Thursday, September 15, 2016

ஆடித்தள்ளுபடி... கவனம் தேவை!

தள்ளுபடி... கவனம் தேவை!

ஆடித்தள்ளுபடி பர்ச்சேஸ் எனக்கு மிகப் பெரிய பாடமாக அமைந்தது என்று சொன்னால் மிகையாகாது. 40 சதவிகித தள்ளுபடியில் புதிய சுடிதார் வாங்கினேன். ஆர்வமிகுதியால் பிரித்துப் பார்க்காமல், வீட்டில் வந்து பிரித்து பார்த்தபோது பாட்டம் (பேன்ட்) இல்லை. அதுமட்டுமல்ல... `ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' என்பதைப் பார்த்து 1,000 ரூபாய்க்கு 2 புடவை வாங்கினேன். கடையின் லைட் வெளிச்சத்தில் அது கண்ணைக் கவர்ந்தது. வீட்டில் வந்து பிரித்துப் பார்த்தால் டேமேஜ் ஆகியிருந்தது. கையோடு கடைக்குத் திரும்பிப் போய் கேட்டதில், `தள்ளுபடியில் வாங்கியதை மாற்ற முடியாது' எனக் கூறிவிட்டனர். ஆடித்தள்ளுபடி என்ற மயக்கத்தில் இனி கடைக்குப் போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன். இலவசம் என்று எதுவும் இல்லை என்பதையும் நன்கு உணர்ந்தேன். 

- பிரேமா கார்த்திகேயன், கொளத்தூர்


வாசகியின் அனுபவம் குறித்து சென்னையைச் சேர்ந்த நுகர்வோர் நீதிமன்ற வழக்கறிஞர் சரவணவேலிடம் கருத்து கேட்டபோது...

``ஆஃபரில் வாங்கும் பொருட்களை மாற்ற முடியாது என்று எந்த சட்ட வரையறையும் இல்லை. பொருட்கள் தரமற்றோ, சேதமடைந்தோ, வேறு ஏதேனும் பிரச்னையுடனோ இருந்தால் கண்டிப்பாக மாற்றித் தந்துதான் ஆகவேண்டும். வாங்கிய பொருட்களுக்கான பில்களை பத்திரமாக வைத்திருப்பது அவசியம். வாங்கிய பொருட்களில் சேதாரம் இருப்பின் மாற்றித் தரும்படி சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அணுகுங்கள். அவர்கள் மறுக்கும்பட்சத்தில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பலாம். அடுத்து நுகர்வோர் நீதிமன்றத்திலும் வழக்குப் பதிவு செய்யலாம். ஆனால், இத்தகைய நடவடிக்கைகளுக்காக நீங்கள் செய்யும் செலவு, வாங்கிய பொருட்களின் விலையைவிட கூடுதலாகிவிடக்கூடும். இச்செலவை நஷ்ட ஈட்டுடன் சேர்த்து கோரும் உரிமை உள்ளது. இதையெல்லாம் தவிர்க்க, ஆஃபர் விஷயத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதுதான் எப்போதுமே நல்லது'' என்று எச்சரித்தார்.


சமயோசித தாயார்!

போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மாடி போர்ஷனில் நாங்கள் குடியிருந்தோம். கீழ்ப்புறத்தில் ரேஷன்கடை மற்றும் பல கடைகள் இருப்பதால் வாசலில் எப்போதும் கூட்டமாகவே இருக்கும். ஒருநாள் என் மூன்று வயது பெண்ணுக்கு தெருவை வேடிக்கைக் காண்பித்துக்கொண்டே காது ஜிமிக்கியை கழற்றினேன். மறுபுறம் கழற்றுவதற்குள், அவளுக்கு சற்று வலித்ததால், முதலில் கழற்றிய ஜிமிக்கியை எதிரே வைத்திருந்தேன். அப்போது திடீரென, எதிரே வைத்திருந்த ஜிமிக்கியை ஜன்னல் வழியே சட்டென தூக்கி எறிந்து விட்டாள். பதறிப்போய் ஜிமிக்கியை தேடியபோது, அது சன் ஷேடில் விழுந்திருந்ததைக்கண்டு ஆறுதலடைந்தேன். ஆனால், அந்த சன்ஷேட், ஜன்னலிலிருந்து சுமார் நான்கடி தள்ளி இருந்ததால் அதை எடுக்க முடியாமல் தவித்தோம். கீழே தள்ளவும் முடியவில்லை; அப்படியே தள்ளினாலும்  சிறிய பொருள் கிடைப்பது கஷ்டம் என்பதை அறிந்து கையைப் பிசைந்து நின்றோம். அப்போது, என் அம்மாவுக்கு ஓர் அருமையான யோசனை வந்தது. அதாவது, வீட்டில் புடவை உலர்த்தும் மடிக்கோலை எடுத்து அதன் கீழ் புறம் அழுத்தமாக புளியை ஒட்டி வைத்தார்கள். பிறகு, ஜன்னல் வழியாக சரியாக ஜிமிக்கியின் மேல் தொடும்படி மடிக்கோலை விட, அதில் ஒட்டிக் கொண்டதால் ஜிமிக்கி கிடைத்துவிட்டது. அன்று எல்லோரும் என் தாயாரின் அறிவுக்கூர்மையையும், சமயோசிதத்தையும் பாராட்டினர்.

- மல்லிகா குரு, மேற்கு மாம்பலம்


திருமண மண்டப கழிப்பறைகள்!

ஏ.சி.ஹாலுடன் கண்ணைக் கவரும் அலங்காரத்துடன் உள்ள அந்த திருமண மண்டபத்துக்கு திருமண விழா ஒன்றுக்கு சென்றிருந்தோம். அப்போது, வயதான ஒரு பெண் `பாத்ரூம் போகணும், எங்கே இருக்கிறது?' என்று கேட்டார். நாங்களும் சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தோம், கண்ணில் படவில்லை. பெண் வீட்டார், பிள்ளை வீட்டார் தங்கியிருக்கும் அறைகளில் மட்டுமே இருப்பதை அறிந்தோம். ஆனால், அங்கு போகும் சூழல் இல்லாததால், மண்டப காவலாளியிடம் விசாரித்தோம். அவர் மண்டபத்தின் பின்புறம் மிகவும் வெளிச்சம் குறைவாக இருந்த பாத்ரூம்களை காட்டினார். அங்கே விளக்கு வெளிச்சம் குறைவு மட்டுமல்ல... ஒரே துர்நாற்றம், சுகாதாரக்கேடு.

லட்சக்கணக்கில் மண்டபம் கட்டி வாடகை வசூலிப்பவர்கள் கழிவறை பராமரிப்பிலும் கவனம் செலுத்தினால் அப்படி என்ன செலவாகிவிடும். இந்த கல்யாண மண்டபம்தான் என்றில்லை... பெரும்பாலான மண்டபங்களில் பாத்ரூம் எங்கே இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியுள்ளது.