Sunday, June 21, 2015

குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதா வீடு?

படத்திலிருந்து ஒரு காட்சி
படத்திலிருந்து ஒரு காட்சி
 
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கான குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குழந்தைகள் மீது நிகழ்த்தப்படுகிற பாலியல் வன்முறைகள் உலகத்தின் கண்களுக்குப் புலப்படுவதில்லை.

அப்படியே புலப்பட்டாலும் அவை கணக்கில் கொள்ளப்படுவதில்லை. காரணம், பாதிக்கப்படுகிற அனைவருமே தங்களுக்கு நேரும் கொடுமைகளை எதிர்க்கவோ அவற்றை வெளியே சொல்லவோ திராணியற்றவர்கள். அவர்கள் வெளியே சொன்னாலும் இந்தச் சமூகத்தின் கொடுங்கரங்களால் குரல்வளை நசுக்கப்பட்டு, அவர்களின் குரல் மரித்துப்போய்விடுகிறது.

கிட்டத்தட்ட எண்பது சதவீதக் குழந்தைகள் அறிந்தோ அறியாமலோ பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரக் கணக்கு. குழந்தைகள் மீது நிகழ்த்தப்படுகிற பாலியல் வன்முறை அல்லது சீண்டல்கள் பெரும்பாலும் அவர்களுக்கு நன்கு அறிமுகமான நபர்களாலேயே ஏற்படுகிறது. இது போன்ற கொடுமைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கப் பாக்ஸோ (POCSO) போன்ற சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களாலும் மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் குழந்தைகள் தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

பலரும் இன்று குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், தீய தொடுதல் ஆகியவற்றைப் பற்றி சொல்லித்தந்து வளர்க்கிறார்கள். ஆனால் குழந்தைகளின் செயல்பாடுகளிலும் நடத்தையிலும் ஏற்படும் திடீர் மாற்றத்தைக் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். சில சமயம் நாம் குழந்தைகள் மீது காட்டுகிற அதீதக் கண்டிப்பும் அவர்களை வாயடைத்துப் போகச் செய்துவிடும். குழந்தைகள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கிற போது, அவர்களும் தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பெற்றோரிடம் பயமின்றி, மனம்விட்டுப் பகிர்ந்துகொள்வார்கள்.

அஸ்வினியின் கதை

ஆனால் பள்ளி மாணவி அஸ்வினியால் அப்படித் தன் பெற்றோரிடமோ ஆசிரியர்களிடமோ தனக்கு நேர்ந்த எதையுமே பகிர்ந்துகொள்ள முடியவில்லை. ஏன்? அதை நேர்த்தியாகச் சொல்கிறது 'அஸ்வினி' என்ற குறும்படம். எப்போதும் துறுதுறுப்புடன் இருக்கும் அஸ்வினி, வகுப்பில் கவனம் செலுத்தாமல் வெளியே வெறித்துப் பார்த்தபடி இருக்கிறாள்.
ஆசிரியரின் சத்தம் கேட்ட பிறகே கவனம் கலைகிறாள். பள்ளி வேனில் இருந்து இறங்கி, வீட்டுக்குப் போக மறுக்கிறாள். அவளது நடத்தையில் மாற்றத்தை உணரும் ஆசிரியை, அவளது வகுப்பு ஆசிரியையிடம் தகவலைச் சொல்கிறாள். அஸ்வினிக்கு அவளது வீட்டில் பாலியல் தொந்தரவு ஏதேனும் நடந்திருக்கலாம் என்ற ஆசிரியையின் பதிலைக் கேட்டு வகுப்பாசிரியை கோபமடைகிறார்.

இது போன்ற கோபமும் அலட்சியமும்தான் அஸ்வினி போன்று லட்சக் கணக்கான குழந்தைகள் பாதிக்கப்படக் காரணம் என்று அந்த ஆசிரியை வெடித்துப் பேச, வகுப்பாசிரியை அஸ்வினியின் வீட்டுக்குப் போகிறார். அங்கே அஸ்வினியின் பெற்றோரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அஸ்வினியிடம் எல்லை மீறி நடந்துகொள்கிறான் அவர்கள் வீட்டு உறவினர் ஒருவன். அவனைக் கையும் களவுமாகப் பிடித்து, காவல் துறையிடம் ஒப்படைக்கிறார்கள். அதற்குப் பின் பள்ளியில் மனநல ஆலோசகர் ஒருவரைப் பணியமர்த்துகிறார்கள்.

இதுதான் அஸ்வினியின் கதை.

ஆனால் அஸ்வினிக்குக் கிடைத்ததைப் போன்ற பெற்றோரோ, ஆசிரியர்களோ, பள்ளியோ, சூழலோ அனைவருக்கும் கிடைத்துவிடுமா? குறைந்தபட்சம் வீடு என்கிற அமைப்பாவது குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டாமா?

எவையெல்லாம் பாலியல் வன்முறை?

குழந்தைகள் மீது நிகழ்த்தப்படுகிற பாலியல் வன்முறை என்பது பாலியல் வன்புணர்வு மட்டுமே என்று பலரும் நினைத்திருக்கிறார்கள். ஆனால் பாலியல்ரீதியாகக் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படுகிற எந்தவொரு செயலும் பாலியல் வன்முறைதான் என்கிறது குழந்தைகள் மீதான வன்முறை குறித்துச் செயல்படும் மத்திய நிலைக் குழு.

1. குழந்தைகளைப் பின்தொடர்ந்து சென்று பாலியல்ரீதியான வார்த்தைகளைச் சொல்வது, பாலியல் ரீதியான பாடலைப் பாடுவது.

2. பாலியல் சார்ந்த படங்களைக் காட்டுவது. அவை குறித்துக் குழந்தை களிடம் பேசுவது.

3. குழந்தைகள் குளிப்பதையும் அவர்கள் ஆடை மாற்றுவதையும் பார்ப்பது, அவர்களை அப்படிச் செய்யச் சொல்வது. குழந்தைகள் எதிரில் பெரியவர்கள் ஆடை மாற்றுவது.

4. குழந்தைகளைத் தவறான நோக்கத்துடன் அணைப்பது, முத்தமிடுவது. குழந்தைகளின் உறுப்புகளைத் தொடுவது.

5. குழந்தைகளிடம் தங்களது அந்தரங்க உறுப்புகளைக் காட்டுவது.
இவையும் இவை சார்ந்த பல விஷயங்களும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைதான்.