Wednesday, July 6, 2011

மாரடைப்பு - ஒரு விரிவான பார்வை

மாரடைப்பு - ஒரு விரிவான பார்வை

இந்தக்கட்டுரையின் ஆசிரியர் மருத்துவர் எஸ்.கே.பி. கருப்பையா அவர்கள். இணையத்தில் ஆங்காங்கே இருந்தவற்றை இங்கு மொத்தமாக தொகுத்திருக்கிறேன்.

லகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.

மாரடைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது?யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு? இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

மாரடைப்பு என்றால் என்ன?

ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம், ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் வழியாக அனுப்புகிறது.

இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன. சில காரணங்களால் இத்தடைக்கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இதயத்தின் அத்தசைப் பகுதி உணவும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு.


இதய ரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது?

ரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில், பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து (Fatty Streak) படிய துவங்குகிறது. காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது. இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்கிறது.


மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?

காரணங்கள் இரண்டு.
ஒன்று நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை,
மற்றொன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை.

கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள் – புகை பிடித்தல், உயர் ரத்தஅழுத்தம், உடலின் எடை, உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய்.

கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் – வயது, பரம்பரையாக வரும் மரபணுத்தன்மை.

இது தவிர ரத்தக்குழாயில் எவ்வித அடைப்பு இன்றியும் மாரடைப்பு வரலாம். ஆனால் இது மிகச்சிலரையே பாதிக்கிறது. இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இதயத்தின் ரத்தக்குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும், இவ்வகை மாரடைப்பு, புகை பிடிப்போர், கொக்கைன் போன்ற மருந்து உட்கொள்வோர், மிகவும் குளிர்வான பகுதிகளுக்கு செல்வோர், மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோரை அதிகம் பாதிக்கிறது.


மாரடைப்பின் அறிகுறிகள் என்ன?

மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம். சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு "அமைதியான மாரடைப்பு" என்று பெயர்.


இதய வலியின் வெவ்வேறு தன்மைகள் :

பொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும்.

அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ,
ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ,
நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ,
நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.

சில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் உண்டாகும் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே கூட மேற்கூறிய அறிகுறிகள் தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும். இதற்கு "ஆஞ்சைனா" என்று பெயர். நாளடைவில் முன்பை விட குறைவான செயல்பாட்டிலேயே அத்தகைய வலி வந்தால் அல்லது ஓய்வுக்கு பின்னும் அவ்வலி உடனே மறையாமல் இருந்தால் அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி.

மேற்கூறிய வலி நெஞ்சின் நடுப்பாகத்தில் இல்லாமல் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க கைகளிலோ, நடுமுதுகிலோ, கழுத்திலோ, முகத்தாடையிலோ, வயிற்றிலோ கூட வரலாம். இத்தகைய வலியுடன் வாந்தியெடுப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், அதிக வியர்வை போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகள்.


மாரடைப்பை கண்டறிவது எப்படி?

நெஞ்சுவலியின் தன்மை பற்றி முழுமையாக கேட்டு, மாரடைப்பு வருவதற்கான காரணம் உள்ளதா என அறிந்து சில மருத்துவ பரிசோதனை செய்யப்படுகின்றன. அதன் மூலம் ஒருவருக்கு மாரடைப்பு வந்துள்ளதா என கண்டறியப்படுகிறது.

இ.சி.ஜி., (எலக்ட்ரோ கார்டியோ கிராம்):

இதயம், மெல்லிய இழைகளாலான மின்சார வலையால் இயற்கையாகவே பின்னப்பட்டுள்ளது. இம்மின்சார இழைகளில் தானாக உருவாகும் மின் அலைகளால்தான் இதயம் சீராக இயங்குகிறது. ஒவ்வொரு இதய துடிப்பின்போதும், இத்தகைய மின்அலைகள் இதயத்தின் மேல்பாகத்தில் இருந்து அடிப்பாகம் வரை சீராக, முறையாக பரவுகிறது.

இவ்வாறு இதயத்தில் பலபாகங்களில் ஒவ்வொரு இதய துடிப்பின்போதும், உருவாகும் மின்அலைகளை ஒரு இயந்திரத்தின் உதவியால் ஒரு தாளில் பதிவு செய்வதே இ.சி.ஜி., எனப்படுகிறது.

மாரடைப்பு வருவோருக்கு இத்தகைய மின்அலைகளின் பதிவில் மாற்றங்கள் ஏற்படும். அத்தகைய மாற்றங்களை வைத்து ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா, எப்போது ஏற்பட்டது, இதயத்தின் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.


ரத்தப் பரிசோதனைகள்:

மாரடைப்பு ஏற்படும்போது இருதய தசையின் எந்தப் பாகத்தில் ரத்த ஓட்டம் தடைபடுகிறதோ, அப்பகுதி சில மணி நேரங்களில் செயலிழக்கிறது. இவ்வாறு செயலிழந்த தசைப் பகுதியில் இருந்து புரதச் சத்து கலந்த பலவகை ரசாயன பொருட்கள் கசிந்து ரத்தத்தில் கலக்கின்றன.

மாரடைப்பு ஏற்பட்டு, இரண்டு மணி நேரத்தில் இருந்து ஏறத்தாழ மூன்று நாட்கள் வரை வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு விதமான ரசாயனப் பொருள் கசிந்து ரத்தத்தில் கலக்கிறது. ரத்தத்தில் இவ்வாறு கலக்கும் இரசாயன பொருட்களின் அளவை வைத்து மாரடைப்பு உறுதி செய்யப்படுகிறது.

மேலும் மாரடைப்பு ஏற்பட்ட நேரம், மாரடைப்பின் அளவு, இத்தகைய மாரடைப்பால் பின்னாளில் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பவை பற்றியும் ஓரளவு துல்லியமாக கணிக்கலாம்.

மாரடைப்பின்போது பொதுவாக ரத்தத்தில் பின்வரும் இரசாயனப் பொருட்கள் பரிசோதிக்கப்படுகின்றன.
1) Myoglobin,
2) Troponin.


கொரனரி ஆஞ்சியோகிராம்:

இதயத் தசைகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாயைப் பரிசோதிப்பதற்காகவும், இதய அறைகள் நல்ல முறையில் இயங்குகின்றனவா, இருதயத்தின் எந்த பாகம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்காகவும் எடுக்கப்படும் ஒருவித சிறப்பு தன்மை வாய்ந்த "எக்ஸ் ரே' தான் கொரனரி ஆஞ்சியோகிராம்.

ரத்தப் பரிசோதனை மூலம், இதய தசைக்குச் செல்லும் மூன்று ரத்தக்குழாய்களில் எந்த குழாயில் அடைப்பு உள்ளது, எத்தனை அடைப்புகள் உள்ளன, அடைப்பின் தன்மைகள் என்ன, அடைப்புகள் எளிதாக பலூன் முறை மூலம் சரிப்படுத்துவதற்கு ஏதுவாக உள்ளதா என்பவற்றை கண்டறியலாம்.


ஆஞ்சியோகிராம் செய்யப்படுவது எப்படி?

* பொதுவாக இது எந்தச் சிக்கலோ, பக்கவிளைவோ இன்றி எளிதாக செய்யப்படும் பரிசோதனை.

* மெல்லிய, வளையும் தன்மை கொண்ட, நீளமான பிளாஸ்டிக் டியூப்கள் வலது கையின் மணிக்கட்டில் உள்ள ரத்தக்குழாய் மூலமாகவோ, வலது அல்லது இடது பக்கத் தொடைகளின் மேல்பகுதி இடுப்பில் உள்ள ரத்தக்குழாயின் வழியாகவோ செலுத்தப்பட்டு, பிளாஸ்டிக் குழாயின் நுனிப்பகுதி இதயத்தின் ரத்தக்குழாய்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

* இந்த பிளாஸ்டிக் குழாய்கள் வழியாக எக்ஸ்ரே மூலம் எளிதில் பார்க்கக் கூடிய ஒருவித சிறப்பு வேதியியல் பொருள் இருதயத்தின் ரத்தக்குழாய்க்குள் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் இருதய ரத்தக் குழாயின் தன்மைகளை முழுமையாக பரிசோதிக்கலாம்.

* இந்தப் பரிசோதனையை எந்த வலியில்லாமலும், மயக்க மருந்து கொடுக்காமலும் எளிதாக செய்யலாம். மருத்துவ மனையில் ஓரிரு நாட்கள் தங்கினால் போதும்.


எக்கோ கார்டியோ கிராம்:

* இதுவும் ஒரு எளிதான, வலி ஏதும் இல்லாத பரிசோதனையே. பொதுவாக இது மாரடைப்பை கண்டுபிடிக்கத் தேவையான கட்டாய பரிசோதனை அல்ல.

* ஆனால் சில சமயங்களில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்ற சந்தேகம் எழும்போது இ.சி.ஜி., பரிசோதனையில் எந்த மாற்றமும் தெரியாமல் இருக்கலாம்.

* குறிப்பாக மாரடைப்பு இதயத்தின் பின்பாகத்தில் ஏற்படும்போது, இ.சி.ஜி.,யில் எந்த மாற்றமும் தோன்றாமல் இருக்கலாம்.

* இத்தகைய சூழலில் எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

* இப்பரிசோதனையில் இடதுபுற மார்பு பகுதியில் இருந்து அல்ட்ரா சவுண்ட் முறை மூலம், இருதய தசையின் எல்லா பாகங்களின் செயல்பாடுகளையும் துல்லியமாக கண்டறியலாம்.

* மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பாகத்தின் செயல்பாடு குறைந்திருப்பதை இப்பரிசோதனையில் கண்டறிந்து, மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையும், அதன் அளவையும் உறுதி செய்யலாம்.


மாரடைப்பு வந்த பின் பாதுகாத்து கொள்வது எப்படி?

ஒருவருக்கு மாரடைப்பின் அறிகுறிகள் தென்பட துவங்கியதும் எவ்வளவு விரைவாக மருத்துவ சிகிச்சை பெறுகிறோமோ, அந்தளவிற்கு, இருதய தசையின் செயலிழப்பை தவிர்க்கவோ அல்லது பாதிக்கப்பட்ட இருதய தசையின் அளவை குறைக்கவோ முடியும்.

இதனால் பின்னாளில் வரும் இருதய பலவீனம், இருதயத்தை சுற்றியுள்ள மின்வலைகளின் செயல் பாடுகளில் ஏற்படும் திடீர் குறைபாடுகள் (அதிவேகமாக அல்லது குறைவாக இருதயம் துடிப்பது) போன்றவற்றால் நேரும் வேண்டாத, விபரீத விளைவுகளை தவிர்க்கலாம். குறிப்பாக மாரடைப்பின் அறிகுறிகள் தென்பட துவங்கிய பின், ஒரு மணி நேரம் மிக முக்கியமானது.
ஏனெனில், அந்த ஒரு மணி நேரத்தில்தான் 80 சதவீத மரணங்கள் நிகழ்கின்றன. மாரடைப்பு என சந்தேகம் வந்தவுடன், காலம் தாழ்த்தாமல் விரைவாக பெறப்படும் முதலுதவி சிகிச்சை முறையால் பல பக்க விளைவுகளை தவிர்க்கலாம்.

துரதிர்ஷ்டவசமாக நம்மில் பலர் மாரடைப்பின் பலவித அறிகுறிகளை அறிந்திராததாலோ, அஜீரண கோளாறு என்று நினைத்தோ, நமக்கெல்லாம் மாரடைப்பு வராது என்று நம்பியோ, முக்கியமான முதல் ஓரிரு மணி நேரத்தை வீணாக்கி விடுகிறோம்.

வணிக உலகில், "நேரம்தான் பணம்' என்பர். அதைப் போல மாரடைப்பை பொறுத்தவரையில், "நேரம்தான் உயிர்!' எனவே, மாரடைப்பின் அறிகுறி என சந்தேகித்ததும், காலத்தை சிறிதும் வீணாக்காமல், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று, பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது மிகவும் அவசியமானது.


மாரடைப்புக்கான சிகிச்சை முறை :

மாரடைப்பு என சந்தேகித்ததும் மருத்துவரால் செய்யப்படும் முதலுதவி:

நோயாளிக்கு ஆக்சிஜன் கொடுப்பது,
ஆஸ்பிரின் மாத்திரை தருவது,
நாக்கின் அடியில் வைக்கப்படும் மாத்திரை தருவது.
நெஞ்சு வலியும், மனப்பதட்டமும் குறைய மருந்துகள்.
இருதய துடிப்பு அதிவேகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ இருக்கும் போது செய்யப்படும் உயிர்காக்கும் சிகிச்சை முறை.

இத்தகைய முதலுதவி மூலம் மட்டுமே மாரடைப்பால் ஏற்படும் வலியை குறைக்கலாம். மாரடைப்பின் தாக்கத்தையும், தீவிரத்தையும் கட்டுப்படுத்தலாம். உரிய நேரத்தில் முதலுதவி பெறுவதால், மாரடைப்பால் நேரும் திடீர் மரணங்களை தவிர்க்கலாம்.


மாரடைப்பு உறுதியான பின், செய்யப்படும் சிகிச்சை முறைகள்:

1) மருந்துகள் மூலம் சிகிச்சை
2) செயல்முறை மூலம் சிகிச்சை அளித்தல்.

மருந்துகள் மூலம் சிகிச்சை:

இதில் பலவகை மருந்துகள் சிகிச்சை முறையில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது ரத்தக் கட்டியை கரைக்கும் மருந்து.

* அடைபட்ட இருதய ரத்தக் குழாயில் உள்ள ரத்தக்கட்டியை கரைத்து, மீண்டும் பாதித்த பகுதிக்கு ரத்த ஓட்டத்தைக் கூடிய விரைவில் சரி செய்யும் பொருட்டு, உடலின் ரத்தநாளத்தின் வழியே இம்மருந்து செலுத்தப்படுகிறது.

* இத்தகைய மருந்து, மாரடைப்பு துவங்கிய இரண்டு முதல் ஆறு மணி நேரத்திற்குள் செலுத்தப்பட்டால் மிகுந்த பலனளிக்கக் கூடியதாக இருக்கும்.

* ஆனால், சூழலுக்கு ஏற்ப இருதய வலி துவங்கி 12 முதல் 24 மணி நேரம் வரை கூட சிலருக்கு இம்மருந்து செலுத்தப்படலாம்.

* அத்துடன் இருதயத் தசைகளை, மாரடைப்பு ஏற்படுகிற அந்த சமயத்திலும், பிற்காலத்திலும் பாதுகாப்பதற்காக ஒரு சில முக்கியமான மாத்திரைகளும் தரப்படும்.

* அவற்றுள் சிலவற்றை நீண்ட வருடங்கள்... ஏன், வாழ்நாள் வரை கூட உட்கொள்ள வேண்டியிருக்கும்.


செயல்முறை (Procedure) சிகிச்சை:

மாரடைப்புக்கு மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பதையடுத்து, செயல்முறை மூலமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது இரண்டு வகைப்படும்.
1) ஆன்ஜியோ பிளாஸ்டி
2) பைபாஸ் அறுவை சிகிச்சை.


ஆஞ்சியோ பிளாஸ்டி என்பது என்ன?

ஆன்ஜியோகிராம் செய்வது போலவே இருதய ரத்தக்குழாயினுள் பிளாஸ்டிக் டியூபைச் செலுத்தி, அதன் வழியாக எளிதாக அடைப்பை சரிசெய்யும் முறையே ஆன்ஜியோ பிளாஸ்டி. இது அறுவை சிகிச்சை அல்ல. மயக்க மருந்தும் தேவையில்லை.


ஆன்ஜியோ பிளாஸ்டி எவ்வாறு செய்யப்படுகிறது?

ஆன்ஜியோகிராம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குழாயைவிட சற்று தடித்த, அகலமான, எளிதில் வளையும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் டியூப் (Guide Catheter) தேர்ந்தெடுக்கப்படுகிறது.
வலது கையின் மணிக்கட்டிலோ, தொடைகளின் மேல்பகுதியில் உள்ள ரத்தக்குழாய் வழியாகவோ இந்த டியூப் செலுத்தப்பட்டு, அதன் நுனிப்பகுதி பாதிக்கப்பட்ட அல்லது அடைப்பு உள்ள இதய ரத்தக் குழாயின் ஆரம்பப்பகுதியில் நிறுத்தப்படுகிறது. அடுத்து மிக எளிதில் வளைந்து செல்லும் தன்மையை நுனிப்பகுதியாக கொண்ட நீண்ட மெல்லிய இழை (Guide Wire) கைடு டியூபின் வழியாக அடைப்பு உள்ள ரத்தக் குழாய்க்குள் செலுத்தப்படுகிறது. இதற்கு "வழிகாட்டி இழை' என்று பெயர்.

இந்த வழிகாட்டி இழையின் மூலம் ரத்தக்குழாயில் உள்ள அடைப்பின் தன்மைக்கு ஏதுவான சுருக்கப்பட்ட பலூன் எடுத்துச் செல்லப்பட்டு, அடைப்பு உள்ள பகுதியில் நிறுத்தப்படுகிறது. இப்போது அந்த பலூனை விரிவடையச் செய்வதன் மூலம், அடைப்பின் பெரும்பகுதி ரத்தக்குழாயின் தசை சுவர்களுக்குள் அழுத்தப்படுகிறது. ரத்தக்குழாயின் வழி அகலப்படுத்தப்படுகிறது. அதன் பின் பலூன் மீண்டும் சுருக்கப்பட்டு ரத்தக்குழாயில் இருந்து வெளியே எடுத்து வரப்படுகிறது. இச்செய்முறையால் அடைப்பால் பாதிக்கப்பட்ட இருதய தசைக்கு ரத்த ஓட்டம் மீண்டும் சீராக்கப்படுகிறது.

அகலப்படுத்தப்பட்ட ரத்தக்குழாய் மீண்டும் சுருங்கி அடைபடாமல் தடுக்க, மெல்லிய, விரியும் தன்மை கொண்ட, பால்பாயின்ட் பேனாவில் உள்ள ஸ்பிரிங் போன்ற "உலோக வலை' (Stent) அவ்விடத்தில் பொருத்தப்படுகிறது.

இந்த உலோக வலை இரு வகைப்படும்.
1. சாதாரண உலோக வலை (Bare Metal Stent)
2. மருந்து தடவப்பட்ட உலோக வலை (Drug Eluting Stent).

மருந்து தடவப்பட்ட உலோகவலை சில காரணங்களால் சாதாரண உலோக வலையைவிட சிறப்பானது. ஆனால் விலை அதிகமானது.

எல்லாருக்கும் மருந்து தடவப்பட்ட உலோக வலை தான் பொருத்தப்பட வேண்டும் என்பதில்லை. இதய ரத்தக்குழாயின் அடைபட்ட பகுதியின் அளவு, சர்க்கரை நோய் பாதிப்பு போன்ற சில காரணங்களைக் கருத்தில் கொண்டு எத்தகைய உலோக வலை பொருத்த வேண்டும் என மருத்துவரே தீர்மானிப்பார். மாரடைப்பு வந்து மூன்றில் இருந்து எட்டு மணி நேரத்திற்குள், மருத்துவமனை வருவோருக்கு ரத்தக்கட்டியைக் கரைக்கும் மருந்து தராமலேயே இத்தகைய சிகிச்சை முறை மேற்கொள்வதே மிகச்சிறந்ததாகும்.

மேலும் சிலவகை மாரடைப்புக்கு ரத்தக்கட்டியை கரைக்கும் மருந்து தரமுடியாது. அத்தகைய சூழலில் ஆன்ஜியோ பிளாஸ்டி போன்ற இத்தகைய சிகிச்சை முறைதான் உகந்ததாக இருக்கும்.

இந்த சிகிச்சைக்கு பின் இரண்டாவது நாளில் எழுந்து நடமாடலாம். நான்கு அல்லது ஐந்து நாட்களில் வீடு திரும்பலாம்.

நம்மில் பலருக்கு மாரடைப்பு வந்தபின், "இயல்பான, கடுமையான உழைப்புடன் கூடிய முழுமையான வாழ்க்கை வாழ்வது கடினம்; இனிமேல் ஒருவித ஓய்வு பெற்ற வாழ்க்கை முறை தான்' என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. இது முற்றிலும் உண்மை அல்ல.

மாரடைப்பு வந்தவுடன் காலம் கடத்தாமல் விரைவாக, முறையாக சிகிச்சை பெற்றோருக்கு பாதிக்கப்படும் இதய தசையின் அளவை மிகவும் குறைக்கலாம். இதனால் இதய தசையின் பெரும்பகுதி வலுவிழக்காமலும், செயலிழக்காமலும் காப்பாற்றப்படுகிறது.

இதை மீண்டும் வலியுறுத்தி சொல்ல காரணம், மாரடைப்பிற்கு பின் உள்ள இதய தசையின் வலிமையே, பிற்கால வாழ்க்கை முறையை வகுப்பதில் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது.

மாரடைப்பிற்கான தற்போதைய நவீன மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறையால் பெரும்பாலானோருக்கு இதய தசை அவ்வளவாக வலுவிழப்பதில்லை. எனவே அவர்கள் மாரடைப்புக்கு பின்னும் முறையான மருத்துவ ஆலோசனையின் உதவியுடன் இயல்பான பலனுள்ள வாழ்க்கையை வாழலாம்.


மாரடைப்புக்கு பின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது எப்படி?

மாரடைப்புக்குப் பின் பெரும்பாலானோர் ஐந்து அல்லது ஏழு நாட்களுக்குள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவர். மருத்துவமனையில் பெற்ற சிகிச்சையோடு மாரடைப்புக்கான சிகிச்சை முற்றுப் பெற்றது என்று எண்ணுவது சரியல்ல. அது சிகிச்சையின் ஆரம்பமே. ஒரு முறை மாரடைப்பு நேர்ந்துவிட்டால் வாழ்நாள் முழுமைக்குமான தொடர் சிகிச்சைக்கு தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். இத்தொடர் சிகிச்சையின் மூலமே இயல்பான வாழ்வுக்கு திரும்புவதுடன், மற்றுமொரு மாரடைப்பு நேராமல் தவிர்க்கலாம்.


உடற்பயிற்சியும், சரியான அளவு ஓய்வும்:

மாரடைப்புக்கு பின் இதய வலியோ அல்லது வேறு பிரச்னைகளோ இல்லாதபட்சத்தில், ஒரு வாரத்தில் எளிதான உடற்பயிற்சியை தொடங்கலாம். எத்தகைய உடற்பயிற்சி செய்தல் வேண்டும் என்பதற்கு, மாரடைப்பின் தன்மையை பொறுத்து டாக்டர் ஆலோசனை தருவர்.

பெரும்பாலானோருக்கு நடைப் பயிற்சியே எளிதான உடற்பயிற்சியாக இருக்கும். இத்தகைய உடற்பயிற்சியை கொஞ்சம், கொஞ்சமாக அதிகப்படுத்தி, ஒரு சீரான நிலையை அடைவது முக்கியம். துவக்கத்தில் காலை, மாலை 10 நிமிடம் நடக்கலாம். பின் நேரத்தையும், வேகத்தையும் இருவாரங்களில் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து 30 நிமிடங்கள் ஆக்கலாம்.

துவக்கத்தில் ஐந்து கிலோ எடைக்கு மேலுள்ள பொருளை தூக்காமல் இருப்பது நல்லது. ஆனால் சின்னச்சின்ன வேலைகளை தாராளமாக செய்யலாம்.

இதய வலியோ, மூச்சுத் திணறலோ இல்லாதபோது, ஆறு வாரங்களுக்குள் வேலைக்கு செல்வது, இயல்பான வாழ்வு நிலைக்கு திரும்புவது பெரும்பாலானோருக்கு சாத்தியமே. வேலைக்கு திரும்பும் முன் டாக்டரை சந்தித்து, ஆலோசனை பெறுவது அவசியம்.

உடற்பயிற்சியோ, சிறு வேலைகளோ செய்யும் போது, களைப்பாக இருந்தால் சிறிது ஓய்வு எடுப்பது அவசியம். இரவு நேரத்தில் கண்டிப்பாக ஆறு முதல் எட்டு மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் தேவை. பகல் வேளையில் களைப்பு இருந்தால், 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை தூங்கலாம்.

மற்ற உடல் தசையை போன்றது தான் இதயமும். சீரான உடற்பயிற்சி எவ்வாறு மற்ற உடல் தசைகளை பலமாக்குகிறதோ, அதேபோல தான் இதய தசையையும் வலிமை பெறச் செய்கிறது.


ஆரோக்கியமான வாழ்வு முறை:

கொழுப்புச் சத்து குறைந்த உணவு உட்கொள்ளுதல்.
உணவில் சரியான அளவு பழவகைகளையும், காய்கறிகளையும் சேர்த்து கொள்ளுதல்.
உப்பின் அளவை குறைத்தல்.
இத்தகைய உணவு முறைகளின் மூலம் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து போன்ற மருத்துவ காரணங்களையும் கட்டுப்படுத்துவது எளிதாகிறது.


சரியான உடல் எடையை பேணுதல்:

இது உங்கள் உயரத்தை பொறுத்தது. இதைக் கண்டறிய, உங்கள் உயரத்தை சென்டி மீட்டரில் அளந்து, அதிலிருந்து 100ஐ கழித்தால் வரும் எண்ணின் அளவிலான, "கிலோ' அளவே உங்கள் சரியான எடை. உதாரணமாக உங்கள் உயரம் 160 செ.மீ., என்றால், உங்களின் சரியான எடை (100 கழித்து) 60 கிலோ இருக்க வேண்டும்.

இடுப்பின் சுற்றளவு, ஆண்களுக்கு 90 செ.மீ.,க்கு மிகாமலும், பெண்களுக்கு 80 செ.மீ.,க்கு மிகாமலும் இருக்க வேண்டும். இடுப்பின் அளவு இதற்கு மிகையாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு பின்னாளில் மாரடைப்போ, பக்கவாத நோயோ வரும் சாத்தியக் கூறுகள் இருமடங்காகின்றன. இதன் பொருள் என்னவென்றால், உடலின் மற்ற பாகங்களில் தேங்கும் கொழுப்பை விட, இடுப்பில் படியும் கொழுப்பு, உடலின் உள்ளுறுப்புகளின் கொழுப்பு சதவீதத்தை பிரதிபலிக்கிறது.


மாரடைப்பும், தாம்பத்யமும்:

எந்தச் சிக்கலும் இன்றி மாரடைப்பில் இருந்து குணமாகி வரும் போது, நான்கில் இருந்து ஆறு வாரங்களில் இயல்பான தாம்பத்ய வாழ்வில் ஈடுபடலாம். அதுபற்றி டாக்டரிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது.


மாரடைப்பும், மனச்சோர்வும்:

மாரடைப்பால் சிறிது மனச்சோர்வு ஏற்படுவது இயற்கை. பெரும்பாலோர் இதிலிருந்து, ஒன்று முதல் மூன்று மாதங்களில் விடுபட்டு, இயல்பு வாழ்வுக்கு திரும்புவர். அவ்வாறு மனச்சோர்வில் இருந்து விடுபட சீரான, தினசரி, தவறாத உடற்பயிற்சி மற்றும் மற்ற வேலைகளில் கவனம் செலுத்தி, மனதை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுதல் பேருதவியாக இருக்கிறது. சிலருக்கு சோர்வில் இருந்து விடுபடுவது கடினமாக இருக்கிறது. சிலருக்கு, தாம் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை அறிவதே கடினமாக இருக்கிறது. இவர்களை டாக்டரிடம் அழைத்து சென்று, சரியான ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்குவதன் மூலம், 90 சதவீதம் பேர் குணமடைகின்றனர். முறையாக சிகிச்சை பெறாதவரின் இதய நலம் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்பது ஆராய்ச்சிகளின் முடிவு.


புகை பிடித்தலும் இருதயமும் - சில உண்மைகள்:

மாரடைப்பு ஏற்பட காரணமானவற்றில், புகைபிடித்தல் என்பது நாம் கட்டுப்படுத்தக் கூடியது. 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு வரும் மாரடைப்புகளில், 80 சதவீதம் புகைபிடிப்பவருக்கே வருகிறது. புகை பிடிக்காதோரை ஒப்பிடுகையில், புகை பிடிப்போருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகரிக்கிறது.
புகைபிடிப்போரிடம், மாரடைப்பு வருவதற்கான மருத்துவ காரணங்களான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு சத்து போன்ற ஏதாவது ஒரு காரணம் உடன் இருந்தாலும், அவர்களுக்கு மாரடைப்பு வரும் சாத்தியக்கூறுகள் எட்டு மடங்கு அதிகரிக்கிறது. உலகம் முழுவதும் நேரும் இருதய நோய்களில், 20 சதவீதம் புகைபிடிப்பதாலேயே ஏற்படுகின்றன.


புகை பிடிப்பதால் இருதயம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது?

சிகரெட்டில் இருந்து வரும் புகையில், 4,000 நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயன பொருட்கள் கலந்துள்ளன.

இவற்றில் முக்கியமான இரண்டு பொருட்கள், இருதயத்தையும், உடலின் அனைத்து உறுப்புகளுக்கு செல்லும் ரத்தக் குழாய்களையும் வெகுவாக பாதிக்கிறது.
1) நிக்கோட்டின்
2) கார்பன் மோனாக்சைடு


நிக்கோடினும், இருதய ரத்தக்குழாயும்:

சிகரெட் புகையிலுள்ள நிக்கோடின், இருதய தசைக்கு செல்லும் ரத்தகுழாயிலும், உடலின் மற்ற முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் ரத்தக் குழாயிலும் இறுக்கத்தை ஏற்படுத்தும். இதனால் அவ்வுறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைபடுகிறது. ஒரு சிகரெட் புகைத்தாலே, அதிலுள்ள நிக்கோடின், 45 நிமிடங்களுக்கு ரத்தக்குழாய்களில் இறுக்கத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது.


நிக்கோடினும், ரத்தநாளங்களில் அடைப்பும்:

சிகரெட்டில் உள்ள நிக்கோடின் ரத்தக்குழாய்களில், கொழுப்புச் சத்து படிவதை விரைவுபடுத்துகிறது. கொழுப்பு படிவங்கள் எளிதில் வெடிப்பு பிளவுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. இதுவே புகை பிடிப்போருக்கு, இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.


கொழுப்பு சத்தும், நிக்கோடினும்:

நன்மை பயக்கும் கொழுப்பான எச்.டி.எல்., ரத்தக்குழாயில் படியவிருக்கும் அல்லது படிந்திருக்கும் கொழுப்பு சத்தை, அதிலிருந்து அகற்றி, கல்லீரலுக்கு எடுத்து சென்று, இறுதியில் குடல் வழியாக வெளியேற்றுகிறது.

தீய கொழுப்பான எல்.டி.எல்., கல்லீரலில் உருவாகும் கொழுப்பையும், உண்ணும் உணவில் இருந்து குடல் வழியாக ரத்தத்தில் கலக்கும் கொழுப்பையும், எடுத்து செல்லும் இவை, நேராக ரத்தக்குழாயில் படிய வைக்கின்றன. டிரைகிளசைடும் நமக்கு நல்லதல்ல. இந்த மூன்று கொழுப்புகளில், எல்.டி.எல்., கொழுப்பை அதிகமாகப் படிய வைக்கும் வேலையை நிக்கோட்டின் செய்கிறது.


கார்பன் மோனாக்சைடும், அதன் விளைவுகளும்:

கார்பன் மோனாக்சைடு, ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் உள்ள ஆக்சிஜனை விலக்கிவிட்டு, அந்த இடத்தில் தான் போய் அமர்ந்து கொள்கிறது. இதனால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. சரியான அளவு ஆக்சிஜன் கிடைக்க பெறாததால், இருதயமும், மற்ற உறுப்புகளும் எளிதில் சோர்வடைகின்றன. இருதய ரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருந்து, அதனால் ரத்த ஓட்டமும் குறையும்பட்சத்தில், ஆக்சிஜனும் குறைவாக இருந்தால் அதன் பக்கவிளைவுகள் பன்மடங்காகி, மாரடைப்பு வரலாம் அல்லது நாளடைவில் இருதய தசை மிகவும் பலவீனமாகலாம்.

இருதய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கான புகைபிடித்தல் போன்ற காரணங்களை தவிர்த்து, அத்தகைய மருத்துவ காரணங்கள் (உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு) இருப்பின் அதை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான சில வாழ்வு முறைகளை அமைத்து, அதை தவறாமல் கடைபிடித்து வருவதே மாரடைப்பை தடுக்க சிறந்த வழி.


நன்றி: டாக்டர் எஸ்.கே.பி.கருப்பையா,இருதய மருத்துவ நிபுணர், மதுரை.

தொடர்புக்கு: 99447-94093.