Sunday, April 27, 2014

சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?

பணி இடத்தில் அனைவரும் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில சபலபுத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் கலையை பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் மேலதிகாரியாக இருந்து தொலைத்தால் அதிக சங்கடம். என்றாலும்கூட சில உத்திகளைக் கடைப்பிடித்தால், இதுபோன்ற தொல்லைகளைத் தவிர்த்துவிடலாம்.

சக ஆண் ஊழியர்கள் தொடக்கத்தில் நல்ல மாதிரி பட்டால்கூட அளவுக்கு அதிகமாக அவர்களிடம் பேச வேண்டாம். யாரைப் பற்றியுமே சரியான முடிவுக்கு வர சிறிது காலம் தேவை. அதுவரை பொறுத்திருந்து, பிறகு நட்பு பாராட்டுவது நல்லது.

உங்களுக்கு உங்கள் வேலை மிகவும் தேவையானதாக இருக்கலாம். அந்த வருமானத்தை நம்பித்தான் உங்கள் குடும்பமும், வருங்காலமும் இருக்கிறது என்கிற நிலைகூட இருக்கலாம். ஆனால் இதையெல்லாம் உங்கள் மேலதிகாரியிடம் சொல்லாதீர்கள். 'நாம் கொஞ்சம் அத்துமீறினாலும் இந்த வேலை இவளுக்கு மிக முக்கியம் என்பதால் ஒத்துப்போகக் கூடும் (அல்லது குறைந்தது தன்னைக் காட்டிக் கொடுக்கமாட்டாள்)' என்கிற எண்ணத்தை அவர் மனதில் பதிய வைப்பானேன்?

சொந்த சோகங்களை அதிகமாக வெளிப்படுத்தினால் 'நான் இருக்கிறேன் உனக்கு. கவலைப்படாதே' என்கிற போர்வையில் மேலதிகாரி எல்லைமீறப் பார்க்கலாம்.

உடை விஷயத்தில் சுயசிந்தனை இருப்பதில் தவறில்லை. என்றாலும் பொதுவாக ஆடை குறித்த ஆண்களின் எண்ணம் கொஞ்சம் பிற்போக்குத்தனமானதுதான். அதனால் ஆடை விஷயத்தில் கவனம் தேவை. அதே சமயம் உடையைவிட முக்கியம் பாடி லாங்குவேஜ் எனப்படும் உடல் மொழி. துணிச்சலான பெண்களிடம் வாலாட்டுவதைவிட பயந்து நடுங்கும் பெண்களிடம் எல்லைமீறப் பார்ப்பது சபலக்காரர்களுக்கு எளிது.

பலரும் காரில் செல்லும்போது ஒன்றை மறந்து விடுவார்கள். ஓட்டுநர் ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்துவிட்டு வீட்டின் அந்தரங்கங்களை எல்லாம் பேசிக் கொள்வார்கள். இதேபோல பணி இடத்திலும் ஒரு தவறு நடக்கலாம். தொலைபேசியில் அந்தரங்க விஷயங்களைப் பேசும்போது பிறர் கேட்க வாய்ப்பு உண்டு என்பதை மறக்க வேண்டாம்.

எந்த நியாயமான காரணமும் இல்லாமல் மேலதிகாரி உங்களுக்குத் தனி சலுகை எதையாவது அளித்தால், அதை உறுதியுடன் மறுத்து விடுங்கள். "எனக்குப் பிறந்த நாள்" என்று ஸ்வீட் பாக்ஸை நீட்டினால், மறுப்பது நாகரிகமாக இருக்காது என்கிறீர்களா? வா ங்கிக் கொள்ளுங்கள். உடனடியாக உங்கள் துறையிலிருக்கும் பிறரையும் கூப்பிட்டு, அந்த மேலதிகாரி முன்பாகவே, பகிர்ந்து கொள்ளுங்கள்.

சக ஆண் ஊழியர்கள் 'அடல்ட்ஸ் ஒன்லி' ஜோக்குகள் அடித்தால், உடனே உங்கள் எதிர்ப்பை பதிவுசெய்துவிடுங்கள். அதைவிட முக்கியம் நீங்களும் அதுபோன்ற ஜோக்குகளைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது. 'இவ்வளவு தாராளமாக இருப்பவள், பிறவற்றிலும் தாராளமாக இருப்பாள்' என்ற எண்ணம் எழலாம்.

சக பெண் ஊழியர்களிடம் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். சபல ஆண் பணியாளர்களை எதிர்க்க இது உதவும். உங்கள் முழு நம்பிக்கையைப் பெற்ற சக ஊழியர்களும் உங்களுக்கு உதவ முன்வருவர். தனித்தீவாக இருக்காதீர்கள்.

உங்கள் வேலையில் நீங்கள் மிகச் சிறப்பானவராக இருந்துவிட்டால், எந்த மேலதிகாரியும் உங்களை அலட்சியப்படுத்திவிடவோ, தவறான கண்ணோட்டத்தில் அணுகவோ முயற்சிக்க மாட்டார்கள். 'ஏடாகூடமாக நடந்து கொண்டால், ஒரு மிக நல்ல பெண் ஊழியரை இழந்து விடுவோம்' என்ற எண்ணமேகூட சில தவறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக்கூடும்.

Saturday, April 26, 2014

ஆண் - பெண் நட்பு; காதல்; வரவிருக்கும் கணவன் பற்றிய மதிப்பீடு எப்படி? இருக்கும்

கல்லூரியில் பயிலும், 'டீன்-ஏஜை' கடந்த இளம் பெண்ணின் மனநிலை, ஆண் - பெண் நட்பு; அவர்களுக்கிடையே முகிழும் காதல்; தனக்கு வரவிருக்கும் கணவன் பற்றிய எதிர்பார்ப்பு; தன் சராசரி சக தோழியரைப் பற்றிய மதிப்பீடு போன்ற எண்ணங்கள், இளம் பெண்களிடையே எப்படி இருக்கும் என்பதற்கு, இதோ ஒரு வாசகியின் கடிதம்:

அந்துமணிக்கு எழுதிக் கொள் வது... எப்படி இருக்கீங்க?
மணி... ஓரிரு நாட்களாக எனக்குள் ஒரு எண்ணம்! உங்கள் நட்பை இழந்து விட்டேனோ என்று! ஏன் என்று தெரியவில்லை. ஆனா, ஒன்று மட்டும் புரிகிறது... உங்கள் நட்பு, என் தகுதிக்கு அப்பாற்பட்டது என்று! நான் ஒருவரிடம் பழக வேண்டும் என்று நினைத்தால், ரொம்ப யோசித்து தான் பழகுவேன். எதுக்குத் தெரியுமா... என் நட்பு முறியக் கூடாது. கடைசி வரை நம்மகிட்ட அன்பா இருக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சா, அவங்க கூட மனம் விட்டு பேசவோ, பழகவோ மாட்டேன்; ஒரு சிரிப்புடன் நிறுத்தி விடுவேன். அதனாலேயே, என்னை எல்லாரும், 'ரொம்ப அமைதியான பொண்ணு'ன்னு சொல்லுவாங்க. ஆனா, என்னுடைய காலேஜ் லைப் இதற்கு நேர் எதிர். எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது... எப்படி இந்த மாதிரி வேறுபாடு என்று!

எனக்கு, மூன்று பெண் தோழிகள் இருந்தால், ஆறு ஆண் நண்பர்கள் இருப்பர். ஆனா, இவங்க யாரும் மோசமானவங்க கிடையாது. இவங்க மூலமாத்தான், பெண்கள் எப்படிப் பட்டவங்கன்னு தெரிஞ்சுது; ஆனா, உடனடியா எதையுமே நான் நம்பலை. மறைமுகமாக நிறைய பேர் மூலமா விசாரித்துப் பார்த்தேன். என் கண்களால் நேரடியாகப் பார்த்தேன்... அவர்களின் மாய ஜால வித்தைகளை நேரடியாக அனுபவித்தும் புரிந்து கொண்டேன்.

பெண்களுக்குள்ளும் எத்தனை விதமான அசிங்கங்கள்! என்னால் நம்ப முடியவில்லை. என்னை, என் கண்களை, காதுகளை, நான் ஆராய்ந்து அறிந்ததை! 
இந்த ஆய்வின் மூலம், பெண்கள் எல்லாரும் நல்லவர்கள் இல்லை என்பதும், அனைத்து ஆண்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல என்பதும், புரிந்தது.
என்னுடன் பேசும், பழகும் ஆண்களில் திருமணமானவர்களும் உண்டு; இளைஞர்களும் உண்டு. ஒருவர் கூட தவறான பார்வையை என் மீது செலுத்தியதில்லை. சாதாரணமாக நாட்டு நடப்புகளை குறித்தே பேசிக் கொண்டிருப்பர். அப்படித் தவறான எண்ணம் இருக்கிறது என்று என் மனதில் பட்டால், அப்புறம் நான், நானாக இருக்க மாட்டேன் என்பதும், அவர்களுக்குத் தெரியும்.

ஓ.கே., தென்... உங்க கிட்ட ஒரு விஷயம் பற்றி எழுத விருப்பம்.
அன்று சனிக்கிழமை... அதிகாலையில் பாலை வாங்கி வைத்தவள், சிறிது நேரம் கழித்து, டீ போடப் போகலாம் என்று நினைத்து, தூங்கப் போனேன். படுத்த பத்தாவது நிமிடம், 'காலிங் பெல்' அடித்தது. இந்த நேரம் யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே எழுந்து, கதவைத் திறந்தேன். ஒரு சின்ன பையன் நின்று கொண்டிருந்தான்.

இவனுக்கு எப்படி, 'ஸ்விட்ச்' எட்டியது என்ற ஆச்சரியத்துடன், அவனிடம் வந்த விஷயத்தைக் கேட்டுக் கொண்டே அங்கும், இங்கும் தேடினேன். ஏதேனும் பெரியவர்கள் தென்படுகின்றனரா என்று! ஆனால், ஒருவரையும் காணவில்லை. அதனால், அவனிடமே, 'பெல் அடித்தது நீயா?' என்று கேட்டேன்.

உடனே, 'இல்லை, எங்கம்மா...' என்றான். 'உங்கம்மா எங்கே?' என்று கேட்டேன்.
'நான் இங்கே தான் நிக்கிறேன்...' என்று, பக்கத்து வாசல் மறைவிலிருந்து வெளிப்பட்டார் அந்த வெள்ளைச் சேலை பெண்மணி; இளம் விதவை.
அதிகாலையில், நம் முகத்தில் முழிக்க வேண்டி வருமே என்ற எண்ணம், அவரை மறைந்து நிற்கச் செய்து விட்டது. ஏனோ இந்த சம்பவம், என்னை இன்னும் வேதனைப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

இத்தகைய சம்பவங்கள் நகரங்களில் குறைந்து விட்டாலும், கிராமங்களில் இன்றும் காணப்படுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு, முற்போக்கான சிந்தனையை தூண்டும் விதமாக நீங்கள் எழுதலாமே...

மேலும், மற்றுமொரு சம்பவம், என்னை சிந்திக்க வைத்து விட்டது. எங்க கல்லூரி ரொம்ப கண்டிப்பு நிறைந்தது. ஆனாலும், காலேஜில் சேர்ந்த ஆறே மாதத்தில், ஒரு காதல் ஜோடி வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டது. எப்படி இவர்கள் சந்தித்தனர்; பேசினர்... எப்படி ஆறே மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர் என்று, எங்களுக்குள் ஒரே குழப்பம்.

ஆறே மாதத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனரா என்ற எண்ணத்தை விட, இத்தனைக் கண்டிப்பான கல்லூரியில், எப்படி வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர் என்ற எண்ணம் எங்களுக்குள். ஏனென்றால், இருவரும் வேறு வேறு ஊர். இது குறித்து, தோழிகள் பேசிக் கொண்டிருப்போம். அப்போது தான், எங்களுக்கு ஒரு அதிர்ச்சி தரும் செய்தி கிடைத்தது. எங்கள் வகுப்பில், இதே போன்று ஐந்து காதல் ஜோடிகள் இருப்பதாக!

உடனே, நாங்கள் தீர்மானித்தோம்... நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவர்களை, தொடர்ந்து செல்ல வேண்டும் என்று!

முதல் காரியமாக அந்த ஜோடிகள் யார் யாரென்று நைசாக விசாரித்தோம். அப்புறம் அவர்கள் தோழிகள், தோழர்கள் உதவி எந்த அளவு இருக்கிறது என்று கண்காணித்தோம். 'ரிசல்ட்' மூன்று ஜோடிகளுக்கு, தோழிகள் உறுதுணை; ஒன்றுக்கு தோழிகளே இல்லை; இன்னும் ஒன்றுக்கு தோழிகள் கண்டும் காணாதது போல்...
இது இப்படியிருக்க, இவர்கள் எப்படி பேசுகின்றனர் என்று ஆராய்ச்சி செய்ததில், ஓரிரு ஜோடிகளில் இருவரில் ஒருவர் முன்னே போக, ஒருவர் பின்னே போக, கூடவே தோழிகள், தோழர்கள் சேர்ந்து போக, தோழிகளிடம் பேசுவது போல், ஒருவருக்கொருவர் பேசுகின்றனர்.சில நேரங்களில், கண்ணிமைக் கும் நேரங்களில், புத்த கப் பரிமாற்றங்கள்...ஒரு ஜோடியோ வித விதமான சைகைகள், கண்ணசைவுகள்!

நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே, கொஞ்ச தூரம் செல்வது போல் சென்று, மறைவான இடம் வந்ததும் பைக்குகளில் ஏறிச் சென்று விடுகின்றனர். இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு ஜோடி, கல்லூரிக்கே ஒழுங்காக வருவதில்லை. ஒரே சுற்றுலா...

இதெல்லாம் ஏன் எழுதுகிறேன் தெரியுமா? நாட்டு நடப்பு இப்படித்தான் இருக்கு. இவர்களின் முடிவையும், உங்களுக்கு எழுதுகிறேன்.

ஒரு ஜோடி இரண்டாம் ஆண்டு ஆரம்பத்திலும், ஒரு ஜோடி மூன்றாம் ஆண்டு ஆரம்பத்திலும், பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். ஒழுங்காக கல்லூரி வராத ஒரு ஜோடிக்கு, கல்லூரி முதல்வர் டி.சி., கொடுத்து, அனுப்பி விட்டார்.

விஷயம் வீட்டிற்கு தெரிந்ததும், வேறு இரண்டு பெண்களுக்கு, அவர்களின் பெற்றோர் படிப்பையே நிறுத்தி விட்டனர். அவர்களில் ஒருத்தியை வீட்டில், 'ப்ரீ'யாக விட்டிருக்கின்றனர். ஆனால், இன்னொருத்தியையோ வீட்டில் சிறை வைத்து விட்டனர்; அதுவும் சொல்ல முடியாத கொடுமைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
காதலிப்பவர்கள், தன்னை கர்ப்பத்தில் ஏந்திய நாள் முதல், இந்நேரம் வரை, கண்ணின் மணியைப் போல் பாதுகாத்தது வந்தது மட்டுமன்றி, நம்மை வளர்க்க பல இன்னல்களை அடைந்த பெற்றோரை மறந்து விடுவர் போலும்!

எங்களுக்கு தெரிந்து இத்தனை; தெரியாமல் எத்தனையோ!

மணி... என், 'ப்ரெண்ட்ஸ்' எப்பவும் கேட்பாங்க... 'நம்ம இப்படி ஒவ்வொருவரையா, 'பாலோ' பண்றோமே... நாமளும் ஒரு வேளை சந்தர்ப்பவசத்தால், 'லவ்' பண்ண ஆரம்பிச்சா, நம்மளையும், 'பாலோ' பண்ண யாராவது இல்லாமலா இருப்பாங்க'ன்னு!

அதான் நான் சொல்லியிருக்கேன், 'ஆயிரம் பொய் சொல்லி, கல்யாணம் பண்ணு'ன்னு சொல்வாங்க... ஆனா, என்னுடைய திருமணம் நிச்சயிக்கும் நாளில், ஒரே ஒரு பொய் சொல்ல வேண்டும்...' என்று சொல்லியிருக்கேன்.

அது என்னன்னா... 'பொண்ணுக்கு படிப்பு பாக்கி இருக்குதுன்னோ அல்லது அது மாதிரி ஏதாவது ஒரு காரணம் சொல்லி, ஆறு மாதத்திற்கு திருமணத் தேதி குறிக்க விடக் கூடாது. அந்த ஆறு மாதமும், நிச்சயித்தவரை காதலிக்க வேண்டும். காதலென்றால் வாய் வார்த்தை ஒன்றும் பேசக் கூடாது; கண்களால் பேசும் காதலாக மட்டுமே இருக்க வேண்டும். எனக்குப் பிடித்த, 'ஓராயிரம் பார்வையிலே, உன் பார்வையை நானறிவேன்...' என்ற பாடலை, அவர் வாயாலே பாட வைத்து விட வேண்டும்...' என்று சொல்லி இருக்கேன்.

'பார்க்கத்தானே போறோம்...' என்று சொல்லியிருக்காளுக!

காதல் உணர்வுகள் எல்லாருக்குமே உண்டு; எனக்கும் உண்டு. அது, சுகமானது; இனிமையானது. தென்றல் காற்று தீண்டும் போதும், இனிமையான பாடல்களை கேட்கும் போதும் கிளர்த்தெழும்புவது.

ஆனாலும் மணி, அந்த உணர்வுகளுக்கு அடிமையாகி, காதலிக்கும் பெண்களை நினைக்கும் போது, பரிதாபமாக இருக்கிறது.

சாதாரணமா வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்தால் கூட, நல்ல கணவர்கள் அமைவது கடினம். இந்நிலையில், நல்லவர்களைப் போல நடிப்பவர்களை நம்பி, காதலித்து ஏமாறும் பெண்களை நினைத்து, வேதனையாக உள்ளது.

ஒருவேளை காதலிக்கும் போது, தங்கள் காதலர்கள் நல்லவர்கள் போலத் தோன்றுமோ இந்த பெண்களுக்கு? அதெல்லாம் கானல் நீர் என்பது இவர்களுக்கு ஏன் தெரியாமல் போகிறது? ஒன்றும் புரியவில்லை.

— இப்படியே இன்னும் தொடர்கிறது கடிதம்.

எல்லா இளம் பெண்களுமே இவர் போல் மனநிலை கொண்டவர்களா, இவரை போலவே சிந்திப்பரா? தெரியவில்லை. 

மனைவி என்பவள்! - சப்தமாக பேசி ஆபத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள்!

மனைவி என்பவள்!

என் நண்பர்கள் மூவரை, தெருவில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, நண்பர்களில் ஒருவர், காய்கறி வாங்கி வர, தன் மனைவி சொல்லியதாக குறிப்பிட்டு, புறப்பட்டார். உடனே, மற்றொரு நண்பர், 'இதெல்லாம் லேடீசுங்க வேலைப்பா... உன் மனைவியே செய்யச் சொன்னாலும், 'அது என்னோட வேலை இல்ல'ன்னு சொல்லுவியா... அதை விட்டுட்டு, பொண்டாட்டி சொன்னான்னு மார்க்கெட்டுக்கு போறியே...' என்றார். அருகிலிருந்த மற்றொருவரோ, அவர் சொன்னதை ஆமோதிப்பது போல, 'நானெல்லாம் இதுவரைக்கும் என் மனைவி சொல்லி, எதுவுமே கேட்டதில்லை...' என்று, பெருமைப்பட்டுக் கொண்டார்.

ஆமாம்... மனைவின்னா அவ்வளவு இளக்காரமா? செக்சுக்கு மனைவி வேண்டும்; வீட்டு வேலைகள் செய்றதுக்கும், பிறந்த வீட்டை மறந்துட்டு, கணவனுக்கு பணிவிடை செய்யவும் மனைவி வேண்டும். இது எல்லாவற்றுக்கும் மேலாக, வேலைக்கு செல்லும் மனைவி என்றால், அவளது சம்பளம், கவருடன் வேண்டும். ஆனால், வீட்டு வேலைகளில், மனைவிக்கு ஒத்தாசை செய்வதும், அவளின் சொல்லை கேட்பதும், கேவலமா போச்சா?

ஆணாதிக்கம் கொண்டவர்களே... வீண் ஜம்பம் பேசி, குடும்ப வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதீர்!

சப்தமாக பேசி ஆபத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள்!

மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தேன். என் அருகில், ஒரு அழகான இளம்பெண், அமர்ந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமிருந்தது. அப்பெண், என்னிடம், தான் திண்டுக்கல்லுக்கு புதிது என்றும், அங்குள்ள பெண்கள் கல்லூரி பெயரைக் கூறி, அக்கல்லூரிக்கு எப்படிப் போவது என்ற விவரங்களை சற்று சத்தமாக கேட்டாள். இது போதாதா... இந்தக் கால ரோமியோக்களுக்கு!
என் அடுத்த இருக்கையிலிருந்த இளைஞன் ஒருவன், 'எனக்கு தெரியும். நான் கூட்டிச் செல்கிறேன்...' என்று, வலிய வந்து, 'ஜொள்ளு' விட்டான். அப்போதும், இந்த பெண் சுதாரிக்கவில்லை. இதை கவனித்த நான், 'என் வீட்டருகில் தான் உள்ளது. நான், உன்னை கல்லூரியில விட்டுட்டு போகிறேன்...' என்றேன். இது, அவனுக்கு பிடிக்கவில்லை. 'ஆன்டி, உங்களுக்கேன் சிரமம்...' என்றான். உடனே நான், 'என் மகள் போன்ற பெண்ணுக்கு, தாய் ஸ்தானத்திலிருந்து செய்ய வேண்டியது என் கடமை. அதனால், நானே அவளை காலேஜுல விட்டுட்டு போறேன்...' என்றேன். உடனே, அவன் முகம் மாறி விட்டது. அவன் இறங்க வேண்டியது கொடைரோடு என்பதை, அவன், 'டிக்கெட்' வாங்கும் போதே கவனித்திருந்ததால், ஏதோ கெட்ட எண்ணத்துடன் பொய் சொல்கிறான் என்று நினைத்து தான், அவனிடம் இப்படி கூறினேன். 

பெண்களே... புது இடங்களில் பயணம் செய்யும் போது, குறிப்பாக, ரயில் அல்லது பஸ்சில், ஊருக்கு புதியவள் என்பதை பிரகடனப்படுத்தி, கயவர்களுக்கு இடங்கொடுத்து, அவஸ்தைப்படாதீர்கள். அதே போல், பஸ்சில் மொபைல் போனில் உரக்க பேசுவதையும் தவிருங்கள். ஏனெனில், இதுபோன்ற செயல்கள், ஆபத்தை, நாமே விலை கொடுத்து வாங்குவதை போன்றது.

அன்புடன் அந்தரங்கம்! - 'ஸ்கிசோபிரினியா' (மனச்சிதறல்)

என் வயது 35; என் மனைவி வயது, 30. எங்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. ஐந்து வயதில், ஆண் குழந்தை ஒன்று உள்ளது. எங்களுடையது காதல் திருமணம்; என் வீட்டாருக்கு பிடிக்கவில்லை என்றாலும், அவர்களே முன்னின்று நடத்தி வைத்தனர்.

திருமணத்திற்கு முன்பே, என் 25வது வயதில், நான், 'ஸ்கிசோபிரினியா' என்ற மனநோயால் பாதிப்புக்குள்ளானேன். என் அம்மா மற்றும் பாட்டிக்கு இந்நோய் உள்ளது. இருந்தும், நான் பாதிக்கப்பட்டதை என்னால் நம்ப முடியவில்லை. இப்படி ஒரு நோய் உள்ளது என்று, திருமணத்திற்கு முன் வரை, என் மனைவிக்கு தெரியாது.

நான் அவளுடன் பழக ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே, இந்நோய் என்னை பாதித்து விட்டது. ஆனால், திருமணத்திற்கு பின் தான், அவளுக்கு விஷயம் தெரிந்தது. அதை, அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

நான் வசதியான வீட்டு பையன்; அவள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். அவள் வேலைக்கு செல்லவில்லை. என் தந்தைதான் குடும்பத்தை நடத்துவதற்கு, பண உதவி செய்து வந்தார். தற்போது, நான் ஓரளவு குணமடைந்து, மாதம்,௦ 20,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். ஆனால், என்னால் பழையபடி உற்சாகமாக இருக்க முடியவில்லை. அவ்வப்போது மன அழுத்தத்துக்கு ஆளாகிறேன். இதனால், என் மனைவியும், 'அப்செட்' ஆகி, ஏனோதானோவென்று குடும்பம் நடத்துகிறாள்.
மகனை சரியான நேரத்தில் குளிக்க வைத்து, சாப்பிட வைத்து, படிக்க செய்வது போன்ற வேலைகளை கூட செய்யாமல் இருக்கிறாள். இதனால், எங்களுக்குள் அடிக்கடி சண்டை வருகிறது. எங்கள் இருவரின் பிரச்னையால், என் மகன் வயதுக்கு மீறி சிந்தனை செய்து, எங்களுக்குள் மத்தியஸ்தம் செய்கிறான். அவன் மனநிலையும் பாதிப்படையுமோ என, பயமாக உள்ளது.

தற்போது நான் குணமடைந்து வருவதால், நான் விட்டு கொடுத்து போக நினைத்தாலும், அவளுடைய செயல்கள், என்னை எரிச்சல் அடைய செய்கின்றன. என் குழந்தை எங்கள் இருவரையும் பார்த்து, கத்துவதும், ஆர்வம் இல்லாமலும் இருக்கிறான். என் குழந்தை பாதிப்படையாமல் வளர, நானும், என் மனைவியும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என, எழுதுங்கள். அவள், 'அன்புடன் அந்தரங்கம்' பகுதியை விடாது படிப்பவள். அவளுக்கு புரியும்படியாக எழுதி, என் குழந்தையின் வாழ்வை சிறக்கச் செய்யுங்கள். எப்படியாவது என் குழந்தையை காப்பாற்றுங்கள்.

— உங்கள் பதிலை எதிர்பார்க்கும், அன்புச் சகோதரன்.

அன்பானவர்க்கு —

பிரச்னைகளை உள்ளடக்கிய உன் கடிதத்தை படித்தேன். மிக வெளிப்படையாக கடந்த, 10 ஆண்டுகளாக, 'ஸ்கிசோபிரினியா' (மனச்சிதறல்) என்ற நோயினால் பாதிக்கப்பட்டதாகவும், ஆனால், மருத்துவரின் ஆலோசனையின்படி, மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு, தற்போது குணமாகி, மாதம், 20 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து, குடும்பத்தை காப்பாற்றி வருவதாகவும் எழுதியிருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.

'உன் வியாதி, குடும்ப உறவுகள் மற்றும் குழந்தை வளர்ப்பு' போன்ற மூன்று முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு கேட்டிருக்கிறாய். முதலில் நீயும், உன் மனைவியும் இந்த மனச்சிதறல் வியாதியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
* மருந்து மாத்திரைகளை விடாமல் சாப்பிடுவதுடன், அவ்வப்போது மனநல மருத்துவரை அணுகி, மாத்திரையின் அளவுகளை, அவர் ஆலோசனைப்படி கூட்டியோ, குறைத்தோ சாப்பிட வேண்டும்.

* தயவு செய்து, எக்காரணத்தைக் கொண்டும் சாமியார் மற்றும் பூசாரியிடம் போவது, மந்திரிக்கிறது, தாயத்துக் கட்டுவது, மாந்தீரிகம் செய்வது, ஸ்பெஷல் பூஜை செய்வது என்றெல்லாம் செய்ய வேண்டாம். இவர்கள் எல்லாருமே உன் நிலையைப் புரிந்து, உன்னுடைய தன்னம்பிக்கையை இழக்கச் செய்து, பணத்தை பிடுங்க முயற்சி செய்வர்.

* 'பாட்டி, அம்மாவைத் தொடர்ந்து, எனக்கு வந்திருப்பதைப் போல், என் பையனுக்கும் இந்த வியாதி வருமா, இது பரம்பரை வியாதியா...' என்று கேட்டிருக்கிறாய். இதற்கு பதிலாக, 'இல்லை' என்று தான் கூறுகின்றனர் மனநல மருத்துவர்கள்.

* நோய் கண்டவருக்கு, நோய் வரும் முன்பு உள்ளவர்கள் தான், மனதில் பதிந்து இருப்பர். அதற்குப் பிறகு பழகியவர்கள் யாரும் மனதில் இருக்க மாட்டர் என்ற தவறான எண்ணத்தை, முதலில் கைவிட வேண்டும். ஏன் தெரியுமா?
கடந்த, 10 ஆண்டுகளாக நீ இந்த வியாதியால் அவதியுற்ற போதும், ஐந்தே ஆண்டுகள் ஆன, உன் குழந்தையைப் பற்றி கவலைப்பட்டு எழுதியிருக்கிறாய். இதன் மூலம், உனக்கு அனுதினமும் நடப்பவைகள் எல்லாம் மற்றவர்களுக்கு ஞாபகம் இருப்பது போல, உனக்கும் இருந்திருக்கிறது. எனவே, இது பற்றிய கவலை வேண்டாம்.

* இந்நோயினால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, சாதாரணமாக செக்ஸ் உணர்வுகளில், உறவுகளில் விருப்பம் இல்லாமல் இருக்கும். அதனால், இவர்களின் வாழ்க்கைத் துணை சற்றே மனவருத்தம் அடையலாம். இருப்பினும், சரியாக, தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகள் உட்கொண்டால், இது சரியாகி விடும்.
* நீ படித்திருக்கிறாய்; கை நிறைய சம்பாதிக்கிறாய், குடும்பத்தை காப்பாற்ற கடினமாக உழைக்கிறாய்... ஆக, கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, நீ அறிவுத்திறனில் உயர்ந்த நிலையில் தான் இருக்கிறாய். உன்னால் மிக நிச்சயமாக எது சரி, எது தவறு என்று பாகுபடுத்தி சிந்தித்து செயல்படுத்த முடியும்.
உன் திருமண உறவுகள் பற்றி சில ஆலோசனைகள்...
* உன் மனைவியைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். தன் கணவர் இப்படி ஒரு மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று, மணமான பிறகு தெரிய வந்தால், எந்த மனைவிக்குதான் வருத்தம் இல்லாமல் இருக்கும். நல்லவேளை உன் தந்தை இவ்வளவு ஆண்டுகள் உங்களுக்கு பொருளாதார உதவி செய்திருக்கிறார். உன் மனைவியிடம், உன் தந்தையைப் பற்றி, அவர் செய்த உதவியைப் பற்றி அவளுக்கு புரியும்படி எடுத்துச் சொல். நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பாக, சண்டையிடாமல் இருந்தால்தான், இல்லற வாழ்வில், திருப்தியும், சந்தோஷமும் இருக்கும்.
* உன் மனைவியிடம் உன் செக்ஸ் தேவைகளை மனம் திறந்து பேசு. இது அவளின் தேவைகளை உன்னிடம் பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும். அவளது விருப்பத்தை நீ புரிந்து, அவளைத் திருப்தி படுத்து. கணவன் - மனைவி இருவரின் ஆரோக்கியமான உடல் உறவு, குடும்பத்தில் உள்ள பல பிரச்னைகளை சமாளிக்கும் நல்மருந்தாக இருந்திருக்கின்றன.
* காதலிக்கும் போது இருக்கும் நிலைமையே வேறு. நடைமுறை, எதார்த்தம் என்று வரும்போது தான், நம்மால் வாழ்க்கையை புரிந்து கொள்ள முடிகிறது. இதை நீ முதலில் உணர வேண்டும். உன் மனைவிக்கும் எடுத்துச் சொல்லி, புரிய வைக்க வேண்டும். காதல் திருமணம் என்பது, புரிந்து கொண்டு திறம்பட வாழ்வது. புரிகிறதா!

உன் மூன்றாவது பிரச்னை உன் மகனைப் பற்றியது...

* பெற்றோர் தான் குழந்தைகளின், 'ரோல் மாடல்கள்' என்பதை, நீங்கள் இருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
* நீ நினைப்பது போல, 'பரம்பரை' காரணமாக, உன் குழந்தைக்கு இந்த மனவியாதி, வர வாய்ப்புகள் இல்லை. ஆனால், அதிகமாக கோபப்படுவது, சண்டையிடுவது, பேசாமல், 'உம்'மென்று இருப்பது போன்ற உங்களின் நடத்தை காரணமாக, அந்த பிஞ்சு மனது பாதிக்கப்படலாம். இதன் காரணமாக, பிற்காலத்தில் குழந்தையும் மனவியாதியால் அவதிக்குள்ளாகும் வாய்ப்புகள் அதிகம்.

தம்பதிகள் ஒருவர் மேல் ஒருவர் காட்டும் அன்பும், பொறுமையும், சிநேகமும் தான், பிள்ளைகளிடம் எதிரொலித்து, அவர்களை, மன ஆரோக்கியம் நிறைந்த குழந்தைகளாக மிளிர வைக்கும். எனவே, குழந்தை வளர்ப்பில், நீங்கள் இருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

* இத்தனை ஆண்டுகள் உன் பெற்றோர் உன்னை கண்ணும் கருத்துமாக கவனித்து, ஆளாக்கிய மாதிரி, நீயும், உன் மனைவியும் உங்களின் குழந்தையை அன்பாக வளர்ப்பது கடமை.

இவைகளையெல்லாம் உன் மனைவியிடம் அன்பாக எடுத்துச் சொல்லி, இருவரும் உங்களின் குழந்தையை, வருங்கால இந்தியாவை வளப்படுத்தும் குழந்தையாக மாற்ற முயலுங்கள்.

 என்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Tuesday, April 8, 2014

கருவில் உள்ள குழந்தைகளை அச்சுறுத்தும் வேதிப்பொருட்கள்

பொதுவாக நாம் உண்ணும் உணவில் இருந்தும் சுற்றுச்சூழலில் இருந்தும் வேதிப்பொருட்கள் நாள்தோறும் நம் உடலை வந்தடைகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க அளவு உடலின் கழிவு நீக்க அமைப்பு மூலம் வெளியேற்றப்படுகின்றன.

ஆனால், குழந்தைகளின் உடலில் கழிவு நீக்க அமைப்பு முழு வளர்ச்சி அடையாத நிலையில் உள்ளதால், தேவையற்ற நச்சு வேதிப்பொருட்களை கழிவாக வெளியேற்ற முடிவதில்லை. எனவே, இந்த வேதி பொருட்களால் பெரியவர்களைவிட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

குழந்தைகளின் உடலை அடையும் வேதிப் பொருட்களின் பாதிப்புகள் உடனடியாகக் குழந்தையாக இருக்கும்போதே வெளிப்பட்டுவிடுவதில்லை. நம்மைவிட குழந்தைகளின் எதிர்காலம் நீண்டது. அவர்களின் வாழ்நாள் நம்மைவிட அதிகம். அதனால் பின்விளைவுகள் காலம் தாழ்த்தி, அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகும் வெளிப்படலாம். நாம் பெரியவர்களான பிறகு எதிர்கொள்ளும் புற்றுநோய், மூளை பாதிப்பு, இனப்பெருக்கக் குறைபாடுகள் போன்றவற்றுக்கான காரணங்களை, தாயின் கருவில் நாம் வளரத்தொடங்கிய காலத்திலிருந்தே தேடவேண்டியுள்ளது.

வீட்டில் இருக்கும் நச்சு

குழந்தை பிறந்த பிறகு எதிர்கொள்ளும் வேதிப் பொருட்களின் தாக்கத்தைவிட கருவில் இருக்கும்போதும் சிசு வளர்ச்சியின்போதும் எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கம் ஆபத்தானவை என்பதை வாஷிங்டனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பணிக் குழு என்ற அமைப்பின் 2005ஆம் ஆண்டு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நம் வீட்டில் பயன்படுத்தும் நுரை மெத்தை, அறையணிகள், கணினி, தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவை எளிதில் தீப்பிடிக்காமல் இருக்கத் தீ தடுப்பான்களான பலபடி புரோமினேற்றம் செய்யப்பட்ட பைஃபீனைல் ஈதர்கள் (பி.பி.டி.இ.) பயன்படுத்தப்படுகின்றன.

இவை உணவுச் சங்கிலியில் கலந்து தாயின் உடலை அடைந்து தொப்புள் கொடி வழி குழந்தையையும் சென்றடைகின்றன. இவை மூளை வளர்ச்சியைப் பாதிப்பது மட்டுமில்லாமல், தைராய்டு தொடர்பான நோய்கள் ஏற்படவும் காரணமாகின்றன.

வளர்ந்த மனிதன் வேதிமாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகளைவிட குழந்தைகள் வேதி மாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகள் கடுமையானவை - நீண்டகாலப் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. பொதுவாகக் குழந்தைப் பருவத்தில் உடல் செல்கள் அதிவேகமாக வளர்ச்சி அடைகின்றன. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியோ முழு வளர்ச்சி அடையாத நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக வேதித் தாக்குதலின் தீவிரம் குழந்தைகளிடம் அதிகம்.

குறிப்பாக அவர்களுடைய முதிர்ச்சியடையாத மூளை, எளிதில் பாதிக்கப்படக்கூடியது. குழந்தைகளின் உடலில் வேதி கூட்டுப்புரதங்கள் குறைவாக இருப்பதால், வெளியிலிருந்து உள்ளேவரும் வேதி மாசுகளை வரவேற்கும் நிலையில் அவர்களுடைய உடல் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அப்படி உள்ளே வரும் நஞ்சுகள், அவற்றுக்கான இலக்கு உறுப்புகளை அடைந்து அவற்றை எளிதாக நாசம் செய்கின்றன.

பாதரச ஆபத்து

அனல் மின் நிலையங்களில் இருந்தும் சில தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியேறும் பாதரசம் கடலில் கலந்து மீன் போன்ற கடல் உணவுகள் மூலம் தாயை அடைந்து, பின் சிசுவை அடைகிறது. இந்தப் பாதரசம் மூளை வளர்ச்சியையும் மூளைச் செயல்பாட்டையும் பாதிக்கிறது.

பெட்ரோலியப் பொருட்களை எரிப்பதாலும் குப்பையை எரிப்பதாலும் வெளியிடப்படும் பி.ஏ.எச். எனப்படும் பலபடியாக்க அரோமட்டிக் ஹைட்ரோகார்பன்கள், உண்ணும் உணவின் மூலம் தாயை அடைந்து தாயின் வயிற்றில் வளரும் கருவை அடைகிறது. இவை குழந்தைகளில் புற்றுநோயை உருவாக்கக்கூடியவை.

புற்றுநோயை உருவாக்கும் பலபடி குளோரினேற்ற பைஃபீனைல்களின் (பி.சி.பி.) பயன்பாடு அமெரிக்காவில் 1976லேயே தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது பிறக்கும் குழந்தைகளின் ரத்தத்திலும் இந்த வேதிப்பொருள் இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த இந்த நச்சுப்பொருள், சுற்றுச்சூழலில் காலம் காலமாகப் படிந்து நிலைபெற்றுவிட்டதால், உணவுச் சங்கிலியில் கலந்து தாயின் மூலம் கருவிலுள்ள குழந்தையை அடைகிறது.

இதைப் போலவே டி.டி.டி., குளோர்டேன் போன்ற என்றைக்கோ தடை செய்யப்பட்ட களைக்கொல்லிகள் சுற்றுச்சூழலில் நிலைபெற்றுவிட்டதால், தற்போது பிறக்கும் குழந்தைகளின் உடலையும் வந்தடைந்து பாதிப்பை உருவாக்குவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேவிகாபுரம் சிவா, சுற்றுச்சூழல் ஆர்வலர்
தொடர்புக்கு: devikapuramsiva@gmail.com

Tuesday, April 1, 2014

பச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி?

னிக்குடித்தன இளசுகள் பெற்றோர் அவதாரம் எடுக்கும் தருணம், படு அவஸ்தையானது. பச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி என்ற மூத்தோர்களின் ஆலோசனைக்கு வழியின்றித் தடுமாறுவார்கள். அதிலும் வேலைக்குச் செல்லும் இளம் தாயின் நிலை இன்னும் பரிதாபம்!

தனிக்குடித்தனத் தம்பதிகள், குழந்தை பிறந்ததும் இப்படித் தடுமாறாமல் இருக்க, பச்சிளம் குழந்தையின் படிப்படியான வளர்ச்சியையும் ஒரு வயது வரையில் அந்தப் பாப்பாவை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்ற வழிமுறைகளையும் விளக்குகிறார், சென்னை சூர்யா மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைப் பிரிவின் தலைமை மருத்துவர் தீபா ஹரிஹரன்.

0  1 மாதம்:

குழந்தையைக் கதகதப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அதிகமாகப் போர்த்தவும் கூடாது. எடை குறைவாகப் பிறந்த குழந்தை என்றால், குளிர்காலம் இல்லை என்றாலும்கூட சாக்ஸ், கிளவுஸ் போட்டு வைப்பது நல்லது. குழந்தை பிறந்ததும், அதன் முதல் உணவு சீம்பாலாகத்தான் இருக்க வேண்டும். அதுவும், பிறந்த அரை மணி நேரத்துக்குள் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். சிஸேரியன் என்றால், தாய்க்கு மயக்கம் சிறிது தெளிந்ததும், 3 அல்லது 4 மணி நேரத்தில் கொடுக்க ஆரம்பிக்கலாம். அறுவைசிகிச்சை நடந்திருக்கிறது; அதனால் இரண்டு நாள் கழித்து கொடுக்கலாம் என்று சிலர் தள்ளிப்போடுவார்கள். அது தவறு. 'கொலோஸ்ட்ரம்' எனப்படும் சீம்பாலில் தான், நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான விஷயங்கள் அதிகம் இருக்கின்றன. இன்குபேட்டரில் வைக்கப்படும் குழந்தைக்குக்கூட, தாயிடமிருந்து பெறப்படும் சீம்பால் டியூப் வழியாகக் கொடுக்கப்படுகிறது.

பாசப் பிணைப்பு:

முதல் நான்கு மாதங்களுக்குள்தான் குழந்தைக்கும் தாய்க்குமான பாசப் பிணைப்பு இறுகும். குழந்தையைக் கட்டி அணைத்து முத்தமிடுதல், மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சுதல், மார்போடு அரவணைத்துப் பாலூட்டும்போது அதன் முகம் பார்த்துப் பேசுதல் போன்றவை குழந்தையுடனான பிணைப்பை அதிகரிக்கும். ஆரம்பத்தில், இந்தப் பாசப் பிணைப்பு கிடைக்கும் குழந்தைகளுக்கு, பிற்காலத்தில் 'உளவியல் ரீதியான வலிமை' அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு வீட்டில் போதிய உதவி இருக்காது... வழிகாட்ட யாரும் இல்லாமல், ஒருவித மன அழுத்தத்தில் இருப்பார்கள். இன்னும் சில தாய்மார்கள், விளம்பரங்களில் வருவதுபோல அல்லது தான் எதிர்பார்த்ததுபோல பிள்ளை பிறக்கவில்லையே என்ற ஏமாற்றத்தில் இருப்பார்கள். அதனால் குழந்தையிடம் கொஞ்சுவதோ, பேசுவதோ செய்யாமல், இயந்திரகதியில் குழந்தைக்குப் பால் கொடுப்பார்கள். பிணைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, குழந்தையுடன் தாய் நெருக்கமாக இருக்க வேண்டும்.

குளியல்:

பிறந்து, முதல் சில வாரங்களுக்குக் குளிப்பாட்டவில்லை என்றால் கூடப் பரவாயில்லை. இளம் சூடான நீரில் நனைத்துப் பிழிந்த துண்டால் துடைக்கலாம். குளிப்பாட்டுவதற்கு முன், மிதமான 'பேபி பாடி லோஷனை' லேசாக உடலில் தேய்த்து, மெதுவாக மஸாஜ் செய்யலாம். இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். சூடான நீரில் குளிப்பாட்டத் தேவையில்லை. வெதுவெதுப்பான நீர் போதும். குளிப்பாட்டிய பிறகு, மிருதுவான டவலால் ஒத்தித் துடைக்கவேண்டும். கண்டிப்பாக பவுடர் போடக் கூடாது. இதனால் நுரையீரல் தொற்று ஏற்படலாம்.

உடை:

அழகை விட, குழந்தைக்கு சௌகரியமாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். பட்டன்கள், லேஸ், ஜரிகை, ஜிகினா போன்றவை இருக்கும் உடைகளைத் தவிர்த்து விடலாம். ஏனெனில் லேஸ் போன்றவை கண்களில் குத்தலாம். ஜரிகைகள் மெல்லிய சருமத்தைக் கிழித்துவிடும். பட்டன்கள் வாய்க்குள் போக வாய்ப்பு உண்டு. குழந்தையின் உடலை உறுத்தாத, மிருதுவான, சுகமான  பருத்தி ஆடைகள் சிறந்தவை. தாய்மார்களும், பச்சைக் குழந்தையைத் தூக்கிச் செல்லும்போது, ஜரிகை, ஜிகினா போன்ற வேலைப் பாடுகொண்ட புடவைகள் கட்டியிருந்தால், கவனமாக இருக்க வேண்டும்.

அதிகமோ  குறைவோ வேண்டாம்:

குழந்தையை எப்போதும் யாராவது தூக்கி வைத்துக் கொண்டே இருப்பதைத் தவிர்க்கவேண்டும். இதை, 'ஓவர் ஸ்டிமுலேஷன்' என்போம். எப்போதும் 10 பேர் மாற்றி மாற்றித் தூக்கிக் கொஞ்சுவதும், பேசுவதும் கூடாது. அதற்காக, குழந்தையைத் தூக்கிக் கொஞ்சாமல் தொட்டிலிலேயே போட்டு வைப்பதும் கூடாது (அண்டர் ஸ்டிமுலேஷன்). இதனால், குழந்தை சோர்ந்துவிடும்; அல்லது பிடிபடாமல் அழும். கைக்குழந்தைகள் தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பதற்கு, பெரும்பாலும் இதுதான் காரணம். ஜீரணப் பிரச்னை என்று நினைத்து, பல தாய்மார்கள் தங்களுடைய உணவை மாற்றுவார்கள். சிலர், மாற்றுப் பால் கொடுக்க முயற்சிப்பார்கள். அது தேவையல்ல.

1  4 மாதங்கள்:

இந்தக் காலகட்டத்தில் அநேகமாக எந்தப் பிரச்னையும் குழந்தைக்கு வராது. தாய்ப்பால் தவிர, வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது. புட்டிப்பால் போன்றவற்றால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.

இந்தச் சமயத்தில், குழந்தையின் பார்வைத் திறன், கேட்கும் திறன், சுற்றுச்சூழலை உன்னித்துக் கவனிக்கும் திறன் ஆகிய மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அம்மாவின் குரல் கேட்கும் திசையில் குழந்தை திரும்புகிறதா, யாராவது அருகில் வந்து கொஞ்சிவிட்டுப் போனால் அவர்கள் போகும் திசையில் திரும்பிப் பார்க்கிறதா, சுற்றுச்சூழலைக் கவனிக்கிறதா என்று பார்க்க வேண்டும். இந்த மூன்றும் சாதாரணமாக இல்லாவிடில், மருத்துவரிடம் காண்பிக்கவேண்டும். இந்த வயதில்தான் குழந்தை முகம் பார்த்துச் சிரிக்கும். மின்சார விளக்கு, மின் விசிறி போன்றவற்றை ரசிக்கும். கழுத்து நிற்பதும் இந்த மாதங்களில்தான். அதனால் ஜாக்கிரதையாகத் தூக்க வேண்டும்.

6ம் மாதம்:

ஐந்து மாதங்கள் வரையில் குழந்தையின் எல்லா வளர்ச்சிகளும் ஒழுங்காக இருந்தால், 6-ம் மாதத்தில் இருந்து, தாய்ப்பாலுடன் திட உணவு கொடுக்க ஆரம்பித்து விடலாம். வேகவைத்து மசித்த காய்கறிகள், புழுங்கலரிசி, பொட்டுக்கடலை, ராகி சேர்த்து அரைத்த மாவில் கஞ்சி, மசித்த வாழைப்பழம் போன்றவற்றை முதலில் சிறிது சிறிதாகக் கொடுத்துப் பழக்கலாம்.

இந்தச் சமயத்தில் குழந்தை, தானாக எழுந்து உட்கார முயற்சிக்கும். வாயில் போட்டுக்கொள்கிற மாதிரி சிறிய பொம்மைகளாக இல்லாமல், கைகளால் பிடித்து விளையாடுவது போலப் பெரிய பொம்மைகள் தரவேண்டும். கூடிய வரையில் தரையில் உறுத்தாத விரிப்பில் விடுவது நல்லது.

7, 8ம் மாதங்கள்:

கஞ்சி, மசித்த காய், பழம் இவற்றிலிருந்து கொஞ்சம் முன்னேறி, பருப்பு சேர்த்துப் பிசைந்த, மசித்த சாதம் கொடுக்கலாம். நாம் சாப்பிடுவது போலவே, மூன்று வேளைகள் திட உணவு கொடுக்கவேண்டும். தாய்ப் பாலையும் நிறுத்தக் கூடாது. 8-ம் மாதத்தில், முட்டி போட்டுத் தவழத் தொடங்கும். குழந்தைக்கு ஞாபக சக்தி வரும் வயது இதுதான். இந்தப் பருவத்துக்குத் தகுந்தமாதிரி அதன் விளையாட்டுகளும் இருக்கும். எதையாவது துணிக்குக் கீழ் ஒளித்து வைத்தால் கண்டுபிடிக்கும்; நன்றாக டிரெஸ் போட்டு, தலை வாரினால் வெளியே கிளம்புகிறார்கள் என்று புரிந்துகொள்ளும். அப்பா அலுவலகத்திலிருந்து வருவது... போன்ற எல்லாமே குழந்தைக்குத் தெரிய ஆரம்பிக்கும்.

9, 10ம் மாதங்கள்:

9-வது மாதத்தில் இருந்து விரல்களின் ஒருங்கிணைப்பு நன்றாக வந்துவிடும். சாப்பாட்டைத் தட்டில் போட்டு வைத்தால், மேலே கீழே சிந்தி, கைகளால் அளைந்து விளையாடும். ஆனால், சிறிய அளவேனும் வாயில் போட்டுக்கொள்ளும். அப்போதுதான், ஒரு வயதில் தானாகச் சாப்பிட ஆரம்பிக்கும்.

வீட்டை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எது கிடைத்தாலும் குழந்தை, அதை எடுத்து வாயில் போடும். குட்டையான மேஜை, டீப்பாய், ஸ்டூல் போன்றவற்றின் மேல் மறந்தும் கூட கனமான பொருள்களை வைக்கக் கூடாது. பிடித்துக்கொண்டு நிற்கும் ஆர்வத்தில், குழந்தை மேஜை விரிப்பைப் பிடித்து இழுக்கக் கூடும். அதன் மேலுள்ள பொருட்கள், குழந்தையின் மேல் விழுந்து காயப்படுத்தலாம். இந்தப் பருவத்தில், காலை, மதியம், இரவு என்பதோடு, 4-வது வேளையாக மாலையில் ஏதாவது 'ஸ்நாக்' கொடுக்கலாம்.

ஒரு வயதில் பேச்சு வர ஆரம்பிக்கும். திட உணவு, தாய்ப்பால் ஆகியவற்றுடன், பசும்பால் அல்லது பாகெட் பால் போன்ற வேறு பால் ஓரிரு வேளை கொடுக்கலாம். தாய்ப்பால் 2 வயது வரை கொடுக்க வேண்டும். வேலைக்குப் போகும் பெண்கள், தாய்ப்பாலைப் பிழிந்து எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டுப் போகலாம். ஆனால், குழந்தைக்குக் கொடுப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன் வெளியே எடுத்து, சூடுபடுத்தாமல், அறை வெப்பநிலைக்கு வந்ததும் கொடுக்கலாம்.

வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், இருமல்... மூன்றும், ஒரு வயதுக்கு மேல் அடிக்கடி வரும். இவற்றில் ஏதேனும் ஒன்று வந்த பிறகும் குழந்தை, 'ஆக்டிவ்' ஆக இருக்கிறதென்றால், பயப்பட வேண்டாம். தானாகவே ஒன்றிரண்டு நாளில் சரியாகிவிடும். ஆனால், மேற்கூறிய 3 பிரச்னைகளில் ஏதேனும் ஒன்று இருந்து, குழந்தை சோர்ந்து போய் இருந்தாலோ, மூச்சுத்திணறல் இருந்தாலோ, மருத்துவரின் ஆலோசனையுடன் ஆன்டிபயாடிக் கொடுக்கலாம்.

அப்புறம் என்ன? ''நான் வளர்கிறேனே மம்மி'' என்று, இதன் பின்னர் கிடுகிடுவென வளர்ந்துவிடுவார்கள் குழந்தைகள்''.

பிறந்து 5 முதல் 10 நாள்களுக்குள் (சில சமயம், 3 நாள்களில்), பச்சிளம் சிசுவின் தொப்புள்கொடி, அதுவாகவே விழுந்துவிடும். பிடித்து இழுக்கவோ, மருந்து வைக்கவோ தேவையில்லை. தானாகவே ஆறிவிடும்.

எல்லாக் குழந்தைகளுக்குமே பிறந்ததும் மஞ்சள்காமாலை லேசாக இருக்கும். முகம், நெஞ்சு, கண்கள் லேசாக மஞ்சளாக இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. அது சாதாரணமானதுதான். ஆனால், கைகள், கால்களில் மஞ்சள் பரவினால், ரத்தப் பரிசோதனை செய்து, 'நீல நிற ஒளி'யில் வைக்க வேண்டுமா என்று பார்க்கவேண்டும்.

பிறந்த 5 நாட்களில், பிறந்தபோது இருந்த எடையை விடக் குறைந்து, மறுபடியும் 10-வது நாளில் இருந்து எடை கூடும். அதனால், கவலைப்பட வேண்டாம். குழந்தை நன்கு சிறுநீர் கழிக்க வேண்டும்.