Monday, July 22, 2013

பாருங்க கடவுள் எப்படி புலம்புறார்னு

நம்ம மக்கள் பெரும்பாலானோர் அவங்க வாழ்க்கையில ஒரு முறையாவது கடவுளைத் திட்டியிருப்பாங்க. இன்னும் பலபேர் எனக்கு ஏன் அமெரிக்க அதிபர் பதவி கிடைக்கலே, ஆயா சுட்ட வடை கிடைக்கலைனு கடவுள்கிட்ட தினமும் புலம்புறவங்கதான். நம்மளோட அலப்பறைகள் தாங்காம கடவுள் மனுஷங்களை மாதிரிப் புலம்பினா எப்படிப் புலம்புவார்னு யோசிச்சுப் பார்த்தேன். கடவுள் ரொம்பப் பாவமாத் தெரியுறார் பாஸ்.

''ஒரு எருமை மாடாப் பிறந்திருந்தாக்கூட சந்தோஷமா இருந்திருக்கலாம். இவங்களுக்கு மத்தியில கடவுளா வாழுற கொடுமை இருக்கே... ம்ம்ம்... முடியல்ல!''

''கார் வாங்கணும், பைக் வாங்கணும், வீடு கட்டணும், பரிட்சையில பாஸாகணும்னு தினமும் லட்சம் பேரு வந்து புலம்புறாங்க. நீ ஒழுங்கா படிச்சா, பாஸாகப் போற, அத ஏன் எங்கிட்ட வந்து சொல்ற? நீ போடுற ரெண்டு ரூபா காசுக்கு நான் வந்து பரிட்சை எழுதணும்னு பார்க்கிறியா? நன்னாரித்தனமா இருக்கே?''

''முதல் முதலா, சைக்கிள் வாங்குற அளவுக்கு வசதியைக் கொடு கடவுளேனு வர்றீங்க. சரினு அதுக்கு வசதி பண்ணிக் கொடுத்தா, அடுத்த நாளே வந்து எல்லோரும் பைக் வாங்கிட்டாங்க, நான் எப்ப வாங்கப் போறேன்னு புலம்ப ஆரம்பிக்கிறீங்க. சரி போனாப் போகுதுனு அதுக்கு வசதிப் பண்ணிக் கொடுத்தா மறுபடி கொஞ்ச நாள்ல வந்து நான் உன்னையே நம்பிட்டிருக்கேனே, ஒரு கார் வாங்குற அளவுக்கு வசதியைக் கொடுக்கக் கூடாதாங்கிறீங்க. சரி, கார் வாங்குற அளவு வசதியைக் கொடுத்தாலாவது சந்தோஷமா இருப்பீங்கனு பார்த்தா, அதுவும் இல்ல. கார் வாங்கின அடுத்த நாளே வந்து ஹெலிகாப்டர் வாங்கிக்கொடு, கப்பல் வாங்கிக்கொடுனு பழம், தேங்காயோட வந்து நிக்க வேண்டியது. எதைக் கொடுத்தாலும் மறுபடியும் மறுபடியும் வந்து நிக்கிறீங்களே, ஏன்பா உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?''

''கடவுள் கண்ணைக் குத்தும்கிறதை எங்கே இருந்துய்யா கண்டுபிடிச்சீங்க? சின்னப் புள்ளைங்ககிட்ட எல்லாம் சொல்லிப் பயமுறுத்துறீங்களே!''

''எனக்கு இந்தக் காரியம் நடந்தா, உன் உண்டியல்ல 10,000 போடுறேன், மணி வாங்கி வைக்கிறேன், வேல் வாங்கி வைக்கிறேனு வேண்டுறீங்களே, எப்பவாச்சும் நான் உன்னை முழுசா நம்புறேன், அந்தக் காரியம் வெற்றியாகும்னு போயிருக்கீங்களா? ஒரு வேளை அந்தக் காரியம் நடக்கலைனா பணம் வீணாப் போயிடுமேனு பயம். அவ்ளோ நம்பிக்கை. அவ்ளோ வெவரம் நீங்க!''

''எனக்கு அது வேணும் இது வேணும்னு கேக்கிறவனப் பார்த்தாக்கூடப் பயமில்லை. அடுத்தவன் நல்லா இருக்கானே, அவன் எப்படியாவது உருப்படாமப் போயிடணும்னு வேண்டுறவனைப் பார்த்தாதான் கண்ணைக் கட்டிருது. நீங்க சொல்லுற எதுக்குமே பதில் சொல்லாம இருக்கேன்கிறதுக்காக என்ன வேணாலும் வேண்டுவீங்களா? என்னதான்யா நினைச்சுட்டிருக்கீங்க உங்க மனசுல?''

''கடவுளைக் காட்டுறேன், கடவுள் கிட்டப் பேசுறேனு சொல்ற சாமியார்கிட்ட கும்பல் கும்பலாப் போய் ஏமாந்து போறீங்களே, அதுக்கப்புறமாவது திருந்துறீங்களா?''

''இதெல்லாத்தையும் விடக் கொடுமை என்னன்னா, கடவுள் புலம்பினா இப்படித்தான் புலம்புவார்னு எழுது ரானுங்க பாருங்க... அவனுங்களை...''

பாருங்க கடவுள் எப்படி புலம்புறார்னு, பாவம்ல!