காய்கறிகள் நல்லது என தேடித் தேடி சாப்பிடுபவர்களும் உண்டு. 'காய்கறியா... எனக்கு வேண்டாம்' என்பவர்களும் உண்டு. சிலருக்கு காய்கறிகளை சமைக்காமல் உண்ண பிடிக்கும். சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை வேகவைக்கும் போது அதிலுள்ள சத்துக்களில் பாதி வெளியேறிவிடும். அதேநேரம் எல்லா காய்கறிகளையும் சமைக்காமல் உண்ண முடியாது. குறைந்தது தினமும் எதாவது ஒரு காய்கறியையாவது சமைக்காமல் உண்டு வருவது நமக்கு தேவையான சத்துக்களை பெற ஏதுவாகும். அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் சமைக்காமல் உண்ணக்கூடிய பட்டியலை பார்க்கலாம்.
முட்டைக்கோஸ்
சத்துக்கள்: ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, கே, மக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்துள்ளன.
பயன்கள்: அல்சர் என்கிற வயிற்று புண்களை குணமாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆன்டிபயாட்டிக்காக செயல்பட்டு புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கிறது. சக்திமிகுந்த ஆன்டிஆக்ஸிடன்ட் கொண்டது. இதிலுள்ள உயர் பாலிஃபினால் (high polyphenol) ரத்தநாள நோய்களை தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கிறது. நார்ச்சத்து நிறைந்தது என்பதால் செரிமானப் பிரச்னையைத் தவிர்க்கும். உடல் எடை குறைய நினைப்பவர்களுக்கு ஏற்றது.
கவனிக்க: கரும்புள்ளிகள் அதிகம் உள்ள, இலைகள் அரித்து, சேதமாகி இருப்பவற்றை தவிர்க்க வேண்டும்.
வெங்காயம்
சத்துக்கள்: வைட்டமின் பி6, பயோடின், ஃபோலிக் ஆசிட், வைட்டமின் சி, பொட்டாசியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து நிறைந்துள்ளன.
பயன்கள்: காய்ச்சலை குணமாக்க பயன்பட்டு வந்தது. குடலில் எற்படும் தொற்றுகள், பித்தகற்கள், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளின்போது பச்சையாக எடுத்துக்கொண்டால் அதிக பயன் தரும். உட்புண்களை குணப்படுத்தவல்லது. புற்றுநோய் மற்றும் இதயநோய்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது.
கவனிக்க: அடிபட்ட, கறையாக உள்ள, கரும்புள்ளிகள் அதிகம் உள்ள வெங்காயத்தைத் தவிர்க்க வேண்டும்.
தக்காளி
சத்துக்கள்: பொட்டாசியம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, சி, கே நிறைவாக உள்ளன.
பயன்கள்: உடனடியாக சத்துக்களை அளிப்பதிலும், உடலிலுள்ள நச்சுக்களை அகற்றுவதிலும் சிறப்பாக செயல்படுகிறது. இதில், லைக்கோபீன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இதயத்தின் செயல்திறனை மேம்படுத்துகிறது. சருமத்தை பொலிவாக்குகிறது. முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. எலும்புகளை வலுவாக்குகிறது. உடலுக்கு தேவையற்ற கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. புற்றுநோய் தடுப்பானாக செயல்படுகிறது.
கவனிக்க: மிகவும் கனிந்த தக்காளி, புள்ளிகள் உள்ள தக்காளிகளை தவிர்ப்பது நல்லது.
வெள்ளரிக்காய்
சத்துக்கள்: பொட்டாசியம், வைட்டமின் சி, கே, பி, பயோடின், உள்ளன.
பயன்கள்: நீர்ச்சத்து நிறைந்தது என்பதால் நச்சுக்களை வெளியேற்றும். சருமத்தின் ஆரோக்கியம் மற்றும் சிறுநீரகத்தின் செயல்திறனை மேம்படுத்தும். குறைந்த கலோரி கொண்டது என்பதால், உடல் பருமனைக் குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது.
மனப்பதற்றம் மற்றும் மன அழுத்தம் இருக்கும்போது மனதை அமைதிப்படுத்தும். ஒரு கப் வெள்ளரிக்காயில், ஒரு நாளைக்கான வைட்டமின் கே சத்துக்களை முழுமையாக பெறலாம். கால்சியத்தை உடல் பயன்பாட்டுக்கு ஏற்ற வேதியல் மாற்றத்தை செய்து எலும்புகளை உறுதிப்படுத்தும் முக்கிய பணியினை செய்கிறது. புற்றுநோய் செல்களை தடுக்கும் குக்குர்பைடாசின் (cucurbitacin) என்கிற வேதிப்பொருள் இதில் உள்ளது.
கவனிக்க: மஞ்சள் புள்ளிகள் கொண்டவை, பெரிய அளவு வெள்ளரி, முத்திய விதைகள் கொண்ட வெள்ளரிகளை தவிர்க்க வேண்டும்.
கேரட்
சத்துக்கள்: வைட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், மக்னீசியம், ஃபோலேட் நிறைந்தது.
பயன்கள்: பார்வை திறனை கூர்மையாக்கும். துருவிய கேரட் தீக்காயங்களை விரைவில் ஆற்று உதவுகிறது. கல்லீரலுக்கு நல்லது. இதிலுள்ள பீட்டா கரோட்டின் வளர்சிதை மாற்றங்கள் சிறப்பான முறையில் நடைபெற உதவுகிறது. முதுமையை தாமதப்படுத்தும். சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கவனிக்க: வெடிப்பு விழுந்த கேரட்களை தவிர்த்து, ஈரப்பதம் இருக்கும் கேரட்களை உண்ண வேண்டும். கேரட்டை வெந்நீரில் சில நிமிடங்கள் போட்டுஎடுத்து அதன்பிறகு சாப்பிடுவது நல்லது.
புடலங்காய், சுரைக்காய், வெள்ளை பூசணிக்காய் ஆகியவற்றை தயிருடன் சாலட் செய்து சாப்பிட்டால் அதில்உள்ள சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.