Sunday, July 7, 2013

மொபைல் போனில் நீலப்படம் - எங்கே செல்கிறது மாணவ சமுதாயம்?

செல்போனா, செக்ஸ் போனா!

நான், ஒரு தனியார் தொழிற்பயிற்சி பள்ளியின் ஆசிரியர். ஒரு நாள், நான் பாடம் நடத்தும் போது, மாணவன் ஒருவன் தன்னை மறைக்கும் விதமாக, புத்தக பையை தன் முன் பிரித்து வைத்துக்கொண்டு, பாடத்தை கவனிப்பது போல் பாவ்லா செய்து கொண்டிருந்தான். அவன் கவனம் முழுவதும் பிரித்து வைத்த பையினுள்ளேயே இருந்தது.

எதிர்பாராத தருணத்தில் அவனை மடக்கினேன். பையிலுள்ள மொபைல் போனில், நீலப்படம் ஓடிக் கொண்டிருந்தது. சத்தம் காட்டாமல் மொபைலை எடுத்துக் கொண்டு, அவனை ஓய்வறைக்கு அழைத்து சென்று கண்டித்து, "நாளை வரும் போது, உன் தந்தையை அழைத்து வா...' என்று உத்தரவிட்டேன் எதையுமே காதில் வாங்கி கொள்ளாத அவன், "மொபைல் வேணும்னா எடுத்துக்குங்க, மெமரிகார்டு கொடுங்க... இனிமே நான் படிக்க வரமாட்டேன், மீறி இந்த விஷயத்தை எங்க அப்பாகிட்ட கொண்டு போக நினைத்தால், கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொள்வேன். பின், என் சாவுக்கு நீங்கள் தான் பதில் சொல்ல நேரிடும்...' என்று, கொஞ்சமும் பயமில்லாமல் என்னையே மிரட்ட ஆரம்பித்தான். 

அவன் பேசிய தோரணை, என் வயிற்றில் அமில மழையை வரவழைத்தது. கையெடுத்து கும்பிட்டு, மொபைல் போனையும் கொடுத்து, அவனை கவுரவமாக அனுப்பி வைத்தேன்.

பெற்றோர்களே... இளைய சமுதாயம் சென்று கொண்டிருக்கும் பாதையை பார்த்தீர்களா? எதையும் பிஞ்சிலேயே கிள்ள வேண்டும். பழுத்து விட்டால் ஒன்றும் செய்ய முடியாது!

ஆசிரியப் பணியின் அவலத்தை எங்கே போய் சொல்வது!

(Source: Dinamalar, 07/07/2013)