Wednesday, July 31, 2013

வீட்டில் பூச்சிகளை இயற்கையான முறையில் விரட்டியடிக்க யோசனைகள்

''வீடுகளை... உண்டு, இல்லை என்றாக்கி நம் நிம்மதியைக் குலைத்து விடும் பூச்சிகள், எலிகள் போன்றவற்றை ஒழித்துக் கட்டுவதற்காக அத்தனையுமே ரசாயனங்களைப் பயன்படுத்தி அழிக்கும் யுக்திகளாகத்தானே இருக்கின்றன... அத்தகைய ரசாயனங்களைப் பயன்படுத்துவது, மனிதர்களுக்கும் ஆபத்தானது என்று வேறு பயமுறுத்துகிறார்கள். ஏன்... இயற்கையான முறையில் விரட்டியடிக்க வழிகளே இல்லையா..?''
'இதுவும் சரியான யோசனைதானே' என்றபடியே... ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர், அறச்சலூர் செல்வத்திடம் பேசினோம்... ''பூச்சிகளை எல்லாம் அழிக்க நினைத்தால், அதனால் வரும் விளைவுகளையும் அனுபவித்துதான் ஆக வேண்டும். பூச்சிகள் நமக்கு ஒரு விதத்தில் நன்மைகளைத்தான் செய்கின்றன. வீட்டில் இருக்கும் 90 சதவிகிதம் பூச்சிகள் நமக்கு தீங்கு செய்யாதவைதான். உதாரணமாக... வீட்டுக்குள் இருக்கும் சிலவித பூச்சிகளை, சிலந்திகள் மற்றும் பல்லிகள் பிடித்து சாப்பிடும். இதன் மூலமாக பூச்சித் தொல்லை குறையும். இதற்காக ரசாயனங்களைப் பயன்படுத்தும்போது, நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்துவிடும். வீட்டின் சூழலையும், காற்றையும் சேர்த்தே மாசுபடுத்துகிறோம். கூடவே, நோய்களையும் வரவழைத்துக் கொள்கிறோம். பூச்சிக்கொல்லியில் அதீத வீரியம் கொண்ட ரசாயனம் இருக்கிறது. தொடர்ந்து பயன்படுத்தும்போது நமக்கும் பாதிப்பு வரத்தான் செய்யும். அதற்காக பூச்சிகளோடு குடும்பம் நடத்த முடியாது. எனவே, பூச்சிகள் வராமல் இருப்பதற்கு தேவையான இயற்கை முறை பாதுகாப்புகளைக் கண்டறிந்து கடைபிடித்தாலே போதும்... தொல்லை தீர்ந்துவிடும்'' என்று சொன்ன செல்வம், தொடர்ந்தார்...
கொசுவுக்கு பச்சைக் கற்பூரம்!
''உதாரணமாக... கொசுவானது அதிகாலை மற்றும் சூரியன் மங்கும் மாலை வேளைகள்தான் அதிகமாக வீட்டுக்குள் படையெடுக்கும். அந்த நேரங்களில் வீட்டுக் கதவு, ஜன்னல்களை மூடி வைத்தாலே போதும்... பாதி கொசு நடமாட்டம் குறைந்து போகும். கொசுவை விரட்ட, ஜீரோ வாட்ஸ் பல்ப்பை எரிய வைத்து (கொசுவிரட்டி மேட் பயன்படுத்துவதற்காக தரப்படும் மின்சாதன கருவியையும் பயன்படுத்தலாம்), அதன் மீது சிறிய உலோக தட்டு ஒன்றை வைத்து, அதில் பச்சைக் கற்பூரத்தை வைத்துவிட வேண்டும். பல்பின் உஷ்ணம் காரணமாக கற்பூரம் இளகி அதில் இருந்து வெளிப்படும் வாசம்... கொசுவை அறவே விரட்டி விடும்.
காய்ந்த வேப்பிலையை சிறிது கொளுத்தி, பின்பு அணைத்து, அந்தப் புகையை வீட்டில் பரவவிட்டால், அந்த வாசனைக்கும் கொசு அண்டாது. நசுக்கிய வெள்ளைப்பூண்டு சாறு ஒரு பங்கு, தண்ணீர் ஐந்து பங்கு என கலந்து, வீட்டின் அறைகளில் ஸ்பிரே செய்ய, கொசு ஓடிவிடும்'' என்று சின்னச் சின்ன யோசனைகளைச் சொன்னார்.
''சுதந்திரமாக வெட்டவெளிகளில் சுற்றிக்கொண்டிருந்த பூச்சிகளை எல்லாம், வீட்டுக்குள் வரவழைத்த பெருமை நம்மையே சாரும். ஆம், நவீனமயம் என்கிற பெயரில் வாழ்வதற்கான ஏற்பாடுகளில் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்துவிட்டோம். அப்படி செய்துவிட்டு, இப்போது பூச்சிவிரட்டும் வேலைகளில் இறங்கியிருக்கிறோம்'' என்று சிரித்தபடியே தொடங்கினார்... தமிழக அரசின் வேளாண்மை அலுவலர் நீ.செல்வம். இவர், கோவில்பட்டியில் இருக்கும் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
எறும்புக்கு போரக்ஸ் பவுடர்!
''எறும்புகளில் கடி எறும்பு மட்டும்தான் நமக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடியது. 100 மீட்டர் தூரத்தில் நீங்கள் இனிப்பு பதார்த்தங்களைத் திறந்து வைத்திருந்தாலும் கண்டுபிடித்து அதை நோக்கி வரும் வல்லமை படைத்தது எறும்பு. முடிந்தவரை பதார்த்தங் களை உபயோகப்படுத்தியவுடன் மூடி வைக்கவும். துணி சோப்பு பவுடர் ஒரு சிட்டிகையை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, ஸ்பிரே மூலம் எறும்பு இருக்கும் இடங்களில் தெளித்தால்... அவற்றின் நடமாட்டம்       குறைந்து போகும்.. ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் போரக்ஸ் பவுடர் (நம் உடலில் காயம் ஏற்பட்டால், இந்த பவுடரை எண்ணெயில் குழைத்து தடவுவார்கள்), 2 டீஸ்பூன் சர்க்கரை கலந்து, இந்த தண்ணீரில் பஞ்சு உருண்டைகளை நனைத்து எடுத்து, வீட்டில் எறும்பு புற்று இருக்கும் இடத்துக்கு அருகில் போடுங்கள். சர்க்கரை வாசனையை கண்டு வரும் எறும்புகள் இந்த உருண்டையை தன் பொந்துக்குள் உருட்டி செல்லும். உருண்டையில் இருக்கும் போரக்ஸ் தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது என்பதால், எறும்புகள் உடலில் தண்ணீர் வற்றி இறந்து போகும். வெள்ளரிக்காய் தோல், நறுக்கிய வெள்ளரிக்காய், சாத்துக்குடி தோல், பொடி செய்த பூண்டு, மிளகு கலவை ஆகியவற்றை எறும்புப் புற்று இருக்கும் இடத்தின் அருகில் போட்டால்... அது எறும்பின் வருகையைத் தடுக்கும்.
கரப்பானுக்கு விரோதி... வெள்ளைப்பூண்டு!
துணிசோப்பு பவுடரை தண்ணீரில் கலந்து, பாத்ரூம் பகுதியில் துடைக்கவோ, தெளிக்கவோ செய்ய, கரப்பான்பூச்சியின் நடமாட்டம் குறைந்து போகும். போரக்ஸ் பவுடரை கரப்பான்பூச்சி இருக்கும் இடங்களில், சந்து பொந்துகளில் தூவிவிட்டால், வெளியே வரும் கரப்பான்பூச்சி இதனை உட்கொண்டு, அதன் உடலில் தண்ணீர் வற்றி இறந்து போகும். வெள்ளைப்பூண்டை தோல் உரித்தும் கரப்பான்பூச்சி வரும் இடங்களில் போடலாம்.
கொசுவை விரட்ட, கடையில் விற்கப்படும் கொசு விரட்டி மற்றும் மருந்தை வாங்கி உபயோகிப்பதைவிட கொடுமையான செயல் எதுவும் இல்லை. இந்த கொசு விரட்டிகளில் கலந்திருக்கும் நச்சு, நமக்கு கேடு என்பதை அறியாமல் பிஞ்சு குழந்தை இருக்கும் ரூமில் எல்லாம் கொசு விரட்டியை உபயோகிக்கிறார்கள் மக்கள். அப்படியே உபயோகிக்கதான் வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்தால், கொசு விரட்டியை போட்டு ரூமில் உள்ள ஜன்னல் கதவு எல்லாவற்றையும் அடைத்துவிட்டு, அங்கு யாரும் இருக்காமல் வெளியே வந்து விடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து ஜன்னல், கதவை திறந்து விட்டு ஃபேனை போட்டு விடுங்கள். கொசுவிரட்டியின் ஸ்மெல் சுத்தமாக போன அறையை பயன்படுத்தலாம்.
மூட்டைப்பூச்சியை ஒழிக்க வெயிலே போதும்!
நம்முடைய உடல் சூடுதான் மூட்டைப்பூச்சிகளின் வாழ்க்கைக்கு ஆதாரம். அவை பெரும்பாலும் படுக்கையறையில் உள்ள கட்டில், தலையணை, பெட்ஷீட், அங்குள்ள சந்து, குட்டி குட்டி பொந்துகளில் சென்று மறைந்து கொள்ளும். ஆண்டுக்கு ஒரு தடவை அல்லது நேரம் கிடைக்கும்போதெல்லாம், கால்கூட வைக்க முடியாத உச்சி வெயிலில் படுக்கை விரிப்புகள் முதற்கொண்டு கட்டில் வரை அனைத்துப் பொருட்களையும் காய வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் வெயில் சூட்டுக்கு மூட்டைப் பூச்சி இறந்து போகும். இது போக ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு சிட்டிகை போரக்ஸ் பவுடர் கலந்து எங்கெல்லாம் மூட்டைப்பூச்சி இருக்கிறதோ அங்கெல்லாம் தெளிக்க வேண்டும். போரக்ஸ் பவுடரை உண்ணும் மூட்டைப்பூச்சிகள்... உடனே இறந்து போகும். பிறகு, அங்குள்ள போர்வை, தலையணைகளை வெயிலில் காய வைத்து, உதறி மறுபடியும் உபயோகிக்கலாம். தண்ணீரை கை பொறுக்க முடியாத சூட்டில் சுட வைத்து, மூட்டைப் பூச்சி இருக்கும் இடங்களில் ஊற்றினாலும் அவை உடனே இறந்து போகும்.
ஈக்களைத் துரத்தும் புதினா!
புதினா இலையைக் கசக்கி அந்தச் சாறை தெளித்தாலோ அல்லது அந்த இலைகளைத் தூவி விட்டாலோ ஈக்கள் வராது. யூகலிப்டஸ் இலையைத் தோரணமாக கட்டி தொங்கவிடுவது, யூகலிப்டஸ் சாறை தண்ணீரில் கலந்து ஸ்பிரே மூலம் தெளிப்பது போன்ற செயல்களாலும் ஈக்கள் வருவதைத் தடுக்கலாம்.
எலியை பொறி வைத்து மட்டுமே பிடிக்க முடியும். பூச்சிகள் வராமல், ஒட்டடை அடித்து வைத்திருந்தாலே போதும்... பல்லிகள் வராது. அவற்றுக்கான உணவான பூச்சிகள் இல்லை எனும்போது... பல்லிகளுக்கு ஏது வேலை?!'' என்று அழகாகக் கேட்டார் செல்வம்.
உண்மைதானே!