Showing posts with label தாம்பத்தியம். Show all posts
Showing posts with label தாம்பத்தியம். Show all posts

Friday, July 8, 2011

தாம்பத்தியம் - 22

தாம்பத்தியம் - 22

உடலின் மீதான திருப்தியின்மை

பதிவை படிக்கும் முன் :

தாம்பத்தியம் தொடர்பான 21 பாகங்களில் திருமணம் முதல் கணவன் மனைவி உறவு நிலைகள், பிரச்சனைகள் போன்ற பல விசயங்களை பகிர்ந்திருந்தேன். கடைசி சில பதிவுகள் தாம்பத்தியத்தின் முக்கிய கட்டமான  அந்தரங்கம் எப்படி இருக்கவேண்டும், அங்கே ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன, அதை சரி படுத்தி கொள்ள என்ன வழிகள் இருக்கின்றன என்பதை பற்றியவை.....

கடைசி பதிவில் கணவன், மனைவி பாதை மாறுவதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன என்றும் அதில் அதீத அன்பும் ஒரு காரணம்என்று  எழுதி இருந்தேன், இந்த பதிவு உடலின் மீதான திருப்தியின்மை பற்றியது, சொல்லபோனால் இந்த வார்த்தையே தவறுதான், யாரும் துணையின் உடல் பிடிக்கவில்லை என்று பாதை மாறமாட்டார்கள், அதன் பின்னால் மன ரீதியிலான சலிப்புகள் இருக்கும் என்பது தான் உண்மை. இது என் கருத்து. சலிப்புகள், வெறுப்புகள் ஏற்படாமல் தடுப்பதில் ஒரு வழியினை இங்கே பார்ப்போமே.....     

இருவருக்கும் உடல் அளவில் இருக்கும் வேறுபாடுகள்..


பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணதிற்கு வரன் பார்க்கணும் என்று முடிவு செய்ததும் முதலில் கையில் எடுப்பது ஜாதகம். ஜாதகம் பொருந்தி இருந்தால் போதும் கண்ணை மூடி கொண்டு மணம் முடித்து விடுகிறார்கள் (ஒரு சிலர் விதிவிலக்கு)  எனக்கு ஜாதகத்தின் மேல் நம்பிக்கை இல்லை என்று வெளியில் பேசுபவர்கள் கூட கடைசியில் மனதிருப்திக்காக பார்க்காமல் இருப்பது இல்லை.ஆனால் அது மட்டுமே போதாது. திருமணம் முடிக்க போகும் ஆண், பெண் இருவருக்கும் உடல் பொருத்தம் இருக்க வேண்டியது மிக அவசியம். ஒரு பாட்டு கூட உண்டு "ரெட்டை மாட்டு வண்டி வரும்போது நெட்டை குட்டை என்றும் இணையாது.....!"  வண்டி ஓடவே இரண்டு மாட்டின் உடல் பொருத்தம் தேவை படும்போது, இந்த வாழ்க்கை வண்டி ஓட கணவன் மனைவி உடல் பொருத்தம் என்பது மிக அவசியம். (ஒரு சிலர் விதிவிலக்கு)

முன்னாடி எல்லாம் பெண்ணையோ பையனையோ வரன் பிடித்து இருக்கிறதா என்று பெற்றோர்கள் கேட்க மாட்டார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை, இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு என்று சொன்ன பிறகு தான் திருமணமே நடக்கிறது. ஆதலால் தங்கள் மனதிற்கும் தங்கள் உடம்பு அமைப்புக்கும் ஏற்றபடி அமைந்திருக்கிறதா துணை என்று பார்ப்பது மிக அவசியம். பணம், படிப்பு,அழகு,சொத்து, அந்தஸ்து எல்லாம் திருமணத்தின் ஆரம்ப சில வருடங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியையும், சமூகத்தில் ஒரு மதிப்பையும் கொடுக்கலாம். ஆனால் வருடம் சில கடந்த பின் ஆணோ பெண்ணோ இருவருக்கும் அது மட்டுமே போதுமானதாக இருப்பது இல்லை. துணைக்கு தன் மீதான கவனம் எந்த அளவில் இருக்கிறது,  தனக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் துணையிடம் இருக்கிறது  என்பதை பொறுத்தே வீட்டிலும் வெளியிலும் அவர்களின் நடவடிக்கைகள் இருக்கும். இச்சூழ் நிலையில் தான் உடல் பற்றிய யோசனைகளும் ஏற்படுகிறது.

உடல் அளவில் பொருத்தமாக  இருக்கிறவர்கள் தங்கள் அந்தரங்க வாழ்விலும் பொருத்தமாக இருப்பாங்க என்று சொல்ல இயலாது. தவிரவும் படுக்கையறையில் உடல் பொருத்தம் அவசியமும் இல்லை. நிறம்,அழகு, உயரம், குள்ளம் மற்றும் அந்தரங்க உடல் அமைப்புகள் இப்படிதான் இருக்கணும் என்று எந்த அளவுகோலும் இல்லை. தன் துணையை   படுக்கையில் உற்சாகமாக வைத்து கொள்ளாதவர் எவ்வளவு அழகாக இருந்தாலும் அங்கே திருப்தி கிடைக்காது . இதை முதலில் பிரச்சனைக்குரிய தம்பதிகள் புரிந்து கொள்ளவேண்டும். அந்தரங்கம் இனிமையாக நீடித்த காலத்திற்கு இருப்பதற்கு துணையின் உடலை திருப்தி செய்யணும், ஆனால் இங்கே திருப்தி என்று சொல்வதின் அர்த்தம் உடலுறவு இல்லை. பின்ன வேறு என்ன ??  தொடர்ந்து படிங்க......


உடலின் மீதான திருப்தியின்மை எப்போது ஏன் எதனால் ??

சில சரி செய்துகொள்ளகூடிய காரணங்கள் உடல் சுத்தமாக வைத்துகொள்ளாமை, அதிகபடியான வியர்வை, உடல் பருமன்/ஒல்லி, மனதிற்கு பிடிக்காத மணம் போன்றவை இருக்கலாம் ஆனால் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் தன் துணையின் அந்தரங்க நடவடிக்கைகள் பிடித்துவிட்டால் இந்த குறைகள் மிக பிடித்தவையாக மாறிவிடக்கூடும் !!

*  ஒரு சில நாட்களில் கணவன்/மனைவி யின் மனநிலை உறவிற்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். ஒரு சோர்வு,  ஆர்வம் இல்லாமை போன்றவை இருக்கும் போது துணை உறவிற்கு வற்புறுத்தினால் சலிப்பு வரும் நாளடைவில் இதே போன்ற வற்புறுத்தல்கள் தொடர்ந்தால் நிச்சயம் வெறுப்பு அதிகமாகி விரிசலில் கொண்டு போய் விட்டுவிடும்.

*  வேறு சிலருக்கு வேலை, வீடு, குடும்பம் போன்றவற்றினால் மன அழுத்தம் இருக்கலாம். உடல் சம்பந்தப்பட்ட உபாதைகளையும் சட்டை பண்ணாமல் உறவிற்கு அழைத்து அதன் பின் ஏற்படக்கூடிய உறவில் நிச்சயம் திருப்தி இருக்காது.

*  பெண்களை பொறுத்தவரை வீட்டிற்கு உறவினர்கள் குறிப்பாக தனது பெற்றோர்கள் வந்திருக்கும் போது உறவை விரும்பமாட்டார்கள். குழந்தைகள் சரியாக தூங்கி விட்டார்களா என்று தெரியாதபோது உறவை மனதாலும் நினைக்கமாட்டார்கள்.

*  முக்கியமாக மருத்துவ ரீதியாக மட்டுமே, அது மருந்துகளின்மூலம் அல்லது கவுன்செல்லிங் மூலமாகவோ குணபடுத்தகூடிய உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆண்/பெண்ணுக்கு இருந்தால் அங்கே கண்டிப்பாக உடலின் மீதான திருப்தியின்மை ஏற்படக்கூடும்.

கணவன்/மனைவி அழகாக இருந்து மனதிற்கு பிடித்திருந்தும் 'உடலுறவில் ஈடுபட இயலாதவர்கள்' இருக்கிறார்கள் என்ற தகவல் ஆச்சரியமாக இருந்தாலும் அதுதான் உண்மை. வெளி உலகில் வலம் வரவும், திருமணம் ஆன புதிதில் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமைபட்டுக்கொள்ள உதவிய இந்த அழகு அடுத்து தொடர்ந்து வரும் வருடங்களில் உடலுறவுக்கு உதவுவது இல்லை. அப்போது அங்கே தேவை படுவது வேறு ஒன்று...! 
பாதை மாறி சென்று விடாமல் தன் துணையை பிடித்துவைத்துக் கொள்ளும் சூட்சமம் ஒன்று இருக்கிறது, அதுதான் தொடுதல் !! 
பரவசம் இதுவே !


ஆண்/பெண் இருவரின் உடலிலும் உணர்ச்சி மிகுந்த சில பகுதிகள் இருக்கின்றன அது நபருக்கு நபர் வேறு படும். ஒருவருக்கு இதழை தொட்டால் பரவசம் ஏற்படும், சிலருக்கு இடுப்பு, கை, கால் பாதம், கழுத்து, காது மடல், நெற்றி இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். இதில் தன் துணையின் உணர்ச்சி பகுதிகள் எது என்று தெரிந்து வைத்துக்கொள்வது முழுமையான இல்லறத்திற்கு மிக அவசியம். உறவிற்கு உடல், மனம் ஒத்துழைக்காத போது இந்த மாதிரியான இடங்களை தொடுவதின்/வருடுவதின் மூலம் பரவச நிலையை அடையமுடியும். உடலுறவுக்கு தயாராவதற்கு முன்பும் இது மாதிரியான முன்விளையாட்டுகளில் ஈடுபடும் போது உடலுடன், மனமும் உற்சாகமடைந்து பரவசநிலையை எட்டிவிடும், அதன் பின் நடக்கும் உறவே ஒரு முழுமையான உறவாக இருக்கும்.

சில தம்பதிகள் உடலில் வேறு எந்த பிரச்சனையும் இன்றியும் உறவில் ஈடுபட இயலாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் இந்த மாதிரியான விளையாட்டில் மட்டும்  சில நாட்கள் (உறவு கொள்ளாமல் )ஈடுபட வேண்டும். இதிலும் ஒரு முழு இன்பத்தை அடைய முடியும். வெறும் தொடுதலின் மூலம் சில நாட்களை கழித்து விட்டு பின் முழுமையாக  உறவில் ஈடுபடும் போது, நிச்சயம் கணவன் மனைவி இருவருக்கும் ஒரு வித்தியாசமான புதுமையான அனுபவமாக இருக்கும். இதை நான் சொல்லலைங்க நம்ம வாத்சயனார் முதல் மேல் நாட்டு மருத்துவர்கள் வரை இது ஒரு சிகிச்சை முறை என்று ஒத்துகொண்ட ஒரு விஷயம். 
சூட்சுமம் எது என்று தெரிந்து, தெளிந்து இல்லறத்தை நல்லறமாக கொண்டு செல்லுங்கள்.....! 

தாம்பத்தியத்தில் தொடரும் அடுத்த பதிவு கணவன்/மனைவி பாதை மாற ஒரு காரணம் மன பொருத்தம் இல்லாமை......

தாம்பத்தியம் - 21

தாம்பத்தியம் - 21


கணவன் மனைவி பாதை தவறுவது (மாறுவது )எதனால்??

பல காரணங்கள் இருக்கிறது. இது தான் என்று எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் சொல்ல இயலாது. ஆனால் பொதுவாக சில காரணங்களை இங்கே கூறலாம் என்று இருக்கிறேன்.

* ஒருத்தருக்கு மற்றொருவர் மீதான அதிகபடியான பொசசிவனெஸ்
*  உடல் ரீதியான திருப்தியின்மை
*  மன பொருத்தம் இல்லாமை
*  கணவன் மனைவிக்கு இடையில் அதிகபடியான வயது வித்தியாசம்.

அதிகபடியான பொசசிவ்னெஸ்

பாதை தவறி செல்வதற்கு இது எப்படி காரணமாகும் என்று நீங்கள் யோசிக்கலாம். ஒருவர் மேல் மற்றொருவருக்கு அதிகபடியான அன்பு, காதல் இருப்பது எப்படி தவறாகும். அந்த அன்பின் காரணமாகத்தான் தன்  துணையை சந்தேகபடுவதும் , கண்டிப்பதும் ஆகும். இதை  காரணமாக வைத்து எப்படி தவறான பாதைக்கு போவார்கள் என்று கேள்வி எல்லாம்...!!  அதிக  அன்பு வைப்பது கூடாதா....??

அன்பு வைப்பது  தவறாகாது....ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் அதீத அன்பு ஒரு கட்டத்தில் வெறுப்பில் கொண்டு போய் விட்டு விடுகிறது....அன்பு எப்படி வெறுப்பாகும் என்று முதலில் பார்போம்.....

ஒருவர் மீது ஒருவர் 'நீ இப்படித்தான் இருக்கணும், வேற யாரிடமும் அன்பா இருக்க கூடாது, உன் அன்பு முழுவதும் எனக்கு மட்டும்தான் ' என்று சொல்லும் போது தொடக்கத்தில் மிகவும் மகிழ்வாக இருக்கும். அன்பை மழையாய் பொழியும் போது பரவஸத்தில் அப்படியே ஆழ்ந்து போய் விடுவார்கள். ஆனால் போக போக இந்த பேரன்பு கொடுக்கிற அதிகபடியான அழுத்தம் நம்மை நாமாக இருக்க விடாது...!!

எப்படி இதில் இருந்து வெளிவர போகிறோம் என்று துடிக்க வைத்துவிடும்...ஒருவரின் இயல்பை மாற்ற முயற்சிக்கும் போது அது இருவருக்கும் இடையிலான உறவையே கெடுத்து முடிவுக்கு கொண்டு வந்து விடுகிறது.....அதற்கு பிறகு, தன் இயல்பை அப்படியே ஏற்றுகொள்ளும் வேறு ஒருத்தரின் பால் கவனத்தை திசை திருப்பி விடுகிறது....!?

சிறு பிள்ளை அல்லவே நாம்

நம் குழந்தைகளிடம் கூட நீ இப்படி இருக்கணும், இப்படி இருக்க கூடாதுன்னு நம் விருப்பத்தை திணிக்க முடியாது. ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் உண்டு. இதை விடுத்து நாம் பிரஷர் கொடுத்தோம் என்றால் நம்மிடமிருந்து கொஞ்சங்  கொஞ்சமாக  விலகி தள்ளி போவார்களே தவிர பாசிடிவாக எந்த பலனும் கிடைக்காது. எல்லோரின் மனதும் தன் நிம்மதி , தன் சந்தோசம் என்ற ஒன்றுக்காகத்தான்  ஏங்கிக்கொண்டிருக்கிறது.....! இந்த நிம்மதியையும், சந்தோசத்தையும் கொடுக்கிற ஒரு நல்ல அன்பு நெஞ்சம் தான் தேவையே தவிர, அன்பு என்ற பெயரில் நம்மை அழுத்தும்  ஒரு சக்தி தேவை  இல்லை.....!!?

திருமணம் முடிந்த புதிதில் கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக பொசசிவ்வாக   இருப்பது அப்போது இனிமையாக இருக்கலாம். ஆனால் குழந்தைகள் , வேலை  பளு என்று வந்த பின்னும், இது தொடர்ந்தால் காலபோக்கில் சந்தேகமாக மாற கூடிய வாய்ப்புகள் தான் அதிகம்.  'ஆரம்பத்தில் நீ எங்க போனாலும், என்ன செய்தாலும் என்கிட்ட சொல்லுவ...., இப்ப வர வர எதுவும் சொல்றது இல்லை , ஏன் இப்படி மாறிட்ட...??'  இப்படிப்பட்ட வார்த்தைகள் வரத்  தொடங்கும்....! பின்னர் இந்த வார்த்தைகள் தடிக்க தொடங்கி பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பிக்கும்... ஆனால் இந்த மாதிரி ஆட்கள் ஒன்றை புரிந்துக் கொள்வதில்லை.    

திருமணம் முடிந்த புதிதில் புதிய சூழல், புது மனிதர்கள் சுற்றி இருக்க, தன் துணையை மட்டுமே முழுதாய் சார்ந்து இருக்க வேண்டி இருப்பதாலும், பெரிய பொறுப்புகள் ஏதும் இல்லாத அந்த சூழ்நிலையில் ஒருவருக்கு ஒருவர், மாறி மாறி அன்பை பொழிந்து தள்ளுவார்கள். அந்த சமயத்தில் சின்ன சின்ன விஷயம் கூட  ரொம்ப முக்கியமாகப்படும்    தன் துணையிடம் பகிர்ந்து கொள்ள நேரமும் கிடைத்து இருக்கும், ஆனால் சில வருடங்கள் கடந்த  பின் இருவருக்குமே பொறுப்புகளும், கடமைகளும் அதிகரித்திருக்கும். எதையும் சொல்லகூடாது என்று யாரும் வேண்டும் என்றே மறைக்க போவது இல்லை. ஆனால் 'சின்ன விசயம் தானே, இதை போய் எதுக்கு சொல்லிக்கிட்டு'  'மெதுவாக சொல்லிகொள்ளலாம்' என்று அசட்டையாக இருந்திருக்கலாம்.  

தன் கைக்குள்....!

தன் துணை தன் கைக்குள் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால் பள்ளி செல்லும் சிறுவன், சின்ன சின்ன விசயத்துக்கும் அம்மாவின் அனுமதியை எதிர்பார்ப்பது போல், துணையின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல்  மட்டும் தான் நடக்க வேண்டும் என்று வற்புறுத்துவது தான் தவறு.

"வளைந்து நெளியும் நாணலுமே, குறிப்பிட்ட அளவிற்கு மேல்  வளைத்தால் ஒடிந்துதான் போகும்"

நிதர்சனம்

கணவன் மனைவியாக இருந்தாலுமே, இருவருமே தனி தனி நபர்கள் , தனிப்பட்ட விருப்பங்கள், தனிப்பட்ட இயல்புகள் என்று இருக்கும். ஒருவருக்காக மற்றொருவர் முழுதாய் மாறுவது என்பது முடியாத காரியம்.  தனது சுயத்தை இழப்பது யாராலும் இயலாது. ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்துக்கு மாறாக  அவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவது துணையாக இருந்தாலுமே, இன்றைய காலகட்டத்தில் தவறுதான்.  'துணை தன் இயல்பு படி செயல்படுவதே, அவர்களுக்கு  நிம்மதியை  தரும்' என்பதை மற்றொருவர்  புரிந்து கொண்டு நடப்பதே, தாம்பத்தியதிற்கு நல்லது.   

எதிர் விளைவு

முக்கியமான எதிர் விளைவு ஏற்படக்கூடிய  வாய்ப்பு ஒன்றும் உள்ளது....?! ஒருவர் விருப்பத்திற்கு மாறாக மற்றொருவர் வளைக்க முயலும்போது, தனக்கு சாதகமான விசயங்களை மட்டும் சொல்லிவிட்டு பாதகமான விசயங்களை மறைக்க பார்ப்பார்கள். நீங்களாகவே  அவர்களை திருட்டுத்தனத்தை செய்ய வைக்கிறீர்கள்.....??! இறுக்கி பிடித்தால் திமிறத்தான் பார்ப்பார்களே தவிர பிடிக்குள் இருக்க மாட்டார்கள். இப்படியும் கணவன்/மனைவி பாதை மாற வழி ஏற்பட்டுவிடுகிறது. 

கணவன் மனைவி இரண்டு பேருக்குமே இப்படி over possessive   என்ற விதத்தில் அழுத்தும் அதீத அன்பே துணையை மூச்சு திணறடித்து விடும்.  இதில் இருந்து வெளிவர space தேவை.  இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் வெளியிடங்களில் பேச பழகி கொண்டிருக்கிற ஒரு நட்புடன் சாதாரணமாக ஏற்படும் ஒரு பழக்கம் ஈர்ப்பில் கொண்டுபோய் விட்டு விடுகிறது.....?? 

பாதைகள் மாறுகின்றன....விருப்பம் இன்றி பயணமும் தொடர்ந்து விடுகிறது....!!??

தாம்பத்தியம் - 20

தாம்பத்தியம் - 20


முந்தைய பதிவில் பெண்கள் சம்பந்த பட்ட உச்சகட்டம் என்ன என்பதை பற்றி சிறிது சொல்லி  இருந்தேன். பதிவை பற்றி வந்த மெயில்களில் பல சந்தேகங்களை கேட்டு இருந்தனர், இதனை பற்றி இவ்வளவு சந்தேகங்களா என்று ஆச்சரியம் வரவில்லை மாறாக ஏன் இப்படி தெளிவில்லாமல் இருக்கிறோம் என்ற ஒரு ஆதங்கம் தான் இருக்கிறது. படித்த கணவன்  மனைவிக்கு இடையில் கூட இதனை பற்றிய தெளிவு இல்லை என்பதை என்னவென்று சொல்வது...?! எது பரவச நிலை என்பது தெரியாமல் அல்லது உணராமல் இருக்கும் போது, தங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாட்டுக்கு காரணம் எந்த புள்ளியில் தொடங்கியது என்பதை எப்படி புரிந்து கொள்ளமுடியும்....?? 

திருமணம் முடித்தோம், பிள்ளை பெற்றோம், பள்ளிக்கு அனுப்பினோம், சம்பாதிக்கிறோம், பேங்க்கில் (Bank Balance)  சேமிப்பை அதிகரித்தோம் என்று வாழ்வது எப்படி ஒரு நிறைவான வாழ்வாகும்...?? கடைசிவரை ஒன்றாக எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் சுகமாக ஒருவருக்கு ஒருவர் அன்பாக வாழ்ந்து முடிப்பது தானே ஒரு நிறைவான வாழ்க்கையாகும்...!! அப்படி வாழ்கின்ற பெற்றோர்களால் தான் இந்த சமூகத்திற்கு சிறந்த சந்ததியினரை விட்டு செல்ல முடியும்.      

ஒரு பெண்  தான் விரும்பியதை சொல்ல கூடாது மீறி சொன்னால் அவளது அடிப்படை வளர்ப்பின் மீதே சந்தேகம் வர கூடிய அளவிற்கு தான் நம் கலாசார கணிப்பு இருக்கிறது....!!? ஆனால் நம் கலாசாரம்  என்றோ மாற தொடங்கி விட்டது பல விசயங்களில்...?! இன்னும் மாறி கொண்டிருக்கிறது...இல்லை மாற்றிக் கொண்டிருக்கிறோம்....! மாறும் காலத்திற்கு ஏற்ற  மாதிரி கணவனும் தன் மனைவியின் விருப்பம்  என்ன என்று தெரிந்து அதற்கு மதிப்பு கொடுக்கும் நிலை வர வேண்டும்...கட்டாயம் வந்துதான் ஆக வேண்டும் இந்த அந்தரங்க விசயத்தில்...! கணவன், மனைவி இருவருமே ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் இது வெறும் உடல் சார்ந்தது என்பது மட்டும் இல்லை.  உடல், மனம் இரண்டுக்குமான ஆரோக்கியம் இதை வைத்துதான் இருக்கிறது.  

ஆணின் ஆசை விரைவில் அடங்கிவிடும் பெண்ணின் ஆசை தொடர்ந்து வரும் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஆண் தனது தேவை முடிந்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தூங்கிவிடுவான். ஆனால் அவனுக்கு தெரியாது அதற்கு  பிறகு தான் அந்த மனைவிக்கு கணவனின் அணைப்பு தேவைப்படும் என்று ,  இதை உணர்ந்த கணவர்களின் எண்ணிக்கை மிக சொற்பம் தான்...!?  இந்த மாதிரியான சிறிய அளவிலான ஒரு அணைப்பு கூட மறுக்கப்படும்போது தான், இயலாமையால் மனதிற்குள் புழுங்க தொடங்குகிறாள். இதற்கு ஆண்களையும்  குறை சொல்ல முடியாது அவர்களின் உடல் அமைப்பு அப்படி....! அதனால் மனைவியை முதலில் திருப்தி அடைய வைத்துவிட்டு பின்னர் ஆண்  தங்கள் தேவையை கவனிப்பது ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

கணவன் மனைவி உறவில் முழு திருப்தி அடையாதவர்கள்  நிச்சயமாக மன அழுத்தத்தில் விழுவார்கள். சமீப காலமாக ஒவ்வொருவரும் தங்களது சந்தோசம் தங்களது நிம்மதி என்று பிரித்து சுயநலமாக வாழ தொடங்கிவிட்டார்கள். வாழும் காலம் குறைவுதான் என்பது போலவும் அதற்குள் அனைத்தையும்  அனுபவித்து விட வேண்டும் என்ற குறுகிய எண்ணங்கள்  பெருகி விட்டன. இந்த மாதிரியான சூழ்நிலைகள் ஏற்பட போய் தன் மனதை ஒரு நிலைபடுத்த என்று யோக நிலையங்களும், தியானம் செய்யுங்கள் என்ற போதனைகளும் அதிகரித்துவிட்டன. இயன்றவர்கள் மன நல  மருத்துவரை நாடுகின்றனர். 'கவுன்செலிங்' என்ற வார்த்தைகூட இப்போது நாகரீகமான வார்த்தையாக மாறிவிட்டது.  மனதை தடுமாற செய்ய கூடிய காரணிகள் அதிகம் இருக்கிறது என்பதை அறிந்ததால்தான் 'மனதை ஒரு நிலை படுத்துங்கள்' என்ற கோஷமும் வலுக்கிறது...வேறு சிலரோ ஆன்மீகத்தை நோக்கி சென்று தங்களை காத்து கொள்ள போராடுகின்றனர்.  

திருமணம் முடிந்தவர்கள் இல்லறத்தை நல்லறமாக மாற்ற அந்தரங்கத்தை அவசியமானதாக எண்ணுங்கள். அதற்கு தேவையான நேரத்தை ஒதுக்குங்கள் உறவையும் முழுமையாக நிறைவேற்றுங்கள்..அந்த நேரம் முழுவதும்  உங்களுக்கான  நேரம் என்பதை மறவாதீர்கள். அந்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் பெற கூடிய உற்சாகம் பல மடங்காய் அதிகரித்து தொடரும் நாட்களில் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதை  உணருவீர்கள். இந்த உறவு சரியாக இருக்கும் பட்சத்தில்,  தேவை இல்லை யோகாவும், தியானமும் இதைவிட சிறந்த உடற்பயிற்சியும் வேறில்லை....என்று நான் சொல்லவில்லை மருத்துவர்கள் சொல்கிறார்கள் .

உறவு என்ன என்று தெரியவைக்க இப்போது மீடியாக்கள் முக்கியமாக இணையம் இருக்கிறது. ஆண்கள் மட்டும் தான் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று சொல்ல இயலாது கணவன் மூலமாக அல்லது காதலன் மூலமாக சில பெண்களும் தெரிந்து வைத்திருக்கலாம். இந்த பட்சத்தில் மன அளவில், உடல் அளவில் அதை உணர , அனுபவிக்க விரும்புவது  இயல்புதான். முறையாக கிடைக்க வேண்டிய ஒன்று முறையற்ற  விதத்திலாவது கிடைத்துதானே ஆகும், அதுதானே நியதி....?! சந்தர்ப்பம் வாய்த்தவர்கள்  பெறுகிறார்கள், முடியாதவர்கள் மருகுகிறார்கள். மற்றபடி  மனதை சமாதானப்படுத்திக்   கொண்டு வாழ்கிறார்கள் என்பது குறிப்பிட்ட அளவு வரை தான். (இந்த அளவு நல்ல குடும்ப உறவில் இருப்பவர்களை குறிப்பிடாது.)

கணவர்களின் புரிதலுக்காக

குழந்தை பெற்று தர வேண்டும், ஆணின் சந்தோசத்திற்கு என்று மட்டும் எண்ணாமல் அவளது உணர்வுகளுக்கும் ஒரு வடிகாலாய் அந்த பெண்ணின் கணவன் இருந்தாக வேண்டும். கணவனால் முழு  இன்பம் கிடைக்க பெறாதவர்கள் அல்லது அந்த உச்சகட்டம் என்ற நிலையை அறியாதவர்கள் தான் வெகு சுலபமாக தவறான உறவில் விழுகிறார்கள். ஒரு பெண் வேறு ஆணுடன் தொடர்பு கொள்ள நேரிடும் போது அந்த ஆண் முதலில் இந்த பெண்ணை தனது பிடிக்குள் அல்லது கட்டுபாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தான் விரும்புவான். முழுவதுமாக அவள் மனதை தானே ஆக்கிரமிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவன் கையாளும் முக்கியமான ஒன்று தான் இந்த கிளைமாக்ஸ் உணர்வை அந்த பெண்ணை அடைய செய்வது. ஒரு முறை இதை உணர்ந்த பெண் (தனது கணவனால் கிடைக்காத அல்லது இதுவரை சரியாக உணராத அந்த ஒன்றை ) இவன் தன்னை எவ்வளவு சந்தோசமாக வைத்திருக்கிறான் என்று எண்ணி முழுவதுமாக புதியவனை விரும்ப தொடங்கி விடுகிறாள். (தவறுகள் தெய்வீகமாகி விடுகின்றன....!?) 

மனைவியரின்  புரிதலுக்காக

ஆண் மட்டுமே இயங்க வேண்டும் என்பதுதான் இந்திய பெண்களின் மனோபாவம் !? ஆனால் இந்த மனோபாவம் சிறிது மாற வேண்டும். மனைவியரும் தங்கள் கணவனின் விருப்பம் அறிந்து நடந்து கொண்டால் நன்றாக இருக்கும். (இதை பற்றி ஏற்கனவே முந்தைய பல பதிவுகளிலசொல்லி விட்டேன்)   வீட்டில் கிடைக்காத ஏதோ ஒன்று (மனம்  அல்லது உடல்  சம்பந்த பட்டதாக இருக்கலாம்) வெளியே  கிடைக்கிறது என்று தான் பல நல்ல கணவர்களும் தவறுகிறார்கள்....அது என்னவென்று அறிந்து சரி செய்து கொள்ளவேண்டியது அந்த மனைவியின் கடமைதான். ஒரு முறை தவற விட்டுவிட்டால் திரும்ப பெறுவது மிக கடினம் என்பதை பெண்கள் (மனைவியர் ) மறந்து விட கூடாது. 

பெண்கள் நடுத்தர வயதை கடந்தாலும் இன்னும்  சொல்ல போனால் மெனோபாஸ் நிலை வந்த பின்னரும் கூட உறவில் முழுமையாக ஈடுபட முடியும். பெண்களின் (மனைவியரின்) ஒத்துழைப்பு கிடைக்காததால் தான் நடுத்தர வயதை தாண்டிய பல ஆண்களும் தவறான வேறு வழிகளை எண்ண தொடங்குகிறார்கள்.

அதிலும் பெண்களின் முழு ஒத்துழைப்பும் இருந்தால் தான் இருவருமே உச்சகட்டத்தை அடைய முடியும் என்பதை பெண்கள் மறந்து விட கூடாது. உடலும்  மனமும் இணைந்து
ஈடுபடும் போது தான் பெண்களுக்கும் இன்பம் அதிகரிக்கிறது.

ஒரு கருத்து

கணவன், மனைவி  இருவரும் பொதுவான ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தவறு செய்யும் யாரும் கணவன்/மனைவி பிடிக்க வில்லை என்பதற்காக மற்றொரு உறவை ஏற்படுத்திக்  கொள்வதில்லை.....'வேறொரு நபரையும் பிடித்து இருக்கிறது' என்பதற்காகத்  தான் தவறுகிறார்கள்....??!! 

கணவன் அல்லது மனைவி பாதை தவறுவது எதனால்.....??!

எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் சொல்ல இயலாது ஆனால் பொதுவாக சில காரணங்களை கூற முடியும் அதில் முக்கியமான ஒன்று....


ஒருத்தருக்கு மற்றொருவர் மீதான அதிகபடியான பொசசிவ்னெஸ் என்கிற அதீத அன்பு (தமிழில் அர்த்தம் சரியா என்று  தெரியவில்லை மன்னிக்கவும்) ....!!


* ஒருவர் மீது ஒருவருக்கு அதிகபடியான காதல் இருப்பது எப்படி தவறாகும்....?

* அதீத அன்பு எப்படி பாதை மாற காரணம் ஆகும்....??

இப்படி நீங்கள் யோசிக்கலாம். ஆனால் உண்மைதான்...அது எப்படி என்று அடுத்த பதிவில் பாப்போம்....




தாம்பத்தியம் - 19

தாம்பத்தியம் - 19

திருமணம் ஆன கணவன் மனைவி இருவருக்குமே  செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு தான் என்பது ஆய்வுகளின் முடிவு.  குழந்தை பிறந்து விட்டது என்பதுடன் உறவில் முழுமையாக புரிதல் உள்ளவர்கள் என்று சொல்லிவிட முடியாது.  மருத்துவர்களிடம் ஆலோசனை என்று வருபவர்கள் கேட்க்கும் சந்தேகங்களை வைத்து பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும்....!!? இதில்  படித்தவர்களின் சந்தேகங்களை வைத்து பார்க்கும் போது அவர்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்றே  தோன்றுகிறது. ஏன் இப்படி தெளிவு இல்லாமல் , புரிதல் இல்லாமல் இருக்கிறோம் என்று தெரியவில்லை.

குடும்ப வாழ்வில் பொருள் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதை விட கணவன் , மனைவி இருவருக்குள் கருத்து வேற்றுமை இன்றி வாழ்வது மிக முக்கியம். அந்த கருத்து வேற்றுமை இருவரின் அந்தரங்கம் பற்றியதாக  இருந்துவிட்டால்....குடும்பத்தின் மொத்த நிம்மதியும் போய்விடும். செக்சை பற்றிய போதிய விழிப்புணர்ச்சி இல்லை,காரணம் நாம் வளர்ந்த , வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சமுதாயம். சந்தேகம் ஏற்பட்டால் பிறரிடம் கேட்க தயக்கம், அச்சம், சமூகத்தில் இதை பேசுவது தவறு, பாவம் என்று கூறப்பட்டு வந்ததால் நாமும் அப்படியே பழகிவிட்டோம்.

கணவன் மனைவி இருவரும் கூட தங்களுக்குள் ஏற்படும் சந்தேகங்களை பரிமாறி கொள்வது இல்லை. இதன் விளைவு கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டு பிரச்சனைகள் பூதாகரமாக எழுகின்றன. இதன் பின்னர் மோசமான முடிவுகளில் கொண்டு வந்து விட்டுவிடுகின்றன. பாலியல் தொடர்பான குற்றங்கள், கள்ள உறவுகள் போன்றவை ஏற்பட சரியான செக்சை பற்றிய அறிவு இல்லாதது தான் காரணம்.

ஒரு சில குழப்பங்களும், சிக்கல்களும் இந்த விசயத்தில் இருக்கின்றன. இந்த தொடர் பதிவில் அவற்றை விளக்குவதின் மூலமே இந்த தொடர் முழுமை அடையும் என்று நினைக்கிறேன்.

உச்சகட்டம் (ஆர்கஸம் )

கணவன், மனைவி இருவருக்கும் இடையில் நடக்கும் உறவில் மிக முக்கியமானது உச்சகட்டம் எனப்படும்  இறுதி நிலையாகும். ஆண்களை பொறுத்தவரையில் அணுக்கள் வெளியேறும் அந்த தருணத்தில் அவர்கள் உச்சகட்டம் அடைந்து விடுகிறார்கள்.  ஆனால் பெண்களை பொறுத்தவரை இது பெரிய கேள்வி குறியாக இருக்கிறது.

இந்த வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்ன என்பது கூட பல திருமணம் ஆன பெண்களுக்கும் தெரியாது என்பது தான் நிதர்சனம். 

* அப்படி என்றால் என்ன..??
* அந்த உணர்வு எப்படி இருக்கும் ??
* அந்த உணர்வு  கட்டாயம் உணரபட்டுத்தான் ஆகவேண்டுமா ??
* உச்சகட்டம் ஆகவில்லை என்றால் அதன் பாதிப்பு என்ன ??

* பெண்களின் அந்தரங்க உறுப்பில் கிளிடோரிஸ் என்ற சிறு பகுதியில் தான் பல நூற்றுக்கணக்கான உணர்ச்சி நரம்புகள் பின்னிபிணைந்து இருக்கின்றன என்பது ஆச்சரியமான ஒரு விஷயம் தான். அதிக உணர்ச்சி மிகுந்த பகுதியும் இதுதான். அந்த பகுதி தூண்டப்பட்டு அடையும் இன்பமே உச்சகட்டம் ஆகும். 

* உச்சகட்டம் என்பது ஏதோ அடிவயிற்றில், அங்கே மட்டுமே ஏற்படக்கூடிய நிகழ்வு இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முழு உடலிலும் தோன்றும் சிலிர்ப்பு அது. அந்த நேரத்தில் மூளை அலைகளைப் பதிவு செய்தால் அதன் தீவிரத்தை நாம் நன்கு உணர்ந்துக் கொள்ள முடியும்.அந்த நேரம் மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன மாற்றங்களும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன.  

இந்த உணர்வலைகளில் உடல் அதிக சூடாக மாறிவிட., அப்படியே சப்த நாடிகளும் அடங்கி மயக்கமான ஒரு நிலைக்கு கொண்டு போய்விடும். உடல் பறப்பதை போன்ற ஒரு பரவச நிலைக்கு தள்ளபடுவதை நன்றாக உணர முடியும். 

* வெறும் உடலுறவு மட்டுமே ஒரு போதும் 'முழு திருப்தியை  ஒரு பெண்ணுக்கு தராது' என்பதே ஆய்வுகளின் முடிவு. உச்சகட்டம் அடைந்த ஒரு பெண்ணால் மட்டுமே  மனதளவிலும் உடலளவிலும் உற்சாகமாக இருக்க முடியும். அதை எட்டமுடியவில்லை இருந்தும் நான் உற்சாகமாக இருக்கிறேன் என்று ஒரு மனைவி சொல்கிறாள் என்றால் அது முழு உண்மை கிடையாது, அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பதை பற்றி  தெரியாதவர்களாக இருக்கலாம் அவ்வளவே. 

* இங்கே நான் சொல்ல போகிற விஷயம் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம்...ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும்... உறவில் ஆணோ, பெண்ணோ உச்சகட்டத்தை அடையமுடியவில்லை என்றால் அனார்க்கஸ்மியா (Anorgasmia) என்கிற செக்ஸ் குறைபாட்டில் தான் கொண்டு போய்விட்டுவிடும் என்பதே மருத்துவ ஆய்வாளர்களின் எச்சரிக்கை.  .....??!   ஆனால் உச்சகட்டம் போக முயற்சி செய்தும் போக முடியாத ஒரு நிலையும் இருக்கிறது. இதற்கு உளவியல் காரணங்கள்  இருக்கலாம்....சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள், உறவை குறித்த முறையான தெளிவின்மை, உறவை பற்றிய அச்சம் இவை போன்ற சில காரணங்களும்  உச்சகட்டம் அடைய முடியாமல் தடுக்கலாம். இதில் எதில் குறை என்று பார்த்து மருத்துவரிடம் சென்று சரி செய்து கொள்வது இப்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது.

எப்படி பார்த்தாலும் கணவன் மனைவி உறவில் அந்தரங்க உறவு என்பது அந்த குறிப்பிட்ட நேரம் மட்டுமே நிகழ்ந்து முடியக்கூடிய ஒரு சாதாரண நிகழ்வு இல்லை.  அங்கே சரியாக  நடைபெறவில்லை  என்றால் அதன்  எதிரொலி பல வடிவத்தில் பிரச்சனையாக விஸ்வரூபம் எடுக்கும் என்பதை தம்பதியினர் மறந்து விடகூடாது. கணவன் தனது மனைவியை உச்சகட்டம் என்றதொரு அற்புத உணர்விற்கு அழைத்து செல்வது மிக அவசியம்...அதன் பிறகே தன் தேவையை நிறைவேற்றி கொள்வதே மிக சரியான தாம்பத்திய உறவு நிலையாகும். அப்போதுதான் கணவன்  தன் மனைவியை வென்றவன் ஆகிறான்...!! 

ஆனால் ஆண்களில் சிலருக்கு ஆரம்ப நிலையிலேயே தன் தேவையை முடிக்கக்கூடிய ஒரு நிலை ஏற்படலாம்  (அவர்களின் உடல்நிலை காரணமாக இருக்கலாம் ) அந்த நேரம் மனைவியை முழு திருப்தி படுத்த இயலாமல் போகலாம்....அப்படியான நிலையில் இருப்பவர்கள் என்ன காரணத்தினால் தங்களால் அதிக நேரம் இயங்க முடியவில்லை என்பதை பற்றி தெளிவுபடுத்தி கொள்ளவேண்டும் இல்லையென்றால்  மருத்துவரை அணுகி முறையான ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.  

பெண்ணின் செக்ஸ் வாழ்க்கை திருப்தியாக இல்லையென்றால்  அப்பெண்ணின் பொது வாழ்க்கையும் , குடும்ப வாழ்கையும், அவளின் தன்னம்பிக்கையும் வெகுவாக குறைகிறது, பாதிக்கப்படுகிறது என்கிறது ஆய்வு.

எதிர்பார்ப்புகளும்  ஏமாற்றங்களும் குடும்பத்தில் ஏற்படும் போதுதான் விரிசல்களும் அதிகரிக்கிறது.  ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படும் நிறைவேறாத தேவைகள், கசப்பான அனுபவங்கள் போன்ற காரணங்கள் தான் வேறு தவறான முடிவுகளை எடுக்க வைக்கின்றன. தடம் மாறுகிறார்கள். ஒரு கட்டத்தில் 'இக்கரைக்கு அக்கறை பச்சை' என்று புரிய வரும் போது...வருடங்கள் ஓடி போயிருக்கும்....தவறான உறவில் இருந்து மீள முடியாத நிலை ஏற்பட்டு இருக்கும்.

'ஆண் பெண் இருவருக்குமே தாம்பத்திய உறவு சரி இல்லை' என்றால் அதன் முடிவு தவறான வேறு உறவு தான் என்று அர்த்தம் இல்லை.  ஆனால் இன்றைய கால கட்டத்தில் வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் மிக மிக அதிகம் என்பதை மறுக்க முடியாது. இந்த பிரச்சனை பற்றி இனி தொடரும் பதிவுகளில் பார்க்கலாம்.
   
"மரணம் ஏற்படும் முன்பு மனிதன் வாழ்ந்தாக வேண்டும்.
கௌரமாக மரணமடைவதற்கு கௌரமாக வாழ வேண்டும் !"

தாம்பத்தியம் - 18

தாம்பத்தியம் - 18

உறவு ஏன் சில நேரம் மறுக்கப்படுகிறது ?

கணவன் மனைவி உறவு ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர்களுக்குள் செக்ஸ் உறவு என்பது நன்றாக இருக்கவேண்டும். மிக அவசியமானதும்  கூட. இதை தவிர்ப்பது என்பது இருவருக்குமே பாதிப்பை மன அளவில் ஏற்படுத்தும். பல  விவாகரத்துக்கு  இதுதான் அடிப்படை  காரணம் என்பது அதிர்ச்சியுடன் கூடிய உண்மை.

இந்த உறவை பொறுத்தவரை கணவன் விருப்பபட்டு அழைக்கும் போது மனைவி மறுப்பதுதான் பெரும்பாலான வீட்டிலும் நடைமுறையில் இருக்கிறது. அது ஏன் என்பது தெரியாமல் பல கணவர்களும் தவித்து போய் விடுவார்கள். இதனால் மன அழுத்தம் அதிகமாகி பாதிக்கப்பட்டவர்கள் பலர். 

ஆண்களுக்கு மட்டும் ஏன் அந்த எண்ணம் அதிகமாக இருக்கிறது என்ற ஒரு கேள்வி நான் சந்தித்த பல பெண்களிடமும் இருக்கிறது.  "அந்த ஆளுக்கு வேற நினைப்பே கிடையாது எப்பவும் அந்த நினைப்புதான்....?! பிள்ளைங்க வேற வளர்ந்திட்டாங்க.  இப்பவும் அப்படியே இருக்க முடியுமா..?? என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாரு..." இந்த மாதிரியான புலம்பல்கள் தான் பலரிடமும்...!

ஏன் இதை ஒரு வேலையாகவோ, அசிங்கமாகவோ, அருவருப்பானதாகவோ  நினைக்க வேண்டும் ?? தினம் மூன்று வேளை உணவு என்பது உடம்பிற்கு எந்த அளவிற்கு அவசியமோ அந்த மாதிரி 'அளவான உடல் தொடர்பான உறவும் அவசியம் தான்'  என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

ஆண்கள் எப்போதும் அந்த எண்ணத்தை  மட்டுமே கொண்டவர்கள்  அல்ல. அதைவிட பல முக்கிய பொறுப்புகளையும், கடமைகளையும் கொண்டவர்கள் அவர்கள். இந்த விஷயத்தை பொறுத்தவரை அவர்களின் உடல் அமைப்பு எப்படி என்று பார்த்தோம் என்றால் 90 வயதானாலும் அவர்களால் ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியும்.  அவர்களின் உடம்பில் அணுக்களின் சுரப்பு என்பது இருந்து கொண்டே இருக்கும். இதன் எண்ணிக்கை வேண்டுமானால் நபருக்கு நபர் வேறுபடலாம். வயதிற்கு ஏற்ப மாதம் குறைந்தது 4 முறையாவது உறவு என்பது அவர்களுக்கு அவசியமாகிறது. 

கணவனின் தேவை என்ன என்பதை ஒவ்வொரு மனைவியும் புரிந்து கொண்டு உறவுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திக்கொண்டு கணவனை கவனிக்கும் போதுதான் அந்த கணவனும் மன நிறைவுடன் புத்துணர்ச்சி அடைவான், நீங்களும் உற்சாகம் அடைவீர்கள். அதைபோல் மனைவியின் விருப்பம் என்ன , சூழ்நிலை என்ன என்று கணவனும் புரிந்து கொண்டு நடந்து கொண்டால் சம்சாரம் ஒரு சங்கீதம் தான்.

மறுப்பது எதனால் ??

சில நேரம் கணவனோ, மனைவியோ ஒருவருக்கு விருப்பம் இருந்து அதை மற்றொருவர் மறுக்க வேண்டிய நிலை  ஏற்படும்.  பொதுவாக பார்த்தோம் என்றால் இது ஒரு சாதாரண விசயமாக தோன்றலாம்...ஆனால் 'உறவு மறுத்தல்' என்பது உடனே கொல்லும்  விஷம் போன்றது. ( மனதை ) இதனால் ஏற்படும் கோபம் பயங்கர வெப்பமாக இருக்கும், நெருப்பை போல் சுடும்.

ஒருநாள் உறவு மறுத்தலானது கூட கணவன், மனைவி உறவையே கெடுத்து விடுகிறது. தன்னை பிடிக்கவில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது , தங்களை அலட்சியப்படுத்துவதாக எண்ணி உள்ளுக்குள் மருகுகிறார்கள். நாளடைவில் மன அழுத்தம் அதிகமாகி தன்னை மறுத்தவர் மேல் உள்ள கோபத்தை, வெறுப்பை வார்த்தைகளில் கொட்டுவார்கள். அவர்கள் செய்யும் சின்ன சின்ன தவறையும் பெரிதாக எண்ணி கூச்சலிடுவார்கள். இதன் தொடர்ச்சியாக அடுத்து வருவது தான் துணையின் மீதான சந்தேகம்...??!  தன்னை தவிர்க்க காரணம் வேறு ஒருவரின் பால் ஏற்பட்ட ஈர்ப்பாக இருக்குமோ என்பதில் வந்து நின்றுவிடுகிறது.

இப்படியாக நீண்டு கொண்டே செல்லும் பிரச்சனை முதலில் வார்த்தையால் நோகடிப்பது, சண்டை, சில நேரம் கை நீட்டல் என்று போய்விடுகிறது.

காரணங்களும் விளக்கங்களும்

*  உண்மையில் கணவனோ, மனைவியோ ஒருவர் உறவுக்கு அழைக்கும் போது இன்னொருவர் மறுப்பதற்கு 99 சதவீதம் செக்ஸ் காரணமாக இருப்பது இல்லை. அதாவது செக்ஸ் ஐ  மறுத்தாலும் காரணம் செக்ஸ் கிடையாது, இருவருக்கும் இடையில் இருக்கும் உறவுகளில் ஏற்பட்ட புரிந்துகொள்ளாமை தான் காரணமாக இருக்கும்.  தங்களது கோபத்தை இந்த நேரத்தில், இதில் தான் காட்டுவார்கள்.

*   அப்புறம் நேரம், உடல் சோர்வு, தூக்கம், உடல் நல  குறைவு இவையும் காரணமாக  இருக்கலாம்.

* "இரண்டு பிள்ளைகள் ஆயிருச்சு, பிள்ளைகள் வேற வளர்ந்திட்டாங்க.இனிமே என்ன ?"
என்பது மாதிரியான சில மனைவிகளின் சலிப்பான பதில்கள், எண்ணங்கள்..!

விளக்கங்கள் சில

* மனைவி அல்லது கணவன் உறவை தவிர்க்கிறார் என்றால் அவர் செக்சை தவிர்கிறாரே தவிர, உங்களையே தவிர்க்கிறார் என்று அர்த்தம் இல்லை !

*   மறுப்பதற்கு என்ன காரணம் என்பதை பேசி தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும். மறுப்பவர் காரணத்தை சொல்லி விட வேண்டும்.

*  மறுப்பது சுலபம் ஆனால் அதனால் ஏற்படும் மனவலியை மறுப்பவர்  புரிந்து கொள்ள வேண்டும்.

*   ஒருவேளை உறவு கொள்வதில் ஏதும் பிரச்சனை இருந்து, அதன் காரணமாக தான் உறவை தவிர்பதாக இருந்தால் கட்டாயம் மருத்துவரை சந்திப்பது உத்தமம். அலட்சியம் இந்த விசயத்தில் தயவு செய்து வேண்டாம்.

" பல ஆண்களுக்கு அவர்களின் சுய மதிப்பீடு என்பது சம்பாதிக்கும் திறனையும், செக்ஸ் ஆற்றலையும் சார்ந்தே உள்ளது. இதில் எதைக் காயப்படுத்தினாலும் வெறுத்து போய் விடுவார்கள் "

இதை பெண்கள் கொஞ்சம் புரிஞ்சி கொள்ளனும்.

மனோரீதியாக அதிக ஈர்ப்பு கொண்ட தம்பதிகளின் செக்ஸ் வாழ்க்கை மிக இன்பகரமானதாக இருக்கும். அவர்களுக்குள் இருக்கும் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளை கூட சிறப்பான செக்ஸ் வாழ்க்கை வேகமாக போக்கிவிடும்.

எந்த விதத்தில் எல்லாம்  கணவனும்  , மனைவியும் தங்களது நெருக்கத்தை அதிகரித்து கொள்ளலாம் என்பதை பற்றி அடுத்த பதிவில் பார்போம்.

தாம்பத்தியம் - 17

தாம்பத்தியம் - 17


முதல் நாள் இரவில் புதுமண தம்பதியினர்  எந்த அளவிற்கு புரிதலுடன் நடந்து கொள்கிறார்கள் அந்த அளவிற்குதான் தொடரும் நாட்கள் அமையும். அன்றுதான் உறவு நடக்கணுமா....?  ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்ட பின் நடப்பதே பெரும்பாலும் சரியாக இருக்கும் என்று இதற்கு முந்தைய பதிவில் பகிர்ந்தேன்.  ஆனால் ஒருவேளை அப்படி நடக்காமல் இருந்திருந்தால் அதன் பின் விளைவுகள் கொஞ்சம் அதிர்ச்சி அளிக்ககூடியதாக தான் இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியவில்லை.


இன்றைய திருமண முறை

நம்முடைய இந்த திருமண முறை  இன்னும் எவ்வளவு காலம் நடைமுறை வழக்கத்தில் இருக்கும் என்ற  நம்பிக்கை இல்லை. ஒரு பெண் எதிர்பார்க்கும் உடல், மனம் , அறிவு சார்ந்த அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்குரிய ஆண் அவளுக்கு திருமணத்தின் மூலம் தேவைபடுகிறது. ஆனால் இப்படி பட்ட ஒருத்தரை தேர்ந்தெடுக்க கூடிய தகுதி பெற்றோருக்கு இருக்குமா என்பது  சந்தேகமே. அந்த காலத்தில் ஒரு சமூக கட்டமைப்பு இருந்தது. பெற்றோர் விரும்பிய துணையுடன் மணம்  புரிந்தார்கள், உடல் கலந்தார்கள், மனம் ஒருமித்து வாழ முயற்சித்தார்கள் . ஆனால் இப்போது அதே சமூக எண்ணம் தான் இருக்கிறது, ஆனால் தலைமுறையினர் மாறிவிட்டனர். 

தெரிந்த உறவினரின் மகனின் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு  தான் வெகு விமரிசையாக நடந்தேறியது.  திருமணமும் 10 நாளில் பெண் முடிவு செய்யப்பட்டு முதல் நாள் நிச்சயதார்த்தம் மறுநாள் கல்யாணம் என்று குறுகிய காலத்திற்குள் முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. மணமக்கள் இருவரும் நன்கு படித்தவர்கள்...நல்ல வேலையிலும் இருப்பவர்கள்...இருவரின் முழு சம்மதத்தின்  படி  தான் திருமணம் முடிவு செய்யப்பட்டது...

ஒரே மகன் என்பதால் திருமணம்  தொடர்பான பத்திரிகை அடிப்பது, உறவினர்களுக்கு கொடுப்பது, மண்டபம் பேசி முடித்தது உள்பட அனைத்து வேலைகளையும் மணமகன் தான் இழுத்து போட்டு பார்த்தார். திருமணம் முடிந்த அன்று மறுவீடு சடங்கு எல்லாம் முடிந்து மணமக்கள் வீடு திரும்ப இரவு 11 மணி ஆகிவிட்டது.  பின்னர் இருவரும் தனியறைக்கு அனுப்பப்பட்டனர்.....

ஆனால் காலையில் மணப்பெண் கோபமாக அறையில் இருந்து வெளியில் வந்தாள், பலரும் காரணம் கேட்டதுக்கு கொஞ்சமும் யோசிக்காமல், 'எனக்கு பையனை பிடிக்கவில்லை...அவன் ஆம்பளையே இல்லை ' ,என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். அவளது பெற்றோர் எவ்வளவோ சொல்லியும், 'உங்களுக்கு ஒன்றும் தெரியாது என் வாழ்க்கை முடிந்து விட்டது, இனி ஆக வேண்டியதை பாருங்கள்' என்று ஒரே போடாய் போட்டு விட்டாள்.

முந்தினநாள் இரவு அப்படி என்னதான் நடந்தது என்றால், ஏற்கனவே மணமகன் கல்யாண வேலையாலும், பிரயாண களைப்பினாலும் சோர்ந்து இருந்திருக்கிறார்...நேரமும் அதிகமாகி விட்டதால், பெண்ணிடம் தனக்கு களைப்பாக இருக்கிறது, தூங்க வேண்டும் என்று கூறி விட்டு இவள் பதிலுக்கும் கூட காத்து இருக்காமல் தூங்கிவிட்டார். ஆவலுடன் அந்த இரவை எதிர்பார்த்து இருந்த மணமகள் வெறுத்து போய் இருக்கிறாள். இதுதான் நடந்தது  

இப்போது நாலு மாதம் ஆகிறது விஷயம் கோர்ட்டு படி ஏறி...??!

(இந்த விசயத்திற்கு குறை சொல்ல பெண்தான் கிடைத்தாளா என்று நினைக்காதீர்கள். பொறுமையாக, நிதானமாக இருக்க வேண்டிய பெண்களே இப்படி புரிந்துகொள்ளாமல் நடக்கிறார்கள் என்றால் ஆண்களை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை ) 

எதிலும் அவசரம்...எங்குதான் போய் முடியும் ...??

குழந்தை பிறந்த இரண்டரை வயதிலேயே  படிக்க அனுப்புவதில் இருந்து கல்லூரியில் சேர்ப்பது , வேலை தேடுவது என்று எதிலும் அவசரம்...உணவிலும் கூட பாஸ்ட் புட், நிற்க கூட நேரம் இன்றி எதிலும் வேகம் வேகம் அனைத்திலும் வேகம்....??!  

சீக்கிரமே அனைத்திலும் தம் பிள்ளைகள் வல்லவர்களாக மாறிவிட வேண்டும் என்கிற பெற்றோர்களின் ஆவலுடன் இணைந்த அவசரம்....!!  எதிர்பார்ப்புகள் விரைவாக நிறைவேறனும் என்ற இன்றைய தலைமுறையினரின்  கட்டுக்கடங்காத வேகம் கடைசியில் 'ஆயிரம் காலத்து பயிர்' என்று நம் வீட்டு பெரியவர்கள் சொல்லி வந்த கல்யாணமும் விரைவாகவே முற்றும் போட கூடிய அளவில்  வந்து நின்றுவிட்டது. 

நான் சொன்ன இந்த உதாரணம் போல் பல இருக்கலாம். ஆனால் அவற்றில் பல  இன்னும் செய்திதாள்கள், பத்திரிகைகள் வரை வரவில்லை, விரைவில் வரக்கூடிய அளவில் தான் விசயத்தின் தீவிரம் இருக்கிறது. 

ஒரே நாளில் எப்படித்தான் ஒரு முடிவுக்கு சுலபமாக வரமுடிகிறது என்றே புரியவில்லை. இந்த விவகாரத்தை வைத்து மட்டும் பார்த்தோம் என்றால் அந்த காலம் மாதிரி இருட்டு அறையில் நடப்பதை முதலில் கவனிப்போம், அப்புறம்  மெதுவாக ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளலாம் என்றே முடிவுக்கு வரலாம் என்பது போல் இருக்கிறது அல்லவா..??

பெண்களில் சிலர் இந்த மாதிரி நிதானமாக நடந்து கொள்ளாமல் இருப்பதாலும், சில ஆண்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசரபடுவதாலும் தான் ஆரம்பமே அலங்கோலமாகி  விடுகிறது.  இன்னும் பல காலம் சேர்ந்து தான் இருக்க போகிறோம் என்கிறபோது எதற்கு இந்த தேவை இல்லாத அவசரமும் ஆர்ப்பாட்டமும்.....?!

திருமணம் எதிர் கொள்ளும் அனைவருக்குமே எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது. 60 வயதை கடந்தவர்களுக்கு கூட முழு அளவிலான தெரிந்து கொள்ளுதல் இல்லை என்றே சொல்ல முடியும். வெறும் 10 , 20 நிமிடங்களில் மட்டும் முடிந்து விடுவதல்ல அந்தரங்கம் என்பதும்...இயல்பாகவும் மெதுவாகவும் கையாளும் போது தான் அதன் அனுபவங்கள் புதுமையாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்  இருப்பதை உணரமுடியும்.      

தாம்பத்தியத்தின் ஆயுட்காலம் 

ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான தம்பதிகளுக்குள் எத்தனை வயது வரை உறவு நீடிக்கிறது என்று கேட்டால் 70 வயது வரை என்று பதிலளிக்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு.  அந்த காலத்தில் தாம்பத்திய உறவு என்பது குழந்தை பெற்றுக்கொள்வதர்க்கான ஒரே வழி என்று இருந்தது. அவர்களை பொருத்தவரைக்கும் இது 'இருட்டறைக்குள் நடக்கும் ஒரு நிகழ்வு' மட்டுமே. 

ஆனால் இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வது மிக அவசியமாகிறது. "உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், டென்ஷன் குறைய நீங்கள் எந்த டாக்டரையும் தேடி ஓடவேண்டியது இல்லை, உங்கள் துணையை நாடுங்கள்" என்பதே மருத்துவர்களின் முக்கியமான அறிவுரை.    

"வேலை பிரச்சனைகள், வீட்டு பிரச்சனைகள் எதையும் தங்களது அறைக்குள் நுழையவிடாமல் வாழ்க்கை துணையை அன்பாக நடத்தியும், ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக்கொள்ளும் தம்பதிகளுக்கு, மன அழுத்தத்திற்குள் காரணமான 'கார்டிசால்' என்ற ஹார்மோன் குறைவான அளவிலேயே சுரக்கிறது. இந்த கெட்ட ஹார்மோன் சுரப்பதை கட்டுபடுத்துவது 'ஆக்சிடோசின்' என்ற ஹார்மோன் தான். இந்த ஆக்சிடோசின் கணவன், மனைவி உடல் உறவின் போதே அதிக அளவில் சுரக்கிறது என்பது  அறிவியல் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் 'மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில தம்பதிகளுக்கு இடையே நெருக்கத்தை உருவாக்கிய பிறகு அவர்களது மன அழுத்தம் பெருமளவு குறைந்த்ததாகவும்' ஆய்வுகள்  கூறுகின்றன.

இந்த மாதிரியான விசயத்தில் ஒரு சிலர் காட்டும் அலட்சியம், குடும்பத்தை எப்படி எல்லாம் சீர்குலைக்கிறது என்பதை எண்ணும்போது தான் இந்த உறவின் அவசியத்தை தம்பதியினருக்கு வலியுறுத்தவேண்டி இருக்கிறது.

தாம்பத்தியம் தொடரில்  இனி அடுத்து வருவது......

கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவர் இந்த உறவிற்கு விரும்பி அழைக்கும் போது மற்றவர் மறுப்பது என்பது இன்று பெரும்பாலோரிடம் சாதாரணமாக காணபடுகிறது. அப்படி 'உறவு மறுத்தல்' என்பதால் ஏற்பட கூடிய விளைவுகள் என்ன என்பதையும் , அதனை எப்படி எதிர் கொள்ளலாம் என்பதையும் அடுத்த பதிவில் பார்போம். 

தாம்பத்தியம் - 16

தாம்பத்தியம் - 16


இதற்கு முந்தைய பதிவை படிக்காதவர்கள்,தாம்பத்தியம் - 15 படித்து விட்டு வந்தால் தொடர்ச்சி புரியும் என்று நினைக்கிறேன்.

தாம்பத்தியத்தின் முக்கிய கட்டமாகிய அந்தரங்கம் பற்றியது தான் இனி வரும் பதிவுகள். நான் ஏற்கனவே சொன்னது போல் பல குடும்பங்களின் தலைஎழுத்து அங்கே நடக்கும் விவகாரங்களை வைத்து தான் எழுதபடுகிறது என்றால் மிகையில்லை. ஆனால் பல குடும்பங்களிலும் இதை ஒரு பொருட்டாகவே நினைப்பது இல்லை.

இதைவிட முக்கியம் வேறு ஒன்றும்  இல்லையா என்பதே...? முக்கியமானதில்,  இதுவும் ஒன்று அவ்வளவுதான்.  'பல ஊடலும்  சரியாவது, கூடலில்  தான்' அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை ஏனோ பலரும் சரிவர கையாளுவது இல்லை.  ஒரு கணவன்,  மனைவி ஆகிய இருவரின் புரிதல் அங்கிருந்தே தொடங்குகிறது...

முதல் நாள் இரவு.

சாந்தி முகூர்த்தம் என்றால் " காதலில் துடித்துக்கொண்டிருந்த உள்ளம், ஆசைகளை அடக்கிக் கொண்டிருந்த உடம்பு அன்றைக்கு சாந்தி அடைகிறது " என்பது தான் அதன் அர்த்தம் என்று பெரியவர்கள் சொல்வார்கள்

ஆனால் முதல் நாளே நடந்துதான்  ஆகவேண்டுமா  என்பதுதான் இப்போதைய காலகட்டத்தில் கொஞ்சம் சரியா தெரியவில்லை.

இருவேறு கலாசாரம், குடும்ப சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த ஆண், பெண் இருவரையும் திருமணம் என்ற பந்தம் இணைக்கிறது என்பது அற்புதமான ஒரு நிகழ்வு.  மாறுபட்ட எண்ணங்கள், வேறுபட்ட உணர்வுகள் என்று வளர்ந்த இருவரையும் அந்த ஒரு நாள் இணைக்கிறது. ஒருவருடைய  விருப்பு, வெறுப்பு என்னவென்று மற்றொருவருக்கு அந்த ஒரு நாளில் எப்படி தெரிந்துக்கொள்ள முடியும்.  அப்படி எதையும் தெரிந்து கொள்ளாமல் புரிந்து கொள்ளாமல், உணர்வுகள் கலக்காமல் வெறும் இரு உடல்கள் மட்டும் கலப்பது என்பது ஒரு வித ஆர்வகோளாரில்  கொண்டுபோய் விட்டு விடுகிறது ...??

தவிரவும் பல வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த தம்பதிகள் கூட இன்னும் ஒருவரின் ஆசைகள், தேவைகள், எண்ணங்கள் என்ன என்றே புரியாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது காலையில் தாலி கட்டி பின் அன்று இரவுக்குள் அவர்களுக்குள் எப்படி புரிதல் வந்து இருக்க முடியும் ?? அப்படி கொஞ்சம் கூட வந்திருக்க முடியாத சூழ்நிலையில் எப்படி அவர்களால் ஒருமித்து ஒன்று கலக்க முடியும். அப்படியே சேர்ந்தாலும் அது எப்படி முழுமை பெற்றதாக இருக்கமுடியும்...??  அவசர கோலத்தில் அள்ளி தெளித்த ஒன்றாகத்தான் முடியும்.

அது ஒருவரின் ஏமாற்றத்தில் கூட முடிந்து விடலாம், அந்த ஏமாற்றம் வாழ்வின் இறுதி வரை கூட தொடரக்கூடிய வாய்ப்புகள்  இருக்கிறது. "first impression is the best impression " என்று சொல்வார்கள். அதனால் மிகவும் சென்சிடிவான இந்த விஷயத்தை கையாளுவதில் இருவருக்கும்  மிகுந்த கவனம் தேவைபடுகிறது.

நம் முந்தைய காலத்தில் பெரியவர்கள் நல்ல நேரம், காலம் பார்த்து இதனை நடத்தினர் . பிறக்க  போகும் குழந்தையை மனதில் வைத்து நேரத்தை முடிவு செய்தனர்.  அப்போது இருந்த ஆண், பெண் இருவருக்கும் எதிர்பார்ப்புகள் என்பது இப்போது இருப்பது போல் அதிகம் இல்லை. அதனால் பெரியோர்களின் வழி நடத்தலின் படி நடந்தார்கள்...., அதனால் இருவருக்கும் நடுவில் ஏதும் பிரச்சனை என்றால் அவர்கள் தலையிட்டு தீர்த்துவைத்து விடுவார்கள்.  அதனால் பிரச்னை  அந்த நாலு சுவற்றுக்குள் மட்டுமே இருந்தன.

இந்த அவசர உலகத்தில் இருவரும் புரிந்து கொண்டு கலப்பது. தொடர்ந்து வாழ்க்கை நல்ல விதத்தில் பயணிப்பதற்கு உதவியாக இருக்கும்.

அன்றே முடியவேண்டும் என்பது கட்டாயமா??

இந்த கேள்வி அவசியமா என்று  பலருக்கு தோணலாம். ஆனால் அவசியமான கேள்விதான் . சில குடும்பங்களில் பிரிவினைக்கு அதாவது கருத்து வேறுபாட்டுக்கு  காரணம் என்ன என்று விரிவாக விசாரிக்கும் போது தான் தெரிகிறது. அவர்கள் சொல்லும் ஒரு வியப்பான பதில் , " அன்னைக்கு ராத்தியிலேயே தெரிந்து விட்டது இவர் அல்லது இவளுடன் காலம் முழுக்க ஒற்றுமையாக இருக்கமுடியாது என்று...!! " .

அது எப்படி ஒரே இரவில் ஒருவர் சரி இல்லை என்ற முடிவுக்கு வர முடியும்...?? காரணம் ரொம்ப சுலபம். அங்கே தான் முழு வாழ்க்கைக்கும் தேவையான அஸ்திபாரம்   போடப் படுகிறது. அது அங்கே சரிவர போடப்படவில்லை என்றால் , வாழ்க்கை என்ற முழு கட்டிடமே ஆட்டம் கண்டுவிடும். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை நாம் ஏன் பேச தயங்க வேண்டும்...??

சில ஆலோசனைகள்
பூ மலரட்டுமே இயல்பாய்..!!

எதையும் முடிவு செய்ய வேண்டியது திருமணம் முடிந்த அந்த 'புதுமண தம்பதிகள்' தான். இருவருமே ஒன்றில் தெளிவாக இருக்க வேண்டும்...அந்த அறைக்குள் செல்வதற்கு முன்பே 'நான்' என்பதை மறந்து விட்டு புது களி மண் போல மனதை வைத்து கொண்டு செல்லவேண்டும். படித்த படிப்பு, அந்தஸ்து, செல்வாக்கு, அழகு குறித்த பெருமை  அனைத்தையும் வெளியே விட்டு விட வேண்டும்....! (புது  மண்ணில் எழுதப்படும் எதுவும் நன்கு தடம் பதிந்து விடும், மேலும் புது மண்ணை வைத்து எதையும் செய்யமுடியும், பானை போலாகவோ அல்லது செங்கலாகவோ அல்லது  அழகான சிலையாகவோ ??  'எதை'  என்பது அவர்களை பொறுத்தது).

தோழிகள், நண்பர்கள் என்று பலரும் சொல்லும் அறிவுரைகளை மனதில் வைத்து கொண்டுதான் பலரும் நடந்துகொள்வார்கள். ஆனால் உங்கள் நண்பர்கள், உறவினர்களையும் வெளியில் விட்டு விட்டு செல்லுங்கள். இப்போது நீங்கள் தான் ஒருவருக்கு ஒருவர் நண்பர்கள், புதிதாய் பார்க்கும் நண்பர்களின் அறிமுகம் எப்படி இருக்குமோ அப்படி இருக்க வேண்டும் உங்களின் உரையாடல். அதுவே உங்களின் படபடப்பு, பயம், அச்சம், வெட்கம் அனைத்தையும் விரட்டும். உங்கள் மனமும், உடலும் அப்போதே உற்சாகமாகி விடும். தெளிவாக  தயக்கம் இன்றி பேசுங்கள்...

இங்கு ஒன்றை கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும். ஆணோ, பெண்ணோ தங்கள் துணையிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று தங்கள் வாழ்வில் நடந்த, 'பிறரிடம் பகிர்ந்து கொள்ள கூடாத' காதல் மாதிரியான சென்சிடிவான விசயங்களை சொல்லிவிடுவார்கள்.(பொய் சொல்ல சொல்றீங்களா  என்று நினைக்காதீர்கள்...உண்மையை சொல்லவேண்டிய அவசியம் இல்லை..அது இனி தொடரபோகும் வாழ்க்கைக்கு முக்கியமும் இல்லை, தேவையும் இல்லை ) காதல், ஈர்ப்பு போன்ற விசயங்கள் இப்போது சகஜமான ஒன்று. துணையுடன் உண்மையை சொல்கிறேன் பேர்வழி என்று கொட்டிவிட்டீர்கள் என்றால் முடிந்தது கதை.

எந்த ஒரு பெண்ணும், எந்த ஒரு ஆணும் தனது துணை இன்னொருவரால் காதலிக்கபட்டவர் என்பதை ஜீரணிப்பது என்பது சிரமம். அவர்களும் அந்த நேரம் பெருந்தன்மையாக ஏற்று கொள்வார்கள்  " இதுக்கு முன்னாடி நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை, இனி உனக்கு நான் எனக்கு நீ " என்று கூட வசனம் பேசலாம்.  ஆனால் கொஞ்ச நாள் சென்றதும், இந்த உண்மை அவர்களின் மனதை கண்டிப்பாக யோசிக்க வைத்து குழப்பும். சாதாரணமாக  வேறு யாரிடம் பேசினாலும் மனதில் கேள்வி குறி தோன்றும்..அப்புறம்  சந்தேகமாக உருவெடுக்கும்.......அப்புறம் என்ன உங்கள் நிம்மதி குலையும்.....தினம் போராட்டம் தான்.

அதனால் பழைய கதை பேசுவது இருவருக்குமே நல்லது இல்லை... எல்லோரின்  வாழ்விலும் ஏற்படக்கூடிய ஈர்ப்புதான் என்று ஒதுக்கி விட்டு இனி வாழபோகும் பாதையை ஒழுங்கு படுத்துவது தான் முக்கியம் என்ற திட  நம்பிக்கை கொண்டு கருத்துகளை கவனமுடன் பரிமாறி கொள்ளுங்கள்.

இறுதியாக இருவரும் நன்கு பேசி ரிலாக்ஸ் ஆன பின்னர் உங்கள் அந்தரங்கம்  நடக்கட்டும் இயல்பாக.  ஆனால் கல்யாண களைப்பில் இருவரும் இருந்தால் அந்த நாளை ஒத்திவைத்து விடுவது மிகவும் நல்லது.  இந்த இடத்தில் பெண்ணின் விருப்பம் கண்டிப்பாக கேட்கப்பட வேண்டும் . அவளின்  விருப்பம் இல்லாமல் எதுவும் நடப்பிக்க படுவதை இந்த விசயத்தில் எந்த பெண்ணும் விரும்புவது இல்லை. 

விருப்பம் இல்லை என்ற மாதிரி தெரிந்தால் பெரிய கட்டத்திற்கு போகாமல் சின்ன சின்ன சீண்டல்கள், சில அன்பான வருடல்கள், மென்மையான சில முத்தங்கள் , ஆதரவான அணைப்பு இவற்றுடன் அந்த நாளை நிறைவு படுத்துங்கள். தன்னுடைய எண்ணத்திற்கும் கணவன் மதிப்பு கொடுக்கிறாரே என்று  எண்ணி நீங்கள் அவளின் மனதில் விரைவாய் குடியேறி விடுவீர்கள். முதலில் தனது துணையை  காதலிக்க (கற்றுகொள்ளுங்கள்)தொடங்குங்கள்....! அப்புறம் பாக்கலாம் மற்றதை...!!

அற்புதமான இந்த வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து சுவையானதாக மாற்றுங்கள். எல்லாம் அந்த ஒரு நாளில் மட்டுமே முடிந்து போய் விடுவது இல்லை. அந்த நாள் ஒரு இனிய  தொடக்கம் மட்டுமே.....இனி தொடரும் நாட்களில் மெது மெதுவாய் முன்னேறி அடுத்து  வெல்லுங்கள் அவளின் மனதையும் , அழகையும்..... !

பின் குறிப்பு 

ஒருவேளை அன்றே நடக்கவில்லை என்றால் சில விரும்ப தகாத நிகழ்வுகள் அடுத்து நடக்கலாம்....??!!  அவை என்ன என்று அடுத்து தொடர்ந்து பார்க்கலாம்...

தாம்பத்தியம் - 15

தாம்பத்தியம் - 15


அந்தரங்கம்

தாம்பத்தியம் சீர்குலைய பல காரணிகள் இருக்கிறது என்று இதுவரை பார்த்தோம், மற்றொரு முக்கியமான காரணம்  ஒன்றும் உள்ளது, அதுதான் கணவன், மனைவி இருவருக்கும் இடையிலான அந்தரங்கம். 

கடந்து போன கவலைகளிலும் வர இருக்கிற சிந்தனைகளிலும் மூழ்கி, நிகழ்கால ஆனந்தங்களை அனுபவிக்காமலேயே இருக்கிறார்கள். இதை அவர்கள் புரிந்து கொள்ளும் முன்பே இளமை முடிந்து முதுமை வந்து வாழ்க்கை அவர்களை தாண்டி  போயே விடுகிறது.

வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்க வேண்டும் என்பதை விட, சிக்கல் இல்லாமல் ஒவ்வொரு நாளையும் எப்படி ஓட்டி செல்வது என்பதே பலரது கவலையாக இருக்கிறது. 

அந்தரங்கம் என்று சொல்லிவிட்டு அதை எப்படி வெளியில் விவரமாக சொல்வது...? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் இதுதான் பல குடும்பங்கள் பிரிவதற்கு மிக மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. பல சண்டைகளின் ஆரம்ப  அடிப்படை காரணமே இதுதான் என்று என்னால் உறுதியாக கூற முடியும். என்னவொன்று கணவன், மனைவி இருவருமே இதுதான் எங்களுக்குள் பிரச்சனை என்று வெளிபடையாக சொல்வது இல்லை. 

ஒரு ஆணின் அந்தரங்கம் வீட்டில் சரியாக இருக்காத  பட்சத்தில் வெளியில் மாற்று இடம் சுலபமாக தேடிவிட முடியும் அது மற்றொரு பெண்ணை தேடும் வழி என்று சொல்லவில்லை... தங்களை நண்பர்கள், வேலை, பொழுது போக்கு என்ற விதத்தில் ரிலாக்ஸ் செய்து கொள்ளமுடியும் .   ஆனால் பெண்கள், தங்களின் ஆசை நிராசையாக போய்விட்டால் அது வார்த்தைகளில் எரிச்சலாக, கோபமாக, ஆத்திரமாக வெளிபடுகிறது. நாளடைவில் மன அழுத்தம், மனதெளிவின்மை, ரத்த அழுத்தம், தலைவலி போன்றவற்றில் கொண்டுபோய் விட்டு விடுகிறது..... ஆனால் இதுதான் பிரச்சனைக்கான சரியான  காரணம் என்று அந்த பெண்ணுக்கே சில நேரம் புரிவது இல்லை.

" பொருளாதார ஏற்றதாழ்வுகள் மற்றும் செக்ஸ் உறவு வெற்றி " இவை இரண்டும் ஒரு மனிதனின் ஆயுள் காலத்தை வெவ்வேறு விதமாக பாதிக்கின்றனவாம், என்பது க்ரூகர் என்பவரின் கூற்று.  ஆனால் இதனால் பெண்களை விட ஆண்கள் தான் பெரும்பாலும் பாதிக்க படுகிறார்களாம்...??!!



கல்யாணம் முடிந்தவர்களில் எத்தனை பேர்கள் முழுமையான தெளிவை இந்த விசயத்தில் பெற்று இருக்கிறார்கள்..?? மிக சொற்பமே..!!?? குடும்பத்தில்  சண்டை என்று சொல்பவர்களிடம் ஆழமாக விசாரித்து பார்த்தால் தான் தெரிகிறது...பிரச்சனையின் வேர் படுக்கை அறையில் இருக்கிறது என்பது...!!? 

வெளியில் பேசகூடாத ஒரு விசயமாக தானே இன்றும் இருக்கிறது. காரணம் நாம் வாழும் சமூதாயத்தில் இருக்கும் கட்டுபாடுகள். மற்றவர்களுடன் பேச கூடாத ஒரு அருவருப்பான ஒன்றாகத்தான் பார்க்கபடுகிறது.  கட்டுபாடுகள் இருப்பது நல்லதுதான். ஆனால் ஆரம்ப தெளிவு கூட இல்லாமல் போய்விடுவதுதான் சோகம்.

இதனாலேயே தான் வெளியில் சொல்ல முடியாத சிக்கல்கள் குடும்பத்தில் ஏற்படுகின்றன.

துணிந்து வெளியில் சொல்லமுடியாத நிலையில் இதனை பற்றிய சந்தேகங்களும், கேள்விகளும் விடை தெரியாமல் ஒரு தொடர்கதை போல் போய் கொண்டே  இருக்கிறது. இம்மாதிரியான பதில் இல்லா கேள்விகள் பலரை  மனதளவிலும், உடலளவிலும் பயங்கரமாக பாதிக்கிறது. 

 " இதனால்  அவர்களின் வாழ்க்கை தரமே குறைந்து போக கூடிய நிலையில் தான்  இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும் " என்கிறார்கள் மருத்துவர்கள்.

முக்கியமான விஷயம்  என்னவென்றால் , பலரின், குறிப்பாக பல பெண்களின் கேள்வியே, " இதை விட வேற ஒன்றும்  முக்கியம் இல்லையா ? இது மட்டும் தான் வாழ்க்கையா? "  அப்படி உள்ளவர்களுக்கே இந்த பதிவு என்று நினைக்கிறேன். 

'அதற்காக எல்லாம்  எங்களால் நேரம் ஒதுக்க முடியாது' என்று அலட்சியமாக சொல்லும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பணம், புகழ், பெயர் இவற்றை சம்பாதிக்க அவைகளின் பின்னால் ஓடவே நேரம் சரியாக இருக்கிறது. அப்படியே நேரம் கிடைத்தாலும் அந்த நேரத்தை 'தகவல் தொழில் நுட்பங்களும்', 'பொழுதுபோக்கு அம்சங்களும்' விழுங்கி விடுகின்றன.  

தனது வீட்டில் என்ன நடக்கிறது என்றே பலருக்கும் தெரிவது இல்லை. அந்த 'பொன்னான நேரத்தை' எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்ப பெற இயலாது என்பதை பலரும் உணருவதே இல்லை.  

அந்த நாலு சுவற்றுக்குள் ஒரு கணவனும் மனைவியும்  இருப்பதை பொறுத்துதான் அவர்களின் வெளி உலக நடவடிக்கை இருக்கும்.

'செக்ஸ்' என்பதின் அர்த்தம்தான் என்ன ??

உடலுறவு என்பது அறிவியல்/மருத்துவரீதியாக சொல்லவேண்டும் என்றால், "உடலின் பல்வேறு தசைகள், நரம்புகள், ரத்த நாளங்கள் இப்படி எல்லாம் ஒரே நேரத்தில் அதிகபடியாக வேலை செய்யும் , சக்தி விரயம் நிறைந்த ஒரு மிதமான நல்ல  உடற்பயிற்சி என்பதே".

" பொதுவாக மூளை வளர்ச்சியை பாதிக்ககூடிய சில ஹார்மோன்களின் தன்மையை மகிழ்ச்சித் தரக்கூடிய (உடலுறவு) அனுபவங்களின் மூலம் மாற்றியமைக்க முடியும் " என்கிறது பிரின்ஸ்டன் பல்கலைகழக ஆய்வாளர்களின் அறிக்கை.

'காதல் உணர்வு' என்பது ஹார்மோன் செய்யும் வேலை என்று சொல்வது உண்டு. அதன் பெயர்தான் 'ஆக்சிடோசின்'. இது பொதுவாக  பிரசவ நேரத்திலும் , உடலுறவு சமயத்திலும் அதிகமாக சுரக்க கூடியது. 'இதுதான் அடிப்படை'

இதை பற்றி அரிய அதீத ஆர்வம், இனம் புரியாத தயக்கம், ஒரு புத்துணர்ச்சி என பலவகையான உணர்வுகள் நம்மை ஆட்க்கொண்டு விடுகின்றன. 

கணவன் , மனைவிக்கு இடையில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, கோபதாபங்கள் அனைத்தும் இங்கே தான்  மறக்கப்படுகின்றன(மறக்கடிக்க படுகின்றன). 

பின்குறிப்பு

தாம்பத்தியத்தில் முக்கியமான பகுதியான இதை கொஞ்சம் விளக்கமாக விவரிக்க சொல்லி, பலர் கேட்டதின் காரணமாக பதிவு விரிவாக இருக்கும்...பதிவை பற்றிய சந்தேகங்கள்  மட்டும் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள். உங்கள் பெயர் வருவதை நீங்கள் விரும்பவில்லை என்று குறிப்பிட்டால் பின்னூட்டம் பப்ளிஷ் பண்ணபட மாட்டாது என்பதை சொல்லி கொள்கிறேன்.