Friday, September 30, 2016

டிஜிலாக்கர் - வாகன ஓட்டிகளுக்கான வரப்பிரசாதம்!

டூவீலரில் போகும் போது ஹெல்மெட் போடுவது போல, வாகனங்களுக்கான ஆவணங்களைக் கைவசம் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் படும் அவஸ்தைகளைச் சொல்லி மாளாது. அப்பப்பா...காரில் செல்வோர் டேஷ்போர்டில் வைத்து பத்திரமாக எடுத்துச் செல்லலாம் என்றாலும், தப்பித்தவறி அதை மறந்துவிட்டுச் செலும்போதுதான் பிரச்னைகள் ரவுண்டு கட்டி அடிக்கும். அதையெல்லாம் சமாளித்துவிட்டு போகக்கூடிய பக்குவம் வேண்டும்.
 
இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், இந்த ஆவணங்களைப் பராமரிக்க தனி கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. என்னதான் டேங்க் கவரில் வைத்துச் சென்றாலும், தவிர்க்க முடியாத மழை மற்றும் வாட்டர் சர்வீஸ் செய்யும்போதும், அவை நனைந்து வெறும் வெள்ளை பேப்பா் மட்டுமே மீதம் இருக்கும். அதில் இருந்தது எல்லாம் ஜி-பும்-பா ஆகி இருக்கும். வாகன தணிக்கையின்போது இந்த ஆவணங்கள் இல்லையென்றால், என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
 
 
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஒரு அசத்தலான தீர்வை மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது. அது என்னனு கேட்கிறீங்களா மக்கழே! டிஜிலாக்கர் என்று அழைக்கப்படும் இந்த மின்னணு ஆவண பாதுகாப்பு பெட்டகம், தற்போது மொபைல் அப்ளிகேஷன் வடிவத்தில், அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரும் விதத்தில் களமிறங்கியுள்ளது.  இந்த வசதி மூலமாக, இனி வரும் நாட்களில் அரசு துறைகளில் காகிதமில்லா ஆவண புரட்சி வித்திடும் என்று கருதப்படுகிறது. 
 
ஆன்லைனில் நமது முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் தொழில்நுட்பம்தான் இந்த டிஜிலாக்கர். கூகுள் டிரைவ் போன்ற இந்த வசதி தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. எனவே, இது மிகவும் நம்பகமான ஆவண பாதுகாப்பு முறை.
மேலும், அரசாங்கத்தால் வழங்கப்படும் தனிநபர் சான்றுகள், ஆவணங்களை இந்த டிஜிலாக்கர் மூலமாகவே நேரடியாகப் பெற முடியும். இதன்மூலமாக, டிரைவிங் லைசென்ஸ் பெறுதல், வாகன பதிவு ஆவணம் போன்றவற்றை எளிதாக பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தவிர இதிலேயே பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

 
குறிப்பாக இந்த வசதி, வாகன ஓட்டிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று உறுதியாகக் கூற முடியும். ஏனெனில் வாகன ஓட்டிகள் ஆவணங்களைப் பாதுகாக்க மற்றும் பராமரிப்பதில் இருக்கும் நடைமுறை சிரமங்களை இந்த டிஜிலாக்கர் முற்றிலும் ஒழித்துவிடும். மத்திய போக்குவரத்து அமைச்சகமும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமும் இணைந்து இந்த சேவையை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இது பயன்பாட்டுக்கு வரும்போது கார், பைக்கில் செல்லும்போது இனி காகித ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
 
வாகன தணிக்கையின்போது, உங்களது மொபைல்போனில் இருக்கும் டிஜிலாக்கர் செயலி மூலமாகவே ஆர்சி புக், டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றை சம்பந்தப்பட்ட தணிக்கை அதிகாரியிடம் காட்டலாம். உங்களது ஆவணங்களை அதிகாரி சரிபார்த்தபின், அந்த ஆவணங்களை நீங்கள் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும். இயற்கை சீற்றங்கள், ஆவணங்கள் காணாமல் போகும் பிரச்னைகளுக்கும் இது சிறப்பானதொரு தீர்வாக அமையும்.
 
 
இதேபோன்று, சாலை விதிமுறைகளை மீறுவோர்க்கும் இந்த செயலி மூலமாகவே தகவல் அளித்து, அபராதத்தை செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வர திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த டிஜிலாக்கரை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து, அதில் உங்களது மொபைல்போன் எண் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை அளித்து, எளிமையாகக் கணக்கை துவங்கிக் கொள்ளலாம். டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் என்றில்லை, இதர அரசு ஆவணங்களை பெறுவதற்கும், தற்போதுள்ள ஆவணங்களை ஸ்கேனர் கருவி மூலமாக, சுய கையொப்ப அத்தாட்சியுடன் நீங்களே இதில் பதிவேற்றி பாதுகாக்கும் வசதியும் அளிக்கப்படும்.
 
பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இந்த வசதியை பெற முடியும். தெலங்கானா மற்றும் டெல்லியில் இந்த வசதி முதலில் நடைமுறைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், ஹேக்கர்கள் மூலமாக தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதுதான், இந்த திட்டத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.