Thursday, June 18, 2015

நம் உடல்... நம் ஆரோக்கியம்!

காலையில் எழுந்து, குழந்தைகளை எழுப்பித் தயார்படுத்தி, தானும் தயாராகி, கணவன், குழந்தைகளுக்கு காலை, மதிய உணவுகளைத் தயார் செய்து, அவர்களை பள்ளி - கல்லூரிக்கும் அலுவலகத்துக்கும், அனுப்பிவைத்து, தானும் பணிக்குச் செல்வதில் காட்டும் வேகத்தையும் அக்கறையையும் பெண்கள், தங்கள் உடல் நலத்தைப் பராமரிப்பதில் காட்டுவது இல்லை என்பது கசப்பான உண்மை.

ஆண்கள் ஓரளவுக்கு உடல்நலம், ஃபிட்னெஸ் பற்றிய தெளிவுகொண்டவர்களாக இருந்தாலும், எண்ணெயில் பொரித்த ஸ்நாக்ஸ், டீ, காபி, சிகரெட், மது எனப் பல விஷயங்களில் கோட்டை விடுகின்றனர். ஆண்கள் காட்டும் அலட்சியம், பெண்கள் மற்றவர்களுக்காக தங்கள் நலத்தைப் புறக்கணிப்பது என இரண்டுமே பிரச்னைதான். இந்த அலட்சியமும் புறக்கணிப்பும் வெளிப்படுத்தும் பாதிப்புகள் மிகப் பெரியது. பாதிப்பு ஒரே நாளில் வெளிப்பட்டுவிடுவது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நான் பாதிக்கப்பட்டு வருகிறேன் என்று நமக்கு உணர்த்திக்கொண்டேதான் இருக்கின்றன. அதைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துவதால், நாளடைவில் உடல்ரீதியான பெரும் பிரச்னைகள் உருவாகி, நமது அன்றாட செயல்பாடுகளே ஆட்டம் கண்டுவிடுகின்றன.

ஆண், பெண் இருவரும் தங்கள் உடல் நலனைக் கவனித்துக்கொள்வதில் எப்படி நடந்துகொள்கின்றனர் என்பதையும், நம் உடலின் சமிக்ஞைகளே நம் ஆரோக்கியத்தின் நிலையை சொல்லிவிடும், அதை எப்படித் தெரிந்துகொள்வது என்பதையும் பார்ப்போம்.

உடல் நலனைக் கவனித்துக்கொள்வதில் ஆண் - பெண் எப்படி?

உடல் நலம்:

ஆண்: மாறிவரும் வாழ்க்கைமுறையால் ஆண்களுக்கு இளம் வயதிலேயே இதய நோய்கள், சர்க்கரைநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்தத் தவறும்போது சிறுநீரகம், கண் உள்ளிட்ட பல்வேறு உறுப்புக்களில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுதவிர, அதிவேகப் பாதுகாப்பற்ற பயணம் காரணமாக விபத்தில் சிக்குபவர்களில் பெரும்பான்மையினர் ஆண்கள்தான்.

பெண்: பெண்களுக்கு மெனோபாஸ் வரையில், ஹார்மோன் பாதுகாப்பு இருப்பதால் இளம் வயதில் இதயநோய்கள் வருவது இல்லை. ஆனால், உடல் பருமன், சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று, எலும்பு அடர்த்திக் குறைதல் (Osteoporosis), மார்பகம் மற்றும் கர்ப்பப்பை தொடர்பான புற்றுநோய், தைராய்டு, ஊட்டச்சத்துக் குறைபாடு, பி.சி.ஓ.டி உள்ளிட்ட மாதவிலக்கு பிரச்னை, 40 வயதுக்குப் பிறகு மெனோபாஸ் பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன.

உணவுப் பழக்கம்:

ஆண்: உணவு, உடை என எல்லா விஷயங்களிலும் அம்மா, மனைவி எனக் குடும்பத்தினரைச் சார்ந்தே இருக்கின்றனர். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற அலட்சியத்தால், உடல் நலனில் பெரிதும் அக்கறை எடுத்துக்கொள்வது இல்லை.

பெண்: உடல் நலம் மீது அக்கறை இருந்தும், கணவன், குழந்தை, குடும்பம், வேலை, நேரமின்மை எனப் பல்வேறு காரணங்களுக்காகத் தன்னுடைய ஆரோக்கியத்துக்கு நேரம் செலவிடுவது இல்லை.

நொறுக்குத்தீனி ஆர்வம்:

ஆண்: ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இல்லை. வீட்டில் கட்டுப்பாடாக இருந்தாலும், வெளியே வந்த பிறகு, டீ, காபி, பஜ்ஜி, சமோசா மற்றும் சாலையோர உணவுகள், அசைவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்கின்றனர்.

பெண்: வீட்டு உணவுகளே அதிகம் சாப்பிடுவர். குடும்பத்தினருக்குப் போக மீதியைச் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள். காய்கறிகளை அதிகம் சாப்பிடுகின்றனர். நொறுக்குத் தீனி மீதான ஆர்வம் குறைவுதான்.

வாழ்வியல் பழக்கங்கள்:

ஆண்: அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் இல்லை. அதிக நேரம் தூங்குவது, பெட் காபி குடிப்பது, சாப்பிட்ட தட்டில் கை கழுவுவது, குளிக்காமல் நாள் முழுவதும் இருப்பது போன்ற சுகாதாரமற்ற பழக்கங்கள் அதிகம். திருமண வாழ்வைக் காட்டிலும், பேச்சுலர் வாழ்க்கையில் இந்தப் பழக்கம் இன்னும் மோசம்.

பெண்: காலையில் எழுந்தாலும், வேலைகளைத் திட்டமிட்டுச் செய்யும் பழக்கம் இல்லாததால், அவசரம், பதற்றம் போன்ற உணர்வுகள் அதிகமாக இருக்கும். பதற்றமே பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணமாகிவிடுகிறது.

உணவைத் தவிர்த்தல்:

ஆண்: நேரத்துக்குச் சாப்பிட்டுவிடுகின்றனர். மூன்று வேளையும் சாப்பிடும் பழக்கம் பெரும்பாலானவர்களுக்கு உள்ளது.

பெண்: நேரத்துக்கு சாப்பிடுவது கிடையாது. காலை உணவைத் தவிர்ப்பதை ஒரு பழக்கமாகவே வைத்துள்ளனர். உணவு மிச்சமாகும்போது, வீணாகி
விடும் என்று தேவைக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கம் உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி:

ஆண்: நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தாலும், சிகரெட், மது, புகையிலை, டீ, காபி போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி நோயை வரவழைத்துக் கொள்கின்றனர்.

பெண்: நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு. ஊட்டச்சத்து குறைபாட்டால் வரக்கூடிய பாதிப்புகள் அதிகம். டீ, காபி பழக்கம் குறைவு. மது, புகை பழக்கங்களில் ஈடுபடுவதும் குறைந்த சதவிகித்தினரே. இருப்பினும் பாசிவ் ஸ்மோக் காரணமாக அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

சுகாதாரம்:

ஆண்: உள்ளாடைகள், ஜீன்ஸ், காலுறை, கைக்குட்டை போன்றவற்றைத் துவைக்காமலேயே பயன்படுத்தும் பழக்கம் அதிகம். மேன்ஷன் வாழ்க்கையில், ஒருவர் உடுத்திய துணியைக்கூட மற்றவர் தயக்கமின்றிப் பயன்படுத்துவது உண்டு.

பெண்: சுகாதார உணர்வு இருக்கும். ஆனால், உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவது, லெக்கிங்ஸ், ஜெக்கிங்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை அணிந்து, மாதவிலக்கின்போது அவதிப்படுவதும் உண்டு.

ஆண்: கழிப்பறை ஒழுக்கங்களில் கவனம் செலுத்துவது இல்லை. கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு, நீரை ஃப்ளஷ் செய்வது குறைவு. மேலும், கழிப்பறையில் சிகரெட் பிடிப்பது, அதை அங்கேயே அணைத்துப் போடுவது என்று சுகாதாரமற்ற செயல்களில் ஈடுபடுவது அதிகம்.

பெண்: தன் வீட்டுக் கழிப்பறையைச் சுத்தமாகவைத்திருப்பர். ஆனால், சில பெண்கள் சானிடரி நாப்கின்களைக் குப்பைத் தொட்டியில் போடாமல் கழிப்பறையில் போட்டு ஃப்ளஷ் செய்துவிடுவது உண்டு.

ஆரோக்கியத்தை வெளிப்படுத்துதல்:

ஆண்: உடல் மற்றும் மன நலப் பிரச்னைகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மறைக்கும் தன்மை கொண்டவர்கள். ஆனால், நமக்கு ஏதேனும் பாதிப்பு இருக்குமோ என்று உள்ளுக்குள் பயத்துடனே வாழ்ந்தாலும் மருத்துவரைச் சென்று சந்திக்க மாட்டார்கள்.

பெண்: சின்னப் பிரச்னைகளைக்கூட பெரிதாக எடுத்துக்கொண்டு அதற்கு வீட்டிலேயே சிகிச்சை எடுக்க முயற்சிப்பார்கள். ஆனால், மருத்துவமனைக்குச் செல்ல தயக்கம் இருக்கும். இதனால், மனச்சோர்வில் மூழ்கித் தவிப்பார்கள்.

திருமணத்துக்குப் பிறகு:

ஆண்: திருமணத்துக்குப் பிறகு வரும் தொப்பை, வழுக்கை, தலைமுடி உதிர்தல், உடல் பராமரிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவது கிடையாது.

பெண்: குழந்தை பிறந்த பிறகு, உடல் அமைப்பு, உடல் பருமன் போன்ற மாற்றங்களால் மன உளைச்சலில் அவதிப்படுவர்.

சமிக்ஞைகளைக் கவனி...

இரவு நன்றாகத் தூங்கியும், தூக்கம்போதவில்லையே என்ற எரிச்சல் உணர்வு ஏற்படுகிறதா, இது தூக்கம் தொடர்பான பிரச்னை அல்ல. கல்லீரலின் ஆற்றல் குறைந்திருக்கலாம். கல்லீரலின் பாதிப்புதான் அன்றைய நாளைப் புத்துணர்வு இல்லாமல் மாற்றுகிறது. கல்லீரலைப் பலப்படுத்தும் கீழாநெல்லி, அகத்திக்கீரை, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, நெல்லி, வைட்டமின் சி உணவுகளைச் சாப்பிடலாம்.

சிறுநீர் மஞ்சள் நிறமாகவோ, எரிச்சலுடன் சிறுநீர் கழிக்க சிரமம் ஏற்பட்டாலோ, உடலில் நீர்ச்சத்துக்கள் குறைந்திருக்கும். இது தொடர்ந்தால், சிறுநீரகக் கற்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.

துர்நாற்றம், பிசுபிசுப்பு, நீர்த்தத்தன்மையுடன் மலம் வெளியேறுதல், செரிமானப் பிரச்னை ஆகியவை பெருங்குடல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கும். நார்ச்சத்துக்கள் நிறைந்த வாழைத்தண்டு, பீன்ஸ், முருங்கை, கீரைகள், அவரை, பீர்க்கங்காய், போன்றவற்றைச் சாப்பிடலாம்.

செரிமானப் பிரச்னை, பித்தப் பிரச்னை, வயிற்றுக்கோளாறு இருந்தால், நாக்கின் மேற்புறத்தில் மாவு படிந்ததுபோல் இருக்கும். சீரகம், கறிவேப்பிலை கலந்து வெந்நீரில் கொதிக்கவைத்துக் குடிக்கலாம்.

பற்களில் கூச்சம் ஏற்பட்டால், அசிடிட்டி அளவு அதிகரித்திருக்கலாம். கால்சியத்தின் அளவு குறைந்திருக்கலாம். மது, புகை, குளிர் பானங்களைத்தவிர்த்து, கால்சிய சத்துள்ள உணவுகளை உண்பது நல்லது.

கண் எரிச்சல், கண்கள் சிவந்துபோதல், கருவளையம் போன்ற பிரச்னைகளால் முக அழகு கெடலாம். கல்லீரலின் ஆற்றல் குறைந்திருக்க வாய்ப்பு உண்டு. பித்தத்தின் அளவு உயர்ந்து இருக்கலாம்.

உதடு, கருத்து, வெடித்தும்போயிருந்தால், மண்ணீரலின் செயல்பாட்டில் பிரச்னை, செரிமானக் கோளாறு போன்றவை காரணமாக இருக்கலாம். கீரைகளைச் சாப்பிட வேண்டும்.யோகப் பயிற்சி செய்வது நல்லது.

வேகமாக மூச்சுவிடுவதும், மெல்லிய சத்தத்துடன் மூச்சுவிடுவதும், நுரையீரல் பலவீனமாக இருப்பதற்கான அறிகுறிகள். உடல் எடையைக் குறைத்து, கெட்ட பழக்கங்களைக் கைவிட வேண்டும்.

நடை, பேச்சு, படிக்கட்டு ஏறுவது போன்ற அன்றாட செயல்களின்போது படபடப்பு அதிகம் இருந்தால், இதயம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். ரத்தசோகை இருக்கிறதா என்று பரிசோதித்துக்கொள்வது அவசியம்.

நகங்கள் எளிதில் உடைந்து, நிறம் மாறினால், கல்லீரலின் ஆரோக்கியத்தைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

துர்நாற்றத்துடன் வியர்வை வெளியேறினால், சுத்தமின்மை, சீரற்ற உணவுப் பழக்கங்கள், நீர்த் தேவை போன்றவற்றை உணர்த்துகிறது. நீர் ஆகாரங்களைச் சாப்பிடுவது, இரண்டு முறை குளிப்பது, தனிப்பட்ட சுகாதாரம் போன்றவை அவசியம்.

உணர்வுகளைக் கவனி...

உடல் உள்ளுறுப்புகளின் ஆற்றல் குறைந்தால், உணர்வுகளும் மாறுபடும். ஒவ்வொரு அறிகுறிகளும் ஆரோக்கியமின்மையை வெளிக்காட்டுகிறது. அடிப்படையான பிரச்னையைக் கண்டறிவதற்கான நேரம் இது என்பதை உணர்த்துகிறது.

பித்தப்பை - மனச்சோர்வு

கல்லீரல் - அதீத கோபம்.

நுரையீரல் - அழுகை உணர்வு, பதற்றம்.

மண்ணீரல் - கவலை.

சிறுநீரகம் - பயம்.

இதயம் - அதீத சந்தோஷம் அல்லது துக்கம், விரக்தி.