Sunday, October 2, 2016

இப்படி அந்த மாமி சொல்கிறார். நீ என்ன சொல்றே?

எதிலும் தட புடலும், ஆரவாரமும் இருந்தால், அதற்கென்று ஒரு தனிப் பலன் உண்டு. நான் சொல்வதைக் கேட்டு, உண்டா, இல்லையான்னு சொல்லு...' என்ற குறிப்போடு ஆரம்பித்தார் குப்பண்ணா.

'நம்ம கொள்கைக்கு எதிராக இருக்கிறதே... மனிதர் என்ன சொல்ல வருகிறார், கேட்போம்...' என, காதைத் தீட்டினேன்.

'ஒரு இல்லத்தரசி சொன்னதை, அவர் கூறியது போலவே சொல்றேன்...' என்றவர், சொல்ல ஆரம்பித்தார்...

எங்கள் வீட்டுச் சின்னப் பையன் சாப்பிடும் போது, ஊறுகாய் பாட்டிலை கீழே தள்ளி உடைத்து விட்டான். அடுப்பங்கரை முழுவதும் ஊறுகாய் சிதறியது. உடைந்த கண்ணாடி துண்டுகள் அங்கும், இங்குமாக சிதறிக் கிடந்தன. ஒரே களேபரம். 'ஜாடி தானே உடைந்தது பையனுக்கு ஒன்றும் ஆகவில்லையே... போனால் போகட்டும்...' என்று, பொறுமையாக பையனைக் கடிந்து கொள்ளாமல், மெதுவாக எழுந்து, பையனை அப்புறப்படுத்தப் போனேன்.

என் நிதானத்தைக் கண்டு, எரிச்சல் அடைந்த என் கணவர், மிகுந்த ஆத்திரத்துடன், 'என்ன... ஒண்ணுமே நடக்காதது போல நடந்துக்கிறீயே...' என்று, எரிந்து விழுந்தார்.

இதுபோன்று எத்தனையோ முறை, பொறுமையாக நடந்து, மிகவும் அவதிப்பட்டிருக்கிறேன். அதன்பின், இப்போதெல்லாம், எதிலும், பொறுமையாக நடக்க வேண்டும் என்று சொல்பவரைக் கண்டால், எனக்குக் கட்டோடு பிடிப்பதில்லை.

எந்த சிறு காயத்துக்கும், ஒரு நாடகமாடி விடுவது அல்லது அழுது தீர்த்து விடுவது என்று தீர்மானித்து விட்டேன்.

ஒருமுறை என்னுடைய கைப்பையை எங்கோ தொலைத்து விட்டேன். அது, விலை உயர்ந்தது அல்ல; மிஞ்சிப் போனால், 50 ரூபாய் பெறும். இருந்தாலும் என் கணவரிடம் அழுது தீர்த்து விட்டேன். 'நம் லலிதா கல்யாணத்தின் போது (அவர் தங்கை) நீங்க, எனக்கு வாங்கிக் கொடுத்தது. முணு வருஷமா பத்திரமாக வைச்சுருந்தேன். எவ்வளவுப் பணம் கொடுத்தாலும், அந்தப் பை மாதிரி வருமா...' என்றெல்லாம் முகத்தை சுளித்து, கண்ணீரை வரவழைத்து அழுதேன்.
உடனே அவர், 'ஏன் இதுக்குப் போய் அழுறே... சாதாரண கைப்பை தானே... இன்னொன்று வாங்கினால் போச்சு...' என்று, என்னை சமாதானம் செய்ய ஆரம்பித்து விட்டார். இருந்தும் நான் விட வில்லை. இன்னும் இரண்டு கேவுக் கேவி, மெதுவாகத் தான் அழுகையை நிறுத்தினேன்.

மாறாக, பையை எங்கோ தவறி வைத்து விட்டேன் என்று கொஞ்சம் நிதானமாக அவரிடம் சொல்லியிருந்தால், பதில் வேறு விதமாக இருந்திருக்கும். 'நீ எப்போதுமே இப்படித்தான்; உனக்கு பணத்தோட அருமை கொஞ்சங் கூடத் தெரியுறதில்ல. நான் சம்பாதிக்கும் பணமெல்லாம், உனக்கு கைப்பை வாங்கத்தான் காணும்...' என்றெல்லாம், வசைமாரி பொழிந்திருப்பார். ஆகவே தான், எதிலும் நிதானமாக இருக்க வேண்டாம் என்று சொல்கிறேன்.
ஒருமுறை, அவர் எனக்கு, ஒரு அழகான பிளவுஸ் துணி வாங்கி வந்தார். எப்போதும் தான் இப்படி பிளவுஸ் துணி வாங்கி வருகிறாரே என்று, 'நல்ல துணியாகத்தான் இருக்கிறது...' என்று சொல்லி, என் வேலையை பார்க்க போய் விட்டேன்.

அவர் என்ன நினைத்தாரோ... கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. 'ஏகப்பட்ட காசு போட்டு, அழகான வெல்வெட் துணி வாங்கி வந்திருக்கேன்; நல்ல துணியாகத் தான் இருக்குன்னு ஈஸியா சொல்லிட்டுப் போறயே... அவ்வளவுதானா...' என்று அங்கலாய்த்தார்.

ஆனால், நான் மட்டும், 'ஆஹா... எவ்வளவு நல்ல துணி. எங்கே வாங்கினீர்கள்... அழகாக இருக்கிறதே... இவ்வளவு விலை உயர்ந்த துணியை, பணமில்லாத இந்த நாளில் ஏன் வாங்கினீர்கள்... சாதாரண துணி வாங்கியிருந்தால் போதாதா...' என்று, மூச்சு விடாமல் அடுக்கி ஒரு குதி, ஒரு ஆட்டம், ஒரு நாடகம் ஆடியிருந்தால் சரியாக இருந்திருக்கும் அல்லவா!

அதிலிருந்து, எதற்கும் ஒரு நாடகமாடி விடுவது என்று தீர்மானித்து விட்டேன். இந்த ரகசியத்தை, எப்போதும் என்னுள்ளே வைத்திருப்பேன்.

உங்கள் பக்கத்து வீட்டுக் குழந்தை, கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டது என்று சொல்கின்றனர். உடனே, நீங்கள், 'பரவாயில்லை; நெற்றியில் சற்று வீங்கியிருக்கிறது. வெந்நீர் ஒத்தடம் கொடுங்கள்; சரியாகி விடும்...' என்று சாதாரணமாகச் சொல்லிப் பாருங்கள்... சில சமயம், இது விபரீதத்தை விளைவித்து விடும். 'உங்களுக்கென்ன நஷ்டம்... குழந்தை எங்களுடையது தானே...' என்று முகத்தை முறிப்பது போல், பேசி விடுவர்; நீங்கள் வருந்த நேரிடும்.
இதற்கு மாறாக, 'ஐயையோ... அடி மிகவும் பலமாகப் பட்டிருக்கிறதோ... ரொம்ப உயரத்தில் இருந்தல்லவா குழந்தை விழுந்திருக்கிறான்... டாக்டரிடம் அழைத்துப் போங்கள். மண்டையில் அடிபட்டால் ஆபத்து; உடனே, 'ஸ்கேன்' எடுத்துப் பாருங்கள். எதற்கும் கொஞ்சம் ஒத்தடம் கொடுத்து விட்டு, நேராக டாக்டரிடம் போகலாம் வாருங்கள்...' என்று படபடவென்று உப்பு, மிளகாயுடன் நீங்கள் சொல்லியிருந்தால், அவர்களுக்கு மிக ஆறுதலாக இருந்திருக்கும்.

உடனே, அவர்கள், 'பரவாயில்லை உட்காருங்க; ஒத்தடம் கொடுத்தால் எல்லாம் சரியாகிடும்...' என்று நம்மைச் சமாதானப்படுத்த ஆரம்பித்து விடுவர். இம்மாதிரி மிகைப்படுத்தி கூறுவதை, எல்லாரும் விரும்புகின்றனர். இதை விட்டு சாந்தமாகவும், நிதானமாகவும் நடந்து கொண்டால், நீங்கள் தோல்வியடைய வேண்டியது தான்!

'இப்படி அந்த மாமி சொல்கிறார். நீ என்ன சொல்றே?' என்ற கேள்வியுடன் முடித்தார்.

நீங்க என்ன சொல்றீங்க?