Sunday, August 17, 2014

நான் என் கடமையை செய்கிறேன். நீ உன் கடமையை செய்

"அம்மா  ! நான் நாளை முதல் வேலைக்குப் போகப் போகிறேன்"

சொன்னது மூன்றுவயதுக் குழந்தை.

"எதற்காக  நீ வேலைக்குப் போகப் போகிறாய் "  தாயின் முகத்தில் பரவசம்.  "பிள்ளை எப்படி பொறுப்பாக பேசுகிறது " என்று  தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

"உங்களை எல்லோரையும் காப்பாற்ற "

"அதற்கு இப்போது என்ன அவசியம் வந்துவிட்டது.எங்களுக்கு வயதாவதற்கு பல ஆண்டுகள் இருக்கின்றனவே  "

"ஆனால்  எனக்கு நேரமில்லை   "

" அப்படி சொல்லாதே ..உனக்கு  நேரம் இன்னும் வரவில்லை .அப்படி வரும்போது நானே உன்னை வழி அனுப்புகிறேன் .இப்போது,  போய் விளையாடு . "

"நான் கண்டிப்பாக போவேன் ". பிள்ளையின் குரலில் சிறிது அடம்  தெரிந்தது.  இப்போது தாயின்   முகத்தில் கலவரம். பரவிகிறது  அவள் .சிறிது இறங்கி வருகிறாள்.

"சரி ! என்ன வேலைக்கு போகப்போகிறாய் "

"மாடு மேய்க்கப் போகிறேன்".

"என்ன ! மாடு மேய்க்கப் போகிறாயா ? அது என்ன   அவ்வளவு  எளிதானது  என்று நினைத்தாயா ? முதலில் மாடுகளை எங்கே   மேய்ப்பாய்  என்று சொல் பார்க்கலாம் "

"காட்டில் :

"அங்கே  சிங்கம் , புலி , கரடிகள்  , பாம்புகள் எல்லாம் இருக்குமே . அவற்றிலிருந்து  நம் மாடுகளை எப்படி காப்பாய் ".

"அவற்றிடம் இருந்து மட்டுமல்ல. நரிகள், நாய்கள் , கழுகுகளிடமிருந்தும்  நான்  மாடுகளைக்  காப்பேன் "

.  "நன்றாக பேசுகிறாய்  .எனக்குத்தான் நீ பேசுவது புரிவதே இல்லை . சரி சரி . நீ பெரியவனாக ஆனதும்  உன் விருப்பம் போல்  காட்டுக்கு  சென்று  நம் மாடுகளை மேய்க்கலாம் . இப்போது சென்று கண்ணுறங்கு " 

அடுத்தநாள் காலை .உதயத்திற்கு  மூன்று நாழிகை முன்னரே தாய் எழுந்து  விளக்கேற்றி  வாயிலைக் கூட்டி  கோலமிட்டு  தன் பிள்ளையைப் பார்க்க வருகிறாள். பிள்ளை  படுக்கையில்  இல்லை . ஒரு நிமிடம்  அவளுக்கு மூச்சே நின்று விடுகிறது.  மனம் பதை பதைக்கிறது . "என் குழந்தை எங்கே ?எங்கே ?என்று  நாற்புறமும் பார்க்கிறாள். 

"அம்மா" குழந்தையின் குரல்  வாயில்  பக்கம்   கேட்கிறது.  பிள்ளை  வாயிலில்  ,கையில் ஒரு சிறு குச்சியுடன்   நின்று கொண்டிருக்கிறது. 

"அம்மா ! நான் மேய்ச்சலுக்கு புறப்பட்டுவிட்டேன். அதோ பார். நம் பசுக்களும் காளைகளும்  என்னுடன் வருவதற்கு  தயாராக உள்ளன ".

"என்னடா இது கொடுமை . நீ நேற்று ஏதோ விளையாட்டுக்கு சொல்கிறாய் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது  மேய்ச்சலுக்கு போவேன் என்று உண்மையாகவே  நிற்கிறாயே .உன் அப்பா வேறு ஊரில் இல்லை .இப்போது உன்னை எப்படி அனுப்புவேன்  , நான் என்ன செய்வேன் "  தாய் புலம்புகிறாள்.

"நான் புறப்படுகிறேன் . என்னை வாழ்த்துங்கள் அம்மா"

"வேண்டாம் குழந்தாய், !நீ இங்கேயே வீட்டிலேயே விளையாடு ."

" மாடு மேய்ப்பதும்  எனக்கு  விளையாட்டுத்தான் அம்மா:"

"பால்குடியே இன்னும்   மாறாத உனக்கு  இப்படி மாடு மாய்க்கும் ஆசையை ஊட்டிவிட்டது யார் . சொல் குழந்தாய். .அவனை  நாலு சாற்றுகிறேன்".

"அப்படி யாரும்  கிடையாது  அம்மா. இது என் கடமை. நான் என் கடமையை செய்கிறேன். நீ உன் கடமையை செய்"

"எதடா என் கடமை ? உன்னை காட்டுக்கு அனுப்புவதா என் கடமை"

"என்னை வாழ்த்தி அனுப்புவது உன் கடமை "

"என்னால் முடியாது "

"நீ செய்கிறாய் "

"நான்  மாட்டேன் :

"அப்படியானால் நான் சாப்பிடவே மாட்டேன் "..குழந்தைக்கு  தாயின் பலவீனம் தெரிந்திருக்கின்றது.

 "சாப்பிடமாட்டேன்" என்று சொன்னதும் தாயின் கண்களில் கண்ணீர் வழிகின்றது .  "அப்படி சொல்லாதே செல்லமே !. நீ மேய்ச்சலுக்குப் போய் வா. நான் உனக்கு  சீடை , முறுக்கு , அப்பம்,   அவல், வெண்ணை ,ததி அமுது  எல்லாம் கட்டித்தருகிறேன்   காட்டில்  பசிக்கும் போதெல்லாம்  சாப்பிடு ..ஒன்றுமட்டும் சொல்  எப்போது வருவாய் ?"

:"மீண்டும் மீண்டும் வருவேன் "

"என்ன !!! "

"இல்லை இல்லை! சில நாட்கள் கழித்து வருவேன்

குழந்தை  நடக்க ஆரம்பித்தது.  வெறும் கால்களுடன்   தெருப் புழுதியில் நடக்க ஆரம்பித்தது.  பசுக்களும் , காளைகளும், அவற்றின் கன்றுகளும்  முன்னே செல்ல ஆரம்பித்தன. இடுப்புக் கச்சத்தில் ஒரு புல்லாங்குழலையும் , தலையில் ஒரு மயில்  பீலியையும் செருகிக்கொண்டு அது கம்பீரமாக  நடந்து சென்றது.  தாய் கொடுத்த   தின் பண்டங்களை ஒரு மாட்டின் கழுத்தில் கட்டிவிட்டது.

குழந்தை நடந்து செல்லும்  அழகைக் காண   ஆதவன் வழக்கத்தை விட விரைவில்  எழும்பிவர  முயற்சி செய்து கொண்டிருந்தான்.  அன்று  முன்தினம் முழு நிலவு நாள்  என்பதால்  நிலவும் மேற்கில் மறையாமல்  குழந்தையில் அழகிலேயே தன்னைப் பறிகொடுத்து அங்கேயே நின்று கொண்டிருந்தது. "நீ பார்த்து ரசித்தது போதும்  . நான் பார்க்க வேண்டாமா. நீ சீக்கிரம் கீழே இறங்கு " என்று  ஆதவன்  நிலவைப் பார்த்து தன்  உஷ்ணத்தைக் காட்டியது. இந்த சூரியன் மேலே எழுந்தால் இந்தக் குழந்தைக்கு  வேர்க்குமே என்று  காற்று  மெதுவாக குளிர்ந்து  வீசியது. பறவைகள்  அந்தக் காற்றை  தங்கள் சிறகுகளால்  குழந்தையை நோக்கி விசிறின. கல் முள் குத்தினால்  குழந்தையின் பாதங்கள் வலிக்குமே என்று மண் தன்னை  மென்மையாக மாற்றிக்கொண்டது. மரங்கள்  தங்கள் இலைகளை  உதிர்த்து  குழந்தையில் கால்களுக்கு மெத்தைகளை  அளித்தன.

மாடுகள்  தங்கள் தலையையும் , காதுகளையும் , வால்களையும் ஆட்டிக்கொண்டு  முன்னே சென்றுகொண்டிருந்தன.  அவ்வப்போது   குழந்தை பின்னே வருகின்றானா என்று   திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே சென்றன.சில  மாடுகள்  "நாம் வேண்டுமென்றே   மந்தையை விட்டு  விலகி செல்வோம் . அப்போது இந்த  குழந்தை என்ன செய்கிறது என்று  பார்ப்போம்  " என்று  வழி  மாறி நடக்க ஆரம்பித்தன.  

பின்னர் அவை திருட்டுத்தனமாக   பின்னோக்கி  பார்க்க ஆரம்பித்தன. "உங்கள்  எண்ணமும்   நான் அறிவேன் "  என்பது போல  குழந்தை அந்த மாடுகளைப் பார்த்து ஒரு புன் சிரிப்பு  செய்ததும் அந்த மாடுகள் தம்மை அறியாமல்  தாமாக சரியான பாதையில் செல்ல ஆரம்பித்தன.

இப்படியாக  அந்த  குழந்தை   மாடுகளை  மேய்த்து  வருகிறது.  கொடிய காட்டு விலங்குகளிடமிருந்து    மாடுகளைக் காப்பாற்றி  வருகிறது.  "என்னையே   சரண் அடை . நான் உன்னை எல்லாவிதமான கட்டுகளில் இருந்தும்  விடுவிக்கிறேன் " என்று சொல்கிறது.  தருமத்தைக் காக்க கையில் குச்சிக்கு பதிலாக சாட்டையை ஏந்தி   நிற்கிறது. அப்படியே  இன்னும் அல்லிக் குளத்தங்கரையில் நின்று கொண்டிருக்கிறது. .

குழந்தையாய்,  தாயாய் . தந்தையாய் , சகோதர சகோதரியாய்  , நண்பனாய் , மந்திரியாய் , நல்லாசிரியனாய்  , பண்பிலே தெய்வமாய் .......... ..

எங்கிருந்தோ வந்தான்.  இடைசாதி  நான் என்றான். இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்......

இன்று அந்தக் குழந்தையின் பிறந்த நாள் கொண்டாடும் நண்பர்கள் குடும்பங்களுக்கும், அவர் குடும்பங்களில் இருக்கும்  எல்லா பாப்பாக்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

Saturday, August 16, 2014

திருமணத்துக்குத் தயாராகும் இளம் தம்பதியினருக்கு ஆலோசனைகள்

திருமணம்  ஆயிரம் தேவதைகள் கூடி ஆசீர்வதிக்கும் தருணம். எல்லோருக்குமே திருமணம் குறித்த பரவசமும் எதிர்பார்ப்பும் இருக்கும். திருமணம் நிச்சயமானதும் வருங்கால மணமகன் மணமகள் இருவரின் கண்களும் கனவில் மிதக்கும்; கவிதை பிடிக்கும்; எல்லாவற்றிலும் அப்படி ஓர் அழகு தெரியும். வருங்கால வாழ்க்கைத்துணையிடம் பேசிப்பேசியே செல்போனில் பேட்டரி சார்ஜ் இறங்கும். ஆனால் இருவருக்கும் எக்கச்சக்கமாக சார்ஜ் ஏறும்.
திருமணம் என்பது புதிய பொறுப்புகளை நம் தோள்களில் ஏற்றும். இதுநாள்வரை பார்த்துப் பார்த்து வளர்த்த பெற்றோர்கள், பார்த்துப்பழகிய நண்பர்களையும் தாண்டி புத்தம் புதியதாக ஓர் உறவை ஏற்று, வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ளும் சடங்கு. எல்லோர் வாழ்விலும் இது இரண்டாம் அத்தியாயம். 'இன்று புதிதாகப் பிறந்தேன்' என்று சொல்லும் மங்களகரமான மறுஜென்மம்.
திருமணம் என்கிற ஆயிரம் காலத்துப் பயிர் வளமாக, வளர உரமாக எதை இடவேண்டும்? திருமணத்துக்கு, உடலாலும் மனதாலும் எப்படித் தயாராக வேண்டும் என்பதை நிபுணர்கள் எடுத்துரைக்கிறார்கள். இனிமையான வசந்தகாலம் உங்களைக் கைகூப்பி வரவேற்கட்டும்... வாழ்த்துகள்!
உடலால் தயாராவது எப்படி?
"திருமணத்துக்குத் தயாராகும் ஆணும் பெண்ணும் உடல்ரீதியாக ஆரோக்கியமாக இருந்தால்தான், மகிழ்ச்சியான, நிலையான குடும்ப வாழ்க்கையை நடத்த முடியும்.
முன்பு புதிய இளம் தம்பதியினருக்கு, ஆலோசனைகள், அறிவுரைகள் சொல்ல பெரியவர்கள் வீட்டிலேயே இருந்தனர். இன்று தனிக்குடித்தனம், வீட்டுக்கு ஒரு குழந்தை என்றாகிவிட்ட நிலையில், எந்த ஒரு விஷயத்துக்குமே ஆலோசனை சொல்ல ஆள் இல்லாத நிலைதான்.அதிலும், திருமணத்துக்கு முன்னர், சரியான ஆலோசனையை யாரிடம் கேட்பது?
கட்டுப்பாடு இல்லாத உணவு முறை, கலப்படம் சேர்ந்த உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள், மன அழுத்தம்... போன்றவற்றால் இளம் வயதிலேயே எல்லா நோய்களும் எளிதில் ஆக்கிரமித்துவிடுகின்றன.
இதனால், திருமண வாழ்வு பாதிக்கப்படுகிறது. அதனால், திருமணத்துக்கு முன்பு 'ப்ரீ மேரிட்டல் ஸ்கிரீனிங்' எனப்படும் முழுமையான உடல் நலப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பிரச்னை எதுவும் இருந்தால், அதற்கான சிகிச்சை எடுத்துச் சரிசெய்து கொள்வதற்கும், திருமணத்துக்குப் பின் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் இந்தப் பரிசோதனை உதவும்.
பரிசோதனைகள்:
திருமணத்துக்குத் தயாராகும் ஜோடி, செய்து கொள்ள வேண்டிய முக்கியமான மூன்று
பரிசோதனைகள்:
1. மருத்துவப் பரிசோதனை
2. நோய்த்தொற்றுக்கான பரிசோதனை
3.  மரபியல்ரீதியான பரிசோதனை
மாறிவரும் வாழ்க்கை முறையினாலும், பல மணி நேரம் உட்கார்ந்தே பணி செய்வதாலும், மன அழுத்தத்தாலும் இளம் வயதிலேயே பலருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் போன்றவை வந்துவிடுகின்றன. இதுபோன்ற வேறு மருத்துவப் பிரச்னைகள் இருக்கின்றனவா என்று தெரிந்துகொள்ள, அதற்கான பரிசோதனைகள் செய்ய வேண்டும்.  பிறரிடம் இருந்து, ரத்தம் மூலமாகத் தொற்றும் நோய்களுக்கான பரிசோதனைகள், பரம்பரை நோய்கள் வருவதற்கான அறிகுறிகள் இருக்கின்றனவா என்பதை அறியும் பரி சோதனைகள்   ஆகியவை தான்  முக்கியமானவை.மேற்சொன்ன பரிசோதனைகளில், பெண்ணுக்கும் ஆணுக்கும் எவையெல்லாம் தேவை?
பெண்ணுக்கான பரிசோதனைகள்:
1. மருத்துவப் பரிசோதனை:
  ரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், ருபெல்லா, சிபிலிஸ் (பால்வினை நோய்கள்) போன்ற பரிசோதனைகள்.
  அநேகமாக எல்லாப் பெண்களுக்கும் சிறு வயதிலேயே ருபெல்லா காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் கருவுற்றிருக்குபோது முதல் மூன்று மாதங்களில் ருபெல்லா வந்துவிட்டால், பிறக்கும் குழந்தை ஏதேனும் குறையோடு பிறக்க வாய்ப்பு உண்டு. எனவே, ருபெல்லா தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளலாம்.
  ருபெல்லா எதிர்ப்பு அணுக்கள் உடலில் இருக்கின்றனவா என்று பரிசோதித்து விட்டு, அவை இல்லையென்றால், தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.  
   எச்சரிக்கை: திருமணத்துக்கு மிகச் சில நாட்களுக்கு முன் தடுப்பூசி போடுவது என்றால், ஊசி போட்ட மூன்று மாதங்கள் கருத்தரிக்கக் கூடாது. கவனமாக இருக்க வேண்டும்.
  கர்ப்பப்பை, சினைப்பை நார்மலாக இருக்கிறதா என்று பார்க்கவும். தேவைப்பட்டால் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்து கொள்ளலாம்.
  கர்ப்பப்பைப் புற்றுநோய்க்கான தடுப்பூசியும் போட்டுக்கொள்வது நல்லது. 0  2  6 என்ற மாதக் கணக்கில், 3 டோஸ் போடவேண்டும். ஒருவேளை தடுப்பூசி போட்ட பிறகு, கருவுற்றால், குழந்தை பிறந்த பிறகுதான் அடுத்த டோஸ் போடவேண்டும்.
2. நோய்த்தொற்றுப் பரிசோதனை:
ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் மற்றும் ஹெச்.ஐ.வி வைரஸுக்கான ரத்தப் பரிசோதனை.
ஹெபடைட்டிஸ் பி வைரஸுக்கான எதிர்ப்பு அணுக்கள் இருக்கின்றனவா எனப் பரிசோதித்துவிட்டு, தடுப்பூசி மூன்று டோஸ் (0  1  6) போடவேண்டும்.
3. மரபியல்ரீதியான பரிசோதனை:
தலசீமியா, சிக்கிள் செல் அனீமியா (ரத்த அணுக்கள் தொடர்பான குறைபாடு) போன்ற மரபியல் நோய்களின் பாதிப்பு இல்லாவிட்டாலும், குறைபாடுடைய அந்த ஜீன்களை எடுத்துச் செல்பவராக (carrier)' இருந்தாலும்கூட, பிறக்கும் குழந்தைக்கு அந்தக் குறைபாடு வருவதற்கு 25 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. எனவே மரபியல் நோய்களைப் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
குறிப்பு: பெண்களுக்கான தடுப்பூசிகளை, எந்த வயதில் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் என்றாலும்,  9 வயதில் இருந்து 26 வயதுக்குள் போட்டுக் கொள்வது நல்லது. குறிப்பாக, பாலியல் உறவில் ஈடுபட ஆரம்பிப்பதற்கு முன்பே போட்டுக்கொள்வது நல்லது.
ஆணுக்கான பரிசோதனைகள்:
 ரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால் ஆகியவற்றுக்கான ரத்தப் பரிசோதனை.
  இ.சி.ஜி. பரிசோதனை.
  தேவைப்பட்டால், ஹார்மோன்ஸ் (டெஸ்டோஸ்டிரான்) பரிசோதனை மற்றும் உயிரணுக்கள் பரிசோதனை.
  நோய்த் தொற்றுக்கான பரிசோதனைகள், பெண்ணுக்குச் செய்வது போன்ற பரிசோதனைகளை, ஆண்களும் செய்து கொள்ளலாம். ஏதாவது நோய்த்தொற்று அல்லது நோய் அறிகுறிகள் இருப்பின் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். சில முக்கியமான குறிப்புகள்:
ஒழுங்கற்ற மாதவிலக்கு:
பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்னை இருந்தால், திருமணத்துக்கு முன்பே, மகளிர் நல நிபுணரிடம் ஆலோசித்து, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், முட்டை ஒழுங்காக வரவில்லை என்றால்தான், மாதவிலக்கு சீராக வராது. அதனால் கருத்தரிப்பதில் பிரச்னை வரலாம்.
பாலியல் உறவு:
தாம்பத்ய உறவு குறித்த சந்தேகங்களை நிபுணர்களிடம் கேட்டுத் தெளிவதே சிறந்தது. என்னதான் இன்டர்நெட்டில் தகவல்கள் கொட்டிக் கிடந்தாலும், அவை முழுமையான உண்மைகள் என்று சொல்ல முடியாது. பெற்றோரிடமோ, நண்பர்களிடமோ தெரிந்துகொள்ள முடியாத விஷயங்களை, மருத்துவர்களிடம் முறையாகத் தெரிந்துகொள்ளலாம். பலர் திருமணமாகி மூன்று வருடங்கள் கழித்தும்கூட, முறையான பாலியல் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பார்கள். இதனால் குழந்தைப்பேறும் தள்ளிப்போகும்.
கருத்தடை சாதனங்கள்:
திருமணமான உடனேயே குழந்தை வேண்டாம் என்று தள்ளிப்போட விரும்புபவர்களுக்குச் சிறந்த வழி, கருத்தடை மாத்திரைகள்தான். டாக்டரிடம் பரிசோதனை செய்த பிறகே, கருத்தடை மாத்திரைகள் எடுக்க வேண்டும். அவரவர் உடலுக்கு ஏற்ற சரியான மாத்திரைகளை டாக்டர் பரிந்துரைப்பார்.
கவனத்தில்கொள்ளவேண்டிய விஷயங்கள் :
  சில பெண்களுக்கு, திருமண நாளையொட்டி மாதவிலக்கு கெடு வரும். உடனே, தாங்களாகவே,  அம்மா சொன்னாங்க... பாட்டி சொன்னாங்க' என்று ஏதாவது மாத்திரைகளை வாங்கிப் போட்டுக்கொள்வார்கள். இது மிகவும் ஆபத்தான செயல்.
  பொதுவாகவே, திருமண தினத்தில் மாதவிலக்கு வரும் என்றால், அதைக் கடைசி நிமிஷத்தில் தள்ளிப்போட முயற்சிப்பது மிகவும் தவறு. உடல் உறுப்புகளும் ஹார்மோன்கள் செயல்பாடும், சுருதி பிசகாத ஒரு லயமான சுழற்சியில், ஒழுங்காக வேலை செய்துகொண்டிருக்கின்றன. கடைசி நிமிஷத்தில், அந்த ஒழுங்கைக் குழப்பினால் அடுத்த  ஆறு மாதங்களுக்கு நம் உடலின் ஹார்மோன் செயல்பாடு குழம்பிவிடும். மாதவிலக்கு நாளைப் பொறுத்தே திருமணத் தேதி தீர்மானிக்கப்பட வேண்டும்.
  மாதவிலக்கைத் தள்ளிப் போடவேண்டும் என்றால், இரண்டு மாதங்கள் முன்பே மருத்துவரிடம் சென்று, இரண்டு சுழற்சிகளுக்கு முன்பே முறைப்படி அந்த வேலையைத் தொடங்கிவிட வேண்டும். மாதவிலக்கு சுழற்சி குழம்பாத வண்ணம் மருத்துவர் பார்த்துக்கொள்வார்.  

ஃபோலிக் ஆசிட்:
ஒரு பெண் கருவுற்றவுடன், அவள் வயிற்றில் வளரும் கரு மிக வேகமாக வளரும்.  கருவில், மூளை, நரம்பு மண்டலம், தண்டுவடம் போன்றவை வேகமாக வளரக்கூடியவை.  இத்தகைய வளர்ச்சிக்கு, ஃபோலிக் ஆசிட் அவசியம் தேவை. ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை, மருத்துவர் வழிகாட்டுதலுடன், குழந்தைப் பேற்றுக்குத் தயாராகும் முன்பே எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கவேண்டும். குழந்தையின் மூளை, தண்டுவடம் போன்றவை, கரு உருவாகிய எட்டு வாரங்களுக்குள் முழுமையாக வளர்ந்துவிடும். எனவே, கருவுற்ற பிறகு, ஃபோலிக் ஆசிட் எடுப்பதால் எந்தப் பயனும் இல்லை.
  திருமணத்துக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பே, வெளி இடங்களில் வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவதுடன், காய்கறிகள், பழங்களை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நன்கு உடற்பயிற்சி செய்து, உடலைச் சீராகப் பராமரிக்க வேண்டும். எந்தவித மன அழுத்தமும் இல்லாமல் இருக்க வேண்டும்.
  மிக முக்கியமாக, குழந்தைக்கு முயற்சிக்கும் முன்பு, ஆணுக்கு புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் இருந்தால், கண்டிப்பாக அவற்றை நிறுத்த வேண்டும்.
ஆரோக்கியமான வாரிசுகளைப் பெற்றெடுக்க, பெற்றோர் நலமாக இருக்கவேண்டியது, மிகவும் அவசியம்.
ரத்த வகை:
நம்முடைய ரத்த வகைகள், Rh positive, Rh negative என்ற இரு பிரிவுகளுக்குள் அடங்கும். திருமணத்துக்கு முன், இருவரும் ரத்த வகையைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. கணவன், மனைவி இருவரின் ரத்தமுமே Rh positive ஆகவோ அல்லது Rh negative ஆகவோ இருந்துவிட்டால் பிரச்னை இல்லை. அதேபோல், மனைவிக்கு Rh positive, கணவனுக்கு Rh negative என்று இருந்தாலும் பிரச்னை இல்லை.
 
ஆனால், கணவன் Rh positive, மனைவி Rh negative ஆக இருந்தால், மனைவி கருவுற்றதும் 7-வது மாதத்தில் Anti D ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு, குழந்தை பிறந்ததும், மீண்டும் ஒரு முறை அந்த ஊசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். கருவுற்றதுமே, மகப்பேறு மருத்துவர் இதற்கான ஆலோசனையை வழங்கிவிடுவார். இந்த ஊசி போட்டுக்கொள்ளவில்லை என்றால், முதல் குழந்தைக்குப் பிரச்னை இருக்காது. ஆனால் இரண்டாவது குழந்தைக்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உறவுமுறையில் திருமணம்:
உறவுமுறையில் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு, மரபியல்ரீதியான குறைபாடுகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே சொன்னது போல் இவர்கள் மரபியல் பரிசோதனைகள் செய்துகொள்வது நல்லது. சிலருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மிகச் சிறிய அளவில் உடல்குறைகள் இருக்கலாம். சிலருக்கு தீவிரமான பிரச்னைகள் வரலாம். சில குழந்தைகள் பிரச்னைகளே இல்லாமல், ஆரோக்கியமாகப் பிறக்கலாம். ஆனால், நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் நடக்கும்போது நோய்க்கூறு மரபணுக்கள் கடத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், மனநலக் குறைபாடுகள் மற்றும் பல உடல்நலக் குறைபாடுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்வதைத் தவிர்த்தலே நல்லது.
நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை:
திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆண் அல்லது பெண்ணுக்கு உயர் ரத்த அழுத்தம், காசநோய், ஆஸ்துமா போன்ற நாள்பட்ட நோய்கள் ஏதேனும் இருந்து, அதற்கான மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருந்தால், அவசியம் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஏனெனில், சில மாத்திரைகளை, கருவுற்றிருக்கும்போது எடுத்துக்கொள்ளக் கூடாது. மருத்துவர்கள், அதற்கு ஏற்றவாறு மாத்திரைகளை மாற்றிக்கொடுப்பார்கள். முக்கியமாக, பெண்ணுக்கு தீவிரமான இதய நோய்கள் ஏதாவது இருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல், கருத்தரிக்கவே கூடாது.  
குழந்தைப்பேறு:
திருமணத்துக்குப் பிறகு, குழந்தை எப்போது பெற்றுக்கொள்வது என்பதையும் முன்கூட்டியே மனம்விட்டுத் தெளிவாகப் பேசி, முடிவு எடுப்பது நல்லது. பல தம்பதிகள்,திருமணத்துக்கு முன்னர் முடிவு எடுக்காமல், கருத்தரித்த பின்னர், 50 நாட்களில் வந்து, குடும்பத்தில் பல கமிட்மென்ட்ஸ் இருக்கு... இப்போ குழந்தை வேண்டாம்னு நினைக்கிறோம்' என்று கருவைக் கலைக்க ஆலோசனை கேட்பார்கள். அது மிகப் பெரிய தவறு. திருமணத்துக்கு முன்பே, எல்லாவற்றையும் பேசிக்கொள்ளும் இந்தக் காலத்தில், குழந்தைப்பேற்றையும் திட்டமிடுதல் வேண்டும்.
மனதால் தயாராவது எப்படி?
பிருந்தா ஜெயராமன், உளவியல் ஆலோசகர்.
ஆண் மணமுடிக்கும்போது, ஒரே நேரத்தில் கணவன், மருமகன் என்று இரண்டு பொறுப்புகளை ஏற்கிறார். அதே போல, ஒரு பெண்ணும், திருமணத்தின் மூலம் மனைவி, மருமகள் என்று இரண்டு பொறுப்புகளை ஏற்கிறார். எனவே, ஆண், பெண் இரண்டு பேருமே, இந்த இரண்டு பாத்திரங்களுக்குமே தங்களைத் தயார்செய்துகொள்ள வேண்டியது  அவசியம்.
திருமணம் ஆகப்போகும் ஆண், பெண் இருவருமே, தங்கள் பெற்றோரின் குடும்ப வட்டம், தங்கள் குடும்ப வட்டம் எனத் தனித் தனியே அமைத்துக்கொண்டால் நல்லது.
திருமணம் ஆன பிறகு, எந்த விஷயங்களில் எல்லாம் பிரச்னைகள் வரலாம் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டால், அவற்றைத் தவிர்ப்பது சுலபம். இதற்காகவே, இப்போது திருமணத்துக்கு முந்தைய ஆலோசனை'யை (ப்ரீ மேரிட்டல் கவுன்சிலிங்) பலர் பெற்றுக்கொள்கிறார்கள். 
இந்த நான்கு வகையான உறவுகளிலும் ஆண், பெண் இருவருமே கவனம் செலுத்தியாக வேண்டும்.  
உணர்வுபூர்வமான பந்தம்:
உணர்வுபூர்வமான பந்தம் இறுக, இரண்டே இரண்டு தேவைகள்தான். ஒன்று, 'நான் உன்னை நேசிக்கிறேன்'. மற்றது, 'நீ எனக்கு முக்கியமானவள்/ன்'.
மணம் செய்துகொள்ளப்போகும் ஆண், பெண் இருவருமே, 'நான் உன்னை நேசிக்கிறேன்' என்பதை ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொண்டே இருக்கவேண்டும். வெறும் வார்த்தைகளால் மட்டும் அல்லாமல் ஒருவர் மீது மற்றவர் காட்டும் கரிசனம், உடல்மொழி மற்றும் சில செயல்பாடுகள் மூலமாக அன்பைக் காட்டவேண்டும். சோர்வாக இருந்தால், 'என்னடா தலை வலிக்குதா?' என்று கேட்பது, 'இந்த டிரெஸ் நல்லாயிருக்கு' என்று பாராட்டுவது...  இப்படி அவரவர் மொழியில் நேசம் பகிர்வது முக்கியம்.
இன்னொரு முக்கியமான விஷயம், தன் வாழ்க்கைத்துணை எதிர்பார்க்கும் விதத்தில் அன்பை வெளிப்படுத்த வேண்டும். இது, அவரவர் வளர்ந்த சூழலைப் பொறுத்து வேறுபடும். சிலர் வீடுகளில் ஆண், பெண் சகஜமாகப் பேசக்கூட முடியாத சூழல் இருக்கும். சில வீடுகளில் சகஜமாகக் கட்டியணைத்து 'ஹாய்' சொல்லும் சூழல் இருக்கலாம்.  
திருமணத்துக்கு முன்பு இருந்து போலவே, திருமணத்துக்குப் பின்பும் இந்த நெருக்கம் தொடரவேண்டும். அப்போதுதான் திருமண பந்தம் உணர்வுபூர்வமானதாக அமையும்.

படுக்கையறை பந்தம்:
திருமணத்துக்கு முன்பே, ஒருவரைப் பற்றி மற்றவர் நன்கு அறிந்துகொள்ளும் காலம் இது. எனவே, தாம்பத்ய உறவு குறித்தும் ஒரு புரிதல் இருக்கவேண்டும்.
திருமணம் ஆன பிறகு, மனைவியுடனான தாம்பத்ய உறவு இனிமையாக இருக்க வேண்டும் என்றால், ஆண் செய்ய வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. பெண்ணுக்கும் சில விருப்பங்கள் இருக்கும். ஆண், தன் தேவைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ, அதே முக்கியத்துவத்தைப் பெண்ணின் தேவைகளுக்கும் கொடுக்கும் அளவுக்கு, மனதளவில் தயாராக வேண்டும். ஏனெனில், இது முதலிரவிலேயே தொடங்க வேண்டும். 'உனக்கும் இதில் பரிபூரண மகிழ்ச்சியும் திருப்தியும் இருக்கவேண்டும் என்பது எனக்கு முக்கியம்' என்பதைப் பெண்ணுக்குப் புரியவைத்துவிட்டால், தாம்பத்ய வாழ்க்கை இனிய இல்லறம்தான்.
படுக்கையறை பந்தம் மட்டும் அவர்களுக்குள் நன்கு அமைந்துவிட்டால், பிறகு அவர்களுக்குள் எந்தப் பிரச்னையும் வராது. வந்தாலும் தீர்வு காண்பது மிக எளிது.
பாலியல் உறவு பற்றி முன்கூட்டியே இருவரும் நன்கு விவரங்கள் தெரிந்துகொள்வது அவசியம். பாலியல் உறவு குறித்த சந்தேகங்களை இணையத்தில் தேடித் தெளிவுபெறுவதைவிட, தகுந்த ஆலோசகர்களிடம் கேட்டு, தெளிவது நல்லது.
இல்லையெனில் அனாவசியமான பதற்றம் ஏற்பட்டு, அதுவே அவர்களின் தாம்பத்ய உறவுக்குத் தடையாகி, வாழ்க்கையில் நிம்மதியைத் தொலைக்க நேரிடும்.
குழந்தைப்பேற்றைத் தள்ளிப்போட வேண்டும் என்றால், கருத்தடை குறித்தும் நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டுச் செயல்பட வேண்டும். இருவருமே தங்கள் அந்தரங்க சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். உதாரணத்துக்கு, வியர்வை வாடை, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகள் இருந்தால், அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், இந்த விஷயங்கள் மனரீதியான அழுத்தத்தைக் கொடுப்பதுடன், இனிமையான இல்லற வாழ்க்கைக்கே உலை வைக்கக்கூடிய அளவுக்கு, பெரிய பிரச்னைகளாக விஸ்வரூபம் எடுத்துவிடும்.  
குடும்ப உறவுகள்
திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆண்கள், ஒரு விஷயத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அவருடைய மனைவியாக வரப்போகும் பெண், இன்னொரு வீட்டில் குறைந்தபட்சம் ஆண்டுகள் 20 வளர்ந்து வாழ்ந்தவள். கல்யாணம் என்னும் பந்தம் மூலம், அவள் புத்தம் புதிய ஒரு சூழலுக்கு வரப்போகிறாள். ஓர் இடத்தில் பல ஆண்டுகளாக நன்கு வளர்ந்து வேரோடிய மரத்தை, அப்படியே வேருடன் பிடுங்கி இன்னொரு புதிய இடத்தில் நடுவது போன்றது இது. அந்த மரம், புதிய இடத்தில் வேர்பிடித்து வளர, சிறிது காலம் பிடிக்கும். அதைப்போலவேதான், பெண்ணுக்கும் புகுந்த இடத்தில் அனைவரையும் புரிந்துகொண்டு, சகஜமாக சில காலம் பிடிக்கும். அதுவரை அவளுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். வேர்பிடிக்கும் அந்தக் காலகட்டத்தில், கணவனின் அன்பும் ஆதரவும் அவளுக்கு முழுமையாகத் தேவை. இதைத் திருமணத்துக்கு முன்னரே புரிந்துகொண்டால், திருமணம் முடிந்த கையோடு முதல்  இரண்டு, மூன்று மாதங்களில் வரும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
மணமாகப்போகும் பெண்ணும், திருமணத்துக்கு முன்பே, 'இனிமேல் இது என் குடும்பம்' என்ற ரீதியிலேயே சிந்திக்கவேண்டும். அப்போது, மாமனார், மாமியார் சொல்வதோ, மற்ற விஷயங்களோ பெரிய பிரச்னையாகத் தெரியாது.  
திருமணத்துக்கு முன்பு இருவருமே தங்களது குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் அவர்கள் குணநலன்கள் பற்றியும் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், ஒரேயடியாக எதிர்மறையாகச் சொல்லி, துணையைப் பயமுறுத்திவிடக் கூடாது. பிறகு, திருமணமாகி வரும்போதே, ஒருவித அலர்ஜியுடன் வருவதுபோல ஆகிவிடும்.
எங்க அம்மா கொஞ்சம் அதிகமாக எதிர்பார்ப்பாங்க... பார்த்து நிதானமா நடந்துக்க...' என்றோ, அப்பா ரொம்பப் பேசலையேனு வருத்தப்படாதீங்க... அவர் எப்பவுமே அப்படித்தான்... அவர் உண்டு, நியூஸ்பேப்பர் உண்டுனு இருப்பார்' என்றோ மிதமாக, இதமாகச் சொல்லிவைப்பதில் தவறு இல்லை.
திருமணத்துக்குப் பிறகு, முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்கும் பொறுப்பை யார் எடுத்துக்கொள்வது என்ற விஷயத்தையும் பேசிக்கொள்வது நல்லது..
எல்லாப் பிரச்னைகளையும் பற்றி இருவருமே பேசி, விவாதித்தாலும், இறுதியில் முடிவை இருவரும் சேர்ந்து எடுக்கலாம். அல்லது, 'அந்தப் பிரச்னை சார்ந்த 'ஏரியா'வில் யார் திறமைசாலியோ அவர் முடிவெடுக்க வேண்டும்' என்று தீர்மானித்துக் கொள்ளலாம்.
உதாரணத்துக்கு, பணம், வாங்கல், கொடுக்கல் சார்ந்த விஷயங்களில், ஆண் பெண் இருவரில் யார் திறமைசாலியோ  அவர் முடிவு எடுக்கலாம்.  அதேபோல உறவுகள், குழந்தைகள் சார்ந்த விஷயங்
களையும் யார் அதில் திறமையானவரோ, அவரே கையாளும்படி சொல்லலாம். ஆனால், யார் எந்த விஷயத்தைக் கையாளுவதில் புலி என்பது, திருமணத்துக்குப் பிறகுதான் பலருக்கும் தெரியவரும்.
ஒருவர் முடிவெடுக்கும் போது, மற்றவர் அந்த உரிமையிலோ, முடிவிலோ குறுக்கிட்டுக் குழப்பாமல் இருப்பதற்கு, திருமணத்துக்கு முந்தைய தீர்மானம் உதவும்.
பொருளாதார பந்தம்:
   இந்தக் காலத்தில் ஆண், பெண் இருவருமே நன்கு படித்து, வேலைக்குப் போகிறார்கள். எனவே,  திருமணத்துக்கு முன்பே, பெண் தொடர்ந்து வேலைக்குப் போகவேண்டுமா, இல்லையா என்பதைப் பேசி, குடும்பத்துடன் ஆலோசித்து, தீர்க்கமாக முடிவு செய்துகொள்ள வேண்டும்.
அதேபோல, சம்பாதிக்கும் ஆண் அவருடைய பெற்றோருக்குப் பணம் தர வேண்டுமா என்பதையும், சம்பாதிக்கும் பெண் எனில், திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து அவருடைய பெற்றோருக்குப் பணம் அனுப்ப வேண்டுமா என்பதையும் மிகத் தெளிவாகப் பேசிக்கொள்ளவேண்டும். பணம் அனுப்ப வேண்டும் என்றால், எவ்வளவு என்பதையும் முடிவுசெய்துவிடலாம். இருவருமே மனபூர்வமாகச் சம்மதித்து அதற்கான முடிவுகளை எடுத்துவிட வேண்டும். பண விஷயத்தில் இருவருக்குள்ளும் ஒளிவுமறைவு இருக்கக் கூடாது. மாத வருமானம், முதலீடுகள், கடன்கள், இ.எம்.ஐ., குடும்பத்துக்குத் தரவேண்டிய தொகை... எல்லாவற்றையுமே வெளிப்படையாகப் பரஸ்பரம் பேசிக்கொள்வது (transparency), அவர்கள் தொடங்கப்போகும் வாழ்க்கைக்கு நல்ல அடித்தளத்தை அமைக்கும்.
காதல் திருமணம் செய்துகொள்கிறீர்களா? ஒரு நிமிஷம் ப்ளீஸ்...!
காதல் திருமணத்துக்கான எதிர்ப்பு, முந்தைய காலத்தைவிட  விட இப்போது ரொம்பவே குறைந்திருந்தாலும், இன்றும் பல ஜோடிகள் பெற்றோர்களின் எதிர்ப்புக்குப் பயந்து, காவல் நிலையத்தைத் தஞ்சமடைகிறார்கள். இதுபோல, அம்மா, அப்பா ஏற்றுக்கொள்ளாத காதலர்கள் மணம்புரிவதற்கு முன்னர், தங்கள் அன்பின் வலிமையை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். என்ன இடர்ப்பாடு வந்தாலும், அதை எதிர்நோக்கும் மனோதிடமும் இருவருக்கும் ஒரே மாதிரியான உணர்வும் இருக்க வேண்டும். அப்போதுதான், குடும்பத்தாரின் ஆதரவு இன்றித் தொடங்கப்போகும் வாழ்க்கையில் வேறு பிரச்னைகள் இல்லாமல் கொண்டுசெல்ல முடியும். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, சந்தோஷமாக வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அதுதான் அவர்களுக்குப் பெரிய சப்போர்ட்!
காதல் திருமணம் செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் காதல் வேறு, திருமண வாழ்க்கை வேறு என்பதைத்தான்.
காதலிக்கும் காலத்தில், வெறும் 2 மணி நேரம் பார்த்துப் பேசும் ஜோடி, திருமணத்துக்குப் பின் தினமும் பல மணி நேரம் சேர்ந்து வாழ வேண்டும். அப்போது ஒருவரின் 'மைனஸ்'கள் மற்றவருக்குத் தெரியவரும். அடிக்கடி கோபம் வருதலும், மூட் அவுட் ஆகுதலும் அருகில் இருந்து பார்க்கும்போதுதான் தெரியும். அதனால் ஏமாற்றம் அடையக் கூடாது. அந்த மைனஸ்'களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். அய்யோ... லவ் பண்றப்போ அப்படி இருந்தாரே... இப்படிக் கோபமே வரலியே!' என்று எண்ணக் கூடாது. இந்த ஏமாற்றத்தைத் தவிர்க்க, முன்கூட்டியே இருவரின் மைனஸ், ப்ளஸ்களைப் பற்றி சொல்லிவைத்து விடலாம். இதனால் அனாவசிய ஏமாற்றங்களைத் தவிர்க்க முடியும்!
திருமணத்துக்கு முந்தைய காதல் உறவுகளை, காதல் தோல்விகளை வரப் போகும் துணையிடம் பகிர்ந்து கொள்ளலாமா? - என்பதே திருமணம் செய்துகொள்ளப்போகும் அனை வருக்கும் எழும் மில்லியன் டாலர் கேள்வி. 'உங்கள் காதல் அல்லது பள்ளிப் பருவ ஈர்ப்பு (infatuation), மிக ஆழமா னதாக இல்லாமல் இருந்து, உங்கள் துணை நன்கு புரிதல் உள்ளவராக இருந்தால் சொல்லலாம். அதனால், பெரிய பிரச்னைகள் வந்துவிடாது. ஆனால், உங்கள் காதல் மிகவும் ஆழமானதாக, உறவு நெருக்கமானதாக, உணர்வுபூர்வமாக இருந்தது என்றால், சொல்லாமல் இருப்பதே பல பிரச்னை களைத் தவிர்க்கும். அப்படிச் சொல் பவர்கள் அதன் பிறகு ஏற்படும் பின் விளைவுகளுக்குத் தயாராக இருக்க வேண்டும்.
கடைசியில்... ஆனால்,
முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்...
மேலே சொன்ன நான்கு பகுதிகளிலும் வரும் சோதனைகளைக் கடந்து, திருமணமாகி முதல் வருடத்துக்குள், இந்த உறவு அழுத்தமான பந்தமாகி விட்டால், அதன் பிறகு அவர்கள் மணவாழ்க்கையில் என்ன புயல் அடித்தாலும் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியும்; எளிதாகக் கரை சேர்ந்துவிட முடியும். மணமாலை சூடக் காத்திருப்பவர்களுக்கு அத்தியாவசியமான அடிப்படைத் தேவைகள் நான்குதான்.
ஆழமான அன்பு, பரஸ்பர மரியாதை, பரஸ்பர நம்பிக்கை, வெளிப்படையான தகவல் தொடர்பு (open communication). இந்த நான்கு துடுப்புகளும் உங்களிடம் இருந்தால் போதும்... உங்கள் வாழ்க்கைப் படகில், ஜம்மெனப் பயணத்தைத் தொடங்கலாம்!

கணவன் மனைவி உறவில்,இருவருமே கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான நான்கு பகுதிகள் (areas):
1. உணர்வுபூர்வமான பந்தம் (emotional relationship).
2. தாம்பத்ய உறவு (sexual relationship).
3. குடும்பம் சார்ந்த உறவு (family relationship).
4. வேலை, பொருளாதாரம் தொடர்பானவை (financial affairs).

Friday, August 15, 2014

வந்தால் வரட்டும் முதுமை


அன்பு நண்பர்களே!
சென்ற வாரம்  நான் பணி நிமித்தமாக  புகலூர் சென்று விட்டு  கடந்த வெள்ளியன்று  கரூரில் இருந்து  "பழனி- சென்னை "அதி விரைவு ரயில் மூலம் சென்னை வந்தேன். அப்போது என்னுடன் ஒரு  வயதான பெரியவர்   பயணம் செய்தார்.  அவரது வயது எண்பதுக்கு மேல் இருக்கும்.  பேச்சுவாக்கில்  அவர்  தன்னை  வத்தலக்குண்டு   அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள்  தலைமை ஆசிரியர் என்று அறிமுகப் படுத்திக்கொண்டார்.  நல்லாசிரியர் விருது  பெற்றவரும் கூட என்று அறிந்து கொண்டேன்.  வயதான பின்  வரும் உடல் பிரச்சினைகளை விட  மிகக் கொடுமையானது "தனிமை " என்றார்.   தற்காலங்களில்  குடும்பங்கள்  சுருங்கி  வரும் நிலையில் வயதானவர்களை கவனிப்பதற்கோ,அக்கறை காட்டுவதற்கோ   ஏன் பேசுவதற்குக்கூட  ஆட்கள் இருப்பதில்லை  என்று  மிகவும் வருத்தப்பட்டார்.  நாங்கள் இருவரும் வெகுநேரம்   கல்வி , சீரழிவுகள்  போன்ற விஷயங்கள் பற்றி   பேசிக் கொண்டு வந்தோம்.  கற்பிப்பது என்பது "பணி "என்ற நிலை மாறி 'தொழில் " என்று  ஆகிவிட்டது என்று   அவரும் சொன்னார்.(நான் முன்னமே சொல்லியிருக்கிறேன்) .சமீபத்தில் நடந்த ஆசிரியர்  பணி தேர்வுகள் பற்றி  மிகவும் நொந்து கொண்டார். "இவர்களே  அறுபது சதம் மதிப்பெண்கள்  போதும் என்றால்  இவர்கள் படிக்காமல் விட்ட  நாற்பது சதவிகித  பாடங்களை இவர்களது மாணவர்களுக்கு  யார் கற்பிப்பார்கள் "என்று  மிகவும் வருத்தப்பட்டார்.

ரயில் நான்கு மணி சுமாருக்கு   சென்னை வந்தடைந்தது. .அதற்கு முன் அவர் தனது மகனின்  கார் டிரைவர் தன்னை  வந்து அழைத்து  செல்வார் என்று என்னிடம்சொல்லிக்கொண்டிருந்தார்.  ஆனால் டிரைவர் வரவில்லை சற்றே கலவரப்பட்ட  அவரால் அவரது டிரைவரை  மொபைலில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.  நான் எனது மொபைலில்  தொடர்பு கொண்டபோது அவரது டிரைவர்  தூங்கி விட்டது தெரிய வந்தது. .அவரது டிரைவர் வருவதற்கு ஒரு அரை மணி நேரம் ஆகும் என்று அறிந்தேன். வண்டி  சென்ட்ரல்  வந்தடைந்ததும்  நான் பெரியவரை இறங்கச்சொல்லி விட்டு  அவரது பொருட்களையும் இறக்கிக் கொடுத்து விட்டு  அவருடன் துணைக்கு  நின்று  கொண்டிருந்தேன். 
"நீங்கள் வீட்டுக்கு புறப்படுங்கள் தம்பி .இங்கேதான்  கூட்டம்  இருக்கின்றதே . நான் பார்த்துக்கொள்கிறேன் " என்றார் பெரியவர்.
"பரவாயில்லை அய்யா. நான் வீட்டிற்கு நாலு மணிக்கே சென்று ஒன்றும் பெரிதாக செய்யப்போவதில்லை. உங்கள் டிரைவர் வரும்வரை நான் உங்களுக்கு துணையாக  நிற்பதில் எனக்கு  சிரமம் ஒன்றுமில்லை " என்றேன்.  பிறகு  மேலும்  ஒரு  அரை மணிநேரம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.  அதற்குள் அவரது டிரைவரும் வந்து விட்டார். நான் அவருடன் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டேன்.  அப்போது பெரியவர் என் இரண்டு கைகளையும்  தன் இரண்டு கைகளால் பிடித்துக்கொண்டு "தம்பி ! உங்களுக்கு  உங்கள் நேரம்  சாதாரணமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் என்னுடன் எனக்காக செலவிட்ட  இந்த அரைமணிநேரம் என்னைப் பொறுத்த வரையில்  ஒரு பொன்னான நேரம் " என்றார். .அவர் அப்படி சொன்னது எனக்கு மிகவும் சங்கடமாகவும் கூச்சமாகவும் இருந்தது. "ஒரு நல்லாசிரியருக்கு  என் நேரத்தை  செலவு  செய்தது என் பாக்கியம்." என்று சொல்லி விட்டு  நான் வீடு செல்ல திரும்பினேன். ஆனால் அவரது  குரலில் இருந்த ஏக்கம் என்னை  பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. அதன் தாக்கம்  மேலும்சில நாட்களுக்கு  தொடர்ந்தது. "உனக்கும்  இதே நிலை வரும் " என்று  மனம் வேறு பயமுறுத்திக் கொண்டிருந்தது. இரண்டு நாள் முன்னர்  மாலையில்  அலுவலகம் முடிந்து  வீடு திரும்பி தொலைகாட்சி  சானல்களை  ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்த போது  முரசுவில்  "வெள்ளி விழா " திரைப்படம்  ஓடிக்கொண்டிருந்தது. நான்பார்க்கும் சமயத்தில்  "உனக்கென்ன குறைச்சல் " பாடல் ஓடிக்கொண்டிருந்தது. ஜெமினி கணேசன் தன்  பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு  விரக்தியில் பாடும் பாடல் அது. மெல்லிசை மன்னர்  பாடுவார். வாலி எழுத்து. குமார் இசை. மிக மிக அருமையான,பொருள் பொதிந்த  பாடல் அது.
"உனக்கென்ன குறைச்சல்  ! நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை  ..வந்தா,,,, ல்  வரட்டும் முதுமை
தனக்குத் தானே துணை என நினைத்தால் உலகத்தில்  ஏது  தனிமை.
 என்று பாடுவார்.
அடுத்து வரும் வரிகள் விரக்தியின்  உச்சம்  என்று சொன்னால் மிகை யாகாது.
"கடந்த காலமோ  திரும்புவதில்லை
நிகழ்  காலமோ விரும்புவதில்லை
எதிர் காலமோ அரும்புவதில்லை
இது தானே அறுபதின் நிலை "
வாலி, அந்தப் பாட்டிலேயே இந்தத் தனிமைக்கு ஒரு விடையும் சொல்கிறார்.
"எதையோ தேடும் இதயம்
அதற்கு எண்ணம் தானே பாலம்
அந்த நினைவே இன்று போதும்
உன் தனிமை யாவும் தீரும் "
என்ற முடிப்பார்.
அந்தப் படத்தில் அதற்குப்பின்  இளம் வயதிலேயே  மனைவியை இழந்த ஜெமினி, தன்  தோழியான வாணிஸ்ரீ யை  சிங்கப்பூரிலிருந்து  சென்னைக்கு அழைத்து வருவார்.  அதன் பின் அவரது பிள்ளைகள்  வாணிஸ்ரீயை  மனத்தால்  மிகவும்  துன்புறுத்துவார்கள். அந்தக் காட்சிகள்  மிக உணர்சிகரமாக இருக்கும்.  அன்றைக்கு  நான் இருந்த மனநிலையில்   மேற்கொண்டு அந்தப் படத்தைப் பார்க்க திராணி இல்லாமல்  தொலைகாட்சியை  அணைத்துவிட்டேன்.
"தனிமைக்கு நினைவுகளில் வாழ்வதுதான்  விடையா " என்று எனக்கு  நானே கேள்வி கேட்டுக்கொண்டு அப்படியே  உறங்கி விட்டேன்.
மறுநாள் காலையில், ஹிந்து பத்திரிக்கையில்  "அழகம்மாள் " என்னும்  ஒரு பெண்மணி பற்றி ஒரு செய்தி வந்துள்ளது. அந்தப் பெண்மணிக்கு  வயது  கிட்டத்தட்ட நூறு  என்று  சொல்லபடுகிறது. அவர் பிள்ளையார் பட்டியில்  கோவில் அருகிலேயே  வாழ்ந்து வருகிறார். .அவரது சொந்த  ஊர் குன்றக்குடியாகும். அவருக்கு  வாழ்வில் துணை என்று யாரும்  கிடையாது.  அவர் தனது வாழ்வில் பெரும் பகுதியை  தனிமையிலே  கழித்து விட்டார்.  சிறு வயதிலேயே  அவரது பெற்றோர்  மறைந்து விட்டனர்.  அவரது கணவன் இன்னொரு பெண்ணுடன் ஓடி விட்டான். அவனும் பிறகு  இறந்து விட்டான். . அந்தப் பெண்மணி  தனது தாய் மாமனுக்கு இரண்டாம் தாரமாக  வாழ்க்கைப் பட்டுள்ளார்.  அவரும் இறந்து விட்டார். இந்தப் பெண்மணிக்கு இரண்டு மகள்களும் , இரண்டு  மகன்களும் இருந்திருக்கிறார்கள் . அவர்களும் இறந்துவிட்டார்கள். அவருக்கு எம்ஜியாரை கூடத் தெரியவில்லையாம். ரயிலையே  பார்த்ததில்லையாம். இன்றளவும்  அவர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரும் பிரசாதம்  மற்றும் பழங்களைமட்டுமே உண்டு  வாழ்ந்து  வருகிறார். யாராவது  அந்த பாட்டியை   தம்முடன் வருமாறு அழைத்தால் "கணேசன்  பார்த்துப்பான் " (பிள்ளையாரை சொல்கிறார்)  என்று வர மறுத்துவிடுவாராம்.இதில்  என்ன ஆச்சரியம் என்றால் அவருக்கு இது வரை ஒரு  சிறு காய்ச்சல் தலைவலி   கூட  வந்ததே  கிடையாதாம். நிஜமாகவே கணேசன் அந்தப் பாட்டியை  பார்த்துக்கொள்கிறான் என்றே தோன்றுகிறது.
என் மனதில் கேள்வி எழுந்த நேரமும் , அதற்கு  மறைமுகமாக  கிடைத்த பதிலும்  இதுதான் - " தனிமையை  பக்தியால் மற்றும், நம்பிக்கையால்  வெல்ல முடியும். நாயன்மார்கள் , ஆழ்வார்கள் பற்றிப் படித்திருக்கிறோம்.  தற்போது ஏன்  அதே போல நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றவில்லை  என்று எனக்கு நானே கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறேன். இந்தப் பெண்மணியைப் பார்த்தும்  நாயன்மார்களும் ஆழ்வார்களும் இன்னும் இருக்கின்றார்கள் என்றே எனக்குத்  தோன்றுகிறது..படிப்பறிவில்லாத  அந்தப் பாட்டியின் பக்தியும்  நம்பிக்கையும்  எனக்குள் இருக்கும் ஆணவத்தை அழிப்பது போல உணர்கின்றேன்.
என்  பிள்ளைகளிடம் நேற்று  இந்த பாட்டி  பற்றி சொல்லி "அடுத்தமுறை  நாம் பிள்ளையார் பட்டி செல்லும் போது அந்தப்  பாட்டியைப்   பார்த்து அவரது பாதங்களை   தொட்டு வணங்க வேண்டும்" என்று சொன்னேன். அவர்களும் மகிழ்ச்சியுடன்  "போகலாம் அப்பா "  என்றார்கள். என் மனம் நிறைவடைந்தது.
ராமகிருஷ்ணன்
மயிலாப்பூர்

Wednesday, August 13, 2014

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்

01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03. கோபப்படக்கூடாது.

04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
05. பலர் முன் திட்டக்கூடாது.
06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

Sunday, August 10, 2014

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது என்பது பொருட்களை வாங்குவதுபோல அல்ல. ஏனெனில், இது உங்களின் தேவை, பட்ஜெட் ஆகியவற்றைப் பொறுத்து அமையும். ஒரு குடும்பம் எடுக்கும் பாலிசி இன்னொரு குடும்பத்துக்குப் பொருந்தாது. எனவே, ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் முன் அதன் சாதக, பாதகம் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. மேலும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதற்கு முன் கீழ்க்கண்ட கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்வது அவசியம்.

1 பாலிசியின் கவரேஜ் தொகை போதுமானதா?

உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் வேலை பார்க்கும் நிறுவனத்தில் குரூப் ஹெல்த் இன்ஷூரனஸ் பாலிசி எடுத்திருந்தாலும், குடும்பத்துக்கு தனியாக ஒரு ஹெல்த் பாலிசி எடுப்பது அவசியம். ஏனெனில், நிறுவனத்தில் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசி யின் கவரேஜ் தொகை உங்களுக்குப் போதுமானதாக இருக்க வாய்ப்புக் குறைவு. எனவே, தனியாக ஒரு டாப்அப் பாலிசி எடுத்துக் கொள்ளலாம்.

குடும்பத்துக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது யோசித்துப் பார்க்க வேண்டும். அதாவது, தனிநபர் பாலிசி எடுக்கப்போகிறீர்களா, ஃப்ளோட்டர் பாலிசி எடுக்கப் போகிறீர் களா என்பதைக் கவனிக்க வேண்டும். தனிநபர் பாலிசி பிரீமியத்துடன் ஒப்பிடும்போது ஃப்ளோட்டர் பாலிசியின் பிரீமியம் குறைவாக இருக்கும். பிரீமியம் குறைவாக இருக்கும் பாலிசியைத் தேர்ந்தெடுக்கும்போது கவரேஜ் போனமானதாக இருக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்.

குடும்பத்தில் மூத்த குடிமக்கள் இருக்கும்போது அவர்களுக்குத் தனியாக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது நல்லது. பொதுவாக, ஃப்ளோட்டர் பாலிசியில் கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்குத்தான் கவரேஜ் கிடைக்கும். ஆனால், சில நிறுவனங்கள் பெற்றோர்களுக்கும் கவரேஜ் கிடைக்கும் வகையில் ஃப்ளோட்டர் பாலிசியை வடிவமைத்துள்ளன.

கவரேஜ் என்கிறபோது நீங்கள் குடியிருக்கும் நகரத்தின் மருத்துவச் செலவை கவனத்தில் கொள்வது அவசியம். நீங்கள் எடுக்கும் பாலிசி கவரேஜ் தொகை மற்றும் நோ க்ளைம் போனஸ் மூலம் கிடைக்கும் கூடுதல் கவரேஜ் ஆகிய இரண்டும் சேர்த்து மருத்துவச் செலவுகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்குப் போதுமானதாக இருக்க வேண்டும்.

2எதற்கு க்ளைம் கிடைக்கும், கிடைக்காது?

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, எந்தெந்த வியாதிகளுக்கு க்ளைம் கிடைக்கும், எந்தெந்த வியாதிகளுக்கு கிடைக்காது என்பதைத்தான். ஏனெனில், பாலிசிக்கு எவ்வளவு பிரீமியம் செலுத்துகிறீர்கள் என்பதைவிட எதற்கெல்லாம் க்ளைம் கிடைக்காது என்பதைத்ததான் கவனிக்க வேண்டும்.

ஹெல்த் பாலிசி எடுக்கும்போது, இதுவரை உங்களின் உடல்நலம் குறித்த கணிப்பு தவறாகப் போவதற்கான வாய்ப்பு அதிகம். அதாவது, இதுவரை எனக்கும், எனது குடும்பத்துக்கும் எந்தவிதமான வியாதியும் வந்ததில்லை. எனவே, நான் குறைவான அளவு கவரேஜ் கொண்ட பாலிசியை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறுவது தவறு. வயதாகும்போது வியாதி வருவதற்கு வாய்ப்பு அதிகம்.

தேவைகளின் அடிப்படையில் பாலிசியைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அதாவது, நீங்கள் தீவிர நோய் பாதிப்பு, விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது மற்றும் பொதுவான மருத்துவச் செலவை சமாளிப்பது என எதற்காக பாலிசி எடுக்கிறீர்கள் என்பதை முன்கூட்டியே முடிவு செய்துகொள்வது நல்லது.

ஹெல்த இன்ஷூரன்ஸ் பாலிசியில் சில நோய்களுக்கு நிரந்தரமாகவும், சிலவற்றில் குறிப்பிட்ட காலத்துக்கும் க்ளைம் செய்ய முடியாது. விண்ணப்ப படிவத்தை கவனமாகப் படித்து இதைத் தெரிந்துகொள்ளலாம்.

3.பிரீமியத்தைப் பாருங்கள்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்முன், நீங்கள் செலுத்தும் பிரீமியத்துக்குத் தரும் மொத்த கவரேஜ் தொகையை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். சரியான பிரீமியத்தில் விரிவான கவரேஜ் கிடைக்கும் வகையில் பாலிசி இருக்க வேண்டும்.

நீங்கள் எடுக்கும் பாலிசியில் உள்ள அம்சங்களின் அடிப்படையில் மற்ற நிறுவனங்களின் பாலிசியுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பிரீமியத்தை மட்டும் ஒப்பிடக்கூடாது. மேலும், இப்படி ஒப்பிடும்போது, கோபேமென்ட் (மருத்துவச் செலவில் நாம் கட்ட வேண்டிய சதவிகிதம்) எத்தனை சதவிகிதம் செலுத்த வேண்டும் என்பதையும் சேர்த்துதான் பார்க்க வேண்டும்.

4.மருத்துவமனை நெட்வொர்க்கை கவனியுங்கள்!

இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க் பட்டியலில் உங்கள் பகுதியில் உள்ள சிறந்த மருத்துவமனைகள் உள்ளனவா என்பதைக் கவனிக்க வேண்டும். நெட்வொர்க் மருத்துவமனைகள் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். அவசர தேவை ஏற்படும்போது விரைவாக மருத்துவமனைக்குச் செல்வதற்கு இது வசதியாக இருக்கும். கேஷ்லெஸ் வசதி உள்ளதா என்பதை முக்கியமாகப் பார்க்க வேண்டும்.

5. பாலிசி புதுப்பிப்பு, நிபந்தனைகளைப் புரிந்துகொள்ளவும்..!

பாலிசியைத் தொடர்ந்து புதுப்பிக்கும்போது, சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நோய்களுக்கான காத்திருப்புக் காலம் என்பது குறைவாக இருக்கும். பாலிசியில் க்ளைம் எதுவும் செய்யவில்லை எனில் நோ க்ளைம் போனஸ் கிடைக்கும்.

அடுத்து, பாலிசியின் நிபந்தனைகளை நன்றாகப் படித்து புரிந்துகொள்வது நல்லது. பாலிசியில் ஏதாவது புரியவில்லை எனில், அதுகுறித்த சந்தேகத்தை ஏஜென்ட் அல்லது இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் கேட்டு தெரிந்துகொள்வது கட்டாயம். பாலிசியில் கையெழுத்துப் போடுவதற்குமுன் இதைச் செய்வது நல்லது.

Thursday, August 7, 2014

போலித் துறவிகளின் பண்புகள், அடையாளங்கள் என்ன?

போலியாக தவவேடமிட்டு, மக்களை ஏமாற்றுபவர்கள் இந்த பூமிக்கே அவமானச் சின்னங்கள் என்று திருமூலர் வன்மையாகக் கண்டித்தார். உண்மையான துறவிகளின் அடையாளங்கள், பண்புகள் என்ன? போலித் துறவிகளின் பண்புகள், அடையாளங்கள் என்ன? சில திருமந்திரப் பாடல்களைக் காணலாம்.


""ஞானம் இலார் வேடம் பூண்டும் நரகத்தார்

ஞானம் உள்ளார் வேடம் இன்று எனினும் நன்முத்தர்

ஞான் உளதாக வேண்டுவோர் நக்கன்பால்

ஞானம் உளவேடம் நண்ணி நிற்போரே''

-திருமந்திரம் பாடல் எண்: 1652.

உண்மையான "ஞானமே' துறவின் சிறப்பு அம்சம். சிவஞானம் (மெய்ஞானம்) கைவரப் பெற்றவர்களே துறவறத்திற்குத் தகுதி உடையவர்கள். கடுமையான தவம், தந்திரயோகப் பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் மெய்ஞானத்தை உணர்ந்த பின்னரே துறவு வேடம் தரிக்க வேண்டும். உண்மையான ஞானநிலையை அடைந்தவர்களுக்கு எந்த வேடமும் தேவையில்லை என்பதையே இந்தப் பாடல் வலியுறுத்துகிறது.


"ஞானம் இல்லார் வேடம் பூண்டும் நரகத்தார்' 

உண்மையான மெய்ஞானம் இல்லாத வர்கள் துறவிகளுக்குரிய வேடங்களை அணிந்து கொண்டாலும் அவர்களால் வீடுபேற்றினை அடைய முடியாது. அவர் களுக்கு விதிக்கப்பட்டது நரகமே!

""ஞானம் உள்ளார் வேடம் இன்று எனினும் நன்முத்தர்''

சிவஞானத்தை உணர்ந்தவர்கள் எத்தகைய துறவு வேடத்தையும் அணியவில்லை எனினும், அவர்களே உண்மையான துறவிகள். அவர்களுக்கே வீடுபேறு எனும் பெரும் பாக்கியம் கிடைக்கும். (நன்முத்தர்).

""ஞானம் உளதாக வேண்டுவோர் நக்கன்பால்

ஞானம் உளவேடம் நண்ணி நிற்போரே''

தனக்கு உண்மையான சிவஞானம் சித்திக்க வேண்டும் என்று நினைக்கும் துறவிகள் சிவனையே தனது சிந்தனையில் நிறுத்தி அவனே கதியெனக் கிடப்பர். புறவேடங்கள் எதுவும் அவர்களிடம் இருந்தாலும் அவர் களது உள்ளம் உண்மையான துறவு நிலையில் இருக்கும்.

சிவனுக்குரிய பல பெயர்களில் ஒன்று "தக்கன்' என்பது. அதுவே இப்பாடலில் "நக்கன்' எனக் குறிப்பிடப்படுகிறது.

ஆக, துறவு என்பது காவி உடை, கமண்டலம் போன்ற வெளிஅடையாளங்களில் (வேடங்களில்) இல்லை. துறவு நிலை என்பது மனம், எண்ணம் சார்ந்த நிலை. ஞானத் தின் பயனாக மனம் பற்றற்ற நிலையை அடைவதே உண்மையான துறவிக்கு அடையாளம்.

"புன்ஞானத்தோர் வேடம் பூண்டும் பயனில்லை

நன்ஞானத்தோர் வேடம் பூணார் அருள்நண்ணித்

துன்ஞானத்தோர் சமயத் துரிசு உள்ளோர்

பின்ஞானத்தோர் என்றும் பேச கில்லாரே''

-திருமந்திரம் பாடல் எண்: 1653.

இதற்கு முந்தைய பாடலின் கருத்தே இப்பாடலிலும் ஏறக்குறைய வலியுறுத்தப்படுகிறது.

""புன்ஞானத்தார் வேடம் பூண்டும் பயனில்லை''

உண்மையான ஞானம் இல்லாத மூடர்கள் (புன்ஞானத்தார்) தவவேடம் பூணுவதால் எந்தப் பயனும் இல்லை.

""நன்ஞானத்தோர் வேடம் பூணார் அருள் நண்ணித்''

உண்மையான சிவஞானம் பெற்றவர்களே நன்ஞானத் தார். இவர்கள் இறைவனது அருளை வேண்டி, அவனையே விரும்பி (நண்ணி) அவனிடத்தில் சரணாகதி அடைந்துவிடுவர். இவர்கள் எந்த வேடமும் பூணும் அவசியம் இல்லை.

""துன்ஞானத்தோர் சமயத்துரிசு உள்ளோர்''

"துரிசு' என்ற சொல்லுக்கு அழுக்கு, அழுக்காறு, பொறாமை என்ற அர்த்தங்கள் உள்ளது. பிற சமயங்களின் மீதும் பொறாமையும், கசப்பும் உள்ளவர்கள் ஞானமுடையவர்களாக இருந்தாலும் அது தீய ஞானம். எனவே அவர்களும் தீயவர்களே (துன்ஞானத்தோர்).

""பின்ஞானத்தோர் என்றும் பேச இல்லாரே''

உண்மையான ஞானிகள் இத்தகையே துன்ஞானத்தாரோடு வாக்கு வாதங்களில் ஈடுபட மாட்டார்கள் (பேச இல்லாரே). திருமூலர் வாழ்ந்த கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சைவமும், வைணவமும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டிருந்தன.

சைவம் பெரியதா, வைணவம் பெரியதா என்ற சர்ச்சைகளும், வாக்கு வாதங்களும், தர்க்கங்களும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், "பிற சமயங்களின்மேல் வெறுப்பு உள்ளவர்கள் துன்ஞானத் தோர்- உண்மையான ஞானம் பெற்ற வர்கள் இவர்களோடு தர்க்கங்களிலும் வாக்குவாதங்களிலும் ஈடுபட மாட்டார்கள் என்று ஒரே போடாகப் போட்டு விட்டார் திருமூலர்.

இதுவே சித்தர்களை பிற துறவி களிடமிருந்தும், சமயக் குரவர்களிட மிருந்தும் வேறுபடுத்திக் காட்டும் ஒரு முக்கியமான பண்பு. சித்தம் தெளிந்து சித்தர் நிலையை அடைந்தவர்களிடம் பேச்சு இராது. ஆரவாரங்களோ, ஆர்ப்பரிப்புகளோ இராது. உடலில் உயிர் இருந்தாலும் அவர்கள் "செத்த சவம்போல்' எதிலும் பற்றின்றித் திரிவர்! இறைவனது திருவடிகள் மட்டுமே அவர்கள் மனதை நிறைத்திருக்கும். வேறு எதற்கும் அங்கு இடமிராது. இந்த கருத்தை விளக்கும் ஒரு திருமந்திரம் பாடலைக் காணலாம்.

""கத்தித் திரிவர் கழுவடி நாய் போல்

கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்

ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே

செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே''

-திருமந்திரம் பாடல் எண்: 1655.

மிகக் கொடிய பாதகச் செயலைச் செய்தவர்களைத் தூக்கிலிடுவது இன்றும் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு தூக்கிலிட்டுக் கொல்லுவதையே "கழுவேற்றுதல்' என்று அக்காலத்தில் அழைத்தார்கள். தூக்குமரம்- கழுமரம்- இதையே கழுவடி என்கிறார் திருமூலர்.

சாதாரணமாக இறந்தவர்களுக்கு சமயச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்ட வர்களுக்கு இது கிடையாது. தூக்கிலிடப்பட்ட உடல் நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும். தமிழகத்தில் மட்டுமின்றி, கிரேக்க, ரோமானிய நாகரீகங்களிலும் தொன்று தொட்டு இதுவே வழக்கமாக இருந்திருக்கிறது.

"கத்தித்திரிவர் கழுவடி நாய் போல்'

ஒரு மனிதனை கழுவில் ஏற்றத் தயாராகும் போதே, எப்போது நமக்கு உணவு கிடைக்கும் என்ற தவிப்பில் நாய்கள் அந்த கழுமரத்தைச் ஊளையிட்டுக் கொண்டே சுற்றி வருமாம். அவற்றின் இலக்கு- உணவு.

அதுபோலவே போலித் துறவிகளும் "பணம்' ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஆரவாரமான பேச்சுகளும் பிரசங்கங்கள் என்று கத்தித் திரிவார்களாம்.

அடுத்ததாக இந்த போலி வேடதாரித் துறவிகளை தெருவில் குரளி வித்தை காட்டு பவனுக்கு ஒப்பிடுகிறார் திருமூலர். குரளி வித்தை காட்டுபவன் தனது பேச்சு சாமர்த்தியத்தால் கூட்டத்தில் இருப்பவர்களைத் தன்வசப் படுத்திவிடுவான்.

தனது பேச்சுத் திறமையால் பல கண்கட்டி வித்தைகளைச் செய்து காட்டி கூட்டத்தினரை மகிழ்விப்பான். ஆனால் அவனது உண்மையான நோக்கம் கூட்டத்தில் இருப்பவர்களின் கைகளில் இருக்கும் பொருளை கொத்திக் கொள்வதே!

அதுபோலவே இந்த போலித் துறவிகளும் பேச்சு, கண்கட்டு வித்தைகள் என பலவற்றைச் செய்து பெருங்கூட்டத்தை தம்மிடம் ஈர்த்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களது உண்மையான நோக்கம் பிறரிடம் உள்ள பொருளையும், பணத்தையும் தனதாக்கிக் கொள்வதே! இதையே "கொத்தித் திரிவது' என்கிறார் திருமூலர்.

"கொத்தித் திரிவர்' என்ற சொற்களிலும் ஒரு நுட்பமான சூட்சுமம் உள்ளது. நம் கையிலுள்ள பொருளை ஒருவன் நேராக வந்து பறித்துக் கொள்ள முயற்சிக்கும்போது நாம் எதிர்த்து போராட முடியும். திறமையிருந்தால் நமது பொருளை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

பருந்து, காக்கை போன்றவையே கொத்திச் செல்லும். நமது தலைக்குமேல் பறந்து கொண்டிருக்கும் இவற்றை நம்மால் கவனிக்க முடியாது. நாம் சற்றே ஏமாந்த வேளையில் இவை சரேரென வந்து நம் கையில் உள்ளதைக் கொத்திக் கொண்டு பறந்துவிடும்.

போலித் துறவிகளும் தாங்கள் சராசரி மனிதர்களைவிட உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் (மேலே பறக்கும் பருந்துபோல) என்ற மாயத் தோற்றத்தை தங்களது பேச்சாலும், ஆரவாரங் களாலும், வேடங்களாலும் உருவாக்கி விடுகிறார் கள். நாம் அசந்து நிற்கும் வேளையில் "கொத்திச்' சென்று விடுகிறார்கள்.

பிடுங்கித் திரிவர் அல்லது களவாடுவர் என்ற சொற்களைப் பயன்படுத்தாது "கொத்தித் திரிவர்' என்ற சொற்களை திருமூலர் பயன்படுத்தி யிருப்பதன் சூட்சுமம் இதுதான்.

""ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே

செத்துத் திரிவர் சிவஞானியோர்களே''

உடலில் உயிர் இருக்கும். உடல் இயங்கிக் கொண்டிருக்கும். ஐம்புலன்களும் (பொறிகள்) வேலை செய்யும். ஆனாலும் உண்மையான சிவஞான நிலையை அடைந்த சித்தர்களும், துறவிகளும் செத்த பிணம்போலவே திரிந்து கொண்டிருப்பர் என்பதே இந்த இறுதி இரு அடிகளின் பொருளாகும்.

உயிர் இருந்தும் இல்லாததுபோல் எவ்வித உலக நாட்டமும் இன்றி, "சித்தன் போக்கு சிவன் போக்கு' என்று திரிவதே உண்மையான துறவிக்கு அடையாளம். அனைத்தையும் துறந்த- கடந்த இந்த நிலை ஒருவித "ஜீவசமாதி' நிலையாகும்.

""மயல் அற்று இருள்அற்று மாமனம் அற்றுக்

கயல் உற்ற கண்ணியர் கைப்பிணக்கு அற்று 

தயல் உற்றவரோடும் தாமே தாமாகிச்

செயல் அற்று இருப்பார் சிவ வேடத்தாரே'

-திருமந்திரம் பாடல் எண்: 1662.

"மெய்யான சிவஞானிகள் செயல் அற்று இருப்பர்' என்பதையே இந்தப் பாடலும் கூறு கிறது. ஒவ்வொரு அடியாகப் பொருள் காணலாம்.

"மயல் அற்று இருள் அற்று மாமனம் அற்றுக்'

"மயல்' என்பது மன மயக்கங்களைக் குறிக் கிறது. உண்மையான ஞானம் பெற்ற சிவனடி யாராகிய துறவிகளிடம் "மன மயக்கம்' என்பது அறவே இராது. உலக இச்சைகளிலும் ஆசா பாசங்களிலும் மனம் செல்லாது. தெளிந்த நீரோடை போன்ற மனநிலை இருக்கும்.

இறைவன் ஜோதி வடிவானவன். இறைவன் ஜோதி வடிவாக உடலினுள் குடிகொள்ளும் போதுதான் உண்மையான ஞானம் உருவாகும். இந்த ஜோதி உள்ளே இருப்பதால் உண்மையான துறவிகள் மனதில் இருள் என்பதே இராது. இதையே "இருள் அற்று' என்கிறார் திருமூலர். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல, அக இருள் அகலும்போது, முகமும், உடலும் பிரகாசமாகும். இதையே "தேஜஸ்' என்கிறோம். உண்மை யான துறவிகளிடம் இதைக் காணலாம்.

மனம் என்பதற்கும் மேலானது நமது "தான்' எனும் அகங்காரம். இதையே ஈகோ என்று ஆங்கிலத்தில் அழைக்கிறோம். இந்த அகங்காரமே ஞானப் பாதையின் மிகப் பெரிய தடைக்கல், மெய்ஞானம் அடைந்த ஞானிகளிடமும், துறவிகளிடமும் இந்த "மாமனம்' எனும் அகங்காரம் அழிந்து போகும்.

"கயல் உற்ற கண்ணியர் கைப்பிணக்கு அற்று'

மீன் போன்ற கண்களையுடைய பெண்களின் கைகளைத் தழுவி, அவரோடு உறவு கொள்ளும் செயலும் உண்மைத் துறவு நிலையில் அறுந்து போகும். துறவுக்கான முக்கியமான இலக்கணங்களில் இதுவும் ஒன்று. இந்த விஷயத்தில்தான் இன்று பல போலித் துறவிகள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்.

"தயல் உற்றவரோடும் தாமே தாமாகிச்'

"தையல்' என்பது பெண் என்பதைக் குறிக்கும். "தையல்' என்பதே இங்கு "தயல்' என்றாயிற்று. "தையல் உற்றவர்' என்றால் உமையை தனது உடலின் சரிபாகமாகக் கொண்ட சிவன்- உமையொரு பாகன்- அர்த்த நாரீஸ்வரன். உண்மைத் துறவிகள் "நான் என்ற அகங்காரம் அழிந்த நிலையில் சிவனோடு ஒன்றாகிவிடுவர். (தாமே தாமாகி). தான் வேறு; சிவன் வேறு என்றில்லாத இறை நிலையை அடைந்தவர்களே உண்மையான துறவிகள்.

"செயல் அற்று இருப்பார் சிவ வேடத்தாரே'

இறைவனோடு ஒன்றிய நிலையில் இருப்பவர்கள் செயல் அற்ற நிலைக்கு வந்து விடுவார்கள். ஆரவாரங்களோ, ஆர்ப்பாட்டங்களோ, பிரசங்கங்களோ இராது.

செயல் அற்று இருப்பது என்பது சும்மா சோம்பியிருப்பது அல்ல. "எல்லாம் அவன் செயல், ஆட்டுவிப்பவன் அவன்- இயங்குவது நான்' என்ற நிலை. எல்லையற்ற ஆனந்த நிலை! இதுவே உண்மைத் துறவியின் அடையாளம்!