Sunday, November 17, 2013

பெண் பார்க்க வரும்போது எப்படி அலங்கரித்துக் கொள்வது?

பெண் பார்க்க வரும்போது எப்படி அலங்கரித்துக் கொள்வது?

திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் இளம் பெண்களுக்கான நகைகள் பற்றி தான் இந்த இதழில் பேசப் போகிறோம்! பெற்றோர், தங்கள் வசதிக்கேற்ப தம் மகள்களுக்கு தங்க நகைகள் அணிவித்து மகிழ்வார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் எத்தனைதான் தங்க நகைகள் செய்து வைத்தாலும் கூட திருமணத்தின் போது, தலைமுதல் காலை வரை செட்டாக அணிய ஃபேஷன் நகைகள் தான் கை கொடுக்கிறது.

மேலும் அவ்வப்போது ஃபேஷனுக்கு ஏற்ப ஏராளமான வடிவங்களில் இந்த நகைகள் வருவதால் மணமகளின் புடவைக்கு, அட்டகாசமாய் பொருந்துகின்றன இந்த ஃபேஷன் நகைகள். இவை மணமகளை ஒரு தேவதையாய் மாற்றிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

தன்னைப் `பெண்' பார்க்க வரும்போது ஒரு பெண் எப்படியெல்லாம் அலங்கரித்துக் கொள்ளலாம் என்று முதலில் பார்க்கலாம். மாப்பிள்ளை வீட்டார் பார்க்க வருவதற்கு முன்னரே, அவர்களின் கலாச்சாரம், ரசனை, எதிர்பார்ப்பு போன்றவற்றை முடிந்தவரை தெரிந்து கொள்ள முயற்சி செய்து, அதற்கு ஏற்றாற் போல் அலங்காரம் செய்வது உறவின் இனிமையை அதிகப்படுத்தும்! தங்களுக்குப் பொருந்தாத அதிக அலங்காரங்கள் செய்து கொள்வதாலும், அலங்காரமே செய்து கொள்ளாமல் ``இதுவே போதும்'' என்று அசால்டாக இருந்து விடுவதாலும், சில சமயங்களில் மாப்பிள்ளை வீட்டாருக்கு பெண்ணைப் பிடிக்காமல் போக வாய்ப்புகள் உண்டாகி விடுகிறது. மாப்பிள்ளை வீட்டாரின் டேஸ்டுக்கு பொருந்துமாறு `பாரம்பரிய' நகைகளா அல்லது `மாடர்ன்' நகைகளா என்று முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். ''first impression is the best impression" என்பார்கள். அதனால் மாப்பிள்ளை, முதல் பார்வையிலேயே பெண்ணை ஓகே சொல்லிவிட என்ன நகைகள்அணியலாம் என்று பார்க்கலாம்.

உடுத்தும் புடவைக்கு ஏற்றபடி, நகைகளைத் தேர்வு செய்ய வேண்டியதும் முக்கியம். பொதுவாக எல்லாத் தரப்பினரும் பெண்ணைப் பார்க்கும் போது, லட்சுமி கடாட்சமாய், அம்சமாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதனால், சிம்பிளான அந்தஸ்தான நகைகளை அணியலாம்.

ஒரு நெக்லெஸ், ஆரம், ஜடைக்கு சிம்பிளான ஜடை, பில்லை, காதுக்கு சற்று எடுப்பான கம்மல் செட் அல்லது ஜிமிக்கி, கை நிறைய வளையல்களும் அணியலாம். பெரும்பாலும் பெண் பார்க்கும் படலம் பகல் நேரத்தில் நடப்பதால், பிளைய்ன் நகைகள், எனாமல் நகைகள், மேட்சிங் நகைகள் போன்றவை பொருத்தமாக இருக்கும். நிகழ்ச்சி கிராண்ட் எனில் கூடுதலாக, சிம்பிள் நெத்திச் சுட்டியும், ஒட்டியாணம், வங்கியும் அணியலாம். தரமான ஒரு கிராம் தங்க நகைகள் அசல் தங்கத்தை விட அசத்தலாக, வண்ணமயமாக கிடைப்பதால் பெண்கள் அதிகமாக இதை விரும்பி அணிகிறார்கள். `மீனாக்காரி' நெக்லெஸ் மற்றும் ஆரங்களை மேட்சிங் வளையல்களுடன் அணிந்தால் வசீகரமாக இருக்கும்.

பாரம்பரிய கெட்டப்பில் ட்ரெஸ்ஸிங் செய்ய `நஹாஸ்' நகைகள் சரியான சாய்ஸ்.

ஒன்றிரண்டு முறை பெண் பார்க்க வந்து திருமணம் அமையாமல் போய் விட்டால் சில பெண்கள் விரக்தி அடைந்து, அலங்காரம் செய்து கொள்வதில் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்வதுண்டு. ஒவ்வொரு முறையும் சிறப்பாக அலங்கரித்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் பின்னர் உங்கள் நிஜ ஹீரோ உங்களைப் பார்க்க வரும்போது டல்லாக காட்சியளிப்பீர்கள்.

திருமணம் உறுதியாகி விட்டால், மணப்பெண்ணின் பொன் நகையைவிட முகத்தில் அரும்பும் புன்னகைதான் பிரகாசமாய் ஜொலிக்கும். இனி திருமணத்துக்கு முன் நிச்சயதார்த்தத்துக்கு ஏற்ற நகைகள் என்னென்ன என்று பார்க்கலாம். நிச்சயத்தின் போது பெண் செய்து கொள்ளும் அலங்காரம், திருமண அலங்காரத்துக்கு ஒரு ஒத்திகை என்றே சொல்லலாம், ஏனெனில் நிச்சயதார்த்தத்தின் போதே கிட்டத்தட்ட முக்கால் மணப்பெண் ஆகிவிடுவார்கள். இந்தத் தருணத்தில் பெண்கள் புடவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். அதாவது உடுத்தப் போவது பாரம்பரிய `காஞ்சிப் பட்டா', அல்லது வேலைப்பாடுகள் செய்யப்பட்ட `ஃபேன்ஸி பட்டா' என்பதைப் பொறுத்தே நகை சாய்சும் அமைய வேண்டும்.

அடுத்தபடியாக கவனிக்க வேண்டியது புடவையின் நிறமும் அதிலுள்ள டிசைனும்தான். புடவை `டார்க்' கலராக பாரம்பரிய பட்டில் இருந்தால், அதற்கு பிளையின் நகைகள் அசத்தலாக இருக்கும். அது பெங்காலி செட்டுகளாகவோ, காசு மாலை, மாங்காய் மாலை, கிளி அல்லது முல்லை மாலைகளாகவோ இருக்கலாம்! அதற்குத் தகுந்தாற் போல நெக்லெஸ், சுட்டி, அகலமான தொங்கட்டான்கள், பிளைய்ன் ஜடைபில்லைகளாகளோ தேர்வு செய்யலாம். வெள்ளையானக் கல் பதித்த நகைகள், வட நாட்டு பொல்கி நகைகள் இதற்குப் பொருந்தாது. எடுப்பான நஹாஸ் நகைகள் டீசன்டான மிடுக்கான தோற்றத்தைத் தரும். புடவையில் நெய்யப்பட்ட புட்டாக்கள், மாங்காய், அன்னம், கோடுகள், கட்டங்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு, அதற்கு ஏற்ப டிசைன் கொண்ட எந்த நகையை வேண்டுமானாலும் அணியலாம். இதுவே லைட்-கலர் பட்டுப் புடவைகளுக்கு, வெள்ளியில் செய்து தங்க பார்மிங் செய்யப்படும் ரூபி-எமரால்டு கல் நகைகள், முத்து செட்டுகள், `அன்-கட் டைமண்ட் போன்ற கற்கள் பதித்த ஏண்டிக் நகைகள், கெம்புக் கல் நகைகள் ஆகியவற்றை தேர்வு செய்யலாம். `லைட் கலர்' புடவைக்கு இந்த நகைகள் கான்ட்ராஸ்டாக தெரியுமாறு அணிய வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் நகைகள் எடுபடாமல் போய் விடும்.

இவற்றுள் எல்லா நகைகளும் பெரும்பாலும் எந்தப் பெண்ணுக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனால் பெண்ணின் முக அமைப்பையும், உயரத்தையும் கருத்தில் கொண்டு நாம் அணிய வேண்டியது, நெத்திச் சுட்டியும், காதணிகளும் தான். பெரிய வட்ட வடிவ முகம் உள்ள பெண்கள் மிக அகலமான பதக்கங்கள் உள்ள சுட்டிகளையும், பெரிய ஜிமிக்கிகளையும் தவிர்த்து மீடியம் சைசில் அணியலாம். அதே போல் நீள முகம் உள்ள பெண்கள் சற்று அகலமான சுட்டியையும், பெரிய சைஸ் ஜிமிக்கிகளும், அகலமான காதணிகளும் அணிய வேண்டும்.

அடுத்து வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பட்டுப் புடவைகளுக்கு வருவோம். தற்போது எம்ராய்டரி பட்டுப் புடவைகளுக்கு மவுசு அதிகரித்திருப்பதால் அனேகப் பெண்கள் இதைத்தான் விரும்பி அணிகிறார்கள். இந்த வகை புடவைகளுக்கு அணிய `கோல்டு பார்மிங்' நகைகளில் ஏராளமான சாய்ஸ் இருப்பதால் சுலபமாக நகைகளை செலக்ஷன் செய்து விடலாம். மேட்சாக, புடவையில் அதிக கல் வேலைப்பாடுகள் இருந்தால், குந்தன்-கல் நகை செட்டுகளையும், ஜர்தோஸி வேலைப்பாடுகள் இருந்தால் ஏண்டிக் பாலிஷ் செய்யப்பட்ட பொல்கி_கல் நகைகளையும் அணியலாம்.

வண்ண மயமான கற்கள் மற்றும் பீட்ஸ்கள் பொருத்தப்பட்ட நகைகளையும் பொருத்தமாக மேட்சிங் செய்து அணியலாம். ஆனால் இவை அனைத்தும் சரியான பொருத்தத்தில் சிம்பிளாக இருக்க வேண்டும். அதாவது, சோக்கர்கள் என்று பார்த்தால் சுமார் ஒரு இன்ச் அகலத்திலும் அதற்கு மேட்சாக அரை இன்ச் அகல ஆரமும், தகுந்தாற்போல மற்ற ஆபரணங்களும் அமைய வேண்டும்.

நிச்சயதார்த்தத்தின் போதே மிக கிராண்டாக அலங்கரித்துக் கொண்டால், திருமண அலங்காரம் அதற்கும் ஒரு படி மேலே இருக்க வேண்டும். நீங்கள் நிச்சயதார்த்தத்தில் அணியும் நகைகள் உங்கள் உற்றார் உறவினரின் ஆர்வத்தை ``அடுத்து திருமணத்துக்கு என்ன நகை'' என்று தூண்டும் விதமாக இருக்க வேண்டும்.

நன்றி குமுதம்