Saturday, May 11, 2013

குழந்தைகளுக்காக திருமணத்திற்கான நிதி திட்டமிடல்

ஒவ்வொரு பெற்றோரின் வாழ்நாள் கனவு என்பது தங்களது பிள்ளைகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தவேண்டும் என்பதே! இதற்காக தங்களின் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவழிக்கத் தயாராக இருப்பார்கள்.

இன்னும் சிலர் பிள்ளைகளின் திருமணத்தை சிறப்பாகச் செய்து விட்டு, அதன்பிறகு கடனில் மூழ்கி விழிபிதுங்கி நிற்பார்கள். அல்லது குடியிருக்கும் வீட்டை விற்று, கடனை அடைத்துவிட்டு வாடகை வீட்டில் இருப்பார்கள்.

குழந்தை பிறந்தவுடனேயே  அதன் திருமணத்திற்கான திட்டமிடலை செய்தால், இதுமாதிரியான சிக்கலில் சிக்காமல், ஜாம் ஜாமென்று திருமணத்தை நடத்தலாம். குழந்தை பிறந்த சில ஆண்டுகளிலேயே  அதன் திருமணத்திற்கு சேமிக்கத் தொடங்கினால், முதலீட்டுக் காலமும் அதிகமாக இருக்கும். முதலீட்டுக்கான தொகையும் குறைவாக இருக்கும்.   'என் குழந்தைக்கு இப்போது பத்து வயது. நான் எந்த திட்டமிடலும் செய்யவில்லையே!' என கவலை வேண்டாம். இப்போதுகூட நீங்கள் அதற்காகத் திட்டமிடலாம்.

எந்தெந்த வயது குழந்தைக்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கும் முன்பு, சில பொதுவான விஷயங்களை வரையறுத்துக் கொள்வோம்.

உங்கள் குழந்தைக்கு எப்போது திருமணம் செய்யவேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும். சிலர் 20 வயதில் செய்கிறார்கள். சிலர், 25 லிருந்து 30 வயதுக்குள் செய்கிறார்கள். உங்கள் குழந்தைக்கு நீங்கள் 23 வயதில் திருமணம் செய்யப் போவதாக வைத்துக்கொள்வோம்.

திருமணத்துக்கு எவ்வளவு செலவாகும் என்பதும் நபருக்கு நபர் மாறுபடும். எந்தத் திருமண மண்டபத்தில் திருமணம் நடத்துகிறீர்கள்? விருந்துக்கு எத்தனை வகை உணவை பரிமாறுகிறீர்கள்? சீர்வரிசை எப்படி? என்பதை எல்லாம் பொறுத்து பட்ஜெட் ஏறும் அல்லது இறங்கும். நீங்கள் உங்கள் குழந்தையின் திருமணத்தை இன்றைய தேதியில் சுமார் ரூ.5 லட்சம் செலவில் செய்வதாக வைத்துக்கொள்வோம்.

இன்றைக்கு 5 லட்சம் ரூபாய் தேவை எனில், உங்கள் குழந்தைக்குத் திருமணம் செய்யும்போது விலைவாசி ஏற்றம் காரணமாக அப்போது எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதையும் கணக்கிடவேண்டும். இதற்கு விலைவாசி ஏற்றம் சுமாராக எவ்வளவு இருக்கும் என்பதை முடிவு செய்ய வேண்டும். ஆண்டு சராசரி விலைவாசி ஏற்றம் சுமார் 7 சத விகிதம் என்று வைத்துக்கொள்வோம்.

மேற்சொன்ன மூன்றையும் அடிப்படையாக வைத்து உங்கள் குழந்தையின் திருமணத்திற்கு எவ்வளவு செலவாகும், அந்தப் பணத்தை நீங்கள் எப்படி சேமிக்கவேண்டும் என்பதை அடுத்தப் பக்கத்தில் அட்டவணையாகத் தந்திருக்கிறேன்.

இந்த அட்டவணைபடி, குழந்தையின் திருமணத்திற்கு குறைந்தபட்சம் 13 ஆண்டுகள் இருப்பதால், அதாவது முதலீடு செய்வதற்கு போதிய காலம் இருப்பதால், கொஞ்சம் ரிஸ்க் எடுத்து ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அதேநேரத்தில், நம் இலக்கை அடைவதற்கு ஒன்றிரண்டு வருடத்திற்கு முன், திருமணத்திற்குத் தேவையான தொகையை பாண்ட் ஃபண்ட் அல்லது ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற ரிஸ்க் இல்லாத திட்டங்களுக்கு மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பங்குச் சந்தை திடீரென சரிவைச் சந்தித்தால், கஷ்டப்பட்டு சேமித்தப் பணத்தை இழக்காமல் தடுக்க முடியும்.  

உதாரணமாக, உங்கள் குழந்தைக்கு இப்போது 15 வயது. இன்னும் 8 ஆண்டுகளே திருமணத்துக்கான முதலீட்டை மேற்கொள்ள முடியும் என்கிறபோது ஓரளவுக்கு ரிஸ்க் கொண்ட பேலன்ஸ்டு ஃபண்டுகளில் செய்துவிட்டு,  திருமணத்திற்கு தேவைப்படும் தொகை கிடைத்தவுடன், அதை பாண்ட் ஃபண்ட் அல்லது எஃப்.டிக்கு மாற்றிக் கொள்ளலாம்.

ஒரு சில குடும்பங்களில் பெற்றோர்களின் வருமானம், குழந்தையின் கல்வி மற்றும் அன்றாடச் செலவுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். இச்சூழலில் பிள்ளைகள் வேலைக்குச் சென்றபிறகு திருமணத்திற்குத் தேவையான தொகையைச் சேமிக்க வேண்டியிருக்கும். இவர்களுக்கான முதலீட்டுக் காலம் குறைவாக இருக்கும். அச்சமயத்தில், அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்கிறேன்.  

20 வயதாகும் பெண்ணுக்கு இன்னும் 3 ஆண்டுகள் கழித்து திருமணம் என வைத்துக் கொள்வோம். திருமணத்திற்கு தற்போது 5 லட்சம் ரூபாய் தேவைப்படும். இன்னும் மூன்று ஆண்டு கழித்து 6.6 லட்சம் ரூபாய் தேவையாக இருக்கும். இவர்கள் திருமணத்திற்காக ஒவ்வொரு மாதமும் எஸ்.ஐ.பி. முறையில் 11,200 ரூபாயை சுமார் 10% சதவிகிதம் வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

சிலர், பெண்ணைத் திருமணம் செய்து வைப்பதற்கு கடைசி இரண்டு, மூன்று ஆண்டுகளில் முடிந்த அளவுக்கு தங்கத்தை வாங்குகிறார்கள். இது  தவறு. காரணம், தங்கத்தின் விலை நீண்ட காலத்தில் ஏறுமுகமாக இருக்கிறது. இதனால் கடைசி ஆண்டுகளில் தங்கத்துக்காக அதிக தொகையை செலவிடவேண்டி இருக்கும். இதற்கு பதில் ஆரம்பத்திலிருந்தே கோல்டு இ.டி.எஃப். அல்லது கோல்டு ஃபண்டில் முதலீடு செய்தால், சேதாரம், செய்கூலி பிரச்னை இல்லாமல், தேவைப்படும்போது விற்று, லேட்டஸ்ட் டிசைனில் நகை வாங்கிக் கொள்ளலாம். தங்கம் விலை ஏறிவிட்டதே என்றும் கவலைப்படத் தேவை இருக்காது!

சரி, உங்கள் மகனுக்கு இப்போது 20 வயது.அவனுக்கு 28 வயதில் திருமணம் செய்ய ஆசைப் படுகிறீர்கள். அதற்கு இன்றைக்குத் தேவைப்படும் தொகை 5 லட்சம் ரூபாய். திருமணத்திற்கு இன்னும் 8 வருடம் இருப்பதால், ஆண்டுக்கு சராசரியாக 10% வருமானம் எதிர்பார்க்க கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்து, மகனின் திருமணத்தை அமோகமாக நடத்தலாம்.

குழந்தைகளின் திருமணத்திற்கு சேமிக்கும் பணத்தை மியூச்சுவல் ஃபண்டுகளில்தான் முதலீடு செய்யவேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் இன்ஷூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்தீர்கள் எனில், உங்களுக்கு அதிகபட்சமாக 6 சதவிகித வருமானம் மட்டுமே கிடைக்கும். அந்தப் பணத்தை வங்கி, தபால் நிலையங்களில் ஆர்.டி.யாகச் சேமித்தால்கூட அதிகபட்சம் 7.5 முதல் 8 சதவிகித வருமானம் மட்டுமே கிடைக்கும். ஆண்டுக்கு சராசரியாக 10-12 சதவிகித வருமானத்தை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் எதிர்பார்க்க முடியும் என்பதால், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யச் சொல்கிறேன்.

சக்சஸ்ஃபுல் ப்ளான் கிடைச்சாச்சு! இனி உங்கள் குழந்தைகளின் திருமணத்திற்கான முதலீட்டைத் தொடங்க வேண்டியதுதானே!