Saturday, October 22, 2016

கேரிபேக் தவிர்ப்போம்!



கேரிபேக் தவிர்ப்போம்!"

நினைவில் ஓர் ஓரமாய் இருந்தாலும்..இன்னமும் அலட்சியம்தான் நமக்கு வெள்ளம் வடியாமலிருந்த தலையாய காரணங்களில் ஒன்றென தெரிந்தாலுமே..!!

யோசித்து பார்ப்போம்...! 

இரண்டு ரூபாய்க்கு ஒரு வாழைப்பழம் வாங்கினால்கூட நாம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் ஒரு 'கேரிபேக்' என்னும் பாலிதீன்பை மக்காத குப்பையையும் சேர்த்து வீட்டுக்கு வாங்கிவந்து விடுகிறோம். வீட்டை சுற்றி, ஊரை சுற்றி, ..

சிறிய வயதில், இருந்த பொழுது, எண்ணை வாங்க கடைக்கும், இருமல்மருந்து வாங்க மருத்துவமனைக்கும் பாட்டில் எடுத்து சென்றவர்களை ஞாபகமிருக்கிறது.. நீங்களோ, அல்லது உங்களின் முன்னோர்களே அப்படித்தான். ஆனால் இன்று எண்ணை போன்ற திரவ பொருட்கள் மட்டுமல்லாமல் அனைத்து நுகர் பொருட்களும் பாலிதீன் பைகளால் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. டீ கடைகளில் டீ கப் பிளாஸ்டிக்கும் சுற்றுச் சூழலுக்கு ஒரு சவாலாக இருக்கிறது. இன்னும் நவீனமாக இப்போதெல்லாம் கேரிபேக்கில் சுடச்சுட டீ பார்சல் செய்து தருகிறார்கள்!. விளைவு... மண்ணில் மக்காத குப்பைகளாக பரவிக்கிடக்கின்றன. மரம், செடி, கொடிகளின் வேர்களுக்க நீர் செல்வதற்கு ஒரு தடையாக இருக்கிறது. 

பொதுவாக 18 மைக்ரானுக்கு குறைவான பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி செய்ய முடியாது ஒரு கேரிபேக் மண்ணில் மக்கிப்போக 400 ஆண்டுகளாகும் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

நம் வீட்டை சுற்றி கிடக்கும் இந்த பைகளில் மழை நீர் தேங்கி, தேங்கிய நீரில், கொசு முட்டை இட்டு இனப்பெருக்கம் ஏற்படுகிறது. சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, கொசு உற்பத்தியாகி சுகாதார கேடும் ஏற்படுகிறது. ஆடு, மாடுகள் இந்த பாலிதீன் பைகளை உண்பதால், அதன் பாலில் கெமிக்கல் கலந்திருக்கிறது. அந்தப் பாலைத்தான் நாமும் குடித்துக் கொண்டு இருக்கிறோம். உச்சகட்ட கொடுமையாக தாய்ப்பாலிலும் இந்த கெமிக்கல் இருக்கிறது என்பது நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது.

வீட்டை சுற்றி, ஊரை சுற்றி, ...ஏன் நம்மை சுற்றி தினந்தோறும் வெறுப்பாகவும் அதில் நம் பங்களிப்பு இல்லை என்பது போலவும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்!

நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் பிஸ்பினால்-ஏ (Bisphenol -A) என்ற கெமிக்கல் இருக்கிறது. இதை அதிக அளவில் பயன்படுத்தும்போது ஆண், பெண் இருவருக்கும் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. அதனால்தான் இன்று எங்கு பார்த்தாலும் செயற்கை வழி கர்ப்பங்கள் பெருகி வருகின்றன. 

அதுமட்டுமல்ல, 10, 11 வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்படைந்து விடுகிறார்கள். கேன்சர், ஒபிஸிட்டி, தைராய்டு கோளாறு என பல நோய்களுக்கும் வாசல்படியாக இருக்கிறது.

இந்த கேரிபேக்கை பயன் படுத்துவதற்கு மாநில அளவில் எடுத்துக்கொண்டால், ஒரு சில மாவட்ட நிர்வாகங்கள் மட்டுமே தடை விதித்துள்ளன. அதுவும் பயன் படுத்துவதற்கு மட்டும் தான். தயாரிப்புக்கு ஏன் தடை விதிக்க மாட்டேன் என்கிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது!. இருக்கட்டும்..

கவர்ன்மென்ட் விழிப்படைந்து தடை விதிப்பதற்குள்... ஆயிரக்கணக்கான நோயும், பிரச்சனையும் பரவியிருக்கும்..! அரசை விடுங கள் நாம் நமக்காக செய்வோமே..!! வெளியில் செல்கையில், ப்ளான் பண்ணுகிறீர்களோ இல்லையோ. எப்போதும் வெளியில் சென்றாலும், .கைவசம், கட்டைபையோ, துணிப்பையோ இருக்கட்டும். மறந்துவிட்டீர்களா? தள்ளிப்போடுங்கள். நாளை வாங்கலாமென..ஒருபோதும் சோம்பலுக்கு அடிமையாகி கடைக்காரர் தரும் ப்ளாஸ்டிக் பையில் வாங்கி வரவேண்டாம்.! இது கூட ஒரு வகையில்.. உறுதிமொழிதான்..நாட்டை, நம்மை, சுற்றுப்புறசூழலை, நம் சந்ததியை..வாழவைக்க..

ப்ளாஸ்டிக் அரக்கன் நம்மை விழுங்குவதற்குள். கை கோர்ப்போம்.. போர் தொடுப்போம்..

நாமே நமக்கு தடை விதித்து கொள்வோமே..!

அந்த கேரிபேக் என்னும் குப்பையை தவிர்த்து, நாம் கொண்டு செல்லும் துணி பையில் பொருள்களை வாங்கி வருவோம்!. பிளாஸ்டிக் டீ கப்பையும் தவிர்ப்போம். இந்த பூமியின் இயற்கை வளத்தை பேணிக்காப்பதில் நாமும் சிறிது பொறுப்பேற்றிருக்கிறோம் என்ற ஆத்ம திருப்தியில் எதிர் வரும் நம் சந்ததிக்கு சுத்தமான காற்றை விட்டுசெல்வோம்..!!