Sunday, June 21, 2015

எமனாக மாறிய எடை குறைப்பு சிகிச்சை! பகீர் ரிப்போர்ட் ப்ளஸ் பயனுள்ள வழிகாட்டல்கள்

 
ரண்டு ஆண் குழந்தைகளுக்கு அம்மாவான 35 வயது அமுதா, தன் உடல் பருமனைக் குறைக்க, அந்த மருத்துவமனையில் சேர்ந்தார். ஆனால், அதுவே அவருக்கு எமனாக மாற... இன்று நம்மிடையே இல்லை அமுதா!

சென்னை, வள்ளுவர்கோட்டம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள கக்கன் காலனியைச் சேர்ந்த கௌரிசங்கரின் மனைவிதான் இந்த அமுதா. உடல் எடையைக் குறைப்பதற்காக தியாகராயநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். 'எளிய அறுவை சிகிச்சை மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்கி, எடையைக் குறைத்து அழகான தோற்றம் பெறலாம்!' என்று ஆலோசனை தரப்பட, அமுதா சம்மதித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவருக்கு, திடீரென வயிற்றில் அதிக வலி ஏற்பட, அதே மருத்துவமனையிலேயே மீண்டும் இரண்டு முறை அறுவை சிகிச்சை முடிந்திருக்கிறது. அதன் பின்னரும் வயிற்று வலி தீராத அமுதா, கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட, நுரையீரல் மற்றும் குடல் பகுதி பாதிப்பு கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அமுதா, படுத்த படுக்கையானார். 10 மாதங்களாக கட்டிலில் கிடந்து, தேகம் மெலிவடைந்து, மனமும் வேதனையில் உழன்று, கோமா நிலைக்குச் சென்றவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.

`அமுதாவின் இந்த நிலைக்குக் காரணம் மருத்துவர்களின் தவறான சிகிச்சையே' என்று தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் கணவர். சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகமோ, 'தவறான சிகிச்சை காரணமல்ல' என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால், அழகுக்கு ஆசைப்பட்ட அமுதா இன்றில்லை என்பது மட்டும் உண்மை!

உடல் எடை குறைப்பு, சிவப்பழகு, கேசத்துக்கான அழகு சிகிச்சை, சருமத்துக்கான அழகு சிகிச்சை என்று நாடுபவர்களுக்கு எல்லாம் எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கும் இந்தச் சம்பவம் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. இதையடுத்து, அழகு சார்ந்த சிகிச்சைகளில் கொடுக்கப்படும் வாக்குறுதிகள், அவை நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியமின்மை, ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் பற்றி துறை சார்ந்த நிபுணர்களிடம் பேசினோம்.

உடனடி எடை குறைப்பு... பக்க விளைவுகள் இலவசம்!

சென்னையைச் சேர்ந்த பெண்கள் சிறப்பு மருத்துவரும், அரசு மகப்பேறு மருத்துவருமான சாதனா, உடனடியாக எடை குறைக்கும் முயற்சிகளில் இறங்கும் பெண்களுக்கு, அது எந்த அளவுக்கு சாத்தியமற்றது மற்றும் பாதுகாப்பற்றது என்பது பற்றிப் பேசினார்.

''அழகான தோற்றம் குறித்த மோகம் பெண்களிடம் தொடர்ந்து அதிகமாகி வருகிறது. அதனால்தான், உடல் எடையைக் குறைக்க புரோட்டீன் பவுடர், எலெக்ட்ரானிக் ஜிம் உபகரணங்கள், 'ஒரே வாரத்தில் எடை குறைக்க', 'இடை மெலிய இரண்டு வார சேலஞ்ச்' என்று விதம்விதமான உபாயங்கள் பெருகிவருகின்றன. உண்மையில் இவையெல்லாம் பரிந்துரைக்கத்தக்கவையல்ல!

இயற்கையாக உடல் எடையைக் குறைக்க அதிக நாட்கள் தேவைப்படும். உதாரணமாக... உடற்பயிற்சி, தேவையான அளவுக்கு உணவுக் கட்டுப்பாடு என்று முயன்று, ஒரு மாதத்துக்கு 1 முதல் 2 கிலோ வரை எடை குறைப்பதே ஆரோக்கியமானது. குறுகிய நாட்களுக்குள் அதிகமாக எடையைக் குறைக்க ஆசைப்பட்டால், அதற்காக மேற்கொள்ளும் இயற்கைக்கு ஒவ்வாத முயற்சிகளின் விளைவுகள், விபரீதத்தையே கொண்டுவந்து சேர்க்கும்.

புரோட்டீன் பவுடர் உஷார்!

உதாரணமாக, இருவேளை உணவைக் குறைத்து, அதற்குப் பதிலாக புரோட்டீன் பவுடர் மட்டும் சாப்பிடுவார்கள் சிலர். இதனால், உடலுக்குத் தேவையான சத்து கிடைக்காமல் சோர்வடைவார்கள். இன்னொரு பக்கம், அவர்களின் தினசரி அலுவல்களைச் செய்ய வேண்டிய கட்டாயமும் அழுத்தும். இப்படி சத்து குறைந்து, சோர்வு நிறைந்த உடலுடன் உழைக்கும்போது, அது அவர்களின் ஆரோக்கியத்தைப் பாழாக்கும்.

ஜிம்மில், 'இந்த எலெக்ட்ரானிக் மெஷினில் எந்த வொர்க் அவுட்டும் செய்யாமல் நின்றாலே போதும். இந்த எலெக்ட்ரானிக் பெல்ட்டை கட்டிக்கொண்டாலே போதும்... அது தானாக உடலில் உள்ள கொழுப்பை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துவிடும். இப்படி தினமும் செய்வதால், உடலில் உள்ள மொத்த கொழுப்பும் நாளுக்குநாள் கரைக்கப்படும். இதனால் உடல் எடை குறைந்து அழகான உடல் வாகை பெறலாம்' என்றெல்லாம் ஆசை காட்டுவார்கள். உண்மையில் இதனால் உடல் எடை குறைவதுபோன்றுதான் ஆரம்பத்தில் தோன்றும், போகப்போக முன்பு இருந்த எடையைவிட அதிகரிக்கும் என்பது உண்மை. முன்பைவிட சுறுசுறுப்பு குறைந்து, சாதாரண வேலையைக்கூட செய்யமுடியாத நிலையும் ஏற்படக்கூடும்.

அறுவை சிகிச்சை ஆபத்து!

யாருக்கு வேண்டுமானாலும் அறுவை சிகிச்சைகள் செய்து உடலில் உள்ள கொழுப்பை நீக்கி உடல் எடையைக் குறைப்பது என்பது தவிர்க்க வேண்டிய ஒன்று. மிகவும் அதிக அளவிலான எடை உள்ளவர்கள், எந்தவித உடல் பயிற்சியும் செய்ய முடியாதவர்களுக்கு மட்டுமே வேறு வழியில்லாமல் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் வலியுறுத்துவார்கள். ஆனால், இன்றைக்கு நன்றாக உள்ளவர்களையும் ஆசை வார்த்தைகள் கூறி அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்க வைத்து சில மருத்துவர்கள் பணம் பறிக்கிறார்கள். அதனால் எத்தனையோ அப்பாவி பெண்களும், ஆண்களும் முன்பு இருந்த ஆரோக்கியமான உடலைக்கூட தொலைத்து, சோம்பல் தொடங்கி உயிரிழப்பு வரை பக்கவிளைவுகளால் பலவழிகளில் பாதிக்கப்படுகிறார்கள்'' என்று வேதனை தெரிவித்தார் சாதனா.

விருப்பத்துடன் செய்யுங்கள் வொர்க் அவுட்!

உடற்பயிற்சியின் மீது மக்கள் கொண்டுள்ள தயக்கத்தைக் களையும் விதத்தில் பேசுகிறார் உடற்பயிற்சியாளர் தேவி. ``ஜிம்முக்குதான் போக வேண்டும் என்பதில்லை. வாக்கிங், சைக்கிளிங், ஷட்டில், யோகா, ஏரோபிக்ஸ், ஸ்விம்மிங், ஸும்பா என... ஏதாவது ஒன்றை நேரம், சூழல், விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம். தரையில் செய்யக்கூடிய ஃப்ளோர் எக்ஸர்சைஸ்களாகத் தேர்ந்தெடுத்து வீட்டில் செய்யலாம். வயிறு, பின்பக்கம், தொடை, உடம்பு என்று உடலின் குறிப்பிட்ட பாகங்களில் மட்டும் அதிக எடை கொண்டிருப்பவர்கள், பிரத்யேகப் பயிற்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துச் செய்யலாம். இதை ஜிம்மில் டிரெயினரிடம் கற்றுக்கொண்டு, வீட்டிலேயே செய்யலாம்.
தொடர்ந்து ஒருவர் உடற்பயிற்சி மேற்கொண்டு, திடீரென விட்டுவிட்டால் முன்பு இருந்த எடை, மீண்டும் கூடிவிடும். சமயங்களில் அதிக மாகவும்கூட வாய்ப்புள்ளது'' என்றார் தேவி.

`சரிவிகித உணவும், உடற்பயிற்சியும்தான் தீர்வு!'

சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் பவானி, உடல் எடை குறைப்பு தொடர்பான உண்மை நிலையை விளக்கி னார். ''கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, வேலை செய்துகொண்டிருந்த பெண் ஒருவருக்கு உடல் எடை காரணமாக திருமணம் தள்ளிப்போனது. அதனால், எப்படியாவது தன் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தவர் யாரோ சொன்ன உடல் எடை குறைப்புக்கான பவுடரை வாங்கி தினமும் உட்கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் தன் வேலைகளை சரிவர செய்ய முடியாமல் உடல் சோர்வடைந்துள்ளது. அப் போதும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து சாப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையோடு தொடர்ந்து சாப்பிட்டவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முன்பு இருந்த எடையை விட எக்கச்சக்கமாக கூட... அதிர்ச்சியடைந்தவர், கவலையோடு என்னிடம் வந்தார். 'எந்த மருந்தாலும், பவுடராலும் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கமுடியாது. சரிவிகித உணவுக் கட்டுப்பாடும், போதிய உடற் பயிற்சியும்தான் ஒருவரது உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கும்' என்று சொல்லி என்னென்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதோடு, உடற்பயிற்சி மேற்கொள்வது பற்றியும் சொல்லி அனுப்பினேன். கடந்த ஆறு மாதமாக அவற்றைப் பின்பற்றி வருகிறார். இப்போது உடல் எடை சீரான விகிதத்தில் குறைவதாக சந்தோஷத்தில் உள்ளார்.

உடல் எடை குறைப்பு விஷயத்தில், நன்கு படித்தவர்களேகூட பல தவறுகளை செய்து வருகிறார்கள். அவர்களும் உண்மை என்ன என் பதை புரிந்துகொண்டால்.. எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்!'' என்று அக்கறையுடன் சொன்னார் பவானி.

`அழகை நாடி, ஆபத்தை வாங்காதீர்கள்!'

ரும, கேச சிகிச்சைக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விளைவுகள் பற்றி பேசிய ராஜபாளையத்தைச் சேர்ந்த தோல் சிறப்பு மருத்துவர் பொன்னுசாமி, ''அழகு சாதனப் பொருட்களில் கலந்துள்ள வேதிப்பொருட்கள் அலர்ஜி உள்ளிட்ட தோல் சம்பந்தமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால், இன்றைய இளம் சமூகத்தினர் யாரும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. அதோடு, யாரும் அதுகுறித்து யோசிப்பதோ, கேட்பதோ கிடையாது. பிறகு, தங்களிடம் உள்ள நல்ல சருமத்தையும் தொலைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ளும் அவலம்கூட இன்றைக்கு ஆங்காங்கே அரங்கேறி வருகிறது.


முன்னோர்கள் எல்லோரும் இயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்தி தங்களது அழகை மேலும் பொலிவுடன் வைத்திருந்தார்கள். ஆனால், நாமோ எதற்கெடுத்தாலும் கிரீம்களை நாடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். சருமத்தில் அதிக அளவில் தொடர்ந்து கிரீம்களைத் தடவுவதால் கிட்னிகூட பழுதாகும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் அதிகமாக ஃபேஷியல், ப்ளீச் என்று தொடர்ந்து செய்வதால் சருமத்தின் ஈரத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, சரும வண்ணம் மாறுவதோடு, ரஃப் ஆகவும் கூடும். இயற்கை அழகை கொண்டாடுங்கள். அழகை நாடிச் சென்று ஆபத்தை வாங்கிக்கொள்ளும் அவலத்தை இனியாவது கைவிடுங்கள்'' என்றார் அக்கறையோடு.

`நம்பகத்தன்மையை ஆராயுங்கள்!'

பிரச்னைக்கான தீர்வை அடையும் பாதையில் தடுமாறாமல் இருக்க வேண்டியது பற்றிப் பேசும் 'நேச்சுரல்ஸ் சலூன்' நிறுவனர் வீணா குமாரவேல், ''தரமான இடத்தில், அனுபவம் வாய்ந்த நிபுணர்களிடம் அழகு சிகிச்சைகள் பெறவேண்டும். 'ரெண்டு சிட்டிங்கில் தலை முடி கொட்டுறது நின்னுடும்', 'ஒரே சிட்டிங்கில் சருமச் சுருக்கங்களை சரிசெய்துவிடலாம்' என்றெல்லாம் வாக்குறுதிகள் தரப்பட்டால், அதில் உள்ள நம்பகத்தன்மையை ஆராயுங்கள். அது என்ன சிகிச்சை, அதில் எந்தவிதமான விளைவு சருமத்தில் ஏற்படுத்தப்படும் என்பது பற்றி எல்லாம் நிறைய கேள்விகள் கேளுங்கள். அதை நெட்டிலும், துறை சார்ந்த இன்னொருவரிடம் செகண்ட் ஒபீனியன் கேட்டும் செக் செய்யுங்கள். பணம் பிடுங்கவும், ஏமாற்றவும் காத்திருக்கும் கூட்டத்தின் போலி விளம்பரக் கூவலில் ஏமாறாதீர்கள்!'' என்று எச்சரிக்கை கொடுத்தார்.

எடையைக் குறைக்க எளிய வழிகள்!

சென்னை, இ.எஸ்.ஐ மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணர் பவானியின் பரிந்துரைகள்: கூடுதலாக இருக்கும் உடல் எடையைக் குறைக்க சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி என்று இயற்கையான வழிகள் உள்ளன. முதலில் ஆயில் உணவுகளையும், சர்க்கரை கலந்த உணவுகளையும் குறைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஒரு நாளைக்கு அதிக பட்சமாக 4 டீஸ்பூன் ஆயில் கலந்த உணவுகள் (மாதத்துக்கு அதிகபட்சமாக அரை கிலோ) எடுத்துக்கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டியவை: பேக்கரி உணவுகள், கூல் டிரிங்க்ஸ், ஜங்க் ஃபுட், பதப்படுத்தப்பட்ட உணவுகள்.

சேர்க்க வேண்டியவை: கீரைகள், பச்சை காய்கறிகள், முழுதானியம் (ராகி, கேழ்வரகு, கோதுமை போன்றவை), முழு பயறு வகைகள்.

உடற்பயிற்சிகள்: குறைந்தது ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடம் (வாரத்தில் குறைந்தது 5 நாட்கள்) நடைப்பயிற்சி அவசியம் (30 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து அமர்ந்து வேலை பார்ப்பதை தவிர்த்து, நடுவில் சிறிது நேரம் எழுந்து நடத்தல், சின்ன சின்ன வேலைகளையும் நடந்து செய்து பழகுதல், குழந்தைகளை அருகில் உள்ள பள்ளியில் நடந்து சென்று விடுதல், வீட்டு வேலைகளைச் செய்தல், துணி துவைத்தல், குனிந்து பெருக்குதல் போன்றவை).