Sunday, July 28, 2013

மாடர்ன் வெட்டிங் ஆர்ட் போட்டோகிராஃபி

இப்போவெல்லாம் கல்யாணத்துக்கு அழகான மாப்பிள்ளை, பொண்ணைப் பிடிக்கிறாங்களோ இல்லையோ, அழகான போட்டோ பிடிச்சே ஆகணும்னு கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள் இரு வீட்டாரும். 'வெட்டிங் ஜர்னலிஸம்', 'மாடர்ன் வெட்டிங் ஆர்ட் போட்டோகிராஃபி', 'வெர்ஸடைல் போட்டோகிராஃபி', 'தேர்டு ஆங்கிள் போட்டோகிராஃபி' என இதற்குப் பலப் பல நாமகரணம் வேறு சூட்டி, கலைத் தாகம் எடுத்து, வித்தியாச ஆங்கிளில் படங்களாக எடுத்துக் குவிக்கிறார்கள் நம் புகைப்படக் கலைஞர்கள்.

சில மாதங்களுக்கு முன் கோவையில் நடந்த நண்பரின் திருமணத் துக்குச் சென்றிருந்தேன். ஏற்கெனவே இரண்டு போட்டோகிராஃபர்கள் மணமேடைக்கு நேராக நின்று, 'சின் அப்', 'ஸ்மைல் ப்ளீஸ்' எல்லாம் சொல்லி போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். ஒருவர் மாப்பிள்ளை வீடு, இன்னொருவர் பெண் வீடு என்பதை அவர்கள் படம் எடுக்கும் நபர்களைவைத்தே யூகிக்க முடிந்தது. ஆனால், மூன்றாவதாகத் திருவிழாவில் தொலைந்த குழந்தையைப் போல ஒரு கடும் தேடலோடு வித்தியாசமாக ஒருவர் மட்டும் கேமராவோடு, கூட்டமாகக் கூடி நிற்கும் இடங்களில் புகுந்து, உருண்டு, புரண்டு போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.

கொட்டாவி விடுபவர், காது குடையும் குழந்தை, மந்திரம் ஓதும் ஐயர் என்று விடாமல், படம் எடுத்துத் திரும்பியவரை மடக்கி, 'யாரு பாஸ் நீங்க? ஏன் பொண்ணு மாப்பிள்ளையை எடுக்காம இங்கே பல்லு குத்துறதையும் வெத்தலை பாக்கு போடுறதையும் வளைச்சு வளைச்சுப் படம் எடுக்கு றீங்க?' என்று கேட்டேன். 'ஹலோ நான் வெட்டிங் ஜர்னலிஸ்ட்... வித்தி யாசமான ஆங்கிள்ல மேரேஜைக் கவர் பண்றேன்...' என்றார் ஸ்டைலாய். அப்புறமாகத்தான் தெரிந் தது, மாப்பிள்ளையான நம் நண்பர் பெங்களூருவில் இருந்து ஸ்பெஷலாய் இந்த போட்டோகிராஃபரை அழைத்து வந்த கதை.

''நல்லா கல்யாணம் ஃபங்க்ஷன் போகும்ணே. இவங்க என்ன பண்ணு வாங்கனா, பொண்ணோட கழுத்துல மாப்பிள்ளை தாலியைக் கட்டுறப்போ அப்படியே மேடைக்குப் பக்கவாட்டுல உட்கார்ந்து கெட்டிமேளம் வாசிக்கிற வரோட விரல்களையும், அட்சதை தட்டையும் ஃபோகஸ் செய்வாங்க. மாப்பிள்ளை பொண்ணெல்லாம் அவுட் ஆஃப் ஃபோகஸ்ல இருப் பாங்க. அந்த நேரத்துல யாராச்சும் கண்ணீர்விட்டாங்கனா போச்சு. அதை டைட் க்ளோஸ்-அப்ல வெச்சு மத்த எல்லோரையும் அவுட் ஆஃப் போகஸ்ல விட்ருவாங்க. பொதுவா தாலி கட்டுறதை நேருக்கு நேரா படம் எடுக்கிறதைத்தான் நாம பார்த்திருப் போம். இப்போ ரொம்ப அட்வான்ஸ்டு. பருந்துப் பார்வையில படம் எடுக்குறாங்களாம். புரியலையா?

முதல்நாளே மண்டபத்தை நல்லா நோட்டம் விட்டு ஆர்ட் டிபார்ட்மென்ட் கணக்கா கயிற்றைக் கட்டி, பொண்ணு மாப்பிள்ளை தலைக்கு மேலே கயித்துல கம்பியைக் கட்டி, அதுல நின்னெல்லாம் போட்டோ எடுத்து சாகசம் பண்ணுவாங்க. எல்லாம் ஆர்ட் போட்டோகிராஃபியாம். சாம்பார் கொதிக்கிறதையும் மாப் பிள்ளை வியர்வையைத் துடைக் கிறதையும் க்ளோஸ்-அப்புல எடுத்து ஆல்பம் போட்டுப் பார்த்தா நல்லாவா இருக்கும்?'' என்று அலுத்துக் கொண்டார் நம் பழமைவாதி நண்பர் ஒருவர்.

வெட்டிங் ஜர்னலிஸம் போட்டோகிராஃபியில் எக்ஸ்பர்ட்டான நம் நண்பர் சதீஷ், ''இது அழகியலுக்காக எடுக்கப் படுபவை. ஃபாரீன்ல எப்பவோ வந்தாச்சு. வட இந்தியாவுல சில வருடங்களுக்கு முன் இது ரொம்ப பாப்புலர். பெங்களூருல இந்த வகை போட்டோகிராஃபி பண்றதுக்குனே பல பேர் இருக்காங்க. லட்சங்கள்ல சார்ஜ் பண்ணுவாங்க. இப்போ சென்னையிலும் இந்த கல்ச்சர் வந்தாச்சு. நானும் இது சம்பந்தமா பல டெக்னிக்கல் விஷயங்களைக் கத்துக்கிட்டு ஹாபியா எடுத்துக்கொடுக்கிறேன். காலம் காலமா கட்டுப்பெட்டித்தனமா இருக்கிற விஷயங்களை உடைக்கணும்கிறதுதான் இதோட கான்செப்ட். யாரும் யோசிக்காத இன்னொரு கோணத்துல, நாம ரெகுலராப் பார்க்கிற ஒரு விஷயத்தைப் பார்த்தாலே நாம சிலிர்ப்பாவோம். எல்லோரிடமும் இந்த டேஸ்ட் இருக்கு. அந்த டேஸ்ட்டோட புகைப்படக் கலையும் இணைந்ததால உருவான கலை வடிவம்தான் இந்த வகை புகைப்படங்கள்!'' என்றார்.    

அண்மையில் ராமநாதபுரத்தில் நடந்த நண்பனின் கல்யாணத்துக்குச் சென்றிருந்தேன். மணமகனுக்கு மணமகள் சாப்பாடு ஊட்டிவிடும் காட்சியை வித்தியாச ஆங்கிளில் ஒருவர் எடுத்துக்கொண்டிருந்தார். அதாவது இலையில் இருக்கும் ஜிலேபியை ஃபோகஸ் செய்து பின்னால் ஊட்டிவிடும் இருவரையும் அவுட் ஆஃப் ஃபோகஸ் செய்து எடுத்துக்கொண்டிருந்தார். கலர்ஃபுல் ஜிலேபி மெகாபிக்சலில் சிவப்பாய்த் தகதகக்க அரக்கு கலரில் யார் மாப்பிளை, யார் பொண்ணு எனத் தெரியாத வண்ணத்தில் ஆல்பத்தில், நாளை ஊட்டிவிடும் காட்சியைப் பார்த்து அவர்களது சொந்தக்காரர்கள் பரவசமாவார்களா, அல்லது கலவரமாவார்களா தெரியவில்லை. இதெல்லாவற்றையும்விட ஒரு பெரிய கொடுமை, கை கழுவும் இடத்தில்வைத்து மாப்பிள்ளையும் பொண்ணும் தாங்கள் சாப்பிட்ட கைகளைக் கழுவும்போது கைகளுக்கு டைட் க்ளோஸ்-அப் ஷாட் வைத்து சுட்டுத் தள்ளினார். விட்டால் வாய் கொப்பளிக்கவைத்து கடவாய் பல்லுக்கு ஒரு டைட் ஜூம் போவார் போல இருந்தது. ம்ஹும்... நான் அவுட் ஆஃப் போகஸ் ஆனேன்!