Saturday, November 16, 2013

பெண் பார்க்க செல்கிறீர்களா?

பெண் பார்க்க செல்கிறீர்களா?

அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, என் நண்பரிடம் இருந்து போன் வந்தது. எங்கள் ஊரில் உள்ள கோவிலுக்கு, உடனடியாக வருமாறு அழைத்தார். என்ன விஷயம் என்று புரியாமல், நானும் அங்கு சென்றேன். அங்கு என் நண்பரும், மற்றும் அவரின் குடும்பத்தாரும், ஒரு இடத்தில் ஒன்று கூடியிருந்தனர். அப்போது, ஏற்கனவே அங்கு வந்திருந்த, மற்றொரு குடும்பத்தார், சற்று தொலைவில் அமர்ந்திருந்தனர்.

என் நண்பரின் அம்மா, அங்கிருந்த பெண், ஒருவரைக் காட்டி, 'பிடித்திருக்கிறதா?' என, அவரிடம் கேட்டார். அவரும் பிடித்திருக்கிறது என்று சொன்னவுடன், அவர் அங்கு சென்று, ஒரு பெண்ணிடம் பூவும், ஸ்வீட் பாக்சும் கொடுத்து, பேசிவிட்டு வந்தார். நடப்பது எதுவும் புரியாத நான், என்னவென்று விசாரித்தேன்.

அதற்கு அவர், சற்று தொலைவில் இருக்கும் பெண் தான், எங்க வீட்ல எனக்கு திருமணத்திற்கு பார்த்து வச்சிருக்கிற பொண்ணு என்றும், போட்டோவை பார்த்து, எங்கள் வீட்டில் சம்மதித்து விட்டனர். ஆனால், வரனை நேரில் பார்க்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதனால் தான், நேற்றே அப்பெண் வீட்டாரிடம், குடும்பத்துடன் கோவிலுக்கு வருமாறும், அங்கு பெண்ணை பார்த்துக் கொள்கிறோம் என்றும், கூறி விட்டோம்.

பெண் பார்க்க போகிறோம் என, ஒரு கூட்டத்தையே கிளப்பி கொண்டு போய், பெண்ணை பார்த்து, ஏதேனும் காரணத்தால் நின்று போனால், அந்த பெண்ணுக்கும், அவர் குடும்பத்திற்கும் ஏற்படும் மனகஷ்டத்திற்கும், கேலிப் பேச்சுக்கும் யார் பதில்  சொல்வது!

மேலும், அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக பேசுவர். அதனால் தான், இம்மாதிரி பொது இடங்களில் சென்று பார்த்து விட்டு, பின், திருமணம் செய்ய சம்மதம் இருந்தால் மட்டும், அவர்கள் வீட்டிற்கு, உற்றார் உறவினரை அழைத்துக் கொண்டு போக முடிவெடுத்தோம்' என்று கூறினார்.
நண்பரின் இந்த யோசனை சரியென தோன்றியது.