Monday, September 19, 2016

விரல்களால் பார்க்கிறார்... நோய் தீர்க்கிறார்.

இந்த ஆஸ்ரமத்தில் தீபமில்லை-துாபமில்லை


சூடமில்லை-சாம்பிராணி வாடையில்லை
மணியோசையில்லை-மந்திரம் ஒலிப்பதில்லை


சாதியில்லை-மதமில்லை-சமயபேதமில்லை
மாலை மரியாதையில்லை-மயக்குமொழி வார்த்தையில்லை


பூரணகும்பம் இல்லை-பரிவட்டம் இல்லவேயில்லை
டி.வி.,இல்லை போன் இல்லை புறம்பேசும் ஆள்இல்லை


குற்றாலம் ஐந்தருவி பக்கம் உள்ள சங்கரானந்தாஸ்ரமம்தான் இத்தகைய சிறப்பு பெற்ற ஆஸ்ரமம்.அமைதியான ஆனந்தமான ஆன்மீக வாழ்விற்கு வழிகாட்டும் இந்த ஆஸ்ரமத்தில் வருடத்திற்கு ஒரு முறை இதனை நிறுவி தற்போது சமாதியாகிவிட்ட சங்கரானந்தாவின் குருபூஜை நடைபெறும்.கடந்த 14/9/16 ந்தேதி நடைபெற்ற குருபூஜையை முன்னிட்டு பொதுமக்களுக்கு ஒரு இலவச மருத்துவமுகாம் நடத்தப்பட்டது.


அலோபதி,சித்தா,கண் மருத்துவம் மற்றும் அக்கு பிரஷர் என்று பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாமில் அனைவரின் கவனம் ஈர்த்தவர் அக்கு பிரஷர் எனப்படும் பாத சிகிச்சையாளர் பாலமுருகன்தான்.


பார்வை இல்லாத இந்த பாத சிகிச்சையாளர் தன் முன் மல்லாந்து படுத்துக்கொள்ளும் நோயாளிகளின் பாதங்களை இலகுவாக பிடிக்கும் படி உட்கார்ந்து கொள்கிறார், பின் நோயாளிகளின் பாதங்களிலும் தனது கைகளிலும் மூலிகை எண்ணையை தடவிக்கொண்டு அடுத்து பதினைந்து நிமிடங்கள் பாதங்களின் ஒவ்வொரு நரம்பு முடிச்சுகளையும் நீவிக்கொடுத்து, சுண்டிவிட்டு, சொடக்கு எடுத்து, வளைத்து நிமிர்த்தி என்று நிறைய விஷயங்களை செய்கிறார்.துார இருந்து பார்க்கும் போது கடம் வாசிக்கும் வித்வான் எப்படி கடத்தில் தனது விரல்களை விளையாட விடுவாரோ அது போல இவர் தனது விரல்களை படுத்திருப்பவரின் பாதங்களில் விளையாடவிடுகிறார்.
ஒருத்தருக்கு முடிந்ததும் அடுத்து பிறகு அடுத்து அடுத்து என்று ஆண் பெண் என்று எல்லாவயதை சேர்ந்த முப்பதிற்கும் மேற்பட்டவர்களுக்கு பாத சிகிச்சை செய்தும் களைப்படையாமல் காணப்படுகிறார்.


இந்த பாத சிகிச்சை செய்வதன் மூலம் தலைவலி,கழுத்துவலி,கை,கால்வலி,மூட்டுவலி,இடுப்புவலி போன்றவைகள் குறையும் இந்த வலிகள் வந்தவர்கள்தான் இந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதில்லை எந்த வலி இல்லாவிட்டாலும் ஒரு மசாஜ் போல இதை எடுத்துக்கொண்டால் எடுத்துக்கொண்ட அடுத்த நிமிடமே ஆனந்தமாக இருக்கும், வாழ்க்கை எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் என்று சொல்லும் பாலமுருகன் ஒரு தன்னம்பிக்கை நாயகன்.


திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் பண்பொழி கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகனுக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போது பார்வையில் கோளாறு ஏற்பட்டது, இதனால் படிப்பும் நின்று போனது, பார்வையும் குறைந்து போனது.சாதாரண விவசாயியான அப்பா ஆறுமுகத்தால் மகனுக்கு ஆறுதல் சொல்லமுடிந்ததே தவிர அடுத்து என்ன செய்வது என்பது தெரியவும் இல்லை அதற்கு மேல் அவரால் எதுவும் செய்ய இயலவும் இல்லை.கண் எதிரே அழகும் பசுமையும் வனப்பும் வண்ணமுமாக விரிந்து பரந்து கிடந்த உலகம் திடீரென இருண்டு போனதும் பாலமுருகன் மிரண்டுவிட்டார் வாழ்வதே இனி வீண்தானோ என விரக்தியடைந்துவிட்டார்.


இது போல திடீரென பார்வை இழந்தவர்கள் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பதை சொல்லி வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்தும் திருச்சி ஜோசப் கண்மருத்துவமனை பற்றி கேள்விப்பட்டு அங்கு சென்றார்.,நம்பிக்கை பெற்றார்.


யாருக்கும் பராமில்லாமல் மட்டுமில்லை குடும்பபாரத்தை சுமக்ககூட பார்வையற்றவர்களால் முடியும் அதற்கேற்ற பல்வேறு தொழில்களை சென்னை பூந்தமல்லியில் உள்ள 

National Institute for the Visually Handicapped, India என்ற இடத்தில் சொல்லித்தருவதைக் கேள்விப்பட்டு இங்கு வந்து சேர்ந்தார்.

இங்கு இவருக்கு மாஸ்டராக அமைந்த ஆண்டனி என்ற பார்வையற்றவர், வயர்கூடை பின்னுதல்,புத்தகம் பைண்டிங் செய்தல்,அக்கு பிரஷர் உள்ளீட்ட பல்வேறு தொழில்களை கற்றுக்கொடுத்தார்,பாலமுருகனுக்கு அக்கு பிரஷர் பிடித்துப்போனது நன்றாக பயிற்சி எடுத்தவர் நம்பிக்கையுடன் தனது சொந்த ஊருக்கு திரும்பி அக்கு பிரஷர் பாத சிகிச்சயைாளர் என்று போர்டு போட்டு மருத்துவராகிவிட்டார்.

சிகிச்சைக்கு என்றோ? மசாஜ்க்கு என்றோ? இவ்வளவு பணம் கொடுங்கள் என்று யாரிடமும் கேட்பது இல்லை ஆனால் இவர் பாதம்பிடித்துவிட்டு பிறகு இருநுாறு ரூபாய்க்கு குறைந்து யாரும் கொடுக்காமல் போனதும் இல்லை.

இவருக்கான வாடிக்கையாளர்கள் குற்றாலம் தென்காசி ராஜபாளையம் மற்றும் மதுரை வரை இருக்கிறார்கள் வீட்டில் இருந்து போன் செய்து கூப்பிட்டால் போதும் யாருடைய துணையும் இன்றி அவராக கிளம்பிவந்து மசாஜ் செய்துவிட்டு போய்விடுவார்.ஒரு குழுவாகவும் ஒரு குடும்பமாகவும் இவரைக்கூப்பிடுவது இப்போது வாடிக்கையாகிவிட்டது.

பாதியில் விட்ட பத்தாம் வகுப்பை முடித்து தற்போது தபால் வழியாக பி.ஏ.,படித்துக்கொண்டு இருக்கிறார்,அரசு தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்வு எழுதிவருகிறார்.பாதசிகிச்சை தொடர்பாக மேலும் மேலும் தகவல்களை பெற்று தன்னை புதுப்பித்துக்கொண்டு வருகிறார், எல்லாவற்றுக்கும் மேலாக வயதான தாய்-தந்தையை பொன்போல போற்றி காப்பாற்றி வருகிறார்.

பாதம் என்பது முகத்தை விட மேலானது ஆகவே கொஞ்சம் உங்கள் பாதத்தை எங்கள் மாதிரி ஆட்களிடம் காண்பித்து அவ்வப்போது கவனித்துக்கொள்ளுங்கள் ஆயுளுக்கும் வாழ்க்கையில் பிரச்னை இருக்காது என்று சொல்லும் தன்னம்பிக்கை நாயகன் பாலமுருகனை தொடர்புகொள்வதற்கான எண்:7667311755.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in