Monday, November 25, 2013

எதுவந்தபோதும் எதிர்கொள்வோம் என்கிற மனஉறுதி

ஒருமுனைப்பட்ட முயற்சி இருந்தால்போதும், வெற்றி நிச்சயம். கூடவே இன்னொரு குணமும் சேர்ந்து அமைந்துவிட்டால், அவ்வளவுதான், சிம்ப்ளி அன்ஸ்டாப்பபிள்தான். அது என்ன க்வாலிட்டி? ஆன்ட்ரூஸ் சொல்வதைக் கேட்போம்.

''மாத்திக்கணும் சார். சூழ்நிலைக்கு ஏத்தமாதிரி நம்மள மாத்திக் கணும். நாம ஏதோ ஒண்ணு புதுசா பண்ணனும்னு நினைச்சிக்கிட்டு இருப்போம். நமக்கு முன்னே வேற ஒருத்தன் அதையே பண்ணிட்டுப் போயிடுவான். உடனே நாம மனசு தளர்ந்துடக்கூடாது. அதையே இன்னும் வேற எப்படிப் பண்ணலாம்னு பார்க்கணும். இல்லியா... அதை விட்டுட்டு மொத்தமுமே புதுசா வேற எதையாவது முயற்சி செஞ்சுபார்க்கணும். அப்பப்போ என்னென்ன நடக்குதோ, அதுக்கு ஏத்தமாதிரி நாமும் மாறிக்கிட்டே இருக்கணும். அப்போதான் ஜெயிக்க முடியும். இல்லைன்னா நாம இருக்கற இடத்துலயே இருக்க வேண்டியதுதான்.''

ஆன்ட்ரூஸ். நாகப்பட்டினம் மாவட்டத்துல, ஒரு கடலோர கிராமத்துல இருந்து சென்னைக்கு வந்த இளைஞன். படிப்பு அதிகம் இல்லை. ஆனா, கலை ஆர்வம் எக்கச்சக்கம். ஏன் கேட்கறீங்க..? நகைச்சுவை யில அவனை அடிச்சுக்கவே முடியாது. ஒவ்வொரு அசைவிலேயும் 'சென்ஸ் ஆஃப் ஹ்யூமர்' பொங்கி வழியும். ஆனா, ஆச்சா¢யம் என்னன்னா, அவன் வீட்டுல வறுமைன்னா வறுமை, அப்படியரு கொடிய வறுமையில வளர்ந்தவன். அவனைப் பார்த்த மாத்திரத்துலயே அவனோட வறுமையை யார் வேணுமின்னாலும் சட்டுன்னு புரிஞ்சுக் குவாங்க..!  

எப்படியாவது சினிமாவுல ஜெயிச்சுட ணும்னு சென்னைக்கு வந்தான். ஒண்ணும் நடக்கலை. சாப்பாட்டுக்கு என்ன செய்றது..? எங்கெங்கேயோ சுத்தி, அம்பத்தூர்ல ஒரு கம்பெனியில நைட் செக்யூரிட்டி வேலையில சேர்ந்துட்டான். அநியாயத்துக்கு குறைந்த சம்பளம். 'சம்பளம் யாருக்கு சார் வேணும்..? ராத்திரியில எங்கே சார் போய்த் தூங்கறது..? அதுதான் 'சேஃப்'ஆ செட்டில் ஆயிட்டேன்!' என்பான் காமெடியாக.

'பகல்லே அங்கேயே ஏதாவது ஒரு மூலையில படுத்துத் தூங்கிடுவேன். கம்பெனி கேன்டீன்ல குறைஞ்ச விலையில சாப்பிட்டுக்குவேன். போதாக்குறைக்கு நம்ம பேச்சைக் கேட்க, கைதட்ட நாலுபேரு எப்பவும் பக்கத்துல இருக்காங்க. இது போதாதா சார், லைஃப்பு சொர்க்கமாப் போகுது சார்.'

நல்ல மழை. விடாம கொட்டிக்கிட்டு இருந்தது. முழுக்க நனைஞ்சுபோய் சொட்டச் சொட்ட என் ரூமுக்குள்ளே வந்தான் ஆன்ட்ரூஸ்.  

'சார்... எங்க மேனேஜர் உங்ககிட்ட இந்த லெட்டரை குடுத்துட்டு வரச் சொன்னார்' என்று நீட்டினான். புரிந்தது. 'அட்ஜர்ன்மென்ட் லெட்டர்'. வாங்கி வைத்துக்கொண்டேன்.

'உட்காருங்க, நனைஞ்சி வந்துருக்கீங்க...'

'உட்கார்ந்தா உலர்ந்துடுமா சார்..?'

சற்றும் தயக்கம் இன்றி பதில் வந்தது.

'முன்பின் தெரியாத ஒரு ஆபீஸர்கிட்ட இப்படிப் பேசறியே... உங்க மேனேஜர்கிட்ட சொல்லிட்டா என்ன ஆகும் தெரியுமா..?'

'சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே...?'

'இல்லை, சொல்லுங்க...'

'என்ன... நம்மாலதான் ஆபீஸர்கிட்ட துடுக்காப் பேச முடியலை. இவனாவது பேசறானேன்னு சந்தோஷப்படுவாரு...'

காலை சுமார் 11 மணிக்கு வந்தவனை ஈவினிங் 5 மணி வரைக்கும் உட்கார வைச்சுட்டேன். என் வேலையும் பார்த்துக் கொண்டு அவனோடும் பேசிக் கொண்டிருந்தேன்.

அன்னைக்கு என் ரூமுக்கு வந்தவங்க அத்தனைபேரும் அவனோட நகைச்சுவைப் பேச்சுல மயங்கிட்டாங்க. அதுல ஒருத்தர், தங்கமுத்து. ஈ.சி.ஆர்.-ல ஹாலிடே ரிசார்ட் வச்சி நடத்துறவரு. அப்பவே அவனோட பேசி தன்னோட ரிசார்ட்ல வேலைக்குச் சேர்த்துக்கிட்டாரு. இடம், சாப்பாடு எல்லாம் போக கணிசமான சம்பளமும் குடுத்தாரு.

ரிசார்ட்ல இருந்து, சென்னையின் மத்தியில இருக்குற ஸ்டார் ஓட்டல். அங்கிருந்து அப்படியே சிங்கப்பூர்.... சினிமாவில் நடிக்கிற ஆசை இன்னமும் நிறைவேறவில்லைதான். ஆனால், மலேசிய டிவி வரையில் சென்றுவிட்டான். அவனது இயல்பான கலப்படமற்ற நகைச்சுவை அவனை மேலே மேலே ஏற்றி வைத்துக்கொண்டிருக்கிறது.

இப்போதும்கூட, தன் சட்டைப்பையில் நடிகர் நாகேஷ் படம் இருக்கிறதா என்று உறுதிசெய்து கொண்டுதான் வெளியிலேயே கிளம்புகிறான். (கேட்டால், 'அந்தாளு மனுஷனே இல்லை சார்!' என்பான். தப்பா நெனைக்காதீங்க, நாகேஷ்மேல் அவனுக்கு அப்படி ஒரு பிரமிப்பு!)

'சினிமாவுல நடிச்சுதான் லைஃப்ல மேல வரமுடியும்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா, அப்படி இல்லைங்கறதைப் புரிஞ்சுக் கிட்டேன். நான் சென்னைக்கு வந்து இறங்கினப்போ எனக்குத் துணையோ, தெரிஞ்சவங்களோ யாருமே இல்லை. என்னுடைய நகைச்சுவைதான் என்னை இன்னைக்கு சிங்கப்பூர் வரைக்கும் கொண்டு போயிருக்கு. என்ன ஒண்ணு...

சினிமாவுக்கு நான் நினைச்சிருந்த நகைச்சுவை வேறே. ஓட்டல்ல 'லைவ்'-ஆ பண்ற காமெடி ஷோங்கறது வேற. இங்கே, ஏதேனும் ஒண்ணு புதுசாப் பண்ணிக்கிட்டே இருக்கணும். ஏன்னா, நம்மளைவிடவும் ஷோவுக்கு வர்ற ஆடியன்ஸுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அவங்க இந்தமாதிரி எத்தனை ஷோ பார்த்துருப்பாங்க..?

அதுமட்டுமில்லை, உருப்படியாப் பண்ணலைன்னா தொலைச்சிடுவேங்கற மாதிரி சிலபேர் வருவாங்க. அவங்க எல்லோருமே பெரிய மனுஷங்களாதான் இருப்பாங்க. ஃப்ரன்ட் ரோலதான் உட்காருவாங்க. இந்த சவால்தான் சார் எனக்குப் புடிச்சிருக்கு'.

'இப்படி எத்தனை ஆன்ட்ரூஸ்கள்! ஊர், பேர் தெரியாத நிலையில் இருந்து பேரும் புகழும் மிக்க நிலைக்கு உயர்ந்தவர்கள் எத்தனை எத்தனை பேர்! இவர்கள் அத்தனை பேருக்கும் பொதுவாக இருப்பது எது..? எதுவந்தபோதும் எதிர்கொள்வோம் என்கிற மனஉறுதிதானே..?

யாரிடமும் எதற்காகவும் கை ஏந்தாமல், தனக்குத்தானே கைகொடுத்துத் தன்னை உயர்த்திக்கொண்ட ஆன்ட்ரூஸ்களைக் காட்டிலும் சிறந்த 'இன்ஸ்பிரேஷன்ஸ்' இருக்க முடியுமா என்ன..?'