Sunday, October 2, 2016

கும்பாபிஷேகம் செய்; உன் பாவம் நீங்கும்...

வாழ்க்கை என்பது ஒரு ராட்டினம்; கீழே இருப்போர் மேலே செல்வதும், மேலே இருப்போர் கீழே வருவதும் காலத்தின் விளையாட்டு. எதுவும் நிரந்தரமற்ற உலகியல் வாழ்வில் நெறியுடன் வாழ்பவரே, நிலைத்த இன்பத்தை அடைவர். பாவத்தை சம்பாதிப்போர் தற்காலிக இன்பத்தை அடைந்தாலும், அவர்கள் வாழ்வு துன்பத்தில் தான் முடியும் என்பதை விளக்கும் கதை இது!

கொல்லம் எனும் ஊரில், காமந்தன் எனும் பெரும் செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு, 12 பிள்ளைகள். செல்வச் செருக்கில், மனம் போனபடி வாழ்ந்தான். அதற்கு தடையாக இருந்த மனைவி, மக்களை வீட்டை விட்டு விரட்டியடித்தான். குந்தித் தின்றால், குன்றும் குறையும் என்பதைப் போல், செல்வம் எல்லாம் கரைய, வறியவன் ஆனான், காமந்தன்.

இதனால், பணத்திற்காக பொய் சாட்சி சொல்வது, கொலை செய்வது, சூதாட்டம், திருட்டு என, தீய வழிகளில் பொருளைச் சேர்த்தான்.

அவனால் பாதிக்கப்பட்டோர், மன்னரிடம் முறையிட, அவனை பிடித்து வர கட்டளையிட்டார், மன்னர். இத்தகவல் அறிந்து காட்டிற்குள் ஓடிவிட்டான், காமந்தன். அங்கும் அவன் அட்டூழியம் தொடர்ந்தது. அவ்வழியே வரும் வழிப்போக்கர்களை கொன்று, பொருட்களை கொள்ளையடித்தான்.

ஒருநாள், கனவர்த்தனர் என்ற வேதியர் அவ்வழியே வந்தார். அவரை வழிமறித்து, அவரிடம் இருந்த சிறிதளவு பொருட்களையும் கைப்பற்றி, அவரை கொல்வதற்கு துணிந்தான், காமந்தன்.

அப்போது அவர், 'நான் ஏழை வேதியன்; சாஸ்திர நெறிகளை எடுத்துச் சொல்லி, என்னால் இயன்ற வரை மக்களுக்கு நல்வழிகாட்டி வருகிறேன். என்னை விட்டு விடு...' என்றார்.

காமந்தனோ, 'உன்னைப் போன்ற பைத்தியங்களின் பேச்சைக் கேட்டு, சில சமயம் என்னைப் போன்றவர்களுக்கு பயம் வருகிறது...' என்று கூறி, அவரை கொன்று விட்டான்.

உடனே, அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது; கூடவே முதுமையும் சேர, உடல் தளர்ந்தான். இச்சமயத்தில் அவனுக்கு தன் மனைவியின் நினைவு வர, அவளுக்கு தூது அனுப்பினான். அவளோ வர மறுத்துவிட்டாள். ஆதரவற்ற நிலையில், காமந்தனுக்கு கடவுள் நினைவு வர, 'தெய்வமே... என்னை மன்னிக்க மாட்டாயா...' என்று கதறி அழுதான். பின், 'கொள்ளையடித்த செல்வத்தை எல்லாம், நல்லவர்களுக்கு வழங்குவோம்; பாவம் தீர, அதுவே வழி...' என்று தீர்மானித்து, பல சாதுக்களை சந்தித்தான்.

அவர்களோ, 'பாவத்தின் மொத்த உருவமான உன் செல்வத்தைப் பெற்றால், அந்த பாவம் எங்களையே சேரும்...' என்று சொல்லி, வாங்க மறுத்து விட்டனர். இதனால், மனம் வருந்தி அழுத போது, சில சாதுக்கள், 'காமந்தா... நீ இருக்கும் காட்டில், புதர் மூடிய நிலையில் கணபதி கோவில் ஒன்று உள்ளது. அங்கு வழிபட வந்த பலர், உன்னால் கொல்லப்பட்டனர். அக்கோவிலை சீர்படுத்தி, கும்பாபிஷேகம் செய்; உன் பாவம் நீங்கும்...' என்றனர்.

அதன்படியே, யானைமுகன் கோவிலை சீர்படுத்தி, கும்பாபிஷேகமும் செய்வித்த காமந்தன், 'விநாயகப் பெருமானே... என் செல்வங்களை மறுத்ததன் மூலம், உன்னடியார்கள், தங்கள் பெருமையை நிலை நாட்டி, எனக்கும் நல்வழி காட்டினர். ஐங்கரம் கொண்ட பரம் பொருளே... என்னை போல, யாரும் பாவி ஆகாதபடி, ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்கு நல்வழி காட்டியருள்...' என வேண்டினான்.
அடிபட்டு, ஏச்சும் பேச்சும் வாங்கி, அனைத்தையும் இழந்து, அதன் பின் திருந்துவதை விட, துவக்கத்திலேயே நல்வழிப்படுத்த விநாயகரை வேண்டுவோம்!