Tuesday, November 5, 2013

மதிப்பெண்ணில் இல்லை வாழ்க்கை

மதிப்பெண்ணில் இல்லை வாழ்க்கை

By சா. கந்தசாமி
 
 
அன்றைக்கு ஆசிரியர் என்றால் அவர் கையில் பிரம்பு ஒன்று குறியீடாக இருந்தது. இன்று அது போய்விட்டது. பெற்றோர்கள் யாரும் தன் குழந்தைகளுக்கு அடித்துப் பாடம் சொல்லிக் கொடுங்கள் என்று ஆசிரியர்களிடம் சொல்வதில்லை. பெற்றோர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் குழந்தைகளைத் திட்டுவதோ அடிப்பதோ இல்லை. அதுபோலவே மற்றவர்கள் அடிப்பதையும் அவர்கள் விரும்புவது கிடையாது. சமூகத்தில் ஏற்பட்ட கலாசார மாறுதலோடு, குழந்தைகள் பற்றிய  புரிதலும் மாறிவிட்டது.
 
 
சில மாணவர்கள் ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை உடனடியாகப் பிடித்துக்கொண்டு விடுகிறார்கள். வேறு சிலர் சிறிது காலம் தாழ்த்தி - ஆனால் சரியாகக் கற்றுக் கொண்டு விடுகிறார்கள்.
 
அதுவரையில் காத்திருக்கும் பொறுமை ஆசிரியருக்கோ, பெற்றோர்களுக்கோ இல்லை. சரியாகக் கற்றுக் கொடுக்கவில்லை என்று, ஆசிரியர் நிர்வாகத்தாலும் பெற்றோர்களாலும் தண்டிக்கப்படுகிறார். மகனோ - மகளோ படிப்பில் பின்தங்கிப் போய்விடுகிறார்கள் என்று பெற்றோர்கள் மனம் பதைக்கிறார்கள். அதனால் மாணவர்களை விளையாட விடுவதில்லை - மற்ற குழந்தைகளோடு பேச, பழக விடுவது கிடையாது. டியூஷன் அனுப்புகிறார்கள். திரும்பி  வந்ததும் புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொல்கிறார்கள்.
 
 ஆறு வயதில் இருந்து தன் மகனோ மகளோ வகுப்பில் எல்லா பாடத்திலும் முதலாக இருக்க வேண்டும், நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வேண்டும், கிரிக்கெட், ன்னிஸில் சிறப்பாக பெயர் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆசைப்படுவதில் தவறொன்றும் இல்லை. முயற்சி செய்தால் சிலவற்றில் முதன்மை பெற முடியும். பலவற்றில் முதன்மை பெற முடியாமல் போகும். எல்லாரும் எல்லாவற்றிலும் முன்னணியில் இருக்க முடியாது. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
 
பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் இவையெல்லாம் அறிவின் களஞ்சியங்கள் இல்லை. அவற்றில் இருந்து அறிவு என்பதை அள்ளிக்கொண்டு வந்துவிட முடியாது. அவை மனித அறிவால் உண்டாக்கப்பட்டவை. மனிதர்கள் உண்டாக்கியவை எல்லாம் குறைபாடு கொண்டவை. வளர்ச்சிக்கும், மாறுதலுக்கும் உட்பட்டவை.
 
சிலருக்குக் கணிதம் எளிதாக இருக்கும். பலருக்கு வேதியியல், இயற்பியலில் படிக்கப் பிடிக்கும். இன்னும் சிலர் பொருளாதாரம், சட்டம் படிப்பார்கள். தொல்லியல், இசை, நடனம், இலக்கியம் படிக்கிறவர்களும் இருக்கிறார்கள். வாழ்க்கை என்பதில் ஒரு படிப்புதான் என்பதில்லை. எதில் உண்மையான  ஈடுபாடு, ஆர்வம் இருக்கிறது என்பதை அறிந்து அதில் ஆற்றுப்படுத்தினால் சிலர் முதலாவதாக வருவார்கள். அதுதான் அசலான கல்வி. இது உளவியல் உண்மை.
 
வாழ்க்கையின் யதார்த்தம் அசலான கல்வி என்பதைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது. எதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமோ அது முன்னே வந்து விடுகிறது. அந்தக் கல்வியைப் பெற ஒவ்வொருவரும் முன்னே நிற்கிறார்கள். மனிதர்கள் தோற்றத்தில் ஒன்றுபோல் இருந்தாலும் மூளையின் செயல்பாட்டில் எல்லாரும் ஒன்றில்லை. ஒவ்வொருவரின் அக்கறையும் விருப்பமும் வேறுபட்டு இருக்கிறது. எனவே எல்லாரும் க்டர், எஞ்சினியர் என்று படிக்க முடியாது. அதோடு தரமான கல்வி கொடுக்க சர்வதேச அளவில் மதிப்புப் பெற்ற பல்கலைக்கழகங்கள் இங்கு இல்லை. ஏழைகளுக்கு ஏற்ற எளிய கல்வி என்பதுபோல ஒரு மாதிரியான கல்வியே கிடைக்கிறது. அதைப் பெறவே பெரும் போட்டி நடக்கிறது.
 
கல்லூரிகளில் படிக்கும் எல்லா மாணவர்களும் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற முடியாது. அதற்கு ஏற்ற மாதிரி கற்பிக்க பேராசிரியர் இல்லை. கற்க மாணவர்களும் தயார் கிடையாது. கல்லூரிகளில் தகுதி அடிப்படையிலும், பணம் கொடுத்தும் சிபாரிசு முறையிலும் சேர்ந்தவர்களில் பலர் புதிய சூழ்நிலையில் தங்களை அறிந்து கொள்கிறார்கள்.
தேர்ந்த துறையில் ஆர்வம் இல்லாமல் போகிறது. தங்களால் படித்து முடிக்க முடியாது என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள். பெற்றோரின் பெரு விருப்பம், பணச் செலவு, வங்கிக் கல்வி கடன் போன்றவை அவர்களை வருத்துகிறது. மனச் சிதைவுறுகிறார்கள். மலர வேண்டிய இளம் பருவத்தைத் தொலைத்துவிட்டு வீட்டை விட்டு ஓடி விடுகிறார்கள்.  வெகு சிலர் தற்கொலை செய்து கொண்டு விடுகிறார்கள்.
 
கல்வி எப்பொழுதும் படிக்கும் மாணவர்களின் இயல்போடு இணைந்திருப்பது இல்லை. மகா மேதைகளை அது வஞ்சித்து விடுகிறது. சராசரி ஆள்களோடு சேர்த்துக் கொண்டு விடுகிறது. கணித மேதையான ஸ்ரீனிவாச ராமானுஜன் ஆங்கிலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெயில். இரண்டு முறை அந்தக் காலத்து எம்.ஏ. எழுதினார். அதை முடித்தால்தான் கல்லூரியில் படிக்கலாம். இரண்டு முறையும் பெயில். எனவே சென்னை துறைமுகக்கழகத்தில் டாலி கிளார்க் வேலைக்குச் சேர்ந்தார். குறைந்த சம்பளம். டாலி கிளார்க்கின் வேலை, கப்பலில் இருந்து கிரேனில் வரும் மூட்டைகள் தரையில் இறக்கப்படுவதற்கு முன்னரே அவற்றை எண்ணி எழுதி வைக்க வேண்டும். ஆனால், அவர் சோர்ந்து போகவில்லை. வேலை பார்த்துக்கொண்டே தனக்குத் தெரிந்த, பிடித்தமான கணிதத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். சாதாரணமான நோட்டுப் புத்தகத்தில் மகத்தான கணக்குகள் போட்டார். அவர் போட்ட பல கணக்குகள் புதிர் கணக்குகளாக உள்ளன.
 
உலகம் முழுவதிலும் ஆங்கிலம் தெரிந்தவர்கள் படித்து மகிழும் சிறந்த கதைகளை எழுதியவர் ஆர்.கே. நாராயணன். அவரின் "மால்குடி கதைகள்' இன்றுவரை தொடர்ந்து படிக்கப்பட்டு வருகின்றன. ஆங்கிலத்தில் கதைகள் எழுதிய அவர் பி.ஏ. ஆங்கிலத்தில் பெயில். அதனால் அவர் படைப்பாற்றலோ, எழுத்தின் தரமோ பாதிக்கப்படவில்லை.
 
விஞ்ஞானத்தில் மகாஞானி என்று அறியப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தன் மாணவப் பருவத்தில் அப்படியொன்றும் ஜொலிக்கவில்லை. ஒரு சாதாரண மாணவனாகதான் இருந்தார். அவர் பொது விதிக்கு உட்பட்டவர் இல்லை. அதுதான் முக்கியம். பல்கலைக்கழகத்தில் சேர்ந்தால் அறிவை, ஞானத்தை அள்ளிக்கொண்டு வந்துவிட முடியாது.
 
மாணவர்கள் திறமை என்பது மனப்பாடம் செய்வதோ மதிப்பெண் பெறுவதோ இல்லை. மனத்திற்கு இருக்கும் ஆற்றலை செயலாக மாற்றுவதுதான்.  படிக்கவில்லை, அதிகமான மதிப்பெண் பெறவில்லை என்பதற்காக மாணவர்களை அவமரியாதையாகப் பேசுவது, நாவால் சுடுவது போன்றவை அவர்களை கோபமும் வருத்தமும் அடைய வைக்கின்றன. பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து அவமானப்படுத்துவது தாள முடியாமல் போய்விடுகிறது. அதன் காரணமாக தன்னிலை இழந்துவிடுகிறார்கள். அது சமூகத்தின் குற்றமாகிறது.
 
 மாணவர்கள், கல்லூரிகள் பணம் கறக்கக் கிடைத்த மாடுகள் இல்லை. அவர்கள் அதிகமான மதிப்பெண் பெறவில்லை என்பதற்காக பால் வற்றிப் போன மாடுகள் போல விரட்டியடிக்கப்பட வேண்டியவர்கள் இல்லை. அவர்கள் தங்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண் பெற ஊக்கமும் உற்சாகமும் கொடுக்க வேண்டும். கல்வியின் பயன் என்பது நல்லறிவும், நல்லொழுக்கமும், பண்பாடும், கலாசாரத்தில் ஈடுபாடும் கொண்ட மனிதர்களை உருவாக்குவதுதான்.அதில் பயிற்சியோடு திறமையும் சேர்ந்து போகிறது. அதனால் பணம் சம்பாதிப்பது கார் வாங்குவது, மாளிகை கட்டிக் கொண்டு வாழ்வது எல்லாம் வந்துவிடுகிறது.
 
பணம் சம்பாதிக்கவே படிப்பு என்ற பேராசையை, வெறியை பெற்றோர்கள் முதலில் கைவிட வேண்டும். கல்வி வியாபாரிகளின் தந்திரங்களில் இருந்து இளந்தலைமுறை மாணவர்கள் தப்பித்துக்கொள்ள வேண்டும். அதற்குத் தகுந்த சூழ்நிலையை சமூகம் ஏற்படுத்த வேண்டும். அதுதான் சமூகப் பிரச்னை. சமூகத்தைப் பழிவாங்குவதாக எண்ணி தற்கொலை செய்து கொள்கிறார்கள்; ஆசிரியர்களைக் கொல்கிறார்கள்.
 
படிப்பு என்பது மதிப்பெண் சார்ந்ததில்லை. குறைவான மதிப்பெண் பெற்றவர்கள், பெயிலாகிப் போனவர்கள் எல்லாரும் உதவாக்கரையாகப் போனவர்கள் கிடையாது. அவர்களில் பலர் சமூகத்தின் அச்சாணியாக இருந்து மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறார்கள்.
 
எனவே குழந்தைகளை குழந்தைகளாகவும் மாணவர்களை மாணவர்களாகவும் வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும், சமூகத்திற்கும் இருக்கிறது என்பதே உண்மை.