Monday, June 15, 2015

'கிச்சன் கில்லர்கள்’ !கேன் வாட்டர் முதல் பால் பவுடர் வரை....

மேகி நூடுல்ஸில் நச்சு கலந்திருக்கிறது... அதற்குத் தடை. ஆதரிக்கவேண்டிய ஆரோக்கிய நடவடிக்கைதான். ஆனால், நூடுல்ஸில் மட்டும்தான் நச்சு இருக்கிறதா? உங்கள் சமையலறைக்குச் சென்று பார்வையை ஓடவிடுங்கள். உடலுக்குத் தீங்கு இழைக்கக்கூடிய ஒரு டஜன் உணவுகளைக் கணக்கிட முடியும். உங்கள் குழந்தையின் ஸ்நாக்ஸ் டப்பாவைத் திறந்து பாருங்கள். 'குழந்தை நல்லா சாப்பிடுறா' என நீங்கள் அடிக்கடி கொடுக்கும் சாக்லேட்டும் பிஸ்கட்டும் கேடு தரும் உணவுப் பட்டியலில் முன்வரிசையில் இருக்கும். மேகிக்கு போகி கொண்டாடுவதைப்போல, நாம் விலக்கி வைக்கவேண்டிய நச்சு உணவுப்பொருட்களின் பட்டியல் மிகப் பெரிது!

இப்படி ரெடிமேட் இட்லி மாவு தொடங்கி, சிக்கன் 65 வரை உணவுப்பொருள் குறித்த உண்மைகளை நெருங்கிப் பார்த்தால், நாம் ஒரு வேளை உணவைக்கூட அசூயை இல்லாமல் உண்ண முடியாது. இந்த உதாரணத்தைப் படியுங்கள்.

இந்தியா முழுவதிலும் கிளைகளைக் கொண்டுள்ள சுகுணா சிக்கன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.பி.சுந்தர்ராஜனின் பேட்டி, கடந்த வாரம் நாளிதழ் ஒன்றில் வெளியானது. அதில் அவர், 'சிக்கன் லெக் பீஸ், இந்தியாவில் விரும்பிச் சாப்பிடப்படுகிறது. ஆனால், அமெரிக்காவில் லெக் பீஸை யாரும் சாப்பிடுவது இல்லை. அங்கு, கோழியின் நெஞ்சுப் பகுதியைத்தான் விரும்பிச் சாப்பிடுகின்றனர். இதனால் அங்கு 9 முதல் 10 வருட சிக்கன் லெக் பீஸ்கள் ஸ்டாக் இருக்கின்றன. லெக் பீஸை விரும்பிச் சாப்பிடும் இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கு, அவற்றை ஏற்றுமதி செய்ய முயற்சிக்கிறார்கள்' என அதிரவைக்கிறார்.

ஒரு நாள், ஒரு வாரம் அல்ல... 10 ஆண்டுகளுக்கு முன்பு செத்துப்போன கோழிகளின் கால் பகுதிகளைப் பாதுகாத்துவருகிறார்கள் என்பதைக் கேட்கும்போதே அருவருப்பாக இல்லையா? ஆனால், இது வெளிப்படையான உண்மை. அமெரிக்காவின் கோழிக்கால் இறக்குமதிக்கு, இப்போதைக்கு இந்தியா அனுமதி மறுக்கிறது. காரணம், பறவைக் காய்ச்சல் பயம். 'இரு நாட்டு நல்லுறவுப் பயணம்' என்ற பெயரில் மோடியோ, ஒபாமாவோ விஜயம் செய்யும் ஒரு நன்னாளில் இந்த ஒப்பந்தமும் நிறைவேற்றப்பட்டால், 10 ஆண்டுகளுக்கு முந்தைய 'பாரம்பர்ய'க் கோழிக்காலை சாப்பிடும் பாக்கியம் இந்தியனுக்குக் கிடைக்கும்.

இப்போது, இரண்டே நிமிடங்களில் சமைக்கும் துரித உணவு என விளம்பரப்படுத்தப்பட்ட மேகி நூடுல்ஸ், அதே துரித வேகத்தில் இந்தியா முழுவதும் விறுவிறுவெனத் தடை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய உணவுப்பொருள் சந்தையில் இத்தனை அதிக வேகத்தில் தடை செய்யப்பட்டதும், திரும்பப் பெறப்பட்டதும் மேகி நூடுல்ஸ் மட்டும்தான். ஆண்டுக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டிருப்பதும், துரித உணவுகளின் தீங்கு குறித்து எல்லோரும் பேசுவதுமாக நாடே பரபரப்பாக இருக்கிறது. நீர், நிலம், காற்று... எனச் சுற்றுச்சூழலே நஞ்சாகிவிட்ட நிலையில் உண்ணும் உணவிலும் நேரடியாக நஞ்சைக் கலக்கும் கொடுமையை இப்போதேனும் பேசத்தான் வேண்டும். ஆனால் பிரமாண்ட ஊழல் ஒன்று நடைபெறும்போது, யாராவது ஒருவரை மட்டும் பலிகொடுத்து, அந்தத் தனிநபரால்தான் ஊழல் நடந்ததாகச் சொல்வதைப்போல இப்போது மேகி பலிகொடுக்கப்படுகிறது.

உண்மையில், அன்றாடம் நாம் உண்ணும் உணவுப்பொருட்களில் மேகிக்கு இணையாகவும் அதைவிட அதிகமாகவும் நஞ்சு கலந்திருக்கிறது. தெரிந்தும் தெரியாமலும் தினந்தோறும் நாம் அவற்றைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். நம் குழந்தைகளுக்கும் சாப்பிடத் தருகிறோம். எனவே, மேகி அச்சத்தில் தற்போது சிறியதாகத் திறந்திருக்கும் விழிப்புஉணர்வின் கதவை இன்னும் அகலத் திறந்து, நம்மைச் சூழ்ந்திருக்கும் இதர நச்சுக்கள் குறித்தும் விவாதிக்கவேண்டிய தருணம் இது.

''சிக்கனும் கேசரியும் எப்படி சிவப்பாகிறது?''

''ஒவ்வோர் உணவும், சமைத்து குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கெட்டுப்போகும். இது இயற்கை. இப்படி உணவுப்பொருட்கள் இயற்கையாகக் கெட்டுப்போவதைத் தடுத்து, நீண்ட காலம் வைத்திருப்பதற்காக, அதோடு பல பொருட்களைச் சேர்க்கின்றனர். இதுகுறித்த சர்ச்சைகள் உலகம் முழுவதும் நீடிக்கின்றன. உதாரணத்துக்கு... கோதுமையை அரைத்து மைதா மாவாக மாற்றினால், அதற்கு அதிகபட்சம் 24 நாட்கள்தான் வாழ்நாள். ஆனால் 'ஒரு பொருளைச் சந்தைப்படுத்த, 24 நாட்கள் போதாது; குறைந்தபட்சம் 90 நாட்கள் தேவை' என்கிறார்கள்''

''இப்படி எல்லா நிறுவனங்களுமே, தங்கள் பொருளைச் சந்தையில் அதிக நாட்கள் நீட்டித்துவைப்பதற்கான முயற்சியை செய்கின்றன. இதற்காக பி.ஹெச்.டி., பி.ஹெச்.ஏ., சல்பைடு போன்ற கெமிக்கல்களைச் சேர்க்கின்றனர். இவை குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன எனச் சொல்லி, இடையில் சில காலம் நிறுத்திவைத்திருந்தார்கள். பிறகு மறுபடியும் வந்துவிட்டன. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையான எஃப்.டி.ஏ., Generally recognized as Safe (GRAS)' என்ற பிரிவின் கீழ் இவற்றை அனுமதிக்கிறது. இது வசதியான ஒரு பெயராக இருப்பதால், எந்த கெமிக்கலாக இருந்தாலும், இதன் கீழ் அனுமதி வாங்கிவிடுகின்றனர்.

நம் அடுத்த பேராபத்து, நிறமூட்டிகள் (Voloing agents). கேசரி சிவப்பாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் என்ன? 'கேசர்' என்றால் குங்குமப்பூ என அர்த்தம். குங்குமப்பூவைப் பயன்படுத்திச் செய்யப்படும் உணவுக்கு, 'கேசரி' எனப் பெயர் வந்தது. ஆனால், இவர்கள் alura red, azo dye ஆகிய நிறமூட்டிகளைப் பயன்படுத்தி நிறத்தைக் கொண்டுவருகின்றனர். இதே நிறமூட்டிகள்தான் பஞ்சுமிட்டாயிலும் பயன்படுத்தப்படுகின்றன. தந்தூரி சிக்கன் சாப்பிட்டுவிட்டு கையைக் கழுவினால், சிவப்பு நிறம் கையோடு ஒட்டியிருக்கும். அது Double 40 என்ற நிறமூட்டியின் விளைவு. இருமல் மருந்துகளில் Tartrazine என்ற நிறமூட்டி பயன் படுத்தப்படுகிறது. இப்படி பச்சை, மஞ்சள் என ஒவ்வொரு வண்ணத்துக்கும் ஒரு நிறமூட்டி இருக்கிறது. அனைத்துமே மனித உடலுக்கு மிகவும் தீங்கானவை. நிறமூட்டிகளால் புற்றுநோய் வரும் ஆபத்து இருப்பதாக உலகளாவிய அளவில் அச்சத்துடன் பேசப்படுகிறது. குறிப்பாக, சமீபகாலமாக குழந்தைகளை அதிகம் தாக்கும் ஆட்டிசம், மந்த சிந்தனை ஆகியவற்றுக்கு இந்த நிறமூட்டிகள்தான் காரணம் என்ற கருத்து, அமெரிக்காவில் இப்போது பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. ஆனால், இவற்றைத்தான் அடிக்கடி சாப்பிடுகிறோம். மைதா மாவை வெள்ளையாக்க, benzoyl peroxide என்ற கெமிக்கல் சேர்க்கிறார்கள். அந்த மைதா மாவு பரோட்டாவுக்கு இழுபட வேண்டும்; பூரிக்கு உப்ப வேண்டும். இரண்டுக்கும் இரண்டுவிதமான gluten கெமிக்கலைப் பயன்படுத்து கின்றனர். இந்த குளூட்டன் கெமிக்கல் குடலுக்கு ஒவ்வாமையை கொடுப் பதுடன், குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்ற சர்ச்சை நீடித்துவருகிறது.

ஐஸ்க்ரீம், சாக்லேட் போன்றவற்றில் நிறையப் பால் பொருட்களும், ஏராளமான பருப்பு வகைகளும் சேர்க்கப்படுகின்றன. அவை எங்கும் நிரவிக் கலந்திருக்க வேண்டும் என்பதற்காக Emulsifiers எனச் சொல்லக்கூடிய பால்மமாக்கும் கெமிக்கல்களைச் சேர்க்கின்றனர். இது, நம் குடலுக்குள் இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை வேலை செய்யவிடாமல் தடுக்கிறது. குழந்தைகள் சாப்பிடக்கூடிய பெரும்பாலான பொருட்களில் இந்த கெமிக்கல் கலந்திருக்கிறது. 'நாங்கள் அனுமதிக்கப்பட்ட அளவுதான் சேர்க்கிறோம்' எனச் சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு நிறுவனமும் என்ன விகிதத்தில் சேர்க்கிறது என்பது யாருக்கும் தெரியாது.

சர்க்கரை நோயாளிகள் ஏராளமாகப் பெருகிவிட்ட நிலையில், அவர்களுக்காக பல பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. செயற்கை இனிப்பாகப் பயன்படுத்தப்படும் சுக்ரலோஸை (sukralose), எவர்சில்வர் பாத்திரத்தில் கொதிக்கவைக்கும்போது, 190 டிகிரியில் டயாக்ஸின் (dioxin) என்ற கெமிக்கலை அது வெளிவிடுகிறது. டயாக்ஸின் என்பது, நேரடியாக புற்றுநோயை உருவாக்கக்கூடிய குரூப்-1 காரணி. ஆனால், இந்தச் செயற்கை இனிப்புகளை நம் வீடுகளில் பலகாரம் செய்வதற்குக்கூடப் பயன்படுத்துகின்றனர். கடலை மாவு, எண்ணெய் போன்ற மற்ற பொருட்களுடன், செயற்கை இனிப்பு வினை புரியும்போது என்ன விளைவு ஏற்படும் என்பதற்கு எந்த ஆய்வும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.''

''இந்தியாவுக்கு ஏன் ஃபிரிட்ஜ்?''

''இந்தியா ஒரு வெப்ப மண்டல நாடு. அவ்வப்போது சமைத்து, அவ்வப்போது சாப்பிடுவதுதான் நமக்கு ஏற்றது. நமது உணவுக் கலாசாரமும் அப்படிப்பட்டதுதான். ஆனால் குளிர் நாடுகளில், நான்கைந்து மாதங்கள் பனிப்பொழிவு இருக்கும்; விவசாயம் நடைபெறாது. அதனால் அந்த நாட்களுக்குத் தேவையான உணவைச் சேமித்து வைத்துக்கொள்ள அவர்களுக்கு ஃபிரிட்ஜ் தேவைப்பட்டது. அதை அப்படியே இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து, அதை ஓர் அத்தியாவசியப் பொருளாக மாற்றிவிட்டார்கள்'

''நாம் தினந்தோறும் சமையலிலும் வீட்டு உபயோகத்துக்கும் பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்களில் மிக மோசமான பூச்சிக்கொல்லிகள் கலந்திருக்கின்றன. 'விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது' என்றால், அதற்கு ஒரு வரம்பு இல்லையா? பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் முழுவதும் காற்றில் கரைந்துவிடுவதோ, மண்ணில் கலந்துவிடுவதோ இல்லை. அவை, பழங்களின் மீதும், காய்கறிகளின் மீதும் வீழ்ப்படிவாக (residue) படிகின்றன. இந்த வீழ்ப்படிவுக்கு அனுமதிக்கப்பட்ட வரம்பு (permissible limit) இருக்கிறது. இந்தியாவில் இந்த வரம்பைப் பல மடங்கு மீறி பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்கின்றனர் என்பதே நடைமுறை யதார்த்தம். ஆனால், இது குறித்த நாடு தழுவிய ஆய்வுகளோ, புள்ளி விவரங்களோ நம்மிடம் இல்லை. கிடைப்பவை எல்லாம் சொற்ப சாம்பிள்களைக்கொண்டு நடத்தப்பட்ட சிறு ஆய்வுகளே. அதை இந்தியாவின் பிரமாண்ட விவசாயச் சந்தைக்குப் பொருத்திப்பார்க்க முடியாது.

ஆனால், உலகின் மற்றப் பகுதிகளில் இது குறித்த ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. அப்படி இங்கிலாந்தில் நடந்த ஓர் ஆய்வில், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 97.98 சதவிகிதம் ஆப்பிள்களிலும், 91 சதவிகிதம் திராட்சைகளிலும், 93.3 சதவிகிதம் அன்னாசியிலும் ஆர்கனோபாஸ்பரஸ் (organophosphorus) என்ற ஆபத்தான நச்சு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆர்கனோபாஸ்பரஸ் உள்ளிட்ட பல பூச்சிக்கொல்லிகள், மேலைநாடுகளில் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை மிகச் சாதாரணமாக இந்தியக் கடைகளில் யாரும் வாங்க முடியும். இப்படி ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் தடை செய்த 100-க்கும் மேற்பட்ட பூச்சிக்கொல்லிகள், இந்தியச் சந்தையில் இன்று வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மரணத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தப் பூச்சிக்கொல்லிகளை, விவசாய நிலங்களில் தெளிக்கிறார்கள். அது காய்கறி மற்றும் பழங்களின் வழியே நம் உடலுக்குள் செல்கிறது. 'என்றைக்கோ ஒருநாள் ஆரஞ்சு, ஆப்பிள் சாப்பிடுவதால் என்ன வந்து விடப்போகிறது?' என நினைக்கலாம். ஒரு நாள், இரு நாட்களில் இதன் விளைவு தெரியாது. ஆண்டுக்கணக்கில் இப்படி பூச்சிக்கொல்லி கலந்த காய்கறி, பழங்களைச் சாப்பிடும்போது, மோசமான பல நோய்களை கொண்டுவருகிறது. மூளைத்தளர்ச்சியில் ஆரம்பித்து, சிறுநீரகம் - கல்லீரல் கோளாறு, நரம்புத் தளர்ச்சி, எலும்பு அடர்த்தி குறைவது... என நினைத்துப்பார்க்க முடியாத கேடுகளை ஏற்படுத்தும். மாம்பழத்தை கார்ஃபைடு கல் வைத்துப் பழுக்கவைக்கும் செய்திகளைத் தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் படித்துவருகிறோம். அந்த கார்ஃபைடில், பென்ஸிங் ரிங் காம்பவுண்டு (benzyne ring compound) இருக்கிறது. சிறிய அளவில் புற்றுநோய் அறிகுறி இருந்தால், அதைத் தூண்டிவிட்டு அதிகப்படுத்தும் ஆற்றல் அதற்கு இருக்கிறது'' என்ற எச்சரிக்கையோடு முடிக்கிறார் எழிலன்.

''எங்கே தவறு... யாரிடம் கோளாறு?''

''மேகி பிரச்னையில் நெஸ்லே நிறுவனத்தினர் என்ன சொல்கிறார்கள்? 'நாங்கள் சேர்க்கும் பொருட்களில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஒருவேளை, நாங்கள் பயன்படுத்தும் வெங்காயத்தை விளைவிக்கும் நிலங்களில் நிலத்தடி நீரில் நச்சு கலந்திருக்கலாம்' என்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு கோலா குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி கலந்திருப்பதாக சர்ச்சை எழுந்தபோது, 'எங்கள் தயாரிப்பில் பிரச்னை இல்லை. நிலத்தடி நீரில்தான் பூச்சிக்கொல்லி இருக்கிறது' என்றார்கள். இதில் நம் கவலையை அதிகமாக்குவது, நாடு முழுக்கவே நிலத்தடி நீர் மோசமான நச்சுக்களால் பாதிக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சிதான்''

''இன்று நம் அனைவர் வீடுகளிலும் நீக்கமற நிறைந்துவிட்டது 'கேன் வாட்டர்'. நிலத்தடி நீரை உறிஞ்சி, 'ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்' முறையில் சுத்திகரித்து, அதை அழுக்கு கேன்களில் நிரப்பி, வீடுகளுக்கு விநியோகிக்கின்றனர். அந்தத் தண்ணீரின் தரத்துக்கு யார் உத்தரவாதம்? கேட்டால், 'ஐ.எஸ்.ஐ தர அங்கீகாரம் பெற்றது' எனச் சொல்கிறார்கள். ஐ.எஸ்.ஐ என்பது, ஒரு தொழிற்சாலையின் இறுதி உற்பத்திப் பொருளின் தரத்துக்கான உத்தரவாதம் அல்ல. உதாரணமாக, ஒரு தண்ணீர் பாட்டில் நிறுவனத்துக்கு ஐ.எஸ்.ஐ அங்கீகாரம் தருகிறார்கள் என்றால், அது அந்தத் தண்ணீரின் தரத்தை மதிப்பிட்டுத் தரப்படுவது அல்ல; தண்ணீரைச் சுத்திகரிக்க அந்த நிறுவனம் பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் தரத்தை வைத்துத் தரப்படுகிறது. வேறு பல பொருட்களுக்கு இப்படி இயந்திரங்களை வைத்து முடிவெடுப்பது சரியாக இருக்கலாம். தண்ணீருக்கு எப்படி இந்தத் தர நிர்ணய முறை சரியாக இருக்க முடியும்?

தஞ்சாவூர் பகுதியில் விவசாயத்துக்கு அதிக உரம் பயன்படுத்துவதால், குடிநீரில் நைட்ரேட் அதிக அளவு கலந்திருக்கிறது. ராமநாதபுரம் போன்ற மானாவாரிப் பகுதிகளில் ஃப்ளோரைடு அதிகமாகக் கலந்துள்ளது. தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் குடிநீரில் ஃப்ளோரைடு கலந்திருக்கிறது. சென்னையில் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் இருந்து, 20-க்கு மேற்பட்ட மிக ஆபத்தான நச்சுப்பொருட்கள் நிலத்தடி நீரில் கலந்துகொண்டே இருக்கின்றன. இந்தப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட நிலத்தடி நீரைக்கொண்டு செய்யப்படும் உணவுப்பொருட்களில் காட்மியம், காரியம் போன்ற நச்சுக்கள் கலந்திருக்கின்றன!''

பஞ்சபூதங்களையும் மாசுபடுத்திய அவஸ்தையை அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறோம்!

உப்பு... தப்பு!

''எந்த உணவு, உற்பத்தியாகும் இடத்தில் இருந்து சாப்பிடும் தட்டுக்கு வர குறைந்த தூரத்தை எடுத்துக்கொள்கிறதோ, அதுவே சிறந்த உணவு'' என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் ராஜ்மோகன்.

* 'ஜங்க் ஃபுட்' (junk food) என்றால் நூடுல்ஸும் ஃபிரைடு ரைஸும் மட்டும் அல்ல. உப்பு, சர்க்கரை, கொழுப்பு... இவை மூன்றும் அதிகமாக இருக்கும் எல்லா உணவு வகைகளுமே ஜங்க் உணவுகள்தான். அது வீட்டில் செய்தாலும் சரி, ஹோட்டலில் வாங்கினாலும் சரி.

* ஜங்க் உணவுகளில் வைட்டமின்ஸ், மினரல்ஸ், புரதச்சத்து, நார்ச்சத்து... போன்றவை குறைவாகவே இருக்கும். இதை உண்பதால் குழந்தைகளுக்கு எந்தவிதமான சக்தியும் கிடைப்பது இல்லை. மாறாக, தேவையற்ற கொழுப்புதான் கூடும்.

* ஜங்க் வகை உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை குறைந்த வயதிலேயே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் குழந்தைகள் படிப்பு, விளையாட்டு என, எதிலும் தங்கள் சக்தியை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல்போகும்.

* மோனோ சோடியம் குளூட்டாமேட் என்பது ஒருவகை உப்பு. இது சுவைக்காகச் சேர்க்கப்படுகிறது. எந்த வகை உப்பாக இருந்தாலும் தினம் அதிகபட்சம் 3-4 கிராம் வரை மட்டுமே சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படிப் பார்த்தால், நமது அன்றாட சமையைலில் இதைவிட பல மடங்கு அதிகமாகவே உப்பைப் பயன்படுத்துகிறோம். இதனால் உடலில் சோடியம் அளவு அதிகமாகி, ரத்தக்கொதிப்பும், சிறுநீரக நோய்களும் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

* உணவின் சுவைக்காக சுவைக்கூட்டிகள் அதிகம் சேர்க்கும்போது, அந்தச் சுவைக்கு குழந்தைகள் அடிமையாகிவிடுகிறார்கள். பின்பு, சத்தான உணவு வகைகள் எதைத் தந்தாலும், 'வேண்டாம்' என ஒதுக்கும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

* பதப்படுத்தப்பட்ட உணவுகளை, குழந்தைகளுக்கு எப்போதாவது அவசரத்துக்குத் தரலாம். அதையே முக்கிய உணவாகத் தருவது நல்லது அல்ல. ஐந்து வயது வரை, வீட்டில் தயார்செய்த உணவுகளைக் கொடுப்பதே ஆரோக்கியமானது!