Sunday, September 18, 2016

எத்திராஜ் கல்லூரி - யார் இந்த எத்திராஜ்

சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரிகளில் ஒன்று, எத்திராஜ் கல்லூரி. தினமும், இக்கல்லூரியை இரு முறை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை எனக்கு! அதுவும், மதியம் வகுப்பு ஆரம்பமாகும் சமயமும், கல்லூரி முடியும் நேரமும் கல்லூரியைக் கடந்து செல்ல வேண்டும்.

அப்போது, வித விதமான வண்ண ஆடைகளில், நெட்டையும் குட்டையும், குண்டும் ஒல்லியுமாக நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் சாலையை கடந்தவாறும், சாலையின் ஓரமாகவும், இருபுறமும் உள்ள பஸ் நிறுத்தங்களிலும் காணப்படுவர்.
கண்ணை அங்கே, இங்கே திருப்பாமல், கவனத்தை சிதறவிடாமல், கல்லூரியை கடந்து செல்லும் போதெல்லாம், 'யார் இந்த எத்திராஜ்...' என நினைப்பேன். அவர், பிரபல வழக்கறிஞர் என, யாரோ, எப்போதோ சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன்.
அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் பிராக்டீஸ் செய்து வரும் வழக்கறிஞர் நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது.

வழக்கு விஷயம் ஒன்று பற்றி, அவரிடம் பேசியபின், 'எத்திராஜ் என்பவர் வழக்கறிஞராமே... அவர் பெயரில் கல்லூரி ஒன்றும் உள்ளதே... அவரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா...' எனக் கேட்டேன்.

'ஏன் தெரியாம... அந்தக் காலத்தில், உயர் நீதி மன்றத்தில், மிகப் பிரபலமான வழக்கறிஞர்; அவரின் வாதத் திறமை பற்றி, ஓகோன்னு சொல்வாங்க. உதாரணத்திற்கு ஒண்ணு, ரெண்டு சொல்றேன், கேள்...' என்றவர், ஆரம்பித்தார்...

ஒரு கொலை கேசில், எட்டு பேருக்குத் தூக்கு தண்டனை வழங்கிட்டாங்க. இவ்வழக்கில் ஆஜரான எத்திராஜ், கோர்ட்டில், 10 நிமிடங்கள் தான் வாதாடினார்... 
'கொலையுண்டதாக கூறப்பட்ட சடலம் மீட்கப்படவில்லை; அதை யாரும் கண்ணால் பார்க்கவில்லை; சந்தர்ப்ப சாட்சியங்களைக் கொண்டே, மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது சரியல்ல; குற்றம், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் படவில்லை. இந்நிலையில், ஒருவேளை, கொலையுண்டவர், உயிரோடு திரும்பி வந்தால், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு, எதிரிகள் இறந்து போய் விட்டால், நீதிபதிகள் மீண்டும் அவர்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா...' என்று கேட்டார். தூக்குத் தண்டனை ரத்தாகி, அனைவருக்கும் விடுதலை கிடைத்தது.

பெரிய பெரிய வழக்குகளில் எல்லாம் கூட, வாதாட, 10 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ள மாட்டார் எத்திராஜ். ஆனால், அந்த, 10 நிமிடங்களுக்கு பின்னால், அவரது அசாத்திய உழைப்பு இருக்கும் என்று சொல்வர்.

கர்நாடகாவில், ஒருவர், தனக்குச் சொந்தமான நிலத்தில், சிலர் அத்துமீறி பிரவேசித்ததாக கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அவர், அப்போதைய, கர்நாடக முதல்வரான அனுமந்தையாவின் சகோதரர்.

அதனால், தன் சகோதரருக்கு ஆதரவாக, தன் செல்வாக்கை, அனுமந்தையா தவறாக பயன்படுத்துவதாக, எதிரிகள் குற்றம் சாட்டினர்.

அதே சமயத்தில், 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகையில், ஒரு கடிதம் வெளியாகியது. அக்கடிதத்தில், 'தன் செல்வாக்கை, அனுமந்தையா, தவறாக பயன்படுத்தவில்லை...' என்று, எழுதியிருந்தது.

அக்கடிதத்தை, முதல்வர் அனுமந்தையாவே எழுதியதாகவும், அதனால், கோர்ட் நடவடிக்கைகளில் பாதிப்பு இருப்பதால், கோர்ட் அவமதிப்பு சட்டத்தின் கீழ், அனுமந்தையா மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குத் தொடுக்கப்பட்டது. கோர்ட்டில், வழக்கு விசாரணைக்கு வந்தது.

அனுமந்தையாவுக்கு ஆஜரான எத்திராஜ், மிகவும் சாமர்த்தியமாக வாதாடினார். ஒரு முதலமைச்சர் பற்றிய வழக்கு என்பதால், அப்போது, இவ்வழக்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

'டைம்ஸ் ஆப் இந்தியா'வில் வெளியானதாக சொல்லப்படும் கடிதத்தின் ஒரிஜினலை, கோர்ட்டில் சமர்ப்பித்தால் தான் கேஸ் நிலைக்கும். பத்திரிகைகளில் வெளியானதாகச் சொல்லப்படும், பல தகவல்களை சுட்டிக் காட்டி, கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடருவது, சட்டப்படி செல்லாது என்று, வாதாடினார்.

முதலமைச்சர் எழுதியதாகச் சொல்லப்படும் ஒரிஜினல் கடிதத்தை, இரண்டு வாரக் காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று, எத்திராஜின் வாதத்திற்குப் பின், கோர்ட் உத்தரவிட்டது. ஒரிஜினல் லெட்டர் கிடைக்கவில்லை. அனுமந்தையா பேரில் தொடுத்த அவமதிப்பு வழக்கு, தள்ளுபடியானது. இந்த வழக்கில், மூன்று நிமிடங்களே வாதாடினார் எத்திராஜ்.

முதலமைச்சராக ராஜாஜி இருந்தபோது, ஒரு கேசுக்காக வாதாட, எத்திராஜை அமர்த்தினார். எத்திராஜ் பப்ளிக் பிராசிகியூட்டர் அல்ல; தனியாக பிராக்டிஸ் செய்து வந்த அட்வகேட்.

ஆந்திர மாநிலம் தனியாகப் பிரிந்திராத காலம் அது. ஆந்திர மாநிலம் சித்தூர் தாண்டி இருந்த நாங்குலி என்ற இடத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல் ஒன்றை, துரத்திக் கொண்டு போனார், சென்னை மாநில சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர்.
அப்போது, கள்ளச் சாராயக் கும்பலை நோக்கி, துப்பாக்கிச் சூடு நடத்தினார், சப்-இன்ஸ்பெக்டர். சுட்ட இடம், ஆந்திர எல்லையை தாண்டி, கர்நாடக மாநிலத்தில் இருந்தது. தன் கடமையை சப்-இன்ஸ்பெக்டர் செய்தாலும், அவரை கைது செய்தது, கர்நாடக போலீஸ்.

சப்-இன்ஸ்பெக்டர், நியாயம் தவறாமல், கடமையை செய்ததை அறிந்து, அவரை ஜாமினில் எடுக்க, எத்திராஜை வழக்கறிஞராக அமர்த்தினார் ராஜாஜி. அன்றைய தேதியில், வி.கே.திருவேங்கடாச்சாரியார் அட்வகேட் ஜெனரல், வி.டி.ரங்கசாமி போன்றோர் பப்ளிக் பிராசிகியூட்டராக இருந்தார். அரசு தரப்பில் இருந்த, இந்த இருவருமே பெரிய வக்கீல்கள். இருந்தாலும், தனிப்பட்ட வக்கீலான, எத்திராஜையே அனுப்பினார் ராஜாஜி.

இரண்டே நிமிடம் பேசி, அந்த சப்-இன்ஸ்பெக்டரை, ஜாமினில் விடுவித்து விட்டார் எத்திராஜ். சப்-இன்ஸ்பெக்டர், தன் கடமையை செய்ய, தற்காப்புக்காக சுட்டதாக வாதாடிய எத்திராஜ், 'தற்காப்புக்காகச் சுட்டது நியாயம்; அது அவசியம் என்று நிரூபிக்க வேண்டியது, எதிரியின் கடமை; அதாவது, குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரின் பொறுப்பு. அரசு தரப்பு பிராசிக்யூஷனின் வேலை அல்ல அது. ஜாமினில் சப்-இன்ஸ்பெக்டர் வெளியே வந்தால், அரசு தரப்பு சாட்சிகளை கலைத்து விடக்கூடும் என்ற நிலைமை இந்த வழக்கில் எழாது. சித்தூர் வெப்பமான இடம்; பெங்களூரூ குளுகுளு! குற்றம் சாட்டப்பட்டவர், பெங்களூரை விட்டு வெளியே போகாமல், கோர்ட் உத்தரவு போடலாம்...' என்று, சிரித்துக் கொண்டே எத்திராஜ் சொன்னபோது, அரசு வக்கீலால், மறுப்பு சொல்ல முடியவில்லை.
நீதிபதியும் சிரித்துக் கொண்டே, சப் - இன்ஸ்பெக்டருக்கு ஓய்வு தேவை என்றும், கர்நாடக போலீசார் மேற்பார்வையில், பெங்களூரிலேயே தங்கலாம் என்று, உத்தரவு போட்டார்.

சப்-இன்ஸ்பெக்டரை வெளியே கொண்டு வந்ததற்காக, எத்திராஜுக்கு நன்றி தெரிவித்த ராஜாஜி, 'உங்கள் பீஸை கொடுக்க சென்னை அரசாங்கத்திற்கு சக்தி உள்ளது; பில் அனுப்புங்கள்...' என்று கூறினார்.

பணம் வாங்க மறுத்து விட்ட எத்திராஜ், 'ஒரு போலீஸ் அதிகாரி, தன் கடமையைச் செய்ததற்காக, குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், ஒரு முதலமைச்சரே முன் வந்து, தன்னை நியமித்த நல்லெண்ணமே, தன்னுடைய பீஸ்...' என்று கூறினார்.

- இப்படி கூறி முடித்தார் நண்பர்.

இனி, அக்கல்லூரியை கடக்கும் போதெல்லாம், மேற்கூறியவை என் நினைவலைகளில் மோதும்!