Monday, March 31, 2014

எதை இழந்து, எதைப் பெறுகிறோம் என்பதை அறிந்துகொண்டால், தெளிவு ஏற்படும்

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்னைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாவது, நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் பிரச்னைகள். நம் பேராசையால், கோபத்தால், அவசர புத்தியால், தவறான முடிவுகளால் நாமே உருவாக்கிக்கொள்ளும் பிரச்னைகள் இவை. அடுத்து.. நம் நண்பர்களால், விரோதிகளால், நம்மைச் சுற்றியுள்ள நம்பத்தகாத மனிதர்களின் சேர்க்கையால் நமக்கு ஏற்படும் பிரச்னைகள். மூன்றாவதாக, எதிர்பாராத காரணங்களால், நம்மால் கட்டுப்படுத்தமுடியாத சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உருவாகும் பிரச்னைகள். இதை விதி அல்லது கர்ம வினை என்று குறிப்பிடலாம்.

இவற்றில் முதல் இரண்டு வகை பிரச்னைகளிலிருந்து வெளிவர நமது விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் பெரிதும் உதவும். தவறுகளை நினைத்து வருந்தி, திருத்திக் கொள்ள நினைக்கும் மனப்பாங்கு இருந்தால், இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்ளும் மகத்தான சக்தி நம்முள் உண்டாகும். நண்பர், சுற்றம் என்ற பந்தத்தைத் துறந்து, தவறுக்குக் காரணமானவர்களை அடையாளம் காட்டும் துணிச்சல் இருந்தால், இரண்டாவது வகை பிரச்னைகளுக்கும் ஓரளவு தீர்வு காணலாம்.  

மூன்றாவது வகை வித்தியாசமானது. திடீரென சுனாமி வந்து, ஊருக்குள் வெள்ளம் புகுந்து, உறவுகளுக்கும் உடைமைகளுக்கும் உண்டாக்கும் ஆபத்துக்கு யாரைக் குறை கூறுவது? விதி அல்லது வினைப் பயன் என்று ஏற்றுக்கொண்டு, போராடி ஜெயித்து புது வாழ்வை அமைத்துக்கொள்ள, அளவு கடந்த தன்னம்பிக்கையும், வைராக்கியமும், மன உறுதியும், சகிப்புத்தன்மையும் தேவைப்படும். நமக்குள்ளே மறைந்திருக்கும் மகத்தான மானிட சக்தியை வெளிக்கொணர்ந்துதான் இத்தகைய பிரச்னைகளைச் சமாளித்து, ஜெயிக்க வேண்டும்.

அத்தகைய நேரத்தில், 'சூரியனின் ஒளி என் மேல் படுகிறது' என்று எண்ணாமல், 'சூரிய ஒளி என்னுள்ளே ஒளிர்ந்து கொண்டிருக்கிறது' என்ற நம்பிக்கை உருவானால், பிரச்னை இருளிலிருந்து வெளியே வரலாம். 

''நமக்குள் இருக்கும் மனோபலத்தால் ஆற்றும் சாதனைகள், நமக்கு வெளியே உள்ள சூழ்நிலையையே மாற்றியமைக்கும்!'' என்கிறார் ப்ளூடார்ச் எனும் அறிஞர். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்றார் திருவள்ளுவர். 'அச்சம் தவிர்' என்று புதிய ஆத்திசூடியில் சொன்னான் மகாகவி பாரதி. 'துன்பம் கண்டு துவளாமல் எதிர்த்து நில். அப்போது, துன்பம் உன் காலடியில் விழுந்துவிடும்' என முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால், பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும்போது இந்தப் பொன் மொழிகள் உதவிக்கு வருமா? அதற்கும், 'சொல்வது எளிது; செய்தல் அரிது' என்று சொல்லிவைத்துள்ளார்களே ஆன்றோர்!

பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்று பக்கம் பக்கமாக ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி, அதைச் செய், இதைச் செய் என்று சொல்வது எளிது. என்ன செய்வது, எப்படிச் செய்வது என்பதைத் தெரிந்துகொள்வதும், அறிந்து நடப்பதும்தான் கடினம். நம்முள்ளே அடங்கியிருக்கும் உன்னதமான மானிட சக்தியைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், பிரச்னைகளைச் சந்தித்து, கவலையாலும் பயத்தாலும் வாடித் துவண்டிருக்கும் நிலையில், இந்தச் சக்தியை எப்படி உணர்வது, எப்படி வெளிக்கொணர்வது என்பதுதான் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.

'வழி தெரிகிறது; ஆனால், நடக்கக் கால்கள் இல்லை' என்பது போன்ற நிலை இது. ஒரு சின்ன விதை அளவே நம்மைக் கருதுகிறோம். நமக்குள்ளே அடங்கியிருக்கும் விருட்சம் நமக்குத் தெரிவதில்லை.

காலம் காலமாக மனித வாழ்க்கையின் பிரச்னைகள் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்று தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே ஏற்பட்டன. பன்னெடுங்காலத்துக்கு முன்பு, சாதாரண மனிதனின் தேவைகள் மிகக் குறைவு. 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்' என்ற ஒளவையார் மொழிக்கேற்ப, அவர்களின் தேவை சிக்கனமாக இருந்தது. போதுமென்ற மனமும் அவர்களிடம் இருந்தது. எனவே, பெரிதாகப் பிரச்னைகள் ஏதுமில்லாதிருந்தது. ஆனால், இன்றைய மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள், வசதிகள், ஆடம்பரம் ஆகிய மூன்றையும் பூர்த்தி செய்துகொள்ளும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. எது தேவை, எது வசதி, எது ஆடம்பரம் என்பது அவரவர் பொருளாதாரத் தரம் பற்றியதாக உள்ளது.

பரம ஏழை, ஏழை, நடுத்தர மக்களில் கீழ்த்தரம், மேல்தரம் என்ற பிரிவு, உயர்தர வகையில் சிறிய பணக்காரன் பெரிய பணக்காரன் என்றெல்லாம் பிரிக்கப்பட்ட நிலைகளில் வசதி, ஆடம்பரம் ஆகியவை வித்தியாசமான பரிமாணத்தில் உள்ளன. எனவே, இவற்றை அடைய முயலும்போது ஏற்படும் பிரச்னைகளும் வித்தியாசமான பரிமாணத்தில் உள்ளன.

'ஏழை கூழுக்கு அழுகிறான்; பணக்காரன் பாலுக்கு அழுகிறான்' என்று பழமொழி ஒன்று உண்டு. இரண்டு பேரும் அழுகிறார்கள் என்பது உண்மை. இருவருக்கும் பிரச்னைகள் உள்ளன என்பதும் உண்மை.

இன்றைய உலகில் உணவு, உடை, இருப்பிடம் மட்டுமே மனித தேவைகளாக இல்லை. மாசு படிந்த உலகில், நல்ல காற்றுக்குக்கூட விலை கொடுக்க வேண்டியுள்ளது. மினரல் வாட்டர் எனப்படும் சுத்தமான தண்ணீரை விலைக்கு வாங்கவேண்டியிருக்கிறது.

உணவு என்று எடுத்துக்கொண்டால், எதைச் சாப்பிடுவது, எதைச் சாப்பிடக் கூடாது என்று தெரியாமல், வித்தியாசமான உணவுகளைச் சாப்பிடுகிற வழக்கம் வந்துவிட்டது. அதன் பின்விளைவு தெரிந்த பின்பு உடம்பு இளைக்க டயட் இருப்பது, உடற்பயிற்சிக் கூடங்களை நாடுவது, உடற்பயிற்சிக் கருவிகளை வாங்குவதெல்லாம் அவசியத் தேவையாகி விடுகின்றன. இதற்கான நேரம், செலவு, அதனால் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவை தவிர்க்கமுடியாததாகி விடுகின்றன.

இன்றைக்கு லேட்டஸ்ட் ஃபேஷன் என்று எடுத்து உடுத்துகின்ற ஆடைகள் அடுத்த மாதமே பழைய நாகரிகம் என்று கழிக்கப்படு கின்றன. சவரன் 23,000 ரூபாய்க்கு வந்தாலும், நகை வாங்கும் நாட்டம் குறையவில்லை. இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வரும்? அதுதான் பிரச்னை.

அடுத்தது, வீடு. எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும்; அப்போதுதான் சமுதாய அந்தஸ்து கிடைக்கும் என்ற ஒரு எண்ணம் எல்லோருக்குமே உண்டு.

கவர்ச்சியாக வரும் வீட்டு விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, தவணை முறையில் வீடு வாங்கும் அயராத முயற்சியும், விலை குறைவாகக் கிடைக்கும் என ஆசைப்பட்டு அலுவலகத்துக்கு 60 கி.மீ. தூரத்தில்கூட சொந்த வீடு வாங்கும் ஆசையும் பலரிடம் தலைதூக்கி நிற்கிறது.

கணவனும் மனைவியும், ஏன்... மகனும் மகளும்கூட வேலை செய்து வீட்டுக் கடனுக் கான தவணைப் பணம் கட்டவேண்டிய நிர்பந்தமாகிவிட்ட காலக் கொடுமை இன்றைக்கு!

இன்று, தினமும் அலுவலகம் செல்ல பஸ், ரயில் கட்டணம், மற்றும் பிரயாணத்துக்காகிற காலம் ஆகியவை மாறிவிட்டன.  அதற்காக வாங்கும் கார், மோட்டார் சைக்கிள் வாகனத் துக்கான செலவுகள் வேறு!

தூக்கமின்மை, உடல் நலக்குறைவு, அதற்காகும் மருத்துவச் செலவுகள்... இப்படி அடுக்கடுக்காகப் பிரச்னைகள்!

வாழ்க்கை என்பது வியாபாரம். அதில் எதை இழந்து, எதைப் பெறுகிறோம் என்பதை அறிந்துகொண்டால், தெளிவு ஏற்படும்; பல பிரச்னைகள் தீர்ந்துவிடும்.


ஒரு விவாதம் உருப்படியா இருக்கணும்னா அதற்கு 'ஓபன் மைண்ட்’ தேவை

ன்று அந்த ஹோட்டலில் அதிசயத்திலும் அதிசயமாக கூட்டம் குறைவாக இருந்தது.

''டிபன் ஏதாவது வேணுமா? அல்லது காபி போதுமா?'' என்று நண்பனைக் கேட்டேன்.

அவன் மௌனமாக இருந்தான். அவன் எதையோ யோசிப்பதும், எரிச்சலில் இருப்பதும் அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

''என்ன சாப்பிடறே... பூரியா, சப்பாத்தியா?''

''சப்பாத்தி'' என்று முணுமுணுத்தான்.

''எனக்கென்னவோ பூரியே சொல்லலாம்னு தோணுது.   ​பூரி சூடா இருக்கும்; சப்பாத்தியை ஏற்கெனவே செஞ்சு வெச்சுடறாங்க. ஆர்டர் வரும்போது அதை மைக்ரோஅவனில் வெச்சுத் தர்றாங்க. தவிர, இங்கே குருமாவும் ரொம்ப சுமாராத்தான் இருக்கும்...'' என்று நான் சொல்லிக் கொண்டிருக்க, சட்டென்று குறுக்கிட்டு...

''சரி... சரி! நீதான் விவாதத்துல ஜெயிச்சே!உன் இஷ்டப்படியே ஆர்டர் செய்!'' என்றான்.

எனக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. 'நான் ஆலோசனைதானே சொன்னேன்! இதில், விவாதமும் வெற்றியும் எங்கே வந்தது?' என்று குழம்பினேன்.

பிறகு சர்வரை அழைத்து, ''ஒரு பிளேட் பூரி, ஒரு பிளேட் சப்பாத்தி'' என்று கூறி அனுப்பிவிட்டு, நண்பனிடம் திரும்பி, ''என்ன ஆச்சு உனக்கு?'' என்றேன்.

உடனடியாக பதிலேதும் சொல்லாமல் மௌனித்து இருந்தவன், சில நிமிடங்கள் கழித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, தன் கோபத்தின் பின்னணியை விளக்கினான்.  

''என் அலுவலகத்திலே எங்க பிரிவிலேயே என்னை மாதிரி இன்னொரு ஆபீசரும் இருக்கான். எதுக்கெடுத்தாலும் விவாதம். ஒவ்வொரு விவாதமும் முழுசா பத்து நிமிஷமாவது நடக்கும். ரொம்ப மேதாவின்னு நினைப்பு. புதுசு புதுசா எதையாவது சொல்லிக்கிட்டிருப்பான்...''

நான் குறுக்கிட்டு, ''ஒவ்வொரு முறையும் விவாதத்துலே அவன்தான் ஜெயிக்கிறானோ?'' என்று கேட்டேன்.

முகம் சிறுத்துப் போய்  தலைகுனிந்து அமர்ந்திருந்த நண்பன் இந்தக் கேள் விக்குப் பதில் அளிக்கவில்லை.  

''ஆக, உன் பிரச்னை அவன் விவாதம் செய்வது அல்ல. அந்த விவாதங்களில் நீ தோற்றுவிடுவதுதான். சரியா?''

''தொடர்ந்து விவாதத்திலே தோத்துக்கிட்டிருந்தா நீ மட்டும் எரிச்சல்படமாட்டியா?'' என்று கேட்டான்.

''நண்பா, விவாதத்தில் உண்டாகக்கூடிய பிரச்னை இதுதான். அவரவரும் தன் தரப்பை நியாயப்படுத்தத்தான் முயற்சிப்பார்கள். எதிர்த்தரப்பை பலவீனமாக்க வேண்டும் என்று பார்ப்பார்கள். தங்கள் தரப்பில் உள்ள தவறு தெரியாது!''

இதற்குள் சிற்றுண்டிகள் வந்து விட, சாப்பிடத் தொடங்கினோம். ''குருமா அவ்வளவு நல்லால்லே!'' என்றவன் சட்டென்று வெட்கப் பட்டவனாக, ''நீ முதல்லயே சொன்னேல்ல?'' என்றான்.

''அதை விடு! பூரியை நாம ஷேர் செய்துக்கலாம். ஆனால், அதைவிட முக்கியமாக, ஒரு புராண சம்பவத்தை உன்னிடம் ஷேர் செய்துக்கணும்'' என்றேன்.  

*****

ஸ்ரீமத்வர் த்வைத சித்தாந்தத்தை நாடு முழுவதும் பரப்பியவர். அவர் பத்ரிகாஸ்ரமத்துக்குச் சென்று விட்டுத் திரும்பும்போது கோதாவரி நதிக்கரை வழியாக வந்துகொண்டிருந்தார். அவருக்கு அழைப்பு விடுத்தார் ஸோபான பட்டர். ராஜமகேந்திரம் என்ற பகுதியை ஆண்ட மன்னனின் அரண்மனையை அலங்கரித்த பேரறிஞர் அவர். வாதிடுவதில் சூரர். கலைமகள் அவர் நாவில் குடிகொண்டிருந்தாள். அவரது வாதத்துக்கு எதிராக, எதிராளியால் ஒரு கட்டத்தில் எதுவுமே பேச முடியாமல் போய்விடும்.

அந்த நாட்டு மன்னனுக்கு, ஸோபான பட்டரின் புலமைமீது தனி மதிப்பும், தனது நாட்டைச் சேர்ந்த அறிஞர் இவர் என்பதில் ஒருவித கர்வமும் உண்டு. அதனால் அவன் தவறாமல் ஒரு செயலை செய்யத் தொடங்கினான். அதாவது, பிற நாட்டு அறிஞர்கள் யார் வந்தாலும், ஸோபான பட்டரை அவருடன் வாதிடச் செய்வான். ஒவ்வொரு முறையும் ஸோபான பட்டர்தான் வாதத்தில் ஜெயிப்பார். தோற்கும் அறிஞர் தனது நாட்டுக்குச் சென்றவுடன், ராஜமகேந்திர நாட்டு அறிஞரைப் பற்றி உயர்த்திக் கூறுவார்.

இவ்வளவு பெருமைகள் வாய்ந்த ​ஸோபான பட்டர்தான் மத்வருக்கு அழைப்பு விடுத்தார். விருந்து உண்ணத் தான் அந்த அழைப்பு என்றாலும், இதுபற்றிக் கேட்ட மன்னன், உடனே தனது வழக்கப்படி விவாதத்துக்கு ஏற்பாடு செய்தான்.

''மன்னா, இதுவரை நான் வாதிட்ட அறிஞர்களைவிட மத்வரிடம் அதிக ஞான ஒளியைப் பார்க்கிறேன். அவரை வெல்வது கடினம் என்று தோன்றுகிறது'' என்றார் ஸோபான பட்டர். ''அதனால் என்ன... வேதம் பயின்ற இன்னும் சில அறிஞர்களையும் உங்களுக்கு ஆதரவாக வாதிட அனுப்புகிறேன்'' என்று கூறி, அப்படியே ஏற்பாடு செய்தான் மன்னன்.  

வாதம் தொடங்கியது. எதிர்பார்த்தபடி மத்வரே வென்றார். ஸோபான பட்டர் வருத்தப்படுவதற்கு மாறாக, மகிழ்ச்சி அடைந்தார். எதிரி வெல்லும்போது மகிழ்ச்சியா என்று கேட்டால், ஸோபான பட்டரைப் பொறுத்தவரை, அவருக்கு அது அளவில்லாத ஆனந்தம் தந்த அனுபவமாகத்தான் அமைந்தது. அவர் கேட்ட எந்த கேள்விக்கும் தகுந்த பதிலோடு போதிய விளக்கத்தையும் மத்வர் அளித்திட, ஸோபான பட்டரால் பல புதிய விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது.

வாதம் முடிந்ததும், மத்வரைப் பணிந்து வணங்கிய ஸோபான பட்டர்,''என்னை உங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள், ஸ்வாமி!'' என்று வேண்டினார். ஸோபான பட்டரின் அறிவாற்றலையும் பணிவையும் கண்ட மத்வர், அவரைத் தன் சீடராக ஏற்றார். அங்கு சில காலம் தங்கி, அவருக்கு பிரம்ம சூத்திரத்தின் பொருளை விளக்கினார். பின்னர், சந்நியாசிகள் ஒரே இடத்தில் தங்கக்கூடாது என்ற இலக்கணத்துக்கு ஏற்ப, அங்கிருந்து கிளம்பினார் மத்வர்.

ஸோபான பட்டரால் மத்வரைப் பிரிந்து அதிக காலம் இருக்க முடியவில்லை. நேரே உடுப்பிக்குச் சென்றார். தான் அங்கேயே தங்க ஆசைப்படுவதாகச் சொன்னார். மத்வரும் ஏற்றுக்கொள்ள, தன் எஞ்சிய வாழ்நாளை உடுப்பியில் கழித்தார் ஸோபான பட்டர்.

*****

''விவாதம் என்பது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால், சம்பந்தப்பட்ட இரு வருக்கும் கொஞ்சம் மனப்பக்குவம் வேண்டும்.

வாதம் செய்யும்போது நம்முடைய பேச்சுத் திறமையும், தகவல் பரிமாற்றத் திறமையும் சிறப்பாகும். நம் தரப்பை எதிராளியிடம் கொண்டு சேர்க்க இது அவசியம்.

ஆனால், நாம் அந்த விவாதப் பொருளின் ஒரு பக்கத்தை மட்டுமே அறிந்திருப்போம். விவாதத்தின் போது இன்னொரு பக்கத்தையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. அது மட்டுமல்ல... எதிராளி விவாதிப்பதைக் கொண்டு அவரது தரத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.

ஆக, ஒரு விவாதம் உருப்படியா இருக்கணும்னா அதற்கு 'ஓபன் மைண்ட்' தேவை!'' என்றேன்.

''மனசிலே இருப்பதை மறைக் காம பேசணும்கறியா?'' என்றான்.

''ஓபன் மைண்ட் என்பதற்கு இது அர்த்தமில்லை. எதிராளியின் கருத்து சரின்னு பட்டா, அதைத் திறந்த மனத்தோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேணும். அதைத்தான் ஓபன் மைண்டோடு இருப்பதுன்னு சொல்வாங்க. நீ வேறொரு ஆபீசரிடம் அடிக்கடி விவாதம் செய்வதா சொல்றியே... அவர் சொல்லும் கருத்துக்களை உன்னால் திறந்த மனத்தோடு பரிசீலிக்க முடிகிறதா? உண்மையைச் சொல்!'' என்று கேட்டேன்.

சில நிமிடங்கள் அமைதியாகக் கழிந்தன.  பிறகு, ''புரியுது. அவர் சொன்னதிலேயும் சில நல்ல கருத்துக்கள் இருக்கு'' என்றான்.

இனி, அவன் எதிர்கொள்ளும் விவாதங்கள் அவனுக்கு எரிச்சல் மூட்டாமல் இருப்பதோடு, சுவாரஸ்யமானதாகவும் விளங்கும் என்பது நிச்சயம்.

திருமாங்கல்ய தங்கத்தை வேறு ஆபரணங்களுக்கு பயன்படுத்தலாமா? - சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

திருமணத்தில் திருமாங்கல்யதாரணம் உண்டு. அறுபதாம் கல்யாணத்திலும், சதாபிஷேகத்திலும் தாலி கட்டுவது உண்டு. வாழ்வாங்கு வாழ்ந்து, அவள் சுமங்கலியாக இயற்கை எய்திய பிறகு, அந்தத் தாலியை என்ன செய்வது என்ற கேள்வி சிலரிடம் எழும். அதை உருக்கி வேறு அணிகலனாக மாற்றி, மற்றவர்கள் அணியலாமா?

ஒருத்தி அணிந்திருந்த தாலியை உருக்கி வேறொரு வடிவில் மாற்றி அணிந்தாலும், பலருக்கு அது மன நெருடலை ஏற்படுத்துமல்லவா? உயிர் பிரியும்வரை கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலியை உருக்குலைக்கலாமா?

ஒருத்தி அணிந்திருந்த தாலி உருமாறிவிட்டாலும்கூட, அவள் கணவன் அவளுக்குக் கட்டிய அந்தத் தாலியை வேறொருத்தி எப்படி அணிவது? அதற்கு அவளின் மனம் ஒப்புமா? ஒருவர் பயன்படுத்திய ஆடைகளை ஏற்பதிலேயே தயக்கம் உண்டு அல்லவா? தங்களின் விளக்கம் தேவை!


ரு தாலி கட்டிய பிறகு, இரண்டாம் தாலி, மூன்றாம் தாலி கட்டிக் கொள்வதில் சுணக்கம் இல்லை. கெட்டிமேளத்துடன் திருமணத்தில் முதல்முறையாகக் கட்டப்பட்ட தாலியானது, 60 வருடங்களுக்குப் பிறகு செயலிழந்துவிட்டதா? அதேபோன்று, சதாபிஷேகத்திலும் புதிதாக ஒரு தாலி கட்டுகிறோமே... எனில், 60-ல் கட்டிய தாலி செயலிழந்துவிட்டதா?

விவாகரத்தைச் சந்திக்கும் பெண்மை, முதல் தாலியை எளிதில் கழற்றி எறிந்துவிட்டு, புதுக் கணவனிடம் இருந்து புதுத் தாலியை ஏற்கும். நாடகம், பெரிய திரை, சின்னத் திரையில் நடிக்கும் பெண் கதாபாத்திரங்கள், கணவன் கட்டிய தாலியைக் கழற்றி வைப்பது உண்டு. திருமணக் காட்சியில் கதாநாயகன் தாலி அணிவிப்பான்; கல்யாணமாகிவிட்ட அந்தக் கதாநாயகியின் கழுத்தில் அவளது தாலி இருக்காது. எல்லாம் நடிப்புக்காக. அதேபோல், குளியலறை

யில் தாலியை மறந்துவிட்டுப் போவதுபோன்ற காட்சிகள் சின்னத் திரை தொடர்களில் உண்டு. புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக, கட்டிய தாலியைக் கழற்றிக் கணவனிடம் அளிக்கும் அவலத்தையும் நாம் கண்டுகளித்திருக்கிறோமே!

?அதற்காக நாமும் திருமாங்கல்யத்தை சாதாரண ஆபரணமாகக் கையாள்வதா?

அப்படிக் கருதவேண்டியது இல்லை!

தாலி பெண்மைக்கு வேலி என்று போற்றுவதும் உண்டு; அதுவே பெண்மையை அடிமையாக்கும் கருவி என்று தூற்றுவதும் உண்டு.  தாலி என்பது பெண்மையை ஆண்மை அடக்கியாள்வதற்கான சின்னமாகச் சித்திரிக்கும், புரட்சி எண்ணம் கொண்ட பெண்மையும் உண்டு. பெண்மையின் பாதுகாப்புக்காக ஏங்கும் சீர்திருத்தவாதிகள் பலரும் சொற்பொழிவில் அனல்பறக்க சமுதாயத்தைச் சாடுவது உண்டு. 'ஆண் கழுத்தில் பெண் தாலி கட்டட்டுமே? செல்லப் பிராணிகளுக்குத்தான் கழுத்தில் சங்கிலி கட்டுவார்கள். அதுபோல், பெருமைக்கு உரிய பெண்மையை இழுக்காகப் பார்க்கவைக்கிறது  தாலி. அடிமைக் கயிறாக விளங்குகிறது அது' என்பது போன்ற தமது வாதங்களை அவர்கள் எடுத்துரைப்பார்கள்.

கணவனை தெய்வமாக மதிக்கும் எண்ணம் ஒரு காலத்தில் இருந்தது. மணாளனே மங்கையின் பாக்கியம், கணவனே கண்கண்ட தெய்வம், கற்புக்கரசி, பானை பிடித்தவள் பாக்கியசாலி போன்ற பெரிய திரைக்கதை தலைப்புகள் எல்லாம் கணவனை மதிக்கும் பெண்கள் இருந்ததற்கு அத்தாட்சி! தாலி பாக்கியம் கணவனை சிரஞ்சீவியாக்கும் என்ற நம்பிக்கை ஆழமாக இருந்தது.

? தாங்கள் சொல்வது போன்று வேறுபட்ட கருத்துகளும் நம்பிக்கைகளும் தாலி விஷயத்தில் மட்டுமல்ல, எல்லா விஷயங்களிலும்தான் உண்டே?

உண்டுதான். ஆனாலும், திருமாங்கல்யம் மிக உன்னதமானது என்பதால், அதுகுறித்த கருத்துப் பரிமாற்றங்களும் முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன.

கணவன் நீண்ட நாள் வாழ்ந்து பெண்மைக்குப் பெருமை சேர்க்கவைக்கும் தகுதி தாலிக்கு உண்டு. இக்கட்டான சூழலில் தாலி பாக்கியம் கணவனைக் காப்பாற்றிற்று என்று ஜோதிடம் சொல்லும். தெரிந்தோ தெரியாமலோ ஒரு ஆண், பெண்ணின் கழுத்தில் தாலியை அணிவித்தால், அந்த நொடியில் இருந்து இருவரும் கணவன்- மனைவியாக மாறி, தாலிக்குப் பெருமை சேர்த்த காலமும் இருந்தது. கழுத்தில் தாலியைப் பார்த்தால் கயவர்களும் அவளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்காமல், விலகுவார்கள். தாலியை ஒரு பெண்ணின் கழுத்தில் பார்த்தால் எந்தவொரு ஆணும் அவளைத் தாயாக நினைப்பான்; தாசியாக எண்ணமாட்டான். அவள் மீது பக்தியும் பணிவும் வரும். கழுத்துச் சங்கிலியைத் திருடும் திருடன்கூட, தாலியைத் திருடுவதற்குத் தயங்குவான். ஆக, அவனது கண்ணுக்கும் தாலி உயர்ந்ததாகப் படும். ஆக, பண்பைப் புகட்டும் சின்னமாக இருந்தது அது.

தாலியைக் கோத்த நூல் நைந்து போனால், புது நூலில் அதை இணைத்து கட்டிக்கொள்வ துண்டு. மூட நம்பிக்கை என்று வாய் கிழியப் பேசும் சீர்திருத்தவாதிகளும், தங்கள் கையால் தாலியைக் கொடுத்துக் கட்டவைப்பதை, முழுத் திருமணமக ஏற்று மகிழ்ந்தவர்களும் உண்டு.

துரதிர்ஷ்டவசமாக முதல் மனைவியை இழந்த ஒருவன், 2-ம் தாரத்துக்கு முதல் மனைவியின் தாலியை அணிவிப்பதும் உண்டு. அவன் தங்கத்தைத் தாலியாகப் பார்த்தான். பொங்கி வழியும் பொருளாதாரத்தில் திளைத்த இன்றைய புது சிந்தனையாளர்களோ, தாலியைத் தங்கமாகப் பார்க்கிறார்கள். அதனால்தான் புது மனைவிக்கு புதுத் தங்கத்தை அணிவிக்கிறார்கள்.

? அது சரி! தாலிக்கு ஏன் தங்கத்தைப் பயன்படுத்த வேண்டும்? அதனால்தானே, அதை மீண்டும் எப்படி பயன்படுத்துவது என்ற கேள்வியும் தயக்கமும் ஏற்படுகிறது?

தங்கம் என்பது மங்கலப் பொருள். அது, தாலி வடிவில் பெண்மைக்கு அணிகலனாக மட்டுமில்லாமல், விவரிக்க இயலாத உயர்வை அளிக்கிறது. தங்கம் தூய்மையானது; மருத்துவ குணம் உடையது; அழகை இரட்டிப்பாக்குகிறது; என்றும் வாடாத, மங்காத பொருள் அது. பெண்மை வாடாமலும் வதங்காமலும் மங்காமலும் இருக்கவேண்டும் என்ற வாழ்த்தின் பிரதிபலிப்பு அது. எதை வைத்தும் குறையைச் சொல்ல இயலாது. எதன் சேர்க்கையிலும் அது தனது தரத்தை இழக்காது. எதன் தொடர்பும் அதில் ஒட்டாது.

இறந்த பிறகு தாலியின் தொடர்பு அற்று விடும். இல்லாத தொடர்பை  நம் மனம் ஒட்ட வைத்து, அதன் காரணமாக அதை மாற்றுவதிலோ அணிவதிலோ சுணக்கம் காட்டுவது அறியாமை. சிறு வயதில் கட்டிய தாலி 60-வது வயதில் தூசுபடிந்து மங்கினாலும், நெருப்பில் போட்டவுடன் தூசி அகன்று, சிறு வயதில் கட்டிய தோற்றத்தோடு மிளிரும். தாலியில் மாசு ஒட்டாது. மாசு படிந்ததாகப் பார்ப்பது நம் மனத்தின் குறைபாடே!

? எனில், தாலியாக பயன்படுத்தப்பட்ட ஆபரணத்தை வேறொரு ஆபரணமாக மாற்றி அணியலாம் என்கிறீர்களா?

கணவனை இழந்த பெண்மணி முதுமையை எட்டிய பிறகு, தனது தாலியை பேரன், பேத்திகளுக்கு அலங்காரமாக மாற்றி அணிவித்து மகிழ்வது உண்டு. தங்கம் விருப்பத்துக்கு இணங்க  மாறும் இயல்பை உடையதாக இருப்பதால், அதை நெருப்பின் உதவியுடன் வேறொரு அணிகலனாக மாற்றி, மற்றவர்களுக்கு அணிவிப்பது சிறப்பு. ஆக, இல்லாத தொடர்பை வலுக்கட்டாயமாக இருப்பதாகச் சித்தரித்து, இறந்தவரின் தொடர்பை தங்கத்தோடு சேர்த்துப் பார்த்து ஏற்க மறுப்பதுதான் மூடநம்பிக்கை. ஆகையால், தாலியாகத் தோற்றம் அளிக்கும் தங்கத்தை வேறு அணிகலனாக மாற்றுவது தகும்.

தங்களது வாதம் அரங்கேறாது. இல்லாத சிறப்பைப் பொருளில் ஏற்றுவது பொருந்தாது.

விவாகரத்தைச் சந்தித்த பெண்ணொருத்தி புதிய கணவனைத் தேர்ந்தெடுக்கிறாள். (தர்ம சாஸ்திரம் ஏற்காதபோதிலும் நடைமுறையில் நிறைய தென்படுகிறது) தற்போது, அவர்கள் இருவரும் புதியவர்கள். எனவே, திருமாங்கல்யமும் புதிதாக இருப்பது சிறப்பு. பழைய கணவன் கட்டிய தாலியைப் புதுக் கணவன் கட்டுவது, பழைய கணவனை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும். அதுவும் தவிர, புதிய கணவன் புதிய தாலியை அணித்து அவளை மனைவியாக்குவதே சிறப்பு. பழையதைத் துறந்து புதியதை ஏற்பதால், மனம் புதுத் தாம்பத்தியத்தில் இறுக்கமாக இணையும். எதிலும் பழையதைக் களைந்து புதியதை ஏற்பதே மனத்தின் இயல்பு. இறந்த மனைவியுடன் தாலியின் இணைப்பு ஒருநாளும் மறையாது. தாய்- தந்தை மறைந்த பிறகும் அவர்களது தொடர்பு பிள்ளைகள் மனத்தில் பசுமையாக இருந்துகொண்டிருக்கும். பழையன கழித்து புதியன ஏற்பதை ஒரு கொண்டாட்டமாக நடைமுறைப்படுத்துவது உண்டு. அதன் வெளிப்பாடு போகிப் பண்டிகை.

அண்ணல் காந்தி பயன்படுத்திய அத்தனைப் பொருட்களையும் அருங்காட்சியகத்தில் வைத்து, அவர் நினைவாக உருக்குலையாமல் காப்பாற்றி வருகிறோம். பூஜைக்குப் பயன்படுத்திய பிள்ளையார் திருவுருவத்தை யாரும் பயன் படுத்தாமல் இருக்க நீரில் கரைப்பது உண்டு. திருமாங்கல்யத்தை உருமாற்றி மற்றவர்கள் அணிகலனாக அணியும்போது, அதன் மூலம் இறந்தவர் குறித்த ஞாபகம் மறையாமல் இருக்கும். அது மன நெருடலுக்குக் காரணமாகி முழு மகிழ்ச்சியை எட்டவிடாமல் செய்துவிடும்.

? சரிதான்! அதற்காக, பழையனவற்றை அப்படியே பொக்கிஷமாகப் பாதுகாத்துக் கொண்டிருந்தால், அதன் பயன்பாடு அற்றுப் போகுமே?

தாலியை வேறொன்றாகப் பயன்படுத்தும்போது பழைய ஞாபகங்கள் புதிய வாழ்க்கையில் குறுக்கிடும் என்று சொல்ல வருகிறோம். பழைய மனைவியின் உருவம் சித்திர வடிவில் சுவரில் தொங்கிக்கொண்டிருந்தால், அது புதுத் தம்பதிக்கு இடையூறாக இருக்காதா? மனநெருடலை உண்டாக்கும் அல்லவா? எனவே, திருமாங்கல்யத்தை அழித்து அணிகலனாக மாற்றுவது சிறப்பு அல்ல. அது, அக்னி சாட்சியாக உயர்ந்த சிந்தனையில் கட்டப்பட்ட தாலியின் கௌரவத்தைச் சிதைப்பதாகும். புதுப் பூணூல், புதுத் தாலிக் கயிறு ஆகிய வற்றை ஏற்கும்போது, பழைய பூணூல், தாலிக்கயிற்றை நீரில் சேர்ப்பது உண்டு. அந்தப் பூணூலையும் தாலிக்கயிற்றையும் மற்றவர்கள் பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டு, அதன் சிறப்பு சிதையக்கூடாது என்று எண்ணுவோம்.

கோயிலில் இருக்கும் இறையுருவம் பின்னமானால், அதைத் துறந்து புது இறையுருவத்தை ஏற்போம். ஆனால், பின்னமான இறையுருவத்தைச் சிதைப்பதில்லை; வேறொரு பொருளாகவும் மாற்றிப் பயன்படுத்துவதில்லை. அதன் கௌரவம் சிதையாமல் இருக்க அதைப் பாதுகாப்பது உண்டு. இறையுருவத்தை இறைவனாகப் பார்ப்போம்; சிலையாகப் பார்ப்பதில்லை. தங்கத்தைத் தாலியாகப் பார்ப்போம். அதன் கௌரவத்தைச் சிதைப்பதில் மனம் விரும்பாது. மனம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையோடு செயல்படுவோம். பின்னமான இறையுருவச் சிலையை வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தும் எண்ணம் மனத்தில் தோன்றினால், இறையுருவத்தில் பக்தி கழன்றுவிடும். ஆகையால், அதை கர்ப்பகிருஹத்தில் வைத்துக் காப்பாற்றுவதும் உண்டு. பூத உடலை எரிக்கிறோம். ஏனெனில், அதை மற்ற உயிரினங்கள் உணவாகப் பயன்படுத்தக் கூடாது என்கிற நோக்கில் எழுந்தது அது.

ஐம்பெரும் பூதங்களில் தங்கம் 'தேஜஸ்' பூதத்தில் அடங்கும் (சுவர்ணம் தைஜஸம்). 'தப்பான எண்ணத்துடன் பிறரது மனைவியை அணுகினால், நெருப்பு உன்னைப் பொசுக்கிவிடும்' என்ற சாபம் ராவணனுக்கு இருந்ததாகத் தகவல் உண்டு. தாலி வடிவில் கழுத்தில் தொங்கும் 'தேஜஸ்' அதாவது நெருப்பு அவனை அழித்து, அவளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது என்று பொருள்.

புதுப்புது வடிவங்களில் அணிகலன்கள் அங்காடிகளில் வளைய வரும் இன்னாளிலும், தாலியின் தனி வடிவம், அன்றும் இன்றும் என்றும் மாறாமல் இருப்பது, அதன் தனித்தன்மைக்குச் சான்று. நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து தங்கம் தாலி வடிவத்தில் மாறும். நல்ல முகூர்த்தத்தில் வேத மந்திர ஒலியோடு இணைந்து பெண்ணின் கழுத்தில் ஏறும். மூச்சுக்காற்று இருக்கும் வரை, அது இடம் மாறாது. அறத்தின் மறு உருவமாக மாறிய தாலியை அணிகலனாகப் பார்ப்பதும், அதை உருமாற்றி அதன் தரத்தைத் தாழ்த்துவதும் நல்ல நடைமுறை ஆகாது. அது மன நெருடலை ஏற்படுத்தி, மன அமைதியையும் குலைக்கும். எனவே, அதைச் சிதைக்காமல் பாதுகாப்பதே சிறப்பு.

தங்கள் சிந்தனை பாமரத்தனமானது பெருமையை அளவு கடந்து மிகைப்படுத்தி விளக்கும் செயல்பாடு சிந்தனையாளர்களை ஈர்க்காது. உண்மையும் ஆகாது.

உடலிலிருந்து உயிர் வெளியேறியதும், அவளிடம் இணைந்த பொருட்கள் அத்தனை யும் விடுபட்டுவிடும். தாலியின் தனித்தன்மையும் கழன்று, வெறும் தங்கமாக மாறிவிடும். பூத உடலில் இருக்கும் அணிகலன்களைக் கழற்றும்போது, தாலியையும் அணிகலனாக எண்ணியே கழற்றுவார்கள். அதன்பிறகு, தாலியை தாலியாகப் பார்க்காமல், தங்கமாகப்

பார்க்கும் நிலையில், அதை அணிகலனாக மாற்றுவதில் தடை ஏதும் இராது.

? எனில், பொருளின் தராதரமும் மகத்துவமும் மனத்தைப் பொறுத்ததே என்று சொல்ல வருகிறீர்களா?

மிகச் சரியாகச் சொன்னீர்கள். எந்தப் பொருளிலும் உயர்வு- தாழ்வைப் பார்ப்பது மனம். பொருளில் இரண்டும் இல்லை.

தேசியக்கொடியின் உயர்வை நம் மனம் பார்க்கும். கொடி துணியால் ஆனது. அதில் உயர்வு இல்லை. மனம்தான் உயர்வைப் பார்க்கும். உண்டியலில் சேரும் அணிகலன்கள் (அதில் தாலியும் உண்டு) ஈசனின் காணிக்கைப் பொருளாக மாறிவிடும். அதை பல பொருட் களாக மாற்றுவதில் மனம் தயங் காது. கும்பத்தில் சேமித்த நீர் மந்திர ஒலியில் இணைந்து பெருமை பெற்று, இறையுருவுக்கு அபிஷேகிக்கும் வேளையில் இறை சாந்நித்தியத்தை உருவாக்கும். அதன் பிறகு அந்த நீர் பொதுமக்களுக்கு விநியோகமாகும் தறுவாயில், நீராக எண்ணிப் பருகுகிறோம்.

கடவுளுக்குப் படைக்கும் தனித் தன்மை பெற்ற நைவேத்தியமானது, அவர் ஏற்றுக்கொண்ட பிறகு உணவுப் பொருளாக மாறி, அத்தனை பேருக்கும் விநியோகிக்கப்படுகிறது. அது அங்காடியில் இடம்பிடித்ததும் விலைச் சரக்காக மாறி விடுகிறது. மந்திரத்தோடு இறையுருவத்தில் சேர்த்த புஷ்பங்கள், மறுநாள் நிர்மால்யமாக மாற, கழிவுப்பொருளாக அதை விலக்குவோம். முதல்நாள் அர்ச்சனையில் அந்தப் புஷ்பத்தில் பெருமையைப் பார்த்த மனம், மறுநாள் பெருமையை விலக்கிக்கொள்ளும்.

? ஆக, பழைமைக்குப் பெருமை இல்லை என்று தீர்மானித்துவிட்டீர்களா?!

அப்படியில்லை. எதற்கும் பயனற்றதாகச் செய்து பாழாக்கிவிடவேண்டாம் என்று சொல்ல வருகிறேன்.  தாலியை உருக்குலையாமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற மனநிலை வலுத்தால், அதைப் பாதுகாக்க தனி நிறுவனம் தேவைப்படும். அதற்காகச் செல்வத்தின் ஒரு பங்கை ஒதுக்கவேண்டும். ஒரு பயனும் இல்லாமல் பாதுகாப்பது வீண் வேலையாக மாறிவிடும். பலருக்குப் பயன்படும் பொருளைப் பயன் படாதவாறு பாதுகாப்பது அறியாமையின் வெளிப்பாடு. தாலிக்கு மட்டும் பயன்படும் பொருள் அல்ல தங்கம். அது, பொருளாதாரத்தின் ஸ்திரத் தன்மையைக் காப்பாற்றும் பொருளாகவும் விளங்குகிறது. அலங்காரப் பொருளாகவும் தென்படுகிறது. பொருளாதாரத்தின் சரிவைச் சரிக்கட்ட தங்கம் கை கொடுக்கும். ஆகவே, பல முனைகளில் பயன்படும் தங்கத்தை, தாலி என்ற போர்வையில் உருக்குலைக்க மனமில்லாமல், அப்படியே பாதுகாக்க முனைவது, பகுத்தறிவுக் குப் பொருந்தாது. 'அப்பா... அப்பா' என்று  உருகும் தனயன், அவரது உயிர் பிரிந்ததும் உடலைச் சிதையில் சேர்ப்பான். 'அப்பா' என்ற எண்ணத்தில் பாதுகாக்க விரும்பினால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுத் திணறுவோம். எனவே, இறந்த பிறகு தாலியை வேறு அணிகலனாகப் பயன்படுத்துவது பொருந்தும்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

படைப்பில் தென்படும் பொருள்கள் அத்தனையும் பல முனைகளில் பயன்படுபவை. அவற்றைக் குறுகிய பயன்பாட்டில் முடக்கிவிட்டால், படைப்பின் தத்துவமே பாழாகிவிடும். அப்பா சம்பாதித்த சொத்து என்று நினைத்து, அவர் இறந்த பிறகு பயன்படுத்தாமல் ஒதுக்குவது இல்லை. பொருளின் பயன்பாடுதான் அளவுகோல்; அதன் தரம் அளவுகோல் அல்ல. தாலியாக உயர்ந்த தங்கத்தை அதன் பயன்பாடு நிறைவு பெற்ற பிறகும், தாலியாகவே எண்ணுவது சிறப்பில்லை.

மாற்றி யோசித்தவர்களே சாதனை புரிந்துள்ளார்கள் - வெ.இறையன்பு

ழக்கமான பாதையில் சென்றால், அது சுற்றுப்பயணம்.  புதிய பாதையில் சென்றால், அது சாகசப்பயணம். அப்போது நாம் பலருக்கு ஒரு புதிய வழியை ஏற்படுத்தித் தருகிறோம்.  

நம்மிடம் வழக்கமாகக் கேட்கப்படும் ஒரு புதிர்க் கேள்வி... 'ஒரு துணி உலர இரண்டு மணி நேரமாகும் என்றால், நூறு துணிகள் காய எவ்வளவு நேரமாகும்?'

சிலர் இரண்டை நூறால் பெருக்கி விடை சொல்லுவார்கள். ஏனென்றால், கணிதத்துக்கு அவர்கள் பழக்கப்பட்டிருக் கிறார்கள். சிலர் இரண்டு மணி நேரம் என்பார்கள். அதுவும்கூட அத்தனை துல்லியமான விடை இல்லை. நூறு துணிகளைக் காயப் போடும்போது, நூறாவது துணியை எப்போது காயப் போடுகிறோமோ அதிலிருந்து இரண்டு மணி நேரம் கணக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் (இதில், காயப்போடுவது என்ன வகையான துணி என்பதெல்லாம் தனி!)

அதைப்போலவே, ஒரு கோட்டை வரைந்துவிட்டு, இதை அழிக்காமல் எப்படிச் சிறிதாக்குவது என்று கேட்பதும் நமக்குப் பழக்கமான கேள்வி. உடனே, அந்தக் கோட்டின் பக்கத்தில் அதனினும் பெரிய கோட்டைப் போட்டுவிட்டு, இந்தக் கோடு சின்ன கோடு என்று சொல்லிவிடுவார்கள்.  

ஒரு புதிய கேள்வி. ஒரு கோடு வரையப்பட்டுள்ளது. அதை நீளப்படுத்தாமலோ, அதன் அருகில் வேறெந்த கோடும் வரையாமலோ, அதை எப்படிப் பெரிதாக்குவது?  

விடை எளிது. வரைபடங்களைப் பார்த்திருக்கலாம். உலக வரைபடத்தை அல்லது இந்திய வரைபடத்தைப் பார்த்தால், அதில் ஒரு மில்லி மீட்டர் எத்தனை கிலோ மீட்டருக்குச் சமம் எனக் கீழே கொடுக்கப்பட்டிருக்கும். அதேபோல, வரையப்பட்டிருக்கும் கோட்டுக்குக் கீழே, ஒரு சென்டி மீட்டர் ஒரு கிலோ மீட்டருக்குச் சமம் என்று குறிப்பு எழுதினால் போதும்; கோடு மிகப் பெரிய கோடாகிவிடும்.

குதிரைகளை நேசிக்கும் மன்னர் ஒருவர், ஓர் ஊருக்குச் சென்றிருந்தார். அங்கே மிகச் சிறந்த மரபைச் சார்ந்த இரண்டு குதிரைகளைப் பார்த்தார். அவற்றில் எது சிறந்த குதிரையோ, அதைத் தன்னுடையதாக்கிக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு விருப்பம்.. எனவே, அந்த இரண்டு குதிரைகளையும் ஓடவைத்து, எது வேகமாக ஓடி, இலக்கை முதலில் எட்டி, பந்தயத்தில் ஜெயிக்கிறதோ, அதையே வாங்க வேண்டும் என்று  தன் மந்திரியிடம் சொன்னார்.  

பந்தயம் தொடங்கியது. என்ன ஆச்சரியம்..! இரண்டு குதிரைகளும் மெள்ள அன்ன நடை நடந்தனவே தவிர, எதுவும் வேகமாக ஓடவில்லை; ஒன்றை ஒன்று முந்தவில்லை. எனவே, பந்தயம் சலிப்பைத் தருவதாக இருந்தது. விசாரித்துப் பார்த்ததில், அந்தக் குதிரைகளுக்குச் சொந்தக்காரர்கள் இருவருமே தங்கள் குதிரையை மிகவும் நேசிப்பதாகவும், பந்தயத்தில் ஜெயித்துவிட்டால் வேறு வழியின்றி மன்னருக்குத் தங்கள் குதிரையை தாரைவார்த்துத் தரவேண்டுமே என்பதால், அவர்கள் தங்கள் குதிரையை மெதுவாகச் செலுத்துகிறார்கள் என்றும் மந்திரிக்குத் தெரிந்தது.

உடனே அவர், ''பந்தயத்தில் ஒரு சின்ன மாற்றம் செய்கிறேன். இவரின் குதிரையை அவர் செலுத்தட்டும்; அவரது குதிரையை இவர் செலுத்தட்டும்!'' என்று உத்தரவிட்டார்.

தனது சொந்த குதிரையை இழந்துவிடக்கூடாது என்கிற அக்கறையோடும் பதைபதைப்போடும் அவர்கள் இருவரும் தாங்கள் சவாரி செய்யும் குதிரையை வேகமாகச் செலுத்துவார்கள் அல்லவா? அப்போது எது நல்ல குதிரை என்பது எளிதில் புலனாகிவிடும் என்பது மந்திரியின் கணக்கு.

இதுபோல, நடைமுறையில் வித்தியாசமாகச் சிந்திப்பது, வெற்றி பெறுவதற்கு அவசியம்!  

சில நேரங்களில் நம் செயல்கள், எதிர்பார்த்த பலனைத் தராமல் போவதுண்டு. காரணம், நாம் நினைக்கிற மாதிரியேதான் மற்றவர்களும் சிந்திப்பார்கள் என்று சொல்ல முடியாது.  

குழந்தைகள் காப்பகம் ஒன்றில், எல்லாக் குழந்தை களையும் சரியாக மாலை 4 மணிக்கு வந்து வீட்டுக்கு அழைத்துக்கொண்டு சென்றுவிடவேண்டும் என்பது விதி. ஆனால், பெற்றோர்களில் சிலர் எப்போதும் தாமதமாகவே வந்தார்கள்.

சரியான நேரத்துக்குள் வந்து அழைத்துச் செல்லாத பெற்றோர்களின் குழந்தைகள் பதற்றம் அடைந்தார்கள். அவர்களைப் பாதுகாப்பாக பெற் றோர்களுடன் அனுப்பும்வரை ஒரு ஆசிரியராவது காத்திருக்கவேண்டிய நிலை. இதனால், அவர் தன் வீட்டுக்குச் செல்வதில் தாமதம்.

காப்பக மையத்தைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து யோசித்தார்கள். தாமதமாக வரும் பெற்றோர்களுக்கு அபராதம் விதிப்பது என்று முடிவெடுத்தார்கள். அதன்படி, பத்து நிமிடங்களுக்கு மேல் தாமதமாக வருபவர் களுக்கு 30 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தார்கள்.

ஆனால், அதன்பின் தாமதமாக வருபவர் களின் எண்ணிக்கை குறைவதற்குப் பதிலாக,

இன்னும் அதிகமாயிற்று. காரணம், '30 ரூபாய்தானே... போனால் போகட்டும்' என்று அரை மணி, முக்கால் மணி நேரம்கூட தாமதமாகத் வரத் தொடங்கினார்கள். எனவே, குழந்தைகள் காப்பக மையம் என்ன எதிர்பார்த்ததோ, அது நிகழவில்லை.  

சில நேரங்களில், ஊக்கத்தொகை எதிர் விளைவுகளை ஏற்படுத்திவிடும். அதிக சம்பளம் கொடுத்தால் அதிக ஊக்கத்துடன் செயல்படுவார்கள் என்று நினைத்தால், அது தவறு. விடுமுறை நாளில் உழைத்தால், ஒரு நாள் உழைப்புக்கு இரண்டு நாளுக்கான ஊதியம் கிடைக்கும் என்றால், சற்றும் தயங்காமல் விடுமுறை நாட்களிலும் உற்சாகத்துடன் வந்து உழைப்பார்கள் என்று பொதுவாக நாம் நினைக்கிறோம். ஆனால், அவர்களோ ஓய்வையே பெரிதாகக் கருதுவார்கள். வாரத்தில் ஐந்து நாட்கள் உழைப்பதற்குப் பதிலாக மூன்று நாள் உழைத்தால் போதும் என்கிற மனப்பான்மைக்கு வந்துவிடுவார்கள். எனவே, சராசரியான கணிதத்தைப் போட்டுப் பார்த்து, எந்தவொரு முடிவுக்கும் நாம் வர முடியாது. வாழ்க்கை, வித்தியாசமான பாடங்களை நமக்குச் சொல்லித் தருகிறது.

வெற்றிகரமான மளிகைக்கடைக்காரர் ஒருவர் இருந்தார்.  அவர் கடையில் தரமான பொருட்களையே விற்பனை செய்ததால், தினமும் அமோக விற்பனை! திடீரென ஒருநாள், அவர் கடைக்கு முன்னால் ஒரு பெரிய கட்டடம் உருவாகத் தொடங்கியது. அங்கே, சூப்பர் மார்க்கெட் வரப்போவதாகத் தெரிந்தது. அது வந்தால், தன்னுடைய வியாபாரம் முற்றிலுமாகப் படுத்துவிடும் என அவர் மிகவும் மனச் சோர்வு அடைந்தார். சூப்பர் மார்க்கெட் வருவதை வெறுத்தார். அது வராது தொலையவேண்டுமே எனப் பிரார்த்தித்தார். இதுகுறித்து, தன்னுடைய குருவைச் சந்தித்து ஆறுதல் பெற எண்ணினார்.

குரு அவரிடம், 'அந்தப் பல்பொருள் அங்காடியை நீ வெறுத்தால், அது உன் வீழ்ச்சியில்தான் முடியும்!' என்றார்.

''அப்படியெனில், நான் என்னதான் செய்ய வேண்டும்?'

'தினமும் காலையில் உன் கடைக்குள் நுழையும்போது, உன் வியாபாரம் செம்மையாக நடக்கவேண்டும் என்று வேண்டிக்கொள். கூடவே, எதிரே இருக்கும் பல்பொருள் அங்காடியும் சிறப்பாக நடக்க வேண்டும் என்று வாழ்த்து!''

'என்னது... என்னுடைய போட்டியாளரை நான் வாழ்த்த வேண்டுமா?' என்று மளிகைக்கடைக்காரர் அதிர்ச்சியுடன் கேட்டார்.

''ஆமாம். எந்த வாழ்த்தும் மீண்டும் உன்னையே வந்தடையும்.  அதேபோல், வெறுப்பும் திரும்பி வந்து உன்னை அழித்துவிடும்' என்றார் குரு.

ஓராண்டு கழிந்தது. மளிகைக்கடைக்காரர் குருவைத் தேடி வந்து, தன் கடையை மூடிவிட்டதாக அறிவித்தார்.  

காரணம் என்ன?

பயப்படும்படியாக எதுவுமில்லை. மகிழ்ச்சியான விஷயம்தான்! மளிகைக்கடைக்காரரே அந்த சூப்பர் மார்க்கெட்டை விலைக்கு வாங்கிவிட்டார்.

வெறுப்பு எப்போதும் அழிவையே அளிக்கவல்லது, வாழ்த்து எப்போதும் நம்மை வாழ வைப்பது என்பதற்கு இந்தக் கதை ஒரு நல்ல உதாரணம். இலக்கியங்களும், ஆன்மிக நூல்களும் நம்மை வெறுப்பிலிருந்து அன்புக்கு அழைத்துச் செல்கின்றன. அழிவிலிருந்து முன்னேற்றத்துக்கு கைப்பிடித்துக் கூட்டிச் செல்கின்றன.  

அறிவியலிலும் மாற்றி யோசித்தவர்களே சாதனை புரிந்துள்ளார்கள். மாற்றி யோசிப்பது என்பது, கணிதத்தைப்போல ஒரே விடையைத் தரக்கூடியது அல்ல! வாழ்க்கை யாருக்கும் பிடிபடாத கணிதம். அங்கு எது விடையாகக் கிடைக்கும் என்பதை யாராலும் கணிக்கமுடியாது. முதலில் வெற்றி பெறுபவர்கள் போல் தோற்றமளிப்பவர்கள், பின்னர் காணாமல் போய்விடுவார்கள். கடையிலே சென்று வாங்குகிறபோது அதிகம் பளபளக்கிற துணிதான் முதலில் பல்லை இளிக்கிறது.

காளான்கள் எப்போதும் ஆல மரத்தைவிட சீக்கிரம் வளர்கின்றன!

Saturday, March 29, 2014

நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்வதுதான் (SWOT) ஸ்வாட் அனாலிசிஸ்.

 என் கல்லூரி நண்பர்கள் இருவர், படித்து முடித்ததும் பிசினஸ் செய்ய ஆரம்பித்தார்கள். இருவருமே படுபுத்திசாலிகள். நல்ல குடும்பப் பின்னணி உண்டு. ஏறக்குறைய ஒரே பிசினஸில்தான் அவர்கள் இருவருமே இறங்கினார்கள்.

படிக்கும்போதுதான், அதிக மார்க் எடுப்பது யார் என்கிற போட்டி இந்த இரண்டுபேருக்கும் நடுவே நடக்கும் என்றால், படித்து முடித்தபிறகு பிசினஸில்கூட யார் ஜெயிப்பது என்கிற போட்டி வந்துவிட்டது. இரண்டுபேரும் முட்டிமோதிக்கொள்ளட்டும் என நானும் என் தொழிலைப் பார்க்கப் போய்விட்டேன்.

அவ்வப்போது இருவரையும் சந்தித்து சில வார்த்தைகள் பேசுவது வழக்கம். ஆனால், அண்மையில் இந்த இருவரையும் தனித்தனியாகச் சந்தித்தபோதுதான் தெரிந்தது, பிசினஸில் ஒருவன் பெரிய வெற்றிகண்டிருந்தான். இன்னொருவன் ரொம்பச் சுமாரான வெற்றிகண்டிருந்தான்.

ஏறக்குறைய சமதிறமை உடைய இந்த ரெண்டுபேரும் எப்படி இருவிதமான நிலையை அடைந்தார்கள் என்று யோசித்தபோதுதான், ஸ்வாட் (SWOT)  அனாலிசிஸின் வெற்றி பற்றி நான் முழுமையாக உணர்ந்தேன்.

ஸ்வாட் அனாலிசிஸ் என்றால் என்னவோ ஏதோ என்று நினைக்காதீர்கள். சிம்பிளாகச் சொல்லவேண்டும் எனில், நம்மை நாமே  சுயபரிசோதனை செய்துகொள்வதுதான் என்று அதைச் சொல்லலாம். நம் பலங்கள், பலவீனங்கள், நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகள், அதை அடைய முடியாமல் இருக்கும் தடைகளை அலசி ஆராய்வதுதான் ஸ்வாட் அனாலிசிஸ்.

நமக்கு இருக்கும் பலங்கள் என்னென்ன?

நான் எதில் சிறந்தவன்?

மற்றவர்கள் என்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார்கள்?

எதைச் செய்யும்போது என் திறமை மற்றவர்கள் பாராட்டுகிற அளவுக்குப் பளிச்சிடுகிறது?

எந்தெந்தத் துறைகளில் என் நிபுணத்துவம் அதிகமாக இருக்கிறது?

படிப்பு, வேலையைத் தவிர என்னுடைய இதர திறமைகள் என்ன?

இந்தக் கேள்விகளுக்கான பதில், உங்கள் பலத்தைப் பற்றி உங்களுக்கே எடுத்துச் சொல்பவை.

சரி, உங்கள் பலம் என்ன என்று உங்களுக்குப் புரிந்துவிட்டது. ஆனால், உங்களிடம் சில பலவீனங்களும் இருக்குமே! என்னிடம் எந்தப் பலவீனமும் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. யாராவது அப்படிச் சொன்னால், அதுவே ஒரு பலவீனமாக மாறும்.

எந்தெந்த விஷயங்களில் எனக்குத் திறமை போதவில்லை?

இன்னும் எந்தெந்த விஷயங்களில் என் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்?

என் தனிப்பட்ட குணங்கள் (பொறாமை, சோம்பேறித்தனம், பெண்கள், மறதி, ஈகோ, பொஸசிவ்நஸ் போன்றவை) என்னை எப்படி பாதிக்கின்றன?

சரி, உங்கள் பலத்துடன் உங்கள் பலவீனங்களையும் தெரிந்து கொண்டுவிட்டீர்கள். இனி உங்கள் முன்புள்ள வாய்ப்புகள் என்னென்ன என்பதைப் பார்ப்பது அவசியமில்லையா?

என் பலத்தைக்கொண்டு என் பலவீனத்தை எவ்வாறு சரிசெய்யலாம்?

எது என்னை உத்வேகப்படுத்துகிறது?

சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு என்னை எப்படி தகுதிப்படுத்திக்கொள்ளலாம்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் பதில் கண்டுவிட்டீர்கள் என்றால், உங்கள் முன் உள்ள வாய்ப்புகளை நீங்கள் சந்திக்கத் தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

வாய்ப்பு என்று வரும்போது அதை நிறைவேற்ற முடியாமல், தடைகள் வருவதும் இயல்புதானே!

ஒரு வேலையைச் செய்துமுடிக்க எது எனக்குத் தடையாக உள்ளது?

அகத்தடை, புறத்தடை - இவற்றில் எது எனது பெரிய எதிரியாக இருக்கிறது?

இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் வரிசைப்படுத்தி ஆராய்ந்து, நம்மை நாமே சரியாக எடைபோட்டுக்கொள்வதுதான் ஸ்வாட் அனாலிசிஸ். நாம் பிறந்தது முதல், நம் வளர்ச்சிக்கு வழிகாட்டும் பெற்றோர்களும், ஆசிரியர்களும், பிற வழிகாட்டிகளும் நமக்கு எது சரி, எது நல்லது, எது கெட்டது என ஒரு குறிப்பிட்ட காலம்வரை சொல்லித் தருவார்கள். ஆனால், பருவம் வந்து, கல்லூரியில் கால்பதித்தபின், அதையும் தாண்டி வேலைக்குச் செல்லும்போது நம்மை நாமே அலசி ஆராய்வது அவசியம். நம்முடைய குறுகிய கால லட்சியங்களையும், எதிர்கால லட்சியங்களையும் அடைய, நாம் எவ்வாறு பயணிக்கிறோம் என்பதை அறிய நம்மை நாமே அடையாளம் கண்டுகொள்வது முக்கியம்.

பொதுவாக, பிறர் நம்முடைய நிறைகளைப் போற்றிப் பாராட்டும்போது சந்தோஷமடைகிறோம். ஆனால், நம் குறைகளைச் சுட்டிக்காட்டும்போது எரிச்சலடைகிறோம். 'இவர் யார் என்னைப் பற்றிச் சொல்ல? என் நிலையில் இருந்து பார்த்தால் தெரியும்' என்று நமக்கு நாமே இட்டுக்கட்டிப் பேசுகிறோம்.

உங்கள் வாழ்வியல் கோட்பாடுகளே உங்களது பாதையைத் தீர்மானிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்! நம்பிக்கை, விரக்தி - இந்த இரண்டில் எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதுவே நம்மை முழுமையாக ஆட்கொண்டு வழி நடத்துகிறது. நம்முடைய சிந்தனைகளும் அதை நோக்கியே பயணிக்கின்றன.

மனிதனுடைய முக்கியச் சக்தியே, கெட்டவைகளைக்கூட நல்லதாக மாற்றும் திறன்தான். செய்கின்ற பயணம் எது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். எதிர்மறையான விஷயங்கள் வாழ்வில் ஒரு பகுதிதான் என்கிற தெளிவான சிந்தனைகொண்டு நாம் பயணித்தால் நல்லதை நோக்கிதான் நம் வாழ்க்கைபோகும்.

இந்தப் பயணத்தில், ஒவ்வொருநாளும் நமக்கு ஒரு பரிசோதனைதான். அதில் சிலர் ஜெயிக்கிறார்கள். சிலர் தோற்கிறார்கள். வெற்றிக்கு ரகசியமே, அதனை அடைய நாம் மேற்கொள்ளும் வழிமுறைகள் என்பதைப் புரிந்துகொண்டவர்கள், வித்தியாசமாக யோசித்து வெற்றி காண்கிறார்கள். வெற்றி அடைந்தவர்களின் ரகசியமே ஒரு செயலை வித்தியாசமாக அணுகுவதுதான்.

நமக்கு நாமே ஒரு வட்டம் போட்டுக்கொண்டு, அதைத் தாண்டி வெளியே வராமல் இதுதான் என் தேவை, இது போதும் எனக்கு என்று வாழ்பவர்கள் கோடியில் ஒரு துளியாக வாழ்ந்து அடையாளம் இல்லாமல் போகிறார்கள். நான் வித்தியாசமானவன்; எனக்கென்று ஒருபாதையைக் கண்டுபிடித்து, அதில் மற்றவர்களைப் பயணம் செய்யவைப்பேன் என்று நினைப்பவர்கள் கோடியில் ஒருவராக இருந்தாலும் தனிப்பட்டு நிற்கிறார்கள். இப்படித் தனிப்பட்டு நிற்பதற்கு நான் மேலே சொன்ன சுயபரிசோதனை முக்கியம்.

இந்தப் பரிசோதனை தனி மனிதனுக்கு மட்டுமின்றி, அலுவலகங்களுக்கும், குழுவாக வேலை செய்பவர்களுக்கும், குடும்பத்துக்கும்கூடப் பொருந்தும். நேர்மையான சுயபரிசோதனை வெற்றியைத்தரும். எது என் பலம், எது என் பலவீனம், எந்தக் கல்லூரியில் என் திறமைக்கேற்ற வாய்ப்பு இருக்கிறது? இந்த கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தால் என் எதிர்காலம் எப்படி இருக்கும்? இவற்றை அடைய எனக்கு இருக்கும் தடைகள் என்ன? என்பதில் நேர்மையான சுயபரிசோதனை முக்கியம்.

இந்தச் சுயபரிசோதனையில் நாம் செய்யவேண்டியவை :

1. எந்தச் செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் அதை அனலிடிக்கலாகச் சிந்தித்து அதன்பிறகு செயல்படுங்கள்.

2. செலவு செய்கிற ஒவ்வொரு நிமிடத்தையும் பதிவு செய்யுங்கள்.

3. தகுந்த ஒருவரை உங்கள் வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

4. முடிவெடுத்தவுடன் அது சரியா, தவறா என்று யோசிக்காதீர்கள்.

5. இந்தப் பயணத்தில் நீங்கள் செய்கிற தப்புகளையும், தவறுகளையும் வரிசைப்படுத்துங்கள்.

6. எதிர்பாராததை எதிர்பாருங்கள்.

7. உங்களுடைய தவறுகளைத் திருத்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

சுயபரிசோதனை என்பது சத்திய சோதனையாக இருந்தால், நீங்கள் நிச்சயம் சாதனை வீரராக மாறுவீர்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

மெடிக்கல் பிசினஸ்

இன்று, நம் நாட்டில், மருத்துவத் துறையின் பகல் கொள்ளை பற்றி அறியாதவர் இருக்க முடியாது; ஏனென்றால், டாக்டரை அணுகாத மக்களே இல்லை என்ற நிலை, உருவாகி விட்டது.

இரு நண்பர்கள் மூலம், மருத்துவத் துறையில் நடக்கும், பகல் கொள்ளையின், வேறு பல கோணங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 'பிரம் த ஹார்சஸ் மவுத்' என்பது போல, மருத்துவ நண்பர் ஒருவரே, கீழ்வரும் தகவலைக் கூறியது, அதிர்ச்சி அடைய வைத்தது.

லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில், 'கன்சல்டன்ட்' பதவியில் இருக்கிறார் அந்த டாக்டர் நண்பர். நம்மூர்காரர் தான் என்றாலும், பல ஆண்டுகளுக்கு முன்பே லண்டன் சென்று, எப்.ஆர். சி.எஸ்., பட்டம் இரண்டு பெற்று, தற்போதைய தகுதியை அடைந்துள்ளார்.

இந்திய டாக்டர்கள், லண்டனில் எப்.ஆர். சி.எஸ்., படித்து, பட்டம் பெற்று இருந்தாலும், அவர்களால், மருத்துவமனையில், 'ரிஜிஸ்தார்' என்ற வரையிலுமே, பதவி உயர்வு அடைய முடியும். 'கன்சல்டன்ட்' என்ற பதவியை, எளிதில் பெற்றுவிட முடியாது; வெள்ளைக்காரர்களுக்கு மட்டும்தான், அப்பதவி கிடைக்கும். ஆனால், டாக்டர் நண்பரின் திறமையை அவர்களால் ஒதுக்கித் தள்ள இயலவில்லை; உரிய பதவியை அளித்தே ஆக வேண்டும் என்ற நிலை வந்ததும், கொடுத்து விட்டனர்.
இங்கு, 'பிராக்டீஸ்' செய்யும், லண்டன், 'ரிட்டன்' டாக்டர்கள் பலரும், 'ரிஜிஸ்தார்' பதவி வரையே அடைந்தவர்கள். அதற்கு மேல் பதவி உயர்வு கிடைக்காது என்று அறிந்த பின், வெறுப்பில் இங்கே வந்தவர்கள் தான்!

மூன்று வார விடுமுறையில் லண்டனிலிருந்து, சென்னை வந்திருந்த டாக்டர் நண்பர், தம்முடன் லண்டனில் பணியாற்றிய சில டாக்டர்களை பார்க்கச் சென்றிருந்தார். அவர்கள் எல்லாம், சென்னையில், கடந்த சில வருடங்களில் தோன்றியுள்ள, 'பைவ் ஸ்டார்' கலாசார மருத்துவமனையில் பணியாற்றுகின்றனர்.
அவர்களிடமும், அந்தந்த மருத்துவமனைகளின் தலைமை டாக்டர்களிடமும் பேசிவிட்டு வந்த டாக்டர் நண்பர் கூறினார்:

மணி... லண்டனில், தினமும் குறைந்தபட்சம், மூன்று அறுவை சிகிச்சைகள் செய்கிறேன். ஆபரேஷனுக்கு உட்படுத்தப்பட உள்ள நோயாளிகள் ஏராளமானவர் இருக்கின்றனர். 'மூன்று வார விடுப்பில் இந்தியா போகிறேன். என் உதவி டாக்டரை, (உதவியாளர் வெள்ளையர்) உங்களுக்கு, ஆபரேஷன் செய்விக்க ஏற்பாடு செய்துவிட்டுப் போகிறேன்...' என, அவர்களிடம் கூறினேன். அதற்கு, 'வேண்டவே வேண்டாம் டாக்டர்... நாங்கள் இன்னும் மூன்று வாரம் காத்திருக்கிறோம்...' என, வெள்ளைக்கார நோயாளிகளே என்னிடம் கூறினர்.

காரணம், என்னுடைய தொழில் நேர்மையும், திறமையும்தான். நான் ஆபரேஷன் செய்யும் நோயாளிகளில், ஆயிரத்திற்கு இருவர் கூட மாண்டு போவதில்லை; அப்படியே மாண்டு போனவர்களும், வேறு காரணங்களாலேயே இறந்துள்ளனர்.
அநாவசிய டெஸ்டுகளை செய்யச் சொல்லி வலியுறுத்துவது இல்லை; அதேபோல, தேவை இல்லாமல் அவர்களை மருத்துவமனையில் நாள் கணக்கில் வைப்பதும் இல்லை.

ஆனால், இந்தியாவில், மருத்துவம், தெய்வீகமாகக் கருதப்படாமல், வியாபாரமாகி விட்டது. நான் சந்தித்த மருத்துவமனைகளின் தலைமை மருத்துவர்கள், என்னுடைய துறையில், திறமையான அறுவை சிகிச்சை நிபுணர்கள் இங்கு இல்லாததால், தம் மருத்துவமனையில் பணியாற்ற என்னை அழைக்கின்றனர்.
மாதம், 'கியாரண்டீட்' ஆக பத்து லட்சம் ரூபாய் வருமானத்திற்கு, வழி செய்வதாகக் கூறுகின்றனர். அதே நேரம், தேவையோ, தேவை இல்லையோ, அந்த, 'டெஸ்ட்' இந்த, 'டெஸ்ட்' என்று மருத்துவமனைக்கு பணம் கிடைக்க உதவ வேண்டும் என்றும், நோயாளி வந்த உடனேயே, 'இன்டென்சிவ் கேர் யூனிட்'டில் அனுமதித்து, அதற்கு தனியே பணம் கறந்து, மருத்துவமனைக்கு கொடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

'இது போன்ற வேலைகளில் என்னால் ஈடுபட முடியாது; மருத்துவத் தொழிலை புனிதமாகக் கருதி ஈடுபட்டுள்ளேன். என்னால் உங்களுக்கு பயன் இருக்காது...' என்று, அவர்களிடம் கூறி விட்டேன், என்றார்.

எழுத்தாளர் நண்பர் ஒருவர் கூறக் கேட்ட சமாச்சாரம் இது...

'என் நண்பன் ஒருவன், மெடிக்கல் ஸ்டோர் ஆரம்பிக்க உள்ளான்...' என்றார்.
'சிரமமான தொழிலாச்சே... நிறைய பணம் முடக்க வேண்டி இருக்குமே...' என்றேன்.
'அட, போப்பா... புரியாத புள்ளையா இருக்கியே... அந்தக் காலம் எல்லாம் மாறிப் போச்சு. ரெண்டு, மூணு டாக்டர்கள் கைவசம் இருந்தால் போதும்...' என, புதிர் போடுவது போல பேசினார்.

'புரியவில்லை; விளக்கமாகக் கூறுங்கள்...' எனக் கேட்டேன்.

'மெடிக்கல் ஸ்டோர் ஆரம்பிக்கும் என் நண்பன், முதல் தான் போடுகிறான். அவனுக்கு மூன்று டாக்டர்கள் பழக்கம். அவர்கள் தான் இவனை மெடிக்கல் ஸ்டோர் ஆரம்பிக்கத் தூண்டியது; ஆனால், ஒரே ஒரு கண்டிஷன், ஒவ்வொரு டாக்டருக்கும் தலா மாதம், 2,000 ரூபாய் கொடுத்துவிட வேண்டுமாம்.

'அதற்கு பிரதிபலனாக, இவரது கடையிலேயே மருந்து வாங்க, அவர்கள் சிபாரிசு செய்வராம். அதுவும், வியாதிக்கு தேவையான மருந்துகளுடன், ஜெனரல் மருந்துகளையும் எழுதிக் கொடுப்பராம்.

'அது மட்டுமல்ல, எல்லா வகை மருந்துகளையும் வாங்கி, ஸ்டாக் செய்து பணத்தை முடக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையாம். இந்த டாக்டர்கள் குறிப்பிடும், பத்து வகையான மருந்துகளில் மட்டும், பணத்தை முடக்கினால் போதுமாம். 'எப்படி பிசினஸ்?' என்றார்.

'புனிதமான மருத்துவத் துறையை இனி, 'மெடிக்கல் புரபஷன்' என, அழைப்பதை விடுத்து, 'மெடிக்கல் பிசினஸ்' என, அழைக்கலாம்...' எனக் கூறி வைத்தேன்.

-Dinamalar, 30/3/14

Gift of Tears

Gift of Tears

 

What can I give Thee, O King of kings?


A flower? It will fade!


A lamp? It’s light will flicker and be extinguished in the wind!


A song? It will vanish in thin air!


Come to my garden that I may adore Thee with Lights and fragrance and with the one word: “Beloved!” There shall I give Thee the one only gift I can – the gift of tears.

-          -Sadhu Vaswani

“அப்படியா?” "இருக்கலாம்"

"அப்படியா?"

ஜப்பானியக் கிராமம் ஒன்றில் ஹாகுயின் என்னும் ஜென் துறவி ஒருவர் வாழ்ந்துவந்தார். தூய வாழ்வை அவர் மேற்கொள்வதாக கிராமத்தினர் அவரைப் புகழ்ந்தனர்.

அவரது வீட்டின் அருகே அழகிய பெண் ஒருவர் வசித்துவந்தார். அந்தப் பெண்ணின் பெற்றோர் உணவுப் பொருள்களை விற்கும் கடையை நடத்திவந்தனர். திடீரென ஒரு நாள் அந்தப் பெண் கருத்தரித்தாள். அவளுடைய பெற்றோர்கள் அதிர்ந்துவிட்டனர்.

அவள் கருத்தரிக்க யார் காரணம் என்று கேட்டனர். தான் கருத்தரிக்க யார் காரணம் என்பதை அந்தப் பெண் சொல்லவே இல்லை. அவளுடைய பெற்றோரும் விடாமல் அவளைத் தொந்தரவு செய்னர். இறுதியில் ஹாகுயின்தான் தனது கர்ப்பத்திற்குக் காரணம் என அந்தப் பெண் கூறினாள்.

கடுங்கோபத்துடன் பெற்றோர் துறவியைச் சந்தித்து நியாயம் கேட்டனர். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்ட ஹாகுயின் "அப்படியா?" என்று மட்டும் கேட்டாராம்.

அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்த பின்னர் அவளுடைய பெற்றோர் குழந்தையை ஹாகுயினிடம் கொண்டுவந்து விட்டனர். மொத்தக் கிராமமும் துறவியைத் தூற்றியது. குழந்தையை அவர் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றது. "அப்படியா?" என்று அமைதியாகக் கேட்டதுடன் குழந்தையை ஏற்றுக்கொண்டார்.

ஓர் ஆண்டு சென்றது. மீன் சந்தையில் வேலைபார்க்கும் இளைஞன் தான் குழந்தையின் தந்தை என்ற உண்மையை அந்தப் பெண் சொன்னாள்.

இப்போது பெற்றோர் துறவியைச் சென்று சந்தித்தனர். தங்களை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டனர். குழந்தையைத் தந்துவிடும்படி கோரினர்.

துறவி குழந்தையை ஒப்படைத்தார். குழந்தையைத் தந்த போது அவர் சொன்னதெல்லாம் அப்படியா? என்பது மட்டுமே.


"இருக்கலாம்" 

ஜப்பானில் ஒரு விவசாயி இருந்தார். எந்நேரமும் வயலில் வேலையே கதியாக அவர் இருப்பார். ஒரு நாள் அவரது பண்ணையில் வேலை பார்க்க வைத்திருந்த ஒரு குதிரை ஓடிப்போய்விட்டது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன், அவரது அண்டை வீட்டினர் "என்ன ஒரு துரதிருஷ்டம்" என்று அவரிடம் வருத்தத்துடன் கூறினர்.
அதற்கு அந்த விவசாயி, "இருக்கலாம்" என்றார்.
அடுத்த நாள் காலை எதிர்பாராத வகையில் அந்தக் குதிரை அவரிடமே திரும்ப வந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் அந்தக் குதிரையுடன் மூன்று காட்டுக் குதிரைகளும் வந்திருந்தன. "என்ன ஒரு ஆச்சரியம்" என்று அண்டை வீட்டினர் கூறினர்.


அதற்கும் அவர் "இருக்கலாம்" என்றே கூறினார்.
அதற்கு அடுத்த நாள், பழக்கப்படாத அந்தக் குதிரைகளில் ஒன்றின் மீது ஏறிய விவசாயியின் மகன், குதிரையைச் செலுத்த முயன்றான். அந்தக் குதிரை அவனைத் தூக்கியெறிய, அவனது கால் ஓடிந்து போனது. அப்போது விவசாயியின் அண்டை வீட்டினர், அந்த அசம்பாவிதம் தொடர்பாக அனுதாபமாகப் பேசினர்.
 "இருக்கலாம்" என்று மீண்டும் கூறினார் விவசாயி.
அதற்கு அடுத்த நாள், ராணுவத்துக்கு இளைஞர்களைச் சேர்ப்பதற்காக ராணுவ அதிகாரிகள் அந்த ஊருக்கு வந்தனர். விவசாயி மகனின் கால் உடைந்திருந்ததால், அவர்கள் அவனைத் தேர்ந்தெடுக்கவில்லை. கடைசியில் விஷயங்கள் எப்படி விவசாயிக்குச் சாதகமாக மாறிவிட்டன என்று கூறி, அண்டை வீட்டினர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
அப்போதும் அவர் சொன்னார், "இருக்கலாம்".

Thursday, March 27, 2014

Spiritual conversation

Spiritual conversation



Man : God! Are you there?
God : Yes.

Man : Can I ask you a question?
God : Yes, of course.

Man : What are one million years for you?
God : Like one second.

Man : And one crore rupees?
God : Like one rupee.

Man : Please God, can you give me one rupee?
God : Sure, just wait a second.

தங்கம் வாங்க போறீங்களா..?! அதிர்ச்சி தகவல்

நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்.- அதிர்ச்சி தகவல்"

தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!

நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி"
அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 

16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்

கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" 

எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப் பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...

சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...
உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். 

என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? 

பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை? எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது? 

பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்? மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்...


அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...!


அதுவும் உங்களால் தான் முடியும்...!!