Friday, July 8, 2011

தாம்பத்தியம் - 11

தாம்பத்தியம் - 11


தாம்பத்தியம் பதிவே முக்கியமாக கணவன், மனைவியின் கருத்து வேறுபாடுகளால் பாதிப்புக்கு உள்ளாகும் அவர்களின் குழந்தைகளுக்காக தான்.  அவர்கள் மனதாலும், உடம்பாலும்  படும்பாடுகளை தெளிவு படுத்தத்தான்.  இதுவரை ஆண், பெண் அவர்களின் நிறை, குறைகள் எந்த விதத்தில் குடும்ப உறவில் பங்குபெறுகிறது என்றும் வரதட்சணை கொடுமை போன்ற காரணிகள்,பெற்றவர்கள், உறவினர்கள், நண்பர்களால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படக்கூடிய சிக்கல்கள் போன்றவை பற்றியும் பார்த்தோம்.இனிதான் தாம்பத்திய சீர்குலைவினால்குழந்தைகளின் எதிர்காலம் எப்படி எல்லாம் பாதிக்க படுகிறது என்பதை பார்க்கவேண்டும்.

கணவன் , மனைவி உறவு சீராக இல்லை என்றால் வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது  ஆனால் நேரடியான பாதிப்பு அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்குத்தான்.  இதை பற்றி கருத்து வேறுபாடு நிறைந்த எந்த பெற்றோரும் எண்ணுவதே கிடையாது என்பதுதான் மிகுந்த சோகம். அவர்கள் பிள்ளைகளின் மனநிலையை பற்றி உண்மையில் கவலை பட்டார்கள் என்றால் வீட்டில் சண்டையே இருக்காது.  பிள்ளைகளும் நல்ல சூழ்நிலையில் நன்றாக வளர்ந்து எதிர்காலத்தில் தங்களது குடும்பத்தையும் அப்படியே பார்த்து கொள்வார்கள்.  இந்த நல்ல மனநிலை வாழையடி வாழையாக தொடரும், அவர்கள் வாழும் சமூகமும் சிறப்பாக இருக்கும்.

சமூகம் என்ன செய்யும்...??
  
பலரும் எந்த பிரச்சனை விஸ்பரூபம் எடுத்தாலும் உடனே சமூகத்தை பழிக்க தொடங்கி விடுவார்கள்....  "வர வர சமூகம் கெட்டுபோய்விட்டது"   என்று சொல்வதை  சுத்த முட்டாள்தனம் என்பேன்.  சமூகம்னா என்ன....?  நீங்களும்  நானும் சேர்ந்ததுதானே....!! நாம சரியா இருக்கிறோம் என்றால் சமூகம் எப்படி கெட்டு  போகும்...??

ஒரு நாலு சுவற்றுக்குள் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து அன்பையும் பாசத்தையும் பரிமாறி ஒற்றுமையாக இருக்க முடியவில்லை என்றால்சமூகத்தை பற்றி மட்டும் குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது....?? இல்லை என்றால் சமுதாயத்தை சீர்படுத்தபோறேன் என்று சொல்கிறவர்கள் முதலில் உங்கள் வீட்டை பாருங்கள் .... அதை சீர்படுத்தினாலே போதும் நாடும், இந்த சமூகமும்  உருப்பட்டு விடும்.
  
வீட்டில் என்ன நடக்கிறது...? நம் குழந்தைகள் எப்படி, என்ன மனநிலையில் வளருகிறார்கள்.? என்றே பலரும் பார்ப்பதே  இல்லை.  ஆண் தனது  ஆண்மை  நிரூபிக்க பட்டுவிட்டது என்பதையும்,  பெண் தான் மலடி இல்லை என்பதை தெரிந்து கொள்ளவும்தான் பிள்ளை பெற்று கொள்கிறார்களோ என்றே பெரும்பாலும் எனக்கு  தோன்றுகிறது....??!!

தங்கள் பிள்ளைகள் எங்கே போகிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்றே தெரியாமல் முக்கியமாக பெண் பிள்ளையை பெற்ற வீட்டில் இருக்கும் தாய் கவனிப்பதே இல்லை.  இப்ப இருக்கிற காலகட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றோ அல்லது இரண்டு குழந்தைகளோ தான் இருக்கிறார்கள்,  அந்த இரண்டு பேரை சரியாக வளர்க்க முடியவில்லை என்றால் அதைவிட வேறு என்ன முக்கியமான வேலை பெற்றவர்களுக்கு இருக்கமுடியும்...??

நீங்கள் குடும்பத்திற்காக ஓடி ஓடி சம்பாதித்தாலும் அதை அனுபவிக்க குழந்தைகள் "நல்ல முறையில் வளரவில்லை"  என்றால் நீங்கள் "உழைத்த உழைப்பு விழலுக்கு இறைத்த நீர்தான்"

நீங்கள் இறைத்த நீர் எப்படி வீணாகிறது என்பதற்கு, இரண்டே இரண்டு கொடுமையான, வேதனையான உதாரணங்களையாவது இங்கு குறிப்பிட்டே  ஆகவேண்டும். சாதாரணமாக மேலோட்டமாக சொல்வதைவிட உண்மையில் நடந்தவற்றை விளக்கும்போது நம்பகத்தன்மை  அதிகமாக இருக்கும் என்பது என் கருத்து.


சிறு வயது கர்ப்பம்

சமீபத்தில் ராமநாதபுரத்தில் நடந்த ஒரு சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. ( இது முதல் செய்தி இல்லை, ஏற்கனவே இதே போல் வந்தும் இருக்கின்றன) 15  வயதே நிரம்பிய அந்த  சிறுமி தான் படிக்கும் பள்ளியின் பாத்ரூமில் வைத்து தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தை பெற்று இருக்கிறாள்....??!!  

இந்த விசயத்தில் நாம் யாரை குறை சொல்வது...?

1 .   அவளை கர்ப்பமாக்கிய அந்த முகம் தெரியாத ஆண்,
2 .   அதற்கு விரும்பியோ, விரும்பாமலோ உடன்பட்ட அந்த சிறுமி,
3 .   இருவரும் இணைய காரணமான சூழ்நிலை,

ஆனால் இதை எல்லாம் விட முக்கியமான ஒரு காரணம் அந்த சிறுமியின் பெற்றோர், குறிப்பாக அவளது தாய்..?!!  குழந்தை பிறந்ததில் இருந்து அந்த தாய்க்குத்தான் கவனம் அதிகம் தேவை. ஆனா நாம தான் ஆணும் பெண்ணும் சமம் என்று உரக்க சொல்லிட்டு இருக்கிறோமே.... குழந்தை வளர்ப்பில் தகப்பன் ஏன் பங்கு பெறுவது இல்லை என்று கூட  ஒரு கேள்வி எழும்....  

இப்படிபட்ட விஷயம் பெரிது  ஆனபின் பெற்றோர்கள் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் குறை சொல்லி 'நீ வளர்த்தது சரி இல்லை' என்று மனைவியை  கணவனும் ,  'ஏன் நான் வளக்கிரப்போ,  நீங்க எங்க போனீங்க, இருந்து வளர்க்க வேண்டியதுதானே' என்று  மனைவி கணவனையும்  குறை சொல்லி சண்டை போடுகிறார்களே தவிரஇருவருக்கும் சரி சமமான  கடமை உண்டு என்பதை மறந்து விடுகிறார்கள்.

ஆனால்  " இயற்கை பெண்களுக்கே அதிக பொறுப்பை கொடுத்து இருக்கிறது " என்பதுதான் உண்மை. அதும் பெண் குழந்தைகளை பொருத்தமட்டில் , ஒரு தாயால் தான் தனது பெண்ணின் மன உணர்வுகளை துல்லியமாக உணர்ந்து கொள்ளமுடியும்.  தன் மகளின் முகத்தில் சிறு வாட்டமோ, சிறு சலனமோ தென்பட்டாலும் உடனே என்ன 'பொண்ணு சரி இல்லையே' என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அடுத்த ஒருமணி நேரத்துக்குள் உண்மையை கண்டு பிடித்து விடக்கூடிய சாமார்த்தியம் கொண்டவள் தான் ஒரு தாய்.  

அப்படி இருக்கும்போது இந்த மாணவியின் தாயாரால் தனது மகள் ஒன்பது மாதம் வரை ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்ததை கண்டு பிடிக்க முடியாமல் போனது எவ்வாறு.... இது எப்படி சாத்தியம்.......??!!   

தன் மகளின் நடவடிக்கையில் தெரியும் சின்ன மாற்றத்தை  கண்டு கொள்வதில் இருந்து, வயதுக்கு  வந்த தனது மகளின் மாதவிலக்கு தேதி வரை கணக்கு வைத்து, ஒரு மாதம் சரியாக வரவில்லை என்றாலும் என்ன காரணமாக  இருக்கும் ஒரு வேளை சத்து ஏதும்   குறைவாக இருக்குமோ  என்று மருத்துவரிடம் உடனே அழைத்து சென்று உடம்பை பேணும் அன்றைய தாய்மார்கள் எங்கே.....!!  மகள் கர்ப்பமாகி, குழந்தை பெற்று எடுத்த நாள் வரை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்கிற இன்றைய தாய்மார்கள் எங்கே .....????   

இதற்கு என்ன காரணம்  இருக்க முடியும்...?? என்று ஆராய்ந்தால் பதில் வேறு ஒன்றும் இல்லை....அந்த வீட்டில் கணவன் மனைவி  உறவாகிய தாம்பத்தியம் சரியாக இல்லை என்பதுதான் அடிப்படை காரணம்.  

தாம்பத்தியம் தாறுமாறாக இருப்பதால்தான் அந்த வீட்டில் வளரும் குழந்தைகளும் திசை மாறி போகிறார்கள் . வீட்டில் கிடைக்காத ஏதோ ஒன்றை வெளியில் தேடுகிறார்கள், ஆண்களுக்கு மது, போதை போன்றவையும், பெண்களாக இருந்தால் கர்ப்பமும் பரிசாக கிடைக்கிறது.  வீட்டில் கிடைக்காத அந்த ஒன்று பெரிதாக வேறு இல்லை 'அன்பு' என்ற அற்புதம்தான்.  இதை ஒரு கணவனும், மனைவியும் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்காமல் போலியாக ஒரு வாழ்க்கையை வாழ்ந்து தங்களையும் ஏமாற்றி இந்த சமூகத்திற்கு ஒரு மோசமான முன்  உதாரணமாக தங்கள் பிள்ளைகளை நிறுத்துகிறார்கள்.  

இப்படி வளர்ந்த பிள்ளைகளின் எண்ணிக்கை கூடும்போது எப்படி ஒரு சமூகம் நல்ல சமூகமாக இருக்க முடியும்...?   எனவே இனியாவது சமூகத்தை குறை சொல்வதை விடுத்து நம்மை நாம் சரி படுத்தி கொள்ள முயலுவோம். நாட்டை நாம் பார்க்கும் முன்,  நம் வீட்டை நாடு பார்க்கும் படி  நடந்து கொள்வோம்...!!!?  

தாம்பத்தியத்தில் அடுத்து இதன் தொடர்ச்சியாக சிறுவர்கள், சிறுமியருக்கு  (பெண் குழந்தைகள்) ஏற்படும் பாலியல் கொடுமைகள்......??!