Saturday, March 19, 2016

பெட்டிக்கு வெளியே சிந்தி’ப்பது (Think outside of the box)

பெட்டிக்கு வெளியே சிந்தி'ப்பது (Think outside of the box) பத்திப் பேசிட்டிருந்தோம். அதென்ன, பெட்டிக்கு வெளியே சிந்திக்கிறது? எளிமையா சொல்லணும்னா, வழக்கமான 
பாதையில யோசிக்கிறதைவிட வேற ஒரு கோணத்துலேர்ந்து யோசிக்கிறது. 

இதுக்குக் காலங்காலமா ரெண்டு உதாரணங்களைச் சொல்றது வழக்கம். ஒண்ணு, ஒரு குட்டிக் கதை. இன்னொண்ணு, ஒரு புதிர். 

  ஒரு சர்க்கஸ் கூடாரம். கூண்டுல இருந்த சிங்கம் ஒண்ணு, சரியா மூடப்படாத கதவு வழியா வெளியேறி, கூடாரத்துக்குள்ள நுழைஞ்சுடுச்சு. கூட்டத்துல ஒரே களேபரம். அமளி துமளி. ஜனங்க அங்கே இங்கே ஓடி, பயத்துலயும் பீதியிலயும் அலறினாங்க. ஒரு வழியா, அந்தச் சிங்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்து இழுத்துக்கிட்டுப் போனார் ரிங் மாஸ்டர். 

அப்பத்தான், கூட்டத்துல இருந்த ஒரு குடும்பம் தங்களோட வந்திருந்த சின்ன பையனைக் காணோமேன்னு பதறித் துடிச்சாங்க. அந்தப் பையன் எங்கே இருந்தான் தெரியுமா? சிங்கம் இருந்த கூண்டுக்குள்ளே! ஆமாம், ஜனங்க எங்கே ஓடித் தப்பிக்கிறதுன்னு தெரியாம பதற்றத்துல இருந்தப்போ, இந்தப் பையன் ஓடிப் போய் திறந்திருந்த கூண்டுக்குள்ளே புகுந்து, கதவைச் சாத்திக்கிட்டான்.

எல்லாரும் எந்த வாசல் வழியா வெளியே தப்பிச்சு ஓடறதுன்னு யோசிச்சிட்டிருந்தப்போ, இந்தப் புத்திசாலிப் பையன் வித்தியாசமா யோசிச்சு செயல்படுத்தினான் இல்லையா, இதைத்தான் 'பெட்டிக்கு வெளியே' யோசிப்பதுங்கறாங்க.

அந்தப் புதிரையும் பார்த்துடுவோம். கீழே மூணு மூணா மூணு வரிசைகள்ல ஒன்பது புள்ளிகள் கொடுக்கப்பட்டிருக்கு. இந்த ஒன்பது புள்ளிகளையும் நாலே நேர்க்கோட்டுல இணைக்கணும். முயற்சி பண்ணுங்க. 

'பெட்டிக்கு வெளியே சிந்திப்பது' தொடர்பா ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உண்டு.

ஜப்பான்ல ஒரு சோப்புக் கம்பெனி. சோப்புக்கட்டி களை தானியங்கியாகவே கவர்ல சுத்தி பேக் பண்ணி, பெட்டிகள்ல நிரப்புற வேலையை ஓர் இயந்திரம் செய்யும். 

சோப்புக்கட்டிகள் ஓரிடத்துல விழும். அங்கே அது ஒரு கவர்ல சுத்தப்படும். அப்புறம், அந்த கவர் செய்யப்பட்ட சோப்புக்கட்டிகள் வரிசையா ஒரு கன்வேயர் பெல்ட்டுல வரும். குறிப்பிட்ட எண்ணிக்கைல ஒரு அட்டைப் பெட்டிக்குள் அவை அடுக்கப்படும்.

ஆனா, இயந்திரத்துல ஒரு சின்னக் கோளாறு. இடையிடையிலே சில கவர்கள் சோப்புக்கட்டி இல்லாமலே அழகா சுற்றப்பட்டு பேக் ஆகி, அட்டைப் பெட்டிக்குள் அடுக்கப்பட்டன. 

இதனால, சோப் விற்கிற ஏஜென்ட்டுகள், கடைக் காரர்களிடம் இருந்து ஏகப்பட்ட கம்ப்ளெயின்ட். இந்தத்  தொழில்நுட்பக் கோளாறை எப்படிச் சரி செய்யறதுன்னு அந்த கம்பெனி இன்ஜினீயர்கள் மண்டையைப் பிச்சுட்டிருந்தாங்க.

அதே நேரம், உடனடியா ஏதாவது செஞ்சு, காலி கவர்கள் அட்டைப் பெட்டிக்குள் அடுக்கப்படுவதைத் தடுக்க வேண்டிய கட்டாயம்.

அதுக்காக, அவங்க பிரத்யேகமான ஒரு ஸ்கேனரை அமெரிக்காவிலேர்ந்து பல லட்சம் டாலர் விலையில இறக்குமதி பண்ணினாங்க. அது துல்லியமா எந்தெந்த கவர்கள்ல சோப் இல்லைங்கிறதைக் காட்டிக் கொடுத்துடும். அதையெல்லாம் நீக்கிட்டு, சோப் உள்ள கவர்களை மட்டும் அட்டைப் பெட்டிகள்ல நிரப்பி, ஏஜென்ட்டுகளுக்கு அனுப்ப ஆரம்பிச்சாங்க.

இதே மாதிரியான தொழில்நுட்பப் பிரச்னை, குஜராத்ல இருந்த 'நிர்மா' சோப்புக் கம்பெனிக்கும் வந்தது. அவங்க இதுக்கு என்ன பண்ணினாங்க தெரியுமா?

ஒரு பெரிய பெடஸ்டல் ஃபேன் வாங்கினாங்க. கன்வேயர் பெல்ட்டின் இறுதி முனைக்குப் பக்கத்திலே அதை நிக்க வெச்சு, 'ஆன்' பண்ணினாங்க. அடிக்கிற காத்துல காலியான கவர்களெல்லாம் பறந்துபோய் அப்பால் விழுந்தது. சோப்பு உள்ள கவர்கள் மட்டும் அட்டைப் பெட்டிக்குள்ள சேகரமாச்சு.

இந்தச் சம்பவம் உண்மையா, இல்லையா... நம்மோட பெருமையைப் பேசிக்கிறதுக்காகச் செய்யப்பட்ட இட்டுக்கட்டுச் சம்பவமாங்கிற தெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். 'பெட்டிக்கு வெளியே சிந்தித்தல்' என்பதற்கான மிகச் சரியான உதாரணம் இது.

ஒரு ரயில் பெட்டியில பெரியவர் ஒருவரும், அவரோடு இன்னும் சிலரும் பயணம் செஞ்சுட்டிருந்தாங்க. ரயில் ரொம்ப வேகமா போயிட்டிருந்தது.


ஜன்னல் ஓரமா உட்கார்ந்திருந்த ஒரு பணக்காரர், தன் கையை ஜன்னல் கட்டையில ஊனியிருந்தார். அவர் கட்டியிருந்த, வைரக் கற்கள் பதிந்த விலை உயர்ந்த வாட்ச் எப்படியோ கழன்று ஜன்னல் வழியா வெளியே விழுந்துட்டுது.

பதறிப்போன அந்தப் பணக்காரர், வாட்ச்... வாட்ச்... ஐயோ, என் வாட்ச்'னு கத்தினார். கூட இருந்தவங்களுக்கு உடனடியா என்ன பண்றதுன்னு தெரியலே. எமர்ஜென்ஸி சங்கிலியைப் பிடிச்சு இழுத்து ரயிலை நிறுத்தலாமான்னு பார்த்தாங்க. 

இத்தனை களேபரத்துக்கு நடுவிலும், இந்தப் பணக்காரருக்கு நேரெதிரே உட்கார்ந்திருந்த அந்தப் பெரியவர் மட்டும் எது பத்தியும் கவலைப்படாம, அலட்டிக்காம ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துட்டிருந்தார். அந்தப் பணக்காரருக்கும் மத்தவங்களுக்கும் இதனால அவர் மேல கொஞ்சம் கடுப்பு!

இவங்க அபாயச் சங்கிலியைப் பிடிச்சு இழுக்கிறதுக்குள், அடுத்த ஸ்டேஷன் வந்துடுச்சு. இந்தப் பெட்டிக்கு நேரே நிறைய அதிகாரிகள் கும்பலா காத்திருந்தாங்க. அவர்களிடம் அந்தப் பணக்காரரும் மத்தவங்களும் பரபரப்பா போய், பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரம் நழுவி விழுந்தது பத்திச் சொல்லி, அதைத் தேடி எடுக்க உதவணும்னு கேட்டுக்கிட்டாங்க.
இப்பத்தான், எதிர் ஸீட்டில் உட்கார்ந் திருந்த அந்தப் பெரியவர் வாயைத் திறந்தார். 'இங்கிருந்து சரியா 25 தந்திக் கம்பங்களுக்கு அப்பால் அந்தக் கைக்கடிகாரம் விழுந்திருக்கு. உடனே போனீங்கன்னா அதைச் சுலபமா கண்டுபிடிச்சு எடுத்துடலாம்'னார். 

அவர் சொன்னது போலவே, 25-வது தந்திக் கம்பத்துக்கு அப்பால் அந்த வாட்ச் கிடந்தது. எல்லாருக்கும் ஆச்சரியமான ஆச்சரியம்!

ஆக, வாட்ச் விழுந்ததுன்னு தெரிஞ்சதுமே மத்தவங்க என்ன பண்றதுன்னு புரியாம முழிச்சிட்டிருந்த நேரத்துல, மளமளன்னு கடந்து போற தந்திக் கம்பங்கள் எத்தனைன்னு மனசுக்குள்ளே எண்ணிட்டு வந்ததன் மூலம் வாட்சைக் கண்டுபிடிக்க உதவினாரே... அவர் பண்ணினதுதான் 'பெட்டிக்கு வெளியே சிந்தித்தல்'. அந்தப் பெரியவர் வேறு யாருமல்ல... மூதறிஞர் ராஜாஜி!

அதுசரி, புதிர் ஒண்ணு சொன்னேனே... மூணு மூணா, மூணு வரிசையில் உள்ள ஒன்பது புள்ளிகளை, நான்கு நேர்க்கோடுகளால இணைக்கணும்னு! முயற்சி செஞ்சு பார்த்தீங்களா? இங்கே இருக்கு விடை. புள்ளிகளைத் தாண்டியும் கோடுகளை நீட்டிப் பார்ப்போம்னு நீங்க யோசிச்சிருந்தா, அதுதான் 'பெட்டிக்கு வெளியே சிந்தித்தல்'.