Wednesday, October 19, 2016

ஒரு ஊர்ல ஒரு அப்பா. இன்று மகளுக்குச் சொல்லப் போகும் பெட் டைம் ஸ்டோரி...

ஒரு ஊர்ல ஒரு அப்பா. 

அவருக்கு ஒண்னாங்கிளாஸ் படிக்கிற மக இருக்கா. 

அந்த அப்பாவுக்கு ஒரு பிரச்சனை இருக்கு. 

சின்ன வயசுல இருந்தே சலூன்ல முடிவெட்டும் போது அவரு முகத்துல முடி விழுந்தா அந்த இடத்துல குறுகுறுன்னு ரொம்ப கூச்சமா அரிப்பு வந்தா, அந்த இடத்த சொறிஞ்சிக்கவே மாட்டார். 

ஏதோ முடிவெட்ற அண்ணனுக்கு தொந்தரவு குடுக்கிறதா நினைகிட்டு, அப்படி செய்யவே மாட்டார். முடி மூக்குல தாங்க முடியாம அரிக்கும் போது, அடுத்தவங்களுக்கு கஷ்டம் குடுக்க கூடாதுன்னு தப்பா நினைகிட்டு எதுவும் சொல்லாம பொறுத்துப்பார். 

இதனாலேயே முடிவெட்டப் போனா அவருக்கு பதட்டமா இருக்கும். இன்னைக்கு முடி எதுவும் மூக்குல அல்லது கண்ணத்துல காதுல விழுந்து அரிப்பு எடுக்கக் கூடாதுன்னு நினைச்சிகிட்டு போவார்.

அப்பாவுக்கு ஒரு பிரச்சனை இருந்தா பொண்ணுக்கு ஒரு பிரச்சனை இருக்காதா? 

அவளுக்கு ஒரு பிரச்சனை இருக்கு. 

ரோட்டுல, அல்லது வேற எதாவது ஃபங்சன்ல அவ கன்னத்த யாராவது கிள்ளுவாங்க, அல்லது கன்னத்த தட்டுவாங்க அது அவளுக்கு பிடிக்கல. ஆனா சட்டுன்னு அவுங்க செய்யும் போது அவளால ஒண்ணும் செய்ய முடியல.

இப்படி அப்பாவுக்கு பொண்ணுக்கும் பெரிய பிரச்சனையில்லனாலும், குட்டியா ஒரு பிரச்சனை இருக்கு. 

குட்டி விஷயம்னாலும் நாம இன்னொருத்தருக்கு அட்ஜஸ்ட் செய்திட்டிருக்கோம்ங்கிற உணர்வு நமக்கு கோவத்தக் கொடுக்கும். 

தினமும் ஒரு பையன் வந்து உன் வாட்டர் பாட்டில்ல இருந்து பாதி தண்ணிய குடிச்சா கோவம் வரும்தானே. விஷயம்னு பாத்தா ரெண்டு டம்ளர் தண்ணிதான். ஆனா நமக்குப் பிடிக்காம செய்யும் போது மனசுக்குள்ள எரிச்சல் வரும். 

அப்படி ஒரு எரிச்சல் அப்பாவுக்கும் பொண்ணுக்கும் இருக்கு. அப்படியே அவுங்க வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்காங்க. 

ஒருநாள் பொண்ணும் அம்மாவும் காலையில பார்க்குக்கு போறாங்க. 

அப்பா எங்கப் போறாரு. அவரு முடிவெட்ட சலூனுக்கு போறாரு.

அதே சமயத்துல பார்க்ல விளையாடிட்டு இருக்கிறா. 

அப்பாவுக்கு துணிய எடுத்து தோள்ல போர்த்தி கத்திரிய எடுத்துட்டாரு முடிவெட்ற அண்ணன். 

பொண்ணு பார்க்ல ஊஞ்சல் விளையாடிட்டு இருக்கா.

முதல்ல பின்னால மெஷின் போடுறாரு அண்ணன். அப்புறம் சைடுல. 

பொண்ணு ஊஞ்சல் விளையாடிட்டு சீ சா விளையாட வர்றா, அதுல நல்ல கம்பெனி கிடைக்க ஜாலியா விளையாடுறா. 

அப்பாவுக்கு முன்பக்கம் முடிய வெட்ட ஆரம்பிக்கிறாங்க. பொண்ணு இப்போ சறுக்கு விளையாட வந்துட்டா. அந்தச் சறுக்கு நேரான சறுக்கு இல்ல. அது வளைஞ்சி வளைஞ்சி இருக்கு. 

அதுல சறுக்கும் போது கிழே பிளாஸ்டிக் பள பளப்பா இல்லாம ஈஸியா சறுக்க மாட்டேங்குது. 

அங்க சறுக்கு பக்கத்துல நிக்கிற அங்கிள் ஒருத்தர் உதவி பண்றேன்னு சொல்லிட்டு அவ சறுக்க திணறும் போது அவ கால இழுத்து விடுறாரு.

இங்க அப்பாவுக்கு முன் முடியில ஒரு முடி வந்து மூக்குல சரியா விழுது. குறுகுறுன்னு இருக்கு. 

உடனே என்ன பண்றாரு. அப்படி சீட்ல கொஞ்சம் நிமிந்து மூக்குல முடிய தட்டி விட்டு சொறிஞ்சிக்கிறாரு. உடனே முடிவெட்ற அண்ணன் அவரு சொறிஞ்சி முடிக்கிற வரைக்கும் காத்திருக்கிறாரு. வாழ்க்கையில அந்த அப்பா முதன் முதலா அப்படி செய்றாரு.

இங்க பொண்ணு ரெண்டாவது சறுக்குல ஏறும் முன்னாடி அந்த அங்கிளக் கூப்பிட்டு "அங்கிள் என் கால அப்படிப் பிடிச்சி இழுத்து விடாதீங்க. எனக்கு அது வசதியா இல்ல" அப்படின்னு அவரோட கண்ணப் பாத்து தெளிவா சொல்றா.

முடிவெட்ற இடத்துல அப்பாவும், இங்கே பார்க்குல பொண்ணும் ஒரு விஷயத்த ஒரே சமயத்துல தெளிவா புரிஞ்சிக்கிறாங்க. 

என்னப் புரிஞ்சிக்கிறாங்க 

"நமக்குப் பிடிக்காத விஷயத்த, மத்தவங்க மனசு கஷ்டப்படும்னு பொறுத்துக்க வேண்டியதில்ல." 

அப்படிங்கிற விஷயத்தப் புரிஞ்சிகிட்டாங்க. 

ஆமா நமக்குப் பிடிக்காத, நம்ம சுதந்திரத்துகுள்ள வர்ற சின்ன விஷயத்த யார் செய்தாலும், எனக்கு இது பிடிக்கலங்கிறத அவுங்க கிட்ட சொல்லிரனும். அது யாரானாலும் சரி. 

இன்று மகளுக்குச் சொல்லப் போகும் பெட் டைம் ஸ்டோரி... :) :)