Wednesday, July 6, 2011

கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி!

கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி!

தாத்தா ராகத்துடன் ஒரு பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். அவரது கொள்ளுப்பேரன் சோமு அவரருகே வந்தான். பெரிய தாத்தா! நீங்க இப்போ ஒரு பாட்டு படிச்சீங்களே! அதை திரும்பவும் பாடுங்க! ஜோரா இருந்துச்சே, என்றான். தாத்தாவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. தனது பாட்டையும் ரசிக்க ஒரு ரசிகன் வந்துவிட்டானே என்ற மகிழ்ச்சியில் பாட ஆரம்பித்தார். நந்த வனத்திலோர் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி சங்கர சங்கர சம்போசிவ சங்கர சங்கர சங்கர சம்போ....இப்படியாக அவர் பாடி முடிக்கவும், சோமு அவரிடம், அதெல்லாம் சரி தாத்தா...இந்த பாட்டுக்கு எனக்கு அர்த்தம் புரியலையே, என்றான். பெரியவர் சொன்னார். சோமு! இதில் பெரிய தத்துவமே அடங்கியிருக்கிறது. ஒரு கதை சொல்றேன் கேட்கிறியா, என்றார். சோமு ஆர்வத்துடன் காதை தீட்டினான். ஒரு கிராமத்துக்கு ஒரு பரதேசி வந்தார். அவர் வீடு வீடாகப் போய் பிச்சை கேட்பார்.

ஒருநாள் ஒரு வீட்டின் பெண்மணி, ஏம்ப்பா...உனக்கு கை காலெல்லாம் நல்லாத்தானே இருக்கு. உழைச்சு சாப்பிட்டா என்னவாம்? என்று கடுமையாகப் பேசி விட்டாள். பரதேசிக்கு வருத்தம். அவருக்கு ரோஷம் வந்து விட்டது. தன்னைத் திட்டிய அந்த ஊரார் முன், தான் ஒரு கடும் உழைப்பாளி என்பதைக் காட்ட ஒரு காலியிடத்தில் பூந்தோட்டம் போட்டார். கோயில்கள் மிகுந்த அந்த ஊரில் பூக்களை விற்று சம்பாதிக்கலாம் என கணக்கு போட்டார். ஆங்காங்கே கிடந்த பூங்குச்சிகளை ஒடித்து குழி தோண்டி நட்டார். அருகிலேயே ஒரு கால்வாய் ஓடியது. அதில் இருந்து தண்ணீர் எடுத்து, செடிகளில் ஊற்ற குடம் இல்லை. ஒரு குயவனிடம் சென்று, எனக்கு இலவசமாக ஒரு குடம் தா. என் தோட்டத்து பூக்களுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். நான் பரதேசி. காசு இல்லை, என்றார். இவர் பரதேசி என்றால், அவன் வடிகட்டிய கஞ்சன். இருந்தாலும் இல்லை என சொல்லாமல் அப்போதைக்கு தட்டிக் கழிப்பதற்காக, நாளை வாரும், குடம் தருகிறேன், என சொல்லி அனுப்பிவிட்டான். அவர் அவன் குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக அங்கு போய் நின்றார். அன்றும் நாளை வாரும், குடம் தயாராகவில்லை, என சொல்லி அனுப்பி விட்டான். மறுநாளும் போனார். இப்படியே பலநாள் போனார்.

பத்து மாதங்களாக தொடர்ந்து ஒரே பதிலே கிடைத்தது. அதுவரை தென்னை மட்டையில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றியும், கொட்டாங்கச்சிகளில் தண்ணீர் எடுத்தும், தன் மேல் துண்டை தண்ணீரில் நனைத்து அதைக் கொண்டு வந்து பிழிந்தும் செடிகளை ஓரளவு காப்பாற்றி வைத்திருந்தார் பரதேசி. ஒருநாள் பரதேசியின் தொல்லை தாங்காமல் ஒரு மண்குடத்தை கொடுத்துவிட்டான். பரதேசிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. தன் தலையில் குடத்தை வைத்துக்கொண்டு ஆட ஆரம்பித்து விட்டார். தற்செயலாக கை நழுவ குடம் கீழே விழுந்து உடைந்தது. வருத்தத்துடன் தோட்டத்துக்கு திரும்பிய பரதேசி ஒரு சித்தரைப் பார்த்தார். நடந்ததைச் சொன்னார். சித்தர் அவரிடம், ஒவ்வொரு மனிதனும் பத்துமாதம் தாயின் கருவில் இருந்து, பிறக்கும் போது பரதேசியாக ஆடை கூட இல்லாமல் தான் வருகிறான்.  இங்கே வந்ததும் பாட்டு, கூத்து, செல்வம், ஆடை, அணிகலன் என்ற மாயைக்குள் சிக்கி, ஆடாத ஆட்டம் ஆடுகிறான். உயிர் பிரிந்ததும், நீ கஷ்டப்பட்டு சம்பாதித்த குடத்தை கீழே போட்டு உடைத்தது போல, எல்லாவற்றையும் இழந்து, அதே நிர்வாணத்துடன் வந்த இடம் திரும்புகிறான், என்றார். பரதேசி வாழ்க்கையின் தத்துவத்தைப் புரிந்து கொண்டு, மீண்டும் ஆசைகளைத் துறந்து தவம் செய்ய புறப்பட்டு விட்டார்.