Wednesday, July 31, 2013

பாஸிட்டிவ் எண்ணங்கள் புற்று நோய் சிகிச்சையை சுலபமாக கடக்க வைத்தன.

பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய், குறிப்பாக... மார்பகப் புற்று நோய் பற்றி 'அவள் விகடன்' அடிக்கடி தரும் விழிப்பு உணர்வுக் கட்டுரை களைத் தொடர்ந்து படித்து வருபவள் நான். ஆனால், நானும் ஒருநாள் மார்பகப் புற்றுநோயாளி ஆவேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. என்றாலும், அதைத் துணிச்சலாக எதிர்கொண்டு, இன்று அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பிற தோழிகளுக்கும் நன்நம்பிக்கை தருவதற்காக, இக்கடிதத்தை மன மற்றும் உடல் தெம்புடன் எழுதுகிறேன்!
ஐந்து ஆண்டுகளுக்கு முன் மிளகு சைஸில் என் வலது மார்பில் ஒரு கட்டி வளர வளர, கலவரமானது மனம். கூச்ச சுபாவத்தால் மருத்துவரிடம் செல்லத் தயங்கியவளை, உறவுகள் எச்சரித்து மருத்துவமனை அழைத்துச் சென்றனர். மேமோகிராம், பயாப்ஸி பரிசோதனைகளின் முடிவில், மார்பகப் புற்று உறுதியானது. பித்துப் பிடித்தவள் போல் ஆனேன். தனிமையைத் துணையாக்கினேன். சாகும் நாள் நெருங்கிவிட்டதுபோல் தோன்றியதால், வாழும் ஆசை அதிகமானது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால், நிலைமை கைமீறி விடும் என்ற மருத்துவரின் வார்த்தைகள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன. 'பிழைப்போம்' என்கிற நம்பிக்கை முழுதாக இல்லை. விரக்தியோடு சிகிச்சைக்குத் தயாரானேன்.
'கட்டி, 5 செ.மீ. அளவுக்கு வளர்ந்திருப்பதால் மார்பகத்தை அகற்றுவதைத் தவிர வேறு வழியில்லை' என்று டாக்டர் சொன்னபோது, ஏதோ அவமான கரமான விஷயம் நடக்கப்போவது போல நெஞ்சு இன்னும் விம்மியது. அறுவை சிகிச்சைக்கு முன் மூன்று 'கீமோ தெரபி' கொடுத்தால் கட்டியின் அளவு சிறியதாகிவிடும், பின் அகற்றுவது எளிது என்று சொன்ன டாக்டர், சிகிச்சையை ஆரம்பித்தார்.
மருத்துவமனையில் முதல் 'கீமோ' கொடுக்கப்பட, மறுநாள் வீட்டுக்கு வந்தேன். ஒரே வயிற்றுப்போக்கு, வாந்தி. ஒருவாய் சாப்பாடுகூட இறங்கவில்லை. ஒருவழியாக மூன்று 'கீமோ' கொடுப்பதற்குள் வாழ்க்கை நரகமாவதை உணர்ந்தேன். என் கேசம், புருவமெல்லாம் மொத்தமாக உதிர்ந்து மொட்டைத் தலையாகி, உடல் கறுத்து, முகம் சிறுத்து, பற்கள் கறை படிந்து கூன்போட்ட உடலானேன். 'சீக்கிரம் செத்தால் பரவாயில்லை' என்று நினைக்க வைத்தது என் கோலம். ஆனால்... கணவர், குழந்தைகள், தாய், சகோதரிகள், சகோதரர்கள் என்று என்னைத் தாங்கிய உறவுகளின் பாசம், இதிலிருந்து மீண்டு இந்த வாழ்க்கையை இவர்களோட வாழ வேண்டும் என்கிற உத்வேகத்தைத் தந்தது.
எங்கள் குடும்பத் தோழி ராதா மற்றும் அவர் கணவர் ஆகியோர் என்னைப் பார்க்க விரும்ப, அவர்களை என் தம்பி அழைத்து வந்தான். ராதா, மார்கப்புற்றால் பாதிக்கப்பட்டு மார்பகத்தை சிகிச்சை மூலமாக நீக்கிவிட்டவர். அதிலிருந்து புற்று நோயாளிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதை இந்தத் தம்பதி ஒரு தொண்டாகவே செய்து வருகின்றனர். நம்பிக்கை வறண்டு போயிருந்த என் நெஞ்சத்துக்கு... இருவரும் புத்துயிர் தந்தனர். 'பிள்ளைகளோட விளையாட்டில் இருந்து... பிடிச்ச சினிமா பாட்டு வரை சுத்தி இருக்கற உலகத்தை ரசிங்க. 'நான் குணமாகிடுவேன், நிச்சயம் குணமாகிடுவேன்'னு மனசுக்குள்ள சொல்லிட்டே இருங்க. உயிரைவிட... மார்பு பெருசா என்ன? சந்தோஷமா, நம்பிக்கையோட ஆபரேஷனுக்கு ரெடி ஆகுங்க' என்றனர். மனதில் ஒரு துணிச்சல் பிறந்தது; மனம் தெளிவானது. அறுவை சிகிச்சையும் முடிந்தது. ஆனால், 'எனக்கு ஏன் இப்படி?' என்கிற கேள்வி என்னை விடவில்லை.
'மனதளவில் கோபம், வெறுப்பு, விரக்தி போன்ற உணர்ச்சிகளை, உரம் போட்டு வளர்த்து வருபவர்களை எந்த நோயும் எளிதில் தாக்கும். அதற்கு புற்றுநோயும் விதிவிலக்கல்ல...'
- ஆஸ்பத்திரியில் எனக்கு கவுன்சிலிங் கொடுக்க வந்த ஒருவர் சொன்ன இந்த வார்த்தைகள், நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் இருந்தது. மருத்துவமனைப் படுக்கையில் இருந்தபடி முதல் முறையாக என்னை அலசிப் பார்த்தேன். கோபம், வெறுப்பு, விரக்தி எல்லாமே எனக்கு நிறையவே இருந்தது. மன்னிக்கும் குணம் மருந்துக்குகூட இருந்தது இல்லை. யோசித்தேன், நிறைய யோசித்தேன். எல்லோரையும் அன்பு செய்ய வேண்டும் - புரிந்தது; அன்புதான் உண்மை யானது - புரிந்தது; அன்பு மட்டும்தான் நோய் தீர்க்கும் மருந்து - நன்றாகவே புரிந்தது. என் உறவு களும், நான் ஆசிரியையாக வேலை பார்க்கும் பள்ளி யின் மாணவர்களும் எனக்காக பிரார்த்தனை செய்து அனுப்பிக் குவித்த எஸ்.எம்.எஸ்-களும் அதை ஆழமாகப் புரிய வைத்தன.
அறுவை சிகிச்சைக்குப் பின் மூன்று 'கீமோ'க் கள், 30 முறை ரேடியேஷன் சிகிச்சை. ஆனால், எனக்குள் நிரம்பிவிட்ட பாஸிட்டிவ் எண்ணங் கள், அந்த சிரமமான சிகிச்சையை சுலபமாக கடக்க வைத்தன. இதோ... நான் மறுபடியும் ஆசிரியப் பணியில் சேர்ந்துவிட்டேன்.
இன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தோழிகளே... நாளை, உங்களையும் இதேபோல 'மீண்ட கதை' எழுத வைக்க காத்திருக்கிறது காலம். நம்பிக்கையோடு இருங்கள்!