Tuesday, November 12, 2013

நீரிழிவின் அரவணைப்பில் நம் விழிகள்! - தேவை விழிப்புணர்வு

நீரிழிவு நோய் -  21-ம் நூற்றாண்டின் மனித இனத்துக்கே சவால் விடும் ஒரு சுகாதாரம் மற்றும் சமூகவியல் சார்ந்த பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

கடந்த 1922-ம் ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ் பெஸ்ட் என்பவருடன் இணைந்து நீரிழிவு நோயாளிகளின் உயிர் காக்கும் இன்சுலினைக் கண்டுபிடித்தார். பொதுமக்களிடையே நீரிழிவைப் பற்றிய விழிப்பு உணர்வை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பன்னாட்டு நீரிழிவு நோய் கூட்டமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து, ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க்கின் பிறந்தநாளை உலக நீரிழிவு தினமாக அறிவித்தது.

ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் மற்றும்  சார்லஸ் பெஸ்ட் அதன்படி, உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14-ம் நாள் 'உலக நீரிழிவு தினமாக' அனுசரிக்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி, தற்போது உலக அளவில் 346 மில்லியன் பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்தியாவில் நீரிழிவின் பாதிப்பு மிக அதிகம். எவ்வளவு தெரியுமா?

62.4 மில்லியன்.

மேலும், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் 77.2 மில்லியன் பேருக்கு நீரிழிவு பிரச்னை வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாம்.
 


 
சரி நீரிழிவு என்றால் என்ன?

டயபெடிஸ் மெல்லிடஸ் (diabetes mellitus) எனும் சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு குறைபாடானது, நம் உடலின் சர்க்கரை சேமிப்பையும் அதன் உபயோகத்தையும் சேதப்படுத்துகிறது.

சற்று இன்னும் விளக்கம் தேவை?

நமது உடல் பல கோடிக்கணக்கான செல்களால் ஆனது. நாம் அல்லது நமது உடலின் ஒவ்வொரு செல்களும் செயல்படுவதற்கு சக்தி தேவை. எனவே நாம் சாப்பிடுகிறோம். நாம் சாப்பிடும் உணவில் உள்ள புரோட்டீன், கொழுப்பு, கார்போஹைடிரேட் இல் இருந்து குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரை தயாராகிறது. இரத்த ஓட்டத்தின்போது,  இரத்தத்திலிருந்து குளுக்கோஸினை நமது உடலின் அனைத்து உயிருள்ள செல்களுக்கும் எடுத்துச் செல்வது இன்சுலின் எனப்படும் ஹார்மோன்கள் ஆகும். எனவே இந்த குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரையை,  ஆற்றலை,  சக்தியை இன்சுலின் துணையில்லாமல் நமது உடலின் செல்கள் ஏற்றுக்கொளவதில்லை.

இந்த இன்சுலினை உற்பத்தி செய்வது நமது உடலில் உள்ள கணையம் என்னும் பகுதி ஆகும்.
இந்த "கணையமானது தேவையான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாத போது", அல்லது "உற்பத்தி செய்யப்பட்ட இன்சுலினை நமது உடல் நல்லபடியாக பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை"  - நீரிழிவு குறைபாடு எனப்படுகிறது. இந்த நிலையில் நமது உடலின் சில உறுப்புகள் செயல் இழக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான உறுப்புகள் கண்கள், இதயம், சிறுநீரகம் மற்றும் நமது பாதங்கள். இன்சுலின் எனப்படும் ஹார்மோன் கணையத்தில் உள்ள வலியுணர்வுப்பகுதியில் உள்ள பீட்டா செல்களில் தயாராகிறது. நமது உடலில் நீரிழிவினால் அதிகம் பாதிக்கக்கூடிய உடல் உறுப்புகள் - இதயம், கண், சிறுநீரகம் மற்றும் பாதம் ஆகும்.

கண்ணின் முக்கியமான பாகங்கள்:

இந்த நீரிழிவு விழித்திரை நோயைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், நாம் கண்ணின் முக்கியமான பாகங்களைப் பற்றியும் நாம் எவ்வாறு ஒரு பொருளை பார்க்க முடிகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆர்பிட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் கண் சுற்றுப்பாதை  கண்ணைச் சுற்றி நான்கு எலும்புச் சுவர்களால் அமைந்துள்ளது. இது பொதுவாக கண் குழி  எனப்படுகிறது ஐ லிட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் கண் இமை நமது கண்களை பாதுகாத்து, இமைகள் திறந்து வழி விட்டு நாம் பார்க்கும் பொருள்களிலிருந்து வரக்கூடிய ஒளிக்கதிர்களை நமது கண்ணுக்குள் அனுப்புகிறது.

கன்ஜங்க்ட்டிவா என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் தெளிவான இமை இணைப்புப்படலம் கண்ணின் மேற்பரப்பிற்கு அரணாகவும், கண் இமையோடு இணைந்தும் உள்ளது.

கார்னியா என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் விழி வெண் படலம் நிறமேயில்லாத, ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய, இரத்தக்குழாய்கள் ஏதுமில்லாத கண்ணுக்கு முன்புறம் அமைந்துள்ள ஒரு மெல்லி திசு. அதன் வழியாக ஒளிக்கதிர்கள் கண்ணுக்குள்ளே செல்கிறது.

கார்னியாவைத் தொடர்ந்து இருக்கும் பகுதி ஐரிஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் கரு விழி, அதன் மையப்பகுதியில் உள்ள ஒரு துளை போன்ற பகுதி ஆங்கிலத்தில் ப்யூப்பில் என்று சொல்லப்படும் பாப்பா, அதன் வழியாக ஒளிக்கதிர்கள் செல்கிறது.

கண்ணின் பாப்பாவைத்தொடர்ந்து இருக்கும் பகுதியானது கிரிஸ்ட்டலின் என்ற புரோட்டீனால் ஆன, ஆங்கிலத்தில் லென்ஸ் என்று அழைக்கப்படும் ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய வில்லை.

ஒளிக்கதிர்கள் லென்ஸின் வழியாக ஊடுருவிச் சென்று கண்ணின் உள்ளே உள்ள கடைசிப்பகுதியான ஆங்கிலத்தில் ரெட்டினா என்று சொல்லப்படும் விழித்திரையில் பாய்ச்சப்பட்டு பிம்பம் பதிவாகிறது.
ரெட்டினாவானது ஒளிக்கதிர்களை நரம்பு தூண்டுதல்களாக்கி மூளைக்கு அனுப்புகிறது.

ரெட்டினாவிற்க்கும், லென்ஸிற்க்கும் இடைப்பட்ட பகுதி விட்ரியஸ் காவிட்டி எனப்படுகிறது.
விட்ரியஸ் காவிட்டி விட்ரியஸ் எனப்படும் ஜெல் போன்ற திரவத்தினால் நிரம்பியுள்ளது. இது கண்ணிற்கு தேவையான சத்தினை அளிப்பதோடு, கண்ணின் கோள வடிவத்தினை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் செய்கிறது.
 
ரெட்டினாவானது பல அடுக்குகளைக் கொண்டது, ஒவ்வொரு அடுக்கும் பல செல்களால் ஆனது. விழித்திரையில் இரத்தக்குழாய்கள் இருக்கின்றன.

ரெட்டினாவின் உள்கடைசி அடுக்கில் ஒளியை சேகரிக்கக்கூடிய  ஃபோட்டோரிசெப்டார் எனப்படும் ஒளியை ஏற்க்கும் செல்கள் உள்ளன.

ரெட்டினாவிற்க்கு அடுத்து விழித்திரை நிறமி தோல் இழை எனப்படும் ரெட்டினல் பிக்மெண்ட் எப்பிதெலியம் மற்றும் விழிநடுப்படலம் எனப்படும் கோராய்டு அமைந்துள்ளன.

இந்த இரண்டு அடுக்குகளும் விழித்திரைக்கு தேவையான சத்தினை அளித்து அதிகப்படியான ஒளியை ஏற்றுக்கொள்கிறது.

விழித்திரையினால் பெறப்பட்ட ஒளிக்கதிர்கள் நமது பார்வை நரம்பு வழியாக மூளைக்கு அனுப்பப்படுகிறது.

ஸ்க்ளீரா எனப்படும் வெண்மையான விழிவெளிப்படலம் ஒரு கடினமான இழைகளாலான அடுக்கு ஆகும், இது கண்ணின் உள்ளே உள்ள அனைத்து பாகங்களையும் பாதுகாக்கிறது.

நீரிழிவினால் நம் விழிகளுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

இப்பரந்த பூமியில் பார்வையிழப்பு என்னும் சுமையை மிக அதிக அளவில் தாங்கிக்கொண்டிருக்கும் தேசம் நமது தேசம். 108 கோடி மக்களைக் கொண்ட நமது தேசத்தில் 270 லட்சம் பேர் பார்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீரிழிவு குறைபாடானது கண்களில் ஏற்படும் புரை (கேட்டராக்ட்),   கண் நீர் அழுத்த நோய் (க்ளகோமா), மற்றும் டயபீடிக் ரெட்டினோபதி எனப்படும் கண்ணில் உள்ளே உள்ள விழித்திரையின் ரத்தகுழாய்களை சிதைத்தல் போன்றவற்றிற்க்கும் காரணமாகிறது.

கேட்டராக்ட் என்றால் என்ன?

நமது கண்களில் உள்ள லென்ஸின் ஒளி ஊடுருவும் தன்மை பாதிக்கப்படுவது கேட்டராக்ட் (cataract) எனப்படுகிறது. நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த நிலை மிகக்குறைந்த வயதிலேயே ஏற்ப்படுகிறது.

க்ளகோமா  என்றால் என்ன?

 நமது கண்ணின் முன் அறையில் சுரக்கும் திரவத்தின் அழுத்தம் அதிகமாகும்போது, பார்வை நரம்பில் ஏற்படும் பாதிப்பு க்ளகோமா (Glaucoma) எனப்படுகிறது. மற்ற காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுபவர்களின் எண்ணிக்கையோடு கணக்கிடும்போது,  புள்ளி விவரங்கள் நீரிழிவு பிரச்னை காரணமாக க்ளகோமா உள்ளவர்கள் இரண்டு மடங்கு என்கிறது.
 
டயபீடிக் ரெட்டினோபதி  என்றால் என்ன?
 
நீரிழிவு பிரச்னை உள்ளவர்களின் கண்களின் விழித்திரையில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் பாதிப்பு நீரிழிவு விழித்திரை நோய் (டயபீடிக் ரெட்டினோபதி - Diabetic Retinopathy) எனப்படுகிறது.

விழித்திரை (Retina) என்பது என்ன?

நமது கண்க்ளை போட்டொ கேமராவுக்கு ஒப்பிடலாம். (ஃப்லிம் கேமரா - டிஜிட்டல் கேமரா இல்லை).

விழித்திரை என்பது கேமராவினுள் இருக்கும் காணப்படும் ஃப்லிம் போன்றது. நாம் பார்க்கும் பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் நம் கண்ணின் முன்புறம் உள்ள கார்னியா (Cornea) எனப்படும்  விழிவெண்படலத்தின் வழியே சென்று,லென்ஸில் ஊடுருவிச் சென்று கண்ணின் பின்புறம் - உட்புறச் சுவரான விழித்திரையில் பிம்பம் பதிவாகிறது. விழித்திரையிலுள்ள சிறப்பான செல்கள் பார்வைக்கான தூண்டல்களைப் பெற்று பார்வை நரம்பு வழியாக மூளைக்கு மாற்றியனுப்புகிறது. மேலும் விழித்திரையின் மையப்பகுதில் உள்ள மாக்குலா (Macula) என்னும் பகுதி நுட்பமான பார்வைக்கு மிகவும் அவசியமான பகுதியாகும்.

நீரிழிவு விழித்திரை நோய் யாருக்கு அதிகமாக வருகிறது?

நீரிழிவு விழித்திரை நோய், நீரிழிவு பிரச்னை உள்ள யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீண்ட நாட்களாக நீரிழிவு பிரச்னை உள்ள ஆண்கள் பெண்கள் இருபாலாருக்குமே அதிகமாக வருகிறது. நீரிழிவு உள்ளவர்களில் பாதிபேருக்கு அவர்கள் வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட அளவு டயபீடிக் ரெட்டினோபதியினால் பாதிக்கப்படுகிறார்கள்.

டயபீடிக் ரெட்டினொபதியினால் விழித்திரையில் என்ன நிகழ்கிறது?

நீரிழிவு பாதிப்புடைய ரத்தம் கண்ணின் விழித்திரையில் செல்லும்போது விழித்திரையில் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் விழித்திரையின் சிறிய ரத்தக்குழாய்களில் மைக்ரோ ஆஞ்சியோபதி எனப்படும் மாற்றத்தை விளைவிக்கிறது. இதனால் ரத்தமும் நீர்க்கசிவும் ஏற்பட்டு விழித்திரை வீக்கம் அடைகிறது.

இந்த கசிவுகள் ரெட்டினல் இடிமா மற்றும் கடின கசிவு (Hard exudates) எனப்படும் லைப்போ புரோட்டீன் வஸ்துகளையும் சேமித்து வைக்கிறது. இந்த கசிவு விழித்திரையின் முக்கிய பகுதியான மாக்குலாவை பாதிக்கும்போது பார்வை குறையும். படித்தல் மற்றும் நுண்ணிய பொருட்களை பார்ப்பதில் சிரமம் ஏற்படும்.

டயபீடிக் ரெட்டினோபதி முழுமையான பார்வையிழப்பினை எற்படுத்துமா?

இந்த நோயினை கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்க்கு தொடர்ந்த கண் பரிசோதனை மற்றும் கண் மருத்துவரின் ஆலோசனை தேவை. அதனை தவிர்ப்பது முழுமையான பார்வையிழப்பிற்க்கு காரணமாகலாம்.

டயபீடிக் ரெட்டினோபதி ஒருவருக்கு இருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்ளமுடியும்?

உங்களுக்கோ அல்லது தாய் அல்லது தந்தை அல்லது இருவருக்குமே நீரிழிவு நோய் இருந்தால் நீங்கள் உங்களுக்கும் நீரிழிவு பிரச்சினை இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது.  உங்களுக்கு நீரிழிவு பிரச்சினை இருக்கிறது என்றால் ஒரு கண் மருத்துவமனைக்குச் சென்று முழுமையான கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

டயபீடிக் ரெட்டினோபதி எப்போதும் தீவிரமான நிலைக்கு வரும் வரை நம் பார்வையை பாதிப்பதில்லை. ஆனால் தீவிரமான நிலையில் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படும். தொடர்ந்த பரிசோதனை, ஆரம்ப கட்ட நிலையில் நோயை கண்டுபிடித்தல், வெற்றிகரமான சிகிச்சை இவையே பார்வையிழப்பிற்க்கான சாத்தியக்கூறினை குறைக்கிறது.

டயபீடிக் ரெட்டினோபதி ஒருவருக்கு இருக்கிறதா என்பதை அறிய அவரது கண்கள் எவ்வாறு பரிசோதிக்கப்படுகிறது?

- கண்ணின் வெளிப்புறத் தோற்றம்
- பார்வைத் திறன்
- கண் நீர் அழுத்தம்
- பார்வைக்குறைபாடு
- நிறக்குறைபாடு

இவ்வாறான அடிப்படை பரிசோதனைகளை செய்துவிட்டு கண்ணின் பாப்பா (pupil) விரிவதற்க்காக சொட்டு மருந்திடப்படுகிறது. சுமார் 15 நிமிடங்கள் காத்திருந்து, கண்ணின் உள்ளறையை - கண்ணின் பின்புறத்தை இன்டைரக்ட் ஆப்தால்மாஸ்கோப் என்னும் கருவியைக் கொண்டு விழித்திரையை முழுமையாகப் பார்ப்பதற்கு உதவும் வலியேதும் இல்லாத பரிசோதனையை செய்யபடுகிறது. 
 
மேலே  கூறப்பட்டுள்ள மாற்றங்கள் ஏதும் விழித்திரையில் ஏற்பட்டுள்ளதா என்பது கண்டறியப்படுகிறது. விழித்திரையில் பாதிப்பு ஏதும் இருக்குமேயானால் மேலும் சில பரிசோதனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அவையும் செய்யப்பட்டு நோய் இருக்கிறதா இல்லையா என்பது உறுதி படுத்தப்படுகிறது.

* குறிப்பாக உங்கள் கண் மருத்துவர் உங்கள் விழித்திரையில் ரத்தகசிவு அல்லது நீர்க்கசிவு உள்ளதா என்று கவனமாக சோதனை செய்வார்.

* விழித்திரையில் வீக்கம் ஏதும் உள்ளதா? அல்லது மாக்குலாவில் பாதிப்பு ஏதும் இருக்கிறதா என்பதை கவனிப்பார்.

* விழித்திரையை ஒட்டி ஏதேனும் கசிவு அல்லது கலங்கலான திட்டு ஏதும் சேர்ந்துள்ளதா என்பதனை கவனிப்பார். (இது ரத்தக்கசிவு உள்ளதா என்பதை உறுதி செய்வதற்க்காக).
* பார்வை நரம்பில் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்று ஆராய்வார்.

* வேறு ஏதேனும் மாற்றங்கள் ரத்தக்குழாயில் ஏற்ப்பட்டுள்ளதா என்று கவனிப்பார்.

* ஒருவேளை உங்களுக்கு மாக்குலாவில் பாதிப்பு ஏதும் ஏற்ப்பட்டிருப்பதாக அல்லது சிகிச்சை தேவைப்படுவதாக உங்கள் கண் மருத்துவ நிபுணர் கருதினால் fundus fluorescein angiogram என்ற பரிசோதனையை செய்ய அறிவுறுத்தலாம். இந்த சோதனையின் போது உங்கள் கையில் ரத்தக்குழாயின் வழியாக ஒரு கரைசல் செழுத்தப்பட்டு அது உங்கள் கண்ணின் விழித்திரையில் உள்ள ரத்தக்குழாயில் செல்வது புகைப்படமாக எடுக்கப்படுகிறது. அது விழித்திரையில் உள்ள ரத்தக்குழாயில் ரத்தக்கசிவு இருக்கும் இடத்தையும், அளவையும் தெரிந்து சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.
 


டயபீடிக் ரெட்டினோபதிக்கு தீர்வு என்ன?

முதல் நிலையில் சிகிச்சை ஏதும் தேவைப்படுவதில்லை என்றாலும், நீரிழிவு விழித்திரை நோயைத் தவிர்ப்பதற்க்காக, நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் ரத்த சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்த அளவு, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு போன்றவை கட்டுக்குள் இருக்கும்படி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துவார்கள்.  நோயாளிக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் அளவைப்பொறுத்து மருந்துகள், அல்லது லேசர் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சையை உங்கள் மருத்துவர் பரிந்துரை செய்யலாம். உங்கள் கண் மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பதே சிறந்தது.

டயபீடிக் ரெட்டினோபதிக்கான அறிகுறிகள் என்ன?

* அடிப்படையில்  டயபீடிக் ரெட்டினோபதிக்கு என்று ஆரம்ப கட்ட நிலையில் எந்த அறிகுறியுமே கிடையாது என்பதே உண்மை. உங்களுக்கு நீரிழிவு இருப்பதாக நிச்சயிக்கப்பட்டால் வருடம் ஒரு முறை முழுமையான கண் பரிசோதனையை செய்து கொள்வதே நல்லது.(அவ்வாறு பரிசோதனை செய்துகொள்ளச் செல்லும்போது உங்கள் கண் மருத்துவரிடம் உங்களுக்கு நீரிழிவு பிரச்சினை இருப்பதை மறக்காமல் முதலிலேயே சொல்லவும்)

* ஒரு பொருளைப்பார்க்கும்போது அந்தப் பொருளின் மையப்பகுதி தெளிவாகத் தெரியவில்லை என்றால், அல்லது கலங்கலாகத் தெரிந்தால், கண்ணின் மாக்குலா என்ற பகுதியில் மாக்குலா இடிமா என்ற நோயின் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். உடனடியாக கண் மருத்துவரின் கவனம் தேவை என்பதை மறவாதீர்கள்.

* ஒருவேளை முதலில் குறிப்பிட்ட விழித்திரையின் மேலடுக்குகளில் உருவான புதிய ரத்தக்குழாய்கள் பாதிக்கப்பட்டு ரத்தம் கசிந்தால், பார்வை மறைக்கலாம்.

* ஒரு சில நேரங்களில் மறைக்கப்பட்ட பகுதிகள் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமலேயே தெளிவாகி பார்வை தெளிவாகத் தெரியலாம். இருந்தாலும் ரத்தக்கசிவு மற்றும் நீர்க்கசிவு எப்போது வேண்டுமானாலும் மீண்டும் ஏற்படலாம். எனவே முதல் முறையாக பார்வையில் தெளிவின்மை உணர்ந்தால் உடனடியாக கண் சிகிச்சை நிபுணரை சந்தித்து சிகிச்சை பெறுவதே பார்வையிழப்பை காப்பாற்றுவதற்க்கான வழி.
 
லேசர் சிகிச்சை எதற்காக தேவைப்படுகிறது?

Proliferative Retinopathy எனப்படும் நிலையில் ரத்தக்குழாய்கள் அசாதாரணமானதாகவும் மற்றும் பலவீனமானதாகவும் இருப்பதால் உடைந்து ரத்தம் வெளியேற காரணமாகின்றன. எனவே பார்வைக்குறைவு அல்லது பார்வையிழப்பு நேரிடுவதற்கு காரணமாகின்றன. இழந்த பார்வையை மீட்க முடியாவிட்டாலும் இருக்கின்ற பார்வையை காப்பாற்ற வேண்டி லேசர் சிகிச்சை வழங்கப்படுகிறது.

இந்த லேசர் சிகிச்சையில் 1000 முதல் 2000 லேசர் கற்றைகள் பாய்ச்சப்பட்டு பாதிப்பை ஏற்ப்படுத்தக்கூடிய புதிதாக உருவான அசாதரணமான மற்றும் பலவீனமான ரத்தக்குழாய்கள் எரிக்கப்படுகின்றன. அதன் மூலம் ரத்தம் மற்றும் நீர்க்கசிவு ஏற்ப்பட்டு பார்வை பாதிப்பது அல்லது பறிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

பொதுவாக சிகிச்சை முழுமையடைய இரண்டு அல்லது மூன்று  அமர்வுகள் ஒவ்வொரு நோயாளிக்கும் தேவைப்படலாம். இந்த புதிய ரத்தக்குழாய்கள் ரத்தக்கசிவை ஏற்படுத்துவதற்க்கு முன்பே லேசர் சிகிச்சை அளிப்பது பார்வையை தக்க வைத்துக்கொள்வதற்க்கு பயன்படும். புதிய பலவீனமான அசாதாரணமான ரத்தக்குழாய்கள் எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம்.
எனவேதான் லேசர் சிகிச்சை சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் தொடர்ச்சியான  கண் மருத்துவரின் கண்காணிப்பு தேவைப்படுகிறது. ரத்தக்கசிவு இருந்தாலும், கசிவின் அளவு மற்றும் தன்மையை பொறுத்து சிகிச்சை வழங்கப்படலாம். பொதுவாக பல நோயாளிகளுக்கு சிகிச்சை பார்வையை பாதுகாத்து மேலும் பார்வை குறைவதை தடுக்க உதவுகிறது. பார்வையிழப்பின் சிரமத்தை 50 சதவீதம் வரை குறைக்கிறது. இது கரும்புள்ளிகளை  நீக்குவதில்லை.
மேலும், விட்ரியஸ் பகுதியில் ஏற்க்கெனெவே ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அவற்றை சரி செய்வதில்லை. லேசர் சிகிச்சையின் மூலம் நோயில் முன்னேற்றம் கண்டாலும், சிறிதளவு பார்வையிழப்புக்கும் வாய்ப்பு உள்ளது.
 
லேசர் சிகிச்சை பாதுகாப்பானதா?

லேசர் சிகிச்சை பாதுகாப்பானதே. டயபீடிக் ரெட்டினோபதிக்கான லேசர் சிகிச்சைக்குப் பிறகு சில மணி நேரங்கள் பார்வை மங்கலாகத் தெரியும். பக்கவாட்டுப்பார்வையும், இருட்டுக்குள் பழகுவதும் பாதிக்கப்படலாம். ரத்தக்கசிவு மற்றும் நீர்க்கசிவு மிக அதிகமாக உள்ள நோயாளிகளுக்கு லேசர் சிகிச்சைக்குப்பின்னரும் பார்வையிழப்பிற்க்கான வாய்ப்பு இருப்பதால் அவர்களுக்கு விட்ரெக்டமி எனப்படும் ஆபரேஷன் தேவைப்படும் என்பதையும்  டயபீடிக் ரெட்டினோபதி நோயாளிகள் தெரிந்து கொள்ளவேண்டியதாகும்.

விட்ரெக்டமி ஆபரேஷன் என்றால் என்ன?

புதிய வளர்ச்சியடைந்த ஆபரேஷன் முறையில் விட்ரெக்டமி மற்றும் விட்ரியஸ் மைக்ரோ சர்ஜரி மூலமாக 60 % முதல் 70% வரை  டயபீடிக் ரெட்டினோபதியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பார்வையில் முன்னேற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. விட்ரெக்டமி ஆபரேஷனின் நோக்கம், கண்ணின் மையப்பகுதியில் உள்ள ரத்தத்தையும் அசாதரணமாக பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்குவதுமே ஆகும்.

விட்ரெக்டமி ஆபரேஷனில் கண்ணின் மையப்பகுதியில் உள்ள அதிகமான ரத்தக்கசிவினால் பாதிக்கப்பட்ட, பார்வையிழப்பை ஏற்படுத்தும் விட்ரியஸ் திரவம் நீக்கப்பட்டு வேறு உப்புக்கரைசல் நிரப்பப்படுகிறது. இந்த ஆபரேஷன் மூலம் பார்வை மேலும் குறையும் அபாயத்தையும், விழித்திரை பிரிதல் (Retinal Detachment) எனப்படும் நோயின் இறுதிக்கட்டத்தையும் தடுக்க முடியும்.
   
நீரிழிவு பற்றியும் டயபீடிக் ரெட்டினோபதி பற்றியும் எனக்கு சரியாகத் தெரிந்திராத காரணத்தால் அல்லது வேறு காரணத்தால்   டயபீடிக் ரெட்டினோபதியினால் நான் அதிக அளவில் பார்வையை இழந்து விட்டேன்.  எனது  பார்வையை மீட்டுக் கொள்ள எனக்கு ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா?
 - இது ஒரு பாதிக்கப்பட்ட அன்பரின் கேள்வி.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். டயபீடிக் ரெட்டினோபதிக்கான சிகிச்சை என்பது இழந்த பார்வையை மீட்பதற்க்கான முயற்சி அல்ல. இருக்கின்ற பார்வையை காத்துக் கொள்வதும், மேலும் அதிக அளவில் ஏற்படவிருக்கும் பார்வையிழப்பை தடுப்பதற்க்கான வாய்ப்பே.

டயபீடிக் ரெட்டினோபதியினால் அதிகமான அளவில் பார்வையை இழந்தவர்கள், இழந்ததை எண்ணி கவலைப்படாமல், உங்கள் கண் மருத்துவரை சந்தித்து, நீங்கள் பெற்றுக்கொண்ட சிகிச்சையின் முழு விவரத்தையும் அதற்கான மருத்துவ அறிக்கைகளோடு ஆலோசனை செய்யலாம். குறைவான பார்வையோடு நிறைவான பயனுள்ள வாழ்க்கையை வாழ "லோ விஷன் எய்டு" எனப்படும் பார்வை உபகரண்ங்கள் மற்றும் கருவிகள் வந்துவிட்டன. அவற்றின் உதவியோடு ஒளிமயமான வாழ்க்கை வாழ முடியும்.

நீரிழிவு நோயாளிகள் தங்கள் கண் பார்வையை பாதுகாத்துக்கொள்ள  சில முக்கியமான குறிப்புகள் :

* நீரிழிவு நோயாளிகள் பத்தில் இரண்டு பேர்  டயபீடிக் ரெட்டினோபதியினால் பாதிக்கப்படுகிறார்கள்.
* ஆரம்ப காலத்தில் இந்த  டயபீடிக் ரெட்டினோபதிக்கு எந்த விதமான முன்னறிவிப்பும் இருப்பதில்லை.

* நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் பாதிப்பு மிகச்சிறிய அளவில் பாதித்தாலும் நாளடைவில் அது பார்வையை இழக்கச் செய்யலாம்.

* இந்தியாவில் இன்று கண் பார்வை இழப்பிற்க்கு நீரிழிவு நோய் ஒரு மிகப் பெரிய காரணமாக இருக்கிறது.

* நீரிழிவு நோய் நல்ல கட்டுப்பாட்டில் இருந்தாலும் கண் பார்வையில் பழுது ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

* முறையான திட்டமிட்ட கண் பரிசோதனைகள் மூலமும் தக்க சமயத்தில் எடுத்துக் கொள்ளும் சிகிச்சையும் கண் பார்வையை பாதுகாக்கும்.

* லேசர் சிகிச்சை மூலம் பலருக்கு பார்வை இழப்பை தடுக்கலாம்.

* நீரிழிவு நோய் உள்ளவர்கள் வருடம்தோறும் கண் பரிசோதனை செய்துகொள்வது தற்காப்பு நடவடிக்கையாகும்.

* அநேகமாக அனவருக்கும் தக்க சமயத்தில் டயபீடிக் ரெட்டினோபதி கண்டறியப்பட்டால் நல்ல முறையில் சிகிச்சை பெற்று கண் பார்வையை பாதுகாத்துக் கொள்ளலாம்.

* கண் பார்வை நமக்கு மிக மிக முக்கியம். நாம் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்றால் வருடாந்திர கண் பரிசோதனை மனதிற்கு நிம்மதி கொடுக்கும். வரும் முன் காப்போம்.  ஆரம்பத்திலேயே கண்டறிவோம். உடன் சிகிச்சை பெறுவோம். கண் பார்வையை தக்க வைப்போம்.

- அ.போ. இருங்கோவேள்
மருத்துவ சமூகவியலாளர்
சங்கர நேத்ராலயா, சென்னை.