ஹோட்டல் உணவு என்றாலே எல்லோருக்கும் ஆசை. அது சிறியவர்களாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி... பெரும்பாலானவர்களுக்கு, உணவின் சுவை காரணமாக ஆர்வம் அதிகரித்து, ஆவலைத் தூண்டிவிடும். என்றைக்காவது ஒருநாள் ஹோட்டலுக்கு சென்று உணவு உண்பதில் தவறு இல்லை. ஆனால், எப்போதுமே ஹோட்டலை மட்டுமே நம்பியிருந்தால் அது பாதிப்புதான்.
சொந்த ஊரை விட்டு வெளியூரில் தங்கியிருக்கும் ஒவ்வொருவரும் சந்திக்கும் பிரச்னை உணவுதான். ஹோட்டல், கேன்டீன், சாலையோரக் கடைகள் என எங்கு அருகில் உணவு கிடைக்கிறதோ அங்கே சென்றுவிடுகின்றனர். இவர்களால், ஹோட்டல் உணவுகளை முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால் பாதிப்பில் இருந்து தப்பிக்க சில வழிகள் உள்ளன.
உடலை பாதிக்கும் ஹோட்டல் உணவுகள்
தரமற்ற உணவு பொருட்கள், பலமுறை கொதிக்க வைத்த எண்ணெயில் பொரித்த உணவுகள், இனிப்பு வகைகள், செயற்கை நிறமிகள் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட்டு வந்தால், சிறுகுடல் மற்றும் வயிற்றின் உட்பகுதியில் உள்ள திசுக்கள் பாதிப்படைகின்றன. இதனால் அஜீரணம், வாந்தி போன்றவை உண்டாகின்றன.
வயிற்றின் அமிலத்தன்மை அதிகரித்து, வயிற்றுப் புண் ஏற்பட்டு, நாளடைவில் அது அல்சராக மாறலாம்.
வயிறு மற்றும் குடல் பகுதிகளில் (gastrointestinal tract) புண்கள் ஏற்பட்டு, நாளடைவில் புற்றுநோயாக உருவாகவும் வாய்ப்புள்ளது.
கூடுதல் கலோரிகள் காரணமாக உடல் எடையை அதிகரிப்பதால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளும் வரலாம்.
ஊளைச் சதையை உருவாக்கும் உப்பு
ஹோட்டல் உணவுகளில் எம்.எஸ்.ஜி (Mono sodium glutamate) அல்லது சோடா உப்பு, சுவைக்காகப் பயன்படுத்தப்படும். இது கெட்ச்அப், சாஸ், நூடுல்ஸின் சுவையைக் கூட்டும் தன்மையுடையது. இந்த உணவுகளை ஒருமுறை உட்கொண்டால், மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும். சோடியம் அதிகமாக உள்ள உணவு, உடலில் உள்ள நீரின் அளவை குறைத்துவிடும். இந்த உணவுகளை தொடர்ந்து உண்ணும்போது அதிக எடை கூடி, ஊளைச் சதை உருவாகிறது.
பெரும்பாலான ரோட்டோரக் கடைகளில் பாமாயிலை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணெய்யை ஒரு முறைக்கு மேல் தொடர்ந்து சூடுபடுத்தும்போது, அதில் நிறைவுற்ற கொழுப்பு அமிலம் அதிகரித்து, ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
திரும்பத் திரும்பச் சூடுபடுத்துவதால், அதில் `டிரான்ஸ்ஃபேட்' எனும் அமில மாற்றம் நடந்து நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பாக மாறுகிறது. இது உடலில் சேரச் சேர, இதயக் குழாய் அடைப்பு, சிறுகுடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.
பேச்சுலர்ஸ், பேருந்து ஓட்டுநர்கள், கண்டக்டர்கள், பயணிகள் என அனைத்துத் தரப்பினரும் பேருந்துப் பயணத்தின் இடையில் சாப்பிட விரும்புவதும் பரோட்டாவைத்தான். பெட்ரோலை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் டெர்டியரி புட்டைல்ஹைட்ரொக்யூனோன் (Tertiary butylhydroquinone (TBHQ) என்னும் கெமிக்கல், மைதா மாவை வெண்மையாக்கவும் அலாக்சின் எனும் கெமிக்கல் மென்மையாக்கவும் சேர்க்கப்படுகிறது. உண்மையில் மைதா, எந்தச் சத்துக்களும் அற்ற குப்பை மாவாகும். இதனால், உடலுக்கு கெடுதல் மட்டுமே.
ஹோட்டல் உணவுகளை சாப்பிடுவோரின் கவனத்துக்கு...
*தினசரி ஒருவேளை உணவை காய்கறி, பழங்கள் என்று மாற்றிக்கொள்ள வேண்டும். முழுதானிய பிரெட் பயன்படுத்தி சான்ட்விச் செய்து சாப்பிடலாம்.
*பழங்களை வாங்கி வைக்க முடியாதவர்கள், ட்ரை ஃப்ரூட்ஸ் வாங்கிவைத்து சாப்பிடலாம். தினசரி, எல்லாவகை நட்ஸ், உலர் பழங்களை ஒரு கையளவு சாப்பிடலாம். இதன்மூலம், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடும்.
*இன்டக்ஷன் ஸ்டவ், எலக்டிரிக் குக்கர் போன்றவற்றை பயன்படுத்தி சாதம், சுண்டல், பயறு, பருப்பு வகைகளில் எளிய ரெசிப்பிகளை தயாரித்து சாப்பிடலாம்.
*சிவப்பு அரிசி அவல், பொரி போன்றவற்றை பயன்படுத்தி காலை உணவு அல்லது இரவு உணவுக்கு விதவிதமாக ரெசிப்பிக்கள் செய்து சாப்பிடலாம்.
*வேலை நிமித்தமாக வேறு ஊர்களுக்குச் சென்றாலும், தரமான ஹோட்டலில் சரியான உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவது அவசியம்.
*ஹோட்டல் உணவைச் சாப்பிடுவதற்கு முன்பு, காய்கறி சாலட் சாப்பிடலாம். இது, ஹோட்டல் உணவின் அளவைக் குறைக்க உதவும்.
*கோலா பானங்களைத் தவிர்த்து, உப்பு சேர்த்த எலுமிச்சை ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். காபி, டீக்கு பதில், கிரீன் டீ அருந்தலாம்.
*இட்லி, இடியாப்பம், எண்ணெய் இல்லாத தோசை, கொழுக்கட்டை, புட்டு, சப்பாத்தி ஆகியவற்றை உண்ணலாம்.
*கிரில், பார்பிக்யூ முறையில் தயாரிக்கப்பட்ட காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம். அசைவ உணவுகளை குறைவாக எடுத்துக்கொள்ளலாம்.
*பாக்கெட் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்து லேபிளைச் சரிபார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதில் இருக்கும் பாலி அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட், மோனோ அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட், டிரான்ஸ் ஃபேட் (Trans fat) ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்து வாங்க வேண்டும்.
*உணவில் மட்டும் கவனம் செலுத்தாமல், உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டும். இது கூடுதல் கலோரிகளை எரிக்கவும், உடல் ஃபிட்டாக இருக்கவும் உதவும்.
*ஹெபடைட்டிஸ் ஏ, டைபாய்டு, குடல் புழுக்கள் தொற்று, வயிற்றுப்போக்கு ஏற்பட முக்கிய காரணம் பாதுகாப்பற்ற உணவுகள்தான். எனவே, என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் போலவே, எங்கே சாப்பிடுகிறோம் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இரைப்பை அழற்சி அலர்ட்!
தொடர்ந்து ஆரோக்கியமற்ற ஹோட்டல் உணவு உட்கொள்பவர்களுக்கு இரைப்பை அழற்சி (Gastritis) ஏற்படலாம். பெரும்பாலான ஹோட்டல்களில் ஒரே எண்ணையே மீண்டும் மீண்டும் சூடுபடுத்தப்பட்டு உபயோகிக்கப்படுகிறது. அதேபோல், உணவையும் சூடுபடுத்தி அளிக்கின்றனர். இது இரைப்பையின் உட்பகுதியில் உள்ள மெல்லிய தோல் அடுக்கை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கத் தொடங்குகிறது. இரைப்பை புற்றுநோய் உருவாகவும் வாய்ப்பு உள்ளது.
பொதுவாகவே சாப்பிட்டவுடன் வயிறு முழுவதும் அடைத்ததுபோன்ற உணர்வு, வாந்தி வருவது போன்ற உணர்வு, விட்டு விட்டு ஏற்படும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஆகியவை ஏற்பட்டால் குடல் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உணவை சமைத்ததும் அதிகபட்சமாக ஆறு மணி நேரத்துக்குள் சாப்பிட வேண்டும். மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது.