா, அப்போ ரெண்டுபேரும் தங்களோட நெகட்டிவ் குணங்களையும், தங்களோட குறைபாடுகளையும் வெளிப்படையா பேசுறதில்லை. முழுக்க பாஸிட்டிவான கோணத் துல காட்டுறதுலயே குறியா இருப்பாங்க. தன்னை ஒரு ஹீரோ, ஹீரோயின் ரேஞ்சுக்கும், தியாகியாகவும், பரந்த மனப் பான்மையும் உதவும் குணமும் உடைய ஆளாகவும் காட்டிப் பாங்க. கிளர்ச்சியிலயும் கிறக்கத் துலயும் இருக்கிற துணையும், அதை நம்புவாங்க.

திருமணத்துக்குப் பின் பல முறை தாம்பத்ய உறவுகள் நடந்த பிறகும், இயல்பான வாழ்க்கை சூழலாலேயும் மெள்ள மெள்ள அவங்கவங் களோட உண்மையான குணத் தையும், குறைபாடுகளையும் வெளிப்படுத்த ஆரம்பிப்பாங்க. கணவனோட முன்கோபம் புது மனைவியை நிலைகுலைய வைக்கும், அடிக்கடி சந்தேகப் படுற மனைவியின் குணம் புது கணவனை கதிகலங்க வைக்கும். இப்படி ஆரம்பிக்கிற விரிசல்... திருமண வாழ்க்கையில மிகப் பெரிய பள்ளத்தாக்கையே உருவாக்கிடும். அப்போ தடு மாறிடாம வாழ்க்கையை தக்கவெச்சுக்க, திருமணத்துக்கு முந்தைய கவுன்சலிங் அவசியம்'' என்றவர், அதன் தன்மை என்னவென்று விளக்கினார்.

''எங்ககிட்ட வர்ற ஜோடிகள்கிட்ட, இந்த திருமணத்துல முழு சம்மதமாங்கறதுல ஆரம் பிச்சு, அவங்களோட இயல்பான குணநலன்கள், விருப்பு - வெறுப்புகள், அதிகம் கோபப்படுற விஷயம், யாரையெல்லாம் பிடிக்காது, ஏன் பிடிக்காது, குடும்ப உறவுகளுடனான பிணைப்பு, பணம் மற்றும் சொத்து சேர்ப்பு பற்றிய கண்ணோட்டம், குழந்தை பற்றிய எதிர்பார்ப்புகள் வரை அத்தனையையும் தெரிஞ்சுக்கறதோட, ரெண்டு பேரையும் பரஸ்பரம் பகிரவும் வெச்சுடு வோம். அவங்களுக்காக பிரத்யேகமாக தயா ரிக்கப்பட்டிருக்கிற கேள்விகளுக்கு விடைகளை வாங்கி, அதற்கு ஏற்ப ரெண்டு பேருக்கும் தனித்தனியாவும், சேர்த்தும் கவுன்சலிங் கொடுப்போம். திருமண வாழ்க்கை வெற்றிகரமா அமைய அவங்க மாத்திக்க வேண்டிய விஷயங் களை, சரிபண்ண வேண்டிய தவறுகளை, வளர்த்துக்க வேண்டிய பண்புகளை பக்குவமா எடுத்துச் சொல்வோம். இறுதியா, மண வாழ்க்கை பற்றிய, தன் துணை பற்றிய புரிதலோட அவங்களை அனுப்பி வெப்போம். 'ஒருவேளை இந்த பக்குவமும், புரிதலும் தெரியாமலேயே நாங்க கல்யாணம் பண்ணியிருந்தா என்ன வாகியிருக்கும்..?'னு திகைச்சு, எங்களுக்கு நன்றி சொல்லிட்டுப் போற ஜோடிகள் நிறைய!'' என்றவர், கவுன்சலிங்கின் முக்கிய அம்சம் தாம்பத்யம் என்பதையும் அழுந்தச் சொன்னார்.

''ப்ரீ மெரைட்டல் கவுன்சலிங்கில் செக்ஸ் பற்றிய அலசல் மிக மிக முக்கியமானது. ஏன்னா, திருமண வாழ்க்கையில் தாம்பத்யத்தில் ஏற்படும் தகராறு மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதனால ரெண்டு பேரிடமும் முக்கியமா செக்ஸ் பற்றிய அவங்களோட கருத்தை, எதிர்பார்ப்பை, அறிவையும் அலசுவோம். ரொம்ப மாடர்னாக வாழ்க்கை முறை மாறிவிட்ட இந்த சூழல்லேயும் கட்டுப் பெட்டியா வளர்க்கப்படுற பொண்ணுங்களும் இருக்காங்க, பசங்களும் இருக்காங்க. செக்ஸ் பற்றிய அடிப்படை புரிதலே இல்லாம திருமண பந்தத்துக்குள்ளே போகிற இந்த மாதிரியான நபர்கள், தன்னையும் வருத்திக்கறதோட, துணை யையும் வதைப்பாங்க.

செக்ஸ் விஷயத்துல ஆண்களுக்கும், பெண் களுக்கும் பெரிய வேறுபாடுகள் இருக்குது. ஆணுக்கு சட்டென்று செக்ஸ் நாட்டம் வரும். ஆனா, பெண்கள் நிதானமா முன்னேறுவாங்க... அதேமாதிரி நீடித்தும் இருக்கும் அவங்க உணர்ச்சி. இந்த அடிப்படை அறிவையெல்லாம் திருமண பந்தத்துக்குள்ள நுழையுற ஆணும், பெண்ணும் புரிஞ்சுக்கணும். மணமகனுக்கு சட்டுனு விந்து வெளிப்படுற பிரச்னை இருந்தா, பெண்ணை வெகுவா பாதிச்சு... படிப்படியா குடும்ப வாழ்க்கையில் சிக்கல்களை உருவாக்க லாம். சில பெண்கள் தாம்பத்யத்தில் ஈடுபடுறதை மிகப்பெரிய வலியான விஷயம்னு நினைச்சு அலறுவாங்க. கணவனை பக்கத்துல வரவிடவே மாட்டாங்க. இது, உண்மையில ஒருவிதமான மனபயமே. இதுக்கெல்லாம் கவுன்சலிங்கும், பிரச்னைகளை பொறுத்து மருத்துவ தீர்வு களையும் கொடுப்போம்'' என்ற டாக்டர், டேபி ளில் இருந்த ஆர்கானிக் டீயை பருகியபடியே...

''திருமண பந்தத்தின் எந்த நிலையில் இருந் தாலும் சரி... சம்பந்தப்பட்ட தம்பதியால தங்களுக்குள்ள பேசி பிரச்னையை தீர்க்க முடியலைங்கிற கட்டத்துல, தாமதிக்காம ஒரு குடும்பநல ஆலோசகரை அணுகுங்க. உங்க வாழ்க்கையை அழகாக்கி, பத்திரமா உங்க கையில் கொடுப்போம்!'' என்றார் புன்னகை யுடன்!

ஆதலால் ஆலோசனை பெறுவீர்!


நிச்சயதார்த்த எச்சரிக்கை!

மனநல ஆலோசகர் லட்சுமணனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் அடிக் கோடிட்டு சொன்ன ஒரு விஷயம் -

''சென்னை, கோவை மாதிரியான சிட்டிகள்ல நிச்சயதார்த்தம் முடிஞ்ச துமே... என்கேஜ்மென்ட் பார்ட்டி, ப்ரீ மேரேஜ் பிக்னிக் அது, இதுனு போற பழக்கம் இப்ப சகஜமாயிடுச்சு. 'கட்டிக்கப் போறவங்கதானே...'னு அவங்களை பழகவிடுறது, தவறு. 'திருமணம்' அப் படிங்கிற விஷயத்துல இருக்கிற எதிர் பார்ப்பு, கவர்ச்சி, ரகசியம் எல்லாம் இந்த நாட்கள்லயே அவங்களுக்குள்ள தீர்ந்துடுச்சுனா, திருமணத்துக்குப் பின் அவங்களுக்கு இடையில் எந்த சுவாரசி யமும் இருக்காது. கூடவே, இந்த நாட் கள்ல அவங்களுக்குள்ள ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டா, தன் துணை மேலே திருமணத்துக்கு முன்னயே மோசமான எண்ணங்கள் வரவும் வாய்ப் பிருக்கு'' என்று உஷார்படுத்தினார்.

மேரேஜ் டிப்ஸ்


தலைகீழாக மாறும் கல்யாண சந்தை

திருமணங்களை முடிவு செய்வதற்கான சம்பிரதாயங்கள், முன்பெல்லாம் சுருக்கமானவை. கல்யாணத் தரகர்களிடம் ஒப்படைக்கப்படும் ஜாதகங்கள், 'நல்ல வேலையில் இருக்கிற பையனா இருந்தா போதும்...' என்று காத்திருக்கும் பெண் வீட்டார், 'பொண்ணு அழகா இருக் கணும்...' என எதிர்பார்க்கும் பையன் வீட்டார், பஜ்ஜி, காபியுடன் பெண் பார்க்கும் படலம், முகூர்த்தம்... இப்படி!

இன்றோ, கல்யாண சந்தையில் பற்பல மாற்றங்கள். குறிப்பாக, பையன் வீட்டார் 'டிமாண்ட்' செய்வது போலவே, பெண் வீட்டாரின் 'டிமாண்ட்'களும் இப்போது பெருகியுள்ளன. 'பொண்ணு, பையனை விடப் படிச்சிருந்தா என்ன... நல்லதுதானே..?' என்று மாப்பிள்ளை வீட்டார் மாறியிருக்க, 'தனிக் குடித்தனம் வெச்சாதான் பொண்ணு கொடுப் போம்...' என்று வெளிப்படையாகவே நிபந்தனை விதிக்கும் பெண் வீட்டார்கள், நவீன கல்யாண புரோக்கர்களாக உருவெடுத்து இருக்கும் மேட்ரிமோனியல் வெப்சைட்டுகள், மணக் கயிறின் மஞ்சள் தேயும் முன் பிரியும் தம்பதிகள்... என ரொம்பவே மாறி இருக்கின்றன கல்யாண காட்சிகள்.

''எனக்கு ஒரே மகன். நல்ல வேலையில் இருக்கான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, அஞ்சு வருஷமா அவனுக்குப் பெண் தேடறேன். எதுவுமே அமையல. அந்தக் காலத்துல, பொண்ணுங்களக் கட்டிக் கொடுக்க படாதபாடு படுவாங்க. இப்ப, நிலைமை தலைகீழ்...'' என்று கவலையுடன் சொன்ன சென்னை, மயிலாப் பூரைச் சேர்ந்த அந்தத் தந்தைக்கு, மனது முழுக்க வருத்தமும், விரக்தியும்.

''பெரிய சம்பளம் வாங்குறேன்... ஆளும் பார்க்க ஸ்மார்ட்டாதான் இருக்கேன். மேட்ரி மோனியல் சைட்ல புரொஃபைல் அப்லோட் பண்ணி ஆறு மாசமாச்சு. இன்னும் ஒரு ரெஸ் பான்ஸ் கூட வரல. இந்த பொண்ணுங்க என்ன எதிர்பார்க்கிறாங்கனே புரியலையே!'' என்று குழம்புகிறார் சாஃப்ட்வேர் இளைஞர் ஒருவர்.

'நல்ல பெண்...  நல்ல பையன்...'

ஆயிரம் திருமணங்களுக்கு மேல் செய்து வைத்தவர், சென்னை, அடையாறைச் சேர்ந்த 70 வயதாகும் திருமண தரகர் சாம்பசிவம். ''போட்டோ வேண்டாம்...'' என்றபடி பேச ஆரம்பித்தவர்,

''25 வருஷத்துக்கு முன்ன இங்க இருக்கிற பிள்ளையார் கோயில்ல போய் உட்கார்ந்தேன்னா, பெண்களோட ஜாதகக் கட்டை எடுத்துட்டு, ஒரு நாளைக்கு குறைஞ்சது 10 தாய்மார்களாவது வரு வாங்க. 'ஏதாச்சும் ஒரு வேலையில் இருந்தா போதும். அரசு உத்தியோகம்னா ரொம்ப சந்தோஷம். ஓரளவுக்கு நகை போட்டு, திருமணத்தையும் நல்லா செஞ்சு கொடுத்துடுவோம்'னு சொல்லுவாங்க. படிச்ச பெண்களோட வரன் ஒண்ணு, ரெண்டு வரும். 'பையனைவிட, அதிகம் படிச்ச பொண்ணு வேண்டாம்'னு நிப்பாங்க மாப்பிள்ளை வீட்டுக் காரங்க. இதனாலயே, மேல படிக்கணும்னு கேட்கிற பெண் பிள்ளைகளை, 'உன்னைவிட படிச்ச மாப்பிள்ளையை நாங்க எங்க போய் தேடுறது?'னு மறுப்பாங்க பெத்தவங்க. இதெல்லாமே குறைச்சலான சதவிகிதம்தான். பெரும்பாலும் சட்டு சட்டுனு வரன்கள் அமைஞ்சுடறதுதான் அதிக சதவிகிதம்'' என்றவர்,

''இன்றைய சூழ்நிலையில் மாப்பிள்ளை வீட்டார்கூட தகைஞ்சு வந்துடறாங்க. ஆனா, பெண் வீட்டார்தான் நிறைய நிராகரிக்கறாங்க. இப்போ இருக்கிற பெண்களின் படிப்பு, எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் அவ்வளவு சுலபமா மாப்பிள்ளை கிடைக்கறதில்லை. அப்படியே அமைஞ்சாலும், கட்டிக்கிட்டவங்க ரெண்டு பேரும், போன தலைமுறையைப் போல் விட்டுக்கொடுத்து வாழறதில்லை. 'நீ இல்லைனா எனக்கு வாழ்க்கை இல்லையா?'னு சட்டுனு பிரிஞ்சுடறாங்க. இதனாலேயே, 'நல்ல பொண்ணு...', 'நல்ல பையன்...'னு எந்த வரனுக்கும் உத்தரவாதம் கொடுத்து சம்பந்தம் பேசி வைக்கத் தயக்கமா இருக்கு'' என்றவரின் குரலில் ஏகத்துக்கும் சோகம்.

'பையன் படிப்புக்கு லோன் போடலைதானே!'

அம்பத்தூரை சேர்ந்த மாலதி - கிருஷ்ணசாமி தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். நாத்தனார், ஓர்ப்படி என்று கூட்டுக் குடும்பமாக வசிக்கும் இவர், மகனுக்கு வரன் தேடி அலைந்ததை வருத்தத் துடன் பகிர்ந்து கொண்டார். ''எங்க வீட்டுல எல்லோருமே நல்லா படிச்சவங்க. என் மகளுக்கு வரன் தேட நான் எந்தச் சிரமமும்படல. முதன் முதலா பார்த்த இடமே முடிஞ்சுடுச்சு. ஆனா, பையனுக்கு நியூஸ்பேப்பர், மேட்ரிமோனியல்னு வரன் தேடி அலைஞ்சேன். இத் தனைக்கும் நல்ல வேலையில இருக்கான். லட்சணமான பையன். 'பையனோட படிப்புக்கு லோன் எதுவும் போடலை இல்லே..?', 'வீட்டு லோன் எல்லாம் முடிச்சுட்டீங் களா...?', 'கல்யாணம் ஆனதும், தனிக்குடித்தனம் வெச்சுட ணும்'னு வரிசையா கண்டிஷன் போடறாங்க பொண்ணு வீட்டுக்காரங்க. ம்... அலைஞ்சு திரிஞ்சு ஒரு அருமையான வரன் வந்தது. போன வருஷம் தான் அந்த பெண் கையில் பிடிச்சுக் கொடுத் துட்டேன்'' என்று மலர்ச்சியுடன் சொன்னார்.

படிப்பு ஒரு தடையல்ல!

'பெண், ஆணைவிட அதிகம் படித்திருப்பது திருமணத்துக்கு தடையாக இருக்கிறது' என்கிற பழைமை உடைந்திருப்பதைப் பேசினார்கள், ஸ்ரீ காளிகாபுரத்தைச் சேர்ந்த செல்வமணி - ஜெனீமா தம்பதி. செகண்ட் கிரேட் டீச்சராக இருக்கும் செல்வமணி, கரஸ்பாண்டன்ஸில் எம்.எஸ்சி படிக்கிறார். பொறியியல் பட்டதாரியான ஜெனீமா, தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் லெக்சரர்!

''கல்யாணப் பத்திரிகையில 'ஜெனீமா B.E., செல்வமணி DTed., M.Sc, இப்படி இருந்ததைப் பார்த்து என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும், 'உன்னை விட குறைச்சலா படிச்சவர ஏன் கல்யாணம் பண்ணிக்கிறே..?'னு கேட்டாங்க. நல்லா படிச்சுருக்கணும், நிறைய சம்பாதிக் கணுங்கிறதைவிட, குணமானவரா இருக்கணுங் கறதுதான் என்னோட எதிர்பார்ப்பு. எங்களுக்குள்ள எந்தச் சண்டைகளும் கிடை யாது. புரிதல் நிறைய இருக்கு. இப்பக்கூட, நான் ரெகுலர்ல எம்.இ, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஃபைனல் இயர் படிக்கிறேன்...'' என்றவருடன் செல்வமணியும் சேர்ந்து ஒரே குரலில்,

''அறிவுக்காகவும், பொருள் சம்பாதிக்கறதுக் காகவும்தான் படிப்பு. அதை குடும்பத்துக்குள்ளே நுழைச்சு குழப்பம் பண்ணக் கூடாது. எந்த விதத்துலயும் எங்களுக்குள்ள ஈகோ எட்டிப் பார்க்கல. எல்லாத்துக்கும் காரணம்... மனசுதான்!'' என்று இயல்பாகப் பேசி, இன்றைய இளம் தம்பதிகளுக்குச் சொல்லாமல் பாடம் சொன்னார்கள்!

'ஆண்கள்தான் வரதட்சணை தர வேண்டியிருக்கும்!'

வரன்களின் வரவு பற்றி தமிழ் மேட்ரி மோனியல் டாட் காம் நிறுவனர் முருகவேல் ஜானகிராமனிடம் பேசியபோது, ''70% ஆண் களும், 30% பெண்களும் பதிவு செய்திருக்கின்றனர். பிலோ மிடில் கிளாஸ் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆன் லைன் பதிவை செய்வ தில்லை. கொஞ்சம் மேல்மட்டத்தினர் தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் பெற்றோர், உறவினர்கள் கலந்து முடிவெடுத்து திருமணம் செய்வார்கள்.

இன்று சம்பந்தப்பட்ட பெண், ஆணின் முடிவே முக்கியமானதாக இருக்கிறது. குறிப்பாக, வேலைக்குச் செல்வதால் பொருளாதார பலம் தரும் தைரியத்தால், பெண்களின் எதிர்பார்ப்பு இப்போது பல கோணங்களிலும் விரிந்துள்ளது. அதன் காரணமாக, பையன் வீட்டார் இறங்கி வரவேண்டியதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்ன வென்றால், மேல்தட்டு வர்க்கத்தில் ஜாதி, மதம் அதிகம் பார்ப்பதில்லை. இதனால், குறிப்பிட்ட சில சமூகத்தில் பெண்கள் இல்லாமலும் போய் விடுகிறது. ஆண்கள், பெண்களுக்கு வரதட்சணை கொடுத்துக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய நிலை கிட்டத்தட்ட வந்துவிட்டது!'' என்றார்!

நல்ல விஷயம்!

30 வகை ஆல் இண்டியா ரெசிபி

டோக்ளா, வெஜ் கபாப், கச்சோரி போன்ற வெளி மாநில உணவு அயிட்டங்களை நாம் ஹோட்டல்களில் மட்டுமே சுவைத்தி ருப்போம். அவற்றை நம் இல்லங்களிலேயே எளிதில் தயாரிக்க உதவும் வகையில் '30 வகை ஆல் இண்டியா ரெசிபி'களை வழங்குகிறார் சீதா சம்பத்.

''அப்பாலு, மரிச்சி லாடு, மால்புவா... என பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரெசிபிகளை தேடித் தேடிக் கண்டு பிடித்து தந்திருக்கிறேன். இவை உங்கள் சமையலறை சாம்ராஜ்ஜியத்தை வளமாக்கு வதுடன்... குடும்பம், நட்பு வட்டத்தில் உங்களை 'கிச்சன் ஜீனியஸ்' என்ற புகழுடன் மிளிர வைக்கும்'' என்று நம்பிக்கையூட்டுகிறார் சீதா சம்பத்.

கை முறுக்கு (தமிழ்நாடு)

தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப் (அரிசியை களைந்து, சுத்தப்படுத்தி, ஊற வைத்து, நிழலில் உலர்த்தி அரைத்த மாவு), உளுத்தம் மாவு (வறுத்து சலித்தது) - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு, வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் (அ) எள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, உப்பு, வெண்ணெய், உளுத்தம் மாவு, பெருங்காயம் கரைத்த நீர், சீரகம் (அ) எள் ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். எண்ணெயை கையில் தடவிக் கொண்டு, கலவையில் சிறிது எடுத்து வெள்ளைத் துணியில் வட்ட மாக 2 சுற்று, 4 சுற்று என்று சுற்றி, சூடான எண்ணெயில் முறுக்கை உடையாமல் போடவும். 5, 6 போட்டு வெந்து வந்ததும் திருப்பிவிடவும். நன்றாக வெந்ததும் எண்ணெய் வடித்து எடுக்கவும்.

தேங்காய் ஸ்வீட் பால்ஸ் (கேரளா)

தேவையானவை: தேங்காய் துருவல் - 2 கப், வெல்லத்தூள் - ஒன்றேகால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், மைதா - அரை கப், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அடி கனமான கடாயில் தேங்காய் துருவல், வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து பூரணமாக கிளறி எடுக்கவும். மைதா மாவுடன் உப்பு சேர்த்து  தண்ணீர் விட்டு கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். பூரணத்தை சிறுசிறு உருண்டைகளாக தயார் செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் 4, 5 உருண்டைகளை மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டு, வெந்ததும் திருப்பிவிடவும். பொன்னிறமாக வெந்ததும், எண்ணெய் வடித்து எடுக்கவும்.  

குறிப்பு: இதை கேரளாவில் பண்டிகைகளுக்கு விசேஷ பலகாரமாக செய்வார்கள். ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

அப்பாலு (ஆந்திரா)

தேவையானவை: அரிசி மாவு - அரை கப், மைதா மாவு - ஒரு கப்,  சர்க்கரை (அ) வெல்லம் - ஒன்றரை கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: சர்க்கரை (அ) வெல்லத்தில் பாகு தயார் செய்யவும். அதனுடன் நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவலை சேர்த்துக் கலக்கவும். அதில் அரிசி மாவு, மைதா மாவு தூவி கலந்து இறக்கி, வேறு பாத்திரத்தில் போட்டு மூடி,

2 மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கலவையில் சிறிது எடுத்து உருட்டி அதிரசம் போல தட்டிப் போடவும். வெந்ததும் திருப்பி விடவும். பொன்னிறமானதும் எண்ணெய் வடித்து எடுத்தால்... அப்பாலு தயார்!

தேங்காய் லாடு (பீஹார்)

தேவையானவை: தேங்காய் துருவல் - 2 கப், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், திராட்சை, முந்திரித் துண்டுகள் - தலா 2 டீஸ்பூன், கோவா - ஒன்றரை கப், நெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை: தேங்காய் துருவல், கோவா, சர்க்கரை ஆகியவற்றை அடி கனமான கடாயில் போட்டு, அடுப்பில் வைத்துக் கிளறவும். எல்லாம் கலந்து இறுகி வரும் சமயம் நெய் விட்டு கிளறவும். உருட்டும் பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், திராட்சை, முந்திரி துண்டுகள் சேர்த்துக் கலந்து, நெய் தடவிய வேறு பாத்திரத்துக்கு மாற்றவும். மிதமான சூடு இருக்கும்போதே, கையில் நெய் தடவிக் கொண்டு, கலவையை சிறுசிறு உருண்டைகளாக பிடிக்கவும்.  

மாத்தாடி (ராஜஸ்தான்)

தேவையானவை: மைதா - 2 கப், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத் திரத்தில் மைதா, மிளகுத்தூள், உப்பு சேர்த்து, 2 டீஸ்பூன் நெய் விட்டு கெட்டியாக சப்பாத்தி மாவு போல பிசையவும். கலவையில் சிறிது எடுத்து சப்பாத்தியாக இட்டு மடித்து, மீண்டும் சப்பாத் தியாக இட்டு முக்கோணமாக கட் செய்து தயார் செய்யவும். கடாயில் நெய் விட்டு, சூடானதும் முக்கோணமாக கட் செய்த துண்டுகளை இரண்டு, மூன்றாக போட்டு பொரித்து எடுத்தால்... மாத்தாடி. இது அருமையான தொரு ஸ்நாக்ஸ்!  

காஜூ கத்லி (ராஜஸ்தான்)

தேவையானவை: முந்திரிப் பருப்பு - ஒன்றரை கப், சர்க்கரை -  ஒரு கப், நெய் - கால் கப்.

செய்முறை: முந்திரிப் பருப்பை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். சர்க்கரையை கம்பி பதத்தில் பாகு வைக்கவும். பாகு தயார் ஆனதும், அரைத்த விழுதை போட்டுக் கிளறவும். இறுகி கெட்டியாக வரும் சமயம், 2 டீஸ்பூன் நெய் விட்டு அடிபிடிக்காது கிளறவும். உருட்டும் பதம் வந்ததும் தீயை நிறுத்திவிட்டு கிளறவும். நெய் தடவிய தட்டில் பரவலாக விட்டு, ஆறியதும் துண்டுகள் போடவும்.

 கிராம் ஸ்வீட் (கோவா)

தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், கடலைப்பருப்பு - ஒரு கப், சர்க்கரை - 2 கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: கடலைப் பருப்பை சுத்தம் செய்து, வேக வைத்து, விழுதாக அரைத்து எடுக்கவும். சர்க்கரையை அடி கனமான பாத்திரத்தில் போட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டு கரையவிட்டு கம்பி பதத்தில் பாகு வைக்கவும். கடலைப் பருப்பு விழுது, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை பாகுடன் சேர்த்துக் கிளறவும். இறுகி வரும் சமயம், நெய் விட்டு அடிபிடிக்காமல் கிளறவும். கெட்டியானதும், நெய் தடவிய தட்டில் பரவலாக விட்டு, மிதமான சூட்டில் இருக்கும்போதே துண்டுகள் போடவும்.

 சிவ்டா (கர்நாடகா)

தேவையானவை: அவல் பொரி - ஒரு கப், வேர்க்கடலை - கால் கப், கொப்பரை துண்டுகள் - 10 அல்லது 15, பொட்டுக்கடலை - கால் கப், சீரக மிட்டாய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய் வற்றல் - ஒன்று, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 1 (நறுக்கவும்),  தனியா - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு போட்டு வறுத்து, பிறகு அவல் பொரியையும் சேர்த்து சூடுபட வறுத்து, தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். வேர்க்கடலை, கொப்பரைத் துண்டுகளை தனியாக வறுத்து எடுக்கவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் துண்டுகள், கறிவேப்பிலையைப் போட்டு வறுக்கவும். பொட்டுக்கடலை, தனியா இரண்டையும் தனியாக வறுத்துக் கொள்ளவும். வறுத்து எடுத்த எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்து, சீரக மிட்டாய் சேர்த்தால்... சிவ்டா தயார்.

சோயா கச்சோரி (இமாச்சல பிரதேசம்)

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், சோயா பீன்ஸ் - அரை கப், இஞ்சி - ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும்), தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், கிராம்பு, பட்டை, கறுப்பு ஏலக்காய் - தலா 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.  

செய்முறை: சோயா பீன்ஸை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் தண்ணீர் வடித்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கிராம்பு, பட்டை, கறுப்பு ஏலக்காயை தட்டிப் போட்டு, பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்க்கவும். இதனுடன் தனியாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், அரைத்த சோயா பீன்ஸ் விழுது, உப்பு சேர்த்துக் கிளறி, நன்கு வெந்ததும் இறக்கவும். இதுதான் பூரணம்.

கோதுமை மாவை தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கொஞ்சம் மாவை எடுத்து சிறிய பூரியாக இடவும். பூரி மீது ஒரு டீஸ்பூன் அளவு பூரணம் வைத்து மூடி, சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால்... சோயா கச்சோரி தயார்.

சிங்கள்  புவா (உத்தரகாண்ட்)

தேவையானவை: ரவை - ஒரு கப், சர்க்கரை - அரை கப்புக்கு கொஞ்சம் அதிகமாக, யோகர்ட் - அரை கப், சோம்பு - அரை டீஸ்பூன், வாழைப்பழம் (நன்கு பழுத்தது) - ஒன்று, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் (எண்ணெய் தவிர) ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்து பிசைந்து கொள்ளவும். அப்படியே ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பிசைந்து வைத்துள்ள கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எண்ணெய் வடித்து எடுக்க... சிங்கள் - புவா தயார்.

குறிப்பு: இதை இன்னொரு முறையிலும் தயாரிக்கலாம். அதாவது, பிசைந்த கலவையை குழிப் பணியார சட்டியில் விட்டு வேக வைத்து பொன்னிறமானதும் எடுக்கலாம்.

பெசரட் (ஆந்திரா)

தேவையானவை: பச்சைப் பயறு -  ஒரு கப், அரிசி - அரை கப், பச்சை மிளகாய் - 2 அல்லது 3, சீரகம் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 2 (நறுக்கவும்), இஞ்சி - ஒரு சிறிய துண்டு (நறுக்கவும்), எண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சைப் பயறு, அரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஊற வைத்து, பச்சை மிளகாய், சீரகம், நறுக்கிய வெங்காயம், இஞ்சி சேர்த்து அரைத்து எடுத்து, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கலக்கவும். சூடான தோசை கல்லில் எண்ணெய் தடவி, ஒரு கரண்டி மாவு விட்டு கனமாக தேய்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விடவும். நன்கு வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். இதற்கு எல்லா சட்னியும் தொட்டுச் சாப்பிடலாம்.

பின்னி (ஹரியானா)

தேவையானவை: அரிசி மாவு, சர்க்கரைத்தூள் - தலா ஒரு கப், நெய் - 6 டேபிள்ஸ்பூன், திராட்சை - ஒன்றரை டேபிள்ஸ்பூன், பாதாம், பிஸ்தா, முந்திரித் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கடாயில் நெய் விட்டு அரிசி மாவை வறுக்கவும். சர்க்கரைத்தூள் சேர்த்துக் கலக்கவும். உடனே தீயை நிறுத்தி விடவும். வறுத்த திராட்சை, பாதாம், பிஸ்தா, முந்திரித் துண்டுகள் சேர்த்துக் கலந்து உருண்டைகள் பிடிக்கவும்.

ஜிலேபி (பஞ்சாப்)

தேவையானவை: மைதா - ஒரு கப், சர்க்கரை - 2 கப், யோகர்ட் - முக்கால் கப், தண்ணீர் - அரை கப்,  சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன், பேக்கிங் சோடா - சிறிதளவு, குங்குமப்பூ - 5 அல்லது 6 இழைகள், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, ரோஸ் எஸ்ஸென்ஸ் - 5 துளிகள், எலுமிச்சைச் சாறு - கால் டீஸ்பூன், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, நெய் (அ) எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: மைதா, தண்ணீர், யோகர்ட், பேக்கிங் சோடா, சோள மாவு ஆகியவற்றை கலந்து பிசையவும். இந்தக் கலவையை ஜிலேபி அச்சில் போட்டு சூடான நெய் (அ) எண்ணெயில் நேரடியாக பிழியவும். வெந்ததும் திருப்பி விட்டு, மறுபுறம் வெந்ததும் எண்ணெய் வடித்து தனியே எடுத்து வைக்கவும். சர்க்கரை, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் கலந்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கம்பிப் பாகு பதத்தில் 'ஜீரா' தயாரிக்கவும். அதில் ரோஸ் எஸ்ஸென்ஸ், எலுமிச்சைச் சாறு விட்டு கலக்கவும். வேக வைத்து எடுத்த ஜிலேபியை ஜீராவில் போட்டு ஊற வைத்து பரிமாறவும்..

லவங்கலதா (மத்தியப்பிரதேசம்)

தேவையானவை: மைதா - 2 கப், வெண் ணெய் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், லவங்கம் - 15, பாதாம் (அ) முந்திரித் துண்டுகள் - 15, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: பாதாம் (அ) முந்திரித் துண்டு களை வறுத்துக் கொள்ளவும். மைதாவில் வெண்ணெய், உப்பு கலந்து கெட்டியாக பிசையவும். சர்க்கரையை 2 கம்பி பதத்துக்கு பாகு வைக்கவும். அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இதுதான் ஜீரா. மைதா கலவையில் சிறிது எடுத்து வட்டமாக இட்டு நாலாக மடித்து அழுத்திவிடவும். லவங்கத்தை நடுவில் குத்தி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். தயாராக வைத்துள்ள ஜீராவில் 10 நிமிடம் ஊற வைத்து எடுத்து தட்டில் வைக்கவும். வறுத்த பாதாம் (அ) முந்திரி துண்டுகளை ஜீராவில் தோய்த்து லவங்கம் பக்கத்தில் வைக்கவும். ஆறியதும் இது ஒட்டிக் கொள்ளும்.

ரசமலாய் (பெங்கால்)

தேவையானவை: பனீர் - 2 கப் அல்லது கால் கிலோ, பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - இரண்டரை கப், குங்குமப்பூ - சிறிதளவு, பிஸ்தா பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

 

செய்முறை: பனீரை உருண்டை களாக செய்து பாதுஷா வடிவத்தில் அழுத்தவும். பாதி அளவு சர்க்கரையை ஒரு கடாயில் போட்டு, 4 கப் தண்ணீர் விட்டு சர்க்கரை கரைந்து கொதிக்கும் வகையில் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். தயாரித்து வைத்துள்ள பனீர் வட்டங்களை உடையாமல் சர்க்கரை கரைசலில் போட்டு 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு, இறக்கவும். பாலை பாதியாக சுண்டும் வரை கொதிக்கவிடவும். இதில் மீதமுள்ள சர்க்கரையை சேர்க்கவும். குங்குமப்பூ, துருவிய பிஸ்தா பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி, இறக்கிவிடவும். சர்க்கரை பாகில் ஊறிய பனீர் வட்டங்களை எடுத்து பாலில் போடவும். தேவையானபோது கப்பில் போட்டு அளிக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்தும் பரிமாறலாம்.

அதிரசம் (தமிழ்நாடு)

தேவையானவை: அரிசி மாவு (அரிசியை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்து, இடித்து மாவாக்கவும். அல்லது மெஷினில் கொடுத்தும் மாவாக்கலாம்), வெல்லம் (பாகு வெல்லம்) - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: வெல்லத்தை பொடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து தக்காளி பழ பதத்தில் பாகு வைக்கவும் (அதாவது, பாகை கொஞ்சம் எடுத்து தண்ணீரில் விட்டால் தக்காளிப்பழம் போல பாகு உருள வேண்டும்). அரிசி மாவில் தேவையான அளவு பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும். 3 மணி நேரம் ஊறிய பின், கலவையில் சிறிது எடுத்து உருட்டி இலை மீது வைத்து தட்டி, சூடான எண்ணெயில் போடவும். நன்கு வெந்ததும் திருப்பி விடவும். வெந்ததும் எடுத்து இரண்டு கரண்டி நடுவே அதிரசம் இருக்கும்படி வைத்துக் கொண்டு அழுத்தினால், அதிகப்படியான எண்ணெய் வடிந்துவிடும்.

குறிப்பு: ஒரு மாதமானாலும் இந்த அதிரசம் கெடாது. மிகவும் சாஃப்ட் ஆக இருக்கும்.

 டோக்ளா (குஜராத்)

தேவையானவை: கடலை மாவு - 2 கப், புளிப்புத் தயிர் - ஒன்றரை கப், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சித் துண்டுகள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், சோடா உப்பு (அ) லெமன் சால்ட் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவை புளிப்புத் தயிரில் கட்டியில்லாது கரைத்துக் கொள்ளவும். இத்துடன் உப்பு, மிளகாய்தூள், சோடா உப்பு (அ) லெமன் சால்ட் சேர்த்துக் கலக்கவும். எண்ணெய் தடவிய தட்டில் இந்தக் கலவையை விட்டு, ஆவியில் வேக வைத்து எடுத்து, துண்டுகள் போடவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்துப் புரட்டவும்.  கடலை மாவு கலவை துண்டுகளை இதில் போட்டு, கரண்டி காம்பினால் லேசாக கிளறவும். பிறகு, தேங்காய் துருவல், கொத்தமல்லி போட்டு கலக்கினால்... டோக்ளா தயார்!

குறிப்பு: இதற்கு ஸ்வீட் சட்னி, கார சட்னி தொட்டு சாப்பிடலாம். இது 2 நாள் வரை கெடாமல் இருக்கும்.

கார்ன் டிக்கி பாட்டீஸ் (மிசோராம்)

தேவையானவை: ஃபிரெஷ் சோளம் - 2 கப், பொட்டுக்கடலை - அரை கப், பச்சை மிளகாய் - 4 அல்லது 5, கொத்தமல்லி இலை - அரை கப், சீரகம், இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சோளம், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, சீரகம் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். இதில் உப்பு, கரம் மசாலாத்தூள், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கலக்கவும். கலவையில் சிறிது எடுத்து (எலுமிச்சம்பழ அளவு) உருட்டி தட்டவும்.  எண்ணெயை சூடாக்கி தட்டி வைத்துள்ளதை போடவும். இருபுறமும் திருப்பிவிட்டு வெந்ததும் எடுக்கவும்.

குறிப்பு: சில்லி சாஸ், புதினா சட்னி தொட்டு சாப்பிட்டால்... சுவை கூடும்.

ஆலு அல்வா (இமாச்சல பிரதேசம்)

தேவையானவை: வேக வைத்து, மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - அரை கப், திராட்சை - 2 டீஸ்பூன், பாதாம் பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, சர்க்கரையை போட்டு அடுப்பில் வைத்துக் கிளறவும். நன்கு கலந்து கெட்டியாக அல்வா பதம் வரும்போது, அடிபிடிக்காமல் இருக்க நெய்விட்டு கிளறவும். திராட்சை, பாதாம் பருப்பு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். அல்வா பதம் வந்ததும் (துடுப்பால் எடுத்தால் தானாக 'விண்' என்று வழிந்து விழ வேண்டும்) இறக்கிவிடவும்.

மோதகம் (மஹாராஷ்ட்ரா)

தேவையானவை: அரிசி மாவு, தேங்காய் துருவல் - தலா ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், திராட்சை, முந்திரித் துண்டுகள் - தலா 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:  பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர், உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். அரிசி மாவை அதில் கொட்டி, கெட்டியாக வரும் வரை கிளறி இறக்கவும். கடாயில் வெல்லம், தேங்காய் துருவல், திராட்சை, முந்திரித் துண்டுகள் சேர்த்து பூரணமாக கிளறி இறக்கவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி மாவை நன்கு பிசைந்து சிறு சிறு கிண்ணம் போல செய்து, அதனுள் ஒரு டீஸ்பூன் அளவு பூரணம் வைத்து மூடி, கொழுக்கட்டை போல வடிவம் கொடுக்கவும். இதை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

 தூத் பாக் (குஜராத்)

தேவையானவை: பால் - ஒரு லிட்டர், பச்சரிசி - ஒரு கப், கோவா (சர்க்கரை இல்லாதது) கால் கப், சர்க்கரை - ஒரு கப், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு - தலா 10, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ - சிறிதளவு.

செய்முறை: பச்சரிசியை சுத்தம் செய்து, அதனுடன் 2 கப் பால், ஒரு கப் தண்ணீர் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, அப்படியே குக்கரில் வேக வைத்து எடுத்து நன்கு மசித்துக் கொள்ளவும். மீதம் உள்ள பாலை காய்ச்சவும். சர்க்கரை, கோவா சேர்த்து... அடுப்பை மிதமான தீயில் வைத்து சேர்ந்தாற்போல வரும் வரை கிளறவும். மசித்த சாதம், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ ஆகியவற்றை காய்ச்சிய பாலுடன் சேர்த்துக் கலக்கவும். பாதாம், முந்திரியை துண்டுகளாக்கி நெய்யில் வறுத்து சேர்க்கவும். எல்லாம் சேர்ந்தாற்போல வரும் வகையில் நன்கு கலந்து இறக்கினால்... தூத் பாக்  தயார்.

 வெஜ் கபாப் (டெல்லி)

தேவையானவை: உருளைக்கிழங்கு (வேக வைத்தது) - 2, காட்டேஜ்  சீஸ் - ஒரு கப், நறுக்கிய காலிஃப்ளவர் பொடியாக நறுக்கிய துண்டுகள் - ஒரு கப், முட்டைகோஸ் துருவல், வெங்காய துருவல் - தலா அரை கப், மைதா - ஒரு கப், பச்சை மிளகாய் - 2 (துண்டு களாக்கவும்), கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு, அஜினமோட்டோ - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன், குச்சி (டூத்பிக்) - 10, எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி, மசித்துக் கொள்ளவும். இத்துடன் பொடியாக நறுக்கிய காலி ஃப்ளவர், முட்டைகோஸ் துருவல், வெங்காய துருவல், பச்சை மிளகாய் துண்டுகள், கொத்தமல்லி, அஜினமோட்டோ, சீஸ் கலந்து பிசையவும். இதில் உப்பு, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து பிசைந்து, எலுமிச்சம்பழ அளவு எடுத்து உருட்டிக் கொள்ளவும். மைதாவுடன், உப்பு, கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி, உருட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு கலவை உருண்டைகளை மைதா கலவையில் தோய்த்துப் போடவும். வெந்ததும் திருப்பி விடவும். பொன்னிறமாக வெந்ததும் எண்ணெய் வடித்து எடுத்தால்... வெஜ் கபாப் தயார். ஒவ்வொரு கபாப்பிலும் ஒரு குச்சியை நடுவில் செருகி, சாஸ் உடன் பரிமாறவும்.

 கார்ன் பக்கோடா (மிசோராம்)

தேவையானவை: ஃபிரெஷ் சோளம் - 2 கப், பொட்டுக்கடலை - அரை கப், பச்சை மிளகாய் - 4 அல்லது 5, கொத்தமல்லி இலை - அரை கப், சீரகம் - அரை டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 4 அல்லது 5 பல், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,  நறுக்கிய வெங்காயம் - ஒரு கப் (நறுக்கியது), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சோளம், சீரகம், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். இதில் உப்பு, கரம் மசாலாத்தூள், இஞ்சி, வெங்காயத் துண்டுகள், கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கலவையில் இருந்து சிறிது சிறிதாக கிள்ளி எடுத்துப் போடவும். வெந்ததும் இருபுறமும் திருப்பிவிடவும். பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

 பேதாஸ் (பஞ்சாப்)

தேவையானவை: கோவா, பால் - தலா அரை கப், சர்க்கரை - முக்கால் கப், குங்குமப்பூ இழைகள் - சிறிதளவு, பாதாம் (மெலிதாக சீவியது) - 4 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், ரோஸ் எசென்ஸ் - சில துளிகள், உலர் பழவகைகள் - சிறிதளவு.

செய்முறை: அடி கனமான கடாயில் கோவாவை உதிர்த்துப் போட்டு, சர்க்கரை கலந்து, பால் விட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கிளறவும். நன்கு கலந்ததும் ரோஸ் எசென்ஸ், குங்குமப்பூ இழைகள், பாதாம் துண்டுகள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து கெட்டியாக உருட்டும் பதம் இருக்குமாறு பார்த்து இறக்கி, உருண்டைகளாகச் செய்து, நடுவில் லேசாக அழுத்திவிட்டு, உலர் பழவகைகள் வைத்து அலங்கரிக்கவும்.

 கச்சோரி (கோவா)

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், பயத்தம்பருப்பு - ஒரு கப், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சோம்புத்தூள், சீரகம் - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி இலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசையவும். பயத்தம்பருப்பை ஊற வைத்து, கெட்டியாக அரைத்து எடுத்து... கரம் மசலாத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சோம்புத்தூள் கொத்தமல்லி இலை,  உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சீரகத்தை வறுக்கவும். பயத்தம்பருப்பு கலவையில் சீரகத்தைக் கொட்டி கிளறி, பூரணம் போல் தயாரிக்கவும். கோதுமை மாவை சிறு சப்பாத்தியாக இட்டு, அதில் 2 ஸ்பூன் பூரணம் வைத்து மூடி, சூடான எண்ணெயில்  பொரித்து எடுத்தால்... கச்சோரி தயார்.

 நிம்கி (பீஹார்)

தேவையானவை: மைதா - ஒரு கப், நெய் - 2 டீஸ்பூன், ஓமம் - அரை ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மைதாவில் உப்பு, ஓமம் சேர்த்துக் கலக்கவும். நெய்யை சூடாக்கி மாவில் விட்டு கலக்கவும். தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும். மாவை மெல்லிய சப்பாத்தியாக தேய்த்து, வேண்டிய டிசைனில் கட் செய்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால்.. நிம்கி ரெடி!

 மரிச்சி லாடு (ஒடிசா)

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், நெய் - கால் கப், சர்க்கரை - ஒன்றேகால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், வறுத்த முந்திரித் துண்டுகள் - 10.

செய்முறை: கடாயில் நெய் விட்டு சூடாக்கி, கோதுமை மாவை வாசனை வரும் வரை வறுக்கவும். ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரித் துண்டுகளை அதில் சேர்க்கவும். அத்துடன் சர்க்கரை போட்டு கலந்து கீழே இறக்கி, மிதமான சூடு இருக்கும்போதே உருண்டைகள் பிடிக்கவும்.

குறிப்பு: தேவைப்பட்டால் சிறிது பால் கலந்து உருண்டை பிடிக்கலாம்.

 மால்புவா (உத்தரப்பிரதேசம்)

தேவையானவை: மில்க்மெய்ட் - 200 கிராம், ரவை - 100 கிராம், மைதா - 50 கிராம், பனீர் துண்டுகள் - அரை கப், தண்ணீர் - ஒரு கப், பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - 2 கப், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:  சர்க்கரையில் தண்ணீர் விட்டு 'கொழகொழ' பதத்தில் பாகு தயாரித்து தனியே எடுத்து வைக்கவும். மில்க்மெய்ட்டில் ரவை, மைதா தண்ணீர், பேக்கிங் பவுடர், பனீர் இவற்றை சேர்த்துக் கிளறவும். கலவையை மேலும் கீழும் நன்கு கலந்தால் சாஃப்ட் ஆக வரும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கலவையில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து எண்ணெயில் விடவும். இருபுறமும் பொன்னிறமாகும் வரை  வேகவிட்டு எடுக்கவும். இதை சர்க்கரை பாகில் 5 நிமிடம் ஊற விட்டு, சூடாக பரிமாறவும்.

 சாட் (கர்நாடகா)

தேவையானவை: மைதா - 500 கிராம், நெய் - 300 கிராம், சர்க்கரை - 250 கிராம், ஏலக்காய் - 6.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா, கொஞ்சம் நெய் விட்டு கலந்து... ஏலக்காய்த்தூள், கொஞ்சம் சர்க்கரை  சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும். கடாயில் மீதமுள்ள சர்க்கரையை போட்டு தண்ணீர் விட்டு கெட்டி பாகு தயார் செய்யவும். பிசைந்து வைத்திருக்கும் மைதா கலவையில் சிறிது சிறிதாக எடுத்து உருட்டி, லேசாக தட்டி, சூடான நெய்யில் பொரித்து எடுத்து... சர்க்கரை பாகில் போட்டு 10 நிமிடம் ஊற விட்டு, ஆறியதும் எடுத்து பரிமாறவும்.

குல்ஃபி (டெல்லி)

தேவையானவை: பால் - 4 கப், சர்க்கரை - 8 ஸ்பூன், ஏலக்காய் உள்ளிருக்கும் விதை  - ஒரு டீஸ்பூன், பிஸ்தா துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பாதாம் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், ஜெலட்டின் - 2 டீஸ்பூன் (சர்க்கரை போல இருக்கும் - டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்).

செய்முறை: பாலை சுண்டக் காய்ச்சவும். சர்க்கரை, ஏலக்காய் விதை, பிஸ்தா துருவல், பாதாம் துருவல் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஜெலட்டினை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து கலக்கவும். ஒரு கண்ணாடி பாத்திரத்தில் அப்படியே விட்டு, ஃப்ரிட்ஜின் ஃப்ரீசர் பகுதியில் 2 மணி நேரம் வைத்து எடுத்து பரிமாறவும் (குல்ஃபி மோல்டில் நிரப்பியும் வைக்கலாம்).