Tuesday, March 8, 2016

கோயில் நகைகள் திருட்டு

 "கோயில் நகைகள் திருட்டு" என்று காலை பேப்பரில், தலைப்பெழுத்துச் செய்தியை உரக்கப் படித்த அப்பா, "என்னவோ போ! தன் நகைகளைத் திருட்டுப் போகாம காப்பாத்திக்கவே சாமியால முடியலைன்னா அது நம்மளை மட்டும் எங்கேருந்து காப்பாத்தப் போகுது?" என்று அலுத்துக் கொண்டார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த தாத்தா சிரித்தார்.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னே நீ வெச்சிருந்த பிஸ்கட் பாக்கெட்டை உன் பிள்ளையாண்டான் பிடுங்கிக்கிட்டு ஓடினானே… வேடிக்கை பார்த்துட்டுதானே இருந்தே? 'உன் கையிலிருந்த பிஸ்கட்டைக் காப்பாத்திக்கவே உனக்குத் துப்பில்லையே, என்னை மட்டும் எப்படி வெச்சுக் காப்பாத்தப் போறே?'ன்னு நான் கேக்கலாமா?" என்றார்.

"என்னப்பா… எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடறீங்க? அவன் என் பையன். அவன்தான் தின்னா என்ன, நான் தின்னா என்ன?" என்றார் அப்பா.

"அது மாதிரிதான் இதுவும். நகையைத் திருடினவன் நமக்குத்தான் திருடன். கடவுளைப் பொறுத்தவரைக்கும் அவனும் அவரோட குழந்தைதான்."

"என்னப்பா சொல்றீங்க… தப்பு பண்றவன் கடவுளோட குழந்தையா?" என்றார் அப்பா பொறுக்கமாட்டாமல்.

"அதுக்கென்னப்பா பண்றது… ஒரு அப்பாவுக்கு அஞ்சு குழந்தைங்க இருந்தா, அஞ்சுமேவா சமர்த்தா இருக்கும்? ஒண்ணு முரடாவும், இன்னொண்ணு அசடாவும் இருக்கத்தான் செய்யும். ஆனா, அப்பாவுக்கு எல்லாமே சமம்தானே?" என்ற தாத்தா, பழைய சம்பவம் ஒன்றைச் சொன்னார். "பலப்பல வருஷங்களுக்கு முன்னே, தட்சிணேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி சிலைக்கு அணிவிச்சிருந்த நகைகள் திருடு போயிடுச்சு. அப்போ ஒருத்தர் ராமகிருஷ்ண பரமஹம்சர்கிட்டே வந்து, 'பாத்தீங்களா சுவாமி, இந்த உலகமே கடவுளோட கட்டுப்பாட்டுல இயங்குதுங்கறாங்களே… ஆனா, அவரால தன்னோட நகைகளையே காப்பாத்திக்க முடியலையே?'ன்னு கேலியா கேட்டாராம். 'அந்த நகைகளையெல்லாம் செய்து கடவுளுக்கு அணிவிச்சது யார்?'னு கேட்டார் ராமகிருஷ்ணர். 'நானும் இன்னும் சில அன்பர்களும் சேர்ந்துதான் சுவாமி செஞ்சு போட்டோம்'னார் அவர். 'கடவுள் தனக்கு நகை செய்து போடச் சொல்லி உங்ககிட்டே கேட்டாரா?'ன்னார் ராமகிருஷ்ணர். 'இல்லை சுவாமி, நாங்களாதான் எங்க ஆசைக்கு செய்து போட்டோம்'னார் அந்த அன்பர். 'சரிதான், உங்க ஆசைக்கு நீங்க சுவாமிக்கு நகை செய்து போட்டீங்க. அவன் தன்னோட ஆசைக்கு அதை எடுத்துக்கிட்டுப் போயிட்டான். இதுக்கு நடுவுல ஏன் கடவுளை இழுக்கறீங்க?'ன்னு கேட்டாராம் ராமகிருஷ்ணர்.

'அதில்லை சுவாமி, திருடிட்டு ஓடிட்டானே? அப்படின்னா, எதுவுமே கடவுளோட கட்டுப்பாட்டுல இல்லைன்னுதானே ஆகுது?'ன்னு தயங்கித் தயங்கிக் கேட்டார் அன்பர். 

ராமகிருஷ்ணர் சிரிச்சார். 'அவன் எங்கே ஓடிட்டான்? இந்த உலகத்தின் ஏதோ ஒரு மூலையில்தானே இருக்கான்? இந்த உலகமே, ஏன் இந்தப் பிரபஞ்சமே கடவுளின் கட்டுப்பாட்டுல இருக்கும்போது அவன் எங்கே ஓடமுடியும்?'னார்."

தாத்தா சொல்லி முடித்தபோது, குழந்தை ஓடி வந்து அவர் கையிலும், அப்பா கையிலும் ஆளுக்கொரு பிஸ்கட்டைத் திணித்து, 'தின்னுங்க. சூப்பரா இருக்கு' என்று சொன்னது, கடவுளே சொன்ன மாதிரி அப்பாவுக்குத் தோன்றியதில் ஆச்சரியமில்லை.