Saturday, July 27, 2013

தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு?

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள 32 அறங்களில், தண்ணீர் பந்தல் வைத்தலும் ஒன்று. சென்னையில் கடந்த கோடையில் தண்ணீர் பந்தல்கள் வைக்கப்பட்ட விதம், பத்திரிகைகளில் பல விதமாக வெளிவந்தது.ஆனால், தண்ணீர் பந்தலை வித்தியாசமாக வைக்க முடியும் என, நிரூபித்துள்ளார் ஆட்டோ ஓட்டுனர் ரகுபதி,29. மதுராந்தகம், ஓணம்பாக்கம் தாலுகா அருகில் உள்ள பவுந்தன் கருணை கிராமம். இவரது தந்தை பக்தவத்சலம், மில் ஊழியர். அம்மா கோவிந்தம்மாள். எட்டாவது வரை படித்துள்ள ரகுபதி,தற்போது சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் தங்கி,திருவான்மியூரில், ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆட்டோவில் குடிநீர் வைத்துள்ளதோடு, 'மக்களுக்காக நடமாடும் இலவச குடிநீர்' என, தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதி வைத்து உள்ளார்.

தண்ணி கிடைக்கல...:ஆட்டோவில் இலவச குடிநீர் வைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது குறித்து இவ்வாறு கூறுகிறார்:நான் ரெண்டு வருஷமா ஆட்டோ ஓட்டு றேன். ஆட்டோ ஓட்டும் போது எங்கேயாவது இறங்கி ஓட்டலில் தண்ணி கேட்டா, இது கேன் தண்ணி, காசு குடுத்து வாங்கினது... தர முடியாதுன்னு சொல்வாங்க.பெரிய ஓட்டலில் சாப்பிட்டாலும், தனியா கேனில் தண்ணி எடுக்க கூடாதும்பாங்க... எனக்கு மட்டும் இல்ல, யாருக்குமே எந்த பெரிய ஓட்டல்லேயும், இலவசமா தண்ணி கிடைக்கிறதில்ல. ஒரு நாளைக்கு 30, 40 ஆயிரம் ரூபாய் வரை, லாபம் சம்பாதிக்கிற ஓட்டல்களிலேயே இலவச தண்ணி கிடையாது.ஒரு நாளைக்கு ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கிற நாமளே இலவசமா, தண்ணி தந்தா என்னன்னு தோணிச்சு. நாம செய்ய ஆரம்பிச்சா, யாராவது அதை பார்த்து செய்வாங்க இல்லியா? ஆறு மாசத்துக்கு முன்னாடி நான் சொந்தமா ஆட்டோ வாங்கின பிறகு, என்னோட சொந்த ஆட்டோவில் தண்ணி வசதிய வெச்சுட்டேன். தாகத்திற்கு தண்ணி கூட தரமா, சம்பாதிக்கிற பணத்தை வைச்சு இவங்கஎல்லாம் என்ன பண்ண போறாங்கன்னு தெரியல. இவ்வாறு அவர் தன் மன ஓட்டத்தை வெளிப்படையாக சொன்னார்.


ரூ 4 ஆயிரம் :இதற்கு எவ்வளவு செலவுசெய்கிறார்? அதையும் அவரே சொல்கிறார்:'டிரைவர் சீட்' பக்கத்தில் கம்பி போட்டு வைக்கிறதுக்கும், திருவள்ளூவர் படம் ஸ்டிக்கர் ஒட்டி, பேர் எழுதுவதற்கும் ஐந்தாயிரம் ரூபாய் வரை செலவானது.ஒரு நாளைக்கு 30 ரூபாய் கேன், மூணு கேன் ஆகும். வாரத்தில் ஒரு நாள் 70 ரூபாய் பிஸ்லெரி கேன் மூணு வைப்பேன். அது தான், பார்க்க சுத்தமாக இருக்கும்.தண்ணிக்கு ஒரு மாதத்திற்கு நாலாயிரம் ரூபாய் வரை செலவாகும். மே மாதத்தில் தண்ணி கேன் வைக்கிறேன். இதை குடிப்பதோடு, பாட்டில்லேயும் பிடிச்சுட்டு போலாம்.இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.இந்த குடிநீர் கேன், ரகுபதிக்கு சமூகத்தில் தனிப்பட்ட அடையாளத்தை பெற்று தந்துள்ளது.

தனது சேவைக்கு மக்களின் வரவேற்பு குறித்து, சிலாகித்து பேசுகிறார்:எல்லாரும் பாரட்டுறாங்க. ஒருமுறை ஒரு கர்ப்பிணி பெண்ணை, சோழிங்கநல்லூரில் இருந்து பெசன்ட் நகர் வரை அழைச்சிட்டு போய் விட்டு வந்தேன். அவங்க, இப்போ ரெகுலர் சவாரி வராங்க. இதுவரை, 10 பயணிகள் என்னோட போன் நம்பரை வாங்கி வைச்சி கூப்பிடுறாங்க.நாலு பேர், அவங்க விசிட்டிங் கார்டு கொடுத்து எந்த உதவி வேணுமானாலும் கூப்பிடுன்னு சொல்லிருக்காங்க... ரோட்டுல போகும் போது பலரும் கை காட்டி, கட்டை விரலை உசத்தி காண்பிச்சுட்டு போவாங்க. ஒருமுறை, ஈஞ்சம்பாக்கத்துல இருக்கிற காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ., காரில் சாலையை கடந்து போகும் போது, பக்கத்துல வந்து கட்டை விரலை உயர்த்தி வாழ்த்திட்டு போனாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவங்க பேர் தெரியல (விஜயதாரணி).கிழக்கு கடற்கரை சாலையில் தண்ணி குடிக்கும் போது, போக்குவரத்து எஸ்.ஐ., ஒருத்தர், 'உன் ஆட்டோவுக்கு இந்த லைன்ல கேசே கிடையாது' ன்னு சொன்னார்.


வரவேற்பு:நெகிழ்ச்சியுடன் சொன்ன ரகுபதி, மும்மொழியில் எழுதி வைத்திருப்பது, வள்ளுவர் படத்தின் பின்னணி குறித்து உற்சாகம்குறையாமல் சொல்கிறார்: சென்னையில வட மாநில தொழிலாளர்கள் நிறைய பேர் இருக்குறாங்க சார். அவங்களுக்கு தமிழ், ஆங்கிலம், படிக்கவும் தெரியாது. யார்கிட்டயும் போய் பேசவும் மாட்டானுங்க. இந்தியில எழுதியிருந்தா அவங்களே வந்து குடிப்பாங்க. அதுக்காக, மூணு மொழிகள்ள எழுதியிருக்கேன். இலவச குடிநீர் கேன் பெயரை, ஒரு படம் போட்டு வைத்தால், நல்லா இருக்குமேன்னு தோணிச்சு. எல்லாருக்கும் பொதுவான படம் போடலாம்னு நினைச்சேன். அதனால், திருவள்ளுவர் படம் போட்டேன்.ஆட்டோ ஓட்டுனர்கள் மத்தியில் எப்படிவரவேற்பு இருந்தது? அதையும் அவரே சொல்கிறார்... செலவ எப்படி சமாளிக்கிறேன்னு எல்லாரும்கேட்பாங்க. செம்மஞ்சேரி, இ.சி.ஆரில் ரெண்டு ஆட்டோ டிரைவர்கள், நாங்களும் இந்த மாதிரி தண்ணீர் வைக்கிறோம்?னு சொன்னாங்க.அரக்கோணத்துல ஒரு ஆட்டோ டிரைவர், இதை எங்க ஊர்ல செய்றேன்னு சொன்னார். அவர் ஆரம்பிச்சிருப்பார்.எனக்கு இப்ப வர்ற பணம் போதும் சார்.ஆட்டோவை, பாதி பணம் கட்டி தான் எடுத்தேன், மீதி மாத வாடகையில் தான் கட்டி வருகிறேன். எனக்கு இந்த செலவு ஒரு விஷயம் இல்லை. நான் சமாளிக்க முடியும்ன்னு நினைக்கிறேன்.தண்ணி வைச்சதால, பயணிகளின் வருகை கூடியிருக்கிறதான்னு தெரியல, ஆனா கொஞ்சம் நட்போட இருக்காங்க... அந்த வித்தியாசம் தெரியுது.

ஜனங்ககிட்ட, நல்ல விஷயத்தை நேரடியாக கொண்டு போகனும்னு தான் என் விருப்பம். என்ன மாதிரி சாதாரண ஆளே, இந்த மாதிரி தண்ணீர் வைக்க முடியுதுன்னா, நாட்ல வசதியா இருக்குறவங்க ஏதாவது நல்லது செய்ய முடியாதா என்ன?