Monday, May 25, 2015

எங்கெங்கும் நிம்மதி நிலவ...‘எம்பதி’!

எங்கெங்கும் நிம்மதி நிலவ...'எம்பதி- EMPATHY'!

''கல்யாணமாகி ரெண்டு வருஷம் ஆகுது. நானும் என் மனைவியும் சண்டை போடாத நாளே இல்லை. காதலிச்சப்போ நான் எது செஞ்சாலும் ரசிச்சவ, இப்போ என்ன சொன்னாலும் புரிஞ்சிக்காம சண்டைபோடுறா. எதையும் என் நிலைமையில இருந்து யோசிக்கவே மாட்டேங்கிறா. வெறுத்துப்போச்சு!''

- ஆண் வாசகர் ஒருவர் மெயில் மூலமாகப் புலம்பித் தீர்த்தார். அவரையும், அவர் மனைவியையும் நேராக வரவழைத்து... அவர்களுக்கு இடையிலான பிரச்னைகளைக் களைய நுட்பமான யோசனை ஒன்று சொன்னேன். அதுதான், அடுத்தவர் நிலையில் இருந்து யோசிக்கும் 'எம்பதி' (Empathy). கணவர் சொல்வதை, கணவரின் நிலையில் இருந்து மனைவி புரிந்துகொள்வதும், மனைவி சொல்வதை, மனைவியின் நிலையில் இருந்து கணவர் புரிந்துகொள்வதும் சிறு சச்சரவுகூட எழாத இல்லறம் அமைய வழிவகுக்கும்.

எம்பதி என்பது, தம்பதிகளுக்கு இடையில் மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய அடிப்படை மனிதாபிமானப் பண்பு. தன் மகனால் தேர் ஏற்றிக் கொல்லப்பட்டு இறந்துபோன கன்றுக்குட்டியின் பிரிவால் துடித்த தாய்ப்பசு, மனுநீதிச்சோழனிடம் நியாயம் கேட்டு மணி அடிக்க, சோழன், 'கன்றுதானே இறந்தது' என்று விட்டுவிடாமல், பிள்ளையைப் பிரிந்து துடிக்கும் தாய்ப்பசுவின் நிலையில் இருந்து யோசித்து, தன் மகன் என்றும் பாராமல் தேர் ஏற்றிக் கொன்ற கதை, எம்பதிக்கு சிறந்த உதாரணம்.

நம் நிலையில் இருந்து மற்றவர்களின் பிரச்னையைப் பார்த்து, அவர் மேல் பரிதாபப்படும் குணம்... சிம்பதி (Sympathy). இதிலிருந்து இன்னும் ஒரு படி உயர்ந்து நிற்கும் பண்பு, எம்பதி. அதாவது, அவர் நிலையில் இருந்தே அவர் அனுபவிக்கும் வேதனையைப் புரிந்துகொள்வது. இந்தக் குணம், யார் மீதும் நமக்குக் கோபம் தராது. மாறாக, புரிதலையே வளர்க்கும்.

உங்கள் கணவர், உங்கள் பிறந்தநாளுக்குப் பரிசளித்த வளையல் பற்றி உங்கள் மாமியாருக்கு அவ்வளவாக சந்தோஷமில்லை. சொல்லப்போனால், வருத்தம்கூட உண்டு. 'எனக்கு அவர் வளையல் வாங்கிக் கொடுத்ததுல என் மாமியாருக்கு அவ்வளவு பொறாமை, எரிச்சல், கடுப்பு, கோபம். என் புருஷன் எனக்கு வாங்கிக் கொடுக்கிறாரு, இவங்களுக்கு என்னவாம்?' என்று உங்களுக்கு ஆற்றாமை பொங்கலாம். ஆனால், கொஞ்சம் உங்கள் மாமியாரின் இடத்தில் இருந்து இதை யோசித்துப் பாருங்கள். வறுமையிலும், வைராக்கியத்திலும் உங்கள் கணவரை வளர்த்தெடுத்த தாயாக அவர் இருக்கலாம். அவரின் இளவயதில், புதுப்புடவை, சுற்றுலா என சின்னச் சின்னப் பொருளாதார ஆசைகளைக்கூட தியாகம் செய்துவிட்டு, உங்கள் கணவரைக் குறையில்லாமல் வளர்த்திருக்கலாம். இன்று அவர் கைநிறைய சம்பாதிக்க அன்று அவரைக் கடன்பட்டுப் படிக்க வைத்திருக்கலாம். அப்படியிருக்க, அதே வீட்டில் இருக்கும் தன்னை விட்டு, உங்களுக்கு அவர் மகன் வளையல் வாங்கிக் கொடுக்கும்போது, அவருக்கு வருத்தம் வரத்தான் செய்யும் என்பதை, அவர் நிலையில் இருந்து 'எம்பதடிக்'காக யோசிக்கும்போது உங்களுக்கும் புரியும்.

'எல்லா பெண்களையும் போலத்தான் என் மருமகளும் ஆசைப்படுவா. இதுல குற்றம் கண்டுபிடிக்க என்ன இருக்கு?' என்று உங்கள் நிலையில் இருந்து 'எம்பதடிக்'காக உங்கள் மாமியார் யோசித்துவிட்டால், வீடு சொர்க்கமாகிவிடும்.

அலுவலகத்தில், 'ஞாயித்துக்கிழமைக் குள்ள இதை முடிச்சிடணும்' என்று சொல்லும் பாஸ் மீது, 'ஞாயித்துக்கிழமையும் வேலை பார்க்கச் சொல்றாரே' என்று எரிச்சல் வரலாம். ஆனால், 'ஞாயித்துக் கிழமை இதை முடிச்சாதானே திங்களன்று அதை அவர் மீட்டிங்கில் பிரசன்ட் பண்ண முடியும்?' என்று அவர் நிலையில் இருந்து யோசித்தால், வேலை பாரமாகத் தெரியாது. அதேபோல, 'என் டீம் மெம்பர்ஸ் எல்லாரையும் ஞாயிறும் ஆபீஸ் வரச் சொன்னா, அத்தனை குடும்பங்களோட வீக் எண்ட் பிளானும் டிஸ்டர்ப் ஆகுமே? இதுக்கு ஒரு மாற்று வழி கண்டுபிடிக்கணும்' என்று பாஸும் மற்றவர்களின் நிலையில் இருந்து யோசித்தால்... அது ஒரு ஹேப்பி ஆபீஸ் ஆகிவிடும்.

இப்படிப் பெரிய விஷயங்களுக்கல்ல, சின்னச் சின்ன விஷயங்களையும் எம்பதியுடன் நோக்கினால், டென்ஷன் குறையும். குழந்தைக்கு மருந்து கொடுத்தால், அழுது, தவித்து அதைத் துப்பிவிடும். 'எப்பவுமே மருந்து கொடுத்தா இந்தப் பாடுதான் படுத்துது. அப்படியென்ன பிடிவாதம்?' என்று அதை ரெண்டு மொத்து மொத்தும், கத்தும் அம்மாக்கள் இங்கு அதிகம். ஆனால், அந்தக் குழந்தையின் நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள். அது மருந்து, அதைக் குடித்தால் உடலுக்கு நல்லது, துப்பக்கூடாது என்பதெல்லாம் தெரியாத மனம் அதற்கு. கசப்பை உணரும் நாக்கை மட்டுமே அது அறியும். அந்தக் கசப்பைத் தாங்கமுடியாமல் துப்புகிறது. அவ்வளவுதான். இது புரிந்தால், எரிச்சலுக்குப் பதிலாக, மருந்தில் தேன் சேர்த்துக் கொடுப்பது என்ற எளிய வழி புலப்படும்.

மற்றவர்களின் நிலையில் இருந்து யோசிக்கும் இந்த எம்பதி பண்பு, உறவு, நட்பு மேலாண்மை தவிர்த்து தனிப்பட்ட வகையிலும் ஒருவரின் குணத்தை ஆரோக்கியமாக கட்டமைக்க உதவும். யாரையுமே குற்றமாக நினைக்க வைக்காத இந்தப் புரிதல் உள்ள ஒருவரை அனைவரும் மதிப்பார்கள்; அவருக்கும் தன்மீதே மிகப்பெரிய மரியாதை வரும். ஆனால்... எம்பதி இன்மை, அனைவரிடமும் குற்றம் கண்டுபிடிக்க வைத்து, கோபப்பட வைத்து, உங்கள் நிம்மதியையும், உங்களால் குற்றமாகப் பார்க்கப்படுபவரின் நிம்மதியையும் கெடுத்துவிடும்.

இனி உங்கள் முன் ஒரு பிரச்னை எழும்போது, அதைப் பிரச்னைக்குரியவர் நிலையில் இருந்து பாருங்கள். தீர்வு எளிதாகும்; உறவு, நட்பு பலப்படும்!

- ரிலாக்ஸ்...


 - டாக்டர் அபிலாஷா