Wednesday, June 10, 2015

குருவருள் ஸித்திக்கும் !

குருவருள் ஸித்திக்கும் !

வியாழன் எனும் வானியல் கிரகமே ஜோதிட சாஸ்திரத்தில் குரு. பிரகஸ்பதி, தனகாரகன், புத்திரகாரகன், லோகபூஜ்யர், வாகீசர், பீதாம்பரர், பொன்னன் என்றெல்லாம் குரு பகவானைச் சிறப்பிப்பார்கள். தேவர்களின் குரு, சகல சாஸ்திரங்களும் அறிந்தவர், நவகிரகங்களில் சக்தி வாய்ந்தவர், அதிக சுபமானவர், நன்மை செய்பவர், எப்போதும் உதவக்கூடியவர் என்று ஜோதிடம் இவரைப் பலவாறாகப் போற்றும்.

நீர்த்தன்மை வாய்ந்த கிரகமான குரு பகவான், புனித நூல்களையும், மேதைத் தன்மையையும், நல்ல பண்புகளையும் குறிப்பவர். செல்வம், அதிர்ஷ்டம், புகழ், பக்தி, மந்திர ஞானம், ஆன்மிக நாட்டம், நல்லொழுக்கம், தியானம், தர்மம், குழந்தைகள், நீதிபதிகள், அமைச்சர்கள், வழக்கறிஞர்கள், மதம் மற்றும் அரசியலில் தலைமைப் பதவியில் இருப்பவர்களை இவரே ஆள்கிறார்.

ஒருமுறை, இந்திரன் முதலான தேவர்கள் மட்டுமின்றி, வித்யாதரர், கின்னரர், கிம்புருடர் ஆகியோரும் அடிக்கடி அசுரர் களின் இன்னல்களுக்கு ஆளாக நேர்ந்தது. மிகுந்த வலிமை, மந்திர சக்திகள், அற்புத அஸ்திரங்கள் போன்றவை தங்களிடம் இருந்தாலும், அசுரர்களை வெல்ல முடியாமல் திண்டாடினார்கள் தேவர்கள். எனவே, அசுரர்களை அடக்குவதற்கான வழிகேட்டு பிரம்மனைச் சரணடைந்தனர்.

''உங்களிடம் எவ்வளவு சக்திகள் இருப்பினும், குருவின் துணையும், வழிகாட்டுதலும் இல்லாமல் பகைவரை வெல்ல முடியாது. எனவே, நீங்கள் ஓர் ஆச்சார்யரைத் துணைக் கொள்ளுங்கள்'' என்று அறிவுறுத்தினார் நான்முகன். அதற்கேற்ப, தங்களுக்கு வல்லமை மிக்கதொரு குருநாதர் வேண்டும் எனும் பிரார்த்தனையுடன் மும்மூர்த்தியரையும் குறித்து தவம் செய்தனர் தேவர்கள். அவர்களின் தவத்தால் மகிழ்ந்த மும்மூர்த்திகளும், பிரகஸ்பதியை அவர்களுக்குக் குருவாக அளித்து அருள்புரிந்தனர்.

குருபகவான் தனது திரிகால ஞானசக்தியாலும், ஆன்ம சக்தியாலும் அசுரர்களை வெற்றிகொள்ளும் தந்திரங் களைக் கூறி, தேவர்களின் இன்னல்களைத் துடைத்து, இன்புறச் செய்தார் என்கிறது புராணம்.

தீர்க்க ஆயுள், வாக்குவன்மை, கல்வியில் மேன்மை, மனதுக்கு உகந்த உத்தியோகம் மற்றும் தொழில், திருமண யோகம் ஆகிய பேறுகளுக்கு குருவின் திருவருள் அவசியம் தேவை.

தனுசு, மீனம் ஆகிய உபயராசிகளின் அதிபதி இவர். சூரியனை ஆத்மகாரகன் என்போம். அந்த ஆத்மாவின் ஒளி, ஜீவன் என்றெல்லாம் கூறப்படுவது குருவே! இவர் லக்னம், கேந்திரம், திரிகோணம் ஆகிய இடங்களில் நற்பலன்களை அள்ளித் தருகிறார்.

ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து 1, 4, 7, 10ல் குரு இருக்கும் அமைப்பை கஜகேசரி யோகம் என்பர். இந்த யோகம் உள்ளவர்களுக்கு, மற்ற கிரகங்களால் ஏற்படும் தோஷங்களால் பாதிப்புகள் இல்லை.

சந்திரனும் குருவும் சேர்ந்திருந்தால், குருச்சந்திர யோகம். இதனால் பேரும் புகழும் தேடி வரும். செவ்வாயும் குருவும் இணைந்து நின்றால், குருமங்கள யோகம். இதன் பலனாக நிலபுலன்கள், வண்டி வாகன சேர்க்கை உண்டாகும்.

ராகு 6ல் நின்று, கேந்திரத்தில் குரு இருந்தால், அஷ்டலட்சுமி யோகம் உண்டாகும். சகல சுகங்களும் சந்தோஷமும் கிடைக்கும். ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று, பாவ கிரகங்களின் பார்வை இல்லாமல் அமைந்திருந்தால், அந்த ஜாதகர் பெருமையுடன் வாழ்வார் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

சரி, குரு பலம் இல்லாதவர்களும், அவரின் திருவருளை பரிபூரணமாகப் பெறுவது எப்படி?

ஜாதக ரீதியாக குரு பகவான் பாதிக்கப் பட்டால், நரம்புக் கோளாறுகள், தோல் மற்றும் வயிற்று நோய்கள், மூட்டு வலி, இதய நோய்கள், ரத்தம் அசுத்தம் அடைதல், கவலையும் பதற்றமும் தோன்றுதல் ஆகிய பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.

இந்த பாதிப்புகளைத் தவிர்க்க என்ன செய்யலாம்.?

வியாழன்தோறும் விரதம் அனுஷ்டித்து, அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, குருபகவானை வழிபட்டு வரலாம். குரு பகவான் சிறப்பாக அருளும் தலங்கள், அவர் வழிபட்டுப் பேறுபெற்ற ஆலயங்கள் ஆகியவற்றுக்குச் சென்று தரிசித்து நன்மை பெறலாம். அது மட்டுமின்றி, குருவின் அதிதேவதைகளான பிரம்மா, தட்சிணாமூர்த்தி ஆகியோர் அருள்பாலிக்கும் தலங்களைத் தரிசிப்பதும் நலம் பயக்கும்.

அந்த வகையில், அருள் சுரக்கும் குருபகவானின் திருக்கதைகள், நினைத்ததை நிறைவேற்றும் குரு பகவான் திருத்தலங்கள், குரு தோஷம் அகற்றும் தெய்வ மந்திரங்கள் முதலான தகவல்கள் அடங்கிய இந்தத் தொகுப்பு, உங்களுக்குக் குருவருளைப் பரிபூரண மாகப் பெற்றுத் தரும்.