Saturday, November 2, 2013

ஆல்கஹாலும் புகைப்பழக்கமும் தாம்பத்திய வாழ்வை பாதிக்கின்றன

தம்பதிக்குள் மகிழ்வாகப் போய்க்கொண்டு இருந்த தாம்பத்திய வாழ்க்கைக்குள் திடீரென்று புகைச்சல் கிளம்ப, என்னவெல்லாம் காரணங்கள் இருக்கும்? கணவன்- மனைவிக்குள் சின்னதாக வேர்விடும் ஈகோ, திடீரென்று வந்து தாக்கி நிலைகுலையச் செய்யும் நோய், எதிர்பாராத விபத்து, நாற்பது வயதைத் தாண்டிய பிறகு உடலுக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவைதான் என்று நினைத்துக்கொண்டு இருப்போம். ஆனால், புகைப் பழக்கமும் தாம்பத்திய வாழ்வைப் பாதிக்கிறது என்பதுதான் நம்ப முடியாத உண்மை. நவீன வாழ்க்கையில் ஆல்கஹாலும் புகைப்பழக்கமும் தாம்பத்திய வாழ்வை அதிகமாக பாதிக்கின்றன. ஆல்கஹாலைக் காட்டிலும் புகைப்பழக்கம் மிக அதிகமாகப் பாதிக்கிறது.

 'புகைப்பழக்கம் நுரையீரலை மட்டும்தானே பாதிக்கும்... தாம்பத்தியத்தை எப்படி பாதிக்கும்' என்று மூளையைக் கசக்காதீர்கள்.  

ஆண்களைப் பொறுத்தவரை தாம்பத்திய உறவுக்கு முக்கியமே அவர்களின் பாலுறுப்பு விறைப்புத்தன்மை அதிக நேரம் நீடித்து இருப்பதுதான். இந்த விறைப்புத்தன்மையைத்தான் புகைப்பழக்கம் பாதிக்கச்செய்கிறது. 'ஆண்களின் பாலுறுப்பு மற்றும் விறைப்புத்தன்மைக்கு நான் கேரண்டி' என்று பொறுப்பெடுத்துக்கொள்வது, அந்த உறுப்பில் இருக்கும் 'கேவெர்னோசாயில் ஸ்பேஸ்' என்கிற பகுதி.

நம் உடலில் ஓடிக்கொண்டு இருக்கக்கூடிய ரத்தத்தின் குறிப்பிட்ட அளவு பாலுறுப்பை நோக்கிப் பாயும்போது, அந்த ரத்தம் இந்த ஸ்பேஸ் பகுதியைத் தொடும். அபோது, சுருங்கிய நிலையில் இருக்கும் பாலுறுப்பு விறைக்க ஆரம்பிக்கிறது.

பொதுவாக ரத்தக்குழாய்கள் மூன்று லேயர்களால் ஆனது. மூன்றாவது இன்னர் லேயரான எண்டோ தீலியம், புகைப்பழக்கத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளாகி, ரத்த ஓட்டத்துக்கு ஏற்ப, குழாய்களை விரிவடையவிடாமல் செய்யும். குறைந்த ரத்த ஓட்டத்தால் பாலுறுப்பின் விறைப்புத்தன்மையின் வீரியம் குறையும். இதனால் தாம்பத்தியம் புகைய ஆரம்பிக்கிறது.

இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லவேண்டுமானால், சிகரெட் புகைக்கும்போது, 60 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உண்டாகி, 400 விதமான நச்சுக்கள் உற்பத்தி ஆகின்றன. இதில் தார், கார்பன் மோனாக்சைட், நிக்கோட்டின் போன்ற நச்சுகள் அதிகம். இதில், கார்பன் மோனாக்சைட்தான் அதிக நச்சுத்தன்மை கொண்டது. உதாரணத்துக்கு, மனிதனை ஓர் அறையில் அடைத்து, அந்த அறைக்குள் கொஞ்சம் கார்பன் மோனாக்சைட் வாயுவைச் செலுத்தினால், அரை மணி நேரத்துக்குள் ஆள் பரலோகம் போயிருப்பான். அப்படிப்பட்ட வீரிய நச்சுத்தன்மை உள்ள வாயுவைத்தான் சிகரெட் புகைக்கும் எல்லோரும் உள்ளே இழுக்கிறார்கள். இதில் நிக்கோட்டின் ஆபத்தாகும் விதம் வேறுவிதமானது. புகைக்கும் பழக்கம் உள்ளவர்களை மேலும் அடிமையாக்குவதே இந்த நிக்கோட்டின்தான். இன்னும் குறிப்பாக, எண்டோ தீலியம் லேயரைப் பதம் பார்ப்பது என்றால், இந்த நிக்கோட்டினுக்கு அவ்வளவு குஷி!

எண்டோதீலியத்தின் நெகிழ்வுத் தன்மையை இழக்கவைத்து விறைப்பாக்கும் வேலையை, கனகச்சிதமாகச் செய்து முடித்த பின், ரத்தத்தில் உள்ள கொழுப்புகள் அதன் மேல் படிந்து ரத்த ஓட்டத்தின் வேகமும் மட்டுப்படுகிறது. இந்த நிக்கோட்டின், பாலுறுப்பின் எண்டோதீலியம் வரை பரவி, கேவெர்னோசாயிஸ் ஸ்பேஸுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கிறது. இதனால் விறைப்புத்தன்மை குறைந்து, சந்தோஷம் குறைந்து போகிறது!

'எனக்கு, புகைக்கும் பழக்கம் இல்லை. என் நண்பர்களோடு அடிக்கடி பார்ட்டிக்குப்  போவேன். அப்போது அவர்கள் சிகரெட் புகைக்கும்போது அருகில் இருப்பேன். அது என்னைப் பாதிக்காது' என்று சிலர் கருதுவது உண்டு. புகைபிடிப்பவர்களைவிட, புகையை சுவாசிப்பவர்களே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அதனால் புகைவருகிற பக்கம்கூடப் போவதைத் தவிர்த்துவிடுங்கள். அப்புறம் தாம்பத்திய வாழ்வில் சந்தோஷம் காலைக்கூட நீட்டாது.

ஆண்களுக்கு சரி. பெண்களுக்கு? என்று யோசிக்கிறீர்களா?  

இப்போது ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் புகைப்பதும் குடிப்பதும் சகஜமாகிவிட்டது. ஆண்களுக்கு உண்டாகும் அதே பிரச்னைகள்தான் பெண்களுக்கும். பாலுறுப்பில் வறட்சித்தன்மை ஏற்பட்டு, பாலுறவின்போது வலியைத் தோற்றுவிக்கும். இதனால் இன்பமாக முடிய வேண்டிய தாம்பத்திய உறவு, அதிருப்தியிலும் வலியிலும்தான் முடியும். இது குடும்ப வாழ்வில் பெரும் விரிசலையே ஏற்படுத்திவிடும்.


 தீர்வைத் தரும் தெரப்பி!

புகை மற்றும் மதுப்பழக்கத்தை விட்டொழிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. உடனடியாக விடுபடுவது ஒன்றே நல்ல தீர்வைத் தரும்.  

 தகுந்த மருத்துவரை ஆலோசித்து அவரது வழிகாட்டுதலில் 'புனர்வாழ்வு சிகிச்சை' எடுத்துக்கொள்வது நல்லது.

 நிக்கோட்டினுக்கு அடிமையானவர்கள், மருத்துவரின் பரிந்துரையில், நிக்கோட்டின் 'ரீபிளேஸ்மென்ட் தெரப்பி'யை எடுத்துக்கொள்வது இன்னும் பலனளிக்கும்.  

 எல்லாவற்றுக்கும் மேலாக, பாலுறுப்புகள் பாதிக்காத வண்ணம் சுத்தமாகப் பராமரிப்பதும் மிக முக்கியம்.