Thursday, September 15, 2016

கைகளை துரத்தும் புதிய ஆபத்து!

ஸ்ருதிக்கு 18 வயதாகிறது. முதலாம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர். நண்பர்கள் பட்டாளத்துடன் சேர்ந்தால் எப்போது பார்த்தாலும் செல்ஃபிக்களும் பீட்ஸாக்களும்தான். முகத்தை அஷ்டக் கோணலாக்கி, உதட்டைக் குவித்து என ஸ்ருதியின் செல்போன் முழுவதையும் அடைத்துக்கொண்டிருப்பது செல்ஃபிக்களே! 

ஒருநாள் காலை, விழித்தபோது ஸ்ருதியால் வலதுகையை அசைக்கவே முடியவில்லை. பயந்துபோன ஸ்ருதியின் பெற்றோர், அவரை என்னிடம் அழைத்து வந்தனர். ஸ்ருதியின் கைகளைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, "டென்னிஸ் விளையாடுவீங்களா?" என்று கேட்டேன். "இல்லை" என்றார். "செல்ஃபி எடுப்பீங்களா?" என்று கேட்டேன். அவர் "ஆமாம்" என்றார். "உங்கள் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்குப் பெயர், 'செல்ஃபி எல்போ'" என்று சொல்லவும் பயந்தேவிட்டனர் ஸ்ருதியின் பெற்றோர். ஒருவழியாக செல்போனை பிடுங்கிவைத்து, உடற்பயிற்சிகளின் மூலமாக ஸ்ருதியின் கைகளின் வலி குறைக்கப்பட்டது. 

தினசரி சாலையில் நடந்துபோகும் போதோ, ஒரு விழாவின்போதே ஸ்கூட்டி மீது சாய்ந்துகொண்டு டிராஃபிக் சிக்னல் கேப்பில் கையை செல்போனுடன் உயர்த்திப் பிடித்து செல்ஃபி எடுப்பவர்களையும், விழாவில் எல்லாரும் மேடையைப் பார்த்துக் கொண்டிருக்க நான்கு பேர் மட்டும் தனியாக செல்போனில் செல்ஃபி எடுப்பதையும் நாம் இப்போதெல்லாம் அடிக்கடி பார்க்க முடிகிறது.

ஃபங்ஷன் செல்ஃபி, பார் செல்ஃபி, அவுட்டிங் செல்ஃபி, அவசர செல்ஃபி என்று எங்கு சென்றாலும், எங்கு பார்த்தாலும் ஒரு 10 பேர் கைகளை உயர்த்திப் பிடித்தப்படி செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். அதிலும் நம்முடைய முகம் புகைப்படத்தில் அழகாக வரும் வரையில், செல்போனே கண்ணீர் விட்டுக் கதறி, 'போதும், விட்டுடுங்க என்னை' என காலில் விழும் அளவுக்கு செல்ஃபிக்களால் நிறைந்துகிடக்கின்றன செல்போன்கள்.

ஆனால், செல்ஃபிக்களாக எடுத்துத்தள்ளும் 'செல்ஃபிமேனியா' பெண்களுக்கும் ஆண்களுக்கும் அச்சுறுத்தலாக கூடவே காத்து நிற்கிறது மேலே கூறிய புதிய மருத்துவரீதியிலான உடல்நலக் கோளாறு. அதற்கு மருத்துவர்கள் வைத்துள்ள பெயர்தான் 'செல்ஃபி எல்போ'. தொடர்ச்சியாக டென்னிஸ் விளையாடுபவர்களுக்கு எப்படி 'டென்னிஸ் எல்போ' என்னும் முழங்கை சார்ந்த பிரச்னை ஏற்படுகின்றதோ, கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒன்றுதான் இதுவும். ஆனால், இதன் விளைவுகள் மிகவும் விபரீதமானவை.

பொதுவாகவே செல்ஃபி எடுக்க முக்கியத் தேவை, குரூப் செல்ஃபிக்கள் என்றால் உயரமான ஒருவர். தனிநபர் செல்ஃபி என்றால், கைகளை உயர்த்திப் பிடித்து சரியாக போட்டோ ஸ்நாப் பட்டனை ஆடாமல், அசையாமல் அழுத்திப் புகைப்படம் எடுக்கும் திறமை. முழங்கையை வளைத்து, உயர்த்தி சரியான கோணத்தில் பிடித்தால் மட்டுமே சிறந்த செல்ஃபி எடுக்க முடியும்.

இப்படிப்பட்ட செல்ஃபி மோகம் கட்டுக்கடங்காமல் போகும்போது, அடிக்கடி உங்கள் முழங்கையை செயல்படுத்தவேண்டியிருக்கும். சிறந்த செல்ஃபி எடுப்பதற்கு, ஒருவர் தன் கையை பல கோணங்களிலும் மடித்து, வளைத்து செயல்படுத்தும்போது கை மூட்டு நாளடைவில் தேய்மானம் அடைய ஆரம்பித்துவிடும். அதுவும் ஒரே ஒரு 'பெர்ஃபெக்ட் செல்ஃபி'க்காக 40 முதல் 50 செல்ஃபிக்களை எடுத்துத் தள்ளும் நபருக்கு, மூட்டு சவ்வு விலக ஆரம்பிக்கும். அதிகளவில் செல்ஃபி அடிமைகளாக இருப்பவர்களுக்கு இந்தப் பாதிப்பு பல பின்விளைவுகளை ஏற்படுத்தலாம்.

டென்னிஸ் எல்போ போலவே செல்ஃபி எல்போ அறிகுறிகள் இருக்கும். கைமுட்டியில் வீக்கம், கைகளை அசைக்க முடியாமல் மரத்துப்போதல், தோள்பட்டைவலி, முதுகுவலி, தூக்கமின்மை ஆகியவை ஏற்படும். 

முறையான உடற்பயிற்சிகளாலும், செல்ஃபி எடுப்பதைக் குறைத்துக்கொள்வதன் மூலமாகவும் இதனைக் கட்டுப்படுத்தலாம். கை மூட்டுகளில் பொறுக்க முடியாத வலி ஏற்படும்போது, முதலுதவியாக ஐஸ்கட்டி ஒத்தடம் நல்லது.

வலியைவிட செல்ஃபிதான் முக்கியம் என நினைத்தால், ஒரு கட்டத்திற்கு மேல் தொடர்ச்சியாக செல்ஃபி எடுக்கும் பழக்கம் உங்கள் கைகளையே செயலிழக்கச் செய்துவிடலாம். 

செல்ஃபி எடுப்பது தவறு இல்லை... ஆனாலும், பெர்ஃபெக்ட் ஷாட் செல்ஃபி என்ற பெயரில் உங்கள் கை மூட்டுக்களை வலுவிழக்கச்செய்து உங்கள் அன்றாட வாழ்க்கையில் வேலைத் துணைவனாக விளங்கும் கைகளைக் காயப்படுத்திக் கொள்ளாதீர்கள். முடிந்தவரை 'செல்ஃபி ஃப்ரீ லைஃப்' குறிக்கோளை எடுத்து, ஹெல்த்தியான வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்.