Tuesday, February 28, 2017

மகாபெரியவரின் பெருமை

மகாபெரியவரின் பெருமை

" ஓர் எளிய கீரைக்குக் கூட ஆசைப்படக் கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்தால்தான் மகாபெரியவரின் பெருமை என்றும் மதிப்பு குன்றாத வைரமாக மின்னுகிறது"

அன்றாட பூஜைகளை முடித்தபின் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் அளித்துவிட்டு, பிட்சைக்குச் செல்வது காஞ்சிமகானின் தினசரி வழக்கம். பிட்சையில் கிடைக்கும் உணவையே அவர் உண்பார்.

ஒருசமயம், வழக்கம்போல் பூஜைகளை முடித்த பின்னர், பிட்சைக்குச் செல்லாமல் மடத்திலேயே இருந்துவிட்டார் மகான். பிட்சைக்குச் செல்லாததால், அவர் உணவும் எடுத்துக் கொள்ளவில்லை. பலரும் வற்புறுத்தியும் உண்ண மறுத்துவிட்டார்.

இது மறுநாளும் தொடர்ந்தது. அன்றும் மகான் உணவருந்தவில்லை. மூன்றாம் நாளும் மகாசுவாமிகள் பிட்சைக்குச் செல்லவில்லை. எனவே, மடத்தில் உள்ளோருக்கு பயம் தொற்றிக் கொண்டது.

மடத்தில் உள்ளோர் ஏதாவது தவறு செய்துவிட்டால், அவர்களை தண்டிப்பதற்கு பதில் மகான், தம்மையே இப்படி வருத்திக்கொள்வது வழக்கம் என்பதால் அவர்களின் அச்சம் அதிகரித்தது.

அதனால், எல்லோரும் சேர்ந்து சுவாமிகள் முன் சென்று நின்றார்கள். எங்களில் யார் என்ன பிழை செய்திருந்தாலும் தயவு செய்து மன்னித்து, உணவு ஏற்கவேண்டும்...! எனப் பணிந்து வேண்டினர்.

மகா பெரியவர் சிரித்துக் கொண்டே, நீங்கள் யாரும் எந்தத் தவறும் செய்யவில்லை. உங்கள் மேல் எனக்குக் கோபமும் இல்லை. என்னைத் திருத்திக் கொள்ளவே நான் இப்படி உண்ணாவிரதம் இருந்தேன்.
கொஞ்ச நாட்களுக்கு முன் பிட்சையில் கிடைத்த உணவில் வெகு சுவையாக கீரை சமைத்து ருசியாக இருந்ததால், அதனை மீண்டும் சாப்பிடவேண்டும் என்ற ஆசை எழுந்தது.

பூஜைகளை முடித்ததுமே, இன்றைய பிட்சையில் கீரை இருக்குமா? என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது.

மூன்று நாட்களாக அந்த எண்ணம் மனதில் நின்றதால்தான், வயிற்றைப் பட்டினி போட்டு அந்த ஆசையை விரட்டினேன்.

ஒரு சன்னியாசிக்கு இது மாதிரியான ஆசைகள் வரக்கூடாது என்றார். ஓர் எளிய கீரைக்குக் கூட ஆசைப்படக் கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்தால்தான் மகாபெரியவரின் பெருமை என்றும் மதிப்பு குன்றாத வைரமாக மின்னுகிறது.

Saturday, February 18, 2017

‘உடனடி’ கலாசாரம்... புற்றுநோய்க்குக் காரணமாகும்!

பெயரைக் கேட்டாலே நடுக்கத்தை ஏற்படுத்தும் நோய், புற்றுநோய். குழந்தைகள் தொடங்கி முதியோர்வரை, யாரை வேண்டுமானாலும் பற்றிக்கொள்ளத் துடிக்கும் அரக்கன் இது. புற்றுநோய் உருவாகக் காரணம் என்ன? மருத்துவமும் அறிவியலும் எத்தனையோ ஆயிரம் காரணங்களை அடுக்குகின்றன. இருந்தாலும் முக்கியமான ஒரு காரணம், நம் வாழ்க்கை முறை! முக்கியமாக உடனடி கலாசாரம்.

மரங்கள் வெட்டப்படுவதைப் பார்த்துக்கொண்டே கடந்துபோகிறோம். நச்சுக் கழிவுகள் குப்பைகளாகக் கொட்டப்படுவதைச் சாதாரணமாகப் பார்க்கிறோம். பிளாஸ்டிக் கவருக்குள் அடைக்கப்பட்டு, `ஆறு மாதங்களுக்குக் கெட்டுப் போகாது' என்கிற உத்தரவாதத்தோடு சந்தைக்கு வரும் உணவுகளை வாங்கிச் சாப்பிடுகிறோம். புகையை சுவாசிக்கிறோம்; நச்சுக் கலந்த தண்ணீரைக் குடிக்கிறோம்; ரசாயனங்களும் பூச்சிக்கொல்லிகளும் சேர்ந்திருக்கும் உணவைச் சாப்பிட்டு வாழ்கிறோம்... ஆக, புற்றுநோய் வரத்தானே செய்யும்? 

பிளாஸ்டிக் ஆதிக்கம்

இன்றைய பரபரப்பான உலகில், மற்றவரிடம் அக்கறைகொள்ளவோ, கரிசனத்தோடு நடந்துகொள்ளவோ முடியாத நிலையில்தான் நம்மில் பலர் இருக்கிறோம். அதோடு, இன்றைய உலகில் வேகமாகப் போட்டி போடுவதை முன்னிட்டு உடனடி கலாசாரத்துக்குப் பழகிவிட்டோம். இந்த உடனடி கலாசாரத்தை மாற்றிக்கொள்வதில் இருந்தே மாற்றத்தைத் தொடங்கிவிடலாம். `இன்ஸ்டன்ட்' அல்லது `ரெடி டு ஈட்' சமாசாரங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடங்கி, முதல் நாள் செய்ததை ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சாப்பிடுவது வரை எங்கெங்கும் அவசர யுகப் பயன்பாடே வியாபித்து இருக்கிறது. 

நாம் சமைக்கும் உணவு சில மணி நேரங்களிலேயே கெட ஆரம்பித்துவிடும் என்பது இயற்கையின் நியதி. புளிக்கத் தொடங்குவது, பூஞ்சைகள் வளர ஆரம்பிப்பது என உயிரியல் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக நிகழ்வது இயல்பு. அந்த இயற்கையைச் சிதைத்துவிடுகின்றன உடனடி சாப்பாட்டுச் சமாசாரங்கள். பூஞ்சை வளராமல் இருக்க ஆன்டிஃபங்கஸ், நறுமணம் கெடாமல் இருக்க நைட்ரஜன் ஃப்ளஷ்ஷிங்... இன்னும் என்னென்னவோ தேவைகளுக்காக விதவிதமான ரசாயனங்கள் சேர்க்கப்பட்டுத்தான் `உடனடி உணவு' என சந்தைக்கு வருகின்றன. அதுவும் பாலிதீன் பை அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு வரும் அந்த உணவுகளை ஃப்ரிட்ஜுக்குள்தான் வைக்கிறோம். இது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளும் விஷயம்தானே! 

மாசடைந்த நிலம்

`மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்' என்கிறது பண்டைய தமிழ் மருத்துவம். வாய்ப்பு இருக்கும்போது சமைத்து, வசதியாக ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடலாம் என்கிறது இன்றைய தமிழ்க் குடும்பம். பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை ஊற்றி ஃப்ரிட்ஜில் வைப்பது, காய் கனிகளை பிளாஸ்டிக் பையில் பிரித்து வைப்பது,  முதல் நாளே காய்களை நறுக்கி பிளாஸ்டிக் பையில் போட்டு ஃப்ரிட்ஜில் வைப்பது... இவையெல்லாம் நம் வாழ்க்கையை வேகமாக முடித்துக்கொள்ள நாமே வகுத்துக்கொள்ளும் வழிகள். 

அதிகச் சூட்டிலும், அதிகக் குளிரிலும்தான் பிளாஸ்டிக்கில் இருந்து `டயாக்ஸின்' வாயு வெளியாகும். இரவு முழுவதும் ஃப்ரிட்ஜுக்குள் இருக்கும் பிளாஸ்டிக் பையில் இருந்து கசியும் டயாக்ஸின், உள்ளே இருக்கும் பீன்ஸ் துண்டுகளுக்குப் போயிருக்கும். பிறகு, அந்த பீன்ஸ் பொரியல், புரோட்டீன் தருமோ என்னவோ... கண்டிப்பாகப் புற்றுநோயைத் தரக்கூடும். 

புற்றுநோய்க்கான காரணிகளில் மிக முக்கியமாகப் பேசப்படுவது பிளாஸ்டிக்கும் டயாக்ஸின், பென்சீன் வகையாறாக்களும்தான். சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகைமை வெளியிட்டு இருக்கும் புற்றுநோய்க்கான முக்கியக் காரணிகளின் பட்டியலில், தொகுதி 1-ல் பிளாஸ்டிக் துணுக்குகள் உள்ளன. (தொகுதி 1 காரணி என்றால், அது உறுதியாகப் புற்றுநோயைத் தோற்றுவிக்கும். தொகுதி 2, 3 எல்லாம் அவ்வளவு உறுதிப்படுத்தாத காரணிகள்).

`நீர்க் காய்கறியைக் கூட்டாக வைக்க வேண்டும்; பிஞ்சுக் காயைப் பச்சடியாகவும், முற்றிய காயைப் பொரியலாகச் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல; காய்கறியைக் குழம்பில் சேர்க்க புளிக்கரைசலில் வேகவிடவும் வேண்டும்' என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். `புளியில் வேகவைத்தால் அதன் புரதச்சத்து, கனிமங்கள் வீணாவது இல்லை. நீர்க் காய்கறிகளில் மிதந்து நிற்கும் வைட்டமின்கள், வற்றவிடாமல், வடித்துக் கொட்டாமல் கூட்டாகச் செய்யும்போது அதன் பயன் சற்றும் கெடாது' என்கிறது தேசிய உணவியல் கழகம். 

ரெடிமேட் உணவுகள்

சரி... ரெடி டூ ஈட் வேண்டாம். உடனடி கலாசாரத்தைத் தவிர்த்துவிடுவோம். அப்படியானால், மாற்று உணவு என்ன? நிறைய இருக்கின்றன. முக்கியமானது அவல். கைப்பையில் கொஞ்சம் சிவப்பரிசி அவலும் சின்னத் துண்டு பனை வெல்லமும் எடுத்துச் சென்றால், மாலைப் பசிக்கு உடனடி அவல் இனிப்பு தயார். கால் மணி நேரம் ஊறவைத்த அவலும் வெல்லமும் உடலுக்கு உறுதியையும் கூடவே இரும்புச் சத்து, வைட்டமின் பி சத்தையும் தரும். 

உடனடியாகச் செய்யக்கூடியது கேழ்வரகு லட்டு. கேழ்வரகு, கால்சியம் நிறைந்த ஒரு தானியம். அதை வாணலியில் வறுத்து, பனைவெல்லம் அல்லது வெல்லத்தை நன்கு உதிர்த்து அதில் கிளறிப்போட்டு, சூடாக இரண்டு டீஸ்பூன் நெய்விட்டு சூட்டோடு உருண்டையாகப் பிடித்துவையுங்கள். இரும்பு, கால்சியம், புரதம் இன்னும் உடலுக்குத் தேவையான பல கனிமங்கள் நிறைந்த இந்த உருண்டை ருசியோடு பசியாற்றும். 

சர்க்கரைநோய் இருப்பவர்கள், பொரி வாங்கிக்கொள்ளலாம். அத்துடன் கொஞ்சம் மஞ்சள் தூள், காரம் சேர்த்து பொட்டலம் கட்டிக்கொள்ளலாம். இப்படி நிறைய உண்டு. 

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு... உடனடி கலாசாரத்துக்கும்!

வெற்றிக்கு வெரி சிம்பிள் 5 டிப்ஸ்!

Morning motivation

"ஒரே மாதிரியான செயல்களைச் செய்துவிட்டு, வித்தியாசமான முடிவுகளை எதிர்பார்ப்பதற்குப் பெயர் என்ன தெரியுமா? அதற்குப் பெயர், முட்டாள்தனம்" - இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது. ஒரே மாதிரியான செயல்களை நாம் செய்யும்போது தோல்வி ஏற்படுகிறதெனில், நாம் அதற்கான மாற்று வழிகளில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் நமது தோல்விக்கான விடையும் கிடைக்கும். தோல்வி வேண்டவே வேண்டாம். வெற்றி மட்டுமே வேண்டும் என்பது சாத்தியமில்லைதான். ஆனாலும்,  வெற்றி மட்டும்தான் வேண்டுமென்பவர்களுக்கான ஐந்து டிப்ஸ்..

"எங்கு தவறு செய்தீர்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள்" 

நீங்க எங்கு தவறு செஞ்சிருப்பீங்கனு கண்டுபிடிக்கச் சுலபமான வழி. நீங்க செய்த செயல்களை அப்படியே ஒரு படம் பார்ப்பதைப் போல முன்னிறுத்திக்கொள்ளுங்கள். கொஞ்சம் நிறுத்தி நிதானமாக ரீவைண்ட் பண்ணிப்பாருங்க. ஒரு படம் பார்க்கும்போது எப்படி பாடல்,  வசனம், காமெடியெல்லாம் நினைவில் வருமோ, அதே போல நீங்க எந்த இடத்தில் தப்பு பண்ணினீங்கனு கரெக்டா உங்களால கண்டுபிடிக்க முடியும். அந்த இடத்தைத்தான் நாம் நம்முடைய செயல்பாடுகளில் சரி செய்துகொள்ள வேண்டும். 

"வேற லெவல்ல யோசிங்க பாஸ்"

வேற லெவல்ல யோசிக்கணும்னு சொன்னதும் பயந்துட வேண்டாம் பாஸ். எல்லா சக்ஸஸ் ஃபார்முலாவும் ரொம்ப எளிமையானதாதான் எப்பவும் இருக்கும். அதனால, ரொம்ப எளிமையான விஷயங்கள் மேல கவனம் செலுத்தி, நாம் எந்த இடத்தில் எப்போது தவறு செய்திருக்கிறோம் என்பதை அறிந்து, அதைத் தவிர்த்து, வெற்றி பெறுவதற்கான வழிகளை அமைத்துக்கொள்ளுங்கள். எப்படி இந்த தோல்வியிலிருந்து மீண்டு வருவது என்பதைக் கண்டறிந்து, நமக்கான படிநிலைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதைத்  தொடர்ந்து கடைப்பிடிக்கவும் வேண்டும்.

"உங்க குருகிட்ட அடிக்கடி பேசுங்க"

நீங்கள் வாழ்க்கையில் தடுமாறும்போது, வழிகாட்ட உங்களுக்கென்று எப்போதும் உறுதுணையாய் இருக்கும் உங்கள் வழிகாட்டியிடம் உரையாடுங்கள். உங்கள் தோல்விக்கான பதில் கிடைக்கும். அவர்கள் உங்கள் வெற்றிக்குப் பரிந்துரைக்கும் செயல்களைக் கடைப்பிடியுங்கள்.

"நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் கருத்துக்களைக் கேளுங்கள்"

நம்மைக் காட்டிலும் நம்மை நன்கு அறிந்தவர்கள் நமது நண்பர்களும், பெற்றோர்களுமே. நாம் எதை எப்படிச் செய்தால், வாய்க்கும் என்பதை நன்கு அறிந்தவர்கள் அவர்கள். ஆக, அவர்களின் கருத்தையும் கேட்பது சிறந்தது. அது, மேலும் நமது வெற்றிக்கு வித்திடும்.

"உங்களைச் சுற்றி எப்போதும் நல்ல மனிதர்களை வைத்துக்கொள்ளுங்கள்"

சில சமயம் சிலருடைய தீய எண்ணம்கூட உங்களை தோல்வியில் கொண்டுப்போய்ச் சேர்த்துவிடும். அவர்கள் உங்களைத் தாழ்த்திப் பேசினாலும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் உங்கள் குறிக்கோளை நோக்கிச் செல்லுங்கள். நாம் துவண்டுபோகும் நேரங்களில் நம்மைச் சுற்றியுள்ள மக்கள் கொடுக்கும் உற்சாகமே நம்மை வழி நடத்திச் செல்லும். எனவே, நமக்கு ஊக்கமளித்து நல்வழிப்படுத்தும் மனிதர்களை நமது சுற்றத்தில் வைத்திருப்பது நல்லது. நமது இலக்கை அடைய இவர்கள் தரும் உற்சாகம், நமக்கான வெற்றியில் பாதியைத் தேடித் தரும்.

தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் அதிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளை நாம் கையாண்டால் வெற்றி நிச்சயம்!

Thursday, February 16, 2017

நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று' என்பது தெய்வப் புலவரின் திருவாக்கு. ஒருவர் நமக்கு செய்யும் தீமையை நாம் உடனே மன்னித்து மறந்துவிடவேண்டும். அதேநேரத்தில் ஒருவர் நமக்கு செய்யும் நன்மையை நாம் எப்போதும் மறக்கக்கூடாது என்பதுடன், ஒருவர் தனக்கு செய்த நன்மையை நாம் மட்டுமல்லாமல், நம்முடைய பிள்ளைகளும் நினைவில் வைத்திருக்கும்படி அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். அவர்களும் நாம் சொன்னதை நினைவில் வைத்திருப்பதுடன், அவர்களும் அதைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்கள்.

ஜென் கதைகள் 

ஒரு ஜென் கதை இதை விளக்கும் வகையில் அமைந்திருக்கிறது.  

"அவர்கள் இருவரும் இணை பிரியாத நண்பர்கள். ஒருவருக்கு ஒரு துன்பம் வந்தால் மற்றவர் அந்தத் துன்பம் தனக்கே வந்ததாக எண்ணி வருந்துவார். அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் இன்ப துன்பங்களில் சமமாகப் பங்கெடுத்துக்கொள்வார்கள். ஒருமுறை அவர்கள் பாலைவனப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். சுடும் மணலில் நடக்கும் வேதனை தெரியாமல் இருப்பதற்காக அவர்கள் இருவரும் பேசியபடியே நடந்து சென்றார்கள்.

ஒரு கட்டத்தில் ஒரு விஷயத்தைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டு இருந்தபோது, அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு தோன்றிவிட்டது.

கருத்து வேறுபாடே அவர்களுக்குள் வாய்ச் சண்டையாக மாறி, ஒரு கட்டத்தில் ஒருவன் மற்றவனின் கன்னத்தில் அறைந்துவிட்டான். கடுமையான வெயிலில் நடந்த சோர்வு ஒரு பக்கம் வாட்ட, கூடவே தன்னுடைய அருமை நண்பன் தன் கன்னத்தில் அறைந்த வேதனையும் சேர்ந்துகொண்டது. அறை வாங்கியவன் ஒன்றும் பேசாமல் ஓர் ஓரமாகப் போய் உட்கார்ந்துகொண்டான். மணலில் தன் விரலால், 'இன்று என் உயிர் நண்பன் என்னுடைய கன்னத்தில் அறைந்துவிட்டான்' என்று எழுதினான்.

அவன் என்ன எழுதினான் என்று மற்றவனுக்குப் புரியவில்லை. இருவரும் எதுவும் பேசாமலேயே பயணத்தைத் தொடர்ந்தார்கள். இருவருக்கும் தாகம் வாட்டியது.

பாலைவனம் 


அவர்களின் அதிர்ஷ்டம் வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள். நடந்ததை மறந்து அந்த ஊற்றில் இருந்த நீரை தாகம் தீரும்வரை அள்ளி அள்ளி பருகினார்கள். 

அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. கன்னத்தில் அறை வாங்கியவனின் காலை யாரோ இழுப்பதுபோல் இருந்தது. ஆம், அவன் புதைகுழியில் சிக்கிக் கொண்டான்.

புதைகுழியில் சிக்கிக்கொண்ட நண்பனை மிகவும் சிரமப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் கன்னத்தில் அறைந்த நண்பன்.
ஆபத்தில் இருந்து மீண்ட நண்பன் சற்று தொலைவு சென்று அங்கிருந்த பாறையின் மேல் அமர்ந்தான். ஒரு கல்லை எடுத்து தட்டி தட்டி நன்றிஎதையோ எழுத ஆரம்பித்தான்.

அவன் எழுதியது இதுதான்...

'இன்று என் உயிர் நண்பன் என்னுடைய உயிரைக் காப்பாற்றினான்' என்று.

இதையெல்லாம் பார்த்த நண்பன் கேட்டான், ''நான் உன்னை அறைந்தபோது மணலில் எழுதினாய்; இப்போது உன்னைக் காப்பாற்றியதை கல்லில் எழுதுகிறாய். ஏன் இப்படி கல்லில் சிரமப்பட்டு எழுதவேண்டும்? இதற்கு என்ன அர்த்தம்?'' என்று.

அறை வாங்கிய நண்பன் சொன்னான்: ''ஒருவர் நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதி வைத்தால், காலப்போக்கில் மன்னிப்பு என்னும் காற்று அந்த எழுத்துகளை அழித்துவிடும்; ஆனால், அதுவே ஒருவர் நமக்கு நன்மை செய்தால், அதை கல்லில் எழுதி வைத்தால் காலத்தைக் கடந்து நிற்கும்'' என்றான்.

Monday, February 13, 2017

குழந்தைகளை செய்தித்தாள் படிக்க வைக்க 6 சுலப வழிகள்!


குழந்தைகளைப் பற்றிய புகார்கள் வீட்டுக்கு வீடு மாறும் என்றாலும் ஒரு புகார் மட்டும் எல்லோர் வீடுகளிலும் இருக்கும். 'எப்போ பார்த்தாலும் டிவியைப் பார்த்துட்டு, அதுவும் கார்ட்டூன் சேனலைப் பார்த்திட்டே இருக்காங்க' என்பதுதான் அது.

அதிக நேரம் தொடர்ச்சியாக டிவி பார்ப்பதனால் கண் உள்ளிட்ட உடல் உறுப்புகளும் மனநிலையும் பாதிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற பல பெற்றோர்களும் குழந்தைகளை பாடப் புத்தகம் அல்லாத புத்தகங்கள் படிக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொண்டு, தோல்வி கண்டிருப்பார்கள். புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை, குழந்தைகளிடம் உருவாக்க காலை எழுந்ததும் செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை உருவாக்கலாம். 'அதையும் முயற்சி செய்து பார்த்துவிட்டோம்' என உதட்டைப் பிதுக்கும் பெற்றோர்களுக்கு வழிகாட்டும் 6 சுலபமான வழிகள் இதோ:

கிரீடம்

1. செய்திகளை ஏந்தி வரும் கப்பல்: செய்தித்தாளைக் கிழிக்காமல் கப்பல் அல்லது கிரீடம் என... என்னென்ன உருவங்கள் தயாரிக்க முடியுமோ அவற்றைச் செய்யுங்கள். அதை உங்களின் பிள்ளை கண் விழிக்கும்போது, அவர்கள் எதிரில் இருப்பதுபோல வைத்துவிடுங்கள். அவர்கள் அதைப் பார்த்ததும் ஆவலோடு எடுத்துப் பார்ப்பார்கள். பின், இதை எப்படிச் செய்தீர்கள் எனக் கேட்பார்கள். அப்போது, 'அதில் உள்ள செய்திகளைப் படித்துவிட்டு வா கற்றுக்கொடுக்கிறேன்' என்று சொல்லுங்கள். அவர்கள் படித்துவிட்டு, கேட்பார்கள். அப்போது எப்படிச் செய்வது எனக் கற்றுக்கொடுங்கள். இதைப் போல தினந்தோறும் செய்யும்போது, நாளைக்கு என்ன உருவம் தன்னை எழுப்பப் போகிறது என்கிற எதிர்ப்பார்ப்போடு உறங்கச் செல்வார்கள். அந்த எதிர்பார்ப்பு செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை நிச்சயம் உருவாக்கும்.   

செய்தித்தாள்

2. செய்திகளை கட் பண்ணுங்க: செய்தித்தாளின் எல்லா செய்திகளும் குழந்தைகள் படிக்கும் விதத்தில் இருக்காது. அவர்கள் அவசியம் படிக்க வேண்டும் என நீங்கள் நினைக்கும் செய்திகளை நறுக்கி எடுங்கள். காலையில் டீ கொடுக்கும்போது, டம்பளரின் அடியில், குளிக்கச் செல்லும்போது டவலில் செல்லோ டேப்பால் ஒட்டியும் டிபன் சாப்பிடும்போது தட்டில் விளிம்பில்... என காலை வேளையில் குழந்தைப் பயன்படுத்தும் பொருட்களில் அவற்றை இணைத்து வையுங்கள். இதைத் தொடர்ந்து செய்யும்போது, நிச்சயம் அந்த துண்டுச் சீட்டுகள் வழியே செய்தித்தாளைச் சென்றடைவார்கள்.

செய்தித்தாள்

3. டோரா சொல்லும் செய்திகள்: முந்தைய வழியைப் போலவே இது. குழந்தைகளுக்கான செய்தியைச் சுற்றி, அவர்களுக்குப் பிடித்தமான உருவத்தை, உதாராணமாக டோரா பிடிக்கும் எனில் டோராவின் படத்தை அவுட் லைனாக வரைந்து விடுங்கள். டோராவைப் பார்க்கும் ஆவலில் அதனுள் இருக்கும் செய்தியைப் படிக்க ஆரம்பிப்பார்கள். நாட்கள் செல்லச் செல்ல, மற்ற செய்திகளையும் படிக்க விருப்பம் கொள்வார்கள்.

கரும்பலகை

4. மீதி செய்தியைத் தேடிச் செல்லுதல்: அநேகமாக பலரின் வீடுகளில் கரும்பலகை இருக்கிறது. இல்லையென்றாலும் சுவரின் ஏதேனும் ஓர் இடத்தில் கறுப்பு வண்ணம் தீட்டி வைத்திருப்பர். அதில், காலையில் நீங்கள் படித்த செய்தியின் ஒரு பகுதியை எழுதுங்கள். அதாவது, அந்தப் பகுதி முழுமையடையாமல் ஒரு சஸ்பென்ஸோடு இருக்க வேண்டும். அது என்னவென்று தேடி, செய்தித்தாளை ஆவலோடு படிக்கும் விதத்தில் எழுதி வைக்கலாம். செய்தித் தேடும் பழக்கம் செய்தித்தாளைத் தொடர்ந்து வாசிக்கவும் வைக்கும்.

5. வட்டமிட்டு பரிசு பெறு: நீங்கள் காலையில் எழுந்து செய்தித்தாளைப் படிக்கும்போது அதில் உள்ள சொற்களைத் தனியே குறித்துக்கொள்ளுங்கள். அந்தச் சொற்கள் உள்ள பகுதி, குழந்தைகள் படிக்க வேண்டிய பகுதியாக இருக்கட்டும். குழந்தைகள் எழுந்ததும் அந்தச் சொற்கள் ஒவ்வொன்றாகச் சொல்லி, செய்தித்தாளில் எங்கிருக்கிறது எனக் கண்டுபிடிக்கச் சொல்லுங்கள். சொற்களைத் தேடும்போது, அந்தச் செய்தியையும் படிப்பார்கள். சரியாக கண்டுபிடித்ததும் பாராட்டி, சின்னதாக பரிசு ஒன்றையும் கொடுங்கள். இது நாள்தோறும் தொடர்ந்தால், நீங்கள் சொற்களைச் சொல்லும் முன்பே செய்திகளைப் படித்து தயாராக இருப்பார்கள்.

book reading

6. படித்துக்காட்டும் பழக்கம்: 'அம்மாவுக்கு நேரமே இல்லை. நியூஸ் பேப்பரைக் கொஞ்சம் படித்துக்காட்டு' எனப் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி, தம்பி, தங்கை இவர்களில் யாருக்கேனும் ஒருவருக்கு தினமும் செய்தித்தாளைப் படித்துக்காட்டும் பழக்கத்தை உருவாக்குங்கள். அது நாளடைவில், யாருக்கும் படித்துச் சொல்ல வேண்டியதில்லை என்றாலும் தனக்காக செய்திகளைத் தேடிச் சென்று படிப்பர்.

இந்த வழிகளைச் செயல்படுத்தும்போது, செய்தித்தாள் கிழிக்கவோ, கோடுகள் இட்டு சேதமாகவோ செய்யலாம். இவையெல்லாம் குழந்தைகள் தொடர்ந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வரைதான். அதுவரை இரண்டு செய்தித்தாளாக வாங்கலாம். குழந்தைகளுக்கு புத்தக வாசிப்புப் பழக்கம் புதிய உலகைத் திறக்கும்.

Sunday, February 12, 2017

சுந்தர்பிச்சையின் கரப்பான் பூச்சி கதை

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை  தான் பங்கேற்கும் கூட்டங்களில், மாணவர் சந்திப்புகளில் சில சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லி கூட்டத்தை திகைப்பில் ஆழ்த்துவார். அப்படிப்பட்ட ஒரு கதையைத்தான் சுந்தர் பிச்சை சமீபத்தில் தான் படித்த கல்லூரியில் (ஐ.ஐ.டி. கான்பூர்) சொன்னார். அந்த கதை உலக அளவில் வைரலாக பரவி வருகிறது. 

கரப்பான்பூச்சி ஒன்றை மையமாக கொண்ட இந்த கதை படிக்கும் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் வெற்றி குறித்த ஒரு தெளிவை உருவாக்கும் என்பது உண்மை. அது மட்டுமின்றி இப்போது தமிழகம் இருக்கும் சூழலில் இந்த கதை தமிழக ஆளுநருக்கும் பொருந்துப்போகிறது என்பது தான் ஆச்சர்யம்.

சுந்தர்பிச்சை தன் கதையை இப்படித்தான் துவங்கியுள்ளார். ''ஒரு நாள் ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து காபி குடித்து கொண்டு இருந்தேன். எனக்கு சற்று தள்ளி இருந்த டேபிளில் ஒரு நண்பர்கள் குழு அமர்ந்திருந்தது. அவர்களுக்குள் பேசியபடி உணவருந்திகொண்டிருந்தனர். 

அப்போது எங்கிருந்தோ ஒரு கரப்பான் பூச்சி பறந்து வந்து ஒரு பெண்ணின் தோள் மீது அமர்ந்தது. உடனே, அந்த பெண்மணி கத்தி கூச்சலிட்டபடி எழுந்தார். அதிர்ச்சியில் உறைந்த முகத்துடணும், நடுங்கும் குரலுடனும் பதறியபடி கைகளை வீசி ஆடியபடி எழுந்து கரப்பான் பூச்சியை தட்டி விட முயற்சி செய்தார். சற்று நேர முயற்சிக்கு பிறகு அதை தட்டி விட்டுவிட்டார்.

சுந்தர் பிச்சை

ஆனால், அந்த பூச்சி கீழே விழாமல் அவர் பக்கத்தில் இருந்த மற்றொரு பெண்ணின் மீது போய் அமர்ந்து விட்டது. அந்த பெண்மணி இவரைவிட அதிக குரலில் கத்தியபடி அந்த பூச்சியை விரட்ட முயற்சித்தார். சிறிது நேர முயற்சியில் வெற்றியும் பெற்றார்.

மீண்டும் அந்த பூச்சி பறந்து மற்றொருவர் மீது அமர்ந்து கொண்டது. இந்த முறை அது அமர்ந்த இடம் அந்த ஹோட்டலின் சர்வர் ஒருவரின் தோள்பட்டை. அந்த பெண்களின் செயல்களுக்கு  நேர் எதிராக எந்த பதட்டமும் இன்றி அந்த கரப்பான்பூச்சியின் நடமாட்டத்தை கவனித்து சரியான நேரத்தில் அதனை தன் கை விரல்களால் பிடித்து வெளியே எறிந்தார்.

இதனை பார்த்த நான் சிந்திக்க தொடங்கினேன். அந்த பெண்களின் செயல்களுக்கு காரணம் அந்த கரப்பான் பூச்சியா? இல்லை. அந்த பெண்களின் பயந்த சுபாவம் தான், அவர்களை பதட்டப்பட  செய்து உள்ளது. அதே நேரம் அந்த சர்வரின் தீர்க்கமான பதட்டமில்லாத சிந்தனையால் அவரால் சரியாக அந்த பூச்சியை பிடிக்க முடிந்தது.

அப்போது தான் எனக்கு புரிய தொடங்கியது. நம்மை வெளியில் நடக்கும் எந்த நிகழ்வும்  நம் கட்டுபாட்டில் இருக்கும் வரை நம்மை பாதிக்காது. நம்மால் எந்த சூழலையும் எதிர்கொள்ள முடியும். அதற்கு தேவை மன கட்டுப்பாடு தான். எந்த ஒரு விஷயம் குறித்தும் உடனடியாக முடிவு எடுப்பதைவிட சிந்தித்து முடிவு எடுப்பது தான் பயன் தரும்" என்றார்

இந்த கதை மூலம் அவர் கூறிய கருத்து எந்த ஒரு விஷயத்திற்கும் உடனடி முடிவு எடுப்பதைவிட சிந்தித்து முடிவு எடுப்பது தான் வெற்றிகரமான வாழ்க்கைக்கு சிறந்தது.

Saturday, February 11, 2017

உங்கள் மொபைலிலேயே அழகாய் புகைப்படம் எடுக்க 7 டிப்ஸ்!

ஒரு நல்ல புகைப்படம் எடுத்து அதைப் பார்த்து மகிழ ஆசையா?  டிஎஸ்எல்ஆர் கேமரா இல்லையா? உண்மையாக நாம வாழ்க்கைல சந்திக்கிற நிறைய சந்தர்பங்களை டிஎஸ்எல்ஆர் வெச்சு எடுக்க முடியாது. ஆனா இந்த மொபைல்போன் அந்த தருணத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் அதுவே பார்க்க கொஞ்சம் நல்ல இருந்தா...த நேம் இஸ் மொபைல் போட்டோகிராபி. உங்க மைண்ட் வாய்ஸ் கேட்டுடுச்சு.. "தம்பி..   கொஞ்சம் ஐடியாஸ்.."  அதானே?

1.எப்பொழுதும் தயாராக இருங்கள்:

Photography

உங்கள் மொபைலில் கேமராவை உடனே ஓபன் செய்யும் விதமாக ஷார்ட்கட் வைத்து கொள்ளுங்கள். நல்ல தருணங்களை மிக சுலபமாக மிஸ் செய்ய வாய்ப்புண்டு! ஒரு காட்சியை எடுக்கலாம், எடுக்க வேண்டாம் என்று யோசிக்கும் தருவாயில் அது நம்மைக் கடந்து சென்றுவிடும். ஆகையால் கிளிக் செய்ய ஒரு போதும் இரண்டாவது எண்ணம் வேண்டாம். பின் மொபைலை எப்பொழுதும் சார்ஜ் செய்ய மறக்க வேண்டாம்.  லென்ஸ்யும் பளிச்சென வைத்து கொள்ளுங்கள்.

2. உங்கள் மொபைலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:

உங்கள் மொபைல் கேமராவின் சாதக பாதகங்களை அறிந்து வைத்து கொள்ளுங்கள்.உதாரணத்துக்கு சில மொபைல்போன் கேமரா இரவு நேர போட்டோகளுக்கு சரி வராது என்றால் பகல் நேரத்தில் மட்டும் புகைப்படம் எடுக்கப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வெளிச்சம் தான் போட்டோகிராபியின் முக்கிய அம்சம்.. இருந்தாலும் சில காட்சியமைப்புகள் அதை உடைத்துத் தள்ளும்.  

3. ஒரே விதமான ஸ்டைலில் சிக்க வேண்டாம்:

மொபைல் போட்டோகிராபி

நிறைய பேர் ஒரே விதமான புகைப்படங்களை எடுப்பதை பார்த்து இருப்போம். படத்தின் நிறத்தில்கூட மாற்றமிருக்காது.  அந்தத்  தவறை ஒரு போதும் நீங்கள் செய்ய வேண்டாம்.யார் கூறியது உங்களுக்கு லேண்ட் ஸ்கேப் போட்டோகிராபிதான் நன்றாக வரும் என்று? அதைத் தகர்த்து எறியுங்கள்.புது விதமான ஆங்கிள்களை முயற்சி செய்து பார்க்கவும். உதாரணமாக இன்செக்ட் வ்யூ.. அதாவது ஒரு பூச்சி நம்மை எப்படி எங்கு இருந்து பார்க்குமோ, அங்கு கேமராவை வைப்பது. இப்படி நிறைய ஆங்கிள்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு டிஎஸ்எல்ஆர் கேமரா போக முடியாத இடத்திற்கு நம்மை மொபைல் கேமரா கொண்டு செல்லும் என்பதை மறக்க வேண்டாம்.

4. டிஜிட்டல் ஜும்(Zoom) செய்ய வேண்டாம்:

எப்பொழுதும் தவறியேனும் போட்டோ எடுக்கும் பொழுது டிஜிட்டல் ஜும்(Zoom) செய்ய வேண்டாம். இது உங்களது போட்டோவின்  தரத்தை முழுமையாக பாதிக்கும்.நம்மிடம் இருப்பது மொபைல் போன்தான் டிஎஸ்எல்ஆர் கேமரா இல்லை, ஆகையால் முடிந்தவரை... நீங்கள் முன்னே சென்று ஃபோட்டோ எடுங்கள்.. ஃபோட்டோகிராஃபியில் முன்னே செல்வீர்கள்

5.மேக் இட் சிம்பிள்:

மொபைல் ஃபோட்டோகிராஃப்பி


நீங்கள் செய்யும் ஒவ்வொரு காட்சியமைப்பையும் சிம்பிளாக வைத்து கொள்ளுங்கள். வெற்றிடங்களைப்  பயன்படுத்துங்கள். உதாரணமாக வானம், சுவர். அதை வைத்து உங்கள் சப்ஜெக்டை முன் நிறுத்தவும். நிழல்களை மறக்க வேண்டாம்.  இது படத்திற்கு மேலும் வலு சேர்க்கும். அதே போலத்தான் கருப்பு வெள்ளை இமேஜ்களும். இவற்றின் மேல் எப்பொழுதும் ஓர் ஈர்ப்பு இருக்கும். முக்கியமாக  கதை சொல்லும் படங்களே சிறந்த ஒன்றாக இருக்கும். எதையும் எடுக்கிற கோணத்தில் எடுத்தால் ஏதோ ஒரு கதை சொல்லும். மேலே உள்ள புகைப்படத்தின் பூட்டுகள் சொல்லும் கதையை நினைத்துப் பாருங்கள்.

6. எடிட்டிங்கும் முக்கியமான ஒன்றுதான்:

போட்டோகிராபி

நீங்கள் பார்க்கும் சிறந்த புகைப்படங்கள் என கருதும் அனைத்துமே சிறிதாவது எடிட்டிங் செய்யப்பட்டதுதான். மொபைல் போட்டோகிராபிக்கும் இது பொருந்தும். எடிட்டிங் என்றால் இன்ஸ்டாகிராம் ஃபில்டர்களை படத்தின் மீது போடுவது இல்லை.
உங்கள் படங்களில் உள்ள சிறிய வெளிச்சத்  தட்டுப்பாடு  போன்றவற்றை நிவர்த்தி செய்ய சில ஆப்ஸ்கள் உதவியாக இருக்கும். அவற்றைக் கண்டுபிடித்து,  பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

7. பிரின்ட் செய்து பார்க்கவும்:

மொபைல்

நீங்கள் எடுத்த புகைப்படத்தின் மீது நம்பிக்கை வைத்து அதை பிரின்ட் செய்து பார்க்கவும். அதை உங்கள் நண்பர்களுக்கு அளித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக அறைச் சுவர்களில் நீங்கள் எடுத்த படங்களை ஒட்டி வையுங்கள். இது புகைப்படங்களை மொபைல் திரையில் பார்க்கும் அனுபவத்தை விட மிகவும், வேறொரு அனுபவம்  தரும். நம்மையும் உற்சாகப் படுத்திக்கொண்டே இருக்கும்.  

DSLRல எடுத்தா மட்டும் இல்ல, மொபைல்ல எடுத்தும் நம்ம ரசனைகளை மேம்படுத்திக்கலாம். அதற்கான தன்முனைப்பு முக்கியம். ஏதாவது ஒரு வகைல சமூக வலைதளங்கள்ல பகிர்வது, தனி ஃபோல்டர்ல சேமிச்சு வெச்சு, நண்பர்கள்கிட்ட காமிக்கறதுனு பகிர்தல் இருந்துட்டே இருந்தா இன்னமும் உத்வேகமா இருக்கும். 

இதைப் படிச்சு முடிச்சதுமே, உங்க மொபைல்ல செமயா ஒரு அஞ்சு ஃபோட்டோ எடுக்கணும். செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?

Tuesday, February 7, 2017

கோபம் குறைக்க உதவும் 14 வழிமுறைகள்!

ணர்வுகள், மனித வாழ்வின் ஓர் அங்கம். அதிலும், விலங்குகளிடமிருந்து மனிதர்களைப் பிரித்துக் காட்டக்கூடிய சிறப்பான அம்சம். 'எங்க வீட்ல.. அவருக்குக் கோபம் வந்துச்சு... கையில கிடைக்கறதைத் தூக்கிப் போட்டு உடைப்பாரு' எனப் பல பெண்கள் பெருமையாகச் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் இந்தச் செயல், பலவீனத்தின் வெளிப்பாடு. தன்னை மீறி, தன் உணர்வுகளை வன்முறை முறையில் வெளிப்படுத்துதல் என்பது பலவீனத்தின் உச்சம். ஆனால், இது தெரியாமல், அறியாமல் அதிகக் கோபம் வருவதால், தான் ஹீரோ என்றும் பலசாலி என்றும் தங்களைத் தாங்களே நினைத்துக்கொள்வார்கள் சிலர். உண்மையில், அவசியம் கவனிக்கப்படவேண்டிய பிரச்னைகளில் கோபமும் ஒன்று.

கோபம்

கோபத்தை ஆக்கப்பூர்வமாக எப்படி மாற்ற முடியும்... இதை எப்படிக் கையாள்வது... யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் எப்படிக் கட்டுப்படுத்துவது? சுலபமான 14 வழிமுறைகள் இங்கே... 

* கோபம் வரும்போது உங்கள் உணர்வு எப்படி இருக்கிறது என்பதை முதலில் கவனியுங்கள். இதயத்துடிப்பு அதிகமாவது, நகங்களைக் கடிப்பது, வேகமாக சுவாசிப்பது, பற்களைக் கடிப்பது, கைகளை இறுகப் பிடிப்பது இவற்றில் ஏதேனும் சிலவற்றை நீங்கள் செய்துகொண்டிருந்தால், உடனடியாக உங்கள் மனதைச் சாந்தப்படுத்துங்கள். இதுபோன்ற செய்கைகளில் நீங்கள் ஈடுபடும்போது, உங்களுக்கு நீங்களே `அமைதியாக இரு... பொறுமையுடன் இரு... சாந்தமாக இரு' எனத் தொடர்ந்து சொல்லுங்கள். இவை எல்லாம் தற்காலிகமாக உங்கள் கோபத்தைத் தள்ளிப்போட உதவும்.

* சுவாசிப்பதில் கவனம் செலுத்தலாம். உதாரணமாக, ஒன்று முதல் ஆறு வரை மனதில் எண்ணிக்கொண்டே மெதுவாக மூச்சை உள்ளிழுங்கள். பின்னர், அதேபோல ஒன்று முதல் ஏழு வரை எண்ணிக்கொண்டே மூச்சை அடக்க முயற்சி செய்யுங்கள். இறுதியாக, மனதில் ஒன்று முதல் எட்டு வரை  எண்ணிக்கொண்டு மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். இப்படி பத்து முறை செய்து பாருங்கள்... கோபம் மட்டுமல்லாமல், பதற்றமும் பயமும்கூடக் குறைந்துவிடும்.

* அதிகமாகக் கோபப்படுபவர்கள், வேகமாக நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் செய்யலாம். இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். அதோடு, மார்ஷியல் ஆர்ட்ஸ் வகுப்பில் சேர்ந்து அந்தக் கலையை கற்றுக்கொள்வது நல்லது. இதுபோன்ற பயிற்சிகளின்போது நிதானமாக இருப்பது எப்படி என்பதையும் சேர்த்துக் கற்றுத்தருவார்கள். `எதற்கு கோபம் வரணும், வரக்கூடாதே...' என்ற புரிதல் கிடைக்கும். இந்தக் கலைகளைக் கற்றவர்கள் பொறுமைசாலிகளாகவும் மாறுவார்கள். இதனால், கோபம் வெகுவாகக் குறையும்.

கோபம்

* அலுவல்ரீதியாக வரும் கோபத்தையோ, பெரியவர்களிடம் கோபம் வந்தாலோ அதை நம்மால் வெளிகாட்ட முடியாது. அடக்கியும் வைக்கக் கூடாது. இதற்கு எளிய வழி ஒன்று இருக்கிறது. ஒரு பேப்பரில் அவர்களிடம் சொல்ல நினைக்கும் அனைத்து விஷயங்களையும் எழுதுங்கள். எழுதி முடித்ததும் ரிலாக்ஸாக இருப்பதாக உணர்ந்த பிறகு, பேப்பரைக் கிழிந்து எறிந்துவிடுங்கள். இதுபோல மொபைலிலும் டைப் செய்யலாம்; கோபம் அடங்கியதும் அதை அவசியம் டெலிட் செய்துவிடுவது நல்லது. தவறுதலாகக்கூட யாருக்கும் அனுப்பிவிட வேண்டாம்.

* சில நேரங்களில் கட்டுப்படுத்த முடியாத கோபம் ஏற்படும். அப்போது, வீட்டில் ஒரு தனி அறைக்குள் போய், தாழிட்டுக்கொண்டு தலையணையிடம் கோபத்தைக் காண்பிக்கலாம். ஆனால், அதுவும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற சூழலில் ஓர் அழகான கவிதையை எழுத முயற்சிப்பதும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். மனம் ஒத்துழைத்தால், ஒரு பூச்செடியைக்கூட வாங்கிப் பராமரிக்கலாம்.

* விரும்பத்தகாத சூழலில் கோபமான மனநிலையை மாற்றுவதற்காக, மனதுக்குப் பிடித்தவர்களுடன் சிறிது நேரம் பேசலாம். நகைச்சுவை மற்றும் செல்லப் பிராணிகளின் வீடியோக்களை பார்ப்பதால், உடனடியாக மனம் மாறும். கோபம் ஏற்படும் சூழலில் மனதில் ஒன்று முதல் பத்து வரை எண்ண ஆரம்பியுங்கள். பின்னர், அதையே மீண்டும் பத்தில் இருந்து ஒன்று வரை ரிவர்ஸாக எண்ணவும். இந்தக் கால அவகாசம், உங்கள் மனநிலையைச் சற்று மாறச் செய்யும். 

* கோபம் தணிந்ததும், அதற்கானக் காரணம் என்ன... எப்படி... எதனால்... யார்  மீது தவறு என்பதை எல்லாம் நிதானமாக நினைத்துப் பாருங்கள். உங்கள் மீது தவறு இருந்தால், திருத்திக்கொள்ளுங்கள். பிறர் மீது தவறு இருந்தால், ஒரு வாரம் கழித்து அவர்களிடம் நடந்தது என்ன என்பதைத் தெளிவாக விளக்குங்கள். நீங்கள் காயப்பட்டதையும்கூட பொறுமையாக எடுத்துச்சொல்லுங்கள். இதனால், உறவுகளிடம் சிக்கல் ஏற்படாது.

* எப்போதும் நல்ல அமைதியான மனநிலையில் இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஒரு நாளைக்கு பத்து நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள். மனம் அமைதி பெறும்: உள்ளத்தில் தெளிவு உண்டாகும்.

தியானம்

* காரணமில்லாமல் கோபம் வருவது, அந்த நேரத்தில் கட்டுப்படுத்த முடியாமல் முரட்டுத்தனமாகச் செயல்படுவது போன்ற அதீத உணர்ச்சி வெளிப்பாடு இருந்தால், அவசியம் மனநல ஆலோசகர் அல்லது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.

* கோபம் வரும்போது வெளியே போய், சிகரெட் பிடிப்பது, டீ குடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல், கண்களை மூடி உட்காருங்கள். அல்லது தனி இடத்துக்குச் சென்று, குறைந்தது பத்து நிமிடங்களாவது உட்கார்ந்துவிட்டு வாருங்கள். ஃபிரெஷ் ஜூஸ், ஐஸ்க்ரீம் போன்ற சுவையான உணவுகள் மனம் அமைதிபெற உதவுபவை.

* உற்சாகத்துக்கும் உணவுக்கும் சம்பந்தம் உண்டு. ஆரோக்கியமான உணவுகள் ஆரோக்கியமான மனநிலையைத்தான் தரும். துரித உணவுகள், தீய பழக்கங்கள் மோசமான உணர்வுகளையே ஏற்படுத்தும். மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க, ஆரோக்கியமான உணவுகளை உண்பதுதான் நல்லது.

* பசி, அசிடிட்டி, அல்சர், அதீதப் பசி, தலைவலி போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு அதிகக் கோபம் வரும். இவர்கள் நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். அதுவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளாகச் சாப்பிடுவது நல்லது.

* மகிழ்ச்சியான சூழலும் மனநிலையும் வேண்டுமெனில், நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்தெடுங்கள். சிந்திப்பது, பேசுவது, செய்வது என எல்லாவற்றையும் பாசிட்டிவ் கோணங்களில் செய்துவந்தால், மகிழ்ச்சியான சூழல் உங்களைத் தழுவிக்கொள்ளும். 

* சிலருக்குக் கோபம் நோயின் அறிகுறியாக இருக்கும். ஓவர்ஆக்டிவ் தைராய்டு, அதிக கொலஸ்ட்ரால், சர்க்கரைநோய், மனச்சோர்வு, மறதி நோய், ஆட்டிசம், தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்வது போன்ற பிரச்னைகளால்கூட கோபம் வரலாம். இவர்கள் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.

Monday, February 6, 2017

108ன் சிறப்பு தெரியுமா?

108ன் சிறப்பு தெரியுமா?

படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது என்கிறார்கள். பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம், அதற்கு இதோ ஒரு சில உதாரணங்கள்.

* வேதத்தில் 108 உபநிடதங்கள்.

* பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பதுகோல சைவ, வைணவ திவ்ய ÷க்ஷத்திரங்கள் 108.

* பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.

* பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்கு.

* நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108

* அர்ச்சனையில் 108 நாமங்கள்

* அரமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.

* சூரியனின் விட்டம் பூமியில் விட்டத்தைப் போல 108 மடங்கு.

ஒர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதே எண்ணிக்கையில் பல விஷயங்களும் அமைகின்றன.

* தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள்.

* திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108

* ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

* மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக புத்தமதம் கூறுகிறது.

* முக்திநாத் ÷க்ஷத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.

* உத்தராகண்டில் ஜோகேஸ்வரர் சிவன் கோவிலில் 108 சிவசந்நிதிகள்.

* உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.

* குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.

* மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

* சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்கள்.

* 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.

108 என்பது வரையறைக்குட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது.

"1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் "0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும், 8 என்பது எட்டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.

ஜபமாலையில் 108 மணிகள் ஏன்?

ஜபமாலையில் 108 அல்லது 54 அல்லது 27 மணிகள் கொண்ட மாலைகளும் உண்டு. இந்த எண்ணிக்கைகளைக் கூட்டினால் ஒன்பது வருகிறது. (1+0+8: 5+4 : 2+7).

Sunday, February 5, 2017

Invitation for PRANA PRATISHTA OF SHRI SHIRDI SAI BABA MOORTI

 

Invitation for

PRANA PRATISHTA

OF

SHRI SHIRDI SAI BABA MOORTI

(Ashta Bhandhana Maha Kumbabhishekam)

 

The Chairman and Board of Trustees having pleasure in inviting all Sai devotees and general public to participate in the Prana Pratishta of Shri Shirdi Sai Baba Moorti at Shirdi Sai Gurusthan Mandir, Edayarpalayam, Thadagm Road, Coimbatore on Thursday, 09th March 2017 at 10:35 hrs.


Looking forward to your august presence for this occasion and get the blessings of Shri Shirdi Sai Baba.

Ever yours,

At the Feet of the Master,

N. Sivanandam


https://shirdisaigurusthan.org                   saibaba@shirdisaigurusthan.org                 +91 8056441369

 

 

AGENDA


Venue: Shirdi Sai Gurusthan Mandir, Edayarpalayam, Coimbatore 641025, India


(Route: Google Maps, 'Shirdi Sai Gurusthan Trust, Coimbatore, Tamilnadu')

 

Monday, 06th March 2017, 18:00 hrs onwards:

Inviting Shivaacharyaas with Poorna Kumbha and entering inside temple. Vigneshwara Pooja, Swasthisuddha Punyaahavaasanam, Panchakavya Pooja, Family Deity Pooja, Anugnai,

 

Tuesday, 07th March 2017, 05:50 hrs onwards:

Vigneshwara Pooja, Swasthisuddha Punyaahavaasanam, Maha Ganapathi Kalasa Sthabhanam, Maha Ganapathi Homam, Poornahudhi,

20:30 hrs onwards:

Maha Ganapathi Pooja, Vaasthu Purusha Indhrathi, Ashtathik Palaga Kalasa Sthabhanam, Vaasthu Shaanti Pooja, Homam, Poornahudhi, Ashtabali haaranam, Dheeparathi,

 

Wednesday, 08th March 2017, 05:50 hrs onwards:

Vigneshwara Pooja, Swasthisuddha Punyaahavaasanam, Kangana Thaaranam, Naanthi pooraga mahasangalpam, Yagnopavitha thaaranam, Sakala Parivaara Devatha Kula Devatha Moola pradhana Shri Shirdi Sai Baba Kalasa Sthabhanam, Sakala Upachaara Pooja, Homa Pooja, Poornahudhi, Maha Deeparadhana, Madhyan Pooja.

17:30 hrs onwards,

Vigneshwara Pooja, Ganapathi Homam, Navagraha Homam, Ashtathik palaga Homam, Rudhra Homam, Shri Suktham, Purusha Suktham, Narayana Suktham, Shri Suktham, Hiranya Suktha Homam, Parayana, Poornahudhi, Deeparathana,

 

Thursday, 09th March 2017, 05:30 hrs onwards:

Maha Ganapathi Pooja, Maha Ganapathi Homam, Navagraha Homam, Ashtathik palaga Homam, Rudhra Homam, Shri Suktham, Purusha Suktham, Narayana Suktham, Shri Suktham, Hiranya Suktha Homam, Parayana, Poornahudhi, Deeparathana, Visharjanam,


10:35 hrs:        Maha Kumbhabhisekam

11:00 hrs:             Shri Sai Baba Abhisheka Pooja

12:00 hrs:             Madhyan Aarati

18:00 hrs:             Dhoop Aarati

19:30 hrs:             Abhisheka Pooja, Shri Sai Ashtothram, Sai Nama Japam, Group Prayers.

21:00 hrs:             Shej Aarati