Sunday, October 16, 2016

திறமையை திருட முடியுமா?

ள்ளியில் இருந்து வந்ததும் வராததுமாய், ஸ்கூல் பேக்கை கட்டிலில் வைத்துவிட்டு வந்து, தாத்தாவின் மடியில் தலை புதைத்து தேம்ப ஆரம்பித்தான் பிரணவ். பதைபதைத்துப் போனார் தாத்தா.

''என்னாச்சுடா கண்ணா... ஏன் அழறே?''

வாஞ்சையுடன் விசாரித்த தாத்தாவிடம், ''தாத்தா! ஸ்கூல்ல பேச்சுப்போட்டி நடத்தினாங்க. ஃபர்ஸ்ட் பிரைஸ் அருணுக்குப் போயிடுச்சு தெரியுமா?''

''அவ்வளவுதானே! அடுத்த முறை நீ ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கிடலாம். இதுக்கெல்லாம் வருத்தப்படலாமா?''

தாத்தா பேரனை ஆறுதல்படுத்த முயன்றார். ஆனால், பிரணவ் விடுவதாக இல்லை. ''அதுக்கு இல்ல தாத்தா... அவன் பேசினது எல்லாமே நான் எடுத்துவைத்திருந்த நோட்ஸ். அப்படியே காப்பியடிச்சுட்டான். நான் பேசறதுக்கு ஒண்ணுமே இல்லாமப் போயிடுச்சு தெரியுமா? அடுத்தவங்க உழைப்பை திருடறது தப்புதானே தாத்தா?''
ஆதங்கத்துடன் கேள்விகேட்ட பேரனை மடியில் தூக்கி உட்கார வைத்துக்கொண்டவர், ''உனக்கு ஒரு கதை சொல்றேன்.  உன் கேள்விக்கு அந்த கதையே பதில் சொல்லும். சரியா?'' என்றவர் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். 

''துறவிகள் இரண்டு பேர் யாத்திரை போயிக்கிட்டு இருந்தாங்க. வழியில் ஒரு காட்டை கடக்க வேண்டியிருந்துச்சு. அங்கே ஒரு மரத்துல தேனீக்கள் கூடுகட்டியிருந்தன. வேடர்கள் இரண்டு பேர், அந்தக் கூட்டில் இருந்து தேன் எடுக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தாங்க.

அப்ப... இரண்டு துறவிகள்ல இளையவர், 'தேனீக்கள் தங்களது கடின உழைப்பால் தேனை சேகரிக்கின்றன. ஆனா, மனிதர்களான நாம அதை திருடி விடுகிறோமே... அந்தத் தேனீக்கள் அதற்காக எவ்வளவு வருத்தப்படும்' என்று மூத்த துறவியிடம் கேட்டார். அதற்கு அந்த மூத்த துறவி என்ன சொன்னார் தெரியுமா?'' என்று தாத்தா சற்றே நிறுத்த, ''சொல்லுங்க தாத்தா! மூத்த துறவி என்ன சொன்னார்?'' ஆவலுடன் கேட்டான் பேரன்.

சிரித்தபடியே கதையைத் தொடர்ந்தார் தாத்தா: ''கண்டிப்பாக அந்த தேனீக்கள் வருந்தாதுன்னு சொன்னார் மூத்த துறவி.''

சட்டென்று தாத்தாவை இடைமறித்துக் கேட்டான் பிரணவ்... 

''ஏன் அப்படிச் சொன்னாரு?''

''உன்னை மாதிரிதான் இளைய துறவியும் மூத்த துறவியிடம் காரணம் கேட்டார். அதற்கு மூத்த துறவி, 'மனிதர்களால் அந்தத் தேனை மட்டும்தான் திருட முடியும். ஆனால், அந்தத் தேனை உருவாக்கும் கலையை எப்போதும் திருட முடியாது'ன்னு பதில் சொன்னார்'' என்ற தாத்தா, பேரனின் முகத்தை உற்றுநோக்க,  பிரணவ் முகத்தில் இப்போது கவலை இல்லை; உற்சாகம் தொற்றிக்கொண்டிருந்தது.

''நல்லாவே புரிஞ்சுது தாத்தா. அருண் என்னோட உழைப்பை வேணும்னா திருடியிருக்கலாம். ஆனால், என்னோட திறமையை, யோசனையை திருட முடியாதே. அடுத்த தடவை இன்னும் நல்லா யோசித்து, நானே ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்குவேன். சரிதானே தாத்தா?'' என்றவனை வாரியணைத்துக்கொண்ட தாத்தா, ''ரொம்ப ரொம்ப சரி!'' என்றார் பெரிதாகச் சிரித்தபடி. பிரணவ்வும் அவரது சிரிப்பில் கலந்துகொண்டான்.