Friday, July 8, 2011

தாம்பத்தியம் - 21

தாம்பத்தியம் - 21


கணவன் மனைவி பாதை தவறுவது (மாறுவது )எதனால்??

பல காரணங்கள் இருக்கிறது. இது தான் என்று எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் சொல்ல இயலாது. ஆனால் பொதுவாக சில காரணங்களை இங்கே கூறலாம் என்று இருக்கிறேன்.

* ஒருத்தருக்கு மற்றொருவர் மீதான அதிகபடியான பொசசிவனெஸ்
*  உடல் ரீதியான திருப்தியின்மை
*  மன பொருத்தம் இல்லாமை
*  கணவன் மனைவிக்கு இடையில் அதிகபடியான வயது வித்தியாசம்.

அதிகபடியான பொசசிவ்னெஸ்

பாதை தவறி செல்வதற்கு இது எப்படி காரணமாகும் என்று நீங்கள் யோசிக்கலாம். ஒருவர் மேல் மற்றொருவருக்கு அதிகபடியான அன்பு, காதல் இருப்பது எப்படி தவறாகும். அந்த அன்பின் காரணமாகத்தான் தன்  துணையை சந்தேகபடுவதும் , கண்டிப்பதும் ஆகும். இதை  காரணமாக வைத்து எப்படி தவறான பாதைக்கு போவார்கள் என்று கேள்வி எல்லாம்...!!  அதிக  அன்பு வைப்பது கூடாதா....??

அன்பு வைப்பது  தவறாகாது....ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் அதீத அன்பு ஒரு கட்டத்தில் வெறுப்பில் கொண்டு போய் விட்டு விடுகிறது....அன்பு எப்படி வெறுப்பாகும் என்று முதலில் பார்போம்.....

ஒருவர் மீது ஒருவர் 'நீ இப்படித்தான் இருக்கணும், வேற யாரிடமும் அன்பா இருக்க கூடாது, உன் அன்பு முழுவதும் எனக்கு மட்டும்தான் ' என்று சொல்லும் போது தொடக்கத்தில் மிகவும் மகிழ்வாக இருக்கும். அன்பை மழையாய் பொழியும் போது பரவஸத்தில் அப்படியே ஆழ்ந்து போய் விடுவார்கள். ஆனால் போக போக இந்த பேரன்பு கொடுக்கிற அதிகபடியான அழுத்தம் நம்மை நாமாக இருக்க விடாது...!!

எப்படி இதில் இருந்து வெளிவர போகிறோம் என்று துடிக்க வைத்துவிடும்...ஒருவரின் இயல்பை மாற்ற முயற்சிக்கும் போது அது இருவருக்கும் இடையிலான உறவையே கெடுத்து முடிவுக்கு கொண்டு வந்து விடுகிறது.....அதற்கு பிறகு, தன் இயல்பை அப்படியே ஏற்றுகொள்ளும் வேறு ஒருத்தரின் பால் கவனத்தை திசை திருப்பி விடுகிறது....!?

சிறு பிள்ளை அல்லவே நாம்

நம் குழந்தைகளிடம் கூட நீ இப்படி இருக்கணும், இப்படி இருக்க கூடாதுன்னு நம் விருப்பத்தை திணிக்க முடியாது. ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் உண்டு. இதை விடுத்து நாம் பிரஷர் கொடுத்தோம் என்றால் நம்மிடமிருந்து கொஞ்சங்  கொஞ்சமாக  விலகி தள்ளி போவார்களே தவிர பாசிடிவாக எந்த பலனும் கிடைக்காது. எல்லோரின் மனதும் தன் நிம்மதி , தன் சந்தோசம் என்ற ஒன்றுக்காகத்தான்  ஏங்கிக்கொண்டிருக்கிறது.....! இந்த நிம்மதியையும், சந்தோசத்தையும் கொடுக்கிற ஒரு நல்ல அன்பு நெஞ்சம் தான் தேவையே தவிர, அன்பு என்ற பெயரில் நம்மை அழுத்தும்  ஒரு சக்தி தேவை  இல்லை.....!!?

திருமணம் முடிந்த புதிதில் கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக பொசசிவ்வாக   இருப்பது அப்போது இனிமையாக இருக்கலாம். ஆனால் குழந்தைகள் , வேலை  பளு என்று வந்த பின்னும், இது தொடர்ந்தால் காலபோக்கில் சந்தேகமாக மாற கூடிய வாய்ப்புகள் தான் அதிகம்.  'ஆரம்பத்தில் நீ எங்க போனாலும், என்ன செய்தாலும் என்கிட்ட சொல்லுவ...., இப்ப வர வர எதுவும் சொல்றது இல்லை , ஏன் இப்படி மாறிட்ட...??'  இப்படிப்பட்ட வார்த்தைகள் வரத்  தொடங்கும்....! பின்னர் இந்த வார்த்தைகள் தடிக்க தொடங்கி பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பிக்கும்... ஆனால் இந்த மாதிரி ஆட்கள் ஒன்றை புரிந்துக் கொள்வதில்லை.    

திருமணம் முடிந்த புதிதில் புதிய சூழல், புது மனிதர்கள் சுற்றி இருக்க, தன் துணையை மட்டுமே முழுதாய் சார்ந்து இருக்க வேண்டி இருப்பதாலும், பெரிய பொறுப்புகள் ஏதும் இல்லாத அந்த சூழ்நிலையில் ஒருவருக்கு ஒருவர், மாறி மாறி அன்பை பொழிந்து தள்ளுவார்கள். அந்த சமயத்தில் சின்ன சின்ன விஷயம் கூட  ரொம்ப முக்கியமாகப்படும்    தன் துணையிடம் பகிர்ந்து கொள்ள நேரமும் கிடைத்து இருக்கும், ஆனால் சில வருடங்கள் கடந்த  பின் இருவருக்குமே பொறுப்புகளும், கடமைகளும் அதிகரித்திருக்கும். எதையும் சொல்லகூடாது என்று யாரும் வேண்டும் என்றே மறைக்க போவது இல்லை. ஆனால் 'சின்ன விசயம் தானே, இதை போய் எதுக்கு சொல்லிக்கிட்டு'  'மெதுவாக சொல்லிகொள்ளலாம்' என்று அசட்டையாக இருந்திருக்கலாம்.  

தன் கைக்குள்....!

தன் துணை தன் கைக்குள் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால் பள்ளி செல்லும் சிறுவன், சின்ன சின்ன விசயத்துக்கும் அம்மாவின் அனுமதியை எதிர்பார்ப்பது போல், துணையின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல்  மட்டும் தான் நடக்க வேண்டும் என்று வற்புறுத்துவது தான் தவறு.

"வளைந்து நெளியும் நாணலுமே, குறிப்பிட்ட அளவிற்கு மேல்  வளைத்தால் ஒடிந்துதான் போகும்"

நிதர்சனம்

கணவன் மனைவியாக இருந்தாலுமே, இருவருமே தனி தனி நபர்கள் , தனிப்பட்ட விருப்பங்கள், தனிப்பட்ட இயல்புகள் என்று இருக்கும். ஒருவருக்காக மற்றொருவர் முழுதாய் மாறுவது என்பது முடியாத காரியம்.  தனது சுயத்தை இழப்பது யாராலும் இயலாது. ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்துக்கு மாறாக  அவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவது துணையாக இருந்தாலுமே, இன்றைய காலகட்டத்தில் தவறுதான்.  'துணை தன் இயல்பு படி செயல்படுவதே, அவர்களுக்கு  நிம்மதியை  தரும்' என்பதை மற்றொருவர்  புரிந்து கொண்டு நடப்பதே, தாம்பத்தியதிற்கு நல்லது.   

எதிர் விளைவு

முக்கியமான எதிர் விளைவு ஏற்படக்கூடிய  வாய்ப்பு ஒன்றும் உள்ளது....?! ஒருவர் விருப்பத்திற்கு மாறாக மற்றொருவர் வளைக்க முயலும்போது, தனக்கு சாதகமான விசயங்களை மட்டும் சொல்லிவிட்டு பாதகமான விசயங்களை மறைக்க பார்ப்பார்கள். நீங்களாகவே  அவர்களை திருட்டுத்தனத்தை செய்ய வைக்கிறீர்கள்.....??! இறுக்கி பிடித்தால் திமிறத்தான் பார்ப்பார்களே தவிர பிடிக்குள் இருக்க மாட்டார்கள். இப்படியும் கணவன்/மனைவி பாதை மாற வழி ஏற்பட்டுவிடுகிறது. 

கணவன் மனைவி இரண்டு பேருக்குமே இப்படி over possessive   என்ற விதத்தில் அழுத்தும் அதீத அன்பே துணையை மூச்சு திணறடித்து விடும்.  இதில் இருந்து வெளிவர space தேவை.  இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் வெளியிடங்களில் பேச பழகி கொண்டிருக்கிற ஒரு நட்புடன் சாதாரணமாக ஏற்படும் ஒரு பழக்கம் ஈர்ப்பில் கொண்டுபோய் விட்டு விடுகிறது.....?? 

பாதைகள் மாறுகின்றன....விருப்பம் இன்றி பயணமும் தொடர்ந்து விடுகிறது....!!??